“என்னடி இரண்டு பேரும் ஆளுக்கு ஒரு பக்கம் முகத்தை தூக்கி வச்சுட்டு உக்காந்துட்டு இருக்கீங்க” என்ற வளர்மதியிடம், “வேற என்ன சித்தி பண்ண சொல்றீங்க” என்றாள் ஷ்ராவனி.
” என்னடி என்ன ஆச்சு” என்றார் வளர்மதி. “அக்காவுக்கு இந்த கல்யாணத்துல விருப்பமே இல்லை அவரோட கட்டாயத்தினால் அக்காவோட வாழ்க்கையை பழி கொடுக்கிறாரோ என்ற பயம் எங்க ரெண்டு பேருக்குள்ளே இருக்கு , ஆனால் அம்மாவுக்கு அந்த பயம் கொஞ்சம் கூட இல்லையா?” என்றாள் ஷ்ராவனி.
“உன் அம்மா உன் அப்பா கிழிச்ச கோட்டை தாண்டாது அதனால அவர் என்ன நினைக்கிறாரோ அதுதான் சரின்னு நம்பும். அதைப் பத்தி யோசிக்காதீங்க ஏன்டி உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலை” என்ற வளர்மதியிடம், “எங்களோட கல்யாணமாவது எங்க விருப்பப்படி சுதந்திரமா நடக்கணும்னு ஆசைப்பட்டோம் ஆனால் கல்யாணம் கூட எங்க வாழ்க்கையில் அப்பா விருப்பம் தான். மாப்பிள்ளையை பிடித்து இருக்கானு கூட கேட்க வில்லை. இது தான் மாப்பிள்ளைனு சொன்னாரு. சுதந்திரம் என்ற ஒன்று எங்க வாழ்க்கையில் இல்லையே அதை நினைக்கும் போது தாங்கிக்க முடியலை சித்தி. அந்த மாப்பிள்ளையை ஏனோ எனக்கு பிடிக்கவே இல்லை . அவனோட பார்வையும் சரி இல்லை” என்றாள் வைஷ்ணவி .
“சரியில்லன்னா” என்ற வளர்மதியிடம், “பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கு மேலே இருந்து கீழே வரை பார்க்கிறான் எனக்கு ஒரு மாதிரியா இருந்துச்சு” என்றாள் வைஷ்ணவி.
“லூசு நீ அவனைக் கட்டிக்க போற பொண்ணு தானே அதனால கூட பார்த்திருக்கலாம், இப்போ என்ன அவன் உன்னை பொண்ணு பார்க்க வந்துட்டு உன் தங்கச்சியை தப்பா பாத்தானா அப்படி பார்த்தால் தான் தப்பு பாத்துக்கலாம் விடு” என்ற வளர்மதி இதோ பாரு வைஷ்ணவி, “உன் அப்பா வந்து நான் புடிச்ச முயலுக்கு மூன்றே கால் என்று சொல்கிறவர். அவரை மீறி நம்மளால எதுவுமே பண்ண முடியாது இந்த கல்யாணத்தை உனக்கு பிடிக்கலைன்னு நீ சொல்ற அப்போ உனக்கு வேற யாரையாவது புடிச்சிருந்துச்சுன்னா சொல்லு சித்தப்பா கிட்ட சொல்லி உங்க அப்பாவை மீறி உனக்கு நீ ஆசைப்பட்டவனோட கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு” என்றார் வளர்மதி.
“அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை சித்தி” என்று கூறியவளின் மனதில் லேசாக குகநேத்ரனின் நினைப்பு எட்டிப் பார்த்தது . ஆனாலும் அதை அடக்கி கொண்டவள், “என் அப்பாவுக்கு என்னால எந்த அவமானமும் வரக்கூடாது சித்தி இப்போ ஒருவேளை நான் இந்த கல்யாணம் பிடிக்கலைன்னு சொல்லி ஓடிப் போயிட்டேனா என்ன நடக்கும் நல்லா யோசிச்சு பாருங்க எனக்கு அடுத்து உள்ள ஷ்ராவனிக்கு வீம்புக்குனாலும் இதே மாப்பிள்ளையை கட்டி வச்சாலும் கட்டி வச்சிருவாரு. அதனால தான் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என் தங்கச்சியோட லைஃபாவது நல்லா இருக்கணும்” என்றாள் வைஷ்ணவி.
