“ஹாய்! ஹாய்! எவ்ரிஓன்! நான் உங்கள் மாம் அண்ட் ப்ரின்ஸ்.” என்றவரின் குரல் லேசாகக் கலங்கியதோ, என்னவோ அடுத்த நொடி தன்னை மீட்டுக் கொண்டார் சாதனா.
அவரது கணீர் என்ற குரலுக்கும், அவரது மகனும், அவரும் சேர்ந்து போடும் கலாட்டாவான வீடியோக்களைப் பார்ப்பதற்காகவுமே லட்சக்கணக்கான வ்யூவர்ஸ் அவர்களது சேனலைச் சப்ஸ்க்ரைப் செய்து இருந்தனர். அவரது வீடியோவில் ஏதாவது ஒரு கருத்து நிச்சயம் இருக்கும். அது தான் அவரது பலம்.
அவரது நொடி நேர தடுமாற்றத்தை யாரும் கண்டுக் கொள்ளவில்லை. ஆனால் அவரது மகன் அருகில் இல்லாததை கண்டுக் கொண்டனர்.
வீடியோவில் சாதனா தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
“அனைத்து மகளிருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் சொல்லணும்னு தான் இந்த வீடியோ எடுக்கும்போது நினைத்தேன். ஆனால் என்னால் சொல்ல இயலவில்லை.” என்றவரின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
அதைத் துடைத்தவர், தனது கனீர் குரலை மீட்டுக் கொண்டுத் தொடர்ந்தார்.
“ஆனாலும் இந்த வீடியோ பெண்களுக்கு உபயோகமானதா இருக்கும்னு நம்புறேன். அப்புறம் இந்த வீடியோ கொஞ்சம் பெரியதாகத் தான் போகும். ப்ளீஸ் ஸ்கிப் பண்ணாமல் பாருங்க. எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஓகே நேரா கன்டென்டுக்கு வர்றேன்.
‘பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை.’என்ற பாரதியாரின் வாக்கினை இன்றைய பெண்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர். பெண்கள் எல்லா துறையிலும் முத்திரை பதிப்பதைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன். ஆனால் இந்த நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா? என்றால் இல்லை என்பது தான் வேதனையான பதில்.
அங்கொன்றும், இங்கொன்றுமாகப் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள் இன்று பெருகிப் போனதற்கு, உடனடியாகத் தண்டனை தராத நம்முடைய அரசாங்கம் மட்டும் காரணமில்லை. நாமும், நம்முடைய வளர்ப்பும் தான் காரணம்.
நம்முடைய வளர்ப்பு என்றதும் பெண்களை ஒழுங்காக வளர்க்காதது என்று தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். பெண் பிள்ளைகளுக்கு நம்பிக்கை தர்ற மாதிரி நாம் நடந்துக்கலை.
இப்போ இருக்கிற இயந்திர உலகத்துல, டெக்னாலஜியால நிறைய நல்ல விஷயங்கள் இருந்தாலும், சில கெடுதல்களும் இருக்கு.
வெளியிடங்களுக்கு சென்று வருகின்ற குழந்தைக்களுக்கும், பெண்களுக்கும் பாதுக்காப்பு இல்லை. நம்மை அறியாமலே நம்முடைய அந்தரங்கத்தை போட்டோ எடுத்து ப்ளாக்மெயில் பண்றாங்க. இல்லை சோஷியல் மீடியாவில போடுற ஃபோட்டோவை மார்பிங் பண்ணி, அதை வச்சு மிரட்டுறாங்க. சில பெண்கள் அறியாமையால் காதல்ங்குற பெயருல சிக்கி சீரழியிறாங்க.
ஒரு சின்னத் தப்பை செஞ்சிட்டு, வீட்டுக்குத் தெரிஞ்சா என்னாகுமோ, இல்லை சோஷியல் மீடியாவில் லீக்காகிடுமோன்னு பயந்து, மேலும், மேலும் துன்பத்தை அனுபவிக்கிறாங்க.
பெண்களோட பயம் தான், அவர்களின் பலவீனம். அந்தப் பலவீனத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் அந்த வக்கிரம் பிடித்த அயோக்கியர்கள்.
