“வெண்ணிலா எப்பொழுதும் போல் தன் உணர்வுகளை மறைத்து புன்னகைக்க.
எல்லாரும் முகத்திலும் அது எதிரொளித்தது.
“வெண்ணிலா கம் பேக்!” என்று சபரீகா கூற.
“ஆமாம்!”என்றவாறே மற்றவர்களும் ஆமோதிக்க.
அந்தக் கூட்டத்தில் ஒருவன் மட்டும் அவளை இரக்கமாகப் பார்த்தான்.
அது வேறு யாரும் இல்லை. நகுலனின் அண்ணன் ரகுலன் தான்.
ரகுலனோ,’பாவம் இந்தப் பொண்ணு… இந்த காலேஜ்ல இருந்து போகும்போது தான் அழுதுகிட்டே போனதுனா, இப்போ திரும்பி வரும்போதும் கால் தடுமாறுது, கண்ணெல்லாம் கலங்குது. என்ன நடக்க போகுதோ தெரியலையே? கடவுளே நீ தான் இந்த பொண்ணுக்கு துணையாக இருக்கணும்.’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டிருந்தான்.
ரகுலனின் பார்வையைப் பார்த்து வெண்ணிலாவுக்கு கொலை வெறியானது.
“ரகுண்ணா! உங்களுக்கு வேற வேலையே இல்லையா?” என்று கடுப்புடன் வினவினாள் வெண்ணிலா.
“தெரியும் மா! உனக்கு என்னைப் பார்த்தா எப்பவுமே டங் ஸ்லீப் ஆகும்னு தெரியும். எனக்கு இதுவும் வேணும்.இன்னமும் வேணும்” என ரகுலன் முணுமுணுக்க.
“அச்சோ! சாரிண்ணா. நான் சும்மா தான் சொன்னேன். ஆமாம் உங்க ஃப்ரெண்ட்ஸுங்க யாரும் வரலையா?” என்று மீண்டும் வினவினாள்.
“ உங்க கேங்க் மாதிரி எல்லோரும் வரலை. எங்க கேங்ல பாதி பேர் வெளிநாட்டுல செட்டில் ஆகிட்டாங்க. இரண்டு மூணு பேரு தான் வராங்க. அவங்களும் என்னைக்கு வராங்கன்னு தெரியாது.”
அதற்குள் ஒரு மாணவன் வந்து,” இங்கே ரகுங்குறது யாரு ?” என்று வினவ.
“ நான் தான் ரகு.” என்ற ரகுலனைப் பார்தத மாணவனோ, “உங்களை யு.கே சார் வர சொன்னாங்க.” என்றான்.
“ஓகே காய்ஸ் நீங்க என்ஜாய் பண்ணுங்க. நான் வர்றேன்.” என்ற ரகுலன், அந்த மாணவனுடன் சென்றான்.
“ யு. கே சாரா? இது என்னாட புதுப் பேரா இருக்கு. ஒரு வேளை சார் லண்டன் ரிட்டர்ன் போல.” என்று வெண்ணிலா சிரிக்க.
அவள் தலையில் குட்டிய நகுலனோ, “ எல்லோரையும் கலாய்க்குறது தான் உன் வேலையா?” என.
“நாம நம்ம சாருக்கு பட்ட பெயர் வேற மாதிரி வைப்போமே. இவங்க இப்படி வச்சிருக்காங்களேன்னு தான் கேட்டேன். வேற யாரை நான் கலாய்ச்சேன்? யூ நோ ஐயம் எ குட் கேர்ள்.”
“ நீ தானே தெரியும். தெரியும்.” என்று நாலா பக்கம் இருந்து குரல் வந்தது.
“அடேய் அப்ரசண்டிங்களா? இவ்வளவு நேரம் இவன் என்னை அடிக்கும் போது சும்மா இருந்துட்டு, இப்போ மட்டும் வர்றீங்களே.” என்று தனது தோழமைப் பட்டாளத்தைப் பார்த்து முறைத்தாள்.
