முத்தம் 02
அந்தப் பெரிய மாளிகை வீட்டில் எப்போதும் வாசலில் கோலமிடுவது என்னவோ பைரவிதான்.
எப்போதும் போல் அன்றும் காலை ஐந்து மணிக்கு எழுந்துகொண்டவள், குளித்து, சாமிகும்பிட்டு, கோலமிட வந்திருந்தாள்.
பெரிதாக இன்னும் விடிந்திருக்கவில்லை. அவளும் எவ்வளவோ முயற்சி செய்து மெதுவாகக் கோலம் போட்டாலும், கோலமும் முடிந்து அரை மணி நேரமும் கடந்திருந்தது.
சரியாக அந்த நேரம், வீட்டின் பின்னே இருந்த விருந்தினர் இல்லத்திலிருந்து (கெஸ்ட் ஹவுஸ்) காலை நேர உடற்பயிற்சிக்குத் தயாராகி வந்திருந்தான் ரிஷவ் ராகவன்.
வயது இருபத்தி நான்கு. வணிக நிர்வாக முதுநிலைப் பட்டப்படிப்பின் (எம்.பி.ஏ) இறுதிக் காலாண்டில் (ஃபைனல் செமஸ்டர்) இருக்கின்றான்.
கோலமிட்டு எழுந்தவளைப் பார்த்துப் புன்னகைத்தவன், “குட் மார்னிங் பைரவி” என்றான்.
அவளும் பதிலுக்கு, “குட் மார்னிங் ரிஷி” என்க,
அவளுக்குச் சிறு தலையசைப்பைப் பரிசாகக் கொடுத்தவன், காதொலிப்பானைக் (இயர் ஃபோன்) காதில் மாட்டிக்கொண்டு, தோட்டத்தை நோக்கி ஓடத் தயாராகினான்.
அந்த வீட்டின் வளாகத்தில், விருந்தினர் இல்லம், தோட்டத்துக்கான இடம் போக, மீதி காலியாகப் பெரிய இடமே இருந்தது. அதிலேயே அந்த வீட்டு ஆண்கள் உடற்பயிற்சி செய்வது வழக்கம்.
அவன் இசையைக் கேட்டபடி ஓடிக்கொண்டிருக்க, கோலமிட்டு எழுந்த பைரவிக்கு உள்ளே செல்ல மனமே இல்லை.
எப்போதும் கோலமிடும் சாக்கில் அவனைப் பார்ப்பதை வழக்கமாக்கிக்கொண்டவளுக்கு, இன்று அவன் சற்று தாமதமாக வந்தது ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தது. இப்போது அப்படியே அங்கே நிற்கவும் முடியாது.
‘சற்று நேரத்தில் பெரியப்பா வந்துவிடுவார்’ என்பது நினைவுக்கு வர, மனதே இல்லாமல் அங்கிருந்து அகன்றிருந்தாள்.
அவள் உள்ளே செல்லவும், வீட்டினுள் இருந்து வெளியே வந்த ஆண்கள் மூவரும் ஒரு சேர, “குட் மார்னிங்டா பைரவி” என்றனர்.
அவளும் “வெரி குட் மார்னிங் அப்பாஸ் அண்ட் மாமாஸ்” என்றபடி உள்ளே சென்று மறைய, ஆண்கள் நால்வரும் ரிஷியை நெருங்கி இருந்தனர்.
அவன் இவர்களைக் கண்டும் காணாமல் ஓட்டத்தைத் தொடர்ந்துகொண்டே இருக்க, அந்த வீட்டின் மூத்த ஆண் அன்புச்செல்வனின் காதினருகே குனிந்த ரவீந்திரனோ,
“என்ன மச்சான் கண்டுக்கவே மாட்டானேங்கிறான்?” என்று கேட்க, அன்புச்செல்வனின் தம்பி சுகுமாரனோ, “அதான் கோபமா இருக்கான்னு தெரியும்ல, அப்புறம் என்னடா கேள்வி?” என்று ரவீந்திரனை வாரிவிடவும் தவறவில்லை.
