அந்தக் குட்டி வீட்டின் சிறிய மொட்டைமாடியில் நின்றிருந்த தாமரைச்செல்வி, தன் கரத்தில் கிடந்த தமிழரசனின் புகைப்படத்தைப் பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தாள்.
“நிஜமாவே என்னையக் கட்டிக்கிறதுக்கு சம்மதம் அப்புடீனு சொல்லீட்டீங்களா.. என்னால நம்பவே முடியேல்லை.. நீங்கள் தானே அந்த வரலக்சுமியை தான் காதலிக்கிறேன் கட்டினா அவளைத் தான் கட்டிக்குவேன் அப்புடீனு சுத்தி வந்தீங்கள்.. ஒரு வேளை அவ கூட ஏதும் சண்டையோ.. சண்டை போட்டால் சமாதானம் ஆகுறது தானே வழமை அது என்ன புதுசா வேறை ஒருத்தியை கல்யாணம் செஞ்சிக்கிறது.. உங்களை நான் நேசிக்கிறேன் தான் அதுக்காக அடுத்தவ வாழ்க்கையை அழிச்சு எனக்கொரு வாழ்க்கை தேவையில்லை.. இதைப் பத்தி கவிப்பாகிட்டே பேசவே ஏலாது.. அவரு அப்புறம் சோக கீதம் படிக்க தொடங்கீருவாரு.. உங்க கிட்ட பேசுறதைப் பத்தி நான் கனவு கூடக் காண முடியாது.. அப்புறம் கனவுல வந்து எதுக்குடி என் கிட்டே பேசினேனு பொரிஞ்சு விழுவீங்க எதுக்கு வம்பு.. பேசாமல் வரலக்சுமிகிட்டேயே பேசிட வேண்டியது தான்.. ஒரு காதல் ஜோடியைப் பிரிச்சா தான் என்னோட காதல் கைகூடும் அப்புடினா அது என்னோட காதலுக்கு மரியாதையைத் தராது..”
எனச் சொல்லிக் கொண்டபடி வேகமாக கீழே போய், தன் கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே போனாள்.
அந்த கடற்கரையோரமாக அமைந்திருந்த ஹொட்டலின், வெளி இருக்கைகளில் அமர்ந்திருந்தாள் தாமரை, அவளுக்கு முன்னால் அலட்சியமே உருவாக அமர்ந்திருந்தாள் வரலக்சுமி.
“ஏய் சொல்லு.. எதுக்கு என்னை வரச் சொன்னே..”
“உனக்கும் அவருக்கும் ஏதும் பிரச்சினையா..”
“எவருக்கும் எனக்கும் பிரச்சினையா..”
“அது தான் தமிழ்..”
“ஓ.. ஆனா அதை நீ ஏன் கேக்கிறாய்..”
“காரணமாத் தான் கேக்கிறன் சொல்லு..”
“இல்லையே எனக்கும் அவருக்கும் ஒரு பிரச்சினையும் இல்லையே.. இப்ப கூட நீ கூப்பிடுறதுக்கு முன்னாடி வரைக்கும் கூட அவர் கூட தான் இருந்திட்டு வந்தேன்..”
“ஓ..”
“ஆனா நீ ஏன் இதெல்லாம் கேக்கிறாய்.. ஹேய் கொஞ்சம் இரு.. என்ன உனக்கு என்னோட தமிழ் மேல ஒரு கண் போல இருக்கே.. இதைப் பாரும்மா வீணா மனசுல ஆசைய வளத்துக்காதே.. அவரு உன்னைய எல்லாம் ஏறெடுத்துக் கூட பாக்க மாட்டாரு.. பணக்காரப் பையன் அப்புடினா போதுமே உடனே வந்துடுவீங்களே.. ”
“ஏய் கொஞ்சம் நிறுத்துறியா.. என்ன நீ வாய்க்கு வந்ததெல்லாம் பேசிட்டுப் போறாய்.. நான் எண்டதால நீ இப்புடி பேசியும் கூட பேசாமல் இருக்கிறன்.. இதே வேறை யாராவது பொண்ணா இருந்தால் இழுத்து வைச்சு தைச்சிருப்பா உன்னோட உந்த வாயை..”
“ஏய் என்ன பெரிய இவ மாதிரி பேசுறே.. உனக்கு எதுக்கு என்னோட தமிழைப் பத்தி நான் சொல்லோணும்.. மூடிட்டு கிளம்பு..”
“கிளம்ப தான்மா போறேன்.. இங்கேயேவா இருக்க போறேன்.. ஏதோ பாவமாச்சே பொண்ணு அதோட வாழ்க்கை அம்போனு ஆகப் போதேனு.. கொஞ்சம் கூட சுயநலமா யோசிக்காமல் ஓடி வந்தால்.. வாயைத் திறந்தாலே சாக்கடையாத் தெறிக்க விடுறே..”
“உன்னோட வாயைத் திறந்தால் மட்டும் சந்தனம் கமழுதாக்கும்..”
