2.7K
விடியல் – 11
சில நிமிடங்கள் அவன் முன்னே அமைதியாக நின்றிருந்தாள் நந்தினி.
அவனுடைய மனம் மாறிவிடாதா என்ற ஏக்கம் அவளுக்கு.
ஆனால் அவனோ நீ இங்கே எத்தனை மணி நேரம் நின்றாலும் என்னுடைய மனம் மாறாது என்பது போல மடிக்கணினியில் விசைப் பலகையை அழுத்திக் கொண்டிருந்தான்.
ஒரு கட்டத்தில் அவளுக்கு வெறுத்துப் போனது.
இவள் எதற்கு இவனிடம் கெஞ்ச வேண்டும்..?
இதெல்லாம் மனைவிக்கு அவன் செய்ய வேண்டிய கடமை என்பது அவனுக்கு புரியவே இல்லையே.
மனம் உவந்து செய்ய வேண்டிய வேலைகள் அல்லவா இவை..
அவள் வற்புறுத்தினாதான் அவன் வருவான் என்றால் அதற்கு அவன் வராமலேயே இருக்கலாம் என எண்ணினாள்.
அவள் வற்புறுத்தி அழைத்தாலும் அவன் வரமாட்டான் என்பது வேறு விடயம்.
வேறு வழியின்றி தன்னுடைய ஹேண்ட் பேக்கை எடுத்துக் கொண்டவளின் முகம் நன்றாக சோர்ந்து போய் விட்டது.
அவனிடம் சொல்லக் கூட பிடிக்கவில்லை.
வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறியவள் தன்னுடைய அத்தையைத்தான் தேடிச் சென்றாள்.
“வாவ் இவ்வளவு அழகா ரெடியாகி எங்கம்மா கிளம்பிட்ட என் பையன் உன் கூட வர்றானா..” என விழிகளில் ஆசை மின்ன கேட்டவரைப் பார்த்து,
“அவருக்கு நான் பொண்டாட்டியா இல்ல அந்த லேப்டாப் பொண்டாட்டியான்னு தெரியல அத்தை.. வந்ததுல இருந்து அதைத்தான் நோண்டிக்கிட்டே இருக்காரு..” என்றாள் சலிப்போடு.
“அப்போ நீ தனியாவா போற..?”
“ட்ரைவர் கூட போறேன்..” என்றவளைப் பார்த்ததும் அவருக்கோ கவலையாகிப் போனது.
“நான் உன் கூட வரட்டுமா..”
“இல்ல அத்தை.. இன்னும் கொஞ்ச நேரத்துல மாமா வந்துருவாரு.. இப்போ அமுதா வேற வீட்டுல தனியா இருப்பா.. எனக்கு ஷாப்பிங் தனியா போய் பழக்கம்தான்.. சோ நோ ப்ராப்ளம் நான் பாத்துக்குறேன்..” என்றவளுக்கு குரல் உடையாமல் பேசவே சிரமமாக இருந்தது.
அவள் இதுவரை தனியாக வெளியே சென்றதே இல்லை.
அவள்தான் அவளுடைய தந்தையின் லிட்டில் பிரின்சஸ் ஆயிற்றே.
அவள் எங்கே செல்வதாக இருந்தாலும் அவர் கூடவேதான் அழைத்துச் செல்வார்.
தன்னுடைய வேதனையை அவரிடம் காட்டிவிடக்கூடாது என சீராக பேசி முடித்தவள் தன்னுடன் வருவதாக கூறியவரை மறுத்துவிட்டு கிளம்பி விட்டாள்.
அவளுக்காக வாயிலில் கார் காத்திருந்தது.
“வணக்கம் மேடம் நான் ட்ரைவர் மோகன்..” என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் அவர்.
அவரைப் பார்த்து “வணக்கம் அண்ணா என்னோட பேர் நந்தினி..” என்றாள் சிரித்த முகமாக.
