என்னதான் தமிழரசன் நல்ல திடகாத்திரமான ஆண்மகன் என்றாலும் கூட, அவனுக்குமே தாமரைச்செல்வியைத் தூக்கிக் கொண்டு நடக்கையில் லேசாக மூச்சு வாங்கியது.
“ப்பா.. என்ன கனம் கனக்கிறா குண்டுப் பூசணி.. தெரியாத்தனமாத் தூக்கீட்டு வந்திட்டமோ..”
என முணுமுணுத்தாலும், தன் அறையின் படுக்கை மீது அவளைக் கிடத்தி விட்டே, நிமிர்ந்து நெட்டி முறித்தான் தமிழரசன்.
அவன் படுக்கையில் தாமரையைக் கிடத்தி விட்டு, நிமிரும் போதே அவளும் விழித்து விட்டாள்.
மிக மிக அருகில் அவனது முகத்தைப் பார்த்ததும் அலறியடித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தவள், நெஞ்சில் கை வைத்து அழுத்திக் கொண்டு அவனைப் பயந்த பார்வை பார்த்துக் கொண்டே கட்டிலின் விளிம்புக்குப் போய் விட, இடுப்பில் கை வைத்துக் கொண்டு அவளை முறைத்தபடி நின்றிருந்தான் தமிழரசன்.
“ஏய் இரு.. இப்போ என்னத்துக்கு இந்த டிராமா.. நான் உன்னை அப்புடி என்ன செஞ்சிடப் போறேன்.. உன்னைத் தொட்டு சில்மிஷம் பண்ற ஐடியா எல்லாம் எனக்கு சுத்தமா இல்லை புரியுதா.. ஏதோ ஹால்ல அசதியாக் கிடந்தியேனு பாவம் பார்த்து தூக்கீட்டு வந்தா ரொம்ப தான் நீ..”
என்றவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தாள் தாமரைச்செல்வி.
அவளுக்கு நேற்றிரவு தமிழரசன் தன் நண்பனோடு பேசிய வார்த்தைகளே மீண்டும் மீண்டும் காதுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.
“என்ன தமிழ்.. உன்னோட காதலி செஞ்ச தப்பால யார் எவள் என்ன குணம் என்றது கூடத் தெரியாமல் ஒரு மிடில்கிளாஸ் பொண்ணைப் போய் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறியே.. நல்லா யோசிச்சு தான் முடிவு எடுத்தியோ..”
“அவளை உனக்கு தான்டா தெரியாது.. எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும்.. அதோட இது எங்கப்பாவோட விருப்பத்துல நடக்கிற கல்யாணம் அவ்வளவு தான்..”
“அப்புறம் என்ன.. ஏற்கனவே தெரிஞ்ச பொண்ணு வேறை.. அவளையே கல்யாணத்துக்கு அப்புறமா காதலிச்சு உன்னோட வம்சத்துக்கு வாரிசுகளைப் பெத்துப் போடுற வழியை பாரு..”
“காதலாவது கத்தரிக்காயாவது.. என்னோட வாழ்க்கையில இனி அந்த பேச்சுக்கே இடமில்லை..”
“என்னடா இப்புடி சொல்லுறாய்..”
“வேறை எப்புடி சொல்ல சொல்லுறாய்.. இப்போ வர்ரவளுக்கு கூட என்னோட சொத்துல தான் விருப்பமோ என்னவோ அதெல்லாம் யாருக்கு தெரியும்..”
“என்னடா..”
“சோ அதனால நான் எவளையும் நம்புறதா இல்லை.. பாக்கிறவங்களுக்கு மட்டும் தான் இது ஒரு சம்பிரதாய பூர்வமான கல்யாணம் அவ்வளவு தான்.. மத்தபடி அந்த பொண்ணுக்கும் எனக்கும் தனிப்பட்ட ரீதியில எந்த உறவும் இல்லை..”
“அப்போ இனி அந்த பிள்ளையோட குடும்பம்.. ரெண்டு தங்கச்சிங்கனு நினைக்கிறன்.. அதுங்க வேறை சின்னப் பொண்ணுங்களா இருக்குதுகளே.. அதுங்களை யார் பாத்துக்குவா..”
“அது அவளோட பிரச்சினை..”
“டேய் என்னடா இப்புடி மனசாட்சியே இல்லாமல் கதைக்கிறாய்..”
“மனசாட்சியோட கதைச்சா மட்டும் எல்லாரும் எனக்கு உண்மையா இருப்பாங்களா.. யார் எக்கேடு கெட்டுப் போனா எனக்கென்ன..”
“அப்போ முடிவா என்ன தான்டா சொல்ல வாறாய்..”
“காசுக்காக உள்ள வந்தவ அந்த தேவையை எங்கப்பாகிட்டே கேட்டு வாங்கிக்கட்டும்.. என்கிட்டே இருந்து ஒரு பைசா கூட பெயராது அவ்வளவு தான்.. அப்பாவும் தான் தலைமேல வைச்சு ஆடுற பொண்ணு எப்பேர்ப்பட்டவனு புரிஞ்சுக்கட்டும்.. எல்லாரும் நம்ம கிட்டே ஒரு நடிப்பு நடிப்பாளுங்க மத்த பக்கம் வேறை சுயரூபத்தை காட்டுவாளுங்க..”
