Home NovelsE2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்)உடனடியாய் உதடுகளால் உயிலெழுது-01
5
(7)

முத்தம் 01

அந்தக் காலை வேளை, எப்போதும் போல மக்கள் சுறுசுறுப்பாய் அவரவர் வேலைக்காக ஓடிக்கொண்டிருந்தனர்.

வேலைக்குச் செல்லும் மக்களிடையே, பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்துக்கு உதவுவது என்னவோ பேருந்துகள் தான்.

இன்றும் அப்படியொரு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாகவே நின்றிருந்தது.

பேருந்து வருவதற்கான நேரம் கடந்து சென்றும், அந்த நேரத்துக்குரிய பேருந்து இன்னும் வந்தபாடில்லை.

சிலர் தங்கள் கடிகாரத்தை ஒருமுறையும், சாலையை ஒருமுறையும் பார்த்தபடி அந்தப் பேருந்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

அங்கே தான் அவனும் தன் தாயுடன் அமர்ந்திருந்தான்.

சிறுவனா, இல்லை இளைஞனா என்று சொல்ல முடியாதபடி, இரண்டுக்கும் இடையே பதினைந்து வயதின் ஆரம்பத்தில் இருந்தான் அவன்.

மிகவும் ஓய்ந்த தோற்றத்தில், காலில் செருப்புக்கூட இல்லாத நிலையில் அமர்ந்திருந்தவன்,

“அம்மா, எப்பம்மா வீட்டுக்குப் போகலாம்?” என்று கேட்டுக் களைப்பில் தாயின் தோளோடு தன் முகத்தைச் சாய்த்துக்கொண்டான்.

“இதோ போயிடலாம் குமரா, பஸ் வந்திருச்சுன்னா வீட்டுக்குப் போயிடலாம். போனதுமே அம்மா உனக்குச் சமைச்சுக் கொடுக்கிறேன். கொஞ்சம் பொறுத்துக்கப்பா” என்றபடி தன் மேல் சாய்ந்திருந்த மகனின் தலையை வருடிக் கொடுத்தார் அவர்.

அப்போது, ஒரே வேகத்தில் வந்த மூன்று விலை உயர்ந்த கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக அவ்விடத்தில் நின்றன.

சில நாழிகைக்குப் பின், நடுவில் நின்றிருந்த காரின் கதவு திறந்துகொள்ள, உள்ளேயிருந்து நடுத்தர வயதுடைய ஓர் ஆண் இறங்கிக்கொண்டார்.

அவர் இறங்கியதுதான் தாமதம்; முன், பின் நின்றிருந்த இரண்டு கார்களிலிருந்தும் வேகமாக மூன்று, நான்கு பேர் வந்து அவர் அருகில் பாதுகாப்பாக நின்றுகொண்டனர்.

அங்கே நின்றிருந்த மக்களுக்கு அவர் மிகவும் பரீட்சயம் போலும், அவரைப் பார்த்து மரியாதை நிமித்தமாய் வணக்கம் வைத்தனர்.

இவை அனைத்தையும் ஒரு பிரமிப்புடன் தான் அவன் பார்த்துக்கொண்டிருந்தான்.

இத்தனை நாட்களில் இவ்வளவு அருகில் அவன் கார்களைப் பார்த்ததே இல்லை. ஏனோ அதன்மீது இத்தனை நாள் இல்லாத ஆர்வம் இன்று அவன் கண்களில் தோன்றி மறைந்தது.

அதையே பார்த்துக் கொண்டிருந்தவனின் கைகள், சட்டென அதைத் தொட்டுவிட காற்றில் உயர்ந்தபோதுதான், மீண்டும் அந்தக் காரிலிருந்து சிறுமியொருத்தி இறங்கிக்கொண்டாள்.

முகம் முழுவதும் புன்னகையுடன் அந்த ஆணின் அருகே வந்து அவள் நின்றுகொண்டாள்.

அந்த ஆண் அவளது தந்தை என்பதை, அவர் பார்வையில் தெரிந்த அன்பில் அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.

