ஒரு நாள் கூத்து

5
(1)

ஒரு நாள் கூத்து

“மங்கையாராகப் பிறப்பதற்கே – நல்ல

மாதவஞ் செய்திட வேண்டும்…” என்று கவிமணி கூறியது போல் பெண்ணாகப் பிறப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். பெண்களால் தான் உலகத்தில் அறம் கட்டமைக்கப்படுகிறது. ஒவ்வொரு பெண்ணும் குழந்தைகளை மட்டும் வளர்க்கவில்லை. ஒரு சமுதாயத்தையே மாற்றியமைக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் வீட்டின் குடும்பப்பொறுப்பை பார்ப்பதோடு, வெளி வேலைகளையும் திறம்பட நிர்வகிக்கின்றனர். இன்று பெண்கள் கால்ப்பதிக்காத துறையே இல்லை எனலாம். நட்சத்திரமாக ஜொலிக்கும் பெண்களைப் போற்ற வேண்டும்.

ஒவ்வொருவரும் வீட்டில் உள்ள பெண்களான அம்மா, மனைவி, மகள், சகோதரியென அவர்கள் வாழ்வில் சம்பந்தப்பட்ட அனைவரையும் மதிக்க வேண்டும். அவர்களைச் சிறப்பிப்பதற்காக இந்த மகளிர் தினம் கொண்டாடுவது சிறப்பு தான். அதுமட்டும் அல்லாமல் இன்று ஒரு நாளாவது அவர்களுக்கு வீட்டு வேலையிலிருந்து ஓய்வளிக்க வேண்டும்”என்று பிரபல டிவியில் நேரலையாக ஓடிக் கொண்டிருந்த, மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியான, மகளிர் தின கொண்டாட்டம் அவசியமா? அநாவசியமா? என்ற பட்டிமன்ற நிகழ்ச்சியில் சர்வேஷ் உணர்ச்சிகரமாகப் பேசிக்கொண்டிருந்தான்.

அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும், கைத்தட்டல் அள்ளியது.

அதைக் கவனத்தில் கொள்ளாமல் மாதுளை முத்துக்களை உரிப்பதில் கவனமாக இருந்தாள் சுபாஷினி.

“மாம்! இங்கே பாருங்க… இந்த ப்ரோகிராம் செம்ம இன்ஸ்ட்ரஸ்டிங்கா போகுது. யூவார் லக்கி.” என்று குறும்பு புன்னகையுடன் கூறினான் பதினைந்து வயதான ஜீவன்.

அவனைப் பார்த்துச் சிறு புன்னகையை சிந்தியவள், “ஜீவா! இதைப் பார்த்துட்டு நான் உக்கார்ந்துட்டு இருந்தா, உங்க அப்பா வரும்போது அவருக்குத் தேவையான ஜுஸ் ரெடியா இருக்காது. நான் அதிர்ஷ்டசாலியா? இல்லையான்னு அப்போ உனக்குத் தெரிய வரும்.” என்றாள்.

“என்ன சொல்றீங்க மாம்? புரியலை.”என்றுக் கூறிய ஜீவனுக்கு ஏதோ புரிவதுப் போல இருந்தது. ஆனால் மனது ஏற்க மறுக்க. தாயிடமே தஞ்சமடைந்தான்.

“ஜீவா! காலையிலே உங்க அப்பா இந்த ஷோல கலந்துக்கிறதுக்காகப் போகும் போதே, ஜுஸ் போட்டு வைக்கச் சொல்லிட்டு போயிருக்காங்க. அவங்கத் திரும்பி வரும்போது கேட்டது இல்லைன்னா, அவரோட இன்னொரு முகம் தெரிய வரும்.”

 “மாம்! டாட் அப்படிக் கிடையாது. மத்தவங்க வேணும்னா அப்படி இருக்கலாம். டாட் உங்களை நல்லாத் தானே பார்த்துக்கிறார். உங்க விருப்பப்படி தானே இந்த வீட்ல எல்லாம் நடக்கும். நான் எதுக் கேட்டாலும் கூட, அம்மாக் கிட்ட கேளுன்னு தானே சொல்வாங்க.” என்று படபடத்தான் ஜீவன்.

