Home NovelsE2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்)வில்விழி அம்பில் (அன்பில்) வீழ்ந்திடுவேனோ..!? – ௯ (9)

வில்விழி அம்பில் (அன்பில்) வீழ்ந்திடுவேனோ..!? – ௯ (9)

by Competition writers
4.8
(37)

அம்பு – ௯ (9)

வில்விழி போட்டதாக சொன்ன ஒரு நிபந்தனையை கேட்டதிலேயே அரண்டு போனான் பிரித்வி.. அவள் சொன்ன மற்ற நிபந்தனைகளையும் ஒவ்வொன்றாய் இந்தர் பட்டியலிட மயக்கமே வராத குறை தான் அவனுக்கு..

கடைசி நிபந்தனையை மட்டும் தம்பியிடம் கூற முடியாமல் மறைத்து இருந்தான் இந்தர்..

ப்ரித்வியோ மெதுவாக கண்களை மூடி மேலும் கீழுமாய் மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட்டபடி தன் கையை மேலிருந்து கீழாக  மெல்ல இறக்கி தன்னையே ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தான்..

“டேய் இந்திரா.. நீ சொல்ற மாதிரி நெஜமாவே இதெல்லாம் கண்டிஷனே இல்லைடா.. ஒன்னும் ஒன்னும் ஒரு அணுகுண்டு.. நீ சரியா தான் சொன்ன.. அப்பா எப்படி இருந்தாலும் இதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டாரேடா..”

“டேய்.. இத சொல்லவா டா உன்னை கூப்பிட்டேன்..  இதுதான் எனக்கே தெரியுமே.. ஆனா அந்த வில்லியை என்னோட இருக்க வைக்கணும்னா இதை தவிர வேற வழியே கிடையாதுடா.. அவளை மீட் பண்ணதுலேர்ந்து என் மூளை சுத்தமா வேலை செய்ய மாட்டேங்குது.. எங்க அவ குழந்தையை தூக்கிட்டு என்னை விட்டு போயிடுவாளோன்ற யோசனைலயே ஒரே படபடப்பா இருக்குடா.. ப்ளீஸ்டா.. என் பெருமூளை தான் வேலை செய்யல.. உன்னோட இந்த சிறு மூளைய கசக்கி ஏதாவது உருப்படியான ஐடியா சொல்லுடா..”

அந்த நேரத்திலும் விடாமல் தன்னை கலாய்த்தவனை கண்களை சுருக்கி முறைத்தான் ப்ரித்வி..

“ஆனாலும் மவனே‌‌.. உனக்கு ரொம்ப லொள்ளு தான்டா..  கைவசம் ஒரு ஐடியா இல்லை.. வந்து என்னை ஐடியா கேட்கிறே.. அது நடுவுல இந்த நக்கல் கிண்டல் இதெல்லாம் உனக்கு தேவையா?”

“ஐயையோ இதை மனசுல வச்சுட்டு என் வாழ்க்கைல விளையாடிடாதடா.. உருப்படியா ஏதாவது ஐடியா சொல்லு..”

“ஐடியா தானே..? சொல்றேன்..” என்றபடி தீவிரமாய் சிந்தித்தவன்

“ம்ம்..”

அடுத்த நிமிடம் “ஐடியா சிக்கிருச்சு.. டேய்..  நம்ப அப்பா நிச்சயமா இந்த கண்டிஷனுக்கு எல்லாம் ஒத்துப்பாரு.. ஒத்துக்க வெக்கறோம்.. அதுக்கு நான் கேரண்டி..”

“என்னடா சொல்ற அப்பா எப்படி ஒத்துப்பாரு..”