தந்தைக்காகப் பெரிதும் ஏங்குபவனாக இருந்தாலும் கூட, தன் தந்தையின் பார்வை தன்மீது எப்படிப் படியும் என்பதை அறியாதவனா அவன்? அவன் தந்தையுடன் இருந்த நாட்கள் குறைவு என்றாலும், அவர் பாசத்தைக் காட்டுவதில் எந்தக் குறையும் வைத்ததில்லையே!

அவருடன் இருந்த நேரம் எல்லாம் அவர் தோள்களில் தானே தொங்கிக்கொண்டிருப்பான்.

ஐந்து வயதுவரை அத்தனை பாசத்துக்கும் சொந்தக்காரனாய் இருந்தவனது வாழ்வில், நொடியில் தந்தையைப் பிரித்த விதியை என்னவென்று தூற்றுவது? ஆனாலும் காரண காரியம் இல்லாமல் எதுவும் நடப்பதில்லையே!

அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தவனின் பார்வை அவளை அடைய, அவளது ஆடையில் இருந்த நேர்த்தியானது, தன்னைத் தானே ஒருமுறை குனிந்து பார்க்க வைத்திருந்தது.

காலில் செருப்புக்கூட இல்லாமல் அவன் இருக்க, அவளோ விலையுயர்ந்த காலணிகளை அணிந்திருந்தாள்.

அந்த நொடி அவனுக்கு மனதில் பொறாமை, கழிவிரக்கம் இப்படி எதுவுமே தோன்றவில்லை. மிகவும் சாதாரணமான பார்வை அது. ஓர் ஒப்பீடு அவ்வளவே!

இத்தனை நாளில் அவன் எதற்குமே ஆசைப்பட்டதாய் அவனுக்கு ஞாபகத்தில் கூட இல்லை. கிடைப்பதைக்கொண்டு திருப்தி அடைந்துகொள்வான். தாய்க்கு ஆதரவாய் இருந்துகொள்வான்.

சிறுவனாக என்றும் தன்னை அவன் நினைத்ததில்லை. ‘தான் பெரியவன், தனக்குப் பொறுப்புகள் அதிகம். தாயை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்றெல்லாம் பல எண்ணங்கள் அவனுள்ளே எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும்.

அவளைப் பார்த்த நொடி அவனுக்குத் தோன்றியது ஒன்றுதான். ‘தன் தந்தை இருந்திருந்தால், தானும் அப்படி இருந்திருக்கலாமே’ என்ற எண்ணம் மட்டுமே!

அங்கே அந்தப் பெண்ணோ தந்தையிடம் எதையோ கேட்டுக் கொண்டிருக்க, அவரோ கண்டிப்புடன் ஏதோ மறுத்துச் சொல்லிக்கொண்டிருந்தார்.

அதில் அவள் முகம் சுருங்க, அவளையே பார்த்துக்கொண்டிருந்த இவனது முகமும் சுருங்கியது.

காரணம் எல்லாம் தெரியவில்லை. ஏதோ அவளது கவலை அவனையும் தாக்குவதாக ஒரு எண்ணம். சிறிய பெண் என்ற கரிசனையோ என்னவோ? ‘ஐயோ பாவம்’ என்று எண்ணிக்கொண்டான்.

அடுத்த சில வினாடிகளில் அவனது வாழ்க்கையை மட்டுமல்லாது அந்தச் சிறு பெண்ணின் வாழ்க்கையையும் மாற்றப்போகும் அந்தப் பேருந்து, தூரத்தில் ஆடி அசைந்து வரும் சத்தம் கேட்டது. அதில் அங்கே நின்றிருந்தவர்கள் அவசரமாக ஏறுவதற்குத் தயாராக, இவனும் தாயின் கையைப் பிடித்துக்கொண்டான்.

அவர் ஒரு மாற்றுத்திறனாளி. அவரால் விரைவாக எல்லாம் நடக்க முடியாது. வலது காலில் சற்றுப் பிறழ்வு அவ்வளவே!

அவனுக்கோ அத்தனை நேரம் அந்தச் சிறுமிமேல் இருந்த கவனம் மொத்தமாய் இப்போது தாயின் மீது திரும்பியிருந்தது.

அடுத்த ஓரிரு நிமிடங்களில் அத்தனை பேரும் ஏறும்வரை காத்திருந்தவன், தாயுடன் தானும் ஏறிக்கொண்டான்.

இறுதியாய் ஏறிக்கொண்டதாலோ என்னவோ, இருக்கைகள் எதுவும் வெற்றிடமாக இருக்கவில்லை.

தாயால் அத்தனை நேரம் நிற்க முடியாது என்று அவனுக்குத் தெரியும். ஆனால் வேறு வழி இல்லையே? நின்றுதானே ஆக வேண்டும். தாயை அணைவாய்ப் பிடித்தபடி அருகில் நின்றுகொண்டான்.

அவரது காலில் பிரச்சினை இருப்பது சாதாரணமாகப் பார்ப்பவருக்குத் தெரியாது. அப்படி இருக்கையில், அந்தப் பேருந்தின் நெருக்கத்தில் ‘யார் பார்த்து அம்மாவுக்கு இடம் தரப்போகிறார்கள்’ என்ற எண்ணம் எழ,

“அம்மா, என்னை நல்லாப் பிடிச்சுக்கோமா. காலை ரொம்ப ஊன்றி நிக்காதே, அப்புறமா நைட் எல்லாம் வலிக்குதுன்னு சொல்லுவ” என்றான்.

அவன் சொன்னது, அவனது தாய்க்கு கேட்டதோ இல்லையோ, அவன் சற்று முன் பிரமிப்பாய்ப் பார்த்த அந்த ஆணின் காதில் விழுந்திருந்தது.

அவரோ எழுந்து அவனது தாய்க்கு இடம் கொடுக்க, அவனால் அவர் பேருந்தில் வந்ததை நம்பவே முடியவில்லை. ‘இத்தனை கார்களில் வந்திறங்கியவர், பேருந்தில் ஏனோ?’ என்ற கேள்விதான் அவனுக்கு முதலில் எழுந்தது.

மீண்டும் அவனை அழைத்து, “தம்பி, வேற யாரும் உட்கார முதல் அம்மாவை உட்கார சொல்லுப்பா” என்று சொன்னவர் எழுந்து வழிவிட்டார்.

தாய் என்றதும் மற்றதை மறந்து முதலில் தாயை அமர வைத்தவன், அதன் பின்னரே அவருக்கு நன்றியும் கூறிக்கொண்டான்.

அதை ஒரு புன்னகையுடன் ஏற்றுக்கொண்டவரோ, சற்றுத் தள்ளி நின்றுகொண்டார். அதன் பின்னரே, அந்தச் சிறுமியின் அருகில் தன் தாயார் அமர்ந்திருப்பதை உணர்ந்துகொண்டவன், அவர்களைக் கவனிக்கவும் செய்தான்.

அந்தப் பெண்ணின் முகத்தில் அத்தனை உணர்வுக் குவியல்கள். ஏதோ அதிசயத்தைப் பார்ப்பதுபோல, ஒவ்வொன்றாய்ப் பார்த்தும், அருகில் அமர்ந்திருந்த இவனது தாயிடம் கேட்டும் என அவள் முகத்தில் காட்டிய பரிமாணங்கள் தான் எத்தனை!

அவன் கண்களுக்கு அவள் தேவதையாய்த்தான் தெரிந்தாள். அரும்பு மீசை வளரும் அவனுக்கு அவளைக் கண்டதும் ஏதோ ஓர் உவகை. என்னவென்று பிரித்தறிய முடியாவிட்டாலும், அது பிடித்திருந்தது.