“முட்டாளாக்கா நீ, என் வாழ்க்கையை பார்த்துக்க எனக்கு தெரியும். சத்தியமா சொல்கிறேன் இவர் பார்க்கிற மாப்பிள்ளையை நான் கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன்” என்றாள் ஷ்ராவனி.
“உன்னால முடியுமா?” என்ற வைஷ்ணவியிடம், “முடியும்” என்றாள் ஷ்ராவனி.
“ஸ்டுடென்ட் கூட பைக்ல வந்ததுக்கு அவர் என்ன பண்ணாருன்னு மறந்துட்டியா நாளைக்கு நீ எவனையாவது லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்லி வந்து நின்னினா அவர் என்ன பண்ணுவாருங்கறதையும் மறந்துறாதே” என்றாள் வைஷ்ணவி.
“நம்ம வாழ்க்கை இதுதான் ஷ்ராவி, பொண்ணுங்களுக்கு சுதந்திரம் கொடுக்கவே கூடாது அப்படின்னு நினைக்கிற ஒரு அப்பாவுக்கு மகளாக பிறந்துட்டு சுதந்திரமா என்னோட வாழ்க்கையை வாழனும் அப்படின்னு ஆசைப்படுறது தான் தப்பு விடு நம்ம தலையில அந்த கடவுள் என்ன எழுதி வச்சிருக்காரோ அது தானே நடக்கும்” என்ற வைஷ்ணவி விரக்தியாக பேசிட அவளை அணைத்துக் கொண்டாள் ஷ்ராவனி .
“என்னடி மூன்று பேரும் கதை பேசிட்டு இருக்கீங்களா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எல்லாம் வந்துட்டாங்க வைசுவ கூட்டிட்டு வா ஷ்ராவி” என்று கூறிய காயத்ரி தேவி, “வளர்மதி நீ என் கூட வா” என்று தன் தங்கையை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.
வளர்மதி மாப்பிள்ளையை பார்த்ததும் அதிர்ந்து போனார். “இவன் தான் மாப்பிள்ளையா? இவன் அந்த மினுக்கி தனிஷா கூட சுத்திட்டு இருந்தவனாச்சே” என்று யோசித்துக் கொண்டே அவனை பார்த்துக் கொண்டிருந்தார் வளர்மதி.
“அக்கா நிஜமாவே இவர்தான் மாப்பிள்ளையா நல்ல விசாரிச்சீங்களா?” என்ற வளர்மதியிடம், “அதெல்லாம் தரகர் மூலமா நல்ல விசாரிச்சு தான் இந்த மாப்பிள்ளையை உங்க அத்தான் பார்த்து இருக்காரு” என்றார் காயத்ரி தேவி .
மாப்பிள்ளை வீட்டினர் முன்னிலையில் வைஷ்ணவியை அழைத்து வந்தாள் ஷ்ராவனி . அவளைக் கண்ட மதுவந்தி, “நான் சொன்னேன்ல வினித் அக்காவை விட தங்கச்சி அழகா இருப்பாள் போல அதனால தான் அவளை ஒளிச்சு வச்சுருக்காங்கனு, அங்க பாரு அக்காவை விட தங்கச்சி தான் அழகு தேவதையா இருக்காள்” என்று கூறிட வினித் ஷ்ராவனியை திரும்பிப் பார்த்தான்.
“அக்கா நான் தான் ஆல்ரெடி சொல்லிட்டேனே வைஷ்ணவியோட தங்கச்சி பாக்தாத் பேரழகியாகவே இருந்தால் கூட எனக்கு அவளை பிடிக்காதுன்னு அதே மாதிரி தான் இந்த பொண்ணு எவ்ளோ அழகா இருந்தாலும் எனக்கு அவளை பிடிக்க வில்லை நீ தேவையில்லாத விஷயங்களை பேசாதே” என்று கூறிவிட்டு மௌனம் ஆகினான்.
“இந்த மூக்கு உடைப்பு உனக்கு தேவையா மது”என்ற மதுசூதனனை முறைத்தவள், “உங்க வேலையை மட்டும் பாருங்க” என்று கணவனை அடக்கினாள்.
நந்தகோபாலன் ,யசோதா தம்பதியினரும், கதிர்வேலன் ,காயத்ரிதேவி தம்பதியினரும் ஒருவருக்கொருவர் நிச்சயதார்த்த தாம்பூலத்தை மாற்றிக் கொண்டனர் .
