1.3K
விடியல் – 09
சற்று நேரத்தில் அந்த பாத்ரூம் கதவைத் திறந்து விட்டாள் வர்ணா.
அக்கம் பக்கம் பார்க்க முடியாமல் சுவற்றை வெறித்துக் கொண்டிருந்தவன் அவள் கதவைத் திறந்ததும் வேகமாக அந்தக் குளியலறையை விட்டு வெளியே வந்தான்.
அவனுடைய முகத்தில் ஒரு மெல்லிய தடுமாற்றம் தெரிந்தது.
“டூ மினிட்ஸ் வெயிட் பண்ணு ஸ்பைடர் மேன்.. ஹேர் ஸ்டைல் பண்ணிட்டு வந்துடுறேன்..” என்றவளை முறைத்தவன்,
“நீ இப்படியே பண்ணிட்டு இருந்தா நைட் ஷோக்கு போக முடியாது.. மார்னிங் ஷோவுக்குத்தான் நாம போகணும்.. இந்த மிட்நைட்ல உன்னை யாருடி பாக்கப் போற..? இப்படியே கிளம்பு.. போகலாம்..”
“என்னடா இப்படி சொல்லிட்ட..? என்னை லவ் பண்றேன்னு சொன்னியே.. நீ என்னைப் பாக்க மாட்டியா..?” என அவள் கேட்க அவனுக்கோ சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.
“நீ எப்படி இருந்தாலும் நான் உன்ன பாப்பேன் குல்ஃபி..” என்றான் அவன் ஆழ்ந்த குரலில்.
“அப்போ சரி..” என்றவள் சீக்கிரமாகவே தயாராகி முடித்து விட்டு குளியலறையில் ஒளிர்ந்த மின் விளக்கை அணைப்பதற்காக உள்ளே நுழைந்தவள் அங்கே அவள் கழற்றி வைத்த பிரா பல் இளித்து புன்னகைப்பதைப் போலக் கிடப்பதைக் கண்டதும் அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
‘அச்சோ.. சொதப்பிட்டியே வர்ணா.. பார்த்திருப்பானோ..? கண்டிப்பா பார்த்திருப்பான்.. அஞ்சு நிமிஷம் வரைக்கும் உள்ளயே நின்னானே.. சே.. உன்னைப் பத்தி என்ன நினைச்சிருப்பான்..?’ என மனதுக்குள் புலம்பியவள் சங்கடத்துடன் வெளியே வந்தாள்.
அவளுடைய முகம் மெல்ல சிவந்து போனது.
“எதுக்கு இப்போ உன்னோட முகத்தை இப்படி இஞ்சி தின்ன குரங்கு போல வச்சிருக்க..?”
“அது வந்து..”
“என்ன வந்து போயி..?”
“நீ பாத்ரூம்க்குள்ள ஏதாவது பார்த்தியா ஸ்பைடர் மேன்..?” கைகளைப் பிசைந்தவாறு கேட்டவளைப் பார்த்து அவனுக்கு சிரிப்பு பீறிட்டது.
“உன்னோட மல்டி கலர் பொட்டு பார்த்தேன்..”
“ஐயோ.. அந்த சின்ன பொட்டு எல்லாம் உன் கண்ணுக்குத் தெரிஞ்சுதா..? போச்சு போச்சு..” என தன் கைகளை உதறினாள் அவள்.
“அப்புறம் நீ சுவத்துல எழுதி வச்சதப் பார்த்தேன்..”
“ஐயோ பெருமாளே…” என்றாள் அவள்.
சிரித்தான் அவன்.
“வேற ஏதாவது பார்த்தியா..?” எனக் கேட்டவள்.. ‘ப்ளீஸ் இல்லைன்னு சொல்லிடு..’ என மனதிற்குள் புலம்பினாள்.
“வேற எதையும் நான் பாக்கலையே..” என்றான் அவன் சிரிப்புடன்.
“தேங்க் காட்.. எங்க நீ என்னோட அழுக்கு ட்ரஸ் எல்லாம் பார்த்துட்டியோன்னு பயந்துட்டேன்..”
“சேச்சே..” என்றான் அவன் சிரித்தவாறு.
அவளுடைய முகம் தெளிந்தது.
“சரி.. கிளம்பலாமா..?”
