ஆடம்பரம் ஏதும் இல்லாமல் மிக மிக எளிமையாக, தங்கள் குலதெய்வமான அம்மன் கோவிலில் வைத்து தமிழரசன் தாமரைச்செல்வியின் கழுத்தில் தாலி கட்டியிருந்தான்.
இந்தத் திருமணம் நடப்பதற்கு முன்பு, அதை நிறுத்த வேண்டி மதிவேணி ஒரு சதிரே ஆடி விட்டிருந்தாலும் கூட, அவரது எந்த இழுப்புக்கும் அவரின் மகன் லேசாகக் கூட மசியவில்லை.
அவனைப் பொறுத்தவரை அவன் விசியத்தில் அவன் எடுப்பது மட்டும் தான் முடிவான முடிவு. அதன் படி தாமரையைத் தாலி கட்டி மனைவியாக்கி விட்டிருந்தான்.
திருமணத்திற்கு கூட யாருக்கும் பத்திரிகை வைக்கவில்லை. மாறாக திருமணம் முடிந்து இரண்டு தினங்களில் ரிஷப்சன் ஒன்று வைத்து, தங்கள் திருமணத்தை உறுதிப் படுத்தி உறவுகள், நண்பர்கள் என அனைவருக்கும் தெரிவிக்க முடிவு செய்திருந்தான்.
கவிவாணன் கூட தன் மகனது விருப்பத்துக்கு எதிராக வாயைத் திறக்கவேயில்லை. அதன் காரணம் அவரைப் பொறுத்தவரை அவன் திருமணத்திற்கு சம்மதம் சொன்னதே ஆனந்தம், அதிலும் அவன் தன் நண்பனின் மகள் தாமரையைக் கட்டச் சம்மதம் சொன்னது பேரானந்தம், இதற்கு மிஞ்சி அவருக்கு வேறு என்ன வேண்டும்.
நாலு பேர் அர்ச்சதை தூவ, மஞ்சள் கயிறு எடுத்துக் கட்டினால் கூடக் கல்யாணம் தானே என்கிற ரீதியில் அவர் சந்தோஷமாகவே வளைய வந்தார்.
மதிவேணி தான் என் கௌரவம் என்னத்துக்கு ஆகிறது. இருப்பதே ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு என்பது போல ஒரே பையன், அவனுக்கு நான் விரும்பிய பெண்ணைத் தான் கட்டி வைக்க முடியவில்லை, சரி திருமணத்தையாவது வெகு விமரிசையாகச் செய்யலாம், தன் தோழிகளுக்கு தங்கள் குடும்பத்துப் பெருமைகளைப் பறை சாற்றலாம் என்று பார்த்தால், அதிலும் தன் மைந்தன் மண்ணள்ளிப் போட்டு விட்டானே என வராத கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வேண்டா வெறுப்பாக வளைய வந்தார்.
தனுச்செல்விக்கும், தவச்செல்விக்கும் அக்காவின் திருமணம் அத்தனை சந்தோஷத்தைக் கொடுத்தது. அக்கா திருமணம் முடிந்ததும் தங்களை விட்டுப் போய் விடுவாளே என்கிற கவலை, ஏக்கம் எல்லாம் ஏக்கர் கணக்கில் இருந்தாலும், ரொம்ப வருடங்களுக்கு பிறகு வீட்டில் நடக்கும் விசேஷம் என்பதால் சந்தோஷமே உருவாக வளைய வந்தார்கள்.
தாமரைக்குமே மனம் முழுவதும் தங்கைகளைத் தனியே விட முடியாதே, என்ன செய்யலாம் என்கிற எண்ணமே ஓடிக் கொண்டிருந்தது.
ஆனாலும் என்ன ஆனாலும் அவர்களைத் தான் புகுந்த வீட்டுக்கு மட்டும் அழைத்துக் கொண்டு போகவே கூடாது என்பதில் அவள் உறுதியாக இருந்தாள்.
அதன் காரணம் மதிவேணி தான், தனக்குப் பிடிக்காதவர்களைப் பார்த்து அவர் வாயைத் திறந்தாலே போதும், எதிரில் நிற்பவர் நேராகச் சென்று உத்தரத்தில் கயிறு போட்டுத் தொங்கி நாக்குத் தள்ளிச் சாக வேண்டியது தான்.
தங்கைகள் வேறு சின்னப் பிள்ளைகள் சூதுவாது அறியாதவர்கள், அக்காவின் மாமியார் ஆயிற்றே என்று கொண்டு அவர் எவ்வளவு அடித்தாலும் வாங்கிக் கொண்டு பேசாமல் இருப்பார்களே தவிர, தன்னிடம் கூட மனம் விட்டுப் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள் என்பது அவளுக்குத் தெரியும்.
ரிஷப்சன் முடியும் வரை இரண்டு பெண்களும் தங்கள் வீட்டில் தான் தங்க வேண்டும் என, தன் மனைவியோடு கத்திச் சண்டை போடாத குறையாகச் சண்டை போட்டு சம்மதம் வாங்கியிருந்தார் கவிவாணன்.
கோவிலில் எளிமையாகத் திருமணத்தை முடித்துக் கொண்டு வீடு வந்தவர்கள், அவரவர் அறைக்கு ஓய்வுக்கு போய் விட, கவிவாணன் தன் நண்பரின் இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு அவர்களுக்கான அறையைக் காட்ட சென்று விட்டார்.