“ஒத்துப்பாரு.. ஆக்சுவலா நீ இதுக்கெல்லாம் உன் பொண்ணு சக்திக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும்.. நல்ல வேளை.. அவ உன் வாழ்க்கையில வந்தா.. உன் வாழ்க்கைல விளக்கேத்தி வைக்க போற நம்ம வீட்டு மகாலட்சுமி அவ தான்டா.. சரி வா..” என்றவன் மறுபடியும் வரவேற்பறைக்கு இந்தரையும் அழைத்துக் கொண்டு போனான்..

“என்னடா நீயும் உங்க அண்ணனும் பேச வேண்டிய ரகசியம் எல்லாம் பேசிட்டீங்களா? இப்ப நாம பேசலாமா?”

வெளியே வந்தவர்களை பார்த்து மார்க்கண்டேயன் கேட்க

“பேசலாம் பா.. ஆனா இங்கேயே அம்மா முன்னாடியும் வில்விழி முன்னாடியும் பேசலாம்..”

“வில்விழியா? அது யாருடா வில்விழி..?”

“ம்ம்.. உங்க பெரிய மருமக.. இந்தரோட வைஃப்… எனக்கு அண்ணி.. உங்க பேத்தி சக்தியோட அம்மா.. அவ தான் வில்விழி..”

“வில்விழியா? அது என்னடா பேரு? அவ பேரு மலர்விழி தானே..”

“இப்போ பேரை மாத்தியாச்சு.. அவ பேரு வில்விழி.. அவ செய்யற ப்ரொஃபஷனுக்கு ஏத்த மாதிரி பேரை மாத்திக்கிட்டு இருக்கா போல இருக்குப்பா..”

‘அது சரி.. புகுந்த வீட்ல மாமனார் மாமியாருக்கும் புருஷனுக்கும் தான் மதிப்பு கிடையாதுன்னு நினைச்சேன்.. பொறந்த வீட்டுல அப்பா வச்ச பேருக்கும் மதிப்பு கிடையாதா? அதையும் மாத்திட்டாளா..?”

வில்விழியை பார்த்து முறைத்தவர்

“சரி.. வில்விழியோ வேல்விழியோ எதையோ வெச்சுக்கிட்டு போகட்டும்.. எனக்கு என்ன வந்தது? அதை விடு..  அப்புறம் உள்ள போய் பேசினீங்களே என்ன முடிவு பண்ணிங்க..?”

“என்னப்பா முடிவு பண்ணுறது? இந்தர் அவன் வைஃபோடதானப்பா வாழணும்? குழந்தை வேற இருக்கு.. மூணு பேரும் குடும்பமா வாழறதுதான் பா கரெக்ட்..”

“ம்ம்.. நீ சொல்றது சரிதான்.. அவ இங்கேயே இருந்து நல்லபடியா புருஷனோட வாழ்ந்து புள்ளைய பெத்து இருந்தானா மூணு பேரும் குடும்பமா வாழறது சரி.. அவ நடுவுல ஓடிப் போய் இல்ல புள்ள பெத்துட்டு வந்து இருக்கா..? இந்த வீட்டுல அவளால எவ்வளவு அவமானங்களை தாங்கி இருக்கோம் நாம? இவ்வளவு அவமானத்தை அவனுக்கும் இந்த குடும்பத்துக்கு தேடி தந்தவளோட மறுபடியும் என் புள்ள வாழணுமா? ஒன்னும் தேவையில்லை.. அவ கெளம்பட்டும்..”

கம்பீரமான குரலில் வந்தன இறுதி வார்த்தைகள் இதுதான் என் முடிவு என்பது போல…

“மாமா..” என்றழைத்த வில்விழி சட்டென நிறுத்தி “ஓ.. உங்களை மாமானு வேற கூப்பிடக்கூடாதுன்னு சொல்லிட்டீங்க.. வேற என்ன கூப்பிடுறது..? ம்ம்..” என்று சுட்டு விரலை கன்னத்தில் வைத்து யோசிப்பது போல் நின்றவள்

“ஹா..ன்.. அங்கிள்னு கூப்பிடவா?” என்று கேட்டுவிட்டு பதிலுக்கு மார்க்கண்டேயனின் முறைப்பையும் வாங்கிக் கொண்டாள்..

