2.9K
விடியல் – 12
படம் முடிந்து இருவரும் தியேட்டரை விட்டு வெளியே வந்தனர்.
இரவின் குளிர் அவர்களை மெல்லத் தழுவியது.
“தேங்க்ஸ் ஸ்பைடர் மேன்..” என்றாள் அவள்.
அவளுடைய குரலில் உற்சாகம் மிளிர்ந்தது.
“எதுக்குடி..”
“படத்துக்கு அழைச்சிட்டு வந்ததுக்கு.. ஸ்நாக்ஸ் வாங்கிக் கொடுத்ததுக்கு.. எல்லாத்துக்குமே.. தேங்க்ஸ்.. கணக்கு வச்சுக்கோ.. மொத்தமா சேர்த்து உன் பணத்தை கொடுத்துடுறேன்..” என்றாள் அவள்.
“வேணாம்னு சொன்னா கேட்கவா போற..? ஓகே..” என்றான் அவன்.
“கார் வச்சிருக்க.. பைக் வச்சிருக்க.. நிறைய பணம் வச்சிருக்க.. எல்லாமே திருடி சம்பாதிச்சதுதானா…?”
“கார் பைக் எல்லாம் என்னோட ஃப்ரெண்ட்ஸோடதுடி.. திரும்ப கொடுத்துடுவேன்..” என்றான் அவன்.
“ஓஹ்.. ஓகே.. ஓகே… ஏதாவது வேலைக்குப் போகலாமே…?”
“சோ மேடம் திருடக்கூடாதுன்னு ரூல்ஸ் போடுறீங்க..” எனக் கேட்டான் அவன்.
“அப்படியெல்லாம் இல்ல.. என்ன இருந்தாலும் திருடறது தப்பு தானே..”
“சரிங்க மேடம்.. எனக்கு நல்ல வேலை கிடைச்சா திருடுறதை ஸ்டாப் பண்ணிடுறேன் போதுமா..?”
“குட் பாய்..” என்றாள் அவள்.
அவனுக்கோ சிரிப்புதான் வந்தது. இன்னும் பல நூறு பரம்பரை உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு அவனிடம் பணம் கொட்டிக் கிடக்கின்றதே..
உண்மை தெரிந்தால் இவளுடைய அழகிய முகம் கோபத்தில் சிவக்குமோ..?
“ஓய் ஸ்பைடர் மேன்..” என அழைத்தாள் அவள்.
“சொல்லு குல்பி..”
“என்ன உனக்கு பிடிக்குமா..?”
“இதுல உனக்கு ஏன் டவுட்..? உன்ன ரொம்ப ரொம்ப பிடிக்கும்..”
“ஏன் பிடிக்கும்..?”
“உன்னோட கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. ரொம்ப அழகா இருக்க.. ரொம்ப அழகா பேசுற.. உன் கிட்ட பேசினா பேசிட்டே இருக்கலாம் போல தோணுது..” என்றதும் அவளுடைய முகத்திலோ பளிச்சென்ற புன்னகை.
“இஸ் இட்…? தேங்க்யூ ஸ்பைடர் மேன் எனக்கு ஷையா இருக்கு..” என்றவளின் கன்னங்கள் சிவந்தன.
அவளை இரசித்துப் பார்த்தவனிடமோ பெருமூச்சு.
அவள் வெட்கப்பட்டு கன்னம் சிவப்பதை பார்த்தவனுக்கு இதயம் மத்தளம் வாசிப்பது போல இருந்தது.
நேரமோ நள்ளிரவு 2 மணியைத் தொட்டது.
“ஸ்பைடர் மேன் செமையா இருக்கு ஊந்த கிளைமேட்.. ப்ளீஸ் ப்ளீஸ் நடந்து போவோமா..” எனக் கேட்டாள் அவள்.
“போகலாமே..” என்றவன் தன்னுடைய பைக்கை எடுத்து உருட்டத் தொடங்க அவனுடன் இணைந்து நடக்கத் தொடங்கினாள் அவள்.
“சரி உன் பின்னாடி ஆல்ரெடி அஞ்சு பசங்க சுத்துறாங்கன்னு சொன்னியே அவங்கள்ல யாரையாவது உனக்குப் பிடிச்சிருக்கா..?”
