Home Novelsமையல் கொண்டேன் மைவிழி அழகிலேமையல் கொண்டேன் மைவிழி அழகிலே – 1

மையல் கொண்டேன் மைவிழி அழகிலே – 1

by Aazhi Thendral
5
(23)

பெங்களூருவின் ஒரு பிரபலமான ஐ.டி அலுவகத்தில், மாலை ஆறு மணி அளவில் முகத்தில் சோகமும், கோபமும், ஏமாற்றமுமாக தன்னுடைய மடி கணினியை மூடி வைத்தாள் சம்யுக்தா.

இருபத்தி ஐந்து வயது அழகிய பதுமை அவள். அரிதாரம் பூசாமலே அழகாய் மின்னும் கலங்கமில்லாத சருமம். நிலவின் ஒளியை தனதாக்கி கொண்ட சருமத்திற்கு அவள் எந்த ஒப்பனையும் செய்து கொள்வதில்லை.

மயில் இறகை போன்ற நெருக்கமான இமை முடிகளை கொண்ட விழிகளுக்கு மட்டும் அஞ்சனம் தீட்டி கொள்வது அவள் வழக்கம்.
அஞ்சனத்தை தீட்டி முடித்து ஒப்பிட்டு பார்க்கையில் அழகிய ஓவியமும் அவள் விழி அழகின் முன்பு தோற்று போகும்.

மனதில் நினைப்பதை மறைக்க தெரியாமல் கண்ணாடியாய் காட்டிடும் முகம் அவளுடையது. அப்படி அவள் மனதில் உள்ள வாட்டத்தை முகம் காட்டிட, காதலன் மீதுள்ள அளவு கடந்த கோபத்தில் அவனை காலையிலிருந்தே  திட்டி தீர்த்து கொண்டிருந்தாள் சம்யுக்தா.

தனியாக புலம்பி கொண்டிருப்பவளை பார்த்த
அவளது தோழி வித்யாவோ, இவளுக்கு சமாதானம் கூறியே சோர்ந்து போனாள். எங்கே.. அவள் கேட்டால் தானே?

“வித்யா.. இன்னைக்கு மட்டும் அவன் தனியா என் கைல சிக்கட்டும். அப்புறம் இருக்கு அவனுக்கு.” என்றாள் மாறாத கோபத்துடன்.

“பாவம் டி. ஏதோ வேலை டென்ஷன்ல மறந்திருப்பாரு.”

“உடனே அவனுக்கு சப்போர்ட் பண்ண வந்துடுவியே. நீ எனக்கு ஃப்ரெண்டா இல்லை அவனுக்கு ஃப்ரெண்டாடி?” என்று சிறு பிள்ளை போல் கோபித்து கொள்பவளிடம் என்னதான் சொல்வது?

“சரி.. நான் வீட்டுக்கு கிளம்பறேன். நீ வரியா இல்லையா?”

“எனக்கு வெளில கொஞ்சம் வேலை இருக்கு. நீ கிளம்பு. நான் வர லேட் ஆகும்” என்றதும்,

“சரி, சீக்கிரம் வந்துடு” என்றவள் அங்கிருந்து கிளம்பி சென்றாள்.

அதே தருணம்,

“என்னடா காலைல இருந்து உன்னோட ஆளு உன்னை திரும்பி கூட பார்க்காம இருக்கா? இந்நேரத்துக்கு இரண்டு பேரும் பார்வையாலேயே டூயட் பாடி இருப்பீங்களே..?” என்றான் பிரதீப்.

“அதுவா.. இன்னைக்கு அவளோட பர்த்டே. மேடம் நான் மறந்துட்டதா நெனச்சுட்டு இருக்காங்க. அதான் கோபம் என்றான் ஆதிசேஷன்.

எதையும் விரைவாகவே கற்றுக்கொள்ளும் புத்தி கூர்மை உடையவன். தலைமை பண்பும், காண்போரை ஈர்க்கும்படியான அழகும் உடைய இருபத்தி எட்டு வயதான ஆண்மகன்.

