சில வருடங்கள் முன்பு, குடும்பத்தினரின் மோசடிக்கு இலக்காகி ஒரு வேளை உணவுக்கு வழியின்றி ஸ்டேஷனுக்கு வந்திருந்தவர் தான் சிவதர்ஷன். ஐந்து மாத கர்ப்பிணியாக வயிற்றைத் தள்ளிக் கொண்டு அவரின் பின்னோடு வந்திருந்தாள் சகுந்தலா.
நம்பும் படியாக ஏமாற்றி, இவரிடம் இருந்த சொத்துக்களை மொத்தமாக தங்கள் பெயருக்கு மாற்றியமைத்துக் கொண்டதோடு, அவரை ஊரை விட்டே துரத்தி அடித்து விட்டனர் பணவெறி பிடித்த குடும்பத்தினர்.
அதற்கு சாட்சியாக, தர்ஷனிடம் எந்த ஆதாரங்களும் இல்லையென்றபடியால், பிரச்சனையை தீர்த்து அவருக்கு நியாயம் பெற்றுத் தர வழியின்றித் திணறிய ருத்ரவமூர்த்திக்கு அவர்மேல் பரிதாபம் எழுந்தது.
கர்ப்பமான மனைவி வேறு!
எதுவுமே செய்ய இயலாதென தானும் கை விரித்து விட்டால் உடைந்து போவார்கள் எனக் கருதி, நயமாகப் பேசிக் கதைத்து அவர்களை தன் வீட்டுக்கே அழைத்து வந்துவிட்டார் மூர்த்தி. அவருக்கு என்றுமே பிறருக்கு உதவுவதில் அதீத ஆர்வமுண்டு!
கணவனின் மூலம் நடந்ததை அறிந்து கொண்ட ரேணுகாவுக்கும் அவர்களின் மேல் தனிப்பிரியம் தலைதூக்கியது. கணவனுக்கு ஏற்ற மனைவி.
‘இத்துணை பெரிய பங்களாவில் அவர்களுக்கு தங்கிக் கொள்ள இடமில்லையா?’ எனக்கேட்டு அவர்களை அன்புற அரவணைத்துக் கொண்டாள். அப்போது யுகனுக்கு வெறுமனே ஐந்து, ஐந்தரை வயது தான்.
இத்தனை வருடங்கள் கடந்த பிறகும், இரு குடும்பத்தினரும் எந்தவொரு மனஸ்தாபமும் இன்றி ஒன்றாகத் தான் வசித்து வருகின்றனர்.
ருத்ரவனே தர்ஷனின் திறமையைக் கண்டு மெச்சி, ஒரு நல்ல அலுவலகத்தில் தன் செல்வாக்கை உயர்ந்த அளவில் உபயோகித்து வேலை வாங்கிக் கொடுத்திருந்தார்.
எப்படியோ அவரின் உதவியோடு வாழ்வில் முன்னேறி ஒரு தரத்துக்கு வந்த தர்ஷன், ‘அட்டையாய் ஒட்டிக்கொண்டு உங்களுக்கு தொந்தரவாய் இருக்க முடியாது..’ எனக் கூறிக்கொண்டு தான் சிறுக சிறுகச் சேமித்து சொந்தமாகக் கட்டிப் போட்ட வீட்டுக்கு குடிபுகப் பார்த்தாலும்,
‘என்ன பேசுறீங்கணா? நீங்க எல்லாரும் போய்ட்டிங்கனா அப்பறம் நானும் அவரும் உங்க பின்னாடியே, உங்க வீட்டுக்கு குடி பெயர்ந்துருவோம்..’ என செல்லமாக மிரட்டி, அவர்களைத் தங்களோடே நிறுத்திக் கொள்வதில் ரேணுகா பலே கில்லாடி!
இடைப்பட்ட காலத்தில் சகுந்தலா- ரேணுகாவுக்கு இடையில் தூய நட்பு வேர் விட்டிருந்தது. இரத்த தொடர்பின்றியே அக்கா, தங்கை என உரிமையோடு உறவாடும் ஆறுதலான அணைப்புகளும், தலை கோதல்களுமாய் மிக அழகியதொரு பந்தம்..
