நிலவொளி அந்த பல்கனியை மென்மையாகத் தழுவ, அவனுடைய நிழல் சுவற்றில் படர்ந்தது.
அவள் காத்திருக்கச் சொன்ன பின்பும் கூட அவளுக்காக காத்திராமல் வந்ததால் அவனுக்கோ மனதில் ஒரு விதமான குற்றவுணர்வு.
அவள் தன்மீது கோபத்தில் இருப்பாள் என்பதை உணர்ந்தவன் அவளைச் சமாதானம் செய்யும் நோக்கத்துடன் நள்ளிரவு வரை காத்திருக்க முடியாது நேரத்திற்கே அங்கு வந்து சேர்ந்திருந்தான்.
நேரம் இரவு 11 மணி ஆகிவிட்டிருந்தது.
வானில் நட்சத்திரங்கள் மின்ன, குளிர்ந்த காற்று மெல்ல வீசியது.
அவளுடைய பல்கனிக் கதவைத் தட்டினான் அவன்.
மரக்கதவில் அவனுடைய மென்மையான தட்டல் இரவின் அமைதியை உடைக்க,
“நான் தூங்கிட்டேன்..” என உள்ளிருந்து சன்னமான குரலில் பதில் வந்தது.
சிரித்து விட்டான் அவன்.
சட்டென அவனுடைய மனம் இளகிப் போனது.
‘இவள் குழந்தை போன்ற குணத்தை உடையவள்..’ என எண்ணியவாறு மீண்டும் அவன் கதவைத் தட்ட சற்று நேரத்தில் எழுந்து வந்து அந்தக் கதவைத் திறந்து விட்டாள் வர்ணா.
அக்கணம் ஆங்காங்கே மின்குமிழ்கள் வேறு எரிய பல்கனியில் வெகு நேரம் நின்று பேசுவது பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்தவன் அறைக்குள் வந்து உள்பக்கமாக பல்கனியின் கதவைப் பூட்டி விட்டு அவளை நோக்கித் திரும்பினான்.
அறை கும்மிட்டாக இருந்தது.
இரவின் இருள் அறையை மெல்ல மூடியிருந்தது.
படுக்கையின் ஓரத்தில் மட்டும் இரவு விளக்கு சிறிதாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. அதன் மங்கிய ஒளியில் அவளுடைய முகத்தைப் பார்க்க முயன்று தோற்றுப் போனான் அவன்.
“லைட்டை ஆன் பண்ணு குல்ஃபி..”
“மா.. மாட்டேன்..” என்றாள் அவள்.
அவளுடைய குரல் ஒரு மெல்லிய பிடிவாதத்துடன் ஒலித்தது.
அவளுடைய குரல் வித்தியாசமாக ஒலிப்பதை உணர்ந்தவன் அவனே சென்று அந்த அறையின் மின்குமிழை ஒளிரச் செய்தான்.
அவள் அவனைப் பார்க்காமல் தன் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.
“ஏய் என்னடி..” எனக் கேட்டவாறு அவளைப் பார்த்தவனுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
அவளுடைய கண்கள் சிவந்து இருந்தன.
அவளுடைய கன்னங்கள் அழுது அழுது வீங்கிப்போய் இருந்தன.
கண்களின் இமைகள் எல்லாம் அவள் அழுததன் விளைவால் ஏதோ சைனீஸ் பெண்கள் போல வீங்கிப் போயிருக்க அவனோ பதறி விட்டான்.
“ஏய் என்னாச்சு குல்ஃபி..? ஏதாவது பிரச்சனையா..? வீட்ல ஏதாவது திட்டிட்டாங்களா..? எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்க..?” என அவன் பதறியவாறு கேட்டதும் அவளோ விக்கி விக்கி அழ ஆரம்பித்து விட்டாள்.
அவளுடைய மெல்லிய விசும்பல் அந்த அறையை நிரப்பியது.
அவளை நெருங்கி அணைத்து சமாதானம் செய்ய முயன்றவன் பின் வேண்டாம் என்ற முடிவோடு தன்னைக் கட்டுப்படுத்தியவனாக அவளைச் சோபாவில் அமரச் செய்தான்.