இந்தப் பயணம் முடிந்தால் இருவரும் மீண்டும் சந்திப்பார்களோ? இல்லை காலம் அவர்களுக்குள் முடிச்சு வேறு வழியில் போடுமோ என்னவோ? ஆனால் அந்த நிமிடம், அவளது புன்னகையில் அவன் மகிழ்ச்சியடைந்தான்.

அப்படியே சிறிது தூரம் சென்றிருக்க, சிலர் இறங்கிக்கொண்டனர். அதனால் இருக்கைகள் சிலது வெற்றிடமாக, அந்தப் பெண்ணின் தந்தையோ மகளைப் பார்த்துத் தலையசைத்தவர், அதில் ஒரு இருக்கையில் அமர்ந்தார்.

அவர் அருகில் ஒரு இருக்கை வெற்றிடமாக இருந்ததுதான். ஆனால், தாய் இல்லாமல் வளர்ந்த தன் மகள், இன்னொரு தாயிடம் அவ்வளவு ஆசையாய்ப் பேசிக்கொண்டு வந்ததைப் பார்த்திருந்தவருக்கு  அவளை அழைக்க மனம் வரவில்லை.

‘இதோ சற்றுத் தூரத்தில் இறங்கிவிடப்போகிறோம். அதுவரை இருக்கட்டும்’ என்று எண்ணியவரும் அப்படியே அமர்ந்திருந்தார். ஆனாலும் மகளைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டேதான் வந்தார்.

அடுத்த நிறுத்தத்தில் சிலர் ஏறிக் கொள்ள, மகள் நேரடிப் பார்வைக்குத் தெரியவில்லை. இருந்தும் சிரமப்பட்டேனும் தெரியும் இடைவெளியில் அவளைப் பார்த்தார்.

சிறிது தூரம் சென்றிருக்கும் மகளைத் திரும்பிப் பார்த்தவருக்கு, அவர் இருந்த இடத்தில் அவள் இல்லை என்பது புரிந்தது.

கூடவே அந்தத் தாயும் மகனும் இருந்த அடையாளமும் தெரியவில்லை. மனிதர் பயந்தேவிட்டார். எழுந்து மீண்டும் தேடியவருக்கு, அவள் இருக்கும் அடையாளம் கிடைக்கவே இல்லை.

உடனடியாகப் பேருந்து நடத்துநர் உதவியாளரிடம் கேட்க, இருந்த கூட்டத்தில் அவரும் கவனிக்கவில்லை என்றிருந்தார்.

“அங்க பக்கத்துல ஒரு பையனும் ஓர் அம்மாவும் இருந்தாங்களே, அவங்க எங்க போறதுக்காக டிக்கெட் எடுத்தாங்கன்னு தெரியுமா?” என்று கேட்டார்.

யோசித்த அவருக்கு ஞாபகம் வருவதாக இல்லை. “ஐயா, ஞாபகம் இல்லைங்களே. நான் முன்னாடி நின்னுட்டு இருந்தேன், பின்னாடி இறங்கி இருப்பாங்க போல. போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் ஐயா. டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்” என்றதும், தங்களைப் பின்தொடர்ந்து வந்த கார் ஓட்டுநருக்கு அழைத்தவர், அவர்களிடமும் விஷயத்தைச் சொல்லி விரைவாக வரும்படி தெரிவித்திருக்க, அடுத்த பத்து நிமிடத்தில் காரும் அவர் முன்னே நின்றது.

அதுவரை பேருந்தும் அந்த இடத்திலேயே நிற்க, உள்ளே இருக்கும் பயணிகளைப் பார்த்தவருக்கு, மேலும் அவர்களை அங்கே நிற்க வைத்து எந்தப் பயனும் இல்லை என்பது புரிய, பேருந்து நடத்துநருக்குச் செல்லுமாறு பணித்திருந்தார்.

அந்தச் சுற்றுவட்டாரத்திலேயே அவர் நல்ல மனிதர். அவரைத் தெரிந்தவர்கள் அந்தப் பேருந்தில் அதிகம் இருந்ததாலேயோ என்னவோ, யாரும் அங்கே காத்திருந்ததை எதிர்த்துப் பேசியிருக்கவில்லை.

