அவளுக்கோ முழு உடலும் ஆட்டம் கண்டு விட்டது. அவ்வளவு தான்.. தன் வாழ்க்கை முடிந்து விட்டது என்று முடிவே செய்து விட்டாள்.
அப்பொழுது சரியாக அவ்விடம் வந்து சேர்ந்த ராம்குமார் அவர்கள் இருவரையும் சரமாரியாக அடிக்க துவங்கி விட்டான்.
தன் வாழ்க்கையே முடிந்து விட்டது என்ற எண்ணத்தில் இருந்த சீதாவிற்கு ராம்குமாரை கண்டதும் அத்தனை நம்பிக்கை ஊற்றெடுத்தது.
ஏனென்றே தெரியாமல் கண்ணீர் வேறு சுரந்து கொண்டே இருக்க. அவர்களிடமிருந்து ஓடி வந்து ராம்குமாரின் பின்னோடு நின்று கொண்டாள்.
ராம்குமார் அவளை உச்சி முதல் பாதம் வரை சரி பார்த்தவன், “ஆர் யூ ஓகே” என்றவாறு அவளின் கன்னத்தை தொட்டுப் பார்த்தான்.
அதில், சடகோபனின் கை ரேகை அப்படியே அச்சு போல் பதிந்திருந்தது.
அதை பார்த்தவனின் கண்கள் சிவப்பேற, “யார் அடிச்சது?” என்றான் கர்ஜனையாக.
அவளோ தன் நடுங்கும் கைகளால் சடகோப்பனை நோக்கி காட்டவும். அவனை நோக்கி வேகமாக சென்றவன் இரண்டே எட்டில் அவனை நெருங்கி சென்று ஓங்கி ஒரு உதை விட்டான்.
அதில் சடகோபன் தன் உயிர் நாடியை பிடித்துக் கொண்டு கீழே விழுந்து நெருப்பில் விழுந்த புழுவை போல் துடித்துக் கொண்டிருந்தான்.
அடுத்தது அவன் கையாள்கள் இருவரையும் ஒரு கை பார்த்தவன் சீதா உடன் அங்கிருந்து தன் காரில் புறப்பட்டான்.
சற்று நேரம் அவன் அமைதியாக காரை ஓட்டிக்கொண்டு இருந்தான்.
சீதாவோ அழுது கொண்டே வந்து கொண்டிருந்தாள்.
“சரி அழாத.. என்கிட்ட எல்லாம் அவ்வளவு வாய் பேச தெரியுது இல்ல.. அவன் அடிச்சா திருப்பி அடிக்க வேண்டியது தானே. எதுக்கு வாங்கிக்கொண்டு அமைதியா நிக்கிற”.
“திருப்பி அடிக்கிறதா.. அவனுங்க ரெண்டு பேரும் மலை மாடு மாதிரி நிக்கிறானுங்க. எங்கிருந்து நான் திருப்பி அடிக்கிறது. ஒரு நிமிஷம் எனக்கு மூச்சே நின்னு போன மாதிரி ஆயிடுச்சு. எல்லாமே முடிஞ்சிடுச்சு அவ்வளவு தான்னு நினைச்சு எப்படி பயந்து போயிட்டேன் தெரியுமா..” என்று படபடவென அவள் கண்ணீரோடு பேசவும்.
அவள் எந்த அளவிற்கு பயந்து போய் இருக்கிறாள் என்பது அவளின் வார்த்தையிலேயே அப்பட்டமாக தெரிந்தது.
அதற்கு மேல் எதுவும் பேசாமல், “சரி, அதான் நான் வந்துட்டேன்ல.. இனி எந்த பிரச்சனையும் இல்லை அழாதே”.