“ஹேய் என்னம்மா இது..? எதுக்கு சின்னக் குழந்தை மாதிரி அழுதுட்டு இருக்க..?”
“நீ.. நீ என்னை ஏமாத்திட்ட.. நான் உன்னை எவ்வளவு நம்பினேன்.. எனக்காக நீ வெயிட் பண்ணுவேன்னு நினைச்சுத்தானே என்னோட ஃப்ரெண்ட்ஸை அங்க கூட்டிட்டு வந்தேன்.. ஆனா நீ அஞ்சு நிமிஷம் கூட எனக்காக வெயிட் பண்ணல.. என்னை ஏமாத்திட்டு போயிட்டல்ல..” என்றவள் உடைந்து மேலும் அழத் தொடங்கிவிட அவனுக்கோ ஐயோ என்றாகிப் போனது.
‘இதற்காகத்தான் இப்படி தேம்பித் தேம்பி அழுகின்றாளா..? கல்லூரி வந்ததிலிருந்து இப்போது வரை அழுது கொண்டுதான் இருக்கின்றாளா..? அதனால்தான் இவளுடைய முகம் எல்லாம் சிவந்து இப்படி வீங்கிப் போயிருக்கின்றதா..?’
“வர்ணா..” என அதிர்ந்து அழைத்தான் அவன்.
அவளோ விழிகளைத் துடைத்துக் கொண்டேதான் இருந்தாள். ஆனால் கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது.
“ஓ மை காட் பேபி.. இதுக்காகவா அழுற..?”
“பேசாதீங்க.. நான் உங்களை ரொம்ப நம்பினேன்.. ஆனா நீங்க என்னை ஏமாத்திட்டீங்கள்ல.. என்னோட ஃப்ரெண்ட்ஸ் என்னைத் தப்பா நினைச்சுட்டாங்க தெரியுமா..? என்கிட்ட பேசாதன்னு மான்யா திட்டிட்டுப் போய்ட்டா.. அவங்க என்னை மதராஸி படத்துக்கு கூட அழைச்சிட்டுப் போகல.. ஏன் ஸ்பைடர் மேன் இப்படி பண்ண..? எனக்காக உன்னால அஞ்சு நிமிஷம் கூட வெயிட் பண்ண முடியாதா..? ரொம்ப கஷ்டமா இருக்கு..” என்றவளின் உதடுகள் அழுகையில் துடித்தன.
அவளுடைய குரல் உடைந்து ஒலித்தது.
அவனோ அவளுடைய வார்த்தைகளில் உறைந்து போனான்.
வர்ணா இவ்வளவு மென்மையானவளாக இருப்பாள் என்று அவன் நினைக்கவே இல்லை.
அவனுக்கோ சங்கடமாக இருந்தது.
ஐந்து வயது குழந்தையை ஏமாற்றிவிட்டது போல உணர்ந்தான் அவன்.
ஐந்து வயது குழந்தையைப் போலத்தானே அவள் நடந்து கொள்கிறாள்.
ஏதோ ஒரு விதத்தில் அவளுடைய நம்பிக்கையை உடைத்தது அவனுடைய தவறு தானே.
பெரு மூச்சுடன் அவளைப் பார்த்தவன் “சாரி குல்ஃபி.. முக்கியமான வேலை வந்துருச்சு.. அதனாலதான் கிளம்பிட்டேன்.. என்ன இருந்தாலும் உன்கிட்ட சொல்லாம போயிருக்கக் கூடாது.. என்னோட தப்புதான்.. சாரி.. ப்ளீஸ்.. நீ அழாத.. வேணும்னா தப்பு பண்ணதுக்காக எனக்கு ஏதாவது பனிஷ்மென்ட் கொடு..” என்றான் அவன் மென்மையாக.
“பனிஷ்மென்ட்லாம் வேணாம்.. நீயும் பாவம்தானே..” என அழுதவாறு கூறியவளை அக்கணம் அள்ளி அணைத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது அவனுக்கு.
அவளுடைய மென்மையான குரல் அவனை உருக்கியது.
மிகச் சிரமப்பட்டு தன்னுடைய ஆசையை அடக்கிக் கொண்டான் அவன்.
