Home Novelsவிடிய மறுக்கும் இரவே05. விடிய மறுக்கும் இரவே 🥀

05. விடிய மறுக்கும் இரவே 🥀

by ஸ்ரீ வினிதா
4.8
(93)

விடியல் – 05

காலையில் எழுந்து கொண்ட நந்தினியின் பார்வை அசந்து தூங்கிக் கொண்டிருந்த யுகேஷ் வர்மாவின் மீது பதிந்தது.

என்னதான் நன்றாக படித்து நல்ல பதவியில் இருந்தாலும் கூட இவர்களுக்கெல்லாம் மனைவியை எப்படி கையாள வேண்டும் என்பது தெரியவே இல்லையே.

ஒரு பெண்ணுக்கு கணவனின் அன்பையும் அக்கறையும் தவிர வேறு என்ன எதிர்பார்ப்பு அதிகமாக இருந்துவிடப் போகின்றது..?

நேற்று மட்டும் அவன் சென்றதற்கான காரணத்தைக் கூறி அவளுடன் அன்பாக பேசி இருந்தாலே அவனுடைய அணைப்புக்கு அடிமையாகிப் போயிருப்பாளே.

அவனுடைய தீண்டலில் உருகிக் கரைந்திருப்பாளே..

ஆனால் அவன் அதட்டியல்லவா அடிமை போல தன்னை நடத்தினான்.

அவனுடைய விருப்பத்திற்கு இக்கணமே அடங்க வேண்டும் என்ற அவனுடைய கட்டுப்பாடும் சற்றும் அன்பில்லாத வார்த்தைகளும்தான் அவளை எதிர்க்கச் செய்தன.

இருந்தும் என்ன பயன்..?

அவன் தன்னுடைய விருப்பத்தை சாதித்துக் கொண்டு இதோ நன்றாக அசந்து தூங்குகின்றானே.

அவளுக்குத்தான் தூக்கமே இல்லை.

பெருமூச்சுடன் குளியல் அறைக்குள் நுழைந்து குளித்து முடித்து தயாராகி வந்தவள் படுக்கையில் எழுந்து அமர்ந்திருந்தவனைப் பார்த்தாள்.

அவன் முகம் இறுகிப் போயிருந்தது.

அலைபேசியில் எதையோ தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளுக்கோ அவனிடம் பேசவே பிடிக்கவில்லை.

ஆனால் இப்படியே முகத்தை திருப்பினால் சண்டை பெரிதாகி விடுமோ என்ற அச்சமும் அவளுக்குள் இருந்தது.

எதுவுமே நடக்காதது போல அவனுடன் பேசவும் முடியவில்லை.

தன்மானம் தடுத்தது.

மனமோ பிரச்சினையை பெரிதாக்காமல் அவனிடம் சென்று பேசு என உந்தித் தள்ளியது.

தயங்கி அவன் அருகே வந்து நின்ற நந்தினியை அவன் நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

“யுகேஷ்..?” என மெல்ல அழைத்தாள் அவள்.

“வாட்..?” என்றான் அவன்.

அவன் கேட்ட விதத்தில் அவளுக்கு அவனுடன் பேச வேண்டுமா எனத் தோன்றத் தொடங்கிவிட்டது.

அவளோ என்ன பேசுவது என்று தெரியாமல் திருதிருவென விழித்துக் கொண்டிருக்க,

“ப்ச் இப்போ எதுக்கு என்ன கூப்பிட்ட.” எனக் கேட்டான் அவன்.

“இ.. இல்ல சும்மாதான்..” என அவள் தயங்க,

“ஐ நீட் அ காஃபி..” என்றான் அவன்.

இதற்கு அவன் பேசாமலேயே இருந்திருக்கலாம் என்றுதான் அவளுக்குத் தோன்றியது.

“சரி..” என்றவள் தன் தலையில் சுற்றியிருந்த துண்டைக் கழற்றியவாறு அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.

ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து பத்திரிகையை படித்துக் கொண்டிருந்தார் நாதன்.

அவரருகே அமர்ந்து அவர் பத்திரிகை படித்துக் கொண்டிருப்பதை தொந்தரவு செய்து கொண்டிருந்தார் அவருடைய மனைவி சுஜாதா.

“ஏங்க உங்க பையன் நைட் எப்ப வந்தான் தெரியுமா..?” என்றார் சுஜாதா.

“எனக்கு எப்படி தெரியும்..?” என்றார் நாதன்.

