தாமரையின் லேசாகக் கலங்கிப் போயிருந்த விழிகளைப் பார்த்தவன், என்ன நினைத்தானோ தெரியவில்லை, தன் நாடி மோதி வலித்துக் கொண்டிருந்த அவளின் நெற்றியை லேசாக வருடி விட, அவளுக்குத் தான் சங்கடமாகிப் போனது.
அவனது குணம் அறிந்தவளுக்கு இந்த தமிழ் மிக மிகப் புதிது, திட்டுவான் என்று பார்த்தால் இவன் என்ன நெற்றியை வருடிக் கொடுக்கிறான் என நினைத்தவள், மெல்ல அவனிடம் இருந்து விலக, அவனுக்குமே அப்போது தான் சுற்றுப்புறம் புரிய, வெடுக்கென்று கையை எடுத்துக் கொண்டான்.
தன் செய்கைக்கும் சேர்த்து அவளிடமே எரிந்து விழுந்தான்.
“அந்தப் பொண்ணுகிட்டே உனக்கென்ன பேச்சு.. நான் எடுத்த ஃபோனைக் கூட மறந்து வீட்டுல வைச்சிட்டு வார அளவுக்கு அவ உனக்கு முக்கியமோ..”
எனக் கேட்டவனது கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்பது போல, அண்ணாந்து அவனைத் தான் பார்த்தாள் அவள்.
“கேள்வி கேட்டால் வாய் திறந்து பதில் சொல்லிப் பழகு.. என்னோட முகத்துல படமா ஓடுது..”
“இல்லை.. அவங்களை நீங்கள்..”
“அவங்களை நான் என்ன.. முழுசா முழுங்காமல் சொல்லு..”
“அவங்களை நீங்கள் காதலிக்கிறீங்களே.. அப்புறம் எப்புடி என்னைக் கல்யாணம்..”
என்று இழுத்தவள், வேகமாகத் திரும்பித் தன்னைப் பார்த்தவனின் பார்வையில் பேச்சை நிறுத்தித் தலையைக் குனிந்து கொண்டாள்.
சற்றே தள்ளி நின்றிருந்தவன், ஒரு எட்டில் அவளை நெருங்கி அவளின் நாடியைப் பிடித்து நிமிர்த்தினான்.
அவன் அழுத்திப் பிடித்ததில் மெல்லிய வலி ஒன்று ஊடுருவினாலும் அசையாமல் நின்றிருந்தவளின் விழிகளையே பார்த்தவன்,
“அவளை நான் காதலிக்கிறேனா.. அப்புடினு உனக்கு யாரு சொன்னது..”
என அழுத்தம் திருத்தமாகக் கேட்க, இவன் என்ன இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறானே, ஒரு வேளை அவளை நான் காதலிக்கவில்லை என்று பொய் சொல்லப் போகிறானோ எனத் தாமரையின் எண்ணம் ஓடியது.
ஆனால் அவனோ வேறொரு பதில் சொல்லி, அவளை மேலும் திகைக்க வைத்தான்.
“அவளை நான் ஒரு காலத்தில காதலிச்சேன்.. ஆனா இப்போ அவளுக்கு என் மனசுல என்ன.. எனக்குப் பக்கத்துல இருக்கவங்க மனசுல கூட இடம் இல்லை.. சோ நீ இனி அவளைப் பத்தி நினைக்கவோ அவளைப் பாக்கவோ கூடாது.. டூ யூ அன்டர்ஸ்டாண்ட்..”
“அவங்களுக்கு தெரியுமா..”
“என்ன தெரியுமா..”
“உங்களுக்கு கல்யாணம் ஆகப் போற விசியம்..”
“ஐ திங்க் யூ சேஞ்ச் தி வேட்.. நமக்கு கல்யாணம் ஆகப் போற விசியம்..”
“நானும் சம்மதம் சொல்லணுமா வேண்டாமா..”
“நீ சம்மதம் சொல்லாமலா எங்கப்பா உன்னோட படத்தை தூக்கி வந்து காமிச்சாரு..”
“அவரு என்னோட படத்தைக் காமிச்சிருக்காட்டி நீங்கள் வேறை பொண்ணை கல்யாணம் செஞ்சிட்டிருப்பீங்களா..”
என லேசான ஏக்கம் இழையோடக் கேட்டவளின் முகத்தை திரும்பி பார்த்தவனுக்கு ஏனோ ஆமாம் என்று சொல்லத் தோன்றவில்லை.
அவளையே சில நொடிகள் பார்த்திருந்து விட்டு, அவளது கரத்தைப் பற்றிக் கொள்ளப் போனவன், சட்டென்று தன் கையைத் தன்னுடைய சட்டைப் பைக்குக் விட்டுக் கொண்டான். அவளை நாடிப் போனால், அவனது சொல் செயல் எல்லாம் தான் உடனே கோபத்துக்குத் தாவி விடுமே, அது தான் இப்போதும் நடந்தது.
“உந்தக் கேள்வி இப்ப ரொம்ப முக்கியமா.. உன்னால பாரு நான் சொல்ல வந்த விசியத்தையே மறந்து மறந்து போயிடுறன்.. கொஞ்சம் நேரம் அமைதியா நிக்க மாட்டியா..”
“சாரி சொல்லுங்க..”
“உடன எதுக்கு எடுத்தாலும் சாரி மட்டும் கேட்டிடு..”