மறுபுறம் சிவதர்ஷன் மேல் எழுந்த பரிதாபம் காலப்போக்கில் அன்பாக மாற்றம் பெற்று, அவர்கள் இருவரும் கூட உற்ற தோழர்களாக உருமாறி இருந்தனர். விறைப்பாய் திரியும் போலீஸ்காரனிடம் உரிமையாக உரையாடும் தைரியம் தர்ஷனுக்கு மட்டுமே உள்ளது.
அன்று ஆற்றங்கரையிலிருந்து வீடு திரும்பிய கையோடு, “அந்த வாத்தி நம்ம மானுவை போட்டு அந்த அடி அடிச்சிருக்காருப்பா. அவனை முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே தள்ளுங்க..” என பதினாறு வயது சிறுவன் தந்தையிடம் அடம்பிடித்து நின்றான்.
ஓரிரு தடவைகள் மறுத்துப் பார்த்த ருத்ரவன், “அடங்க மாட்டியா? வாத்தி’னா அடிக்க தான் செய்வாங்க..” என அதட்டி, அதுவும் பயனளிக்காது போனதால் யுகனுக்கு நாலைந்து அடிகளைத் தாராளமாகக் கொடுத்திருந்தார்.
அவர் அடித்தது கூட வலிக்கவில்லை யுகனுக்கு. ஆனால் மானுவுக்கு கால்கள் தடிக்கும் அளவுக்கு அடித்தது தெரிந்தும் பெரிதாக கண்டு கொள்ளாமல் விட்டாரே என கவலையாக வந்தது.
அதிருப்தி கொண்டு, முதன்முறையாக தந்தையிடம் முகம் திருப்பியவனை, தந்தை ருத்ரவமூர்த்தி தனிப்பட்ட முறையில் கனகவேலைச் சந்தித்து அதட்டி விட்டுச் சென்ற விடயம் எட்டியிருக்க வாய்ப்பில்லை தான்.
‘இவர் கிட்ட சொல்லி எதுவும் நடக்கப் போறதுல்ல..’ என சலித்து, தானாகவே களத்தில் இறங்கினால் என்ன என யோசிக்கத் தொடங்கினான்.
*******
வெய்யோனின் தகிப்பு தணிந்திருந்த முன் அந்திமாலைப் பொழுது!
கண்களிலிருந்து பாதியாய் இறங்கி மூக்கில் தேங்கிய கண்ணாடியை சரி செய்தபடி, தோட்டத்திலிருந்த கல் இருக்கையில் அமர்ந்து மாணவர்களின் பயிற்சி புத்தகங்களை திருத்திக் கொண்டிருந்தார், கனகவேல். கணக்கு வாத்தியார்!
ஸ்கூலில் பாடம் எடுப்பதற்கே நேரம் சரியாக இருப்பதால் ஹோம் ஒர்க் எழுதி வரும் மாணவர்களின் புத்தகங்களை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வருபவர், மாலை நேரங்களில் ஓய்வாகி, கல் இருக்கையில் கால் மேல் கால் போட்டமர்ந்து கொண்டு அவற்றை சரி பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.
அவ்விடத்துக்கு அருகேயிருந்த புதருக்குள் இருந்து ஓணானாய் தலை நீட்டினான் யுகன்.
கனகவேலை பார்க்கும் போது கோபம் கோபமாக வந்தது அவனுக்கு.
“எவ்ளோ தைரியம் இருந்தா என் மானுவையே அந்த அடி அடிச்சிருப்பாரு?” என பற்களை நறநறத்தவனின் மனக்கண் முன் வந்து சென்றது, தடித்துச் சிவப்பேறியிருந்த மான்ஷியின் வாழைத் தண்டுக் கால்கள்.
தந்தையிடம் கூறி வேலைக்காகவில்லை எனப் புரிந்ததும், டியுஷன் முடிந்த கையோடு வீட்டுக்கு செல்லாமல் நேராக வாத்தியின் வீட்டுக்கு வந்திருந்தவன் அவர் பயிற்சி புத்தகங்களில் கவனமாய் இருப்பதை பார்த்து நகைத்தான்.