ஆனால் அந்த முறைப்பு அவளில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை..

“ஓடினேன் ஓடினேன்னு சொல்றீங்களே.. நான் ஓடினதுக்கு காரணம் யாரு? நான் என்ன இந்தரோட வாழ பிடிக்காமயா ஓடுனேன்.. நான் ஏன் ஓடுனேன்னு உங்களுக்கு தெரியாது..? இந்தரை உயிருக்கு உயிரா விரும்பினவ நான்.. இப்பவும் விரும்புறேன்..”

அவள் இப்படி சொன்ன நேரம் சட்டென ஒரு நொடி இந்தரின் விழிகளை காதலோடு தழுவின அவள் விழிகள்..

அடுத்த நொடி மார்க்கண்டேயன் பக்கம் திரும்பியவள் “ஆனா என் கனவெல்லாம் தொலைச்சிட்டு ஒரு அடிமையா தான் அவரோட வாழ முடியும்னா அப்படி ஒரு வாழ்க்கை எனக்கு தேவையே இல்லைன்னு தான் ஓடினேன்..”

“ஓ.. புருஷனை விட உன் கனவு தான் உனக்கு அவ்ளோ முக்கியமா?”

“ம்ம்.. பொண்டாட்டிக்கு புருஷனை விட கனவு முக்கியம் இல்லன்னு நீங்க சொல்றீங்க.. அது என்ன பொண்டாட்டிக்கு மட்டும் அப்படி..? பாசம் நேசம் காதல் கனவு இதெல்லாம்  புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேருக்குமே சமம் தானே.. அப்போ பொண்டாட்டி கனவை நிறைவேத்தறதுக்காக புருஷனும் அவனோட கனவை விட்டுக் கொடுக்கலாம் இல்ல..? ஃபார் எ சேஞ்ச் உங்க புள்ளையை வீட்ல இருக்க சொல்லுங்க.. நான் என் கனவை நோக்கி போறேன்..”

“ஊர் உலகத்துல எங்கேயுமே இந்த மாதிரி ஒரு கிறுக்குத்தனத்தை யாருமே பண்ண மாட்டாங்க.. ஏன்டா.. என்னடா இது பைத்தியக்காரத்தனம்.. என்ன பேசிட்டிருக்கா இவ? பொண்டாட்டியை வேலைக்கு அனுப்பிச்சிட்டு புருஷன் வீட்ல உக்காந்திருக்கணுமா? விட்டா உன்னை சேலை கட்ட வச்சிருவா போல அவ..”

மார்க்கண்டேயன் அடிக்குரலில் சீறினார்..

“அப்பா.. இப்படியே பேசிட்டு இருந்தா இதுக்கு சொல்யூஷனே கிடைக்காது.. முன்னாடி அவ போனதெல்லாம் இருக்கட்டும் பா.. இப்ப வீட்டுக்கு திரும்பி வந்து இருக்கா.. இப்போ அவங்க மட்டும் இல்ல.. ஒரு குழந்தையும் இருக்கு.. நாம அதையும் யோசிச்சு பாக்கணும்.. அந்த குழந்தைக்காக ஒரு நல்ல முடிவு எடுக்கணும்.. உங்க பிள்ளையோட பொண்டாட்டியை அவன் கிட்ட இருந்து நீங்க பிரிச்சு அனுப்பலாம்.. ஆனா உங்க பேத்தியோட அம்மா அப்பாவை நீங்க பிரிக்க முடியாது பா.. அது நீங்க சக்திக்கு பண்ற பெரிய பாவம்.. கொஞ்சம் யோசிச்சு பேசுங்கப்பா..”