அவர் அடுத்து எங்கும் தேயவில்லை. காவல் நிலையத்துக்குச் சென்று நடந்ததைச் சொல்லிப் புகார் ஒன்றைக் கொடுத்தவர், அவரது வழியிலும் தேடினார்.

இறுதியாக, அவர் மகளைப் பார்த்த இடத்திலிருந்து மீண்டும் அவள் காணாமல் போனதை அறிந்துகொண்ட இடம்வரை இரண்டு, மூன்று ஊர்கள் இருந்தன.

அதில் ஏதேனும் ஓர் ஊரில்தான் அந்தத் தாயும் மகனும் இறங்கியிருக்க வேண்டும். கூடவே மகளும் அவர்களுடன் சென்றிருக்க வேண்டும். இல்லையேல், மகள் தனியே இறங்கியிருக்க வேண்டும். எப்படி இருந்தாலும் இந்த மூன்று ஊர்களில் ஓர் இடத்தில் மகள் இறங்கியிருப்பாள் என்பது அவருக்குப் புரிந்தது.

காவல்துறையினர் ஒருபுறம், இவரது ஆட்கள் ஒருபுறம் என அன்றைய பொழுதே மகளைத் தேடுவதிலே கழிந்தது.

பெரிதாய் முன்னேற்றம் எதுவும் இல்லை. ஒவ்வொரு வீடாகத்தான் தேட வேண்டும். அப்படித் தேடினால் நிச்சயம் நேரம் எடுக்கும் என்பது ஒரு பெரிய மனிதரான அவருக்குப் புரிந்தது. ஆனால், மகள்மீது பாசம் கொண்ட தந்தை உள்ளத்துக்குத்தான் புரியவில்லை.

நள்ளிரவாகியும் தேடிக்களைத்துப்போனவர், அப்படியே அந்தக் காரிலேயே மடங்கி அமர்ந்துவிட, காவல் அதிகாரி ஒருவர்,

 “நிச்சயம் கண்டுபிடிச்சிடலாம் சார். உங்களுக்கு எந்தப் பயமும் வேண்டாம். நாளைக்கு உங்க பொண்ணு உங்ககூட இருப்பா. நீங்க வீட்டுக்குப் போங்க சார். ரொம்பவே வீக்கா தெரியுறீங்க. நாளைக்கு உங்க பொண்ணு உங்களைத் தேடி வர்ற நேரம் நீங்க ஸ்ட்ராங்கா இருக்க வேண்டாமா? எப்படியும் உங்களோட ஆளுங்களும் சரி, நாங்களும் சரி தேடுறோம்தானே! ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காதீங்க சார். போங்க” என்றார்.

அப்போதும் அவர் மறுத்துவிட, அவரது காரியதரிசியோ, “நீங்க சுகர் டேப்லெட் சாப்பிடணும் சார். கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க. நீங்க இங்கே இருந்து, உங்களுக்கு ஏதாச்சும் ஆயிடுச்சுன்னா அப்புறம் நாங்க உங்களைப் பார்ப்போமா இல்லை சின்னம்மாவைத் தேடுவோமா?” என்று கேட்டது அவரிடம் வேலை செய்யத் தொடங்கியிருந்தது.

தான் இங்கே இருந்தால் தன் மகளைத் தேடுவதில் சிரமம் என்றதும், மனமில்லை என்றாலும் அங்கிருந்து செல்லச் சம்மதித்தார்.

______________

இதோ வீட்டுக்கு வந்தவர், சாப்பிட்டு மருந்து போட்டுவிட்டார். உணவு உள்ளே எப்படி இறங்கியது என்று தெரியவில்லை.

மகள் வந்தால் தான் திடமாய் இருக்க வேண்டுமே என்பதற்காகச் சிறிதாக உணவை உள்ளே அனுப்பியவர், மருந்தைப் போட்டுக்கொண்டார்.

அங்கே வீட்டில் அனைவரும் கூடியிருந்தனர்.

