அம்பு..!! – ௰(10)
“இவ என்ன சக்கு சொல்றா?”
சகுந்தலாவை கூர்ந்து பார்த்தபடி மார்க்கண்டேயன் கேட்க அவரோ திருதிருவென விழித்தபடி “அ..அ..அது..அது ஒன்னும் இல்லைங்க.. மதிய நேரத்துல தூங்கினா உடம்பு வெயிட் போடுதா? அதான்.. நேரத்தை கொஞ்சம் உருப்படியா கழிக்கலாமேன்னு இந்த மாதிரி ஏதாவது படிச்சுக்கிட்டு.. என்னோட படிச்ச லாயர் ஃப்ரெண்ட்ஸோட பேசிக்கிட்டு இருந்தேன்.. அது.. சும்மா.. பொழுது போகணும் இல்ல..?” என்று தயங்கி தயங்கி சமாளித்தவர் “அதுக்காக தாங்க” என்று முடிக்கும் போது வெறும் காற்று தான் வந்தது அவர் வாயிலிருந்து..
விழியோ சகுந்தலாவை பார்த்து இடவலமாய் தலையாட்டி பெருமூச்சொன்றை விட்டு “இவங்கள திருத்த முடியாது” என்று சொல்லிக்கொண்டாள்..
“அப்பா.. அம்மா வெளியில வேலைக்கு போகலல்ல.. நீங்க சொல்றதை கேட்டு வீட்ல தானே இருந்தாங்க..? பொழுது போகலன்னு அவங்களுக்கு பிடிச்சது எதையோ படிச்சிருக்காங்க.. கொஞ்சம் லாயர்ஸோட பேசி இருக்காங்க.. ஆனா இந்த வீட்டையும் குடும்பத்தையும் பார்த்துக்கறதுல அவங்க எந்த குறையும் வெக்கலையேப்பா..”
ப்ருத்வி பேசியதில் மார்க்கண்டேயனும் “ம்ம்ம்..” என்று மேலும் கீழுமாய் தலையாட்ட ப்ருத்வி சகுந்தலாவிடம் “அப்போ உங்களுக்கு இதை பத்தி தெரியும் தானே? நீங்களே சொல்லுங்கம்மா.. ஒருவேளை கோர்ட்டுக்கு போனா சக்தி நம்ம கைக்கு கிடைக்கிறதுக்கு ஏதாவது வாய்ப்பு இருக்கா..?” என்று கேட்டான்..
சகுந்தலாவோ தயங்கியபடி மெதுவாக இடவலமாக தலையாட்ட மார்க்கண்டேயன் முகமோ சுருங்கி போனது..
“அப்பா.. கொஞ்சம் வரிங்களா? உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்..”
அவரும் தன் மகன்களோடு அறைக்குள் சென்றார்..
உள்ளே சென்றதும் “இங்க பாருங்கப்பா.. ஒருவேளை விழி நம்ம சக்தியை கூட்டிட்டு போயிட்டானா அவளை மாதிரியே முரட்டு பீஸா தான் வளர்ப்பா.. சக்தி வளர்ந்தப்புறம் எது பண்ணாலும் அவளை விழியோட பொண்ணுன்னு சொல்ல மாட்டாங்க.. மார்க்கண்டேயன் பேத்தி திமிரு பிடிச்சவன்னு சொல்லி உங்க பேரை தான் காலி பண்ணுவாங்க.. இப்ப நீங்க முடிவு பண்ணுங்க.. சக்தி இந்த வீட்ல நம்ம எல்லாரோட கண்காணிப்பில வளரணுமா.. இல்ல விழியோட போய் தனியா அவளை மாதிரியே வளரணுமா?”
அவன் கேட்ட கேள்வியில் மார்க்கண்டேயன் கையை பின்னால் கட்டி ஒரு சிறு நடை நடந்து யோசித்துக் கொண்டிருக்க அவர் யோசிக்க ஆரம்பித்த உடனேயே இந்தரிடம் ப்ருத்வி
“டேய் அப்படியே கண்டினியூ பண்ணுடா.. அவரை ரொம்ப யோசிக்க விடாதே.. இப்படியே அவரை மடக்கிடணும்..” என்று காதை கடிக்க
“அப்பா.. ப்ருத்வி சொல்ற மாதிரி சக்தி நம்மளோடயே இருக்கட்டும்பா.. இங்க இருந்தா என் மகளுக்கு எல்லா உறவுகளும் கிடைக்கும் பா..” என்றான்..