“ஐயோ.. டிக்கெட்டுக்கு பணம் வேணுமே..” என்றவள் தன்னுடைய கல்லூரி பையை ஆராயத் தொடங்கினாள்.
“நான் கொடுக்கிறேன்.. வா..”
“நீயே பாவம்..” என்றவள் நூறு ரூபாய் ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.
“என்கிட்ட இவ்வளவுதான் இருக்குடா..”
“என்கிட்ட இருக்கு குல்ஃபி.. நான் கொடுக்கிறேன்..”
“ம்ம்.. சரி.. பட் இதையும் வச்சுக்கோ..” என்றவள் அந்த நூறு ரூபாயை அவனிடம் கொடுத்த பின்புதான் ஓய்ந்தாள்.
“இப்போ எப்படி வெளியே போறது..? என்னால உன்ன மாதிரி தாவ முடியாது.. சாரி..”
“இட்ஸ் ஓகே.. முதுகுல உப்பு மூட்டை மாதிரி ஏறிக்கோ.. நான் உன்னை கூட்டிட்டு போறேன்..” என்றதும் அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.
“என்னது..? உன் முதுகுல மூட்டை மாதிரி ஏறிக்கணுமா..?”
“எஸ்…”
“என்னை சுமந்துட்டு உன்னால பாய முடியுமா..?”
“அதெல்லாம் எனக்கு ஈஸி தான்.. கம்..”
“ஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. நீ இப்படியே பாய்ஞ்சு பாஞ்சு கீழ வா.. நான் படிக்கட்டு வழியா வந்துடுறேன்..”
“உங்க வீட்ல யாராவது பார்த்தா..?”
“எல்லாரும் செம தூக்கத்தில் இருப்பாங்க.. சத்தமே இல்லாம நான் கீழ வரேன்..” என்றவள்
அவனை பல்கனி வழியாகக் கீழே அனுப்பிவிட்டு தன்னுடைய அறைக் கதவைத் திறந்து பூனை போல நடந்து சத்தமின்றி வீட்டை விட்டு வெளியே வந்தவளுக்கு பயத்தில் இதயம் அதிவேகமாகத் துடித்தது.
இரவின் மௌனம் அவளை மெல்ல அச்சுறுத்தியது.
“நல்லவேளை.. யாருமே பாக்கல..” என்றவள் சற்று தள்ளி நின்ற ஸ்பைடர் மேனைக் கண்டதும் உற்சாகமாக அவனை நெருங்கிச் சென்றாள்.
“இப்போ எப்படி போறது..?” எனக் கேட்டவளிடம் தன் பாக்கெட்டில் இருந்த சாவியைக் காட்டியவன் தள்ளி நிறுத்தி வைத்திருந்த பைக்கைக் காட்டினான்.
“வாவ்.. இந்த பைக்கையும் ஆட்டையப் போட்டுட்டியா..?” எனக் கேட்டாள் அவள்.
“ஆ.. ஆமா.. திருட்டு பைக்தான்..” என்றான் அவன்.
“சாப்பிட திருடுவது எல்லாம் சரி.. ஆனா இவ்வளவு எக்ஸ்பென்ஸிவான பொருள் திருடுறது தப்பு ஸ்பைடர் மேன்..”
“அப்போ நீ நடந்து வா.. நான் பைக்ல போறேன்..” என்றான் அவன்.
“அச்சச்சோ.. இல்ல இல்ல.. நான் எதுவுமே சொல்லல.. நானும் உன் கூட பைக்லயே வரேன்..” என்றவள் அவனுடன் நடந்தாள்.
பைக்கை நெருங்கி அதை ஸ்டார்ட் செய்தவன் பைக்கில் வைத்திருந்த ஹெல்மெட்டை எடுத்து அணிய அவன் பின்னே ஏறி அமர்ந்து கொண்டாள் வர்ணா.
“டேய்.. பயமா இருக்குடா..”
“எதுக்கு பயம்..? நான் உன்னை எங்கேயாவது இப்படியே கடத்திட்டு போயிருவேன்னு நினைக்கிறியா..?”
“சேச்சே.. நீ அவ்வளவு ஒர்த்லாம் இல்லை.. தியேட்டர்ல யாராவது தெரிஞ்சவங்க பார்த்தா என் சோலி முடிஞ்சிரும்..”