“இல்லடா.. அதுல ஒருத்தனோட பார்வையே சரியில்ல.. எப்போ பார்த்தாலும் கழுத்துக்கு கீழதான் பார்ப்பான் ராஸ்கல்.. எனக்கு அவனை சுத்தமா பிடிக்கல.. இன்னொருத்தன் ப்ராஜெக்ட் பண்ணித் தர சொல்லி சொன்னேன்.. என்னை ஏமாத்திட்டான் அவனையும் பிடிக்கல.. ஒருத்தன் பேசவே மாட்டான்.. இன்னொருத்தன் பேசியே சாவடிப்பான்.. லிஸ்ட்ல அஞ்சாவதா இருக்கவன் லிவிங்ல இருப்போமான்னு கேட்டான்..” என்றதும் அதிர்ந்து விட்டான் அவன்.
“வாட் வாட் த ஃ××××..” என அவன் திட்டிவிட,
“அடப்பாவி நீ பேட் வேர்ட்ஸ் எல்லாம் பேசுவியா..?”
“நாளைக்கு உன் காலேஜுக்கு வரேன்.. அந்த ராஸ்கல் யாருன்னு காட்டு.. அவன் வாயிலேயே நாலு போடு போடுறேன்..” என அவன் கோபத்தில் திட்டத் தொடங்கிவிட வாய்விட்டுச் சிரித்தாள் அவள்.
“எதுக்கு சிரிக்கிற குல்பி..? இந்த வயசுல அவனுக்கு லிவ் இன் கேக்குதா..? அவன் மண்டைய உடைக்கிறேன்..”
“கூல் டா நானே அவனைத் திட்டி விட்டுட்டேன்.. இனி இப்படி எல்லாம் பேசினா சார் கிட்ட சொல்லிடுவேன்னு சொல்லி வச்சிருக்கேன்.. அதுக்கு அப்புறமா அவன் என்கிட்ட வர்றதே இல்லை.. சோ இந்த அஞ்சு பேரையும் எனக்கு பிடிக்கல..” என்றாள் அவள்.
“வெல்.. ஆறாவதா இருக்கிற என்ன பத்தி மேடம் என்ன நினைக்கிறீங்க..? கொஞ்சம் பாவம் பார்த்து உங்களோட பாய் ஃப்ரெண்ட்டா பதவி உயர்வு கொடுப்பீங்களா..” என்று கேட்டவனைத் திரும்பிப் பார்த்தவள்,
“அந்த பைக்கை அப்படியே ஓரமா வச்சுடு ஸ்பைடர் மேன்… என் கூட நடந்து வா கொஞ்சம் பர்சனலா பேசணும்..” என்றாள் அவள்.
திடீரென அவளுடைய குரலில் தெரிந்த மாற்றத்தை கண்டு வியந்தவன் அவள் கூறியது போல பைக்கை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு திறப்பை எடுத்துக் கொண்டவன் அவளுடன் இணைந்து நடக்கத் தொடங்கினான்.
“சொல்லு குல்பி..”
“என் பின்னாடி சுத்துனதுல யாரையுமே எனக்கு பிடிச்சதில்லை.. ஆனா எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு ஸ்பைடர் மேன்… உன்ன நம்பி இவ்வளவு தூரம் இந்த மிட்நைட்ல வர்ற அளவுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு..” என்றதும் அதிர்ந்து நின்று விட்டான் அவன்.
அவனுக்கோ மனதிற்குள் மத்தாப்பு மலர்ந்தது.
தன்னுடன் இணைந்து நடந்து வந்து கொண்டிருந்தவன் திடீரென நின்றதும் அவனைத் திரும்பிப் பார்த்தாள் குல்பி.
“ஏன் நின்னுட்ட..? என் பக்கத்துல வா..” என அவள் அழைத்ததும் மீண்டும் அவளை நெருங்கி வந்தான் அவன்.
அவனுடைய கரத்தை மெல்ல பற்றிக் கொண்டவள் நடக்கத் தொடங்கினாள்.
“குல்பி என் மேல எப்படிடி உனக்கு நம்பிக்கை வந்துச்சு..?”
“உன்னோட பார்வை ரொம்ப கண்ணியமா இருக்கும்.. எப்பவுமே என் கண்ண பார்த்துதான் பேசுவ.. காலேