அம்பு – ௭ (7)
இந்த்ர தனுஷ் – ஒரு காலத்தில் பெயர் பெற்ற வில்லாளன்.. வில் வித்தையில் கர்ணன் அர்ஜுனனுக்கு அடுத்ததாக இவன் பெயரை சொல்லும் அளவிற்கு அதில் சிறந்து விளங்கியவன்.. வில்வித்தைக்கான போட்டி எங்கு நடந்தாலும் அங்கு அவன் பெயர் முதல் மூன்று இடங்களில் எதிரொலிக்காமல் இருந்ததே இல்லை..
அப்படிப்பட்டவன் மூன்று வருடங்களாய் ஒரே அறையில் உலகமே கவிழ்ந்து போனதாய் உயிர் இல்லாது முடங்கி இருந்தான்.. தன்னவளின் நினைவுகளோடு தனிமையில் ஆதங்கத்தோடும் ஏக்கத்தோடும் வேதனையோடும் கழித்துக் கொண்டிருந்தான் அவன்..
வில் வித்தை பயிற்சிக்காக அவன் ஏற்படுத்திய பயிற்சி கூடம் தான் இந்த்ர தனுஷ் ஆர்ச்சரி அகடமி.. மூன்று வருடங்களுக்கு முன்னால் அந்த அகடமியில் பயிற்சிக்கு இடம் கிடைக்காது ஏமாந்து திரும்பி போனவர்கள் எத்தனையோ பேர்..
ஆனால் மூன்று வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக அதன் பெயரை இழந்து பொலிவை இழந்து இன்று விரலால் எண்ணி விடக்கூடிய எண்ணிக்கையில் மட்டுமே விளையாட்டு வீரர்கள் அங்கே பயிற்சிக்கு வந்து கொண்டு இருந்தார்கள்.. ஒன்று இரண்டு பயிற்சியாளர்கள் மட்டுமே இருக்க அவர்களும் அங்கு வேலை செய்யும் ஆர்வமே இல்லாமல் விலகிப் போக நினைத்திருந்தார்கள்..
இந்த சமயத்தில்தான் சம்யுக்தா அகடமியோடு பார்ட்னர்ஷிப் டீலிங் பேச போயிருந்தவன் கண் முன்னால் இப்போது வில்விழியாக மாறி இருந்த மலர்விழி தோன்றியிருந்தாள்..
காரில் வரும்போது அதை ஓட்டிக்கொண்டு வந்தவன் நடுநடுவே வில்விழியின் மடியில் “அவ்வா.. ட்ர்ர்.. பப்பே..” என்று புரியாத மழலை சிதறல்களை உளறல்களாய் உதிர்த்தபடி அவள் முகத்தில் கை வைத்து விளையாடி கொண்டு அவள் விழியோடு விழி உருட்டி பேசிக்கொண்டு இருந்த சக்தியை சுவாரஸ்யமாய் அதே சமயம் ஏதோ ஒருவித ஏக்கப் பார்வை வீசி பார்த்துக் கொண்டு வந்தவன் நடு வழியில் திடீரென வண்டியை நிறுத்தினான்..
இந்தரிடம் வில்விழி என்னவென்று கேட்க அவனோ அவளிடம்
“ஏ வில்லி.. எனக்காக ஒரே ஒரு வேலை மட்டும் பண்றியா?” என்று கேட்க
“கண்டிஷன் எதையும் என்னால மாத்த முடியாது.. அது தவிர வேற எதை வேணா கேளு பண்றேன்..”
“அதுதான் அந்த கண்டிஷன் எல்லாம் பண்றேன்னு ஒத்துக்கிட்டேனேடி.. அதை பத்தி மறுபடியும் பேசமாட்டேன்.. இது வேற.. கொஞ்சம் வீட்டு வரைக்கும் எனக்கு பதிலா நீ கார் டிரைவ் பண்றியா? ப்ளீஸ்..” சக்தியை விழிகள் கலங்க பார்த்தபடி அவளிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டிருந்தவன் அவன்..