சுற்றும் முற்றும் பார்த்தவன், மண்ணோடு பாதியாய் புதைந்திருந்த பெரிய சைஸ் கல்லொன்றைத் தூக்கி வீசியடித்து, அவரின் வீட்டின் கண்ணாடி ஜன்னலை உடைத்து விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.
அவருடன் நேரில் மோதும் அளவுக்கு தைரியமில்லை. அதை விட, விடயம் அறிந்தால் ருத்ரவமூர்த்தி அடி பிளந்து விடுவாரென்ற பயம். அதனால் தான் இந்த வேண்டாத வேலை சிறியவனுக்கு.
“டேய்! யாருடா அங்க?” என்ற கனகவேலின் காட்டுக் கத்தல் அவனைப் பின் தொடர,
“என் மானுவையா அடிக்கிற? இன்னொரு வாட்டி அவளை அடிச்சா உங்க சொட்டை தலையில மாவரைப்பேனாக்கும்!” என காற்றோடு எச்சரிக்கை விடுத்தபடி மூச்சிறைக்க அவன் வந்து நின்றது தன் வீட்டுக்கு முன்னால் தான்.
குனிந்து, முழங்காலில் கைகளை ஊன்றி மூச்சு வாங்கியவன் நிமிரும் போது, கையில் பிரம்புடன் கண்கள் சிவக்க நின்றிருந்தார், ருத்ரவமூர்த்தி. யுகனுக்கு அச்சத்தில் ஒருகணம் இதயம் நின்று துடித்தது.
“அ.ப்..பா..” என அழைத்தவனின் தோளில் வலிக்காதவாறு ஒரு அடி வைத்தவர்,
“டியுஷன் போனவன் வீட்டுக்கு வர இவ்ளோ நேரமானது ஏன்?” என்று கேட்டபடி அவனது கைபற்றி இழுத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தார்.
எதிரில் இருப்பவர் வேறொருவராக இருந்திருந்தால் வாயில் வந்ததை அடித்து விட்டு, அவரை சாமர்த்தியமான முறையில் நம்ப வைத்திருப்பான். ஆனால் உயிரான தந்தையிடம் பொய் கூற நா எழவில்லை. தந்தையின் கோபமுகம் பார்க்கும் போதே தெரிந்து விட்டது, தான் பார்த்து விட்டு வந்த வேண்டாத வேலை பற்றி அவர் அறிந்து விட்டாரென்று!
“கேட்ட கேள்விக்கு பதில் வரல..”
தந்தையின் அதட்டலில் தெளிந்தவன், டைல்ஸ் தரையில் அமர்ந்திருந்த மான்ஷியையும், அவளின் தலை வாரிக் கொண்டிருந்த ரேணுகாவையும் பார்த்து விட்டு ருத்ரவனை ஏறிட்டான்.
அவரும் விட்டபாடில்லை. பதில் கூறியே ஆகவேண்டும் என்பது போல் விடாக்கண்டனாய் அவனையே ஊடுருவும் பார்வையால் துளைத்துக் கொண்டிருந்தார்.
இன்று தரமானதொரு சம்பவம் நடக்கப் போகிறதென யுகனின் மண்டைக்குள் அபாயமணி ஒலித்தது. மான்ஷிக்காக பேச வந்து, தந்தை நேற்று சாதாரணமாக முதுகில் போட்ட நான்கு அடிகளின் வலியே இன்னும் குறையவில்லை.
முதுகில் அவரின் ஐந்து விரல்களும் அழகாய் பதிந்திருக்கிறதென ரேணுகா இரவில் மூக்கு சிந்தி கண்ணீர் வடித்து முற்றாக ஒருநாள் கடந்திருக்கவில்லை. அதற்குள் இன்னொன்று..
தலையை திருப்பி மான்ஷியைப் பார்த்தான் மீண்டும்.
தட்டிலிருந்த மாதுளை முத்துகளை சுவைத்து கொண்டிருந்தவள் தன்னைப் பார்த்து உதிர்த்த புன்னகைக்காக எத்தனை அடிகளை வேண்டுமானாலும் வாங்கலாம் என்று தோன்றியது அவனுக்கு.