“உன்னை வளர்க்குறதுல இருந்து, இந்த வீட்டை நிர்வகிக்கிற வரைக்கும் எந்தப் பொறுப்பையும் அவர் ஏத்துக்க தயாரா இல்லை. வீட்ல எல்லா வேலையும் நான் தான் செய்யணும். ஆனால் அவர் கிட்ட எல்லாத்தையும் சொல்லணும். இல்லைன்னா ஈஸியா சொல்லிடுவார் சம்பாதிக்கிற திமிர்னு…”என்று மகனுக்குப் புரிய வைத்து விடும் வேகத்தில் வார்த்தைகளை விட்டார்.

“மாம்! டாடி உங்களுக்கு டெய்லி எவ்வளவு ஹெல்ப் பண்ணுவாருன்னு எனக்குத் தெரியும். பொய் சொல்லாதீங்க.”என்று தந்தைக்காக வரிந்து கட்டிக்கொண்டு வந்தான் ஜீவன்.

ஜீவனை அடிப்பட்ட பார்வைப் பார்த்தவள், தோளைக் குலுக்கிக் கொண்டு கிச்சனுக்குள் நுழைந்தாள்.

அம்மாவின் பார்வை அவனை வருத்தியது.

அவள் பின்னேயே வந்த ஜீவனோ, “மாம்! நீங்க ஏதோ அப்பாவைப் பத்தி தப்பா புரிஞ்சுட்டுருக்கீங்க. மை டாட் இஸ் ஜெம்.”என்றான்.

“ஆஹான்!”என்று கிண்டலாகச் சுபாஷினி வினவ.

“மாம்! ஐ வில் ப்ரூஃப் இட். இன்னைக்கு நீங்க ஜூஸ் போட வேண்டாம்.” என்று முகம் சிவக்கக் கூறினான் ஜீவன்.

“ஓகே!அதையும் பார்த்துடலாம்.” என்ற சுபாஷினியோ, உரித்த மாதுளை முத்துக்களை கிண்ணத்தில் போட்டு மூடி வைத்து விட்டு, ஹாலில் வந்து அமர்ந்துக் கொண்டாள்.

ஜீவனும் மௌனமாக அவனது அறைக் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு ஸ்டடி டேபிளில் அமர்ந்து ஹாலை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான்.

*******************

சற்று நேரத்தில் வந்த அந்த வீட்டின் தலைவனோ,”ப்ரோகிராம் பார்த்தியா? என்னோட ஸ்பீச் நல்லா இருந்துச்சா சுபா?“ என்று வினவியவாறே மனைவியின் அருகில் அமர்ந்தான்.

“சூப்பர்.”என்றாள் சுபாஷினி.

“இருக்காதே பின்னே, ஒரு வாரமா யோசிச்சு யோசிச்சு பாயிண்ட் ரெடி பண்ணி பேசுனேன். இன்னைக்கு பேசிப், பேசியே டயர்டாயிடுச்சு. ஜூஸ் கொண்டுவா சுபா?”

“ஜுஸ் இன்னும் போடலைங்க.”

“வாட்? ஜூஸ் போடலையா? காலையில சொல்லிட்டு தானே போனேன். இவன் என்ன சொல்றது நாம என்ன கேட்கிறதுன்னு இருக்கியா? எல்லாம் சம்பாதிக்கிற திமிரு.” என்று வார்த்தைகளைக் கொட்டினான் சர்வேஷ்.

“இல்லைங்க, எனக்கு…” என்று சுபாஷினி ஏதோ சொல்ல வர, அதைக் காதுக் குடுத்துக் கூடக் கேட்காமல்,

“ப்ச்! சண்டே அதுவுமா ரெஸ்ட் எடுக்காம வெளியில போறானே, அவனுக்கு ஏதாவது செய்வோம்னு இல்லாமல் மகாராணி ஒய்யாரமா ஓய்வெடுத்துட்டு இருக்கீங்க. ஆஃபீஸ் போகும்போது நானும் உனக்கு எல்லா உதவியும் செஞ்சுட்டு தானே போறேன். வீட்ல இருக்கிற அன்னைக்குக் கூட எனக்கு ஒரு சின்ன உதவி செய்ய முடியாதா?” என்று படபடத்தவன், அவளுக்கு என்ன பண்ணுது என்றுக் கூட விசாரிக்காமல் அறைக்கதவை அறைந்து சாத்தினான்.