சம்யுக்தாவிற்கு தன் மீதான கோபத்தினை ஆதிசேஷன் தன் நன்பனிடன் விளக்கி கொண்டிருக்க,

“ஓ.. ஓ ஓ ஓ.. அதான் விஷயமா. அப்படீனா நீ மறக்கல. அப்புறம் என்ன? போய் விஷ் பண்ண வேண்டியது தானே?”

“அதெல்லாம் முடியாது. ஒரு சர்ப்ரைஸ் ப்ளான் பண்ணிருக்கேன். கொஞ்ச நேரம் அவ வெயிட் பண்ணட்டும்.”

“சரி டா. அவளை ரொம்ப டென்ஷன் பண்ணாம சீக்கிரம் சர்ப்ரைச ஓபன் பண்ணிடு.”

“வேலை முடிஞ்சுதுல. வெளில போனதும் அதுதான் முதல் வேலை.” என்றவன் தன்னுடைய இருக்கையை விட்டு எழுந்து வெளியே சென்றான்.

“சம்யுக்தா தன்னுடைய ஸ்கூட்டரை எடுத்து கொண்டு தான் தங்கி இருக்கும் வீட்டை நோக்கி செல்ல, தன்னுடைய பைக்கில் அவளை பின்தொடர்ந்தான் ஆதி.

அவன் பின் தொடர்வதை தெரிந்தும் தெரியாதது போல் வண்டியை ஓட்டி கொண்டு முப்பது நிமிடங்களில் தன்னுடைய வீட்டை அடைந்தவள் எந்த திசையிலும் தன்னுடைய பார்வையை திருப்பாமல் தன் வீட்டை நோக்கி அதே கோபத்துடன் நடந்து சென்றாள்.

சம்யுக்தாவின் குடும்பம் தமிழ்நாட்டில் திருச்சியை சேர்ந்தது. வேலை காரணமாக பெங்களூரில் தன் தோழி, வித்யாவுடன் சேர்ந்து ஒரு வீட்டினை வாடைகைக்கு எடுத்து தங்கி இருக்கிறாள்.

ஆதிசேஷனுக்கும் தமிழ்நாடுதான் சொந்த மாநிலம். ஆனால் பெங்களூரில் தன்னுடைய தாய் தந்தையருடன் செட்டில் ஆகிவிட்டான்.

சம்யுக்தாவோ கோபத்துடன் தான் தங்கி இருக்கும் அறை கதவின் பூட்டினை திறந்து கொண்டு உள்ளே நுழைய, வீடு வண்ண வண்ண மின்விளக்குகளால்  பிரகாசித்தது.

தரையின் நடைபாதையில் சிவப்பு வண்ண ரோஜா இதழ்கள் பரப்பப்பட்டு மற்றைய இடங்களில் இதய வடிவிலான சிவப்பு வண்ண பலூன்களால் நிரப்பப்பட்டு இருந்தது.

ஹால் சுவற்றில் எல்லாம் அவளுக்கு பிடித்த பூக்கள் கொண்டு அலங்கரிக்கபட்டிருக்க, அறையின் நடுவே ஒரு கண்ணாடி மேஜையின் மீது சிறிய கேக் ஒன்று தயார் நிலையில் இருந்தது.

இவை அனைத்தின் மீதும் சம்யுக்தாவின் பார்வை ஒரு முறை படிந்து மீள, அவளின் காதருகே வந்து “ஹேப்பி பர்த்டே சம்யூ..” என்றான் மெல்லிய குரலில்.

கலங்கிய விழிகளுடன் அவன் புறம் திரும்பியவள்,

“ஏன்டா இப்படி பண்ணின? நீ மறந்துட்டேன்னு நெனச்சு நான் காலைல இருந்து எவ்வளவு டென்ஷனா இருந்தேன் தெரியுமா?” என்றவள் அவன் மார்மீதே செல்ல அடிகளை கொடுக்க, அதை புன்னகையுடனே வாங்கி கொண்டவன், அதே மாறாத புன்னகையுடன்,

“அது எப்படிடி மறப்பேன்? உள்ள வா. உனக்காக ஒரு சார்ப்ரைஸ் காத்துட்டு இருக்கு” என்றான்.

“அதான் இவ்வளவும் பண்ணி வச்சிருக்கியே. இதுவே பெரிய சர்ப்ரைஸ்தான். இன்னும் என்ன?”

