Home Uncategorizedதேனிறைக்கும் சீதள நிலவே – 11

தேனிறைக்கும் சீதள நிலவே – 11

by Hilma Thawoos
5
(1)

“அன்னைக்கு நான் இங்கே வரலைனு தான் உனக்கு கோபமா யுகன்? ஆறுதலா உன் பக்கத்துல இருக்கலைனு கவலையா என்ன.. அதுனால தான் என்னை அவொய்ட் பண்றியா?”

அவளது வினா சிரிப்பை வரவழைக்கத்தக்க ஒன்றாய் தோன்றியது யுகனுக்கு.

‘இதைத் தான் காரணம்னு சொன்னாளா? ச்சே, நான் வேறெதையோ நினைச்சுட்டேன்..’ என சத்தமாய் நகைக்க நினைத்தான். ஆனால் நகைத்தானா என்று கேட்டால், அதுதான் இல்லை. பாறை விழுங்கியவன் போல் விறைப்பாய் நின்றிருந்தான்.

“அவங்க, யாருமேயில்லாம நாம நடுத் தெருவுல அநாதையா அலைஞ்சப்போ அன்பா அரவணைச்சு ஆறுதல் கொடுத்த தெய்வங்கள்னு அம்மா இப்போவும் அடிக்கடி நினைவு படுத்துவாங்க அத்தை, மாமாவை..” மேற்கொண்டு கூற முடியாமல் பாதியிலே நிறுத்தியவள் கவலை தாளாமல் எச்சில் கூட்டி விழுங்கினாள். தொண்டைக் குழி எரிந்தது.

‘பாப்பா’ என அன்பே ஒழுக அழைக்கும் ரேணுகாவின் முகமும், அன்பை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு தன்னையும் அவரின் சொந்த மகளாய் நினைத்து அதட்டும் ருத்ரவனின் கண்டிப்பான பார்வையும் கண்ணுக்குள் படமாய் ஓடின.

‘இந்த உலகத்துல நல்லவர்களை வாழவே விட மாட்டியா?’ என கடவுளிடம் சண்டை போட்டாளே, அன்று அவர்களை இழந்து விட்டேன் என யுகன் அழைப்பு விடுத்த நேரத்தில்..

அவள் சொல்லியதைக் கேட்டு கீழுதட்டை வளைத்து கேலியாய் நகைத்த யுகன், கண்களில் கண்ணீர் வழிய நின்றவளை துச்சமாய் பார்த்து,

“எங்கம்மா அப்பா செய்த பெரிய தப்பு அதுதான். ரோட்டுல போற நாயை குளிப்பாட்டி கொண்டு வந்து வீட்டுக்குள்ள வைச்சுக்கிட்டாரு..” என்றான் மெல்லிய சிரிப்புடன். அந்த சிரிப்பில் கேலியைத் தாண்டி சோக சாயல் வெளிப்பட்டது.

மான்ஷி கன்னங்களைத் தாண்டி கழுத்தில் வழியவிருந்த கண்ணீரை புறங்கைகளால் துடைத்து விட்டுக் கொண்டாள்.

“அவங்களோட சடங்குக்கு கூட நான் வரலைனு கோபமாய்யா உனக்கு? இதை தவிர வேறெந்த காரணமும் இருக்க வாய்ப்பில்ல. நான் என்ன தப்பு செஞ்சேன்? சொல்லாம இப்படி வருத்தறியே யுகன்..” மீண்டும் கண்ணீர் வழிந்தது.

நக்கலாய் சிரித்தவன், மௌனமாய் அவ்விடத்தினின்று நகர்ந்து விட்டான். ப்சு, நின்று பொறுமையாய் விளக்கம் கொடுத்தால் அவனது கௌரவத்துக்கு என்னாவதாம்..

ஓய்ந்து போய் கட்டிலில் விழுந்தவளது கண்களில் கண்ணீருக்கு மட்டும் குறைவில்லை.