“ அது ஒன்னும் இல்லை நிலா! பொய் சொல்றதுனாலும் பொருந்த சொல்லணும். நீ பாட்டுக்கும் குட் கேர்ள் சொல்லவும் பதட்டத்துல கோரஸ் பாட வந்துட்டோம். இல்லன்னா நீங்க ரெண்டு பேரும் பேசும் போது நாங்க வந்தா எங்களை நீ சும்மா விட மாட்டேன்னு தெரியாதா?” என்று சபரீகா கேட்க.
“ நல்லா வருவீங்க டா. இன்னும் யாரையும் காணோம். பத்து மணிக்கு மேல தான் வர ஆரம்பிப்பாங்கன்னு நினைக்கிறேன். அதுவரைக்கும் நம்ம ஆஸ்தான இடத்துல உட்காரலாம்.” என்ற வெண்ணிலா, அங்கிருந்து அரைச் சுவரில் அசால்டாக ஏறி அமர்ந்தாள்.
அவளருகே ஏறி அமர்ந்த நகுலனிடம்,” அண்ணா மேல பாசம் ஜாஸ்தியாகிடுச்சோ. அங்க அடிச்சா இங்கே வலிக்குதே.” என்று புருவத்தை ஏற்றி இறக்கினாள் வெண்ணிலா.
“காலேஜ் படிக்கும் போது தான் என் அண்ணனைப் போட்டு கலாய்ப்ப. இப்பவும் அதே மாதிரியே பண்ற. நீ கிண்டல் பண்ணதுக் கூட தெரியாமல் என் அண்ணன் சுத்துது.”
“சும்மா உன் அண்ணனை வம்பிழுக்கணும்னு ஆசையா?
நான் என்னமோ பாவப்பட்ட பிறவி போல பார்க்கும் போதெல்லாம் இரக்கமா பார்த்துட்டு இருக்காங்க. காலைல உங்க வீட்லையும் அப்படித்தான் பார்த்தாங்க. இப்போ காலேஜுக்கு வந்ததுக்கப்புறமும் அப்படியே பார்க்குறாங்க. என்னைப் பார்த்தா பரிதாபப்படுற மாதிரியா இருக்கு. ஏஞ்சல் போல இல்லை.” என்றவள், திட்டிலிருந்து குதித்து அவள் அணிந்திருந்த சுடிதார் டாப்பை இருப்பக்கம் பிடித்துக் கொண்டு சுழன்றாள்.
“அடியே எருமை! ஆடுனது போதும். இங்க வந்து உட்காரு. நீ உண்மையிலேயே ஏஞ்சல் மாதிரி தான் இருக்க.” என்று மஹதி கூற.
அமைதியான வெண்ணிலா, நகுலனின் அருகே அமர்ந்து,” இங்கே பாரு நகுல்! என்னை யாராச்சும் இப்படி இரக்கமா பார்த்தா கோவம் தான் வரும். நானும் பார்க்குறேன், இந்த காலேஜ்ல சேர்ந்த அன்னையிலிருந்து இன்னைய வரைக்கும் அந்த பார்வையை மாத்திக்கவே மாட்டேங்கிறாரு. அவரு அப்படி பார்த்ததால நடந்த ஒரு நல்லது, நீ எனக்கு நண்பனா கிடைச்சது தான். அந்த ஒரே காரணத்துக்காக மட்டும் தான் உங்க அண்ணனை சும்மா விடுறேன்.” என்றுக் கூற எல்லோரும் முகத்திலுமே புன்னகை.
புன்னகையுடன் அந்த நாளிற்கே சென்றனர்.
****************
அன்று (காதல் பண்ணியது)
கல்லூரியில் அடியெடுத்து வைக்க, ஒவ்வொருவருக்கும் கனவு, லட்சியம் என்றிருக்க. வெண்ணிலாவிற்கோ, வீடெனும் சிறையிலிருந்து தப்பிக்கும் வழியாகத் தான் எண்ணினாள்.
படிப்பு, படிப்பு என்று பள்ளியிறுதி வரை ஓடியவள், ஓய்வாக விடுமுறையை கழிக்க எண்ணியிருந்தாள்.
ஆனால் இரண்டே நாட்களில் எப்போதடா கல்லூரி ஆரம்பிக்கும் என்று எண்ணுமளவுக்கு வீட்டில் நடந்துக் கொண்டனர்.
டான்ஸ் க்ளாஸ் போ, மியூசிக் கத்துக்கோ, கம்யூட்டர் க்ளாஸ் போ, இல்லைன்னா சமையல் கத்துக்கோ என்று வீட்டில் அவளைப் படுத்த, அவளுக்கு மூச்சு முட்டிப் போனது.
ப்ளஸ்டூ ரிசல்டுக்காகவும், கல்லூரி திறப்பதற்காகவும் காத்திருக்க ஆரம்பித்தாள் வெண்ணிலா.
ரிசல்ட் ஒரு வழியாக வந்து விட்டது. அவளது பெற்றோர் எதிர்பார்த்த மதிப்பெண்ணை வெண்ணிலா எடுத்திருக்க.
அவர்களுக்கு ரொம்ப சந்தோஷம். வெண்ணிலாவிற்கும் மிக்க மகிழ்ச்சி தான். ஆனால் அது தொடர்ந்து நீடிக்கவில்லை.
வெளியூர் கல்லூரியில் சேர வேண்டும் என்று எண்ணியிருந்த வெண்ணிலாவின் எண்ணத்திற்கு பெரிய தடை விதித்தனர்.
“அம்மா! ப்ளீஸ்மா… நான் சென்னையில படிக்கிறேன். நான் எந்த பிரச்சனையும் பண்ணிட்டு வரமாட்டேன். நான் உங்களுக்கு ப்ராமிஸ் பண்றேன்.” என்று வெண்ணிலா கெஞ்ச.
“அதெல்லாம் ஒன்னும் வேணாம். உங்களையெல்லாம் நம்பி, நம்பி ஏமாந்ததெல்லாம் போதும். எங்க கண்ணு முன்னாடியே இருந்து படிக்கிறதா இருந்தா படி. இல்லைன்னா நீ படிக்கவே வேண்டாம். இங்க இருந்தா நாங்க காலேஜுக்கு வந்து அடிக்கடி விசாரிப்போம். அவங்களும் எங்களை கூப்பிட்டு பேசுவாங்க. சென்னைனா அது சரி வராது. இந்த கொடைக்கானல் இல்லாதா காலேஜ் ஜா?” என்று கமலி கூற.
எப்பொழுதும் போல் அவளது தந்தை முகுந்தன் அமைதியாகவே இருந்தார்.
இருவரையும் பார்த்த வெண்ணிலாவிற்கு அவ்வளவு கோபம் வந்தது.
படிப்பு முக்கியம். அது முடிந்தால் தான் ஒரு வேலை தேடிக் கொண்டு இந்த சிறையிலிருந்து தப்பிக்க முடியும் என்று எண்ணியவள், அவளது அன்னையின் போக்கிற்கு தலையாட்டினாள்.
ஒரு வழியாக இன்ஜினியரிங் காலேஜில் சேர்ந்தாள். கிட்டத்தட்ட மூன்று, நான்கு மாதங்களாக வீட்டில் மூச்சு முட்டி அடைந்துக் கிடந்தவளுக்கு, முதல் நாள் கல்லூரிக்குச் செல்லும் போது சிறகு விரித்து பறப்பது போல் இருந்தது.
“அம்மா ! காலேஜுக்கு போயிட்டு வர்றேன். அப்பா பை.” என்று இருவரிடமும் சொல்லி விட்டு கிளம்பிய வெண்ணிலாவின் முகம் சந்தோஷத்தில் பளபளக்க.