“தெரியும் மா..” என்றவர் அவளுக்காக கார்க் கதவை திறந்து விட முயற்சிக்க சட்டென வேண்டாம் என்றவள் தானே கார்க் கதவை திறந்து உள்ளே அமர்ந்து கொண்டாள்.
அதன் பின்னர் அவள் கூறிய இடத்திற்கு கார் வேகமாக நகரத் தொடங்கியது.
அவளுடைய மனதிலோ வெறுமை.
நல்ல பதவி.. நல்ல குணம்.. எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்றுதான் இந்த திருமணத்திற்கு சம்மதித்திருந்தாள் அவள்.
ஆனால் கொஞ்சமாவது மனிதனாக நடந்து கொள்ளும் குணம் அவனிடம் இல்லை என்பது பற்றி அவளுக்குத் தெரியாமல் போய்விட்டதே.
இவன் இப்படி ஒரு சிடுமூஞ்சியாக இருப்பான் என நினைத்திருந்தால் அவள் சற்றும் இந்த கல்யாணத்திற்கு சம்மதித்திருக்கவே மாட்டாள்.
இனி என்ன செய்வது..?
இதெல்லாம் காரணம் என்று சொல்லி அவளுடைய வீட்டிற்கு அவளால் திரும்பிச் சென்று விட முடியாதே.
இதற்காகவே காத்திருக்கும் சமூகம் அவளைக் குத்திக் கிழித்து விடுமே.
வாழ்க்கையில் தோற்றுவிட்டாள் என்றல்லவா பேசுவார்கள்.
முடிந்த அளவிற்கு இந்த வாழ்க்கையை சீர்படுத்த அவள் நினைத்தாலும் அவன் பிடி கொடுக்கின்றான் இல்லையே..
இரு கை தட்டினால் தானே ஓசை எழும்.
அவள் மட்டும் போராடி என்னதான் கிடைத்து விடப் போகின்றது..?
சோர்வோடு மாலின் உள்ளே நுழைந்தவள் தனக்கு அத்தியாவசியமான பொருட்களை வாங்கிக் கொண்டாள்.
இன்னும் சில நாட்களில் மாதவிடாய் வேறு வந்துவிடும்.
இதற்காகவெல்லாம் அவனிடம் சென்று அவளால் நிற்க முடியாது.
தேவையான அனைத்தையும் வாங்கி முடித்துவிட்டு பில் போடுவதற்காக வந்தவள் தன் மீது யாரோ வேகமாக மோதியதில் பதறி தன் கரங்களில் இருந்த பைகளை கீழே தவற விட்டாள்.
“சாரி சாரி தெரியாம மோதிட்டேன்..” எனப் பதறியவாறு சொன்னவள் எதிரே நின்றவனை பார்க்க அவனுடைய முகத்திலோ கோனல் புன்னகை.
“சாரிடி நான் தெரிஞ்சேதான் மோதினேன்..” என்றான் அவன்.
“ஏய் பொறுக்கி..” எனச் சீறியவளுக்கு கோபம் கழுத்து வரை வந்தது.
அப்படியே அவனுடைய கன்னத்தில் சப்பென ஒன்று வைக்க வேண்டும் என்ற ஆத்திரம் வந்தாலும் பொது இடத்தில் இதற்கு மேல் பிரச்சனை வேண்டாம் என எண்ணியவள் கீழே விழுந்த தன்னுடைய பைகளை எடுத்துக் கொண்டு நகரத் தொடங்க.
“சும்மா மெது மெதுன்னு இருக்காடா.. அவ்ளோ சாப்டான உடம்பு மச்சான்..” என்றவாறு அருகே இருந்த அவனுடைய நண்பனிடம் கூறிச் சிரித்து கொண்டே அவளைப் பார்த்து இமை சிமிட்டி விட்டு அவன் நகர்ந்து விட அவளுக்கோ ஒரு மாதிரியாகிப் போனது.
எவ்வளவு அருவருக்கத்தக்க வார்த்தைகள்.