“இருந்தாலும் தமிழ்..”
“இதைப்பாரு நஸ்ரூல்.. எனக்கு சும்மாவே பொண்ணுங்கள்ள நம்பிக்கை கிடையாது.. அதுலயும் இப்போ பட்ட அனுபவம் ஆயுசுக்கும் மறக்காது.. எல்லா பொண்ணுங்களுமே இப்புடி தான்டா விட்டுத் தள்ளு.. அவளுக்கு தேவை காசு எனக்கு தேவை ஒரு கல்யாணம் அதுவும் அந்த ஒரு பழிவாங்கும் படலத்துக்காக மட்டும் அவ்வளவு தான்..”
எனத் தமிழரசன் அத்தோடு அந்த பேச்சை முடித்துக் கொள்ள, எதேச்சையாக அதைக் கேட்க நேர்ந்த தாமரைச்செல்விக்கோ தனக்கு என்ன உணர்வு ஏற்பட்டது என்று அதை விவரிக்கவே முடியவில்லை.
இதயம் இறுகிப் போக, நடந்து வந்தவள் ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டாள்.
அவளைப் பொறுத்தவரை இந்த காசுபணம் எல்லாம் யாருக்கு வேண்டும், அன்பாய் ஆறுதலாக பேசி நான் இருக்கிறேன் உனக்காக எனத் தோள் தாங்க ஒரு உறவு மட்டும் இருந்தாலே போதும், வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் அவள் வாழ்ந்து முடித்து விடுவாள்.
அப்படிப் பட்ட ஒரு உறவு தான் கவிவாணன், அவர் எவ்வளவு பெரிய பணக்காரன் என்றாலும் அந்த பகட்டு துளி கூட இல்லாமல் தான் அவர் தாமரையிடம் அன்பைக் கொட்டுவது, அதே போல் தான் அவளும் பாசத்தை மட்டுமே அவரிடம் காட்டுவாள், எந்த சூழ்நிலையிலும் அவள் அவரிடம் போய் பண உதவி கேட்டதே இல்லை, அவர் கொடுக்க முன்வந்த போதெல்லாம் அதை மறுத்தும் இருக்கிறாள் அந்தளவிற்கு வைராக்கியமான பெண் தாமரை.
அவளைப் போய் பணத்துக்காக தான் இந்தக் கல்யாணத்தை ஏற்றுக் கொண்டாள் என்றால் எப்படி வலிக்காமல் இருக்கும்.
பேசாமல் இந்தக் கல்யாணத்தை மறுத்தால் என்னவென யோசனை செய்தவளுக்கு, தன்னையும் ஒரு மனுஷியாக மதித்து தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க பாடுபட்ட கவிவாணனின் கனிவான முகம் நினைவில் வந்து அவளது யோசனையைக் கிடப்பில் போட வைத்தது.
அது மட்டுமா இந்த திருமணத்துக்கு அவள் சம்மதிக்க காரணம், தமிழ் மீது நேசம் கொண்டு விட்ட அவளது மனதை, யாரிடம் மறைக்க முயன்றாலும் அவளிடமே அவள் மறைக்க முடியுமா இல்லை தானே, அதோடு அவர் என்னைப் பற்றித் தவறாக நினைத்தது அவர் தவறு அதற்காக நான் ஏன் வருத்தப் பட வேண்டும், அவரே அதைப் புரிந்து கொள்ளட்டுமே என்ற முடிவுக்கு வந்தவள், அதை விடவும் ஒரு பெரிய முடிவைத் தனியாக எடுத்தாள்.
தன் தங்கைகளுடைய எதிர்காலத்துக்காக இந்தக் குடும்பத்திடம் ஒரு பைசா கூட வாங்க கூடாது, அதை விட முக்கியம் தன் தேவைக்காக கூட இந்த வீட்டில் இருந்து ஒரு பைசா வாங்க கூடாது என முடிவு எடுத்துக் கொண்டாள்.
அப்படியொரு முடிவை எடுத்த பின்னரே அவளால் கல்யாணத்தில் கவனம் செலுத்த முடிந்தது.
ஆனாலும் மனதோரம் ஒரு பாரம் இருக்க தான் செய்தது, எனக்கு மட்டும் தான் அவர் மீது அன்பு பாசம் மரியாதை எல்லாம், மற்றபடி அவருக்கு என்மேல் ஒரு அக்கறை கூட இல்லை என எண்ணிக் கொண்டவள், அதே எண்ணத்தோடேயே அவன் கையால் தாலியும் வாங்கி விட்டாள்.
ஆனால் இப்போது அவனைக் கணவனாக அருகில் பார்த்த போது, மீண்டும் அவன் சொன்ன வார்த்தைகள் தான் காதினுள் கேட்டுக் கொண்டிருந்தது, இவர் வீட்டில் இருக்கும் எந்த வசதிகளையும் அனுபவிக்க கூடாது, என்பதே அவளுள் ஓடிக் கொண்டிருக்க, சட்டென்று கீழே இறங்கிக் கட்டாந்தரையில் சேலையை இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்து விட்டாள் தாமரைச்செல்வி.
அவளது செயலையே ஒரு புருவச் சுருக்கலோடு பார்த்தவன், தோளைக் குலுக்கி விட்டு, நண்பர்களுக்கு பார்ட்டி வைக்க வெளியே போய் விட்டான்.