“அதெல்லாம் யாரும் இருக்க மாட்டாங்க.. வேணும்னா இந்த மாஸ்க் போட்டுக்கோ..” என்றவன் தன் பாக்கெட்டில் இருந்த மாஸ்கை எடுத்துக் கொடுக்க அதை வாங்கி அணிந்து கொண்டாள் அவள்.
அடுத்த பத்தாவது நிமிடத்தில் தியேட்டர் வாயிலில் வண்டியை நிறுத்தியவன் டிக்கெட் எடுத்துக் கொண்டு அவளைப் பாதுகாப்பாக உள்ளே அழைத்துச் சென்றான்.
இரவின் குளிர்ந்த காற்று அவர்களைத் தழுவியது.
ஒரு சில பெண்கள்தான் இருந்தனர்.
பெரும்பாலும் ஆண்களின் கூட்டம் தான் அங்கே அதிகமாக இருந்தது.
தயங்கி பயந்து ஒடுங்கி நின்றவளின் கரத்தை அழுத்தமாகப் பற்றிக் கொண்டவன் “எதுக்கு பயப்படுற..? நான் உன் பக்கத்துல இருக்கேன்ல..? நான் இருக்கும் வரைக்கும் உனக்கு எந்தப் பிரச்சனையும் வராது.. பயப்படாம ஃப்ரீயா இரு..” என்றான்.
“இல்ல.. லாஸ்ட் டைம் ஃப்ரெண்ட்ஸ் கூட மேட்னி ஷோக்கு தியேட்டருக்கு வந்தப்போ பசங்க ரொம்ப டீஸ் பண்ணாங்க.. வேணும்னே இடிச்சாங்க.. அதான் பயமா இருக்கு..”
“டோன்ட் வொரி பேபி கேர்ள்..” என்றவன் அக்கணம் முதல் அவளுக்கு பாதுகாப்பு அரணாக மாறிப் போனான்.
அவனுடைய புன்னகை அவளுக்கு ஒரு உறுதியை அளித்தது.
உள்ளே சென்று அமர்ந்த ஐந்தாவது நிமிடத்தில் படம் ஆரம்பமானது.
“தேங்க்ஸ் டா..” என்றவள் இரசித்து படத்தைப் பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
அவனோ அவளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளுடைய முகத்தில் மாறி மாறி தோன்றிய உணர்ச்சிகள் அவனை மெல்ல இழுத்தன.
அவனுக்கு இந்தப் படம் பார்ப்பதில் எல்லாம் அவ்வளவாக ஆர்வம் இல்லை.
ஒரு சில காட்சிகளில் அவள் பிழியப் பிழிய அழுதுவிட அவனுடைய கைக் குட்டையை எடுத்து அவளிடம் நீட்டினான் அவன்.
“சிவா பாவம்ல..”
“ம்ம்.. பாவம்தான் பாவம்தான்..” வேறு வழியின்றி ஒப்புக் கொண்டான் அவன்.
சற்று நேரத்தில் இடைவெளி வந்ததும் “ஏதாவது சாப்பிடுறியா..?” எனக் கேட்டான் அவன்.
ஏற்கனவே அவனுக்கு செலவு வைத்து விட்டோம் இதில் உணவு வேறு வாங்கி உண்ண வேண்டுமா என நினைத்தவள் “வேண்டாம்..” என்று தலையசைத்தாள்.
ஆனால் சற்று தள்ளி அமர்ந்திருந்த ஜோடியோ பாப்கார்ன் ஐஸ்கிரீம் ஸ்நாக்ஸ் என வாங்கி வந்து இருக்கையில் அமர்ந்து உண்ணத் தொடங்கி விட இவளுடைய பார்வையோ அந்தப் பெண் வைத்திருந்த ஐஸ்கிரீமை வட்டமிட்டது.
“ஏய்.. எதுக்குடி அங்கயே பாக்குற..?”
“ஐஸ்கிரீம் சாப்பிடணும் போல இருக்கு.. அந்தப் பொண்ணு கையில எனக்குப் பிடிச்ச சாக்லேட் ஃபிளேவர் ஐஸ்கிரீம் இருக்குடா..”