“வெண்ணிலா நில்லு!” என்று தடைப் போட்டார் கமலி.
“என்னம்மா?” என்றவளுக்குத் தோன்றிய சலிப்பை தனக்குள்ளே மறைத்துக் கொண்டாள்.
“இங்கப் பாரு வெண்ணிலா. காதல் கண்றாவின்னு எந்த அசிங்கத்தையாவது இழுத்துட்டு வந்த, அவ்வளவு தான். காலேஜுக்கு போனமா, வந்தமான்னு இருக்கணும். காலேஜ்ல ஏதாவது பிரச்சனை உன்னால வந்துச்சுன்னு தெரிஞ்சிருச்சுனாலே படிப்ப நிறுத்திடுவேன்.நான் சொல்றது உனக்குப் புரியும்னு நினைக்கிறேன்.” என்றுக் கமலி கூற.
உணர்ச்சியற்ற முகத்துடன் கல்லூரியில் அடி எடுத்து வைத்தாள் வெண்ணிலா.
வழக்கம் போல் அந்தக் கல்லூரியிலும் ராகிங் இருந்தது.
வெண்ணிலாவின் காதில் அன்னையின் குரலே ஒலிக்க. வீண் வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்று சீனியர் கண்களில் சிக்காமல் போக்கு காண்பித்துக் கொண்டிருந்தாள்.
கூட்டத்தோடு கூட்டமாக போவதும், இல்லை ஏதாவது ப்ரொபசர் வரும் போது அவர்களுடன் சந்தேகம் கேட்பது போல் செல்வதுமாக இரண்டு நாட்களை ஓட்டினாள்.
அவளது இந்த செயல் ரகுலனின் நண்பர் பட்டாளத்தின் கண்களில் பட்டது.
அன்றும் வெண்ணிலா யாரிடமும் மாட்டிக் கொள்ளாமல் அவளது வகுப்பிற்கு செல்ல. அங்கு அவளை மறைத்தவாரு நின்றிருந்த தீபிகா, “ மதன் சார் உன்னை லைஃப்ரரிக்கு வர சொன்னார்.” என்றாள்.
“லைஃப்ரரிக்கா?” என்று வெண்ணிலா குழப்பத்துடன் வினவ.
“ஆமாம்! உனக்கு வழித் தெரியாதுன்னு தான் என்னை அனுப்பியிருக்கார்.” என்றவள், வெண்ணிலாவை கையோடு அழைத்துச் சென்றாள்.
கல்லூரியின் பின்பகுதியில் அமைதியான இடத்தில் லைப்ரரி இருக்க, அதைத் தாண்டி அழைத்துச் செல்ல, வெண்ணிலாவிற்கு சீனியரிடம் தான் மாட்டிக் கொண்டது புரிந்தது.
‘ஓ காட்! நான் அமைதியா இருக்கணும்னு நினைச்சாலும், என்னைப் பொறுமையா இருக்க விட மாட்டேங்குறாங்களே.’ என்று மனதிற்குள் புலம்பியவாறே, தீபிகாவுடன் சென்றாள் வெண்ணிலா.
அவள் தயங்கித் தயங்கி வர, அவர்களது குழுத் தலைவன் மித்ரனோ,” வா மா மின்னல்! எங்க கண்ணுல சிக்காமல் மின்னி, மின்னி மறைஞ்சுடுற?” என்று அவளை ஆராவாரமாக வரவேற்றான்.
“அது வந்து சீனியர்…” என்று வெண்ணிலா தயங்க.
“நாங்க சீனியர்னு கொஞ்சமாவது பயமிருக்கா? இருந்திருந்தா நேத்து கூப்பிட, கூப்பிட கண்டுக்காதது போல போயிருப்பியா.” என்று வினவினான் மித்ரன்.
“ சும்மா அறிமுகப்படுத்திக்க தானே கூப்பிடுறது. ஆனா நீ வேணும்னே எங்களை அவாய்ட் பண்ணுற.” என்று சிடுசிடுத்தாள் தீபிகா.