“சரி.. சக்தி இங்கேயே இருக்கட்டும்.. அந்த அடங்காப்பிடாரி கூட போய் அவளும் இன்னொரு அடங்காப்பிடாரியா வளர வேண்டாம்.. ஆனா முன்னாடி மாதிரி என்னை எகிறி எகிறி பேசிட்டு எதுக்கு எடுத்தாலும் செய்ய மாட்டேன் பண்ண மாட்டேன் என் இஷ்டத்துக்கு தான் பண்ணுவேன்னு தான்தோன்றி தனமா திரியாம வீட்டுக்கு அடங்கி ஒழுங்கா புள்ளையையும் புருஷனையும் பார்த்துக்கிட்டு இருக்கிறதா இருந்தா இருக்கட்டும் இல்லனா..”
ஒரு வழியாக அவர் விழியும் சக்தியும் அந்த வீட்டிலேயே இருக்கட்டும் என்று சொன்னதே பிருத்வி இந்தர் இருவருக்கும் மகிழ்ச்சி தான் என்றாலும் இன்னும் பாதி கிணறு தானே கடந்திருக்கிறார்கள்.. மிச்சத்தை கடக்க வேண்டுமே.. நிபந்தனைகளை பற்றி எப்படி பேசுவது என்று விழித்தான் இந்தர்..
பிருத்வி மார்க்கண்டேயனிடம் “அப்பா விழி திரும்ப இந்த வீட்டுக்கு பழையபடி வாழறதுக்கு வந்திருக்கான்னு நினைக்கிறீங்களா? இல்லப்பா.. அவ இந்த வீட்ல இருக்கறதுக்கு சில கண்டிஷன் எல்லாம் போட்டு இருக்கா.. அதை ஃபாலோ பண்ணா தான் அவ இந்த வீட்ல இருப்பேன்னு சொல்லி இருக்கா.. உங்களுக்கு உங்க பேத்தி உங்களோட இருக்கணும்னா நீங்களும் அந்த கண்டிஷனுக்கு எல்லாம் ஒத்துக்கணும்..” தயங்கி தயங்கி ஒருவழியாக சொல்லி முடித்திருந்தான்..
“என்னது.. கண்டிஷனா..? யாரு யாருக்குடா கண்டிஷன் போடறது? எவடா அவ? எனக்கே கண்டிஷன் போடுறவ.. ஒன்னும் தேவை இல்ல.. முதல்ல அவளை இந்த வீட்டை விட்டு தொரத்து.. கண்டிஷனாம் கண்டிஷன்.. பெரிய அல்லிராணி.. கண்டிஷன் போட வந்துட்டா..”
இந்தரோ “என்னடா இது? மறுபடியும் மொதல்லேர்ந்தா?” என்க “ஏன்டா நீ வேற.. கடுப்பை கிளப்பிக்கிட்டு.. அவசரப்படாத.. கொஞ்சம் கொஞ்சமா தான் கல்லை
நகர்த்தணும்..” அவனை ஆசுவாசப்படுத்தியவன் மார்க்கண்டேயன் பக்கம் திரும்பினான்..
“அப்பா.. கண்டிஷன் போட்டு இருக்கா.. ஆனா ஆறு மாசத்துக்கு தான் பா.. ஆறு மாசம் இந்த கண்டிஷனை கரெக்ட்டா ஃபாலோ பண்ணிட்டோம்னா அதுக்கப்புறம் அவ இந்தரோட எந்த கண்டிஷனும் இல்லாம வாழறேன்னு சொல்லி இருக்கா.. அப்போ அந்த ஆறு மாசத்துக்கு அப்புறம் நம்ம இஷ்டப்படி அவளை ஆட்டி வைக்கலாம்.. சோ இந்த ஆறு மாசம் அட்ஜஸ்ட் பண்ணீங்கன்னா அதுக்கப்புறம் உங்களுக்கு ஒரு அடக்கமான மருமக கிடைப்பா.. உங்க பேத்தியும் உங்களை விட்டு போக மாட்டா.. கொஞ்சம் யோசிங்கப்பா..”