‘என் மானுவையே அடிச்சாருல?’ என ஆழ்கடலாய் பொங்கியவன், “அப்பா..” என்ற விளிப்போடு தந்தையை நோக்க,
“ஒரு உண்மையை மறைக்க ஆயிரம் பொய்கள் தேவைப்படும் யுகேந்த்ரா. பொய் சொல்லி தப்பிக்கிறதை விட, உண்மையை சொல்லி தண்டனை அனுபவிக்கிறது பெட்டெர். இது என் ஆசிரியர் சொல்லி கொடுத்த படிப்பினை!
நான் உனக்கு அப்பா இல்லையா? நீ என்ன பண்ணுவ, எதை பண்ணனும்னு யோசிப்பன்னு எனக்கு தெரியும். என் பார்வை எப்போவும் உன்னைச் சுத்தி தான் இருக்கும்..” என்றார் கேலியும், கண்டிப்பும் இரண்டறக் கலந்த குரலில்.
தலை குனிந்தவன், “வாத்தி மானுவை அடிச்சிருந்தாருல்ல அப்பா? அவ கால் சிவந்திருக்கு. பாவம் அவ..” என மறைமுகமாக தன் செயல் பற்றி விளக்க முயன்றான்.
அதன் பிறகு அந்த வீட்டினுள் இருந்து கேட்டதெல்லாம் யுகனின் கத்தலும், மான்ஷியும் அழுகையும், ரேணுகாவின் ‘என்னங்க..’ என்ற தவிப்புடன் கூடிய அழைப்புகளும் தான்.
“நான் தான் வேணாம்னு சொன்னேனே. வாத்தி திட்டுறாரு, அடிக்கிறாருன்னா அதுல ஒரு நல்லது இருக்கு. கேட்க மாட்டியா?”
“எப்போத்தில இருந்து அப்பா பேச்சையே மீறி நடக்க ஆரம்பிச்ச?”
ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு அடி வீதம் இழுத்து விளாசினார் மகனை. அவன் கண்ணீர் விட்டு அழவில்லை, ஆனால் ஒவ்வொரு அடிக்கும் தாங்கமாட்டாமல் அலறினான்.
“மாமா, யுகனை அடி..க்காதீங்க.” என்ற கதறலுடன் வந்து அவரின் காலடியில் சாஷ்டாங்கமாய் விழுந்தாள் மான்ஷி.
யுகன் சிவந்து போன கைகளை தேய்த்து விட்டபடி சுவற்றோடு ஒட்டி உடல் குறுக்கி அமர்ந்து கொண்டான்.
ருத்ரவமூர்த்தி இலகுவில் பிரம்பு தூக்க மாட்டார். தூக்கினால் இனி மரண அடி தான்! ஒவ்வொரு முறையும் அவன் அடி வாங்குவதற்கான பின்னணியில் குட்டி மான்ஷி தான் இருந்தாள்.
அவளைக் கலாய்த்ததற்காக பள்ளி மாணவனின் சீருடை கிழியும் அளவுக்கு மண்ணில் பிரட்டி உருட்டி அடி பிளந்ததால்..
‘அவளோட டிபன் பாக்ஸ்ல இருந்த சாப்பாட்டை எடுத்து சாப்பிட்டிருக்கான். அவளுக்கு பசிக்கும்ல..’ என எதிரில் இருந்தவனின் மூக்கிலே குத்து விட்டதால்..
‘இவ பென்சிலை எதுக்கு அந்த மங்கம்மா எடுக்கணும்? அவ எடுத்ததால தான் இன்னைக்கி சித்திர பாட டீச்சர் இவளை கிளாஸை விட்டு வெளிய அனுப்பிட்டா..’ என மங்கம்மா என பட்டப்பெயர் வைத்து அழைக்கப்பட்ட மீராவின் கூந்தலைப் பிடித்து பலங்கொண்ட மட்டும் பீய்த்து இழுத்ததால்..
‘அவ விளையாடற பாலை(ball) நீ எதுக்குடா எடுக்கணும்? பாரு, அவ அழறா!’ என பக்கத்து தெருவில் வசிக்கும் சமவயது தோழனின் முகத்தை உடைத்ததால்..
அப்படி இப்படியென, எப்படியோ மாதத்துக்கு இரண்டு முறையாவது ருத்ரவமூர்த்தியிடம் சரமாரியாக வாங்கிக் கட்டிக் கொள்வான்.