அவர்களை அதட்டிய அன்புச்செல்வனோ, “கொஞ்சம் சும்மா இருங்க ரெண்டு பேரும், ஏழு கழுதை வயசாகியும் இன்னும் ஒருத்தரை ஒருத்தர் வம்பிழுத்துட்டு இருக்கீங்க. நம்ம பசங்களே நம்ம தோள்வரைக்கும் வளர்ந்தாச்சு, இன்னும் பொறுப்பு வரல ரெண்டு பேருக்கும்” என்று அங்கேயே ஒரு அறிவுரைப் படலத்தை ஆரம்பித்துவிட, இருவரும் அவரைப் பாவமாய் பார்த்திருந்தனர்.
அவர்களைக் காப்பாற்றியது என்னவோ அன்புச்செல்வனின் தங்கை அமுதாவின் கணவன் சங்கரன்தான்.
இடையில் உள்ளே புகுந்தவர், “சரி விடுங்க மச்சான், வந்த வேலையை விட்டுட்டு மத்தது எல்லாம் பார்க்குறோம். அவன்கிட்ட இப்போ யாரு பேசுறது?” என்று கேட்டு அவரைத் திசைதிருப்பி இருந்தார்.
சங்கரனின் அருகில் நெருங்கிய ரவீந்திரனோ, அவருக்கு மட்டும் கேட்கும் குரலில்,
“ஏன் ண்ணா, நாங்க திட்டு வாங்குற வரை இங்கதானே இருந்தீங்க? அது எப்படி ண்ணா எப்பவும் திட்டு வாங்கி முடிஞ்சப்புறமே காப்பாத்துறீங்க?” என்று எப்போதும் கேட்கும் அதே கேள்வியைக் கேட்டு வைக்க,
அவரும் புன்னகையுடன், “அதுவா தம்பி, உங்களுக்குத் திட்டும் போதுதான், ‘காதுல தேன் வந்து பாயுது’னு சொல்லுவாங்களே, அதோட முழு அர்த்தமே புரியுது, அதான் அதைக் கொஞ்சம் அனுபவிக்கிறேன்” என்று சிரிக்காமல் சொல்ல, கேட்டுக்கொண்டிருந்த ரவீந்திரனின் காதில் புகை வராத குறையாய் தன் அண்ணனை முறைத்தார்.
இவர்கள் அவர்களுக்குள்ளே பேசியபடி ஓடிக்கொண்டிருக்க, அவர்கள் எதிர்பார்த்ததைப்போலத் தன் ஓட்டத்தை முடித்து, அங்கே உள்ள இருக்கையில் அமர்ந்தான் ரிஷவ் ராகவன்.
இங்கே அவர்கள் நால்வரும் ‘நீ’ என்று அடுத்தவர்களைக் கை காட்ட, இறுதியில் எப்போதும் போல் மாட்டிய ஆடு என்னவோ ரவீந்திரன்தான்.
அவரோ, “ஆவுன்னா என்னையே பலிக்கடா ஆக்குங்க, நல்லா வருவீங்க?” என்று புலம்பியபடியே அவனை நெருங்க, மற்ற ஆண்கள் மூவரும் அவரையே பின் தொடர்ந்தனர்.
ரவீந்திரனோ சென்று அவன் அருகே அமர்ந்தவர், “ரிஷி” என்று ஆரம்பிக்க,
“முடியாது, நோ, பண்ணமாட்டேன்” என்றான் அவன்.
“முதல்ல என்ன சொல்றேன்னாச்சும் கேளேன்டா?” என்று அவன் பதிலில் பல்லைக் கடித்தார்.
அவனோ, “அதான் பதில் சொல்லிட்டேனே” என்றவன் தன் முன்னே நின்றிருந்த மூவரையும் பார்த்து அமரும்படி செய்கை செய்ய, அவர்களும் அமர்ந்துகொண்டனர்.