அவர்களுக்கு அருகே இருந்த நெடியவனோ, தனக்கும் இங்கு நடப்பதற்கும் சம்மதமில்லை என்பது போல் கையில் ஒரு நோட்டை வைத்துக் கொண்டு யோசனையில் இருந்தான்.
“சாரி சீனியர்!” என்று தனது இயல்புக்கு மாறாக இறங்கி வந்தாள் வெண்ணிலா.
ஆனால் தீபிகாவோ,”சாரி சொன்னா விட்டுடுவாங்கன்னு நினைக்கிறியா? நேத்து கூப்பிடும் போதே வந்திருந்தா பரவாயில்லை. நீ பண்ண ஆட்டியூட்டுக்கு பனீஷ்மெண்ட் உண்டு.”என்றவளோ, தனக்கு அருகே அமர்ந்து இருந்த யுகித்தின் கையில் இருந்த நோட்டை வேகமாக பிடுங்கி, வெண்ணிலாவின் கையில் கொடுத்தாள்.
“ லுக் கேர்ள்!” என்று தீபிகா ஆரம்பிக்க.
“நிலா! ஐயம் வெண்ணிலா.” என்றுத் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள்.
“இப்போ உன் பேரு ரொம்ப முக்கியம். நான் சொல்றதை முதல்ல கேளு. இந்த நோட்ல உள்ளதை, இன்னொரு நோட்ல காஃபிபண்ணிட்டு வரணும். இரண்டு நாள் தான் உனக்கு டைம்.”என்று தீபிகா கூறினாள்.
“தீபு! வாட் இஸ் திஸ்? மதன் சார் நெக்ஸ்ட் வீக்ல இருந்து ஃபர்ஸ்ட் இயருக்கு கிளாஸ் எடுக்கணும். இந்த நோட்ஸ் கொஞ்சம் டேமேஜாக இருக்குறதால என்னை ரெடிபண்ண சொல்லி இருக்கிறாரு. என்னை நம்பிக் கொடுத்திருக்கிறார். அதை வாங்கிக் குடு.” என்று எரிச்சலை அடக்கிக் கொண்டு கூறினான்.
‘வரேவாவ்! அவ்வளவு முக்கியமான நோட்சா. இது ஒன்னு போதுமே உங்களை வச்சு செய்வதற்கு…’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட வெண்ணிலாவே, “ரெண்டு நாள் எதுக்கு ஒரு நாளே போதும். நான் முடிச்சு விட்டுறேன்.” என்று விட்டு அங்கிருந்து கிளம்பினாள்.
அவள் இருக்கும் வரை கோபத்தை அடக்கிய யுகித்தோ,” தீபிகா! ரேக்கிங் பண்ணனும்னா ஏதாவது நீ செய்ய வேண்டியது தானே. எதுக்கு என்ன இதுல கோர்த்து விடுற? நோட்ஸ்க்கு ஏதாவது ஆச்சுன்னா நான் சும்மா இருக்க மாட்டேன் பார்த்துக்க.” என்று விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.
ச்சே ! எல்லாம் இந்த பொண்ணால வந்தது. இவளால யுகி என் கிட்ட கோவப்பட்டுட்டு போறான்.” என்று தீபிகா கவலைப்பட.
“ அந்த பொண்ண பார்த்தாலும் பாவமாகத்தான் இருக்கு தீபு. ரொம்ப பயந்த புள்ள போல இப்ப தான் காலேஜுக்கு வந்திருக்கு. அதுக்கு என்ன புரியும்னு நோட்ஸ் எழுத சொல்லி இருக்க?” என்றுப் பரிந்து கொண்டு வந்தான் ரகுலன்.
