மின்சார பாவை-12

5
(5)

மின்சார பாவை-12

அன்று காதல் பண்ணியது.

 தீபிகா சொன்னதற்காக அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தாள் வெண்ணிலா.

ஆனால் யுகித் அப்படி அவளை இருக்கவிடவில்லை.

மதன் சார் மேல் உள்ள பொஸஸிவ்னாலே அவள் மேல் கோபப்பட்டான்.

யுகித்திற்கு மதன் சார் மிகவும் முக்கியமானவர்.

அவர், வெண்ணிலாவின் திறமையை பாராட்டுவதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

வெண்ணிலாவை பார்க்கும் போதெல்லாம் முறைத்துக் கொண்டே செல்ல. பதிலுக்கு வெண்ணிலாவும் முறைப்பாள்.

இப்படியே நாட்கள் செல்ல. விதியானது மீண்டும் இருவரை இணைத்துப் பார்த்தது.

இவர்களது கல்லூரியின் அனைத்து கிளைகளுக்கும் சேர்த்து கல்ச்சுரல்ஸ் ப்ரோக்ராம் அனவுன்ஸ் செய்யப்பட்டது. முதலில் கல்லூரி அளவில் தேர்வு செய்வார்கள்.

பிறகு ஏதாவது ஒரு கல்லூரியில், அனைத்து கல்லூரிகளுக்கும் சேர்ந்தவாறு போட்டி நடக்கும்.

இந்த முறை அனைத்து கல்லூரிக்கான போட்டி பெங்களூரில் நடப்பதாக இருந்தது.

அதற்கான மாணவ, மாணவியர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்க, வகுப்புகள் பெரிதாக நடக்கவில்லை.

பஞ்சபாண்டவ அணியும் வகுப்பில் ஆசிரியர் வராததால் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.

“ நம்மளோட எல்லா காலேஜுக்கும் சேர்ந்து கல்ச்சுரல்ஸ் ப்ரோக்ராம் நடக்கப் போகுதாம். யார் , யார் பேர் கொடுத்திருக்கீங்க.” என்று சபரீகா வினவ.

“டான்ஸ், பாட்டு இதெல்லாம் சுட்டு போட்டாலும் எனக்கு வராது. அதனால நான் எதுலையும் கலந்துக்கல. வெண்ணிலா நீ தான் நல்லா பாடுவியே. டான்ஸும் ஆடுவ…பேர் கொடுத்தியா? இல்லையா ?” என்று மஹதி வினவ.

“ப்ச்! பேர் கொடுக்கல.” என்றாள் வெண்ணிலா.

“ஏன் டி பேர் கொடுக்கலை? நீ கண்டிப்பா செலக்டாகிடுவடி.” என்று சபரீகாவும் கூற.

“அதான் கொடுக்கல.”

“என்ன வெண்ணிலா சொல்ற? ஒன்னும் புரியல.” என்று மஹதி வினவ.

“நான் கண்டிப்பா செலக்டாகிடுவேன். இங்க செலக்டானா, பெங்களூர் போகணும். எங்க வீட்ல எப்படியும் விட மாட்டாங்க. அதான்.” என்ற வெண்ணிலாவின் முகம் உணர்ச்சிகளற்று இருக்க.

“உங்க அம்மா ஏன் தான் இப்படி இருக்காங்களோ தெரியல. எங்கேயும் விடமாட்டேங்கிறாங்க.சரி விடுடி. இப்போ நமக்கு க்ளாஸ் நடக்கலையே! எவ்வளவு நேரம் தான் இப்படி பேசிட்டே இருக்குறது. ரொம்ப போரடிக்குது. நீ ஏதாவது பாடு.” என்று சபரீகா கூற.

“டபுள் ஓகே. உங்களுக்கு என்ன பாட்டு வேணும்னு கேளுங்க. நான் பாடுறேன்.” என்றவள், அவளது நண்பர்கள் கேட்ட பாடல்களை வரிசையாக பாடினாள்.