தனது அறையிலிருந்து வந்த ஜீவனின் முகமோ, தந்தையின் இன்னொரு முகத்தைப் பார்த்து வெளிறிப் போனது.

“ஜீவா! ரியலுக்கும், இந்த மாதிரி ஷோல பேசுறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறதுன்னு இப்போ புரியுதா? நீ ஸ்கூலுக்கு கிளம்பும்போது, அவர் செய்யுற ஒன்னு, ரெண்டு வேலையைப் பார்த்துப் பிரம்மிச்சு போயிருப்ப. அதுவும் கூட அவருக்கு லேட்டாயிடுமேன்னு தான் செய்வார். ஒரே ஆஃபிஸ். ஒன்னா போகணும்னு கட்டாயம்.

அங்க வாய் கிழிய பேசினாரே அது நிஜம் கிடையாது. இது தான் நிதர்சனம். இன்னைக்கு மகளிர் தினம் தானே‌‌. அந்த ஓய்வை எனக்குக் குடுக்க வேண்டியது தானே. இந்த மகளிர் தின கொண்டாட்டம் எல்லாம் ஷோவிலும், சமூக வலைத்தளங்களிலும் நடக்கும் ஒருநாள் கூத்து.” என்று ஏளனமாகச் சுபாஷினி கூற.

“மாம்!” என்ற ஜீவனது கண்கள், தந்தையின் நடத்தையை ஏற்க முடியாமல் கலங்கியது.

“டோண்ட் க்ரை ஜீவா. நிதர்சனத்தைப் புரிஞ்சுக்கோ.

வீட்ல ஒன்னு, ரெண்டு வேலை செய்துட்டு, நான் உனக்கு உதவி செய்யுறேன்னு உங்க அப்பா பெருமையடிச்சுக்குறார். அவருக்கு ஒன்னுப் புரியலை. குடும்பத்தில் உள்ள பொறுப்புகள் இருவருக்கும் சமம். அப்போ வேலைகளும் இருவருக்கும் பொதுவானது தான். அதை அவர் தான் உணரலை, நீயாவது புரிஞ்சுப்பேன்னு நினைச்சேன்.” என்று அவர் தொடர்ந்து கூறுவதற்குள்,

“சாரி மாம்!” என்று மன்னிப்பு கேட்டான் ஜீவன். காலையில் தனது தாயிடம் பேசியதை நினைத்துப் பார்த்தவனுக்கு, தாயின் அடிப்பட்ட பார்வைக்கான அர்த்தம் புரிந்தது‌.

“ஜீவா! நீ மன்னிப்பு கேட்கணும்னுங்குறதுக்காகச் சொல்லலை. உங்க அப்பா டிவில பேசுனதுல ஒண்ணு மட்டும் தான் உண்மை. இந்தச் சமுதாயத்தில் மாற்றத்தை எங்களால் மட்டும் தான் கொண்டு வர முடியும்னு சொன்னார். அதை நான் உன் கிட்ட இருந்து எதிர்ப்பார்க்கிறேன்.” என்று தனது மகனை அர்த்தத்துடன் பார்த்தாள் சுபாஷினி.

அவள் சொல்லாமல் விட்டதைப் புரிந்துக் கொண்ட ஜீவனோ, “நீங்கப் போய் ரெஸ்ட் எடுங்க மாம். நான் போய் உங்களுக்கும், டாட்டுக்கும் சேர்த்து ஜுஸ் போட்டுட்டு வர்றேன்.”என்றான்.

எதையோ சாதித்த உணர்வுடன் ஓய்வெடுக்க சென்றாள் சுபாஷினி.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “ஒரு நாள் கூத்து”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!