“ஏய்.. என்னடி பண்ற இடியட்..? நான்தான் உன்கிட்ட அப்பவே ஏதாவது வேணுமான்னு கேட்டேன்ல..?”
“இப்போ எதுக்கு திட்டுற..? உனக்கு செலவு வைக்கக் கூடாதுன்னு நினைச்சேன்.. ஆனா எனக்கும் பசிக்கும்ல.. பாரு அந்தப் பொண்ணு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம என்னைப் பாக்க வச்சு சாப்பிடுறா.. இன்னைக்கு அவளுக்கு வயிறு வலி கன்ஃபார்ம்..” என இவள் சாபம் விட அவனுக்கோ தூக்கிவாரிப் போட்டது.
‘இவளை இப்படியே விட்டால் இங்கே சாப்பிடும் அனைவருக்கும் சாபத்தை அள்ளி வழங்கி விடுவாள்..’ என்பதை உணர்ந்தவன்,
“இங்கேயே பத்திரமா இரு.. நான் போய் ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வரேன்..” என்றான்.
“ஆனா உன்கிட்ட பணம்..”
“இருக்குடி இருக்கு..” என்றவன் அங்கிருந்து எழுந்து சென்றுவிட அவளோ தன் வயிற்றைத் தடவிக் கொண்டாள்.
சற்று நேரத்தில் ஸ்நாக்ஸ் பாப்கார்ன் ஐஸ்கிரீம் சாக்லேட் என அதிகளவான தின்பண்டங்களுடன் அவன் வந்து சேர அவளுக்கோ முகம் முழுவதும் புன்னகை மலர்ந்தது.
அனைத்தையும் வாங்கி தன் மடியில் வைத்துக் கொண்டவள் இரசித்து உண்ண ஆரம்பித்து விட மீண்டும் அவளை இரசிக்கத் தொடங்கி விட்டான் அவன்.
“கடவுளே.. அந்தப் பொண்ணுக்கு வயிறு வலிக்கக் கூடாது.. அவசரப்பட்டு சாபம் போட்டுட்டேன்.. கண்டுக்காத..” என்று வேறு இடையில் சொல்லிக் கொண்டாள் அவள்.
“சரியான சேட்டைப் பிடிச்சவடி நீ..” என்றான் அவன் சிரிப்போடு.
கையில் இருக்கும் தின்பண்டங்கள் யாவும் இருக்கும் வரை சாப்பிட்டுக் கொண்டே படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவள் உணவுகள் காலியான சற்று நேரத்தில் தூக்கத்தில் கண்கள் சொக்கி அவனுடைய தோளில் சாய்ந்துவிட அவன் மனமோ உருகியது.
அவளுடைய மென்மையான மூச்சு அவனை மெல்லத் தொட்டது.
அவளைத் தொந்தரவு செய்ய அவனுக்கு சிறிதளவும் இஷ்டமில்லை.
வசதியாக தன் தோளைச் சற்று தாழ்த்தி அவள் புறம் சாய்ந்து அமர நன்றாக அவனுடைய தோளில் சரிந்து தூங்கிப் போனாள் வர்ணா.
அவளுடைய வெண்ணிற வதனத்தை மறைத்து கூந்தல் கற்றைகள் முகத்தில் விழ மெல்ல அவற்றை அவன் விலக்கி விடும் போது அவளுடைய ஒரு பக்க கன்னத்தை அவனுடைய விரல்கள் எதிர்பாராத விதமாக தீண்ட நேரிட்டது.
அவளுடைய மென்மையை உணர்ந்து சிலிர்த்துப் போனான் அவன்.
அவனுடைய கரமோ உயர்ந்து மீண்டும் அவளுடைய கன்னத்தை தீண்டி விடும் ஆவலுடன் அவளை நோக்கி நீண்டது.
சட்டென தன் கரத்தை இழுத்துக் கொண்டான் அவன்.
அவனை நம்பி இவ்வளவு தூரம் வந்திருக்கிறாள் அல்லவா..? தன்னை நம்பித்தானே இப்படி நிம்மதியாக உறங்குகின்றாள்.. அவளுக்கே தெரியாமல் அவளை தொட்டு உணர்வது தவறு என்று எண்ணியவன் அதன் பின்னர் அவளை தீண்டுவதைப் பற்றி மனதால் கூட எண்ணவில்லை.