அவள் கல்லூரி படிப்பைத் தொடரும் சிறு பெண்.. அவளிடம் அவன் காதலைச் சொன்னதே மிக வேகம்தான்.. இதில் அவளை அணைப்பதெல்லாம் அவளை வெகுவாகப் பாதிப்படையச் செய்யும் என்பதை உணர்ந்தவன் தன்னைக் கட்டுப்படுத்தினான்.
உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது ஒன்றும் அவனுக்குப் புதிதல்ல.
ஒரு நொடியில் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திவிடுவதில் அவன் வல்லவன்.
அணைக்கத்தானே கூடாது ஆனால் அவளுடைய கண்ணீரைத் துடைத்து விடலாம் தானே.
அவளை நெருங்கி அவளுடைய கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட சட்டென அவனுடைய கரத்தில் அடித்தவள்,
‘இதுல மட்டும் தெளிவா இருக்கா..’ என முணுமுணுத்துக் கொண்டவன் தன்னுடைய பாக்கெட்டிலிருந்து கைக்குட்டையை எடுத்து அவளிடம் நீட்ட மறுக்காமல் அதனை வாங்கித் துடைத்துக் கொண்டாள் அவள்.
“ஐ ஆம் சாரி குல்ஃபி..”
“சரி விடு..” என்றாள் அவள்.
அவளுடைய குரல் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பியது.
“ம்ம் ஆமா.. எப்பவுமே நான் அவரேஜாதான் காலேஜ்ல மார்க்ஸ் வாங்குவேன்.. நீ ஹெல்ப் பண்ண ப்ராஜெக்ட்ல எனக்குத்தான் ஹை மார்க்ஸ் வந்துச்சு.. எப்படின்னு கேட்டாங்க.. நீதான் சொல்லிக் கொடுத்தேன்னு சொன்னேன்.. அதுதான் உன்னப் பாக்கணும்னு சொல்லி இன்ரோ கொடுக்க சொன்னாங்க..
நானும் அதுக்குத்தான் ட்ரை பண்ணேன்.. பட் நீதான் போய்ட்டியே.. ஏதோ நான் வேணும்னே உன்ன இன்ட்ரோ பண்ணி வைக்காத மாதிரி என் மேல கோபப்பட்டுட்டாங்க.. நான் எவ்வளவு சொல்லியும் என்னை படத்துக்கு கூட்டிட்டு போகல.. என்கிட்ட பேச மாட்டேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க..” என்றவளுக்கு மீண்டும் விழிகளில் கண்ணீர் வழிந்தது.
“ஹேய் ஹேய் பேபி கேர்ள்.. ரிலாக்ஸ்.. இதைப் பாரு.. எல்லாரையும் இப்படி கண்மூடித்தனமா நம்பக் கூடாது.. நானாவே இருந்தாலும் கூட நம்பாத.. உன்னோட ஃப்ரெண்ட்ஸையும் சேர்த்துதான் சொல்றேன்.. நான் யாருன்னு அவங்களுக்குத் தெரியாது.. என்னைப் பாக்காததால உன்னை அவாய்ட் பண்றாங்கன்னா அது அவங்களோட தப்பு.. உன்னோட தப்பு இல்ல..”
“யாரோட தப்பா இருந்தா என்ன.. மதராஸி படம் பாக்கலையே..”
“அடிப்பாவி.. இப்போ உனக்கு படம் பாக்கலன்னுதான் கவலையா..?”
“ம்ம்.. நாளைக்கு காலைல வந்து படம் அப்படி இருந்துச்சு இப்படி இருந்துச்சுன்னு சீன் போடுவாளுங்க.. இப்பவே நிறைய ஸ்டேட்டஸ் போட்டுட்டாங்க தெரியுமா..” என்றவள் தன்னுடைய போனை எடுத்து வந்து அவர்கள் வாட்ஸ்அப்பில் வைத்த ஸ்டேட்டஸை எல்லாம் அவனுக்கு காண்பிக்க சிரித்துக் கொண்டான் அவன்.
அவளுடைய குழந்தைத்தனமான புலம்பல் அவனை இரசிக்க வைத்தது.
“இப்ப என்ன.. நீ படத்துக்கு போகணுமா..?” என அவளைப் பார்த்தவாறு கேட்டான் அவன்.
