நடு ராத்திரியில் வீடு வந்த மகனை முறைத்தபடி வாசலில் நின்றிருந்தார் கவிவாணன்.
“தமிழ்.. இது என்ன பழக்கம் கட்டின மனுஷியை தனியா விட்டிட்டு நீ இந்த நைட்டுல எங்க போயிட்டு வாறாய்..”
“அப்போ அவளையும் கூடவே கூட்டீட்டு போகச் சொல்றீங்களா..”
“தமிழ்..”
“நான் எப்பவும் போல தானே இருக்கேன்.. இதுல இப்ப நீங்க அப்புடி என்ன குறையைக் கண்டுபிடிச்சிட்டீங்க..”
“டேய்.. உனக்கு இன்னிக்கி தான் கலியாணம் ஆகி இருக்கு.. அந்தப் பொண்ணு உன்னை நம்பி இந்த வீட்டுக்கு வந்தவ.. அவளோட பொறுப்பு உன்னோடது தானே.. நீ என்ன இப்புடி பேசிட்டு நிக்கிறாய்..”
“நோ நோ அவ ஒண்ணும் என்னைய நம்பி உள்ள வரலை.. அந்தப் பொண்ணை நீங்க தான் நம்பி உள்ள விட்டு இருக்கீங்க.. அவ பொறுப்பு என்னோடது இல்லை.. அது உங்களோடது.. நான் ஒரு பொண்ணை காதலிச்சப்போ அவ என்னோட பணத்துக்காக தான் என்னைக் காதலிக்கிறானு சொன்னீங்க.. அவளை நான் கட்டிக்க கூடாதுனு சொன்னீங்க.. நானும் நீங்க சொன்ன பேச்சை எப்புடியோ செய்திட்டேன் தானே.. அதே போல நீங்க பாத்து கட்டி வைச்ச இந்த பொண்ணும் பணத்துக்காக தான் வந்தவனு நான் நிரூபிக்கிறன் பாருங்க..”
எனக் கோர்வையாக இயம்பி விட்டு உள்ளே போய் விட்டான்.
அவன் போன திக்கையே பார்த்துக் கொண்டு நின்றிருந்த கவிவாணன் முகத்தில் துளி கூட வருத்தம் இருக்கவில்லை, மாறாக ஒரு விஷமப் புன்னகையோடு நின்றிருந்தார்.
“போடா போ.. நீ காதலிச்சவளும் என்னோட தாமரையும் ஒண்ணா.. என் தாமரை தங்கம்டா அதுவும் புடம் போட்ட தங்கம்.. அவளும் காசுக்காக தான் வந்தவ அப்புடினு சொன்ன உன்னோட வாயைப் பினாயில் ஊத்தி கழுவ வைக்கலை எம் பேரை மாத்திக்கிறேன்டா..”
என்று கொண்டு அவரும் தூங்க சென்று விட்டார்.
தன் அறையினுள் நுழைந்த தமிழை, ஆள் அரவம் இல்லாத அறையே வரவேற்றது.
தாமரை எங்கே என்பது போலப் பார்த்தவனை நித்திராதேவி வலை வீசித் தன் பக்கம் இழுக்கவே, அவன் அப்படியே தூங்கி விட்டான்.
காலையும் இரவும் போட்டி போட்டுக் கொண்டு விடிந்து இருள, தாமரைக்கும் தமிழுக்குமான திருமண வரவேற்பு நாளும் அழகாக விடிந்தது.
அந்த நாளின் மாலை ஐந்து மணிக்குதான் நிகழ்வு என்பதால், கவிவாணனும் மதிவேணியும் காலில் இறக்கை கட்டிக் கொண்டு வேலையில் இறங்கியிருந்தார்கள்.