நெடுநாட்களுக்குப் பிறகு அவர்களின் நினைவு நெஞ்சை வாட்டியதில் என்றும் போல் தந்தையின் மேல் கொலை வெறியானாள் மான்ஷி.

‘அவர்களை இறுதியாய் ஒரு தடவையாவது பார்க்க முடியாதவாறு செய்து விட்டாரே!’ என்ற கோபத்தில் அவரிடம் சில வருடங்களாய் பேசுவதையே நிறுத்தி இருந்தாள்.

தன் பாராமுகத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் அவராகவே வந்து மன்னிப்பு கேட்டு, தாடை தொட்டு கொஞ்சி, கெஞ்சி சமாதானம் செய்ததும் தான் மனமிளகினாள்.

பேசாமல் இருந்தேன் என்பதற்காய் இறந்தவர்கள் என்றும் திரும்ப வரப் போவதில்லை, அவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்த தினம் மீண்டும் வரப் போவதுமில்லை. அப்படி இருக்கும் போது வீண் வீம்பு எதற்கு என நினைத்துத் தான் தந்தையிடம் பேசவே ஆரம்பித்திருந்தாள்.

தலைவலி ஓரளவு மட்டுப்பட்டதும் அறை விட்டு சிறு தள்ளாட்டத்துடன் வெளி வந்தாள் மான்ஷி. வெகு நேரம் அழுததில் முகம் வீங்கி, கண்கள் சிவப்பேறிப் போயிருந்தன.

வேலைகளை முடித்து விட்டு, சமையலறை வாசல்படியில் ஓய்வுக்காக கால் நீட்டி அமர்ந்தபடி இந்துவுக்கு அரிச்சுவடி சொல்லி கொடுத்துக் கொண்டிருந்த காமினியிடம், “காமினிக்கா ஒன் காஃபி ப்ளீஸ்” என்றாள் சோர்வாய்.

“இதோம்மா, எடுத்துட்டு வரேன்..” என்றவள் தோளுக்கு கீழால் தொல தொலவென வடிந்த இந்துவின் டீஷர்ட்டை சரி செய்து, அவளைத் தூக்கி தரையில் அமர வைத்து விட்டு எழுந்து கொண்டாள்.

“இ ஃபார் இந்தர்ல ம்ம்ம்மா?” என மூன்று வயது மகள் கேட்ட தோரணையில் சிரிப்பு வந்தது காமினிக்கு.

அவள் சிரிப்பதற்குள், இந்துவை அள்ளித் தூக்கி தட்டாமாலை சுற்றிய மான்ஷி, “இ ஃபார் இந்தர், வொய்(y) ஃபார் யுகன்..” எனக் கூறிக் கொண்டே அவளின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.

கலகல நகைப்புடன் வேகமாகக் கை கொட்டிய இந்து, “யுகி சித்தப்பா..” என குதூகலமாக ஆரவாரம் செய்தாள், தன்னிரு முயல் பற்களை வாடகைக்கு விட்டபடி.

அவளது மூக்கைத் தொட்டு ஆட்டி விளையாடிய மான்ஷி அவளைப் பத்திரமாகக் கீழே இறக்கி விட்டு திரும்பும் போது,

“ஒன் காஃபி ப்ளீஸ்..” என்ற கடினக் குரல் கூடத்திலிருந்து ஒலித்தது.

மான்ஷியை கடைக் கண்ணால் பார்த்த காமினி, “பார்றா! மேடமுக்கு காஃபி தேவைப்பட்டதும், ஐயாவுக்கும் தேவைப்படுது. இதை தான் லவ்வுனு சொல்லுவாங்களோ..” என்று கேட்டாள், கிசுகிசுப்பான குரலில்.

