4.8
(23)

மின்சார பாவை-11

 பழைய நினைவுகளில் இருந்து வெளிவந்தாலும், யுகித்தை சுற்றி தான் அவளது எண்ணம் சென்றது.

‘திமிர் பிடித்தவன்! ‌என் கிட்ட வம்பு பண்றதுன்னா ரொம்ப பிடிக்கும். இப்போதும் என்னை கேலி பண்றதுக்காகத் தான் இந்தப் பாட்டை பாடி இருப்பான். இதுக்கெல்லாம் அசரமாட்டா இந்த வெண்ணிலா.’ என்றவாறே

அவன் இருக்கும் பக்கம் பார்வையை செலுத்த.

 அவனும் கேலியாக இவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

 அந்தப் பார்வையை பார்த்ததும் எரிச்சலில் தலையை திருப்பிக் கொண்டாள் வெண்ணிலா.

இன்னும் உட்காராமல் நின்றுக் கொண்டிருந்தவளை, இழுத்து உட்காரச் செய்தாள் சபரிகா.

“எருமை! உனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. அப்ப எப்படி ஆட்டம் போட்டியோ, அப்படியே இப்பவும் ஆட்டம் போட்டுட்டு இருக்க‌.” என்றாள் சபரிகா.

“ கல்யாணமானா நம்மை குணத்தை மாத்திக்கணுமா என்ன? யாரு அந்த ரூல்ஸை போட்டது? நான் எப்பவும் இப்படித்தான். ஏன் அடுத்தவங்களுக்காக நாம நம்ம குணத்தை மாத்திக்கிட்டா, நமக்கு என்ன அவார்டா குடுக்கப் போறாங்க? இல்லைல… அப்புறம் என்ன? நம்ம நம்மளாவே இருந்துட்டு போகலாம். அதுல கிடைக்குற சந்தோசம் வேற லெவல்.” என்றாள் வெண்ணிலா.

“நீ சொல்றதும் சரி தான். உன்னை இப்படி பார்க்குறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.” என்று வெண்ணிலாவின் தோளில் கைப் போட்டுக் கொண்டு சபரிகா கூறினாள்.

“போதும் டி! சென்டிமென்ட்ஸெல்லாம் நமக்கு செட்டாகாது.”என்று புன்னகைத்தாள் வெண்ணிலா.

“சரி எவ்வளவு நேரம் இங்கே இருக்கிறது. ப்ரோக்ராமை ஃபுல்லா பார்க்க போறீங்களா? எனக்கு போரிங்கா இருக்கு.” என்று மஹதி முணுமுணுக்க.

“இப்போ தானே வந்தோம். இன்னும் கொஞ்ச நேரம் இருப்போம்.” என்ற வெண்ணிலாவைப் பார்த்து முறைத்தாள் மஹதி.

“நீ கொஞ்ச நேரத்துக்கு மட்டும் வந்துட்டு போற ஆளு. ஆனா அவ எப்பவும் இந்த மாதிரி ப்ரோக்ராம்னா முதல் ஆளாக வந்துட்டு கடைசி ஆளா தானே கிளம்புவ.” என்று ஹரிஷ் கேட்க.

“ஹி! ஹி!” என்று சிரித்தவள், ஹரிஷ் கூறுவது உண்மை தான் என்று சொல்லாமல் சொன்னாள்.

அன்றைய பொழுது மதியம் வரை ஆட்டம், பாட்டம் என்று ஆடிட்டோரியம் களை கட்டியது.

“இதுக்கு மேல முடியாது. பசிக்குது.நாங்க போறோம்.” என்று எல்லோரும் கிளம்பவும் தான் அரைக்குறை மனதுடன் கிளம்பினாள் வெண்ணிலா.

வந்ததிலிருந்து அவளையே கவனித்துக் கொண்டிருந்த யுகித்துக்கு சினம் பெருகியது. கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.

அவள் அங்கிருந்து கிளம்பவும் தான் அவனால் இயல்பாக மூச்சு விட முடிந்தது.

இவ்வளவு நேரம் ஆடிட்டோரத்தை அதக்களம் பண்ணியவள், இப்பொழுது கேண்டினை இரண்டு பண்ணிக் கொண்டிருந்தாள்.

அவளை சமாளிப்பதற்குள் போதும் போதுமென்றானது அவளது நட்பு வட்டாரத்துக்கு.

“இன்னும் எவ்வளவு நேரம் இங்கேயே இருக்கிறது?” என்று பப்ஸை வாயில் திணித்துக் கொண்டே வெண்ணிலா வினவ.

“ஏன் உனக்கு இங்கே இருக்குறதுல எதுவும் பிரச்சனையா?” என்று ஹரிஷ் கேலி செய்ய.

“எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. உன் பர்ஸ் தான் காலியாகும் பரவாயில்லையா?”

“அச்சோ! ஆளை விடுத் தாயே. முதல்ல இந்த இடத்தை விட்டு காலி பண்ணலாம்‌. எல்லோரும் எந்திருங்க.” என்று அவசரப்படாமல் ஹரிஷ்.