“முடியுமா..?” என உற்சாகக் குரலில் கேட்டாள் அவள்.
அவளுடைய கண்கள் ஒரு கணம் மின்னின.
“முடியும்.. 20 மினிட்ஸ்ல உன்னால ரெடியாக முடியுமா..? 11.30க்கு மதராஸி நைட் ஷோ போகுது.. உன்னை நைட்ல தேட மாட்டாங்கன்னா என்கூட வா.. உன்னை பத்திரமா கூட்டிட்டு போய் படம் பார்த்ததுக்கு அப்புறமா மறுபடியும் இங்க கொண்டு வந்து விடுறேன்..”
“ஆனா ஸ்பைடர் மேன்.. உன்ன மாதிரி என்னால தாவியெல்லாம் வர முடியாது.. எனக்கு உயரம்னாலே பயம்..”
“ஏய்.. அதெல்லாம் நான் பாத்துக்குறேன்டி.. சீக்கிரமா ரெடி ஆகுவியான்னு சொல்லு.. மிட்நைட்ல உன்னை யாராவது தேடி வந்தா பிரச்சனை ஆயிடும்.. அதெல்லாம் யோசிச்சு சொல்லு..”
“எப்பவுமே காலைல 6 மணிக்குத்தான் அம்மா வந்து என்னை எழுப்புவாங்க.. மத்தபடி யாரும் என்னோட ரூமுக்கு வர மாட்டாங்க.. நான் பத்து நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்..” என்றாள் உற்சாகக் குரலில்.
அவளுடைய அழுகை படர்ந்து இருந்த முகத்தில் சிரிப்பு முகிழ்த்ததும் அவனுடைய மனமும் அமைதி அடைந்தது.
“சூப்பர் குயிக்.. சீக்கிரமா ரெடி ஆகு..” என்றவன் அவளுடைய படுக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.
“நான்லாம் அஞ்சு நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்..” என்றவள் அவளுடைய அலமாரியைத் திறந்து விட்டு ஆடைகளை அள்ளி படுக்கையில் போட அவளை அதிர்ந்து பார்த்தான் அவன்.
“என்னடி பண்ற..?”
“எந்த ட்ரஸ் போடணும்னு நான் செலக்ட் பண்ணனும்ல..”
“கிழிஞ்சுது போ..” என்றான் அவன்.
அவனுடைய குரலில் ஒரு கிண்டலான புன்னகை ஒளிந்திருந்தது.
“ஸ்பைடர் மேன்.. நீயே சொல்லு.. இந்த ஃப்ராக் நல்லா இருக்கா.. இல்ல இந்த ஸ்கர்ட் போட்டுக்கவா..? இந்த ஜம்ப் சூட் எனக்கு ரொம்ப க்யூட்டா இருக்கும்னு என் ஃப்ரெண்ட்ஸ் சொல்லுவாங்க.. இதை போடவா..? இல்ல இல்ல.. அப்பா கூட ஷாப்பிங் போகும்போது அன்னைக்கு இதைத்தான் போட்டேன்.. அதனால இந்த ட்ரஸ் வேணாம்..” என்றவள் அதை போடுவதா இல்லை இதை போடுவதா என்று ஐந்து நிமிடங்களைக் கடத்தி இருக்க அவனுக்கோ பொறுமை பறந்தது.
அவள் எடுத்துக் குவித்து வைத்திருந்த ஆடைகளில் அழகிய கருப்பு நிற ஃப்ராக் ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டியவன் “இதை போட்டுக்கோ.. உனக்கு அழகா இருக்கும்..” என்றான்.
“நிஜமாவா..?” என சிரித்தவள் அவன் கொடுத்த ஆடையை எடுத்துக் கொண்டாள்.
“ஸ்பைடர் மேன்.. நான் ட்ரஸ் மாத்தணும்..”
“சோ..?”
“நீ வெளியே போ..”
“பல்கனில இப்போ நிற்கிறது சேஃப் இல்லடி.. இன்னும் நிறைய பேர் தூங்கல.. முன் பிளாட்டில் எல்லாம் லைட் எரியுது.. யாராவது பார்த்தாங்கன்னா எனக்கு பிரச்சனை இல்ல.. உன்னைத்தான் தப்பா நினைப்பாங்க..” என்றவன் “இந்த ரூம்ல பாத்ரூம் இல்லையா..?” எனக் கேட்டான்.