நாணித் தலை சாய்த்த மான்ஷி, “லவ்வைப் பத்தி நீங்க என்ன தெரியாதவங்களா? உங்க லவ்வை பார்த்து நானே பொறாமைப் பட்டிருக்கேன் காமினிக்கா..” என்றாள், சிறு குரலில்.

காமினி பற்களைக் காட்டினாள்.

“வீட்டுல விருப்பப்படலனு இந்தர் பையாவோட வீட்டை விட்டே ஓடி வந்துட்டிங்க. என் வீட்டுல எல்லாரும் ஓகே, ஆனா சம்பந்தப்பட்டவர் தான் மனசு வைக்கல; பிகு பண்ணுறாரு!” என சோகமாய் கூறியவளுக்கு பார்வையாலே ஆறுதலளித்த காமினி, காப்பி கப்பை அவள் கையில் கொடுத்து விட்டு, மற்றொன்றை தட்டில் வைத்துக் கொண்டு கூடத்துக்கு நடந்தாள்.

“வெயிட்! வெயிட்! வெயிட்!”

ஓடிச் சென்று அவளை வழி மறித்து நின்ற மான்ஷி, தன் கையிலிருந்த காப்பி கப்பை தட்டில் வைத்துவிட்டு தட்டைத் தன் கைகளில் வாங்கிக் கொள்ள,

“ஐயா என்னை திட்ட போறாரும்மா..” என சிறு குரலில் பம்மினாள் காமினி.

மான்ஷியால் யுகனின் கோபப்பார்வை அடிக்கடி இவளையும் தொட்டு மீளும். பிறகு இரவையில் ‘நீ உன் வேலையை மட்டும் பாரு..’ என இந்தரிடமும் சிலபல திட்டுகளை பெற்றுக் கொள்வாள்.

“நான் பார்த்துக்கிறேன்..” என கண் சிமிட்டிக் கூறிவிட்டு ஹாலுக்கு சென்றவள் சோபாவில் அமர்ந்திருந்த மிதுனாவைக் கண்டதும் முகம் சிவந்தாள்.

அவள் வந்திருக்கிறாள் என்பதை முன்பே அறிந்திருந்தால் கிட்சேனில் தன் நேரத்தை செலவு செய்திருக்கவே மாட்டேனே என்று நினைத்தவள் மூச்சை மெல்ல ஆசுவாசமாக இழுத்து விட்டாள்.

இரத்தம் கொஞ்சம் கொஞ்சம் சூடேற ஆரம்பிக்க, “ஹ்க்கும்!” என தொண்டையை செருமியவள் மிதுனாவை முறைத்தவாறே காப்பி தட்டை மேஜை மேல் வைத்து விட்டு, தனக்கானதை எடுத்துக் கொண்டு அவளுக்கு எதிரே அமர்ந்தாள்.

மான்ஷியை அங்கே எதிர்பார்த்திருக்காத மிதுனாவுக்கு சட்டென்று உடல் தூக்கி வாரிப் போட்டது.

தயக்கமாய் யுகனைத் திரும்பிப் பார்க்க, அவனோ தனக்கு முன் கழுகுப் பார்வையுடன் அமர்ந்திருப்பவளை சற்றும் கண்டு கொள்ளாமல் மேஜை மேலிருந்த காப்பியைக் கண் காட்டினான்.

மிதுனா கைகளைப் பிசைந்தாள்.

“உன்னை இங்கே வர வேணாம்னுல சொல்லி வைச்சிருக்கேன்?” அமைதியாய்.. மிக நிதானமாய் கேள்வி கிளம்பியது மான்ஷியிடமிருந்து.

அவள் என்னவோ சாதாரணமாக தான் கேட்டாள். ஆனால் அதற்கே மிதுனா நடுங்கிப் போனாள். அன்று அவள் முன்னிலையிலே ஜாடியை விட்டெறிந்து யுகனைக் காயப்படுத்தியதை கண்டதிலிருந்து மான்ஷியை காணும் போது உள்ளுக்குள் சற்று அதிகமாகவே உதறியது அவளுக்கு.