பெருமூச்சு ஒன்றுடன் எழுந்துகொண்டவனோ, “நீங்க எல்லாரும் என்ன உங்க வீட்டுப் பையனாப் பார்த்துதான் எல்லாம் செய்யுறீங்க. அது எனக்கு நல்லாவே புரியுது. ஆனா அது உங்களோட பெருந்தன்மை. அது எப்பவும் உண்மை ஆகிடாது” என்க,
ஆண்கள் நால்வரும் “ரிஷி” என்று சத்தமாய் அவனது இந்தப் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
அவர்களது எதிர்ப்பைச் சட்டை செய்யாதவனோ “நீங்க மறுத்தாலும் உண்மை அதுதான். நீங்க என்ன கேட்டாலும் செய்ய நான் தயார். ஏன் என் உயிரைக்கூடத் தருவேன். ஆனா இந்த ஒரு விஷயத்துல என்னை நுழைக்கிறத நான் விரும்பவே மாட்டேன்” என்றவன் அதன்பின் அங்கே நிற்கவில்லை. விறுவிறுவென அங்கிருந்து சென்றிருந்தான்.
போகும் அவனையே பார்த்துக்கொண்டிருந்த அன்புச்செல்வனோ, “அவன் இழந்தது ரொம்ப அதிகம்ல, அந்த வலி அவனுக்கு இருக்கத்தானே செய்யும். இதுல வருவோட தப்பு இல்லன்னாலும், அவளால பாதிக்கப்பட்டவன் அவன். அவனோட உணர்வுகளையும் நாம புரிஞ்சிக்கணும். வேற ஏதாச்சும் பண்ணலாம். நான் ஏற்பாடு பண்ணுறேன்” என்றவர் அங்கிருந்து சென்றிருந்தார்.
ஒன்பது வருடங்களுக்கு முன் அவர் மகளை அவரிடமே ஒப்படைத்தவன் அவன்.
ஆனால் அன்று அவன் இழந்தது??? அவரால் என்றும் ஈடு செய்ய முடியாததல்லவா???
___________
அங்கே கெஸ்ட் ஹவுஸினுள் நுழைந்த ரிஷியோ, “அவ கூட நான் போகணுமா? நோ நெவர். ஐ ஹேட் தட் இடியட்” என்றவன், கையில் இருந்த காதொலிப்பானைத் தூக்கியெறிந்திருந்தான்.
அதுவோ அப்போது அங்கே வந்த ரவீந்திரனின் காலருகே சென்று விழ, குனிந்து அதனை எடுத்துக்கொண்டார்.
“பேசாமப் போயிடு ரவி, நானே செம காண்டுல இருக்கேன்” என்க,
அவனருகில் அவனை இடித்துக்கொண்டு வந்தமர்ந்தவர், “வா சேர்ந்து காண்டு ஆகுவோம். என்னடா உன் பிரச்சனை? உன்ன என்ன அவ பின்னாடியா திரிய சொல்லுறாங்க, ஒரு கண்ணு வச்சுக்கோனு தானே சொல்லுறோம். நீயும் இன்னும் சிக்ஸ் மந்த்ஸ்ல அமெரிக்காத்தானே போகப்போற, அவளும் வரட்டுமே” என்றார்.
அவரை முறைத்தவனது மனதோ, ‘அவளைப் பார்க்கவே கூடாதுனு தானே, கேம்பஸ் இன்டெர்வியூல அவ்வளவு கஷ்டப்பட்டு செலக்ட் ஆகி அங்க வரைக்கும் போறேன். அங்கேயும் என்ன நிம்மதியா இருக்க விடமாட்டாளா?’ என்று கடுப்பாய் எண்ணிக்கொண்டது.
“என்னடா யோசனை?” என்று ரவீந்திரன் கேட்க, “ப்ட்ச், இப்போ என்ன அவளுக்கு அங்க போய்த்தான் படிக்கணுமா? இங்க படிச்சா ஆகாதா?” என்க,
ரவீந்திரனோ, “அதே கேள்வியை நானும் கேட்கலாம் தானே” என்று திருப்பிக் கேட்டதில்,
“நான் என்ன படிக்கவா போறேன், வேலைக்குத் தானே போறேன்” என்று முணுமுணுத்தான்.
“நீ பேசுறது நல்லாவே கேட்குது, முதல்ல கேட்ட கேள்விக்குப் பதிலைச் சொல்லு?” என்றார்.