“டேய் ஹரி பயப்படாதே. நான் பார்துக்குறேன்.” என்று நகுலன் கூற.

“ஹப்பாடா!” என்றவாறே நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டான் ஹரிஷ்.

“நீயெல்லாம் ஒரு நண்பனாடா?” என்று அவனது தோளில் சபரீகாவும், வெண்ணிலாவும் மொத்த.

புன் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் மஹதி.

“பாவம் டி ஹரி. அவனை விடு.” என்று வக்கலாத்துக்கு வந்தாள் வெண்ணிலா.

“போதும் தாயே! நீதான் பிள்ளையார் சுழி போட்டதே. இப்போ சப்போர்ட்டுக்கு ஒன்னும் வரத் தேவையில்லை.” என்று ஹரிஷ் முறுக்கிக் கொள்ள.

“நான் உன் பெஸ்ட் ஃப்ரெண்ட்யா. இப்படி எல்லாம் சொல்லக் கூடாது.” என்று அவனது தோளில் கைப் போட்டு சமாதானம் செய்தாள் வெண்ணிலா.

அதற்குள் அடுத்தப் போட்டி ஆரம்பிப்பதாக அறிவுப்பு வர.

அங்கு சென்றது பஞ்சப் பாண்டவ அணி.

அங்கு காம்பியரிங் செய்துக் கொண்டிருந்த பெண்ணோ,” ஹாய் கைஸ். இப்போ ஜாலியா ஒரு விளையாட்டு விளையாடப் போறோம். கலந்துக்க ஆர்வம் உள்ளவங்க, அவங்க பேரை எழுதி அந்த பவுல்ல போடுங்க.” என.

‘பாட்டுத் தானே பாட சொல்லுவாங்க.’ என்று எண்ணிருந்த வெண்ணிலா, எப்பவும் போல முதல் ஆளாக பேரை எழுதி போட்டாள்.

ஆனால் யுகித் அவளை நக்கலாக பார்த்தான்.

‘இவன் ஏன் இப்படி பார்க்குறான். எதுவும் வில்லங்கத்தை இழுத்து விட்டேனோ.’ என்று குழம்பிப் போனாள் வெண்ணிலா.

அவள் நினைத்ததுப் போலவே, வில்லங்கமான கேள்வித் தான் வந்தது.

“ஹாய் காய்ஸ் இந்த போட்டி பாட்டுக்கு, பாட்டு நிகழ்ச்சி மாதிரி இருக்காது. சம்திங் டிப்ரண்ட்.

உங்ககிட்ட இரண்டே இரண்டு கேள்வி தான் கேட்கப்படும்.அதுக்கு நீங்க ஹானஸ்டா பதில் சொல்லணும். உங்க காலேஜ் டைம்ல உங்களோட ஆம்பிஷனா எதை நினைச்சிருந்தீங்கன்றதையும், இப்போ அதை அச்சீவ் பண்ணிட்டீங்களாங்குறதும் தான் அந்த கேள்வி.” என்று காம்பியரீங் பண்ண பெண் கூற.

“ஆத்தி! நல்லா வசமா வந்து சிக்கிக்கிட்டோமே.”என்று நெஞ்சில் கை வைத்துக் கொண்டாள் வெண்ணிலா.

 போட்டி ஆரம்பமானது.

 ஒவ்வொரு சீட்டாக எடுத்து பெயரை அழைக்க.

ஒவ்வொருவராக வந்து கல்லூரி படிக்கும் போது அவர்களது கனவையும், இப்பொழுது இருக்கும் நிலைமையும் கூற சிரிப்பு தான் வந்தது.

 நூற்றுக்கு ஒன்னு ரெண்டு பேர் மட்டுமே அவர்கள் நினைத்ததை நடத்தி இருக்க. மற்றவர்கள் எல்லோரும் நினைத்தது ஒன்றும் நடந்தது ஒன்றாகவுமாக இருந்தது.

படிக்கும் போது சீன் போட்டவர்கள் படித்து முடித்து விட்டு வேலையில் இல்லாமல் இருக்க.

அரியர்ஸ் வைத்தவர்கள், எல்லாம் நல்லா பொசிஷன்ல இருந்தார்கள்.

வெண்ணிலாவின் பேரும் வர.

அவளோ அவளது கனவாக வெளிநாட்டில் வேலை பார்க்க வேண்டும் என்ற லட்சியத்தை கூறியவள், தற்போது ஃபேமிலி பிசினஸ் பார்க்கிறேன் என்று கூறி விட்டு பார்க்க.

அவளுக்கு எதிரே அவள் பார்வை படும் இடத்தில் நின்றுக் கொண்டிருந்த யுகித் நக்கலாக அவளைப் பார்த்து சிரித்தான்.

அவனது பார்வையில் முகம் கன்றிய வெண்ணிலாவிற்கு அதற்கு மேல் நிகழ்ச்சியில் ஈடுபட ஆர்வம் இல்லை.

“என்ன ஆச்சு ? ஏன் டல்லாகுற? சும்மா இது ஃபன்னுக்குத் தானே.” என்று சபரீகா அவளை சமாதானம் செய்ய.

“ப்ச்! எனக்கு தலை வலிக்குது. வாங்க போகலாம்.” என்று அழைத்தாள் வெண்ணிலா.

“கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு நிலா. நாங்களும் பேர் கொடுத்திருக்கோமே.என்றாள் மஹதி.

“ நீங்க முடிச்சிட்டு வாங்க. நான் வெளியே வெயிட் பண்றேன்.”என்று அவள் கிளம்ப.

“ஹேய்! நிலா! நில்லுடி.” என்று எல்லோரும் அழைத்தனர்.

“ கொஞ்ச நேரம் தனியா இருந்தா அவள் சரியாகிடுவா. அவ போகட்டும்.” என்று நகுலன் கூற.

“சரி.” என்ற மற்றவர்களோ போட்டியில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தனர்.

வெண்ணிலாவோ ஆடிட்டோரியத்தை விட்டு விலகி செல்ல.

 அவளை பின் தொடர்ந்து வந்த யுகித்தோ, “வெண்ணிலா! தங்க வெண்ணிலா …”என்று கூப்பிட.

 அவனைத் திரும்பிப் பார்த்த வெண்ணிலாவின் முகமோ கோபத்தில் சிவந்திருந்தது.

“வாவ்! முகத்துல வர்ணஜாலம் கோலம் போடுதே.” என்று யுகித் ராகம் பாட.

“இப்போ உனக்கு என்ன வேணும்? எதுக்கு என்கிட்ட வம்பு பண்ற?”

“நான் ஒன்னும் வம்பு பண்ணலையே. ப்ச் பாவம். உன் கனவு நிறைவேறவில்லையே ஆறுதல் சொல்லுவோம்னு வந்தேன். அன்னைக்கு நான் கூப்பிடும் போதே வந்து இருந்தா இன்னைக்கு நீ நெனச்சது போல வெளிநாட்டில செட்டிலாயிருப்ப.” என்று அவளை ஆழ்ந்துப் பார்த்தவாறே கூறினான் யுகித்.

அவன் என்ன கூற வருகிறான் என்பது புரிந்ததும் அவள் முகத்தில் இப்பொழுது கேலி சிரிப்பு வந்தது.

“ என்னோட ஆம்பிஷனை வேணாம்னு நான் தான் தூக்கிப் போட்டேன். இன்னைக்கு நினைச்சாலும் எங்க மாமா என்ன வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவாங்க. இன்னும் சொல்லப் போனால் எனக்காக அங்க ஒரு கம்பெனியே ஆரம்பிப்பாங்க. நான் தான் வேண்டாம்னு விட்டுட்டேன். நான் எடுத்த முடிவு தப்புன்னு இந்த நிமிஷம் வரைக்கும் நான் நினைக்கலை.” என்று நக்கலாக கூற.

முகம் கறுக்க அங்கிருந்து வெளியேறினான் யுகித்.

ஒரு வழியாக ப்ரோக்ராம் முடிந்த நண்பர்களும் இவளோடு வந்து சேர்ந்து கொள்ள. அங்கிருந்து நகுலனின் வீட்டிற்கு கிளம்பினர்.

 மறுநாள் கல்லூரிக்கு வருவதற்கே வெண்ணிலாவிற்கு விருப்பமே இல்லை. ஆனால் அவளது மதன் சார் அன்று தான் வருகிறார்‌. அவருக்காக கிளம்பி வந்தாள் வெண்ணிலா.

 சார் வரும்போது வெளியில் இருந்தே அவரை வரவேற்கும் விதமாக மாணவ, மானவியர்கள் பூங்கொத்துடன் இருக்க.

இவர்களும் அவர்களுடன் கலந்துக் கொண்டனர்.

மதன் சார் காரில் வந்து இறங்க.

 அங்கு குழுமிருந்த மாணவ, மாணவிகளை பார்த்ததும் ஆனந்தத்தில் திக்கு முக்காடினார்‌.

 சற்று தள்ளி புன்னகையுடன் நின்றிருந்த வெண்ணிலாவை பார்த்ததும் அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

“ வெண்ணிலா!” என்று அவர் அழைக்க.

தன்னை இன்னும் நினைவில் வைத்திருக்கும் சாரின் அன்பை நினைத்து கண்கள் பணிக்க முன்னே வந்தவள்‌, அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க.

  எங்கேயோ இருந்த யுகித்தும் அவர்

  காலில் வந்து விழுந்தான்.

இருவரையும் எழுப்பி தோளில் தட்டியவர், “ ரெண்டு பேரும் மாறவே இல்லை. இன்னும் போட்டிப் போட்டுட்டுத் தான் இருக்கீங்களா?” என்று வினவ.

இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே கடந்த காலத்திற்கு சென்றனர்

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!