மறுபடியும் யோசித்தார் மார்க்கண்டேயன்..
“ம்ம்.. முதல்ல என்ன கண்டிஷன்னு சொல்லு.. அந்த மகராணியோட கண்டிஷனை பொறுத்துதான் என் முடிவு இருக்கும்..”
இந்தரோ மறுபடியும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க “எப்பா.. முடியலடா ப்ருத்வி.. இவரை முழுசா ஒத்துக்க வெக்கறதுக்குள்ள எனக்கு வயசாயிடும் போல இருக்கு..” என்றான்..
“டேய்.. பேசறது எல்லாம் நானு.. நீ வேடிக்கை மட்டும் தான் பாத்துகிட்டு இருக்கே.. ஆனா ஏதோ நீதான் வெட்டி முறிக்கற மாதிரி பெருமூச்செல்லாம் விடுற.. நான் பார்த்துக்கறேன் விடுடா..” என்றவன் மார்க்கண்டேயனிடம்
“இந்த ஆறு மாசத்துக்கு வீட்ல இத்தனை நாளா அவங்க செஞ்சுகிட்டு இருந்த அத்தனை வேலையும் நம்ம செய்யணும்..”
“என்னது நாம செய்யணுமா? நாமன்னா..”
“நம்பனா நீங்க நானு இந்தர்.. நம்ம மூணு பேரும்..”
“டேய்..” என்று கர்ஜித்தவர் “என்னை பாத்தா எப்படி தெரியுது உங்க ரெண்டு பேருக்கும்.. இதெல்லாம் ஒரு கண்டிஷன்.. இதை தூக்கிட்டு வந்துட்டீங்க என்கிட்ட சொல்றதுக்கு.. வெக்கமா இல்லை உங்களுக்கு? நீங்க என் புள்ளைங்க தானாடா? பொண்டாட்டி கால் மேல கால் போட்டு உட்கார்ந்திருப்பாளாம்.. அவளை உட்கார வெச்சு அவளுக்கு சேவகம் பண்றதுக்கா உங்களுக்கு கல்யாணம் பண்ணி வெச்சேன்.. அதுக்கு நீங்க கல்யாணமே பண்ணாம இருந்திருக்கலாமே..”
“ப்ளீஸ்ப்பா.. ஒரு ஆறு மாசம் தானேப்பா..? அம்மாவை விட்டுட்டு முன்னாடி ஒரு பிசினஸ் ட்ரிப்புக்கு போனோம்.. ஞாபகம் இருக்கா..? அந்த இடத்தில வெளி சாப்பாடு ஒழுங்கா கிடைக்கல.. நம்ம ரூம்லயே நம்ம குக் பண்ணிக்கிட்டோம்… அந்த மாதிரி நினைச்சுக்கோங்க பா.. ஒரு ஆறு மாசம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க பா.. அது மட்டும் இல்லாம நீங்க தனியா செய்ய போறது இல்லையே.. நாங்க ரெண்டு பேரும் கூட செய்யப் போறோம் இல்ல.. அப்புறம் என்னப்பா..?”
“ஹான்.. அது சரி.. நாம வேலை எல்லாம் பாப்போம்.. மகராணிங்க எல்லாம் என்ன பண்ண போறாங்க..?”
“அவங்க இத்தனை நாள் நம்ம என்ன பண்ணிட்டு இருந்தோமோ அதை எல்லாம் பண்ணுவாங்களாம் பா..”
“எது..? நம்ம பண்ணிட்டு இருந்ததை.. ப்ச்.. நம்ம கம்பெனிக்கு போயிட்டு இருந்தோம்.. அவங்க கம்பெனிக்கு போவாங்களா..?”