“அது, சார் தான்..” இமைகள் படபடக்க இறப்பர் நாடாவைப் போல் பேச்சை இழுவையாய் நிறுத்தியவளை சலிப்புடன் பார்த்தவள்,

“சாருக்கு சமீப காலமா மூளை குழம்பி போயிருக்கு. அவன் சொன்னதும் உடனே நீ கிளம்பி வந்திடுவியாக்கும்..” என்றாள். சலிப்பை தாண்டி எரிச்சல் வெளிப்பட்டது அவள் குரலில்.

மிதுனா நெளிந்தாள்.

யுகன் அழைப்பு விடுத்து ‘வா’ என அழைக்கும் போது வராமலிருப்பது ஒரு பிரச்சனை என்றால், சைக்கோ போல் எரிந்து விழும்  மான்ஷியை எதிர் கொள்வது மற்றொரு பிரச்சனை அவளுக்கு.

அங்கொருத்தி தன்னைப் பற்றி பேசுகிறாள் என்ற எண்ணமே இன்றி சோபாவை விட்டு எழுந்து நின்றவன், மணிக்கட்டைத் திருப்பி நேரத்தைப் பார்த்தவாறே,”நேரமாச்சு, போலாம்..” என்றான் மிதுனாவிடம்.

‘வர வேண்டாம்னு சொல்லி இருக்கிறேனே?’ என்ற கேள்விக்கு பதில் எதிர்பார்த்தவளாய் மான்ஷி தன்னையே லேசர் பார்வையால் துளைத்துக் கொண்டிருக்கும் போது, எங்ஙனம் இவவிடத்திலிருந்து நகர்வேன் என பயந்து நின்றாள் மிதுனா.

“மிது நேரமாச்சு..” என குரலுயர்த்திக் கூறி, மிதுனாவின் கவனத்தை தன்னை நோக்கி ஈர்த்தவன் அவளது கையைப் பற்றிக் கொண்டு நகரவென திரும்பவும்,

“அம்மாஆ..” என்ற அலறலுடன் மிதுனா அவனிடமிருந்து கைகளை உதறவும் சரியாக இருந்தது.

திடீரென முகத்தில் வீசி அடிக்கப்பட்ட காப்பியின் சூட்டில் கண்கள் மிதுனாவின் கலங்கி கலங்கின; வலது கன்னம் எரிந்தது.

கைகளை உதறியபடி வலியில் முனகியவளை திரும்பிப் பார்த்தவன் என்ன நடந்திருக்குமென்று ஒரே நொடியில் ஊகித்து விட்டான்.

பற்களை நறநறத்தபடி தலையைத் திருப்பி மான்ஷியை முறைத்தவன், “ஆர் யூ ஓகே மிது?” என கடினம் குறைந்த குரலில் மிதுனாவிடம் அக்கறைப்பட்டான்.

அவள் ஏதோ கூற வாயெடுப்பதற்குள்,

“முதல்ல மிது மிதுனு கொஞ்சுறதை நிறுத்துறியா? கேட்க சகிக்கல. நாராசமா இருக்கு!” என உச்சஸ்தாயியில் கத்தியவள், யுகனின் கரம் பதிந்திருந்த மிதுனாவின் தோளை வெறித்தபடி மேஜையை ஓங்கி உதைத்தாள்.

கண்ணாடி மேஜை சில்லு சில்லாக உடைந்து, ஓங்கி உதைத்த காலிலும் ஆங்காங்கே காயத்தை ஏற்படுத்தியது.

இருப்பினும் அவளின் கோபம் துளியளவும் தீரவில்லை. அவன் மைதிலியிடம் பேசுவதைப் பார்த்தே பொறாமைத் தீயில் வெந்தவள், வேற்று ஒருத்தியை செல்லப் பெயர் வைத்து அழைத்து, மென்மையான குரலில் ஆகர்ஷிப்பதை ஏற்றுக் கொள்வாளா என்ன..