“ஒழுங்கா நீங்களே என்னை கொண்டு போய் டிராப் பண்ணி இருந்தா எனக்கு இந்த பிரச்சனையே வந்திருக்காது. இதுக்கெல்லாம் நீங்க தான் காரணம்” என்று இவனையே சாடினாள்
“அது சரி, கோச்சுக்கிட்டு தனியா போறியே போனா போகுதுன்னு ஹெல்ப் பண்ணலாம்னு வந்தேன்ல எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். அது சரி யார் அவன் எதுக்காக உன்கிட்ட மிஸ் பிஹவ் பண்றான்”.
சீதா இவர்கள் தான் வேதவள்ளியிடம் பணம் கேட்டு மிரட்டியவர்கள் என்று கூறவும்.
“வேதவள்ளி கிட்ட பணம் கேட்டவங்க உன்னை என்ன பண்ண பார்க்கிறாங்க?”.
“தெரியல.. அந்த ஆளு மோசமானவன். அன்னைக்கு வேதவள்ளி பணத்த அவங்களுக்கு திரும்ப செட்டில் பண்ண போகும்போது அவ கூட நானும் துணைக்கு போயிருந்தேன். அப்போவே அந்த ஆளு ஒரு மாதிரி பார்த்தான். பொறுக்கி.. அதான் இப்படி செஞ்சி இருப்பான். இப்போ வேதவள்ளி கிட்ட போக முடியாதுல்ல.. அவளை எதுவும் அவனுங்களால செய்ய முடியாது. அதான் என்னை டார்கெட் பண்ணி இருக்காங்க போலருக்கு”.
ராம்குமார் அவர்களுக்கு வாய்க்குள்ளேயே கெட்ட வார்த்தைகளால் திட்டியவன், “இனி ரொம்ப கேர் ஃபுல்லா இருக்கணும். கண்ட நேரத்தில் கண்ட இடத்துக்கு போகாத.. ஒழுங்கா ஹாஸ்டல்லையே இரு” என்றான் எச்சரிக்கையோடு.
“அது எப்படி முடியும் ஆபீஸ் போகணுமே?”.
“ஆபீஸுக்கும் பத்திரமா பார்த்து போயிட்டு வா.. பார்த்து இருந்துப்ப தானே” என்றான் அவளை சந்தேகமாக பார்த்தவாறு.
அவளோ கடைக்கண்ணால் ராம்குமாரை பார்த்தவாறு, “யாருக்கு தெரியும்.. இப்ப கூட தான் பார்த்திருந்தேன் இப்படி திடீர்னு அவங்க வருவாங்கன்னு நானா எதிர்பார்த்தேன். இந்த மாதிரி அவங்க எப்ப வேணும்னாலும் திடீர்னு வரலாம். என்ன பண்றது என் தலையில் ஒவ்வொரு நாளும் இப்படித்தான் நான் பயந்து பயந்து சாகணும்னு எழுதி இருக்கு போலருக்கு. எனக்கு உதவி பண்ண இங்க யாரு இருக்கா” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சோகமான குரலில் அவள் கூறவும்.
‘எப்படி நடிக்கிறா பாரு..’ என்று தன் மனதிற்குள் அவளுக்கு திட்டிய ராம்குமார், “இவ்வளவு நாள் எப்படி ஜாக்கிரதையா இருந்தியோ அதே மாதிரியே இனியும் இருந்தா போதும். இப்படி லேட் நைட்ல வெளிய போறது வர்றது எல்லாம் கொஞ்சம் ஸ்டாப் பண்ணிக்கோ”.
“தப்பு நடக்கணும்னு இருந்தா லேட் நைட்ல மட்டும் தான் நடக்கணும்னு இல்ல.. டே டைம்ல கூட நடக்கலாம்” என்று மெல்லிய குரலில் முணுமுணுப்பாக அவள் கூறவும்.
சலிப்பாக அவளை பார்த்தவன், “இப்போ என்ன தான் டி பண்ணனும்னு சொல்ற?”.
ஏக்கமாக பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவளோ, “என்னத்த சொல்றது.. ராமுடைய துணை இருந்தா சீதாவுக்கு எந்த ஆபத்தும் வராது” என்று அவள் பொடி வைத்து பேசவும்.