“ஆமாம்பா.. வீட்ல எல்லா முடிவுகளையும் அவங்க எடுப்பாங்க.. கம்பெனிலயும் எல்லா முடிவுகளையும் அவங்க தான் எடுப்பாங்க.. நம்ம வீட்ல எல்லாத்தையும் அவங்க சொல்றபடி பாத்துக்கணும்..”
சொல்லிவிட்டு சட்டென தலையை குனிந்து கொண்டான் இந்தர்.. அவரோ இந்தரையும் பிருத்வியையும் எரித்து விடுவது போல் முறைத்தார்..
“உங்க ரெண்டு பேருக்கும் மூளை மங்கி போச்சு டா.. புத்தி பேதலிச்சு போச்சு.. அதான் இப்படி எல்லாம் வாய்க்கு வந்ததெல்லாம் பேசிகிட்டு இருக்கீங்க.. அந்த ராங்கிகாரி தான் சொன்னானா உங்களுக்கு எங்கடா போச்சு அறிவு? இதெல்லாம் நடக்கவே நடக்காது.. என்னால இதெல்லாம் பண்ண முடியாது.. இந்த வீட்ல நான்தான் குடும்ப தலைவன்.. நான்தான் முடிவு எடுப்பேன்.. அந்த பொறுப்பை நான் வேற யார்கிட்டயும் கொடுக்க மாட்டேன்.. அதும் பொம்பளைங்க கிட்ட.. விளங்கிடும்..”
“அப்பா ஏன்பா அப்டி சொல்றீங்க? நம்மளுக்கு மட்டும் முதல் நாளே பிசினஸ் செட் ஆயிருச்சா..? எவ்வளவு லாஸை பார்த்துருக்கோம்.. எல்லாருமே புதுசா தான கத்துக்குறோம்.. அவங்களும் கொஞ்சம் கொஞ்சமா கத்துப்பாங்க பா.. அதுவும் ஒரு ஆறு மாசம் தானேப்பா…? அப்புறம் பழையபடி நம்ம கம்பெனில போய் நம்ம வேலை பார்க்க போறோம்..”
சிறிது நேர மௌனத்திற்கு பின்
“சரி.. ஆறு மாசம் தான்.. இன்னைக்கு தேதியிலிருந்து ஆறாவது மாசம்.. வரைக்கும் இதுக்கு ஒத்துக்கிறேன்… அது கூட எந்த காலத்துக்கும் என் பேத்தியை அவகிட்ட விட்டுக் கொடுக்க கூடாதுங்கறதுக்காகவும்.. இந்த ஆறு மாசம் கழிச்சு அவளை பழைய படி இந்த வீட்ல அடக்கி வைக்கணுங்கறதுக்காகவும் மட்டும் இந்த கண்டிஷனுக்கு நான் ஒத்துக்குறேன்.. இந்த ஆட்டம் ஆடுறவளோட வாலை ஒட்ட நறுக்கணும்”
விழிகளில் கோபம் தெறிக்க சொல்லிக் கொண்டிருந்தார் மார்க்கண்டேயன்..
“ம்க்கும்.. பார்க்கலாம் யார் வாலை யாரு நறுக்க போறாங்கன்னு..” ப்ருத்வி உள்ளுக்குள் சொல்லிக்கொண்டான்..
“ரொம்ப தேங்க்ஸ் பா..”
இந்தர் சொல்ல
“அப்ப சரி போய் அவகிட்ட சொல்லு..”
சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு திரும்பிச் செல்லப் போனவரை மறுபடியும் அழைத்தான் இந்தர்..
“அப்பா.. இன்னும் ரெண்டு கண்டிஷன் இருக்குப்பா..”
“இன்னும் ரெண்டு கண்டிஷனா? இதுக்கு மேல என்ன தான்டா வேணும் அவளுக்கு?” என்று கேட்க
“ஐயோ இப்பவே எனக்கு நாக்கு தள்ளுதே.. இவருக்கு எப்படி சொல்லி புரியவைக்க..?” இப்போது ப்ருத்விக்கும் கொஞ்சம் அழுத்தமாய் தான் இருந்தது..
எச்சில் விழுங்கியவன் “அப்பா ஆர்ச்சரி அகடமியை வில்விழி பேர்ல முழுசா மாத்தி கொடுக்கணும்னு கேட்டிருக்கா..”