அவள் குரல் வளத்தில் எல்லோரும் மெய் மறந்து நின்றிருக்க. அவர்களது பேராசிரியர் மதன் வந்ததைக் கூட கவனிக்கவே இல்லை.

பாட்டு முடிந்ததும், மதன் கை தட்ட.

எல்லோரும் சத்தம் கேட்ட பக்கம் திரும்பிப் பார்த்தனர். அங்கே மதன் நின்றிருந்தார்‌

அவரைப் பார்த்ததும் பயத்துடன், “சார்.” என்று தயக்கமாக அழைத்தாள் வெண்ணிலா.

“வெண்ணிலா பாலோ மீ!”என்றவாறே வேகமாக நடக்க.

“ அடியே. நான் பாட்டுக்கும் சிவனே தானே இருந்தேன். பாட சொல்லி என்னை இப்படி மாட்டி விட்டுட்டீங்களே. உங்களால தான் எல்லாம்…” என்று தோழமைப் பட்டாளத்தைப் பார்த்து முறைத்த வெண்ணிலா, வேகமாக அவரை பின்தொடர்ந்தாள்‌

 அவரோ ஆஃபீஸ் ரூமிற்கு அழைத்துச் சென்று, வெண்ணிலாவின் பெயரையும் போட்டிக்குச் சேர்த்தார்.

“சார் !” என்று வெண்ணிலா தயங்க.

“மூச்! எதுவும் பேசக் கூடாது. உன் வாய்ஸ் சூப்பரா இருக்கு. ஜோடி பாட்டுல யுகித்தோட சேர்ந்து பாடுற. நாளைக்கு பத்து மணிக்கு ஆடிஷன். ஆடிட்டோரியம் வந்துடு.” என்றுக் கூற.

அவளால் மறுக்க இயலாமல் பேர் கொடுத்தாள்‌.

அங்கு இருந்த யுகித்துக்கோ, மதன் சார் அவளைப் பாராட்டுவதை அவனால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.

“ சார்! ஏற்கனவே நானும், ரம்யாவும் பேர் கொடுத்திருக்கோம்.” என்று கூற.

“ரம்யா கிட்ட நான் பேசுகிறேன் ரம்யா சோலா சாங் பாடட்டும்‌ நீங்க ரெண்டு பேரும் ஜோடி பாட்டு பாடுங்க. உங்க கெமிஸ்ட்ரி நல்லா இருக்கு. நீங்க இரண்டு பேரும் சேர்ந்து பாடினா இந்த கேட்டகரில நம்ம காலேஜுக்கு தான் கப் கன்பார்ம்.” என்று உறுதியாக மதன் கூறி விட.

“ஓகே சார்.” என்ற யுகித்தோ, ‘நாளைக்கு தானே ஆடிஷன் நடக்கும். அதுக்குள்ள அவளை கலந்துக்க முடியாதது போல செய்யணும்.’ என்று எண்ணி திட்டம் தீட்டினான். அதை செயல்படுத்த தீபிகாவை தேடினான்.

“தீபு…” என்றவாறே அவளருகே செல்ல.

ரகுலன், “என்ன மச்சி! தீபுவுக்கு மட்டும் ஸ்பெஷலா என்ன வச்சிருக்க.” என்று யுகித்தின் கையிலிருந்த பார்ஸலை பிடுங்க

 முயற்சிக்க.

“ப்ச்! அவளுக்கு இல்லை.” என்றான் யுகித்.

“முதல்ல இது என்ன?” என்று தீபிகா வினவ.

“தீபு! உன் ப்ரெண்ட் வெண்ணிலாவுக்கு வெண்ணிலா ஐஸ்கிரீம்.” என்று அந்தப் பார்ஸலை நீட்டினான்.

“அவளுக்கு வெண்ணிலா ஐஸ்கிரீம் பிடிக்கும்னு உனக்கு எப்படித் தெரியும்.” என்று தீபிகா வினவ.