வினித் வைஷ்ணவி இருவரும் கூட மோதிரம் மாற்றிக் கொண்டனர். வைஷ்ணவிக்கு ஏனோ அவன் கையை பிடித்து மோதிரம் போடுவதற்கு தயக்கமாக இருந்தது. ஆனால் தந்தையின் வற்புறுத்தல் வேறு வழியில்லையே அதனால் அவள் அவன் கைகளில் மோதிரம் அணிவித்து விட்டாள். வினித்தோ அசால்டாக அவளது கையை பிடித்து மோதிரம் போட்டு விட அவளுக்குத்தான் ஒரு மாதிரி எரிச்சலாக உணர்வு தோன்றியது அவன் தன் கையை பிடித்த பொழுது.
“என்ன சித்தி தனியா வந்து இருக்கிறீங்க” என்ற ஷ்ராவனியிடம் “இவன் தான் உன் அக்காவுக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளையாடி” என்றார் வளர்மதி.
“ஆமாம் சித்தி” என்ற ஷ்ராவனியிடம், “உங்கப்பனுக்கு ஊர் உலகத்துல நல்ல பசங்க எல்லாம் கண்ணில் படவே மாட்டாங்களா? தேடித்தேடி என் பொண்ணை ஒரு புதை குழிக்குள் தள்ள பாக்குறாரு” என்றார் வளர்மதி .
“என்ன சித்தி சொல்றீங்க” என்ற ஷ்ராவனியிடம், “என் அப்பார்ட்மெண்ட்ல ஒரு மேனாமினிக்கி நடந்து வர்றத பாத்தியே ஞாபகம் இருக்கா? தனிஷா அவளுக்கும், இவனுக்கும் கனெக்ஷன் இருக்கு தெரியுமா?” என்றார் வளர்மதி.
” என்ன சித்தி சொல்றீங்க” என்ற ஷ்ராவனியிடம், “இரண்டு பேரும் ஒரே ஆபீஸ்ல தான் ஒர்க் பண்றாங்க” என்றார் வளர்மதி.
“ஒரே ஆபீஸ்ல ஒர்க் பண்றதுனால என்ன பிரச்சனை சித்தி “என்றாள் ஷ்ராவனி.
“பிரச்சனை அது இல்லை ஆபீஸ் பார்ட்டி என்று சொல்லி அடிக்கடி உங்க சித்தப்பா மேனேஜரா இருக்குற ஹோட்டல்ல தனி ரூம் எடுத்து ரெண்டு பேரும் ஸ்டே பண்ணிட்டு இருக்காங்க” என்றார் வளர்மதி . அவளை டிராப் பண்ண இவன் அப்பார்ட்மெண்ட் வந்திருக்கான். நானே பார்த்து இருக்கேன். அவள் கூட பழக்கம் வைத்திருக்கிற இவன் மட்டும் என்ன யோக்கியனா இருப்பானோ .அதுவும் ஒரு பொண்ணு கூட தனியா ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து நைட்ஸ்ல ஸ்டே பண்றவன் யோக்கியனா இருப்பானோ . என்ன சும்மா பார்த்துக்கிட்டே இருப்பதற்கு ரூம் புக் பண்ணுவானா” என்றார் வளர்மதி.
” இவனை மாதிரி ஒரு மாப்பிள்ளை தான் உலக உத்தமன்னு உங்க அப்பா பிடிச்சுட்டு வந்து இருக்காரா? முட்டாளா டி அந்த ஆளு” என்றார் வளர்மதி.
” என்ன சித்தி என்ன என்னமோ சொல்றீங்க அப்ப அக்கவோட லைஃப்” என்றாள் ஷ்ராவனி. “சித்தப்பா வரட்டும் உன் அப்பாகிட்ட பேச சொல்லுவோம்” என்ற வளர்மதியிடம், “அப்பா கேட்கணுமே” என்றாள் ஷ்ராவனி .
“ஒரு அயோக்கியனுக்கு தன் பெண்ணை கட்டிக் கொடுக்க எந்த அப்பாவும் சம்மதிக்க மாட்டாங்க , உங்க அப்பாவும் சம்மதிக்க மாட்டாரு நம்ம இவன் தப்பானவன் அப்படிங்கறது ஒரு எவிடன்ஸ் கிரியேட் ரெடி பண்ணி அதோட தான் உங்க அப்பா முன்னாடி நிற்கனும்” என்றார் வளர்மதி.