“என்ன..? ரெண்டு பேரும் விளையாடுறீங்களா? இதெல்லாம் வேலைக்காகாது.. நானே போய் அவளை வீட்டை விட்டு வெளியே தள்ளிட்டு வரேன்..” என்று திரும்பியவரை
“அப்பா.. ப்ளீஸ் பா கொஞ்சமாவது கன்சிடர் பண்ணுங்க.. இது என் வாழ்க்கை பா.. எப்படி இருந்தாலும் அந்த ஆர்ச்சரி அகடமி நம்ம கைல நிக்காதுப்பா.. ஒருவேளை விழி என்னை விட்டு போயிட்டா என்னால எதுலயுமே ஃபோக்கஸ் பண்ண முடியாது.. அகடமியை கவனிக்க ஆள் இல்லாம மறுபடியும் மொத்தமா கைவிட்டுப் போய்டும்.. அதுக்கு விழி பேரில இருந்தா..”
அவன் சொன்னதைக் கேட்டவர் அவனை ஆழ்ந்து பார்த்து “என்னடா.. மொத்தமா எல்லாத்தையும் அவளுக்கு எழுதி கொடுத்துடலாம்னு முடிவு பண்ணிட்டியா? ஏன் அகடமியை மட்டும் தர்ற? நம்ப கம்பெனி வீடு எல்லாத்தையும் எழுதி கொடுத்துடேன்.. ஏதாவது அறிவோட தான் பேசுறியா நீ? இங்க பாரு.. நீ சொன்ன முதல் கண்டிஷனுக்கு நான் ஒத்துக்கிட்டதுக்கு காரணம் ஆறு மாசம் மட்டும் தான் அந்த கண்டிஷனை ஃபாலோ பண்ணனுங்கறதால தான்.. ஆனா இது அப்படி இல்ல.. ஒரு வாட்டி எழுதி கொடுத்துட்டா எழுதி கொடுத்தது தான்.. திரும்ப வாங்க முடியாது.. அவ மறுபடியும் வீட்டை விட்டு ஓடி போய்ட்டானா அகடமியும் அவளோட சேர்ந்து போய்டும்.. அவ திமிருக்கு என்னால தீனி போட்டுக்கிட்டே இருக்க முடியாது..”
உறுதியான குரலில் அதிரடியாய் சொன்னார் மார்க்கண்டேயன்..
இந்தரின் முகம் தொங்கி போக அதை பார்த்த மார்க்கண்டேனோ “இவன் வேற.. அப்பப்போ தலைய கவுத்துகிட்டு.. ஏன்டா இப்படி பொண்டாட்டி தாசனா ஆயிட்ட.. சரி.. உனக்காக இப்படி வேணா பண்ணலாம்.. உன் பேர்ல 50% அவ பேருல 50% எழுதி வைக்கிறேன்.. இத்தனை வருஷமா உழைச்சு அந்த அகடமியை முன்னுக்கு கொண்டு வந்து இருக்கடா.. உன் உழைப்புக்கு மதிப்பே இல்லையா? முழுசா அவ பேருல எழுதி வைக்கணும்கற? நான் சொல்றது புரியுதா? இதுக்கு ஓகேன்னா சரி.. இல்ல அவ கேட்டதை குடுக்கலன்னு அவ உன்னோட வாழமாட்டேன்னா வாழ வேண்டாம்.. அவ சக்தியை எடுத்துட்டு போறதுனாலும் போகட்டும்.. ஆனா என்னால அகடமியை முழுசா அவகிட்ட தூக்கி கொடுக்க முடியாது..”
அவர் சொல்வதிலும் நியாயம் இருப்பதாகவே பட்டது ப்ருத்விக்கு..
இந்தரிடம் திரும்பியவன் “இந்திரா.. நம்ம இதை பத்தி விழி கிட்ட பேசி கன்வின்ஸ் பண்ண பார்க்கலாம்.. அப்பா சொல்ற மாதிரி இது உன் உழைப்புடா.. அப்படியே முழுசா கொடுக்க முடியாது..”