“அதான் முடியாதுனு சொல்லிட்டு வந்துட்டேன்ல, அப்புறம் என்ன? இந்நேரத்துக்கு அன்புச்செல்வன் ஐயா அவர் பொண்ணை அனுப்ப வேற ஐடியா பண்ணியிருப்பாரு, நீ போய் எனக்குக் காஃபி போட்டுக் கொண்டு வா” என்று அந்தச் சோபாவில் அப்படியே சாய்ந்தான்.
“ரொம்பத்தான்டா, கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பான கதையா மரியாதை வர வரத் தேயுது. பார்த்துக்கிறேன்” என்று சலித்துக்கொண்டவர், மறுக்காமல் அவன் கேட்டதை எடுத்து வர, சமையலறைகுச் சென்றார்.
இவனோ இங்கிருந்தபடியே, “அப்போ ஏதோ கல்யாணம் பண்ணிக்கல, சோ நானும் யூத் தான் அப்படினு டயலாக் எல்லாம் அடிச்ச, அது எல்லாம் பொய்யா? இப்போ என்னடான்னா மரியாதை வேணும்னு நிக்கிற, என்ன ரவி உன் கணக்கு? நான் வேணும்னா வாங்க ரவீந்திரன் சார், போங்க ரவீந்திரன் சார்னு பேசட்டுமா?” என்று சிரிக்க,
சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்தவரோ, “இப்ப நான் உன்கிட்ட கேட்டேனா? மூடிட்டுக் காலேஜ் போக ரெடியாகுற வேலை மட்டும் பாரு” என்றபடி மீண்டும் உள்ளே நுழைந்திருந்தார்.
ரவீந்திரன் ரிஷி உறவு ஒரு விசித்திரமான பந்தம்தான். நண்பனுக்கு நண்பனாய் அவனுடன் சரிக்கு சமமாய் நிற்பவரை அவனுக்குப் பிடிக்கும். முதலில் ஒட்டாமல் இருந்த இருவரும் பின்னாட்களில் நன்கு ஒட்டிக்கொண்டனர்.
ரவீந்திரன், அன்புச்செல்வனின் மாமன் மகன். அவர்களது குடும்பம் காலம் காலமாகக் கூட்டுக்குடும்பமாக வாழும் குடும்பம்.
அன்புச்செல்வனின் தந்தை வேணுகோபாலுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும். அவர்கள் அன்புச்செல்வன், சுகுமாரன் மற்றும் அமுதா.
வேணுகோபாலின் ஒரே தங்கையான சிவகாமிக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும். அவர்கள் சங்கரன், ரவீந்திரன் மற்றும் வேதவல்லி.
அந்தக் காலத்தில் சொந்தங்களுக்குக்கிடையே பிணைப்புப் பெருகவும், தங்கள் சொத்து வெளியே சென்று விடக் கூடாது என்பதற்காகவும், உறவுகளுக்குக்கிடையில் திருமணம் செய்து வைப்பது வழக்கம்.
அப்படித்தான் பெரியவர்களால் இவர்கள் திருமணமும் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இதில் அன்புச்செல்வன் அவரது அத்தை மகளான வேதவல்லியைத் திருமணம் செய்துகொள்ள, அவரது தங்கை அமுதா அத்தை மகனான சங்கரனைத் திருமணம் செய்துகொண்டார்.
சுகுமாரனோ அவருடன் படித்த பெண்ணான சரஸ்வதியைக் காதலித்துத் திருமணம் செய்திருந்தார்.
அவர்களிடையே எஞ்சியது என்னவோ ரவீந்திரன்தான். அவருக்கோ திருமணத்தின்மீது நாட்டம் இல்லை என்பதால் இன்றுவரை பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து வருகிறார்.
_________________
மணி காலை ஏழாகிருக்க, அந்த அறையில் அடித்த அலாரத்தையும் மீறி ஒரு ஜீவன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தது.
மூன்று நான்கு முறை சளைக்காமல் அடித்த அலாரமானது, அந்தப் பதுமையின் கவனத்தை அதன்மீது திருப்பியிருக்க,
இடையில் தூக்கம் கலைந்த கோபத்தில், கைகளை விட்டுத் துழாவி, அலாரத்தின் தலையில் தண்டனையாய் ஒரு கொட்டு வைத்தவள், மீண்டும் சுகமான தூக்கத்துக்குள் புகுந்துகொண்டாள்.