“எப்படி சித்தி” என்ற ஷ்ராவனியிடம், “உன் சித்தி இருக்கேன் டி என் பொண்ணுங்களோட வாழ்க்கையை படுகுழியில் தள்ளுறதுக்கு நான் அனுமதிக்கவே மாட்டேன் பயப்படாதே” என்று அவளது கன்னம் தட்டினார் வளர்மதி . “சரிங்க சித்தி” என்ற ஷ்ராவனியும் மௌனம் ஆகினாள்.
“என்ன மாப்பிள்ளை ரொம்ப சோகமா இருக்க” என்ற விஷ்ணுவிடம், “நான் எதுக்குடா நாயே சோகமா இருக்க போறேன்” என்றான் தசகிரீவன். “பொய் சொல்லாதடா இப்போ எல்லாம் உன் ஆளு கண்டுக்க மாட்டேங்குதுன்னு நீ கடுப்புல தான் இருக்கே” என்ற விஷ்ணுவிடம், “கண்டுக்கலைன்னா என்ன அவளோட மனசுல நான் தான் இருக்கேன். அது எனக்கு தெரிஞ்சு போச்சு அவள் வீட்ல அவங்க நைனா பண்ற இம்சைனால அவள் என்னை கண்டுக்காதது மாதிரி இருக்காள். எங்கே என்கூட பேசினால் பழகினால் என்னை லவ் பண்ணிருவாளோனு ரொம்ப பயப்படுறாள். அது மட்டும் எனக்கு நல்லா தெரியுது” என்றான் தசகரிவன்.
“அது எப்படிடா அந்த புள்ளைகிட்ட நீயும் காதலை சொல்லல அந்தப் பிள்ளையும் காதலை சொல்ல வில்லை” என்ற விஷ்ணுவிடம், “நான் என் காதலை சொல்ல வில்லை என்று உனக்கு தெரியுமா நாயே அதான் லவ் லெட்டர் கொடுத்திருக்கிறேனே நாயே” என்றான் தஷகிரிவன்.
“லெட்டர் கொடுத்தால் போதுமா அந்த பிள்ளை அதுக்கு என்ன பதில் சொல்லுச்சு” என்றான் விஷ்ணு. “பதில்ங்கிறது வார்த்தையால சொல்றது கிடையாது செய்கையால செய்றது என்னை பிடிக்காமல் தான் என் கூட பைக்ல வந்தாளா அதே இடத்துல நீ கொண்டாந்து பைக்க நிப்பாட்டி இருந்தாலும் அவள் அந்த பைக்ல உட்கார்ந்து இருக்க மாட்டாள். அவளை அழைச்சிட்டு போக வந்தது நான்கிறதால மட்டும் தான் அவன் என் பைக்ல உட்கார்ந்தாள் . அதனால சொல்றேன் அவள் கண்டிப்பா என்னை லவ் பண்ணுறாள் ஆனால் மறைக்கிறாள் அவ்வளவுதான்” என்ற தஷகிரிவன்,சரி “சரி பசிக்குது போய் சாப்பிட்டு சாப்பிடலாமா” என்றான்.
” அத்தை இன்னைக்கு பிரியாணி செஞ்சிருக்காங்க” என்றான் விஷ்ணு.
“பாப்பு எங்கே “என்ற தசகிரிவனிடம், “உன் பாப்பு தானே அவள் சின்ன அண்ணனைக் கூட்டிட்டு ஷாப்பிங் போய் இருக்கிறாள் “என்றான் விஷ்ணு.
“ஏண்டா உன் பொண்டாட்டிய ஷாப்பிங் நீ கூட்டிட்டு போகாம எதுக்குடா என் தம்பி கூட அனுப்பி வச்சே” என்ற தசகிரிவனிடம், “அண்ணனுங்க கூட தான் ஷாப்பிங் போகணும்னு அடம் பிடிக்கிற ஒரு குழந்தையை என் தலையில் கட்டி வச்சிட்டு பேச்சுடா பேசுற” என்ற விஷ்ணுவிடம், “எல்லாம் தாங்கள் செய்த லீலை மன்னா. அதனால்தான் உங்களுக்கு இத்தனை சீக்கிரம் திருமணம் நடந்தது அதை மறந்து விட வேண்டாம்” என்று தசகிரிவன் கூறிட வெக்கத்தில் சிரித்து விட்டான் விஷ்ணு.
….. தொடரும்….