“ அந்த பொண்ணுக்கு நீ ஏன் சப்போர்ட் பண்ற? நோட்ஸ் காப்பி பண்றது அப்படி ஒன்னும் கஷ்டமான வேலை இல்ல, ஈஸி தான். அப்படி முடியலைன்னு வந்தா நம்ம என்ன ஏதாவது சொல்ல போறோமா என்ன? வேணும்னா பாரு அந்தப் பொண்ணு ரெண்டு நாள்ல எழுத முடியலைன்னு கொண்டு வந்து கொடுத்துட போறா. அதுக்கப்புறம் இவன் எழுதி கொடுக்கட்டுமே.” என்று தீபிகா கூற.
“ சரி விடு மச்சி. பார்த்துக்கலாம்.” என்று மித்ரனும் சப்போர்ட்டுக்கு வந்தான்.
தீபிகா நினைத்தது போல் இல்லாமல் வெண்ணிலா ரெண்டு நாளில் எழுதி முடித்ததும் மட்டுமல்லாமல் அவர்களை ஆட்டம் காண்பிக்கவும் வைத்து விட்டாள்.
ரெண்டு நாள் கழிச்சு அவளிடம் கேட்க, “இன்னும் கொஞ்சம் இருக்கு. இன்னும் எழுதணும். நாளைக்கு தரேன்,நாளைக்கு தரேன்.” என்று தினமும் ஏதோ ஒரு காரணத்தை சொல்ல.
“இங்க பாரு! நாளைக்கு எந்த காரணத்தையும் சொல்லாம எழுதுனாலும் சரி, எழுதலைன்னாலும் சரி நோட்டை கொண்டு வந்து தரணும் புரியுதா?” என்று தீபிகா மிரட்ட.
ரகுலனோ அந்தப் பெண்ணை இரக்கமாகப் பார்த்தான்.
‘இந்த லூசு எதுக்கு இப்படி பார்க்குது. நாளைக்கு இருக்கு இவங்களுக்கு எல்லாம் கச்சேரி.’ என்று எண்ணியவாறே உற்சாகமாக சென்றாள் வெண்ணிலா.
ரகுலன் வீட்டிற்கு சென்றும் வெண்ணிலாவை நினைத்து கவலையாக இருந்தான்.
“ என்னாச்சு ப்ரோ. ஏன் இவ்வளவு டல்லா இருக்க? இன்னிக்கு யாரும் உங்க கேங் கிட்ட மாட்டலையா?” என்றான் நகுலன்.
“டேய் என்னமோ நாங்க ரவுடிசம் பண்ற மாதிரி சொல்ற? அம்மா அப்பா காதுல விழுந்தது அவ்வளவுதான் என்று தம்பியை முறைதான் ரகுலன்.
“ பெருசா செஞ்சா தான் ரவுடிசமா?. சீனியர்னு சொல்லிகிட்டு எல்லாரையும் வச்சு தான் செய்றீங்க? சரி அதை விடு வாட்ஸ் த மேட்டர் ப்ரோ. முகமெல்லாம் டல்லடிக்குது.”
“அது வந்து வெண்ணிலான்னு ஒரு பொண்ணு. உங்க டிபார்ட்மெண்ட் தான் தெரியுமா?”
“ தெரியும். அதுக்கு என்ன?”
“ அது வந்து அந்த பொண்ணு நாங்க கூப்பிடும் போது கண்டும் காணாத மாதிரி போயிடுச்சு. அதனால…”
“அச்சச்சோ என்ன பண்ணீங்க?”
“டேய் நகுல்! முழுசா என்னை சொல்ல விடேன்டா.”
“சரி சொல்லு.”
“ஃபர்ஸ்ட் இயர் நோட்ஸை மதன் சார் யுகித் கிட்ட காப்பி எடுக்க சொல்லி இருந்தார். அதை அந்தப் பொண்ணுக் கிட்ட எழுத சொல்லி தீபிகா குடுத்துட்டா. அந்த பொண்ணு எழுத முடியலன்னு கொண்டு வந்து கொடுத்துரும்னு நினைச்சோம். ஆனா அந்த பொண்ணு முடியலன்னாலும் எழுதிக்கிட்டே இருக்கா போல. பாவம்டா அந்த பொண்ணு.” என்று ரகுலன் பரிதாபப்பட.
