முரண்பட்ட நியாயங்கள்

4.9
(7)

முரண்பட்ட நியாயங்கள்

” ரித்தீஷ் எழுந்து வர்றியா? இல்லையா?” என்ற குரல் கிச்சனிலிருந்து ஒலித்தது.

” எதுக்கு தீபா இப்படி கத்திட்டு இருக்க? இன்னைக்கு சன்டே தான. அப்புறம் என்ன? குழந்தையைத் தூங்க விடு.” என்றவாறே காக்கி நிற சட்டையைப் போட்டுக் கொண்டு வந்தான் ரிஷி.

“உங்களுக்கு என்ன ? வேலைக்குப் போயிடுவீங்க. நானில்லை இந்த லாக்டவுன்ல அல்லாடுறேன். வீட்டு வேலையையும் கவனிக்கணும். அவனையும் பார்த்துக்கணும். ஸ்கூல் இருந்தாலாவது பரவால்ல. அவங்களுக்கு பணத்தை லம்பா கட்டிட்டோம். அவங்க வாட்ஸ்அப்ல வீடியோ அனுப்பிட்டு, நம்ம உயிரை வாங்குறாங்க. கொஞ்சமாவது நியாய, அநியாயம் பார்க்கிறவங்களா இருந்தா, பணத்தையாவது குறைக்கணும். அதுவும் இல்லை.” என்று எதிலோ ஆரம்பித்து எதிலேயோ முடித்தாள் தீபா.

” சரி விடு தீப்ஸ். அவங்க, அவங்க பண்ற அநியாயத்துக்குத் தண்டனை கிடைக்கும். நீ டென்ஷனாகாத. நான் ஈவினிங் வந்து ரித்துவை படிக்க வைக்கிறேன்.” என.

அதுவரை இருந்த கோபமெல்லாம் மறைய,” சாரி ரிஷி. நானும் டென்ஷனாகி, உங்களையும் டென்ஷனாக்கிட்டேன். சரி சாப்பிட உட்காருங்க. உங்களுக்கு டியூட்டிக்கு வேற டைம் ஆயிடுச்சுல்ல.” என்றவள் அவனுக்குப் பரிமாறத் தொடங்கினாள்.

” தீப்ஸ்… கோபப்படாதடா. நம்ம ஹெல்த் தான் பாதிக்கும். எத்தனை காமராஜர் வந்தாலும் இவனுங்கள்லாம் திருந்தமாட்டானுங்க. அவர் இலவச கல்விக் கொடுத்தாரு. அதை விட்டுட்டு, தனியாருக்கு போனா, அவனுங்களும் கொள்ளை அடிக்கத் தான் செய்வாங்க. விடுடா. மைண்ட ரிலாக்ஸாக வச்சுக்கோ. வேணும்னா, ஹாஃப் டே பர்மிஷன் கேட்குறேன். நாம ரித்திஷுக்கு, தங்கச்சி பாப்பா ரெடி பண்ணுவோமா.” என்று கண் சிமிட்டி சிரிக்க…

” ம்ச். போங்க. கேலி பண்ணாதீங்க. நீங்கத் தான் கடமை தவறாத போலீஸ் ஆஃபிஸராச்சே. வம்பு பண்ணாமல் கிளம்புங்க.” என்று தனது வெட்கத்தால் சிவந்த முகத்தை மறைத்தப் படி பேசினாள்.

“ஹா… ஹா… ” என்று சிரித்தவன், எழுந்துக் கைக்கழுவியவாறே, “தீப்ஸ் நான் வரட்டுமா…” என்று கிளம்ப….

” ரிஷி… லஞ்ச்க்கு என்ன செய்யட்டும். நான்வெஜ் சமைக்கட்டுமா?”

  ” இன்னைக்கு சண்டே மறந்துட்டீயா? ஃபுல் லாக்டவுன். எதுவும் கிடைக்காது. இருக்கிறதை வச்சு செய். பாய்…” என்றவன் கிளம்பி விட.

 மகனைப் படிக்க வைக்கிறேன் என்று ரிஷி சொன்னதிலே பாதி டென்ஷன் குறைந்து விட, பிறகு அவன் செய்த கலாட்டாவில் எல்லாவற்றையும் மறந்து உற்சாகமாகவே வளைய வந்தாள் தீபா.

தனது அலுவலக வாகனத்தில் ஏறியவனின் முகத்திலும் புன்னகை வந்தமர்ந்தது.

‘ இரண்டு நாட்களாகத் தீபாவின் மனநிலை சரியில்லை. அதை அறிந்து தான் இருந்தான். எல்லாம் இந்தக் கொரனாவால் வந்தது.

இல்லையென்றால் போன வருடமே ரித்தீஷை எல்கேஜியில் சேர்த்து இருக்க வேண்டியது. ஆன்லைனில் அவனுக்குப் பாடத்தைப் புரிய வைக்க முடியாது என்று எண்ணி சேர்க்காமல் இருந்தார்கள்.

