எப்போதும் நாடகத்தை உற்சாகமாக ரசிக்கும் சுஜாதாவோ, இப்போது தன்னுடைய மருமகள் நந்தினியின் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
நந்தினியை பேச அழைத்து வந்து பத்து நிமிடங்களுக்கு மேலாகியும் கூட அவர் வாயே திறக்கவில்லை.
‘இவர் ஏதாவது கேட்பாரா..? இல்லை நானே வெளிப்படையாக கேட்டுவிடலாமா..?’ என மனதிற்குள் எண்ணத் தொடங்கி விட்டாள் நந்தினி.
சுஜாதாவுக்கோ, ‘கேட்கலாமா..? வேண்டாமா..?’ என்ற தயக்கம்.
நந்தினிக்கோ, ‘இவர் பேசுவாரா..? இல்லையா..?’ என்ற சந்தேகம்.
எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தார்களோ தொலைக்காட்சியில் ஒரு நாடகம் முடிந்து அடுத்த நாடகமும் தொடங்கி விட்டது.
இதற்கு மேல் பொறுக்க முடியாமல்,
“ஏதோ பேசணும்னு சொல்லிட்டு இப்படி அமைதியா இருக்கீங்களே.. என்ன ஆச்சு அத்தை..?” என்று கேட்டு விட்டாள் நந்தினி.
“அது வந்து.. என் பையன் உன்கிட்ட எப்படிம்மா நடந்துக்குறான்..? சிரிச்சு பேசுறானா..?” என மெல்லக் கேட்டார் சுஜாதா.
அவருடைய குரலில் கவலை கலந்தொலித்தது.
“அவருக்கு சிரிக்கத் தெரியுமா அத்தை..?” என்று கேட்டாள் நந்தினி.
அவளுடைய கண்களில் ஆதங்கம் மின்னியது.
அந்த ஒற்றைக் கேள்வியில் சுஜாதாவுக்கு அனைத்தும் புரிந்துவிட்டது.
‘அப்போ அவன் இவகிட்டயும் இப்படித்தான் நடந்துக்குறானா..?’ என எண்ணியவருடைய மனமோ பதறியது.
“அப்போ உன்கூடயும் இவன் இப்படித்தான் நடந்துக்குறானாம்மா..? எங்க முன்னாடிதான் ரூடா இருக்கான்னு நினைச்சேன்.. தனியா உன்கிட்ட நல்லா நடந்துக்குவான்னு நினைச்சேன்… அவனப் பத்தி தெரிஞ்சி இருந்தும் இப்படி நினைச்சது என்னோட தப்பு தான்..” என்றார் சுஜாதா.
“அவர் கூட இருக்கும் போது ஏதோ மிலிட்டரிக்கு ஆள் எடுக்கிற மாதிரி பீல் ஆகுது அத்த.. நான் என்ன கேட்டாலும் ஒரே வார்த்தையில பதில் சொல்றாரு.. அதுவும் ரொம்ப அழுத்தமா.. அவர் அப்படி பேசும்போது எனக்கு ரிப்ளை பண்ணவே முடியல.. பயமா இருக்கு..” என்றாள் அவள்.
சுஜாதா மீண்டும் அமைதியாகிப் போனார்.
“மறுபடியும் எதுக்கு அமைதியாயிட்டீங்க..?” என்று கேட்டாள் நந்தினி.
“என் பையன்கிட்ட இருந்து உன்னை எப்படி காப்பாத்தலாம்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்மா.. உன்னோட முகத்தை எந்தப் பக்கம் பார்த்தாலும் ரொம்ப அப்பாவியா இருக்க.. அழகா வேற இருக்க.. ஆனா இப்படி என் பையன்கிட்ட சிக்கிட்டியேன்னு நினைச்சா கவலையா இருக்கு..” என்றார் சுஜாதா.
நந்தினிக்கு அவருடைய பேச்சில் சிரிப்பு வந்து விட்டது.
“என்னத்த இப்படி சொல்றீங்க..? நீங்க அவருக்கு அம்மா..” என்றாள் அவள் சிரித்தபடி.
“இருந்துட்டு போகட்டும்..” என்ற சுஜாதாவும் சிரித்தார்.