“ஹலோ ப்ரித்வி.. நீங்க எதுக்கு எனக்காக இவர் கிட்ட கெஞ்சிகிட்டு இருக்கீங்க..? நான் யார்கிட்டயும் இங்க கெஞ்சி வாழ்க்கை கேக்கறதுக்கு வரலை.. இந்தரை பிரிஞ்சு நான் சந்தோஷமா இல்ல தான்.. ஆனா அதுக்காக என் சுயமரியாதையை விட்டு கொடுத்துட்டு வாழமுடியாது.. அதான் இந்த வீட்டை விட்டு போனேன்.. ஆனா இப்ப என் குழந்தையோட வாழ்க்கைக்காக தான் நான் இந்த வீட்டுக்குள்ள மறுபடியும் வந்து நின்னுகிட்டு இருக்கேன்.. இப்பவும் யாருக்காகவும் என் செல்ஃப் ரெஸ்பெக்ட்டையும் என் ப்ரொஃபஷனையும்  நான் இழக்கறதுக்கு ரெடியா இல்ல..”

அவள் பேசியதை கேட்ட ப்ருத்வியோ  முற்றிலும் தளர்ந்தவனாய் இந்தரிடம் “டேய் ரெண்டு பேரும் அடங்க மாட்டேங்கிறாங்க டா..  உன் பொண்டாட்டி கொஞ்சம் வாயை அடக்கினா ஏதாவது பண்ணலாம்.. கண்டிஷனையும் போட்டுட்டு இந்த பேச்சு பேசுறா.. அண்ணாத்த.. உன் வாழ்க்கை ஓவரா ஊசலாடிட்டு இருக்குடி.. உன் வில்லி அவ வாயை ஒரு அஞ்சு நிமிஷம் மூடுனானா நான் எல்லாத்தையும் சரி பண்ணிடுவேன்.. ஆனா எங்க.. அப்படி ஒரு அதிசயம் நடக்கும்ன்னு எனக்கு தோணவே இல்லை..” இந்தர் காதை கடித்தான் ப்ருத்வி..

“எப்படி சிக்கி இருக்கேன் பாருடா..” சோகம் அப்பிய முகத்துடன் தழுதழுத்த குரலில் தம்பியிடம் ரகசியமாய் புலம்பினான் இந்தர்..

“சுயமரியாதையை விட்டு இங்க யாரும் அவளை வாழ சொல்லல.. கிளம்பி போயிட்டே இருக்க சொல்லுடா ப்ருத்வி.. ஆனா எந்த காரணத்தை கொண்டும் என் பேத்தி அவளோட போக மாட்டா.. என் பேத்தி அவ அப்பனோட தான் இருப்பா..”

கொஞ்சமும் இறுக்கம் தளராமல் பேசிக்கொண்டிருந்தார் மார்க்கண்டேயன்..

“அப்பா.. என்னப்பா பேசுறீங்க? உங்களுக்கு இப்ப இருக்கிற ரூல்ஸ் தெரியாதா? நீங்க கோர்ட்டுக்கு போனா கூட குழந்தை அம்மா கிட்ட தான் இருக்கணும்னு தான் தீர்ப்பு வரும்.. அதுவும் பெண் குழந்தை அம்மா கிட்ட வளரணும்னு தான் சொல்லுவாங்க..”

“அதெல்லாம் நம்ம வக்கீல் கிட்ட பேசி ஏதாவது செஞ்சு பிள்ளையை வாங்கிடலாம் டா.. நீ ஒன்னும் கவலைப்படாத..”

“ஓ அப்படி வேற உங்களுக்கு நெனைப்பு இருக்கா.. பெண் குழந்தை அம்மாகிட்ட தான் வளரனும்னு தான் சட்டமும் சொல்லும்.. நீங்க எந்த வக்கீலை வேணா போய் கேட்டு பாருங்க.. எதுக்கு வெளில கேட்டுக்கிட்டு.. இதோ அத்தையே வக்கீல் தானே..? அவங்க கிட்டயே கேட்கலாம்.. என்னத்த..? நான் சொல்றது சரிதானே..?”