பெத்தவங்கக் கிட்ட சொல்ல எதுக்கு பயப்படணும். கொன்னே போட்டாலும் பெத்தவங்கக் கையால சாகலாம். கண்டவன் கிட்ட இறங்கிப் போகத் தேவையில்லை. அதேப் போல நாமும் பிள்ளைங்க சொல்றதைக் காதுக் குடுத்துக் கேட்கணும்.
அவங்க சொல்றதை முழுவதா கேட்காமல் திட்டக் கூடாது. அடுத்து என்ன செய்யணும்ங்குறதை பார்க்கணும். அவங்களுக்கு சப்போர்ட்டிவா இருக்கணும். எந்தத் துன்பம் வந்தாலும் பெத்தவங்க சப்போர்ட்டா இருப்பாங்க என்ற நம்பிக்கையைப் பெண் குழந்தைக்களுக்கு குடுக்கணும்.அந்த அளவுக்கு நம்ம ஃப்ரெண்ட்லியா இருக்கணும்.
அதேப் போலத் தப்பு செய்தது தன்னுடைய மகனோ, கணவனோ, தந்தையோ யாராக இருந்தாலும் அவர்களது தப்பை பகிரங்கமாக வெளிப்படுத்தணும். அதை விட்டுவிட்டு அந்தத் தவறை மறைச்சாலே, நாம மறைமுகமாக அவங்களுக்கு ஆதரவுக் கொடுக்குறதுப் போலாகிடும். அடுத்த முறையும் துணிஞ்சு அதே தவறை அவங்க செய்வாங்க. அதைத் தடுக்கணும்னா, நாம சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுக்கணும். இல்லை நாமே தண்டனையைக் கொடுக்கணும். அப்போ தான் பெண்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.
அதை விட்டுட்டு, பொம்பளைப் பிள்ளை
நேரங்கெட்ட நேரத்துல ஏன் வெளியில் போறாங்க? அவங்க ஒழுங்கா டிரஸ் பண்ணா ஏன் இப்படி நடக்கப் போகுது? ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியுமான்னு மடத்தனமா கேள்விக் கேட்காமல், பிள்ளைகள் வளர்ப்பில் எல்லோரும் கவனத்தை செலுத்துங்க.
மகளாக இருந்தால் தைரியமாக வாழவும், மகனாக இருந்தால் பெண்களிடம் கண்ணியமாக இருக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டும். பிள்ளைகளோட எதிர்க்காலத்திற்காக ஓடுறோம்னு, அவங்களை கவனிக்காமல் விட்டுடாதீங்க. வருங்காலம் இளைய தலைமுறையினரின் கையில் தான் இருக்கிறது. இளையதலைமுறையினரின் வருங்காலமோ, நம்முடைய வளர்ப்பில் தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மீண்டும் சொல்கிறேன், தப்பு செய்தது தன்னுடைய மகனா இருந்தாலும் சரி, தண்டனைக் கொடுக்கத் தயங்காதீங்க. இதை என்னுடைய சப்ஸ்க்ரைபர்ஸ் ஃபாலோ செய்வீர்கள் என்று தெரியும். ஆனாலும் சொல்லுவது என்னுடைய கடமை.
இதுவரை உங்கள் குழந்தைக்களுடன் நேரத்தைச் செலவளிக்கலைன்னா, பரவாயில்லை. இன்றிலிருந்து ஆரம்பியுங்கள். ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம். வருங்கால பெண்களாவது சுதந்திரமான மகளிர் தினத்தைக் கொண்டாட வாழ்த்துக்கள். மறுபடியும் சந்திப்போமான்னு தெரியலை. குட் ஃபை ஃப்ரெண்ட்ஸ்!” என்று அந்த வீடியோ முடித்திருக்க.
அதற்குக் கீழே ஏகப்பட்ட கமெண்ட்ஸ்.
என்னாச்சு சிஸ்? எதுவும் பிரச்சினையா? சரணை காணோமே? என்று ஏகப்பட்ட கேள்விகள்.
ஆனால் எதற்கும் சாதனா பதிலளிக்கவில்லை.