“கல்யாணம் ஆகி ரெண்டு நாள் ஆயிருச்சு.. அவரோட முகத்துல சிரிப்பை இன்னும் நான் பார்க்கவே இல்லை தெரியுமா..?”
“அப்படி என்னமா நடந்துச்சு..?” என ஆர்வமாகக் கேட்டார் சுஜாதா.
“இன்னைக்கு தோசை வேணாம்னு சொல்லிட்டாரு.. மறுபடியும் கேட்டதுக்கு ‘டைம் இல்ல’ன்னு டெரரா பதில் சொன்னாரு.. ஆனா நான் விடலையே.. ஸ்ட்ரைட்டா அவர் முன்னாடி நின்னு தோசையை வாய்க்கு நேரா நீட்டிட்டேன்..” என்று நந்தினி சொல்ல, சுஜாதாவின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.
“என்ன பண்ணினான்..? திட்டினானா..? இல்ல பிளேட்டை தட்டி விட்டானா..?” என்று பதறினார் அவர்.
“அமைதியா சாப்பிட்டாரு..” என இமை சிமிட்டிச் சிரித்தாள் நந்தினி.
“என்னமா சொல்ற..? அதனாலதான் இன்னைக்கு காலைல மழை பெய்ததா..?” என்று சுஜாதா கேட்டதும், நந்தினிக்கோ சிரிப்பு பீறிட்டது.
“சொந்த மகனையே கலாய்க்க உங்களால மட்டும் தான் முடியும்..” என்றாள் அவள் சிரித்தபடி.
“அதை விடு மா.. நிஜமாவே நீ ஊட்டிவிட்டு அவன் அமைதியா சாப்பிட்டானா..?” என சுஜாதா ஆச்சரியமாகக் கேட்டார்.
“ஆமா.. சாப்பிட்டதுக்கு அப்புறம் ‘தேங்க்ஸ்’ வேற சொன்னாரு..” என்று நந்தினி கூற, சுஜாதாவின் முகம் மலர்ந்தது.
“அட.. அட.. என் மருமகன்னா கொக்கா.. இப்போ எனக்கு நம்பிக்கை வந்துருச்சு்மா.. நீதான் இவனை எப்படியாவது ஸ்ட்ரிக் போலீஸ் ஆபீஸர்ல இருந்து மன்மதனா மாத்தணும்..” என்றார் சுஜாதா புன்னகையுடன்.
“ஹா.. ஹா.. மன்மதனா…? வாய்ப்பு இருக்கானு தெரியலையே..”
“அவன் ரொம்ப பிடிவாதக்காரன் நந்தினி.. அவன் வேணாம்னு சொன்னா சொன்னதுதான்.. நாம என்ன சொன்னாலும் கேட்க மாட்டான்.. ஆனா நீ கொடுத்ததை அமைதியா சாப்பிட்டு, தேங்க்ஸ் சொல்லி இருக்கானே.. இதுவே எவ்வளவு பெரிய மாற்றம் தெரியுமா..?” என்றார் சுஜாதா.
அந்த வார்த்தைகளைக் கேட்ட நந்தினிக்குள் ஒருவாதமான பரவசம் பரவியது.
“எனக்கு நீங்க இப்படி ஜாலியா பேசுறது ரொம்ப பிடிச்சிருக்கு அத்த.. எப்பவும் என்கூட இப்படியே பேசுங்க..” என புன்னகைத்தாள்.
“சரிமா.. நீ போய் ரெஸ்ட் எடு.. இன்னும் கொஞ்ச நேரத்துல உன் புருஷன் வந்துருவான்..” என்றார் சுஜாதா.
“ஈவினிங் வந்துருவாரா..?” எனக் கேட்டாள் நந்தினி.
“சில நேரம் லேட் ஆகும்.. சில நேரம் ஈவினிங்ல வருவான் மா..” என்று சுஜாதா பதிலளித்தார்.
“ம்ம்.. சரி அத்தை..” என்றவள் தன்னுடைய அறைக்குள் நுழைந்தாள்.
சற்று நேரத்தில் அவளுடைய வீட்டிலிருந்து அழைப்பு வந்தது.