“இருக்கே.. அப்ப நீ பாத்ரூம்ல போய் நில்லு..” என்றதும் அதிர்ந்து விட்டான் அவன்.
“அடிப்பாவி.. நீ போய் பாத்ரூம்ல ட்ரஸ் மாத்து.. நான் எதுக்கு உள்ள போக..?”
“ஐயோ.. அங்க ஈரமா இருக்கும்.. எனக்கு அங்க வச்ச எல்லாம் ட்ரஸ் மாத்தி பழக்கம் கிடையாது.. ப்ளீஸ் ப்ளீஸ்.. அஞ்சு நிமிஷம் நீ உள்ள நின்னா நான் சட்டுன்னு ட்ரஸ் மாத்திடுவேன்..” என அவள் கெஞ்ச,
வேறு வழியின்றி பெருமூச்சு விட்டவன் அந்த அறைக்குள் இருந்த பாத்ரூமுக்குள் நுழைந்து கொள்ள அவனை உள்ளே வைத்து வெளிப் பக்கமாக பூட்டி விட்டாள் வர்ணா.
“அடியேய்.. எதுக்குடி லாக் பண்ற..?”
“பின்ன.. நான் ட்ரெஸ் மாத்தும் போது நீ கதவைத் திறந்து என்னப் பார்த்துட்டேன்னா..?”
“ஹா ஹா.. இதுல எல்லாம் நீ நல்ல தெளிவுடி..” என்றவன் சிரித்துக் கொண்டான்.
அவளும் ஆடை மாற்றத் தொடங்கிவிட அவளுடைய குளியலறையைப் பார்த்தவனுக்கு உதடுகளில் புன் முறுவல்.
அங்கிருந்த கண்ணாடியில் வரிசையாக பல வர்ணங்களில் பொட்டுக்களை ஒட்டி வைத்திருந்தாள்.
பாத்ரூம் சுவற்றில் ‘ஐ ஆம் அ பார்பி கேர்ள்’ என்ற வாசகம் வேறு எழுதப்பட்டு இருந்தது.
அந்த வாசகம் அவளுடைய குழந்தைத்தனத்தை எதிரொலித்தது.
அவனுடைய புன்னகை இன்னும் பெரிதாக விரிந்தது.
அப்படியே திரும்பியவன் அங்கிருந்த பக்கெட்டில் அவளுடைய மேல் உள்ளாடை இருப்பதைக் கண்டு திணறி விட்டான்.
சட்டென தன் பார்வையை சுவற்றில் பதித்துக் கொண்டவனுக்கோ உஷ்ண பெருமூச்சு.
‘கொல்றாளே..’
அவனுடைய மனம் ஒரு கணம் தடுமாறியது.
“பேபி கேர்ள்.. இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்..?”
“டேய்.. நான் என்ன ஆம்பளையா.. உன்ன மாதிரி ரோட்டு கடைல வாங்கிய டீஷர்ட்டை மட்டும் தூக்கி போட்டுட்டு வர்றதுக்கு..? கொஞ்சம் பொறுடா..” என்றதும் அவனுக்கோ புரையேறிவிட்டது.
“சரிடி..” என்றான் பற்களை நறநறத்தபடி.
அவனைக் கண்டால் அனைவரும் நடுங்கிப் போய்விடுவர்.. இவளோ அவனை சிறுவன் போல அல்லவா நடத்துகின்றாள்.
பேருக்கு கூட மரியாதை கொடுப்பதில்லை.
அவனுக்கு அதுவும் பிடிக்கத்தான் செய்தது.
அவளிடம் விளையாட்டாகத்தான் காதல் சொன்னான்.
ஆனால் இப்போது நிஜமாகவே அவள் மீது காதலில் உருகி விடுவோமோ என்ற பயம் அவனுக்குள் தோன்ற ஆரம்பித்து விட்டது.
அவளுடைய வெகுளியான சிறுபிள்ளை குணம் அவனை வெகுவாக ஈர்த்தது.
1 comment
Super super super super super super super interesting,❣️❣️❣️❣️❣️❣️