இரத்தம் சொட்டத் தொடங்கிய காலை டைல்ஸ் தரையிலிருந்து தூக்கியவள் கண்கள் சிவக்க மிதுனாவின் மேல் பாய இருந்த நேரத்தில்,

“ஆர் யூ க்ரேஸி?” என்ற கத்தலுடன் அவளை சுவற்றோடு சாய்த்து கழுத்தை பலமாக நெறித்தான் யுகன்.

“பைத்தியம் இல்லய்யா! சை..க்.கோ ஆகிட்..” ம்ம்கூம், அதற்கு மேல் பேச முடியவில்லை. கழுத்து நெறிக்கப்பட்டுக் கொண்டிருந்ததில் மூச்சிறுகி, கண்கள் மேல் நோக்கி சொருகின.

“சா..சார் அவளை விடுங்க..” என முழு விசையுடன் அவனின் கை பற்றி இழுத்தாள் மிதுனா. பயத்திலும், அதிர்ச்சியிலும் வியர்வை ஆறாக ஓடியது அவள் முகத்திலும், உடலிலும்.

யுகனின் பிடி தளர்ந்ததும், தொப்பென தரையில் சரிந்து வீழ்ந்தாள் மான்ஷி.

கால் காயத்திலிருந்து இரத்தம் வெளியதாலோ, வெகு நேரமாய் மூச்சுக் குழாய் மூடப்பட்டு இருந்ததாலோ என்னவோ.. மெல்ல மயக்கத்தில் ஆழ்ந்து போனாள் மாளவிகா.. யுகனின் மான்ஷி!

*******

திறந்திருந்த ஜன்னல் வழியாகக் கசிந்து வந்த நிலவொளியில், சில மணி நேரங்கள் கடந்தும் மயக்கம் தெளியாமல் கட்டிலில் கண்மூடி துயில் கொண்டிருந்தவளை இலக்கின்றி வெறித்துக் கொண்டிருந்தான், யுகேந்த்ராவ்!

அவன் கண்கள் சிமிட்டாமல் அவளைப் பார்த்திருந்த பார்வைக்கான அர்த்தம் என்னவென்பதைப் புரிந்து கொள்ள எவராலும் முடியாது. ரசனையா.. வேதனையா.. காதலா.. கவலையா.. தாபமா.. கோபமா.. நேசமா.. வெறுப்பா.. வெறுமையா.. சலிப்பா.. ம்ம்கூம், அது அவன் மட்டுமே வெளிச்சம்!

கட்டிலில் அங்குமிங்குமாய் உருண்டு திறக்க முடியாத கண்களை கடினப்பட்டு திறந்த மான்ஷி, எரிச்சலைக் கொடுத்த கழுத்தை அழுத்தமாய் வருடிக் கொடுத்தாள். பலமாக இருமினாள்.

இருமிக் கொண்டே மெதுவாகக் கட்டிலில் எழுந்தமர்ந்தவள் சோபாவில் அமர்ந்து தன்னை வெறித்துப் பார்த்திருந்தவனைக் கண்டதும் சட்டென முகம் மலர்ந்தாள். கண்களில் ஹார்டின் பறந்தது.

நடந்த எதுவும் நினைவில்லை. கழுத்து எரிச்சலுக்கு காரணமானவனே அவன் தானென்பதை நொடியில் மறந்தாள். அசைக்கும் போது சுள்ளென்ற வலியைக் கிளப்பிய காலுக்கு என்ன நடந்ததென மறந்தாள்.

“யுகன்..” காய்ந்து போயிருந்த இதழ்களைப் பிரித்து மெல்லிய குரலில் முனகியவள், வறண்ட தொண்டையை ஈரப் படுத்துவதற்காய் எச்சிலை விழுங்கும் போது தொண்டை எரிந்தது.