அவளுடைய அன்னையின் விசாரிப்புகள் யாவும் யுகேஷ் வர்மாவை சுற்றியே இருந்தன.
திருமணத்தன்று எழுந்து சென்றவன், அதற்குப் பிறகு அவர்களுடன் பேசவே இல்லை அல்லவா.
‘மறுவீட்டு அழைப்புக்கு வருவானா..?’ என்று அவர்கள் கவலைப்பட்டனர்.
பெற்றோரை கவலையில் தள்ள விரும்பாதவள் அவனுக்கு அதிகளவான வேலைகள் இருப்பதை புரிய வைத்து நல்லவிதமாக பேசி முடித்து அழைப்பைத் துண்டித்தாள்.
அவனை விட்டுக் கொடுக்காமல் எப்படியோ சமாளித்து விட்டாள்.
ஆனால் அவனை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை அவளுக்கு கிஞ்சித்தும் இல்லை.
‘என்ன மாதிரி எந்தப் பொண்டாட்டியும் கட்டின புருஷனைப் பார்த்து இவ்வளவு கன்ஃபியூஸ் ஆக மாட்டாங்க..’ என்று எண்ணியவள், சோபாவில் கிடந்த துவாலையைப் பார்த்தாள்.
அது அவளுடைய கணவனுடையது.
அவன் உடற்பயிற்சி செய்துவிட்டு வியர்வையைத் துடைத்தவாறு சோபாவில் போட்டது நினைவுக்கு வந்தது.
அதை எடுத்தவளுக்கு அவனுடைய உடலின் வியர்வை வாசனை நாசியைத் தீண்டியது.
சட்டென அவன் தன்னை நெருங்கி பின்னந் தலையில் கை வைத்து முத்தமிட முயன்ற தோற்றம் மனக் கண்ணில் தோன்றி மறைந்தது.
அந்த நினைவில் நந்தினியின் இதயம் படபடத்தது.
துவாலையை ஆடை கழுவும் இயந்திரத்தில் போட்டவள் ‘இவரை மாற்ற முடியுமா..?’ என்ற கேள்வியில் மூழ்கினாள்.
அறைக்குள் வந்தவன் அவள் இருப்பதைப் பொருட்படுத்தவே இல்லை.
காக்கி சட்டையின் பட்டன்களைக் கழற்றியவாறு குளியலறைக்குள் சென்று விட்டான்.
திரும்பி வந்தபோது ஷார்ட்ஸும் பனியனும் அணிந்திருந்தான்.
முகத்தில் அதே இறுக்கம்.
நந்தினிக்கோ பெருமூச்சு வந்தது.
“ஏங்க..?” என்று மெல்ல அழைத்தாள் அவள்.
“சொல்லு..” என்ற ஒற்றை வார்த்தையில் பதில் வந்தது.
“எனக்கு கொஞ்சம் திங்ஸ் வாங்கணும்..” எனத் தயங்கியபடி கூறினாள் அவள்.
“பணம் வேணுமா..?” என்றவன் பர்ஸிலிருந்து கார்டை எடுத்து நீட்டினான்.
‘அடப்போடா..’ என்று மனதிற்குள் நினைத்தவள்,
“என்கிட்டயும் கார்ட் இருக்கு.. அதுல பணமும் நிறையவே இருக்கு..” என்று பட்டென பதிலளித்தாள்.
“ஃபைன்.. பிடிச்சதை வாங்கிக்கோ..”
“ப்ச்.. நான் எப்படி மாலுக்கு போறது..?” என்று கேட்டாள் நந்தினி.
“என்னோட ஜீப் எல்லாம் உனக்கு தர முடியாது.. வீட்ல நிக்கிற காரை எடுத்துக்கோ.. ட்ரைவிங் தெரியும்ல..?”
அவளுடைய அப்பாவின் காரை எத்தனையோ முறை ஓட்டியிருந்தவள், ‘தெரியும்’ என்று சொன்னால் தன்னை தனியாக அனுப்பிவிடுவான் என்று நினைத்து, “தெரியாது..” என்று பொய் சொன்னாள்.
‘இவனுடன் கொஞ்ச நேரம் செலவிட முடியாதா..?’ என்று அவளுடைய மனம் ஆதங்கப்பட்டது.