“நீ தானே சொன்ன. எங்கெல்லாமோ உன் ஃப்ரெண்ட்டுக்காக வெண்ணிலா ஐஸ்க்ரீம் தேடி அலைஞ்சேன்னு சொன்ன. இன்னைக்கு வெளியே போனேன். இந்த ஐஸ்கிரீமைப் பார்த்ததும் ஞாபகம் வந்தது. அதான் வாங்கிட்டு வந்தேன்.” என்று நீட்ட.

“ஆமாம். அவளுக்கு இது ரொம்ப பிடிக்கும்.” என்ற தீபிகா, வெண்ணிலாவைத் தேடி சென்றாள்.

“பேபி! என்னாச்சு இந்த நேரம் வந்திருக்க. என்னாச்சு? அந்த நெடுமரம் உன் கிட்ட சண்டை போட்டுச்சா?” என்று வெண்ணிலா வினவ.

அவள் தலையில் லேசாக குட்டிய தீபிகா,” என் ஃப்ரெண்ட்டை வம்பிழுக்கலைன்னா உனக்குத் தூக்கமே வராது.

“பேபி! நான் ஒன்னும் உன் ஃப்ரெண்ட்டை வம்பிழுக்கலை. இந்த நேரம் வரமாட்டியேன்னு தான் கேட்டேன்.” என்று முகத்தை சுருக்கிக் கொண்டு கூறினாள் வெண்ணிலா.

“கோச்சுக்காதே நிலா. எனக்கு நீயும் முக்கியம். அவனும் எனக்கு முக்கியம். இரண்டு பேரும் சண்டை போடக்கூடாது சரியா?” என்று தீபிகா வினவ.

“உனக்காக சண்டை போடாமல் இருக்கேன் போதுமா?”

“என் செல்லக்குட்டி. இந்தா உனக்காக ஐஸ்கிரீம் வாங்கிட்டு வந்திருக்கேன்.”என்று அவள் ஐஸ்கிரீமை நீட்ட.

ஆவலாக வாங்கிய வெண்ணிலா அதை உண்ண ஆரம்பித்தாள்.

“ஹே! நாளைக்கு ஆடிஷன் இருக்குல்ல…” என்று சபரீகா தடுக்க.

“அதெல்லாம் என்னை ஒன்னும் பண்ணாது.” என்றவள், யாருக்கும் தராமல், அந்த ஃபேமிலி பேக் முழுவதையும் சாப்பிட்டு முடித்தாள்.

அதைப் பார்த்த யுகித்தோ புன்னகையுடன் நகர்ந்தான்.

அந்தப் புன்னகையெல்லாம், மறுநாள் புத்துணர்ச்சியுடன் வந்த வெண்ணிலாவை கண்டதும் மறைந்தது‌.

வெண்ணிலா உள்ளே நுழைந்ததும் அவளது நண்பர்கள் பட்டாளம், அவளை சுற்றிச் சுற்றிப் பார்த்தனர்.

“எதுக்கு என்ன இப்படி பார்க்குறீங்க?” என்று வெண்ணிலா வினவ.

“இல்லை… நேத்து நீ சாப்பிட்ட ஐஸ்கிரீமுக்கு படுத்து கிடப்பேன்னு நினைச்சேன்.”என்று நகுலன் கூற.

“என்ன நகுல் நீயும் இவங்களோட சேர்ந்துட்டு கிண்டல் பண்றியா?”

“பின்னே சும்மா விடுவாங்களா? ஒரு முழு ஃபேமிலி பேக்கை எங்களுக்கு தராமல் ஒரே ஆளா முழுங்கிட்டு கேள்வியை பாரு.” என்று அவளது தலையில் லேசாக குட்டினான் நகுலன்.

“கேட்டு இருந்தா கொடுத்திருப்பேன்.”

“ என்னது கேட்டு வாங்கணுமா? கேக்காமலே கொடுக்கணும் எருமை.” என்று சபரீகாவும் அவளது தலையிலே தட்ட.