கண்ணை மூடியவள் அடுத்த நிமிடமே சடாரென்று கண்ணைத் திறந்துகொள்ள, இந்த முறை அவளைக் கலைத்தது அந்த அலாரம் இல்லை. மாறாக, அவள்மீது விழுந்த அவளது அத்தை பெத்த ரத்தினம்.
கூடவே “அலாரத்தை வைக்க வேண்டியது ஏழு ஏழரை வர இழுத்துப் போத்திட்டு தூங்க வேண்டியது. எந்திரி வரு” என்றாள் வரலட்சுமி, அமுதா சங்கரன் தாம்பதியினரின் புதல்வி.
“சுமி ஏண்டி…” என்று தூக்கத்துடனே அவள் பெயரை நீட்டி உச்சரித்த வர்ஷிதா, மீண்டும் அத்தை மகள் மடியில் மீதி தூக்கத்தை தொடப்போக,
“எழுந்துக்க வரு, இன்னைக்கு நான் காலேஜ் ஃபர்ஸ்ட் டே போகப்போறேன். இன்னைக்கு நான் உன் கூடத்தான் வரணும் மறந்துட்டியா? சீக்கிரம் கெட் அப்” என்று சாய்வர்ஷிதாவை மீண்டும் எழுப்பிவிட்டாள்.
அவளோ தூக்கம் கலைந்த கோபத்தில் முறைக்கவும், “உனக்கு டென் மினிட்ஸ் தான் டைம். அதுக்குள்ள ரெடியாகிக் கீழே வர்ற சரியா” என்று அதிகாரமாய் சொன்னவள்,
“ப்ளீஸ் வரு, இன்னைக்கு எர்லியாப் போகணும், வந்திருவேல்ல” என்று கெஞ்சலுடன் முடித்தாள்.
அந்தக் கெஞ்சலின் பின்னரும் எங்கே மறுக்க, சம்மதமாய்த் தலையசைத்தவள், குளியலறைக்குள் நுழைந்துகொண்டாள்.
வரலட்சுமி சொல்லிச் சென்றது போலவே அடுத்த பத்து நிமிடங்களில் தயாராகி அவள் கீழே வர, அங்கே உணவு மேசையில் அனைவரும் அமர்ந்திருந்தனர்.
அனைவருக்கும் பொதுவாகக் காலை வணக்கத்தைச் சொல்லிக்கொண்டவள், இருக்கையில் அமரப் போக,
“என்னதான் பொண்ணோ? சொல் புத்தியும் கிடையாது, சுய புத்தியும் கிடையாது. பொழுது விடிஞ்ச பிறகும் பொண்ணுங்க இப்படித் தூங்கினா வீடு விளங்கவா போகுது. உன்னைத்தான் சொல்றேன் வரு. எப்ப பாரு காலேஜுக்கு லேட்டாவே போற. கொஞ்சம் உன் தங்கச்சி பைரவியைப் பார்த்துக் கத்துக்க” என்று எப்போதும் போல் சரஸ்வதியின் கணீர் குரல் அவ்விடத்தை நிறைத்தது.
வர்ஷிதாவிடம் எந்த எதிர்வினையும் இல்லை. இருக்கையில் அமர்ந்தவள், தனக்கென உணவை எடுத்து வைத்துச் சாப்பிடத் தொடங்கினாள்.
சரஸ்வதி இன்று நேற்றா பேசுகிறார். யார் தடுத்தும் அவர் வாயை மட்டும் மூட முடிவதில்லை.
மற்ற விடயங்களில் எல்லாம் ஓரளவு வாய்காட்டி எதிர்த்துப் பேசுவார் தான். ஆனால் வர்ஷிதா என்று வரும்போது, அந்தப் பேச்சுக்கு எல்லை என்று ஒன்று இருப்பதில்லை.