“நீ முதல்ல உள்ள வா சம்யூ..” என்றதும்

“சரி” என்று அவன் பின்னாலேயே செல்ல,  அவளுடைய அறை கதவை திறந்ததும் அவன் ஒரு ரிமோட் பட்டனை அழுத்த, அதில் அவர்கள் முதல் சந்திப்பிலிருந்து நேற்றைய தினம் வரை அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக திரையில் அழகான காட்சியாக விரிந்தது.

அவளுடைய கோபம், அழுகை, சிரிப்பு என அனைத்தையும் அழகாக படம் பிடித்து வைத்திருந்தவன், தன்னுடன் சேர்ந்து இருந்த அழகிய தருணங்களையுவும் படமாக்கி அதில் இணைத்திருந்தான்.

முகம் கொள்ளா புன்னகையுடன் ஒவ்வொன்றையும் ரசித்து பார்த்து கொண்டிருந்தவள், மகிழ்ச்சி மிகுதியில் அவனை அணைத்திருந்தாள்.

“தேங்க் யூ சோ மச் ஆதி.. ஐ லவ் யூ டா. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்றாள்.

“ஐ லவ் யூ சம்யூ.. உன்னோட சந்தோசம்தான் எனக்கு முக்கியம்” என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

கடந்த இரண்டு வருடமாக ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் காதல் தங்களுடைய நெருங்கிய நண்பர்களை தவிர வேறு யாரும் அறிந்திருக்கவில்லை. ஆதிசேஷன்தான் தற்போதைக்கு யாரிடம் வெளிப்படுத்த வேண்டாம் என கூறியிருந்தான். தேவையற்ற வதந்திகள் பரவும் என்பது அவனது எண்ணம்.

எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ஒருவர் இன்னொருவரை விட்டுக்கொடுத்ததே இல்லை. இருவருமே நல்ல வேலையில், நல்ல ஊதியத்தில் பணியாற்றுகிறார்கள்.
வேலையில் அடுத்த நிலையை அடைந்ததும் திருமணம் செய்து கொள்வதாக முடிவும் எடுத்திருந்தனர்.

சம்யுதாவின் மனம் முழுவதும் நிறைந்து இருந்தான் ஆதிசேஷன். இருவரின் மனதிலும் அத்தனை காதல்.

ஆதிசேஷனுக்கும் சம்யுக்தாவே உலகம். எப்போதும் அவளுடைய விருப்பங்களுக்கே முன்னுரிமை கொடுப்பவன்.

இருவருமாக சேர்ந்து கேக் வெட்டி, ஒருவருக்கு ஒருவர் மாற்றி ஊட்டி விட்டு, மகிழ்ச்சியாக பிறந்தநாளை கொண்டாட, ஆதி தன் பாக்கெட்டிலிருந்து சிறிய அடர் சிவப்பு வண்ண பெட்டியை வெளியே எடுத்தவன் அதிலிருந்து ஒரு தங்க மோதிரத்தை எடுத்து அவள் முன்பு ஒற்றை காலை மடக்கி மண்டியிட்டு அமர்ந்து,

“நோ சாய்ஸ் மை கேர்ள்.. சே எஸ்..” என்றான் குறும்பு புன்னகையோடு.

சம்யுக்தாவின் விழிகளோ ஆச்சரியத்தில் விரிந்தன. சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுக்க, “எஸ்” என்றவள், தன்னுடைய வெண்டை பிஞ்சு விரல்களை அவன் முன்பு நீட்ட, அதில் மோதிரத்தை அணிவித்தான் ஆதிசேஷன்.

எழுந்து நின்று மீண்டும் இன்னொரு சிறிய பெட்டியை தன்னுடைய பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்தவன் அதிலிருந்த மோதிரத்தை எடுத்து அவளிடம் கொடுத்து, இதை எனக்கு போட்டு விடு சம்யூ என்றான்.

அவளும் அதை போலவே செய்ய, இதுதான் நம்ம எங்கேஜ்மெண்ட் ரிங். பத்திரமா வச்சுக்கோ. நம்ம இரண்டு பேர் வீட்டுலயும் சம்மதம் வாங்கி ஊரறிய இதை உன் கைல திரும்பவும் போட்டு விடணும் என்றான்.