“சாரி! ஐஸ்கிரீமை பார்த்ததும் நீங்க யாருமே என் கண்ணுக்கு தெரியல. இந்த பச்ச புள்ளையை மன்னிச்சிடுங்க.” என்று அவர்களை சமாதானப்படுத்தினாள் வெண்ணிலா.

இவர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டிருந்த யுகித்தோ,’ச்சே! ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் தொண்டை கட்டிக்கணும்னு பார்த்தா கொஞ்சம் கூட குரலில் பிசிரு இல்லையே.”என்று எண்ணியவனின் முகம் இறுகியது.

‘நேத்ரா மேடம்க்கு பர்ஃபெக்க்ஷன் முக்கியம். ஆடிஷனுக்கு அவளை எப்படியாவது வரவிடாமல் பண்ணனா போதும்.’ என்று எண்ணியவனின் முகம் மலர, ரகுலனை அழைத்தான்.

“என்ன மச்சி எதுக்கு கூப்பிட்ட.”

“ஒன்னும் இல்லடா! அந்த வெண்ணிலாவை ஸ்போர்ட்ஸ் ரூம் பக்கம் வர சொல்லு.”

“டேய் என்னடா பண்ற?”

“மச்சி! பாட்டு ரிகர்சல் பண்ணனும். அங்க தான் டிஸ்டர்பன்ஸ் இருக்காது. அதான்.”

“ஓ! அப்போ சரி. நான் போய் வெண்ணிலாவை கூட்டிட்டு வர்றேன்.” என்று வெண்ணிலாவை அழைக்கச் சென்றான்.

“என்ன ரகுண்ணா இந்த பக்கம். எங்களை ராகிங் பண்ண வந்திருக்கீங்களா?” என்று வெண்ணிலா வினவ.

“ உனக்கு என்ன வம்பு இழுக்கலைன்னா தூக்கமே வராதே.”

“ சரி… எதுக்கு வந்தீங்க? அதைச் சொல்லுங்க.”

“ பாட்டு ரிகர்சல் பண்ணனுமாம். யுகி உன்னை ஸ்போர்ட்ஸ் ரூம் பக்கம் வர சொன்னான்.”என்றுக் கூற.

 அவளும், யுகித்தை நம்பி சென்றாள்.

ஸ்போர்ட்ஸ் அறைக்குள் நுழைந்தவள், யுகித்தை தேட.

அங்கோ யாருமில்லை.

“சீனியர்!” என்று அழைத்தவாறே பார்வையை சுழற்றினாள்.

அதற்குள் கதவை மூடும் சத்தம் கேட்க. பதறிய வெண்ணிலாவோ வேகமாக கதவைத் தட்டினாள்.

“ஹலோ யாருங்க டோர் லாக் பண்ணுனது. நான் உள்ள இருக்கேன்.

 ப்ளீஸ் ஓபன் த டோர்.”என்று கத்தினாள் வெண்ணிலா.

அவளது நல்ல நேரமாக, மதன் சார் அந்தப் பக்கம் வந்தார்.

யாரோ அந்த அறையில் இருந்து கத்துவது கேட்க.

 கதவை திறந்தார்

 அங்கோ முகமெல்லாம் வியர்த்து இருக்க. பயத்துடன் இருந்தாள் வெண்ணிலா.

“வெண்ணிலா என்னாச்சு? யார் உன்னை உள்ளார வச்சு கதவை சாத்துனா?என்று அவர் வினவ.

“தெரியலை சார்.” என்றாள்.

அதற்குள் கல்லூரியில் விஷயம் தெரிந்து எல்லா மாணவர்களும் அந்த இடத்திற்கு வந்து விட்டனர்.

“பயப்படாதே வெண்ணிலா. யார்னு சொல்லு பார்த்துக்கிறேன்.” என்று கோபத்துடன் மதன் வினவ.

“லாஸ்ட்டா வெண்ணிலாவ ரகுலனோட தான் சார் பார்த்தேன்.” என்று என்று ஒரு மாணவன் கூற.