“பேசலாம்டா..” என்றவன் குரலை தாழ்த்தி “ஆனா அவ அப்பாக்கு மேல ஆடுவாடா.. முடியலடா.. பேசி பேசி ரொம்ப டயர்டாவுது..” என்றான்..
“ம்க்கும்.. அடுத்த கண்டிஷனுக்கு என்ன சொல்ல போறாரோ..? சரி விடு.. இவ்வளவு பண்ணிட்டோம்.. அதை பண்ண மாட்டோமா?”
“என்னடா பொம்பளைங்க மாதிரி குசுகுசுன்னு பேசிட்டு இருக்கீங்க? என் முடிவை நான் சொல்லிட்டேன்.. உங்க கண்டிஷன் எல்லாம் அவ்வளவு தானா? இன்னும் இருக்கா..?”
“இன்னும் ஒன்னே ஒன்னு பா” தயக்கத்தோடு சொன்னான் இந்தர்..
“அதான் ஏற்கனவே இடியை இறக்கிட்டீங்களே.. கடைசியா இன்னொரு இடி தான? இறக்கு.. இப்பதான் என் ஹார்ட் எவ்வளவு ஸ்ட்ராங்னு எனக்கு தெரியுது.. பெரிய பெரிய இடி எல்லாம் தாங்குது.. இதுக்கு மேல ஒன்னும் நீ பெருசா கேட்டுற போறதில்ல.. சொல்லித்தொலை..”
“அது.. ஊர்மிளா..”
“ஊர்மிளாவா? அவளுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்? அவளை பத்தி பேசறதுக்கு இவ யாரு? அவ என் பொண்ணு.. அவ விஷயத்துல நான் எதையுமே மாத்திக்க முடியாது..”
“என்னடா ப்ருத்வி?”
இந்தர் சிணுங்க “இவன் ஒருத்தன்.. பார்க்க தான் அப்படியே சிங்கம் மாதிரி இருப்பான்.. மத்தவங்க முன்னாடி அப்படியே விரைப்பா திரியவேண்டியது.. அப்பாவை பார்த்தா என்னடா ஆகுது உனக்கு..? அப்படியே பம்முற?”
“டேய்.. நான் கேக்கறது எல்லாம் கொஞ்சம் ஓவர்னு எனக்கே கொஞ்சம் மனசாட்சி உறுத்துதுடா.. அதனாலதான் வாயே வரமாட்டேங்குதுடா..”
“ம்க்கும்.. வெளங்கிரும்.. மனசாட்சி பத்தி பேசற மூஞ்சை பாரு… அப்பா கிட்ட இதெல்லாம் கேக்குறதுக்கு இவ்ளோ மனசாட்சியோட யோசிக்கிறவன் அன்னிக்கு பொண்டாட்டியை அவர் அவ்வளவு கேவலமா பேசினப்பல்லாம் வாயை திறக்காம இருந்தியேடா.. அப்ப மட்டும் உனக்கு மனசாட்சி உறுத்தல.. அவ மேல தப்பே இல்லன்னு உனக்கு தெரியும் தானே?”
“நீ வேற ஏன்டா வெந்த புண்ணுல வேலை பாய்ச்சுற? ஏற்கனவே அவ நிறைய பேசிட்டா.. அண்ணியும் மச்சினனும் ஒண்ணா சேர்ந்து என்னை வெச்சு செய்யறீங்க..”
“உன்னை வெச்சு அப்பா ஆடுன ஆட்டம் அப்படி.. சரி இரு.. நான் பேசி பார்க்கிறேன்..”
“அப்பா ஊர்மி வந்தா நீங்க அவளுக்கு கல்யாணம் பண்ணி வெக்கறேன்னு சொன்னீங்க இல்ல..?”
“ஆமா.. அதுக்கு என்ன இப்போ? அவ போற புகுந்த வீட்லயும் அந்த மாப்பிள்ளை தான் சமைக்கணும்னு சொல்றாளா..?”
அவர் கேட்கவும் பக்கென சிரித்து விட்டார்கள் இந்தரும் பிருத்வியும்..