அன்புச்செல்வன்கூட ஒரு முறை மகளிடம் இப்படிப் பேச வேண்டாம் என்று தன்மையாகச் சொல்லிப் பார்க்க,
“ஏன் மாமா உங்க பொண்ணைக் கண்டிக்கிற உரிமை கூட எனக்கு இல்லையா? ஒரு சித்தியா அவ நல்லா வரணும் தானே நான் பேசுறேன். நான் என்னமோ கெட்டவ மாதிரி எல்லாரும் என்னையே குத்தம் சொல்றீங்க. இவ ஒரு முறை செஞ்ச கூத்துப் பத்தாதா? அதுக்கே எத்தனை பட்டுட்டோம்” என்று மூக்கை உறிஞ்சி ஒரு நாடகமே அங்கே போட்டுவிட்டார்.
அதன்பின் அன்புச்செல்வனும் அவருக்குப் பேசிப் புரிய வைக்க முடியாது என்பதை உணர்ந்து, அமைதியாக இருந்து கொண்டார்.
கூடவே அங்கே அவர்தான் மூத்த மனிதர் என்பதால், கூட்டுக்குடும்பம் உடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை அவருக்கிருந்தது.
அது இன்னும் சரஸ்வதிக்கு வாய்ப்பாகிப் போக, எதிலும் ஒப்பீடு, வர்ஷிதா எதைச் செய்ய ஆரம்பித்தாலும் பைரவியைக் காட்டி, அதற்கும் ஒரு ஒப்பீடு செய்யாமல் அவர் இருந்ததே இல்லை.
அதற்காகவோ என்னவோ, பைரவியை அப்படிப் பார்த்துச் செதுக்கித்தான் வளர்த்திருந்தார். அவளும் தாய்க்கு அடங்கிய பிள்ளை, அதன்பின் கேட்கவும் வேண்டுமா??
அக்காவைவிடத் தான் என்றும் உசத்தி என்ற ஒரு விதை, சிறிய வயதிலிருந்தே அவள் மனதில் சரஸ்வதியால் வலியப் புகுத்தப்பட்டிருந்தது.
அந்த விதை வெறுப்பாய் மாறி இன்று மரமாய் வளர்ந்து நிற்பதை யாராலும் தடுக்க முடியாமல் போனது.
சுகுமாரன் தான் நிலைமையைச் சீரமைக்கும் பொருட்டு, “சரசு போதும், சாப்பிடுற நேரத்தில் என்னத்துக்கு வீணாப் பேச்சு” என்று மனைவியிடம் ஆரம்பித்தவர், “வரு, இன்னொரு இட்லி வச்சுக்கடா” என்று அண்ணன் மகளிடமும் பேசினார். அவரைப் பார்த்துப் புன்னகைத்தவள், போதும் என்பதாய்க் கையசைத்தாள்.
அடுத்த பத்து நிமிடத்தில் வேக வேகமாகச் சாப்பிட்டு முடிந்து, எழுந்துகொண்டவள், “சுமி போலாமா?” என்று கேட்க, அவளும் பையுடன் தயாராக இருந்தாள்.
அனைவரிடமும் சொல்லிக்கொண்டு இரு பெண்களும் கிளம்பிவிட, அடுத்த சில விநாடிகளில் ரிஷி அந்த வீட்டுக்குள் நுழைந்தான்.
அமுதாவோ, “வா ரிஷி, இன்னைக்கு லேட்டாயிடுச்சா? எப்பவும் டைமுக்கு வருவியே என்னாச்சு? ரெடியாக லேட்டாகிடிச்சுப் போல, உட்காரு, சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று அவனைப் பேசவே விடாமல், அவனுக்கும் சேர்த்து அவரே பேசியபடி உணவைப் பரிமாறினார்.
அவனும் மௌனமாக உணவை உண்ணத் தொடங்க, அவன் இன்று தாமதமாக வந்த காரணமும், வர்ஷிதா இன்று நேரத்துக்கே சென்ற காரணமும் அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்தே இருந்தது.
இந்தக் கண்ணாமூச்சி ஆட்டத்துக்கு என்று முற்றுப்புள்ளி வைக்கப்படுமோ???
இப்படி ஒருவரையொருவர் பார்வையால்கூடத் தீண்டிவிடக் கூடாதென்று கவனமாய் இருக்கும் வகையில், அவர்களது வாழ்க்கையில் அப்படி என்ன நடந்திருக்கும்????
உயில் எழுதுமா???
இப்படிக்கு,
E2K 16