“ஐயோ! நான் இல்லை.” என்று ரகுலன் பதற.

“ரகு அண்ணாவுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யுகித் கூப்பிட்டார்னு சொன்னார். அவரும் ஆடிஷனைப் பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு கிளம்பிட்டாரு. அதைப் பத்தி யோசிச்சிகிட்டே இந்தப் பக்கம் வந்துட்டேன். இந்த ரூம் தொறந்திருந்துச்சு. ஏன் திறந்து இருக்குன்னு லைட்டை போட்டுட்டு பார்த்தேன். திடீர்னு கதவு லாக் ஆயிடுச்சு. தன்னால லாக்காகிருக்கும். விடுங்க சார்.” என்றாள் வெண்ணிலா.

‘அவசரத்தில் தான் செய்த காரியத்தால் சாரின் முன்பு தலைகுனிந்து நிற்க வேண்டி இருக்குமோ!’என்று உள்ளுக்குள் பதறியே யுகித்திற்கு இப்பொழுது தான் உயிரே வந்தது.

“சரி! சரி! எல்லோரும் கிளம்புங்க. எதுவா இருந்தாலும் முதல்ல மேனேஜ்மெண்ட் சொல்லி இந்த இடத்திலே ஒரு சிசிடிவி கேமரா வைக்கணும். ஸ்போர்ட்ஸ் விளையாடறவங்களுக்கு டிஸ்டர்ப் இருக்க கூடாதுன்னு பார்த்தா, அது இனி சரி வராது‌.” என்றவர், அங்கு நின்றுக் கொண்டிருந்த வெண்ணிலாவிடம், “வெண்ணிலா! உன்னால ஆடிஷன்ல கலந்துக்க முடியுமா?”என்று அக்கறையாக வினவ.

“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை சார். நான் ரிலாக்ஸாகிட்டேன்.” என்று புன்னகைத்தாள் வெண்ணிலா.

“தட்ஸ் குட் …”என்று அவளை பாராட்டி விட்டுச் சென்றார் மதன்.

எல்லோரும் கலைந்து செல்ல. வெண்ணிலாவும் அங்கிருந்து கிளம்ப முயன்றாள்.

“வெண்ணிலா! “ என்று மென்மையாக அழைத்தான் யுகித்.

“என்ன சாரி சொல்லப் போறீங்களா? உங்க சாரி எனக்குத் தேவையில்லை.”

“நான்…” என்று யுகித் தடுமாற.

“நீங்க செய்யலைன்னு மட்டும் சொல்லாதீங்க. நீங்கதான் இதை செஞ்சீங்கன்னு எனக்கும் தெரியும். உங்களுக்கும் தெரியும். நான் ஏன் சார் கிட்ட இந்த உண்மைய சொல்லைன்னா பேபிக்காகத் தான். ரெண்டு பேரும் சண்டை போட்டா எனக்கு வருத்தமா இருக்குன்னு சொல்லிருக்கா. அதான் நானும் ஒதுங்கி போக நினைக்கிறேன். என்னோடு சேர்ந்து பாட உங்களுக்கு விருப்பம் இல்லைன்னு தெரியுது. நீங்க ரொம்ப கவலை பட வேண்டாம். எப்படியும் செலக்ட் ஆனாலும் நான் வரமாட்டேன். அதனால நீங்க சின்னப்புள்ள தனமா இனிமேல் நடந்துக்காதிங்க.” என்று விட்டு அங்கிருந்து சென்றாள் வெண்ணிலா.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் யுகித். முதல் முறையாக அவள் மேல் கோபம் இல்லாமல், வியப்புடன் பார்த்தான்.’

பழைய நினைவில் இருந்து வெளியே வந்தவனது கண்கள் அவளையே வட்டமிட.

அவளோ அன்று போல் கல்லையும், மண்ணையும் பார்ப்பது போல பார்த்துவிட்டு அங்கிருந்து நகர.

“ திமிர் பிடித்தவள்.” என்று திட்டினான் யுகித்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!