அவன் முதல் முறையாய் அவளிடம் கெஞ்சுகிறான்.. அதுவும் அவன் குழந்தையோடு நேரம் செலவிட.. அவன் நினைத்திருந்தால் என் உதிரத்தில் உதித்த குழந்தை இவள்.. இவளோடு விளையாடுவதற்கு உன்னிடம் நான் எதற்கு அனுமதி கேட்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம்..
மூன்று வருடங்களுக்கு முன் அவள் பார்த்த இந்தரின் இயல்பு அதுதானே..
எதையுமே அனுமதி கேட்காமல் ஆளுமையோடு ஆண்டு தானே அவனுக்கு பழக்கம்.. வில்விழியை பொறுத்தவரை அவளிடத்தில் தனக்கு இல்லாத உரிமை வேறு யாருக்கும் இல்லை என்று எண்ணியிருந்தவன் அவன்..
இன்று அவள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டு அவன் குழந்தையின் கூட நேரம் செலவிட அவளிடம் வண்டி ஓட்ட சொல்லி மன்றாடி கொண்டிருக்கிறான்..
வில்விழிக்கு முதல் முறையாக இந்த ஆறு மாத சவாலில் அவன் ஜெயித்து விடுவானோ என்று ஒரு சிறு நம்பிக்கை தோன்றியது.. அந்த நம்பிக்கை அவள் இதழில் ஒரு புன்முறுவலையும் கொண்டு வந்திருந்தது..
“சரி சரி ரொம்ப கெஞ்சுற.. பாக்க பாவமா இருக்கு.. ஓட்டுறேன் ஓட்டுறேன்..” என்றவள்
குழந்தையை எடுத்துக் கொண்டு தன் பக்க கதவை திறந்து இறங்கி வந்து அவனிடம் குழந்தையை கொடுத்தது தான் தாமதம்.. அதன் பிறகு அவள் பக்கம் விழியை கூட நகர்த்தவில்லை அவன்..
இதை கவனித்தவளோ உதட்டை சுழித்த படி “ரொம்ம்ம்ம்பத் தான்..” என்று முணுமுணுத்துக் கொண்டே ஓட்டுனர் இருக்கையில் ஏறிக்கொண்டாள்..
காரில் ஏறிய பிறகும் புலம்பலை நிறுத்தவில்லை அவள்.. பெற்ற மகள் மீதே பொறாமை தலைவிரித்தாடியது அவளுக்குள்.. உண்மையில் அவள் தான் இந்தர் அவளுக்காக ஏங்கியதை விட அவன் அன்புக்காக இந்த மூன்று வருடங்களாக ஏங்கிப் போயிருந்தாள்.. வெளியில் சிங்க பெண்ணாக அவள் எவ்வளவு தான் சாதித்திருந்தாலும் அவள் இரவுகளில் அவள் தலையணை கண்ணீரில் நனையாத நாட்களே இல்லை எனலாம்..
அவனுடைய தீண்டலுக்காகவும் அணைப்புக்காகவும் இதழ் அணைப்புக்காகவும் ஏங்கி ஏங்கி உள்ளுக்குள உருகி போய் இருந்தாள் பெண்ணவள்.. அவளின் விரக தாபம் அவளை உறங்க விடவில்லை.. பல நாட்கள் பசலை நோய் கண்டவளைப் போல தலைவனின் அருகாமைக்காய் உடல் வாடி மனம் வாடி துடித்துப் போயிருந்தாள் அவள்..
இப்போது அவள் இங்கு வந்தவுடன் அவன் கவனம் முழுதும் அவள் மீது இருக்கும் என்று எதிர்பார்த்து இருந்தவளுக்கு மகளைக் கண்ட நொடி தன்னை மறந்து மகளின் உலகத்துக்குள் மூழ்கி போய் இருந்தவனின் புறக்கணிப்பு அவளை வாட்டியது..