கவிவாணனைப் பொறுத்தவரை தன் அற்புதமான தாமரையை, தன் தொழில் நண்பர்களில் இருந்து தன் உறவுகள் வரை அனைவருக்கும் அறிமுகப் படுத்தி வைக்கும் ஆர்வத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
ஆனால் அவரின் மனைவி மதிவேணியோ தான் நினைத்த பெண்ணைத் தான் தன் மகனுக்கு முடிக்க முடியவில்லை, தான் நினைத்தது போல திருமண வரவேற்பாவது ஆடம்பரமாக நிகழ வேண்டும், அதைத் தன் தோழிகளுக்குத் தம்பட்டம் தட்ட வேண்டும் என்ற வேகத்தில் வேலைகளை இழுத்துப் போட்டு மேற்பார்வை செய்து கொண்டிருந்தார்கள்.
திருமண வரவேற்பிற்கான நாளும் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு வகையில் விடிய, தாமரைக்கு மட்டும் அது தலையிடியான நாளாக விடிந்தது.
காலையிலேயே அவளை வீட்டில் வைத்து குறுக்கு விசாரணை செய்யத் தொடங்கியிருந்தார்கள் மதிவேணியின் தோழிகள்.
“ஏன்டியம்மா.. இவ்வளவு பெரிய பணக்கார வீட்டுக்கு மருமகளா வந்திருக்கியே.. வரும் போது எவ்வளவு கொண்டு வந்தே.. ஏன் மதீ சும்மாவா வந்தா உம் மருமக.. உன் வீட்டுக்காரர் பார்த்த மருமகளா.. அது சரி இவ்வளவு சொத்துக்கு மருமகளா வர யாருக்கு தான் கசக்கும்..”
என ஒரு அம்மாள் கேட்க
“அவ என்னடி செய்வா.. இது தமிழ் ஆசைப் பட்டு கட்டிக்கிட்டு வந்த பொண்ணு.. காதலுக்கு கண்ணில்லைனு சும்மாவா சொன்னாங்க.. இந்தா பொண்ணு உன்னோட பேரு என்ன.. உன்னோட அத்தையம்மாகிட்டே மரியாதையா நடந்துக்கிறியா..”
என இன்னொரு அம்மாள் பதில் கேள்வி கேட்க,
நடுவே புகுந்த இன்னொரு அம்மாள்
“அதெல்லாம் இருக்கட்டும்.. உனக்கு இன்னும் ரெண்டு தங்கச்சி இருக்காமே.. இனியென்ன அவங்க பொறுப்பும் நம்ம மதி மேல தானோ.. பாவம் மதி இன்னும் எத்தினையைத் தூக்கிச் சுமக்க வேண்டியிருக்குமோ.. மதி வேறை கண்ணைக் கசக்கினால் தூக்கிக் குடுத்திடுற ரகம்..”
என்று இழுத்துக் கொண்டிருந்த நேரம், தாமரைக்கு ஆபத்பாந்தவனாக கவிவாணன் உள்ளே என்ரியானார்.
அந்தம்மாளின் கடைசி வார்த்தைகளைக் கேட்ட போதே அவருக்கு உள்ளே கோபம் கொதிக்கத் தொடங்கிவிட்டது.
அவரோ வழமை போல தானும் வாழைப்பழத்தினுள் ஊசி நுழைப்பது போல அவர்களது மூக்கை உடைத்தார்.
“என்ன ரோகிணி மேடம்.. உங்களுக்கு தான் என்ரை மனுஷி மதியில எத்தினை பாசம் என்ன.. உங்கடை கடைசி மகளுக்கு ஏதவோ கார் சீதனமாக் குடுக்கணும் எண்டு நீங்கள் கண்ணைக் கசக்கினதுக்கு.. மதி உடனே கார் வாங்க ஏற்பாடு செய்து குடுத்தாளே.. அதே மாதிரி எல்லாருக்கும் கண்ணை மூடிக் கொண்டு தூக்கிக் குடுத்திடுவாளோ எண்டு உங்களுக்கு யோசனையாக் கிடக்குதோ.. எண்டாலும் உங்களை மாதிரி என்ரை மனுஷியிந்தை பணத்துல அக்கறை படுற அந்த இது வேறை யாருக்கும் வராது என்ன..”