அதற்கான பதில் அடுத்த நாள் எல்லா பத்திரிக்கையிலும் கொட்ட எழுத்தில் முதல் பக்கத்தில் வந்திருந்தது.
பிரபல யூட்யூபரான சரண், அவனைத் தேடி வந்த பெண்களை மயக்கும் வார்த்தைகளைப் பேசி, ஃபோட்டோ எடுத்து, ப்ளாக்மெயில் பண்ணி சீரழித்ததையும், அதைத் தெரிந்துக் கொண்ட அவரது அன்னை விஷம் வைத்துக் கொன்று விட்டுப் போலிஸ் ஸ்டேஷனில் சரணடைந்ததையும் பத்தியும் விலாவரியாக எழுதியிருந்தனர்.
அந்த நியூஸைப் படித்தவர்களுக்கு, பிறகு தான் அவரது வீடியோவில் சொல்லியிருந்த விஷயமே புரிந்தது. தப்பு செய்தது தன் மகனாக இருந்தாலும் தண்டனை வழங்கிய அந்தச் சிங்கப் பெண்மணிக்கு மனதார தலை வணங்கினர் அவரது ஃபாலோவர்ஸ்.
ஆனாலும் அவர்களுக்குச் சாதனா செய்த காரியம் பிரம்பிப்பைத் தான் தந்தது. ஏனென்றால் சரணுக்கும், அவருக்கும் உள்ள பாண்டிங் அப்படி. அப்படி இருக்கும் போதே சரண் ஏன் இப்படியொரு ஈனக் காரியத்தைச் செய்தான் என்று புரியாமல் குழம்பித் தவித்தனர். அவனுக்குத் தண்டனைக் குடுக்கும்போது பெத்த மனம் எப்படித் தவிச்சிருக்கும் என்று சாதனாவை நினைத்தும் வருந்தினர்.
ஆனால் அவர்கள் அறியாதது, சாதனாவின் நெஞ்சுரத்தைத் தான். மகனைப் போலீஸில் பிடித்துக் கொடுத்தால், கணவர் எப்படியும் மகனை வெளியில் எடுக்க முயற்சிப்பார் என்றுத் தெரியும். அதனால் தான் அதற்கு வாய்ப்பளிக்காமல், தானே தண்டனைக் கொடுக்கும் முடிவுக்கு வந்தார். அதுமட்டுமல்லாமல் அவரது மகனின் இறுதி நிமிடத்தையும் வீடியோவாக எடுத்திருந்தார்.
தன் மகனைப் பற்றிய அருவருப்பான மறுபக்கம் தெரிந்ததும், என்ன செய்வது என்று முடிவெடுத்துக் கொண்ட சாதனா, தன் மகனுக்குப் பிடித்த உணவைத் தயார் செய்வதிலிருந்து, அதில் விஷத்தைக் கலப்பது, பிறகு மகனுக்கு ஊட்டுவது என எல்லாவற்றையும் வீடியோ எடுத்திருந்தார். அதைவிட ஹைலைட், அவனுடைய கீழ்த்தரமான செயல் எல்லாம் தனக்குத் தெரியும் என்ற உண்மையையும், அதற்குத் தண்டனையாக விஷத்தைக் கொடுத்ததையும் சொல்லி, அவன் சாகும்போது நரகவேதனையையும் கொடுத்தார். பூட்டிய அறையிலிருந்து ஜன்னல் வழியாகத் தாயிடம் உயிருக்காக அவன் மன்றாடுவதையும் வீடியோ எடுத்திருந்தார். இதை அவரது சேனலில் டைம் செட் பண்ணி அப்லோட் செய்தார்.
அதைப் பார்த்துத் தவறுச் செய்பவர்கள் திருந்துக்கிறார்களோ, இல்லையோ, தீர்ப்புகள் திருத்தப்படும்.
2 comments
Wow.. super.. மனதை தொடும் வரிகள்.. பாரதியார் கவிதைகள் highlight…
மென்மேலும் இது போன்ற கதைகள் எழுதுக வாழ்த்துக்கள்
Thank you so much dear 💕