“ சரி விடுண்ணா. நான் அந்தப் பொண்ணு கிட்ட கேட்டு நோட்டை வாங்கிடுறேன்.” என்றவன் மறுநாள் கல்லூரிக்குச் சென்று வெண்ணிலாவிடம் பேசினான்.
“ ஹாய் வெண்ணிலா! ஐயம் நகுலன்!” என்றுத் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ள.
“சொல்லுங்க நகுல்!” என்றாள்.
“அது வந்து சீனியர் உன் கிட்ட நோட்ஸ் எழுத சொல்லி கொடுத்தங்களாமே. முடியலன்னா குடுங்க. நான் எங்க அண்ணன் கிட்ட குடுத்து சமாளிக்கிறேன்.”
“இட்ஸ் ஓகே நகுல். ஆல்ரெடி நான் அதை ஃபினிஷ் பண்ணி மதன் சார் கிட்ட கொடுத்துட்டேன்.” என்றுக் கூறி புன்னகைக்க.
“வாட்?” என்று அதிர்ந்த நகுலன் நெஞ்சில் கை வைத்துக் கொண்டான்.
அவன் மட்டும் அதிரவில்லை. மதன் சாருக்கு முன்பு நின்றிருந்த யுகித்தும் அதிர்ச்சியில் ஆடிப் போயிருந்தான்.
“யுகி! உன் கிட்ட இதை எதிர்பார்க்கல.”
“ சார்!” என்று அதிர்ந்து விழித்தான் யுகித்.
“உன் கிட்ட ஒரு வேலையை ஒப்படைச்சா, அதை நீ செய்யணும். முடியலன்னா என்கிட்ட சொல்லி இருக்கலாம். அதை விட்டுட்டு ஃபர்ஸ்ட் இயர் ஸ்டுடென்ட்கிட்ட போய் எழுத சொல்லலாமா? ஏதாவது மிஸ்ஸான என்ன பண்றது? பட் வெண்ணிலா ப்ரில்லியண்ட் கேர்ள். பர்ப்பெக்டா ரெடி பண்ணிட்டா!” என்று அவளை பாராட்டி விட்டுச் செல்ல.
யுகித்தோ முகம் இறுகிப் போய் வந்தான்.
“ என்ன ஆச்சு யுகி? எதுக்கு சார் கூப்டாரு. நோட்ஸ் நெக்ஸ்ட் வீக் தானே கேட்டாரு.” என்று தீபிகா வினவ.
அவளை பார்த்த முறைத்தவனோ,” உன்னால என்ன முடியுமோ அதை பண்ணிட்ட . நீ நோட்ஸ் எழுத சொன்னியே அந்த பொண்ணு. லேசு பட்ட பொண்ணு இல்ல. நோட்ஸ் எழுதி நேரா சார் கிட்டே கொடுத்து நல்ல பேரும் வாங்கிட்டு போயிட்டா.
இரண்டு வருஷமா அவர் கிட்ட வாங்குன நல்லப்பேரு எல்லாம் ஒரே நாள்ல தலைக்கீழா போயிடுச்சு. எல்லாம் உன்னால தான்.” என்று சிடுசிடுத்தவாறே சென்றான் யுகித்.
தீபிகாவிற்கு வெண்ணிலாவின் மேல் கோபம் பெருகியது.
அந்தப் பக்கம் கேன்டீனுக்கு நகுலனுடன் பேசி சிரித்துக் கொண்டு செல்பவளை முறைத்துப் பார்த்தாள்.’
“அங்க பாரு நிலா! உன் ஆள் உன்னை ரொமான்ஸ் பார்வை பார்த்துட்டு இருக்கா.” என்று நகுலன் வெண்ணிலாவை உலுக்க.