முகம் முழுவதும் புன்னகையாக சரி என்றவள்,

“ஆதி.. நம்ம லவ் மேட்டரை வீட்ல சொல்லிடவா? இன்னைக்கு எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க. எனக்கும் இப்போதான் கொஞ்சம் தைரியம் வந்திருக்கு.”

“கொஞ்சம் பொறு சம்யூ.. ஆஃபீஸ்ல எனக்கு ப்ரமோஷன் கிடைக்க போகுது. உனக்கே தெரியும்தானே. கிடைச்ச அடுத்த நாளே என்னுடைய அப்பா அம்மாவை கூட்டிட்டு வந்து உங்க வீட்ல பொண்ணு கேக்குறேன்” என்றான்.

“ஹ்ம்ம்ம்.. சரி. எங்க வீட்லயும் கல்யாணத்தை பத்தி பேச ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு ஒரு அண்ணன் இருக்கான். எனக்கு கல்யாணம் பண்ணிட்டுதான் அவனுக்கு பண்ணனும்னு வீட்ல எல்லாரும் வெயிட் பண்றாங்க.

இப்போ நீ இருக்க வேலைக்கு என்னடா குறைச்சல்? இப்போவே வந்து எங்க வீட்ல பேச வேண்டியதுதானே.” என்றாள் ஒருவித எதிர்பார்போடு.

“கொஞ்சம் பொறு மா. கொஞ்ச நாள்தானே. நான் நல்ல பொசிஷன்ல இருக்கும்போது உங்க வீட்டுக்கு வந்து பேசினா இன்னும் கெத்தா இருக்கும்ல?”

“என்னவோ சொல்ற. கொஞ்ச நாள்தான் பார்ப்பேன். இல்லனா..”

“இல்லனா..?”

“எங்க வீட்ல பேச மாட்டேன். நேரா உங்க வீட்டுக்கு வந்துடுவேன் பார்த்துக்கோ.”

“அம்மா தாயே.. அப்படியெல்லாம் எதுவும் பண்ணிடாதமா. அப்புறம் எங்க அம்மாவும் அப்பாவும் என்னை கொன்னே போட்டுடுவாங்க. நம்ம இரண்டு பேர் வீட்டுலையும் பேசி சம்மதம் வாங்க வேண்டியது என்னோட பொறுப்பு. நீ அமைதியா இருந்தா மட்டும் போதும்.

உன்னுடைய அடுத்த பர்த்டேவ நம்ம இரண்டு பேரும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃபாதான் செலிப்ரேட் பண்ணுவோம். ஓகே..?”

“அதையும் பாக்கலாம்..”

“என்ன பார்க்கலாம். எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன். இன்னைக்கு என்னோட பர்த்டே பேபி ஹேப்பியா இருக்கணும். அதுக்கென்ன செய்யணுமோ அதை பத்தி மட்டும் பேசுவோம்.”

“அதெல்லாம் நீ செஞ்ச வரைக்குமே நான் ரொம்ப ஹேப்பிதான். டைம் ஆகிடுச்சு. நீ வீட்டுக்கு கிளம்பு.”

“வெளில மழை வேற பெய்யுதுடி. கண்டிப்பா நான் போகணுமா? இங்கேயே இருந்துட்டு நாளைக்கு போகட்டுமா?”

“என்னது நாளைக்கா? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். மழை நின்னு ரொம்ப நேரம் ஆச்சு. நீ முதல்ல கிளம்பு.”

“கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லைடி உனக்கு.”

“அதெல்லாம் நிறையவே இருக்கு. நீ முதல்ல பத்திரமா உன்னோட வீட்டுக்கு போற வழிய பாரு” என்று அவனை வெளியே அனுப்பி வைக்க, மனமே இல்லாமல் அங்கிருந்து கிளம்பி சென்றான் ஆதிசேஷன்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 23

No votes so far! Be the first to rate this post.

You may also like

1 comment

Nirmala Devi October 7, 2025 - 6:03 pm

Super super super super super super super super super super super super super super

Reply

Leave a Reply to Nirmala Devi Cancel Reply

Best Tamil Novels

error: Content is protected !!