அவரது தம்பி மனைவியோ, “இதுக்குத்தான் மாமா சொன்னேன். தாய் இல்லாத பிள்ளைன்னு அவளை ரொம்பச் செல்லம் கொடுத்து, அவ கேட்கிறது எல்லாம் வாங்கிக் கொடுக்காதீங்கன்னு. கேட்டாத்தானே? இப்ப பாருங்க என்னாச்சுன்னு. நம்ம பைரவிகூட அவளைவிடச் சின்னப் பொண்ணுதானே! எதுக்காச்சும் அடம்பிடிக்கிறாளா?” என்று உடைந்துபோய் இருக்கும் அந்த மனிதரிடமும் விடாமல் குற்றம் சாட்டிக்கொண்டிருந்தார்.

அவரது தம்பி சுகுமாரனோ, “என்ன பேசற சரசு? அண்ணனே பிள்ளையைக் காணோம்னு கஷ்டத்துல இருக்காங்க, இப்ப இதெல்லாம் தேவையா?” என்று மனைவியை அடக்கப் பார்க்க, அவர் அடங்கினால் தானே! இருக்கும் வஞ்சத்தை இன்றே கொட்ட நினைத்தாரோ என்னவோ, இலகுவில் விடுவதாய் இல்லை.

“பின்ன என்னங்க, பஸ்ல போகணும்னு ஆசைப்பட்டாளாம் இவங்க கூட்டிட்டு போனாங்களாம். வீட்ல இத்தனை கார் இருக்கும்போது அவளுக்கு எதுக்குங்க வேண்டாத ஆசை எல்லாம். சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு மாதிரி நடந்துக்கணும். சரி போனது தான் போனா, அப்பா கூடவே இறங்குறதுக்கு என்ன அவளுக்கு”  என்றார்.

அந்த மனிதரின் தங்கையோ “என்ன பேசுறீங்க அண்ணி? பஸ்ல போகணும் என்கிறது ஒரு சாதாரண ஆசை. இதுக்குக் குழந்தையைத் திட்டுவீங்களா நீங்க? அவ சீக்கிரம் வரணும்னு பிரே பண்றதுக்கு விட்டுட்டு, இப்ப இதெல்லாம் தேவையா?” என்று சொன்னதும் உள்ளுக்குள் ஏறிய கோபத்தைக் கட்டுப்படுத்தியபடி நின்றிருந்தார் சரஸ்வதி.

வெளியே பேசவில்லை என்றாலும், ‘இவளுக்கே ஒரு பிள்ளை இல்லை, இவ அடுத்தவன் பிள்ளையைப் பத்தி கவலைப்படுறா’ என்று மனதில் அர்ச்சனை தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

மீண்டும் அவரது தங்கை அமுதாவோ, “நீங்க எதுக்குமே கவலைப்படாதீங்க பெரியண்ணா. சீக்கிரமே நம்ம வரு நம்மகிட்டயே வந்திடுவா. அதான் போலீஸ் ஒரு பக்கம், நம்ம ஆளுங்க ஒரு பக்கம்னு தேடுறாங்கல்ல? கிடைச்சிடுவா. சின்னப் பொண்ணுல்ல? தெரியாம இறங்கியிருப்பா. பாருங்க, அவளே உங்களைப் பத்திச் சொல்லிக் காலையிலயே இங்கே வந்துடுவா” என்று நம்பிக்கையாய்ப் பேசினார்.

அவரது கணவர் சங்கரனும் மச்சானுக்கு ஆதரவாய் அருகில் அமர்ந்துகொண்டார்.

ஆளாளுக்கு ஒரு மனநிலையில் இருக்க, பெற்றவரோ, ‘மகள் எங்கே, என்ன செய்கிறாளோ? அழுகிறாளோ? தான் வருவேன் என்று காத்திருக்கிறாளோ?’ என்று பல கேள்விகளின் மத்தியில் சுழன்றுகொண்டிருந்தார்.

உயில் எழுதுமா???

இப்படிக்கு,

E2K 16

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!