அவள் பதில் கொடுத்து விடலாம்தான்.. ஆனால் அதற்கும் அவன் ஏதாவது அசிங்கமாக பேசுவான்..
பின் அவளுடைய மனம் தானே இன்னும் காயப்படும்.
சில அசட்டு ஆண்கள் பெண்களிடம் தானே தங்களுடைய வீரத்தை காட்டுவர்.
ஏனோ அழுகைதான் வந்தது.
கண்டு கொள்ளாதது போல பில் போடும் இடத்திற்கு வந்தவள் தன்னுடைய கார்டை கொடுக்க அவளின் பின்னால் நெருங்கி நின்றனர் அந்த இளைஞர்கள்.
அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
இன்னும் சற்று நெருங்கினால் கூட அவளுடைய பின்னுடல் அந்த கயவர்களுடன் மோதி விடும்.
பதறி முன்னால் நகர்ந்தவள் வேகமாக கார்டை வாங்கிக் கொண்டு வெளியே செல்லத் தொடங்கினாள்.
“ஏய் ஒரு மணி நேரம் என் கூட வர்றியா..” என இன்னொருவன் கேட்க.
“செருப்பு பிஞ்சிடும் ராஸ்கல்..” கத்தி விட்டாள் அவள்.
என்ன வார்த்தை கேட்டு விட்டான்.
ச்சீ என்றானது அவளுக்கு.
அவனுடைய அத்துமீறலான கேள்வியை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
கோபத்தில் அவள் கத்தி விட ஆங்காங்கே நின்றவர்கள் எல்லோரும் அவளைத்தான் திரும்பிப் பார்த்தனர்.
அசிங்கமாக இருந்தது.
“என்னம்மா ஏதாவது பிரச்சனையா..” என அவளின் அருகே வந்த ஒரு பெண்மணி அவளிடம் கேட்க,
அவள் பதில் சொல்வதற்கு முன்னரே அந்த இரு ஆடவர்களில் ஒருவனோ முந்திக்கொண்டு “இந்த பொண்ண நான் லவ் பண்ணினேன்.. அவளும் லவ் பண்ணா.. இப்போ என்னை ஏமாத்திட்டு யாரையோ ஒருத்தர கல்யாணம் பண்ணிட்டா.. அதுதான் நியாயம் கேட்டுகிட்டு இருக்கேன்.. இது எங்க பிரச்சனை.. நீங்க எதுக்கு தலையிடுறீங்க..” என அவன் அந்தப் பெண்ணிடம் கோபமாகக் கேட்க, அந்தப் பெண்மணியோ மிரண்டு போனார்.
இது காதலர்களினீ பிரச்சனை போலும் என எண்ணியவாறு சட்டென அந்த பெண்மணி நகர்ந்து விட்டார்.
அக்கா என இவள் அழைப்பதற்கு முன்பே “இந்த காலத்து பொண்ணுங்க பாதி பேரு மோசமா தான் இருக்காங்க..” என அவர் முணுமுணுத்து விட்டு சென்றுவிட இவளுக்கோ மனம் காயப்பட்டுப் போனது.
தன் முன்னே இருந்த இரு ஆடவர்களையும் முறைத்துப் பார்த்தவள்.
“மரியாதையா பிரச்சனை பண்ணாம போயிடுங்க..” என எச்சரித்தாள்.
எவ்வளவுதான் தைரியமாக காட்டிக் கொண்டாலும் அவளுடைய குரலின் நடுக்கம் அவர்களுக்குத் தெரியத்தான் செய்தது.
“ஒரு மணி நேரத்துக்கு எவ்வளவுன்னு மட்டும் சொல்லு.. நீ எவ்ளோ கேட்டாலும் நாங்க கொடுக்க ரெடியா இருக்கோம்..” என்றான் அவன்.
அவளுக்கோ கூசிப் போனது.