‘இனிமே யாரையும் கை நீட்டி அடிக்க மாட்டேன்ப்பா’ எனக் கூறுபவன், மற்ற தடவை மான்ஷி கண்களை கசக்கி விட்டால் தந்தைக்கு பண்ணி கொடுத்த சத்தியத்தை மறந்து சம்பந்தப் பட்டவனை/ளை புரட்டி விடுவான். பிறகினி வீட்டுக்குள் பூஜை தான்.
இது வாடிக்கையாகிப் போன ஒன்று! ஆதலால் தான் என்ன நடந்திருக்கும் என்பதை வெகு சாமர்த்தியமாக ஊகித்து, அதை அவனது வாயாலே கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டு ருத்ரவன் கண்டித்தது.
“பாவம் யுகன், அவனை அடிக்காதிங்க மாமா..” என ஒரே வரியை பற்பல விதங்களில் கண்ணீரும், கதறலுமாய் கூறியவளின் அழுகை, வாடி வதங்கியிருந்த யுகனைப் பார்க்கும் போது நொடிக்கு நொடி அதிகரித்தது.
“இனிமே நீ ஒழுங்கா ஹோம் ஒர்க் எழுதிட்டு ஸ்கூல் போகலைனா மாமா உன்னையும் இப்படி தான் அடிப்பேன்..” என்ற அதட்டலோடு விருட்டென்று நகர்த்தவரின் பார்வை, மகனை பார்த்து கண்ணீர் சிந்தி நின்ற ரேணுகாவை தழுவி மீண்டது.
அவரின் பார்வைக்கான அர்த்தம் புரியாதவளா என்ன அவரின் மனையாள்?
‘துணிப் பொட்டலத்தில் ஊதி, பிரம்பு பட்டு சிவந்திருக்கும் இடங்களில் வலிக்காதவாறு ஒற்றி எடு! காயமாக முன் மருந்திடு!’ என்ற செய்தியை அவளிடம் உணர்த்தி நின்றன, ருத்ரவனின் கண்கள்.
ரேணுகா தலை குனிந்தபடி அவரைக் கடந்து நடந்தாள்.
மகனை திரும்பிப் பார்த்த ருத்ரவனின் கண்களில் ஏக வருத்தம்! ஆனால் என்ன செய்வது? செய்யும் தவறை இப்போதே அதட்டி மிரட்டி திருத்தவில்லையெனில் பிறகொரு நாளில் சமூகத்தில் கெட்ட பெயரை தாங்கி வாழ வேண்டிய நிலை ஏற்படுமே என்ற பதைபதைப்பு.
அவனை அடித்துப் போடும் நாட்களில், ரேணுகாவோடு சேர்த்து அவருமே இரவு பூரா உறக்கம் தொலைப்பார்.
யுகன் தூங்கிய பிறகு அவனறைக்கு சென்று, தடித்திருக்கும் கையையும் காலையும் வருடிப் பார்த்து, கலங்கும் கண்களுடன் அவனது நெற்றியில் முத்தமிட்டு விட்டு வெளியே வருவார். அதன் பிறகு ஓரளவாவது கண்ணயர்வார்.
மகனை சில நொடிகள் பார்த்திருந்தவர் பெருமூச்சுடன் நகர்ந்து விட,
“அந்த மனுஷன் தான் வேணாம்னு சொன்னாருல்ல? நீ எதுக்கு வாத்தி வீட்டுக்கு போன..” என்று கேட்டபடி மகனின் கைகளுக்கு மருந்து தேய்த்து விட்டாள், ரேணுகா.
“அவரு மானுக்கு அடிச்சிட்டாரும்மா..” என வலியின் விசும்பலுடன் கூறியவன், ஈரம் காயாத மான்ஷியின் கன்னங்களைத் தன் டீஷர்ட்டை இழுத்து மென்மையாகத் துடைத்து விட்டான்.
இப்படி நாட்கள் அதன் போக்கில் கடந்து சென்றன.
அன்று மாலை நேர ஸ்விம்மிங் கிளாஸ் சென்று விட்டு வீட்டுக்கு வந்த யுகன், யாரும் அறியாமல் மான்ஷிக்காக வாங்கி வந்த ஆரஞ்சு மிட்டாயை எடுத்துக் கொண்டு அவளறைக்குச் சென்றான்.