இன்னும் பத்து நிமிடங்களில் படம் முடிந்துவிடும் என்பதை உணர்ந்தவன் மெல்ல அவளுடைய கரத்தைப் பற்றி அழுத்தம் கொடுக்க விழிகளைக் கசக்கியவாறு கண்களைத் திறந்தவள் அவன் தோளில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்து பதறி விலகினாள்.
“அச்சச்சோ.. பாதி படத்துலையே தூங்கிட்டேனா..?”
“ம்ம்..” என்றான் அவன்.
அவளுடைய தேகத்தின் நறுமணம் அவனுடைய உடலில் அப்பிக் கொண்ட உணர்வு அவனுக்குள்.
“என்னை எழுப்பி இருக்கலாமில்ல..?”
“அசந்து தூங்கின.. பாவமா இருந்துச்சு.. அதான் டிஸ்டர்ப் பண்ணல..”
“நல்லவேளை.. கிளைமாக்ஸ் முடியறதுக்குள்ள எழுந்துட்டேன்..” என்றவள் மீண்டும் படத்தைப் பார்க்கத் தொடங்கி விட அவளுடைய கரத்தைப் பிடித்தபடியே இருந்தான் அவன்.
ஏனோ அவனுக்கு அவளுடைய கரத்தை விடுவிக்க வேண்டும் என்ற எண்ணமே எழவில்லை.
“வித்யூத் செமயா இருக்கான்ல.. ப்பா.. என்ன பாடி.. எப்படித்தான் இப்படிலாம் பாடி பில்ட் பண்ணுறாங்களோ தெரியல..” என்றவள் அந்தப் படத்தில் வந்த வில்லனை ரசிக்க அவனுக்கு காதில் புகை வராத குறைதான்.
“நான் செமையா சைட் அடிப்பேன் தெரியுமா..?” என்றவளை அதிர்ந்து பார்த்தவன்
“வாட்..?” என்றான்.
“ஆமாடா.. சூப்பரா இருந்தா சைட் அடிக்கலாம்.. தப்பு இல்ல..” என அவள் மீண்டும் வித்யூத்தைப் பார்த்து புகழத் தொடங்கி விட அவனுக்கோ எரிச்சலாக வந்தது.
அவளுடைய இரசனைப் பார்வையை மாற்ற வேண்டும் என எண்ணியவன் அவளுடைய ஆடை சற்று நெகிழ்ந்திருப்பதைப் பார்த்தான்.
“குல்ஃபி.. ட்ரெஸ்ஸை அட்ஜஸ்ட் பண்ணு..”
“ம்ம்.. தேங்க்ஸ்டா..” என்றவள் வெளியே தெரிந்த தன்னுடைய உள்ளாடையின் ஸ்ட்ராப்பை சரி செய்துவிட்டு மீண்டும் திரையை நோக்கித் திரும்பினாள்.
“கலர் கலராதான் இன்னர்ஸ் போடுவியோ..?” எனக் கேட்டான் அவன் வேண்டுமென்றே.
அவளுக்கோ தூக்கிவாரிப் போட்டது.
அவளோ அவனை அதிர்ந்து பார்க்க “இல்ல.. பாத்ரூம்ல ப்ளூ கலர்.. இப்போ பர்பிள் கலர்..” என்றதும் சட்டென தன் முகத்தை மூடிக் கொண்டாள் அவள்.
‘போச்சு போச்சு.. பாத்ரூம்ல இருந்ததைப் பார்த்துட்டானே.. ஐயோ..’ என மனதிற்குள் அலறினாள் அவள்.
அவளுடைய கவனம் அந்த நடிகனிடமிருந்து திரும்பி விட்டதை உணர்ந்தவனுக்கு அப்போதுதான் திருப்தியாக இருந்தது.
அவள் முகம் சிவந்து வேறு பக்கம் திரும்பி விட தனக்குள் சிரித்துக் கொண்டான் அவன்.
‘என்னத் தவிர நீ வேற யாரையும் ரசிக்கக் கூடாது குல்ஃபி..’ என எண்ணிக் கொண்டான் அவன்.
🥀🥀
2 comments
Suuuperrrrr💗
Semma ❣️❣️❣️❣️❣️