 இந்த வருடம் எப்படியும் கொரனா சரியாகி விடும் என்று நினைத்திருக்க… இந்த வருடமும் அது தொடர்கதையாகத் தொடர்ந்தது. இன்னும் அப்டேட்டாக நியூ வெர்ஷன். அது இன்னும் பயங்கரமாக எல்லோரையும் ஒரு வழியாக்கியது. சரி தான் என்று அவர்கள் இருக்கும் ஊரிலே உள்ள, இப்போது தான் பிரபலமாகிட்டு இருக்கும் ஸ்கூலில் சேர்க்க முடிவெடுத்தனர்.

எல்கேஜி சேர்க்க முயன்றால், அவன் வயசுக்கு யூகேஜி தான் படிக்கணும். நீங்க ரெண்டு வருஷம் பீஸையும் சேர்த்து கட்டிடுங்க. உங்க பையனை யுகேஜியில் சேர்த்துடலாம் என்று ஸ்கூல் மேனேஜ்மென்ட் கூறியது.

 அதெல்லாம் சரி வராது.எல்கேஜியே படிக்கட்டும் என்று ரித்திஷை ஒரு வழியாகச் சேர்த்து விட்டு வந்தனர்.

அதிலிருந்து தீபா டென்ஷனாக இருந்தாள். வாட்ஸ்அப்ல வீடியோ அனுப்பிடுவாங்க, நாம தான் எல்லாம் சொல்லிக் கொடுக்கணும், ஆனால் ஸ்கூல் ஃபீஸை கொஞ்சம் கூடக் குறைக்க மாட்டாங்க என்று கொந்தளித்துக் கொண்டே இருந்தாள். அது தான் அவளைச் சமாதானம் செய்ய முயன்றான்.’ தான் செய்தது நினைவில் வர முகத்தில் ரகசிய புன்னகை வந்தமர்ந்தது‌.

அதற்குள் போலீஸ் ஸ்டேஷன் வந்து விட. அதற்குப் பிறகு அவனது கடமை அழைத்துக் கொண்டது. அதில் ஆழ்ந்தான். அவன் காவல்துறை அதிகாரி. அனாவசியமாக ரோடுகளில் சுற்றுபவரை, விரட்டி வீட்டிற்கு அனுப்புவது தான் அவனது வேலை. ஞாயிறன்றுக் கூட விடுமுறை கிடையாது. மனைவியின் எண்ணங்கள் கூடப் பின்னே சென்று விட்டது. வேலையைப் பார்க்கக் கிளம்பி விட்டான்.

ஜீப்பை மெதுவாகச் செலுத்த சொன்னவன், வழியில் நடந்து வருபவர்களை, “ஏன் வெளியே வர்றீங்க. வீட்டுக்குப் போங்க.” என்று மிரட்டி அனுப்பினான். டூவிலரில் வருபவர்கள் சந்துப் பொந்துகளில் செல்ல… அவர்களைப் பிடிக்க, சிலரை அனுப்பியாயிற்று. அதையெல்லாம் யோசித்துக் கொண்டே வந்தவன்,

. ஒரு இடத்தில் கூட்டமாக இருக்க. அங்கு ஜீப்பை நிறுத்தச் சொன்னான்.

அங்கு ஒருவர் மீன் விற்றுக் கொண்டிருந்தார். ஞாயிறன்று ஃபுல் லாக்டவுன். எந்தக் கடையும் திறக்க அனுமதியில்லை. தடையையும் மீறி மீன் விற்பனை செய்துக் கொண்டவரின் அருகே சென்றவன், “யோவ்… இன்னைக்கு எந்தக் கடையும் திறக்கக் கூடாதுன்னு தானே சொல்லியிருக்கோம். அதையும் மீறி மீன் விக்கிறேன்னு, கூட்டத்தைச் சேர்க்கிறீயே… உன்னையெல்லாம் என்ன செய்யுறது. முதல்ல தராசைக் கொண்டா‌… இரண்டு நாள் கழிச்சு ஸ்டேஷன்ல வந்து வாங்கிக்க..‌. அப்பத் தான் நீங்கள்லாம் ஒழுங்கா இருப்பீங்க‌.” என்றவாறே அவன் கையிலிருந்த தராசை பிடுங்க…

” சார்… சார்… மன்னிச்சுடுங்க சார். புள்ளைங்க பசியோட வீட்ல கெடக்குதுங்க. ஏதாவது டெய்லி வித்தா தான் அதுங்களுக்கு ஆக்கிப் போட முடியும்.அதான் சார் வந்தேன். என் பொழைப்புல மண் அள்ளிப் போட்டுறாதீங்க சார். நான் இப்பவே எடத்தைக் காலி பண்ணிடுறேன்.” என்று கெஞ்ச.