“என்ரை வாயைத் திறந்தால் சந்தனம் கமழுதோ இல்லையோ.. உன்னை மாதிரி சாக்கடை வாசம் வறேல்லை தானே.. உன்னட்டை வேலை மினக்கெட்டு பேச வந்தேன் பாரு என்னைச் சொல்லணும்..”
என்று நிஜமான கடுப்போடு தாமரைச்செல்வி எழப் போன நேரத்தில், அந்த ஹோட்டலினுள் நுழைந்தான் தமிழரசன்.
அவனைப் பார்த்ததுமே சட்டென்று திரும்பி அமர்ந்து கொண்ட தாமரை, மறந்தும் அவனது திசைப் பக்கத்தில் திரும்பவில்லை.
தாமரையின் செயலில் புருவங்கள் சுருங்க வாசலைப் பார்த்த வரலக்சுமி, அங்கே வந்து கொண்டிருந்தவனைப் பார்த்ததும் ஒரு துள்ளலோடு அவன் பக்கம் போக, அவனோ அவளது முகத்தைக் கூடப் பார்க்காமல் அவளைத் தாண்டி வந்து தாமரை அமர்ந்திருந்த மேசையைத் தட்டியபடி, கைப்பையினுள் பாதி நுழைந்திருந்தவளையே பார்த்திருந்தான்.
இது யாருடா நான் இருக்கும் மேசையைத் தட்டுவது, இந்த நேரம் அவர் இங்கே பார்த்து விட்டால் என்ன செய்வது என்பது போல, லேசாக நிமிர்ந்து பார்த்தவளோ முன்னால் நின்றிருந்தவனின் பார்வையில் திடுக்கிட்டு எழுந்து நின்றாள்.
“மேடத்துக்கு ஃபோன் எடுத்தால் ஆன்ஸர் பண்ற பழக்கம் இல்லையோ..”
என்று புருவம் உயர்த்திக் கேட்டவனின் தோரணையில், வேகமாகத் தனது தொலைபேசியைத் தேடினாள்.
ஆனால் அது இருந்தால் தானே கிடைப்பதற்கு, வரலக்சுமியோடு பேச வேண்டுமே என்கிற அவசரத்தில் வந்தவளுக்கு அலைபேசியை எடுத்து வர வேண்டும் என்பதே மறந்து போனது.
“சாரிங்க.. ஃபோனை மறந்து வீட்டுலயே வைச்சிட்டு வந்திட்டேன்..”
“எனக்கு வந்த விசர்க் கோபத்துக்கு ரெண்டு அறை போடலாம்னு தான் வந்தேன்.. இது பொது இடமாப் போச்சு..”
“அடிப்பீங்களா..”
என லேசான பயத்தோடு சட்டென்று கேட்டவளை, ஒரு கணம் அழுத்தப் பார்வை பார்த்தவனோ தலையை அழுந்தக் கோதி விட்டு
“உன் கிட்டே கொஞ்சம் பேசணும்.. எந்திரிச்சு வா..”
என்று கொண்டு அவளது கையைப் பிடிக்க, உடனே எழுந்து அவன் பின்னே சென்றாள் தாமரை.
அவர்கள் இருவரையுமே பார்த்தபடி அசையாமல் நின்றிருந்தாள் வரலக்சுமி. இவன் எதற்கு இவளை அழைத்து செல்கிறான் என அவள் யோசனை செய்யவே இல்லை. ஏனெனில் தாமரையும் தமிழும் குடும்ப நண்பர்கள் என்பது அவளுக்கு தெரியும்.
அவளைப் பொருத்தவரை தமிழ் ஏன் என்னை அலட்சியம் செய்து விட்டு போகிறான், ஒருவேளை தன்னை வெறுப்பேற்ற அவ்விதம் செய்கிறானோ, இருக்கும் அவன் அவ்விதம் செய்யக் கூடியவன் தான், எதற்கும் வெறுப்பு அடைந்தது போலவே முகத்தை வைத்துக் கொள்ளுவோம், இல்லாது போனால் வேறு ஏதாவது வழியில் போய் நிஜமாகவே கடுப்பைக் கிளப்புவான் என நினைத்துக் கொண்டாள். ஆனால் அவளையோ அவளது எண்ணங்களையோ கவனிக்கத் தான் அங்கே தமிழரசன் நிற்கவே இல்லை.
தமிழரசன் இழுத்த இழுப்புக்கு அவன் பின்னாலேயே பிரேக் இல்லாத வண்டி போல இழுபட்டுப் போய்க் கொண்டு இருந்த தாமரை, அவன் சட்டென்று நிற்கவும் அவனோடு மோதிக் கொண்டு கீழே விழப் போனாள்.
ஒரு நொடியில் நிலமையைப் புரிந்து கொண்டவனோ சட்டென்று அவளை இழுக்க, கீழே விழுந்து அடி வாங்குவதற்கு பதிலாக அவனோடு மோதி அடி வாங்கிக் கொண்டு நின்றாள் தாமரைச்செல்வி.
அவளது நெற்றி அவனது நாடியோடு மோதிய வேகத்தில் அவனுக்கு வலித்ததோ தெரியவில்லை, அவளுக்கு வலியில் கண்களே கலங்கிப் போய் விட்டது.