“இல்லப்பா.. அவளுக்கு இப்ப கல்யாணம் பண்ணி வைக்க கூடாதாம்.. அவ விருப்பத்தோட தான் கல்யாணம் பண்ணி வைக்கணுமாம்.. இங்க வந்தவுடனே அவ வேலைக்கு போக ஆசைப்பட்டா அவ வேலை பாக்கட்டும்னு..”
“இல்ல.. இது சரிபட்டு வராது.. நான் என் ரூமுக்கு போறேன்.. இன்னும் 10 நிமிஷம் தான் டைம்.. அந்த திமிர் பிடிச்சவளை வெளியில துரத்திட்டு அப்புறம் என்னை கூப்பிடுங்க..” என்று வெளியே போகப் போனவரை ஓடிப் போய் இரு பக்கமும் கைப்பிடித்து தடுத்தார்கள் இந்தரும் ப்ருத்வியும்..
“அப்பா.. இப்படி முழுசா கேட்காம ஏம்ப்பா புசுக்கு புசுக்குன்னு கோவப்படுறீங்க.. இப்ப என்ன அவ அடுத்த மாசம் ஊர்மி வந்த உடனே கல்யாணம் பண்ண கூடாதுன்னு தானே சொன்னா? எப்படியும் ஆறு மாசத்தோட இந்த கண்டிஷனுக்கு எல்லாம் டைம் முடிஞ்சுடும்.. அதுக்கப்புறம் ஊர்மிளாவை கன்வின்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணி வச்சுரலாம்.. ஆறு மாசம் கல்யாணத்தை தள்ளி போடறதனால என்னப்பா ஆயிடப்போகுது…?”
“டேய்.. அவ என் பொண்ணுடா.. அவளுக்கு எப்ப கல்யாணம் பண்ணனும்னு நான் தான் முடிவு பண்ணனும்..”
“சரியா போச்சு போ.. அவ இதைத்தான் கூடாதுங்கறா.. இவரு நம்ம வழிக்கு வரமாட்டாரு..”
“இங்க பாரு.. ஐடியா தான் கொடுக்க முடியும்.. நான் ரொம்ப கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணிட்டேன்.. நீயும் கொஞ்சம் பேசுடா..” என்றான் பிருத்வி..
“அப்பா.. ஆறு மாசம் கழிச்சு நீங்க எப்படி நினைக்கிறீங்களோ அப்படியே ஊர்மிக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு.. தயவு செஞ்சு இந்த ஆறு மாசம் எனக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கப்பா… ப்ளீஸ் பா எனக்கு என் வில்லியும் சக்தியும் வேணும்பா..”
விட்டால் அழுது விடுபவன் போல் கெஞ்சிக் கொண்டிருக்கும் பிள்ளையிடம் அதற்கு மேல் இறுக்கத்தை காட்ட முடியவில்லை மார்க்கண்டேயனால்..
“வில்லியா? ம்ம்..கரெக்டான பேர் தான் அவளுக்கு.. சரி.. ஆறு மாசம் முடிஞ்சு அடுத்த நாள் ஊர்மிக்கு நான் பார்த்திருக்கற மாப்பிள்ளையோட நிச்சயதார்த்தம்.. சரியா?”
“ஓகே பா.. ஆனா இந்த விஷயம் வீட்ல யாருக்கும் தெரிய வேண்டாம்.. ஆறு மாசம் முடிஞ்சப்புறம் சொல்லிக்கலாம்பா..”
“சரி.. ஆனா இந்த கண்டிஷனுக்கு எல்லாம் நான் ஓகே சொன்னதை நீங்களே போய் சொல்லிடுங்க.. எனக்கு அந்த வில்லி முகத்தை பார்க்க கூட பிடிக்கல..” விரைப்பாய் சொல்லிவிட்டு எதிர்புறமாய் திரும்பி நின்று கொண்டார் மார்க்கண்டேயன்..
“அதெல்லாம் நாங்க பாத்துக்கிறோம்ப்பா… ரொம்ப தேங்க்ஸ் பா..” என்றவன் ஒரு நிம்மதி பெருமூச்சோடு தம்பியோடு வெளியே சென்றான்..
அம்பு பாயும்..
Post Views: 676