” ஆமாம் சாமி… நாங்கப் போயிடுறோம்.” என்று அவரது மனைவியும் கைக்கூப்ப.

“ம்…” என்று தாடையை தடவியவாறே யோசனையில் ஆழ்ந்தான்.

கண்களோ விற்காமல் இருந்த மீன்களைப் பார்த்தது. அதைப் பார்க்கவும் மனைவியின் ஞாபகம் வந்து போனது.

” சரி தான்… இரண்டு மீனைப் போடு.” என்று அங்கு உயிரோடு துள்ளிக் கொண்டிருந்த விரால் மீனை வாங்கிக் கொண்டு நகர்ந்தான்.

 அவ்விடத்தை விட்டு ரிஷி அகன்றதும், பெருமூச்சு விட்டுக் கொண்டார் அந்த வியாபாரி. அருகிலிருந்த மனைவியிடம்,” பார்த்தியா சரசு. எப்படி இருக்கிறாங்க. எரிகிற வீட்டில் புடுங்குற வரை லாபம் என்று இருக்காங்க. யார் தான் இவங்களை கேட்பது? என்று சொல்லிக் கொண்டே, ஏற்கனவே பணம் கொடுத்தவர்களுக்கு மீனின் எடையைக் குறைத்து, கவரில் போட்டுக்கொண்டிருந்தார்.

” விடுங்க… அவங்க, அவங்க செய்யுற பாவத்திற்கு, கைமேல் பலன்.” என்றவாறே கணவனைப் பார்த்த சரசு அதிர்ந்தாள்.

” யோவ்… ஒழுங்கா எடை போடுயா… ஏய்யா இப்படி பண்ணுற.” என்று கடிய…

” ம்… ஒரு கிலோ மீனைச் சும்மா தூக்கிக் கொடுத்திருக்கேன். அதை எப்படி சமாளிக்கிறது. இப்படி நூறு, இருநூறு குறைச்சுக் கொடுத்தா தான் நமக்குக் கட்டுப்பிடியாகும் புள்ள.” என.

” ஐயோ! ஐயோ! ஏன் யா உன் புத்தி இப்படி போவுது. உன் நியாத்தெல்லாம் ஒடப்புலக் கொண்டு போடுய்யா. இப்போ நீ செய்றதெல்லாம் பாவம் இல்லையா? பாவம் மட்டுமில்லை. நம்பிக்கை துரோகமும் யா. போலீஸப் பார்த்ததும், மீன் வாங்க பணத்தைக் குடுத்தவங்களை, அந்தக் கோயில்லப் போயி நில்லுங்க என்று சொன்னோமே. சொன்னப் பேச்சுக்கு, மறுப்பேச்சு பேசாம நம்பிக்கையோடு போனாங்களே. அவங்களை ஏமாத்தலாமா யா. அதாடோ பாவப்புன்னிய கணக்கு நம்பப் புள்ளைங்களதாய்யா சேரும்.” என்ற சரசுவின் வார்த்தையைக் கேட்டு, “மன்னிச்சிடு புள்ள‌… நல்ல வேளை என் கண்ணத் தொறந்தே.” என்றவன் மீண்டும் எல்லா பையிலும் சரியாக எடைப் போட்டு மீனை வைத்தான்.

 அவனது கண்களை மட்டும் திறக்கவில்லை சரசு. சற்று முன் மீன் வாங்கிச் சென்று இருந்த ரிஷியையும், அவனது முரண்பட்ட நியாயத்தை உணரச் செய்திருந்தாள்.

ஏதோ ஞாபகத்தில் மீனை வெட்டிச் சுத்தம் செய்து வாங்காமல் அப்படியே எடுத்துச் சென்றான். கைகளில் துள்ளி குதித்த மீன் சுய உணர்வுக்கு இழுத்து வந்தது.

‘ அடடா… மீனை வெட்டாமல் எடுத்து வந்துட்டோமே.’ என்று நினைத்துத் திரும்பி வந்தான்.

அதனாலே அவர்கள் பேசிய அனைத்தையும் கேட்க நேர்ந்தது.

அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவனைச் செருப்பால் அடிப்பதைப் போல் உணர்ந்தான்.