“அவனை கரெக்ட் டைமுக்கு வீட்டுக்கு வர சொல்லுங்க… முன்னமாதிரி எல்லாம் நினைச்ச டைமுக்கு வந்தா நல்லா இருக்காது. இப்போ அவனை நம்பி ஒரு பொண்ணு வேற வந்துட்டா..” என்றார் சுஜாதா.

“தைரியம் இருந்தா நீயே உன் மகன்கிட்ட சொல்லு..” என்றார் நாதன்.

சுஜாதாவின் முகமோ சட்டென மாறிப்போனது.

விளக்கெண்ணையை குடித்தாற் போல தன் முகத்தை வைத்துக் கொண்டவர்,

“ஐயோ நான் சொன்னா அவன் எரிமலை மாதிரி பொங்குவானே..” என்றார்.

“ஏன்டி நான் சொன்னா மட்டும் சரிப்பா சரிப்பான்னு தலையாட்டுவானா..? மைண்ட் யுவர் பிஸ்னஸ்னு போயிட்டே இருப்பான். இவ்வளவு நாளும் உங்க முன்னாடி அசிங்கப்பட்டது பத்தாதுன்னு என் மருமக முன்னாடியும் என்னை அசிங்கப்படுத்தப் பார்க்கிறியா..?” என்றார் நாதன்.

அவர்கள் உரையாடல் அருகே வந்து நின்ற மருமகளைக் கண்டதும் நின்று போனது.

“நந்தினிம்மா வா உட்காரு..” என அழைத்தார் சுஜாதா.

“இல்லத்தை அவருக்கு காஃபி போடணும்..” என்றாள் நந்தினி புன்னகையுடன்.

அவளுடைய முகத்தில் இருந்த சிறு புன்னகையைக் கண்டவருக்கு மனதில் நிம்மதி பரவியது.

“நேத்து நைட் அவன் எத்தனை மணிக்கு வீட்டுக்கு வந்தான்மா..?” என்றார் சுஜாதா.

“ரெண்டு மணி இருக்கும் அத்தை..” என்றாள் நந்தினி.

“ஓஹோ வீட்டுக்கு வர டைமா இது..? எப்போ பார்த்தாலும் கேஸ் ஸ்டேஷன்னு சுத்தினா போதுமா..? குடும்பத்தை பார்க்க வேண்டாமா..?” என தன் மகனை திட்டிக் கொண்டிருந்த நாதனின் வாய் படிகளில் கம்பீரத்துடன் கூடிய அழுத்தமான பார்வையுடன் இறங்கி வந்த தன் மகனைக் கண்டதும் சட்டென பூட்டுப் போட்டுக் கொண்டது.

எதுவும் நடவாதது போல பத்திரிகையைப் படிக்கத் தொடங்கினார் அவர்.

சுஜாதாவோ வேகமாக டிவியை ஆன் செய்து பழைய பாடல் ஒன்றை வைத்து கேட்க ஆரம்பித்தார்.

இயல்பாக பேசிக் கொண்டிருந்தவர்கள் அவனுடைய வருகையில் திடீரென மாறிப்போனதை கண்டு அதிர்ந்து போனவள் திரும்பி அவனைப் பார்த்தாள்.

“காபி வருமா..? வராதா..?” என அழுத்தமாகக் கேட்டான் யுகேஷ்.

அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.

அத்தை கேள்வி கேட்டதால்தானே நின்று பதில் கூறிக் கொண்டிருந்தாள்.

“இதோ போட்டு எடுத்துட்டு வரேன்..” என்றவள் சமையலறைக்குள் நுழைந்தாள்.

“இருமா நான் வந்து போட்டு தரேன்..” என எழுந்தார் சுஜாதா.

“நீங்க இப்போ எதுக்கு தேவையில்லாத விஷயத்துல தலையிடுறீங்க..? நீங்க உங்க புருஷனுக்கு மட்டும் காபி போட்டுக் குடுங்க. இதுக்கு அப்புறம் எனக்கு என் பொண்டாட்டி கொடுக்கட்டும்..” என அழுத்தமாகக் கூறியவன் சோபாவில் அமர்ந்தான்.

நாதனோ இது உனக்குத் தேவையா.. என்பது போல ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் பத்திரிகையில் மூழ்கினார்.

நந்தினிக்கு தலையைச் சுவற்றில் முட்டிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது.

என்ன மனிதன் இவன்.?

பெற்ற தாயைக் கூட மிரட்டி அல்லவா வைத்திருக்கிறான்.

புதிதாக அந்த சமையலறைக்குள் நுழைந்தவளுக்கு காபி பவுடரும் சர்க்கரையும் எங்கே இருக்கிறது என்று எப்படி கண்டுபிடிப்பது என எண்ணி சலிப்பாக இருந்தது.

ஆனால் அவள் எண்ணியது போல அது அவ்வளவு சிரமமாக இல்லை. அனைத்தும் கண்ணில் படும்படி இருந்தது.

சில நிமிடங்களில் காபியைத் தயாரித்து ஹாலுக்கு வந்தாள் நந்தினி.

அங்கே அனைவரும் நூலகத்தில் அமர்ந்திருப்பது போல அமைதியாக இருந்தனர்.

காபியை அவனிடம் நீட்டினாள்.

எதுவும் கூறாமல் வாங்கியவன் ஒரு மிடறு பருகி விட்டு அவளை ஆழ்ந்து பார்த்தான்.

“எ.. என்னங்க என்னாச்சு..?” அவனுடைய பார்வையில் அவளுக்கோ பதறியது.

“எனக்கு காஃபில சக்கரை கம்மியா இருக்கணும்..” என்றான் அழுத்தமாக.

“சாரிங்க..” என்றாள் கைகளைப் பிசைந்தபடி.

“உன் சாரியை வச்சு நான் என்ன பண்ண..? இதைக் கொட்டிட்டு வேற காபி போட்டு எடுத்துட்டு வா..” என்றதும் அதிர்ந்தாள் அவள்.

“என்னப்பா அவ இப்போதான் வந்திருக்கா.. அவளுக்கு எப்படி உன்னோட டேஸ்ட் தெரியும்..? கொஞ்சநாள் பழகட்டும்.. இப்போ நான் போட்டு எடுத்துட்டு வரேன்..” என எழுந்தார் சுஜாதா.

“ஒரு தடவை சொன்னா உங்களுக்கு புரியாதா..?” என தன்னுடைய அன்னையை அழுத்தமாக ஏறிட்டான் அவன்.

சுஜாதா இயலாமையுடன் மருமகளைப் பார்த்தார்.

“பரவால்ல அத்தை நானே போட்டு எடுத்துட்டு வரேன்..” என்றவளுக்கு பதற்றமாக இருந்தது.

மீண்டும் சமையலறைக்குள் வந்தவளுக்கு இம்முறை காபி தயாரிக்கும் போது கைகள் நடுங்கின.

இந்த முறையும் சொதப்பினால் மீண்டும் திருப்பி அனுப்புவான் என்று புரிந்து கலங்கிப் போனாள்.

முன்பு விட சர்க்கரையை கம்மியாகப் போட்டு காபியை எடுத்துக் கொண்டு அவனை நோக்கிச் சென்றாள்.

ஏனோ அந்தச் சூழல் அவளுக்கு ஒவ்வாமையாக இருந்தது.

காபி பிடிக்கவில்லை என்றால் சொல்வது சரிதான்.

அவன் விருப்பப்படி போடச் சொல்வதும் சரிதான்.

ஆனால் அதைச் சொல்வதற்கும் ஒரு முறை உள்ளது அல்லவா..?

பாசமாகக் கூறினால் இந்தத் தயக்கமும் நடுக்கமும் வராதே.

ஏதோ நான் மாபெரும் பிழையைச் செய்தது போல அல்லவா அவன் அழுத்தமான பார்வையுடன் கட்டளையிடுகிறான்..

இப்படிப் பேசினால் பயம் மட்டும்தானே என் மனதில் உண்டாகும்..

பெருமூச்சுடன் புதிதாகத் தயாரித்த காபியை நீட்ட இம்முறை சுஜாதாவும் நாதனும் கூட பதறினர்.

இந்த முறையும் பிடிக்கவில்லை என்று ஏதாவது சொல்லி மருமகளைத் திட்டிவிடுவானோ என்ற பயம் அவர்களையும் ஆட் கொண்டது.

“என்னங்க இப்பவே நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு.. இவனை வச்சு இந்தப் பொண்ணு எப்படித்தான் சமாளிக்கப் போறாளோ..?” என முணுமுணுத்தார் சுஜாதா.

“மகன் கல்யாணம் பண்ணா திருந்திடுவான்னு நீதானடி சொன்ன..” எனக் கிசுகிசுத்தார் நாதன்.

“இவன்தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சான்.. இந்தப் பொண்ணை இவன்தான் செலக்ட் பண்ணினான்.. பிடிச்சுக் கல்யாணம் பண்ண பொண்ணுகிட்டயாவது நல்லா நடந்துப்பான்னு நினைச்சேன்..” என முணுமுணுத்தார் சுஜாதா.

“அடியே பேசாத.. உன் மகன் நம்ம ரெண்டு பேரையும் பார்த்து முறைச்சுக்கிட்டு இருக்கான்..” என்றார் நாதன்.

கப்பென வாயை மூடிக் கொண்டார் சுஜாதா.

“நாட் பேட்..” என நந்தினியைப் பார்த்து கூறிவிட்டு தன் பெற்றோரை அழுத்தமாகப் பார்த்தவன் “ரிமோட்டை என்கிட்ட கொடுங்க..” என சுஜாதாவின் கையில் இருந்த ரிமோட்டை வாங்கி சேனலை மாற்றினான்.

அங்கு பரபரப்பான செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

“சைக்கோ கில்லரின் இடத்தை நள்ளிரவில் கண்டுபிடித்த ஏசிபி யுகேஷ் வர்மாவும் அவர் டீமும் இரண்டு இளைஞர்களைக் காப்பாற்றியுள்ளனர்..” எனத் தொடங்கிய செய்தி யுகேஷைப் பற்றி பாராட்டும் விதமாகச் சென்றது.

அனைவரின் பார்வையும் தொலைக்காட்சியில் பதிந்தது.

“இதுக்குத்தான் நேத்து கல்யாணத்திலிருந்து போனியாப்பா..?” எனக் கேட்டார் நாதன் பெருமையுடன்.

“எஸ்..” என்றான் யுகேஷ்.

“அந்த சைக்கோ கில்லர் இடத்தை எப்படிப்பா கண்டுபிடிச்ச..?” என்றார் சுஜாதா.

“கேஸ் விஷயம்லாம் உங்ககிட்ட சொல்ல முடியாது..” என்றான் அவன்.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவன் காப்பாற்றிய இரண்டு இளைஞர்களைத் திரையில் காண்பித்தனர்.

அதைப் பார்த்த நந்தினியின் மனம் சற்று அமைதியடைந்தது.

நேற்று திருமணத்தில் இருந்து பாதியில் சென்றாலும் இரு உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறானே.

இரண்டு உயிர் என்றால் சும்மாவா..?

செய்தியில் அவனைப் பற்றி பெருமையாகச் சொல்வதைப் பார்த்து அவள் முகம் மலர்ந்தது.

அவனோ சட்டென டிவியை அணைத்து விட்டு எழுந்து அறைக்குச் சென்று விட்டான்.

“இவன் ஒருத்தன் நாங்க பாத்துட்டு இருக்கோம்னு கொஞ்சமாவது யோசிக்கிறானா..? ஆஃப் பண்ணிட்டு போறானே..” என திட்டியவாறு சுஜாதா மீண்டும் டிவியை ஆன் செய்து செய்தியை ஆர்வமாகப் பார்க்கத் தொடங்கினார்.

மாமியாரைப் பார்த்து சிரித்துக் கொண்டவள் செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது “நந்தினி..” என மேலிருந்து அழைத்தான் அவன்.

‘ஐயோ இப்போ என்ன எதுக்கு கூப்பிடுறாரு..?’ என மனதிற்குள் எண்ணியவள் வேகமாக தங்களுடைய அறையை நோக்கி செல்லத் தொடங்கினாள்.

இப்போது அவன் மீது கொஞ்சம் மரியாதை அதிகரித்திருந்தது.

அவன் முன்பு வந்து நின்றவள் “ஏதாவது வேணுமா..?” எனக் கேட்டாள்.

“எஸ்..” என்றவனின் பார்வை அவள் மீது நிதானமாக படிந்தது‌.

“எ.. என்ன வேணும்..?” புரியாமல் கேட்டாள் அவள்.

“நீதான் வேணும்.. நேத்து ரொம்ப லேட்டா தூங்கினதால என்னால டைமுக்கு எந்திரிச்சு வொர்க் அவுட் பண்ண முடியல.. இப்போ உன் கூட ஒண்ணா இருக்கணும் போல இருக்கு.. அதுவும் வொர்க் அவுட் பண்ற மாதிரி தானே..” என்றவன் படுக்கையை விழிகளால் காட்டி அவளை அழைக்க அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

 

🥀🥀

கமெண்ட் ப்ளீஸ்

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 93

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!