பட்டுப் புடவையை இழுத்துச் செருகிய படி, ஒரு ஓரமாக போடப் பட்டிருந்த சோபாவில் ஏறியிருந்த தாமரைச்செல்வி, அசதியில் அப்படியே தூங்கி விட்டாள்.
அங்கே தன்னறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த தமிழ், நிமிடங்கள் கரைந்து கொண்டு போக, அடிக்கடி வாசலை திரும்பிப் பார்த்துக் கொண்டான்.
அவன் யாருடைய வரவை பார்த்தபடி நடை பயின்று கொண்டிருந்தானோ, அவள் கும்பகர்ணனுக்கு தத்துப் பிள்ளை போல குறட்டை விடாத குறையாகக் கீழே தூங்கிக் கொண்டிருந்தாள்.
“என்ன இவ.. இவ்வளவு நேரமா கீழ அப்புடி என்ன செஞ்சிட்டிருக்கா.. புருஷங்காரன் மேல காத்திட்டு இருப்பானேனு கொஞ்சமாவது மரியாதை இருக்கா பாரு..”
என வாய் விட்டே முணுமுணுத்தபடி வேகமாகப் படிகளில் இறங்கி வந்தான்.
கீழே அந்தப் பெரிய ஹாலில் யாருமே இருக்கவில்லை, போதாக் குறைக்கு சமையலறை, சுவாமியறை என எட்டிப் பார்த்தவனுக்கு, தாமரையை எங்குமே காணவில்லை என்றதும் கோபம் கோபமாக வந்தது.
படிய வாரியிருந்த தன் தலைமுடியைக் கலைத்து விட்டபடி தேங்கி நின்றவனின் காதுகளில் அந்தச் சத்தம் கேட்டது, அது கால் கொலுசின் சத்தம்.
அது அவனின் மனைவியின் கால் கொலுசின் ஓசை தான் என்பதைக் கணத்தில் உணர்ந்தவன், சட்டென்று அந்த ஓசை வந்த பக்கம் எட்டிப் பார்த்தான்.
அங்கே தாமரை கிடந்த கோலம் அவனை ஏதோ செய்தது. இத்தனைக்கும் அவள் ஆடை விலக ஏனோதானோவென்று கிடக்கவில்லை.
உடுத்தியிருந்த பட்டுப் புடவையை இழுத்து தன்னைப் போர்த்திக்கொண்டு, வலது கையைத் தொங்கப் போட்டுக் கொண்டு, இடது கரத்தை கன்னத்துக்கு ஊன்றுகோல் போலக் கொடுத்துக் கொண்டு, ஒரு காலை மடக்கி ஒரு காலை நீட்டிக் கொண்டு தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந்தாள். இத்தனைக்கும் அவளது கணுக்கால் பக்கம் மட்டுமே அவளது சேலை லேசாக மேலே உயர்ந்திருந்தது.
மஞ்சள் பூசிக் குளித்திருப்பாள் போல, அவளது மாநிறத்து தோலில் மஞ்சள் கலவை இணைந்து ஏதோ ஒரு அழகிய நிறத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது.
அந்தப் பாதத்தில் கிடந்த வெள்ளிக் கொலுசிலேயே தமிழின் விழிகள் சொல்லி வைத்தது போல நிலை குத்தி நின்றன.
இந்தக் காலத்தில் கூட காலுக்கு கொலுசு போடுவாங்களா என்பது போல அவளது பாதக் கொலுசை அதிசயமாகப் பார்த்து வைத்தான் அவன்.
இதற்கு முதலும் தாமரை கொலுசு அணிந்திருந்தாள் தான், ஆனால் அப்போது தான் மகாராசாவுக்கு அவளைக் கண்டாலே பிடிக்காதே, பிறகு எங்கிருந்து அவளது கொலுசைப் பார்ப்பது.
ஆனால் இப்போது தான் அவனே தாமரையை நிதானமாகப் பார்க்கிறான். அது மனைவி என்கிற உரிமையா அல்லது பக்கத்தில் இருக்கும் பெண்ணை சும்மா பார்த்து வைப்போமே என்கிற பார்வையா ஏதோ ஒன்று. அது என்னவென்று அவனுக்கே தெரியாது என்பது தான் உண்மை.
அவன் அப்படியே தன் மனைவியாகிப் போனவளைத் தன்னையறியாமல் பார்த்துக் கொண்டிருக்க, அவளோ தூக்கக் கலக்கத்தில் திரும்பிப் படுக்கிறேன் பேர்வழி என்று, உருண்டு கீழே விழப் போனாள்.
ஒரே எட்டில் ஓடி வந்து அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டவன், அப்படியே அவளைக் குண்டுக் கட்டாகத் தூக்கிக் கொண்டு தங்கள் அறை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
எப்போதுமே யாரும் பக்கத்தில் இல்லாத நேரத்தில் மட்டும் தான் அவன் அவளிடம் ஒருவிதமான பரிவோடு நடந்து கொள்ளுவான். அது தான் இப்போதும் நடந்தது. இதே அங்கே ஹாலில் யாராவது இருந்திருந்தால், ஒரு பொருளைப் பார்ப்பது போல அவளைக் கடந்து போயிருப்பான் தமிழ்.