 காலையில் தானும், தன் மனைவியும் பேசியது சமயசந்தர்ப்பம் இல்லாமல் கண் முன்னே வந்து போனது. அப்போது தான் அவன் செய்த தவறும் புத்தியில் உரைக்க…

தன்னுடைய பதவியைக் கூட நினைக்காமல், அந்தப் பெண்மணியிடம் கைகூப்பினான். ” மன்னிச்சிடுங்க மா. ஒருத்தவங்க தப்பு செய்தாங்கன்னு திட்டுற நாம், அடுத்தவங்க கிட்ட அதே தப்பு செய்யுறோம். இன்னைக்கு நானும், என் மனைவியும் எங்க பையனைச் சேர்த்த ஸ்கூல்ல நடக்குற அநியாயத்தைப் பத்தி பேசுணோம். அவங்கவங்க செய்யுற தப்புக்கு தண்டனை அனுபவிப்பாங்க என்று பேசிட்டு இருந்தோம். அப்படி பட்ட நானே வந்து தவறு செய்ய இருந்தேன். பெரியதோ, சின்னதோ, தப்பு தப்பு தான். எனக்குப் புரிய வச்சதுக்கு நன்றி. இந்தாங்க மீன். நான் நாளைக்கே வந்து காசுக் கொடுத்து வாங்கிக்கிறேன். உங்களைக் கஷ்டப்படுத்துனதுக்கு என்ன மன்னிச்சிடுங்க.” என்றுக் கூறி விட்டுத் திரும்பிய ரிஷி அதிர்ந்தான். அங்கிருந்தவரை ஒரு பார்வை பார்த்து விட்டு, பிறகு விறுவிறுவென வெளியேறினான்.

ரிஷி மட்டும் அதிரவில்லை. அதைக் கேட்டுக் கொண்டிருந்தவரும் அதிர்ந்தார். சற்று முன் பணம் கொடுத்துவிட்டு மீன் வாங்குவதற்காகக் காத்திருந்த, அவ்வூரில் வளர்ந்து வரும் பிரபல பள்ளியின் ஓனர்.

லாக்டவுனில் வீட்டில் இருக்க போரடிக்கவே… மீன் வாங்குவதற்கு அவரே வந்திருந்தார். பணம் கொடுத்து விட்டு, காத்திருக்கும்போது போலீஸ் வந்து விடவே, சற்று தள்ளி இருந்த கோவிலில் காத்திருந்தார்.

போலீஸ் செல்லவும், மீண்டும் அவர்கள் அருகே வந்தவர், ரிஷி கூறிய அனைத்தையும் கேட்டார்.

” இந்தாங்க சார்.” என்று அந்தப் பெண்மணி நீட்டிய கவரை, குனிந்த தலையுடன் வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் சென்றார்.

குற்றமுள்ள மனசு, முரண்பட்ட நியாயத்தை எண்ணி வெட்கப்பட்டது. அந்தப் போலீஸ்காரர் சொன்னது தன்னைப் பற்றித் தான் என்று புரிந்து இருந்தது. ஏனென்றால் அவரது மகனை அவரது பள்ளியில் தான் சேர்த்து இருந்தனர். தான் செய்த தவறு புரிய… ‘தன் குடும்பத்துக்கும் எதுவும் ஆகக் கூடாது.’ என்று கடவுளுக்கு மானசீகமாக ஒரு வேண்டுதலை வைத்தவர், ‘இனிமேல் நேர்மையான வழியில் செல்ல வேண்டும்.’ என்று எண்ணிக் கொண்டே சென்றார்.

 இருவர் மனதில் நல்ல விதையை விதைத்தது பற்றி எதுவும் அறியாமல், “ஏன் யா… கொடுக்கும்போது அப்படி பேரம் பேசினாரு. அந்தப் பெரியவரு. இப்போ மீதி காசைக் கேட்காம போயிட்டாரு. அப்புறம் அந்தப் போலீஸ்காரரும், வாங்குன மீனைக் கொடுத்துட்டுப் போயிட்டாரு. என்னாச்சுனு தெரியல?” என்று சரசு கூற…

” அட விடு புள்ள. நீ சொல்றதும் சரி தான். நம்ம நியாயமா நடந்துக் கிட்டா, கடவுள் நம்மளை நஷ்டப்பட விடமாட்டார் போல… குறைச்சு கேட்டவரும் சொன்ன விலைக்கு வாங்கிட்டுப் போயிட்டார். பணம் கொடுக்காமல் வாங்கிட்டு போன போலீஸ்காரரும் மீனைத் திருப்பிக் கொடுத்துட்டுப் போயிட்டாரு. ” என்றுக் கூறியவன் தனது மனைவியைப் பார்த்துச் சிரிக்க.

அவளும்,” அதுவும் சரி தான்.” என்றும் கூறியப் படியே மிச்ச வியாபரத்தை முடித்து விட்டுக் கிளம்பினர். மீன் கூடையை, வியாபரித் தூக்கிக் கொள்ள. தராசை ஆசையாகக் கையில் ஏந்திக் கொண்டாள் அந்தத் தேவதை. 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “முரண்பட்ட நியாயங்கள்”

  1. உண்மையிலேயே நல்லா இருந்துச்சு மேலும் பல கதைகள் இது போன்ற எழுத வாழ்த்துக்கள

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!