அவளை அழுத்தமாகப் பார்த்தவன் “ஓகே.. நீ ரெடி ஆயிட்டு சொல்லு.. ஷாப்பிங்குக்கு ரெடி பண்ணுறேன்..” என்றான்.
“ஷாப்பிங்கு ரெடி பண்ண போறீங்களா..?” என்று புரியாமல் கேட்டாள் அவள்.
அவனிடம் பதில் இல்லை.
பெருமூச்சுடன் கீழே சென்றவள், அவனுக்கு காபி தயாரித்து வந்து கொடுத்தாள்.
அவனுக்கு பிடித்தவாறு சுகர் குறைவாக இருக்கும்படி தயாரித்திருந்தவள் அதை அவனிடம் கொடுத்துவிட்டு சற்று நேரத்தில் வெண்ணிற சுடிதார் அணிந்து துப்பட்டாவை ஒரு பக்கமாக பின் குத்தி அழகாக தயாராகினாள்.
இந்த அழகை இரசிக்க வேண்டியவன் கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல அல்லவா பார்த்து வைக்கிறான்.
தலை விதி என எண்ணிக் கொண்டவள்,
“நான் ரெடி..” என்று அவன் முன்னே வந்து நின்றாள்.
“டூ மினிட்ஸ் வெயிட் பண்ணு..” என்றவன்,
தன்னுடைய போனை எடுத்து “மோகன்.. கொஞ்ச நேரத்துல நந்தினி கீழே வருவா.. அவ எங்க போகணும்னு கேட்டு அழைச்சிட்டு போ..” எனக் கூறி அழைப்பைத் துண்டித்தான்.
“ட்ரைவர்கிட்ட சொல்லிட்டேன்.. நீ போயிட்டு வா..” என்றவன் லேப்டாப்பை திறந்து வேலையில் மூழ்கிவிட நந்தினியோ அதிர்ந்து போனாள்.
தன்னை அழைத்துச் செல்வது இவனுடைய கடமை அல்லவா..? எனக்காக ஒரு மணி நேரம் கூட செலவழிக்க முடியாதா..?
அவளுடைய மனம் மருகியது.
திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக தன்னவனுடன் வெளியே செல்லலாம் என எண்ணியவளின் ஆசைகள் உடைந்து நொறுங்கின.
அழுகையை அடக்கிக்கொண்டவள், “உங்களால என்கூட வர முடியாதா..?” என்று வாய் திறந்து கேட்டு விட்டாள்.
அவளை நிதானமாகத் திரும்பிப் பார்த்தவன், “நீ ஷாப்பிங் பண்ணுறதுக்கு நான் எதுக்கு வரணும்..?” என்று கேட்டான்.
‘என்ன கேள்வி இது..?’ என்று அவனைப் பார்த்தவள்,
“நமக்கு கல்யாணம் ஆயிருச்சு.. முதல் முறையா வெளியே போறேன்.. உங்ககூட போனா தானே சரியா இருக்கும்..” என்றாள் மெல்லிய குரலில்.
“நீ படிச்ச பொண்ணு தானே.. இப்படித்தான் முட்டாள்தனமா பேசுவியா..? யார்கூட வெளியே போனா என்ன..? உன்னோட தேவை முடியுதா இல்லையாங்குறதுதான் முக்கியம்.. என்னவிட ட்ரைவர் ரொம்ப நல்லா வெயிட் பண்ணி உனக்கு ஹெல்ப் பண்ணுவான்.. அவன் கூடவே கிளம்பு..” என்றவன் அத்துடன் பேச்சு வார்த்தை முடிந்தது என்பது போல ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் லேப்டாப்பில் மூழ்கி விட,
நந்தினிக்கோ அடக்கி வைத்த கண்ணீர் கன்னத்தில் வழிந்தது.
எப்படி அவனை நெருங்க முயன்றாலும் ஏமாற்றத்தை அல்லவா தழுவிக் கொள்கிறாள்.
3 comments
Ivan ahh purinjukave mudiyala yeee🥲…ipdiyum ma irupanga…. pavom Nandhini❗
Bad husband 💔
Super super super super super super interesting