கட்டிலில் உள்ளங்கைகள் ஊன்றி, மெல்ல எழுந்தவள் கட்டுப் போட்டிருந்த காலை அப்போது தான் கண்டாள்.

வலியில் கலங்கிய கண்களைத் துடைத்து விட்டவாறு கெந்திக் கெந்தி இன்னுமே பார்வை மாறாது தன்னையே பார்த்திருந்தவனை நெருங்கினாள்.

அவளை ஏறிட்டுப் பார்த்தான். அவனது நெற்றியில் வழிந்த வியர்வைத் துளிகள், நிலவு வெளிச்சத்தில் மின்னின. அதை தொட்டுப் பார்த்தவளின் மனத்தில் பற்பல கேள்விகள்.

‘இது.. இந்த வேர்வை.. எனக்கு ஏதாவது ஆகிடுமோங்குற பயத்துல ஊத்தெடுத்ததா?’

நினைக்கும் போதே இதயம் ஃப்ரீஸரில் வைத்தெடுத்த ஐஸ்கியூபை போல் சில்லிட, சகல வலிகளையும் மறந்து சோபாவின் கைப்பிடியில் தன் எடையை மொத்தமாய் சரித்தாள்.

மேஜை மீதிருந்த தண்ணீர் பாட்டில் திறந்தது திறந்தபடி கிடந்தது.

‘பதற்றத்தைத் தணிக்க அவ்வப்போது எடுத்து பருகி இருப்பானோ?’

பரவச மிகுதியில் ஏதோ சொல்ல வாய் திறந்தவள், உடலில் போர்த்தியிருந்த டவலை வலது கையால் உருவி சுருட்டிக் கொண்டு.. தன்னை ஓரந்தள்ளி விட்டு எழுந்து நின்றவனைக் கண்டதும் வாயை மூடிக் கொண்டாள். நெஞ்சில் மீண்டும் சொல்லொணா வலி!

உடற்பயிற்சி செய்திருப்பான் போலும்! நெற்றியில் மட்டுமல்ல, உடல் முழுவதும் வியர்வை தான். அணிந்திருந்த ஆர்ம்கட் டீஷர்ட்டைப் பிழிந்து காயப்போடலாம் எனக் கூறும் அளவுக்கு வியர்த்திருந்தது ஆடவனுக்கு.

“அப்போ பதட்டத்தாலயோ, பயத்தாலையோ வந்த வேர்வை இல்லையா இது?” என தன்னிடமே கேட்டுக் கொண்டவள் ஏமாற்றம் சொட்டும் விழிகளுடன் அவனை அடிபட்ட பார்வை பார்க்க,

“அதான் பைத்.. ஸ்ஸ் மயக்கம் தெளிஞ்சிடுச்சுல்ல? இப்போ கிளம்பு!” என அவள் முகம் பாராமல் கூறியவன் விறுவிறுவென வெளியேறி விட்டான் அறையிலிருந்து.

அவனது உருவம் கண்களை விட்டு மறைந்த பிறகும், அவன் சென்று மறைந்த திசையையே வெறித்துக் கொண்டிருந்தாள் மான்ஷி, வலியுடன்!

நெஞ்சம் என்னும் ஊரினிலே..

காதல் என்னும் தெருவினிலே..

கனவு என்னும் வாசலிலே..

என்னை விட்டுவிட்டுப் போனாயே!

வாழ்க்கை என்னும் வீதியிலே..

மனசு என்னும் தேரினிலே..

ஆசை என்னும் போதையிலே..

என்னை விட்டுவிட்டு போனாயே!

நான் தனியாய் தனியாய் நடந்தேனே..

சிறு பனியாய் பனியாய் கரைந்தேனே..

ஒரு நுரையாய் நுரையாய் உடைந்தேனே..

காதலாலே..’

தொடரும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!