வழமையாக அவள் ஸ்கூல் ஹோம் ஒர்க் செய்யும் நேரமிது! அன்று ருத்ரவன் யுகனை அடி வெளுத்ததில் இருந்து சாப்பிட மறந்தாலும், ஹோம் ஒர்க் எழுத மறக்க மாட்டேனெனும் அளவுக்கு பயந்து போயிருந்தாள்.
ஆயிரம் வேலைகள் தான் இருந்தாலும், மாலை நேரத்தை ஹோம் ஒர்க் செய்வதற்காகவென்றே தனித்துவமாய் ஒதுக்கி வைத்திருந்தாள். தன்னால், தன் உயிரோடு கலந்தவன் துன்பமுறுவதை அனுமதிக்க அவளென்ன முட்டாளா..
“ஹோம் ஒர்க் பண்ணற நேரமாச்சே! மானு எங்க போனா..” என தன்னிடமே கேட்டுக் கொண்டு சமையலறைக்கு சென்றவன், அங்கு பதட்டமாக நின்றிருந்த தாயையும், சகுந்தலாவையும் பார்த்து குழம்பிப் போனான்.
“ம்மா, மானுவை ரூம்ல காணோம். எங்க போயிட்டா?”
“இல்லைடா, கிளாஸ் விட்டு அவ வீட்டுக்கே வரல. எங்க போய்ட்டானு டென்ஷனா தேடிட்டு இருக்கும் போது தான் தெரிஞ்சுது, அப்பா மேல இருக்குற கோபத்துல பாப்பாவை யாரோ கிட்னப் பண்ணிட்டாங்கனு.. அப்பாவும், தர்ஷன் அண்ணாவும் பாப்பாவை அழைச்சிட்டு வர போயிருக்காங்க..” என யோசிக்காமல் பார்க்காமல் உண்மையை மறைக்காமல் புட்டுபுட்டு வைத்தார் ரேணுகா.
‘என்ன!’ என நொடியில் பதறி விட்டான் யுகேந்த்ரன்.
“இல்ல, மானுவுக்கு எதுவும் ஆகாது..” என மூச்சுவிட மறந்து இடையும்றாது முணுமுணுத்தவன், பதற்றத்தைக் குறைபதற்காக குவளையிலிருந்த தண்ணீரை மொத்தமாக வாய்க்குள் சரித்தான்.
“யாரும்மா கிட்னப் பண்ணி இருக்காங்க?” என்று மூச்சு வாங்க கேட்டவனிடம் பதில் கூற தயங்கிய ரேணுகா, அவனது இந்தப் பதட்டமும், தவிப்பும் கூட ஆபத்தானதோ என பயந்தாள்.
சாதாரண பதற்றமல்ல அது! முகத்தில் அருவியாய் வியர்வை வழிய, தொண்டைக் குழி ஏற இறங்க மேஜையின் ஓரத்தை அழுத்தமாக பற்றியபடி பதினெட்டு வயதேயான மகன் நின்றிருந்த கோலம் ஒருவித பயத்தை கொடுத்தது, அவனைப் பெற்ற தாய்க்கு.
“அவ இருக்குற இடம் தெரிஞ்சிடுச்சு. நீ டென்ஷன் ஆகாத தம்பி! பாப்பாவுக்கு எதுவும் ஆகாது..” என சகுந்தலா முந்திக் கொண்டு கூறிய எதுவும் அவனது காதில் ஏறவே இல்லை.
தலையை பற்றியபடி அப்படியே தரையில் மடங்கி அமர்ந்தவனிடமிருந்து, “மானுவுக்கு ஏதாவது ஆச்சு.. அப்பறம் நா..நான் எவனையும் சும்மா விட மாட்டேன்..” என்ற வெஞ்சின சபத வார்த்தைகள் வெளி வந்தன.
அயர்வாய் மெல்ல சுவற்றில் தலை சாய்த்தவன், “மானு..” என்ற முனகலோடு அடுத்த கணமே நான்காக மடிந்து, தொப்புக்கடீரென்று மயங்கி விழுந்திருந்தான்.