முகம் சிவந்து கண்கள் எல்லாம் கலங்கிவிட அதற்கு மேல் தனியாக அவர்களை எதிர்த்து பேச தைரியம் இன்றி வேகமாக வெளியே கிட்டத்தட்ட ஓடியே வந்தவள் காரில் சாய்ந்து நின்ற மோகனைக் கண்டதும்தான் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.
காரை நெருங்குவதற்குள் அவளுடைய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து விட்டிருந்தது.
“என்னாச்சு மேடம்..”
“ஒன்னும் இல்லண்ணா.. என்கிட்ட தயவு செஞ்சு இப்போ எதுவுமே கேட்காதீங்க.. சீக்கிரமா வீட்டுக்குப் போங்க..” என்றவள் காருக்குள் ஏறி அமர்ந்து தலையை குனிந்து கொண்டாள்.
தலை வலி அதிகரித்தது.
கை விரல்கள் நடுங்கிக் கொண்டே இருந்தன.
அதற்கு மேல் எதுவும் கேட்க முடியாது காரை மோகன் வேகமாக செலுத்தத் தொடங்கி விட அரை மணி நேரத்தில் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.
நந்தினி வாங்கிய பொருட்களைக் கூட எடுக்காமல் வேகமாக தன்னுடைய அறைக்குள் நுழைந்தாள்.
ஹாலில் யாருமே இல்லாதது அவளுக்கு வசதியாகிப் போனது.
யாருடனும் பேசி தன் நிலைமையை விளக்கும் அளவிற்கு அவளுக்கு அப்போது தைரியம் சிறிதும் இருக்கவில்லை.
அவளுடைய மனநிலை முழுவதுமாக கெட்டுப் போயிருந்தது.
வேகமாக கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த நந்தினியை திரும்பிப் பார்த்தாள் யுகேஷ் வர்மா.
அவளுடைய விழிகள் கலங்கிச் சிவந்திருப்பதை கண்டவனின் பார்வை சட்டென கூர்மையாகியது.
போலீஸ் அல்லவா..?
ஆராய்ச்சியாக அவளைப் பார்த்தான் அவன்.
அவளுடைய கரங்களில் வாங்கச் சென்ற எந்தப் பொருட்களும் இல்லை. வெற்றுக் கரங்களுடன் வந்திருந்தாள்.
ஒரு கையில் அவளுடைய செல்போன் மட்டும் இருந்தது.
அதுவும் அவளுடைய கை நடுக்கத்தில் நடுங்கிக் கொண்டிருப்பதை கண்டவனின் புருவங்கள் உயர்ந்தன.
அவள் தடுமாறுவதையும் நிதானமின்றி பல்கனிக்கு செல்வதையும் அவதானித்தவன் மோகனுக்கு அழைத்தான்.
“என்னாச்சுன்னு தெரியல சார்.. மேடம் வரும்போதே அழுதுகிட்டேதான் வந்தாங்க.. நான் கேட்டதுக்கு அவங்க எந்த பதிலும் சொல்லல சார்.. அவங்க திங்ஸ் எல்லாம் கார்லதான் இருக்கு.. நான் கொண்டு வந்து கொடுக்கிறேன்..”
“இடியட் நீ அவ கூட உள்ள போகலையா..”
“இல்லையே சார்..” தடுமாறினான் அவன்.
“சரி திங்ஸ் இருக்கட்டும் அப்புறமா நான் எடுத்துக்கிறேன்..” எனக் கூறி விட்டு அழைப்பைத் துண்டித்தவன் பால்கனியை நோக்கிச் செல்ல அங்கு அலைபேசியில் விம்மி அழுது கொண்டிருந்தாள் நந்தினி.
யாருடன் பேசுகின்றாள் என்று அவனுக்குத் தெரியவில்லை.
அமைதியாக நின்றான் அவன்.
“அப்பாஆஆ.. ப்பா எ.. எனக்கு உங்கள இப்போவே பா.. பாக்கணும்பா..” என விம்மி அழுதவளின் குரல் வர்மாவிற்கும் கேட்டது.