“வாட்!” என்றவன் அவளை புரியாமல் பார்க்கவும்.
“டியூப்லைட்.. சரியான டியூப்லைட்.. எவ்வளவு தான் ஹிண்ட் கொடுத்தாலும் கொஞ்சம் கூட கண்டுபிடிக்க முடியாது. எல்லாத்தையும் சர்ஃப் போட்டு விளக்கி சொல்லணும்” என்று ராம்குமாருக்கு வாய்க்குள்ளே திட்டியவள்.
வெளியே முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு, “என் ஃபேமிலி ஃபுல்லா ஊர்ல இருக்காங்க. நான் இங்க வேலைக்காக வந்து தனியா சிக்கி தவிச்சுக்கிட்டு இருக்கேன். இப்போ புதுசா இந்த பிரச்சனை வேற.. எனக்கு வெளியில் போகணும்னு நினைச்சாலே பயமா இருக்கு. இனி நான் எப்படி ஆபீஸ் எல்லாம் தனியா தைரியமா போக முடியும். அதனால.. என்னை டெய்லியும் ஆபீஸ்ல நீங்களே டிராப் பண்ணி பிக்கப் பண்ணிக்குறிங்களா?” என்று கூறியவள் அவனின் முகத்தையே குறுகுறுவென பார்க்கவும்.
அவனோ எந்த ஒரு உணர்ச்சியையும் தன் முகத்தில் பிரதிபலிக்காமல் வண்டியை ஓட்டுவதில் கவனமாக அமர்ந்திருந்தான்.
“ப்ளீஸ், முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க.. எனக்கு இந்த ஊர்ல தெரிஞ்ச ஒரே ஆளு நீங்க தான். நீங்களும் எனக்கு ஹெல்ப் பண்ணலைன்னா நான் எங்க போவேன்.. நாளைக்கு இவங்களால எனக்கு ஏதாவது ஒரு ஆபத்து நடந்தா.. அந்த குற்ற உணர்ச்சி உங்கள சும்மா விடுமா.. கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. ஒரு பெண்ணுடைய பாதுகாப்புக்காக இந்த ஹெல்ப் கூட நீங்க பண்ண மாட்டீங்களா” என்று அப்பாவியாக கேட்டவளை முறைத்துப் பார்த்தவன், “நடிக்காத டி.. உனக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட சூட் ஆகல”.
‘என்ன பேசினாலும் மடங்க மாட்டேங்கிறானே..’ என்று நொந்து போனவள், “சரி, யாரும் எனக்கு எந்த ஹெல்ப்பும் பண்ண தேவையில்லை. என் தலையெழுத்து எப்படியோ அப்படியே நடந்துட்டு போகட்டும்” என்று தன் முகத்தை கோபமாக பக்கவாட்டாக திருப்பிக் கொண்டாள்.
கடகடவென அவன் ஒரு எண்ணை ஒப்புவிக்கவும்.
அவனை திரும்பி புரியாமல் பார்த்தாள் சீதா.
“என்னுடைய நம்பர் தான் சேவ் பண்ணி வச்சுக்கோ.. ஆபீஸ் டைமிங் என்னன்னு வாட்ஸ் அப் பண்ணு”.
“அப்போ உங்களுக்கு ஓகேவா?” என்று கண்கள் மின்ன அவள் கேட்கவும்.
“வேற வழி.. நீ கேட்டும் பண்ணலைன்னா நாளைக்கு உனக்கு ஒரு பிரச்சனைனா நீ சொல்ற மாதிரி எனக்கு தானே குற்ற உணர்ச்சியாகும் அதுக்காக தான் ஓகே சொல்றேன்”.
“ஓகே.. ஓகே…” என்று ராகம் இழுத்தவளின் இதழிலோ பளிச்சென்ற புன்னகை.