என ஒரே மூச்சில் சொல்லி முடிக்க, இந்த ஆளு நம்மளைப் பாராட்டுறானா இல்லாது விட்டால் தன்னுடைய மனைவியிடம் பணம் வாங்கினேன் என்று குத்திக் காட்டுகிறானா எனத் தலையைப் பிய்த்துக் கொண்டார் அந்தம்மாள்.
அவர்களை அப்படியே விட்டு விட்டு, தன் மருமகளை அழைத்துக் கொண்டு உள்ளே போனார் கவிவாணன்.
“செல்விம்மா.. இந்த மாதிரி ஆளுங்க முன்னாடி தொலைஞ்சு போன ஆட்டுக் குட்டி மாதிரி முழிச்சுக் கொண்டு நிக்கக் கூடாது.. நீ வாயை மூடிக் கொண்டு நிண்டால் அவைக்கு ஒரே குஷியாப் போடும்.. உடன உன்னைய மட்டந் தட்டத் தொடங்கியிடுவினம்..”
“எனக்கும் புரியுது கவிப்பா.. ஆனா அவையிட்டை வாய் திறந்து பேசவே எனக்குப் பிடிக்கேல்லை..”
“பிடிக்காட்டிக்கு நீ அங்கே நிக்க வேண்டிய அவசியமே இல்லைம்மா.. உங்க கூட நிண்டு வெட்டிக் கதை பேச எனக்கு சுத்தமா நேரமில்லை என்ற மாதிரி நீ போய்க் கொண்டே இருக்கோணும்..”
“அப்புடிப் போனால் அது அத்தையை அவமரியாதை செய்த மாதிரி ஆகிடுமோனு தான்..”
“அட என்னம்மா நீ.. அவங்களுக்கு நீ மரியாதை குடுத்து பேசினாலுமே உன்ரை அத்தையம்மாள் நீ ஏதவோ குத்தம் செய்த மாதிரி தான் பார்ப்பா.. பிறகு என்னத்துக்கு அவளுக்காக உன்ரை சுயமரியாதையை இழக்கோணும்..”
“கவிப்பா..”
“இதைப் பாரு செல்விம்மா.. நம்மளையோ நம்மளைச் சார்ந்தவங்களையோ அடுத்தவை யாருமே மட்டந்தட்டுறதை நாம பார்த்திட்டு சும்மா இருக்க கூடாது.. அப்புடி நீ இருந்தியோ உன்னைய வாயில்லாத பூச்சிகளோட லிஸ்ட்ல சேத்திடுவாங்க.. எல்லாத்தையும் ஆரம்பத்துலயே தட்டி வைக்கணும் செல்விம்மா.. உனக்காக நீ தான் வாய் திறந்து கதைக்கோணும்.. அவங்க உன்னைய பார்த்து பணத்துக்காக வந்தவனு பேசிக்கிட்டு நிக்கிறாங்க.. நீ என்னவோ ஹோல்டு மெடல் வாங்கினவ மாதிரி அப்புடியே அசையாம நிக்கிறே.. இது சரியில்லை செல்விம்மா உன்னோட சுயமரியாதை உனக்கு மட்டும் இல்லை எனக்குமே ரொம்ப முக்கியம்.. உங்கப்பன் சாகும் போது உங்க மூணு பேரையும் என்னைய நம்பித் தான் விட்டிட்டு போனான்.. இப்போ சொல்றேன் இனி யாரும் உன்னைய ஒரு வார்த்தை சொன்னால் நீ வாய் திறந்து ரெண்டு வார்த்தை நாக்கை பிடிங்கிக்கிற மாதிரி கேட்டே ஆகணும்.. இது தான் நீ எனக்கு குடுக்கிற மரியாதை புரியுதா..”
என நீளமாக மூச்சு வாங்க சொன்னவரையே இமைக்க மறந்து பார்த்திருந்தாள் தாமரைச்செல்வி.
கடவுள் தன் தந்தையை எடுத்துக் கொண்டாலும், அவருக்கு ஈடாக இன்னொரு தந்தையைத் தனக்காக கொடுத்து விட்டே போயிருக்கிறார் என்பதை அவளது ஆழ் மனது ஏற்றுக் கொண்டது.