“இ.. இல்லப்பா இன்னைக்கு ஷாப்பிங் போனேன்.. இரண்டு பசங்க என்கிட்ட ரொம்ப தப்பா..” என்றவள் சொல்ல முடியாமல் அதை நிறுத்திவிட்டு
“நான் ரொம்ப பயந்துட்டேன் பா..” என அழுதாள்.
அவளுடைய தந்தையும் அவளை சமாதானப்படுத்தி இன்னும் சற்று நேரத்தில் அங்கே வருவதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட இவளுக்கோ அழுகையை நிறுத்தவே முடியவில்லை.
நடந்ததை நினைத்து நினைத்து ஏங்கி அழுது கொண்டிருந்தவளின் முன்பு வந்து நின்றவன் அவளுடைய கரத்தை அழுத்தமாகப் பற்றினான்.
அதிர்ந்து விட்டாள் அவள்.
“என்கூட வா..” என்றவன் அவளை அழைத்துக் கொண்டு தன்னுடைய ஜீப்பில் ஏறியவன்
“எந்த மால்..” எனக் கேட்டான்.
“இல்ல பிரச்சனை வேணாம்..” தயங்கினாள் அவள்.
அவளை எரித்து விடுவது போல பார்த்தவன் “எந்த மாலுன்னு கேட்டேன்..” என்றான் அழுத்தமாக.
அதற்கு மேல் அவளால் பதில் கூறாமல் இருந்துவிட முடியுமா என்ன..?
இடத்தைச் சொன்னாள்.
அடுத்த நொடியே ஜீப்பின் வேகத்தில் மிரண்டு விட்டாள் அவள்.
அவ்வளவு வேகமாக ஜீப்பை செலுத்தினான் அவன்.
அரை மணி நேரத்தில் சென்று அடைய வேண்டிய இடத்தை பத்தே நிமிடத்தில் சென்றடைந்து விட்டது அவனுடைய ஜீப்.
ஜீப்பில் இருந்து கீழே இறங்கியவன் “எத்தனை பேரு..” எனக் கேட்டான்.
“ரெண்டு பேரு..” என்றாள் அவள் விழிகளைத் துடைத்தவாறு.
“என்ன சொன்னானுங்க..”
அவளிடமோ மௌனம்.
“இப்போ நீ சொல்லப் போறியா இல்லையா நந்தினி..” கர்ஜித்தான் அவன்.
“ஒரு மணி நேரத்துக்கு எ.. என்கூட வர்றியான்னு கே.. கேட்டாங்க… என்கிட்ட எவ்வளவு ரேட்னு கே…ட்டாங்க.. வேணும்னே இடிச்சாங்க.. இடிச்சிட்டு வேணும்னேதான் இடிச்சோம் அப்படின்னு அசிங்கமா சொன்னாங்க..” என்றவளின் குரல் உடைந்தது.
நடந்த அனைத்தையும் சுருக்கமாக கூறி முடித்தவளின் உடல் அழுகையில் குலுங்கியது.
அடுத்த நொடியே அந்த மாலுக்குள் நுழைந்தவன் அங்கிருந்த செக்யூரிட்டியிடம் மாலை மூடும்படி கூற அதிர்ந்து விட்டாள் அவள்.
அவன் ஏசிபி என்று தெரிந்ததும் உடனடியாக அவன் கூறியதை செயலாற்றினார் அந்த செக்யூரிட்டி.
மாலுக்குள் இருந்த மக்களோ திகைத்து ஒன்றுகூட,
தன் பின் பாக்கெட்டில் சொருகி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தனக்கு அருகே இருந்த மேஜை மீது வைத்தவன்,
“அந்த ரெண்டு பேர் இங்க இருக்காங்களான்னு பாரு..” என அழுத்தமான குரலில் உத்தரவிட்டான்.
வர்மாவின் அதிரடியில் திகைத்து நின்றாள் மாது.
🥀🥀
கமெண்ட் ப்ளீஸ்
1 comment
Super super super super super super super super super super