ராமின் இதழிலும் அவள் அறியாத வண்ணம் மெல்லிய புன்னகை பூக்கத்தான் செய்தது.
அதை அவளுமே கடைக் கண்ணால் கண்டுகொண்டாள்.
“இன்னைக்கு ரிசெப்ஷன் ரொம்ப நல்லா முடிஞ்சது சூர்யா. எனக்கு ரொம்ப மன நிறைவா இருக்கு. அப்புறம் சூர்யா யாரு அந்த அக்ஷ்ராவை இன்வைட் பண்ணது”.
“நான் தான் தாத்தா பண்ண சொன்னேன்”.
“ஏன் பா எதுக்காக அவளை இன்வைட் பண்ண சொன்ன.. அவளுடைய பார்வையே சரியில்ல.. அவ நிச்சயமா உங்க லைப்ல ஏதாவது பிரச்சனை பண்ணனும்னு பார்ப்பா”.
“இப்ப நடந்த பிரச்சனையே அவ பண்ணது தானே தாத்தா.. அதனால தான் அவ பண்ண பிரச்சனையிலிருந்து நாங்க வெளியே வந்துட்டோம்னு காட்ட தான் அவளை இன்வைட் பண்ண சொன்னேன். அதுமட்டுமில்ல, அவ என்னை விட்டு போயிட்டா நான் தேவதாஸ் ஆயிடுவேன்னு நினைச்சுட்டா.. அப்படி இல்லைனும் அவளுக்கு நான் காட்டணும்னு நினைச்சேன். அதனால தான் அவளை இன்வைட் பண்ண சொன்னேன்”.
அவனின் வார்த்தையில் தாத்தாவிற்குமே புன்னகை பூத்தது. அவரும் இதை தானே எதிர்பார்த்தார். எங்கே இவன் அவள் செய்த துரோகத்தால் திருமணமே செய்து கொள்ளாமல் இருந்து விடுவானோ என்று தானே அவரும் மிகவும் வருந்தினார்.
அதிலும், இவன் எவ்வளவு விவாகரத்திற்கு அவள் பணம் கேட்டாலும் கொடுப்பதாக ஒப்புக்கொண்டாலும், அக்ஷ்ரா விவாகரத்து கோர கூறிய காரணத்தை இவரால் இன்னமுமே சற்றும் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
ஆம், சும்மா ஏதாவது கொடுமைப்படுத்துகிறான் என்று கூறி இருந்தால் கூட பரவாயில்லை. சூர்யாவிற்கு ஆண்மை இல்லை என்றல்லவா கூறிவிட்டாள்..
இதனால் தானே சூர்யா வெகுவாக உடைந்து போய் விட்டான். குழந்தை பெற வேண்டாம் என்று முடிவு செய்தது அவள் தான். ஆனால், பழியை தூக்கி போட்டது என்னவோ சூர்யாவின் தலைமேல்.
விவாகரத்து வாங்க ஏதாவது ஒரு காரணம் வேண்டும். தன் மேல் எந்த தவறும் வந்து விடக்கூடாது என்பதற்காக சூர்யாவிற்கு குழந்தையே பிறக்காது. அவனால் உடலுறவு வைத்து கொள்ள முடியாது என்று கோர்ட்டில் கூறிவிட்டாள்.
அது அவனுக்கு பெரும் அவமானத்தை கொடுத்து விட்டது. அதிலிருந்து அவன் வெளிவரவே இத்தனை காலம் பிடித்து விட்டது.
எங்கே வேறொரு திருமணம் செய்தாலும் இதேபோல் பிரச்சனை எழுமோ என்று எண்ணி தன் பேரன் அவனின் வாழ்க்கையை இப்படியே கடத்தி விடுவானோ என்று எண்ணிய தாத்தாவிற்கு அறிந்தோ அறியாமலோ அவன் வேதவள்ளியை திருமணம் செய்து கொண்ட பிறகு தான் திருப்தியே ஏற்பட்டது.