“…………..”
“என்னோட முகத்தை நிமிர்ந்து பாரு.. இப்புடியே தலையைத் தொங்கப் போட்டு நின்னா நான் எப்புடி சொல்லுறது..”
என அதற்கும் சிடுசிடுத்தவன், அவள் நிமிர்ந்து பார்த்த பின்னர் தான், தான் எதற்காக அவளை அழைத்து வந்தேன் என்பதையே யோசனை செய்தான்.
“இவ பக்கத்தில வந்தா மட்டும் பேச வாறதே சுத்தமா மறந்து போயிடுது..” என்றபடி தலையில் தட்டிக் கொண்டவன், ஒரு வழியாகச் சொல்ல வந்த விசியத்தை அப்படியே ஒப்புவித்தான்.
“இதைப் பாரு.. இந்தக் கல்யாணம் எங்கப்பாவோட திருப்திக்காக நானும் நீயும் செய்துக்கப் போற ஒரு நாடகக் கல்யாணம் அப்புடினு நீ நினைக்கவே கூடாது.. ஒரு கல்யாணம் எப்புடி சம்பிரதாய ரீதியா சட்ட ரீதியா நடக்குமோ அதே மாதிரி இந்தக் கல்யாணமும் நடக்கணும்.. ஆனா ஒரு கண்டிஷன்..”
என்று கொண்டு அவளது முகத்தை மீண்டும் பார்த்தான்.
அவளோ எது என்றாலும் நீயே சொல்லி முடி, தாலி கட்டப் போவது நீ கழுத்தை நீட்டப் போவது மட்டுமே என் வேலை என்பது போல, அவனது முகத்தையே பார்த்திருந்தாள்.
“மேடம்.. என்ன கண்டிஷன் அப்புடினு கேக்க மாட்டீங்களோ..”
“எப்புடியும் அதை சொல்லத் தானே நீங்கள் வந்தீங்க..”
“உங் கூட எப்புடிக் குடித்தனம் நடத்தப் போறேனு எனக்கு ஒரே மலைப்பா இருக்கு..”
“…………….”
“ஏதாவது பேசு.. நான் ஏதாவது கேட்டால் மட்டும் வாயை மூடிட்டு நில்லு.. என்ன டிசைனோ தெரியலை..”
“என்ன கண்டிஷன்..”
“அதை முதலே கேக்க உனக்கு என்ன.. இவனுக்கு என்ன மரியாதை அப்புடினு திமிரு..”
“திமிருக்கு வரைவிலக்கணம் என்ன அப்புடினு உங்களுக்கு தெரியுமா..”
“வரைவிலக்கணம் தெரியாது.. உதாரணம் நல்லா தெரியும் அது நீ தான்..”
என தமிழ் சொல்லி முடிக்கவும், அந்த இடத்தை விட்டு வேகமாகச் செல்லப் போனவளை இழுத்து அணைத்து, தன் கைவளைவில் நிறுத்திக் கொண்டான்.
“என்னைப் போக விடுங்கோ..”
“ஏன்..”
“உங்களுக்கு எப்பவுமே நான் எண்டால் ஒரு இளக்காரம் தான்..”
“அப்புடினு நான் சொன்னேனா..”
“அதை வேறை நீங்கள் வாயைத் திறந்து சொல்லணுமா.. அது தான் செய்கையிலயே தெரியுதே..”
“இதைப் பாரு.. இப்போ உங்கூட சண்டை போடுற மூட் எனக்கு சுத்தமா இல்லை.. அதனால நான் சொல்ல வந்த விசியத்தை சொல்லீடுறன்..”
என்றவனை முறைக்க முடியாமல் நிமிர்ந்து பார்த்தவளது விழிகளைப் பார்க்க முடியாமல் எங்கோ பார்த்தவன், தன் கண்டிஷனை சொன்னான்.
“எல்லா சராசரி பொண்டாட்டிங்க மாதிரி எங்க போறே எப்ப வருவே இந்த மாதிரி எல்லாம் நீ என்னைக் கேள்வி கேக்க கூடாது.. நீ கேட்டாலும் நான் சொல்ல மாட்டேன் அது வேறை விசியம்.. மத்தவங்க பார்வைக்கு மட்டும் தான் நானும் நீயும் புருஷன் பொண்டாட்டி.. மத்தபடி நீ நீயா இருக்கலாம் நான் எப்பவுமே நானா மட்டும் தான் இருப்பேன்.. உன்கிட்டே மனைவி அப்புடிங்கிற உரிமையை நான் எப்பவுமே எடுத்துக்க மாட்டேன்.. இப்போதைக்கு இவ்வளவும் தான் கண்டிஷன்..”
என்று கொண்டு நீ போகலாம் என அவளை மெல்ல விடுவித்தான்.
அவன் சொன்னதை கேட்டு விட்டு, நகரப் போனவளை மீண்டும் எட்டிப் பிடித்து
“கண்டிஷன் எப்ப வேணும் எண்டாலும் எப்புடி வேணும் எண்டாலும் மாறலாம்..”
என்று கூடவே ஒரு கொழுக்கியையும் கொழுவினான். இந்த வார்த்தை கூட உன் மேல் எனக்கு எந்த விதமான ஈடுபாடும் இல்லை என்று அவனாகவே நினைத்துக் கொண்டு அதை அவளுக்கு தெரிவிக்கவே அவன் சொன்ன வார்த்தை.