வில்விழி சகுந்தலா பக்கம் திரும்பி கேட்க அவளோ திடுக்கிட்டு அவளை பார்த்து “என்னை ஏன்மா இதுல மாட்டிவிடுறே?” என்பது போல் புருவம் சுருக்கி விழிகளை உருட்டியபடி மார்க்கண்டேயனின் பக்கம் திரும்ப அவரின் முறைப்பை சந்தித்தவள் அப்படியே தலையை பட்டென குனிந்து கொண்டாள்..

மார்க்கண்டேயனோ அவள் பக்கம் ஏளனமாய் ஒரு பார்வையோடு “இவ படிச்சு எவ்வளவு வருஷம் ஆகுது..? இவளுக்கு எப்படி இன்னிக்கு இருக்கிற சட்டம் எல்லாம் தெரியும்? அதெல்லாம் நம்ம வக்கீல் கிட்ட பேசி நமக்கு சாதகமா தீர்ப்பு வாங்கிக்கலாம் டா.. அந்த பொண்ணு ஏதோ சொல்றான்னு பயப்படாதீங்க..” என்றார்..

மார்க்கண்டேயனை கூர்ந்து பார்த்த வில்விழியோ “யாரு..? அத்தைக்கு இப்ப இருக்கற சட்டங்களை பத்தி ஒன்னும் தெரியாதா? உங்களுக்கு வேணும்னா நாட்டு நடப்பு தெரியாம இருக்கும் மாமா.. அத்தைக்கு எல்லா விஷயமும் தெரியும்.. நீங்க கம்பெனிக்கு போயிருக்கும் போது அத்தை வேலை எல்லாம் முடிச்சுட்டு வீட்ல லா புக்ஸ் எல்லாம் வச்சு படிச்சுக்கிட்டு இருக்காங்க.. அது மட்டும் இல்லாம நியூஸ் பேப்பர்ல வர்ற நியூஸ் இப்ப இருக்கிற கேஸ்களோட டீடைல்ஸ்.. இது எல்லாமே அவங்களுக்கு அத்து படி.. மூணு வருஷத்துக்கு முன்னாடி நான் இந்த வீட்ல இருந்தப்போ அத்தைக்கு இந்த மாதிரி நியூஸ் எல்லாம் தெரிஞ்சுக்கறதுக்கு ஹெல்ப் பண்ணதே நான்தான்.. ஆன்லைன்ல வித்தியாசமான கேஸ் பத்தின டீடெயில்ஸ்.. இப்ப இருக்கிற வக்கீல்கள் எப்படி வாதாடுறாங்க.. ஜட்ஜ்மெண்ட் எப்படி கொடுக்குறாங்க.. இதை பத்தி எல்லாம் நிறைய டீடெயில்ஸ் அவங்களுக்கு நான் எடுத்து கொடுத்து இருக்கேன்.. நீங்க இல்லாதப்போ அவங்க நிறைய லாயர்ஸோட கூட ஃபோன்ல பேசி இருக்காங்க.. சில கேஸஸ்ல இவங்க குடுக்கற சில டிப்ஸ் அந்த லாயர்ஸூக்கே ஹெல்ப்பா இருந்திருக்குன்னு அவங்க சொல்லி இருக்காங்க.. இவங்களுக்கு அந்த ஃபீல்டுல இவ்வளவு டேலண்ட் இருக்கும்போது அதெல்லாம் இப்படி வேஸ்ட் பண்றாங்களேன்னு வருத்தமும் பட்டிருக்காங்க..”

வில்விழி சொன்னதை கேட்டு அப்படியே அதிர்ந்து  வாயடைத்து போய் நின்றது மார்க்கண்டேயன் மட்டும் இல்லை அவரது இரு மகன்களும் கூடத்தான்..

அம்பு பாயும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 37

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!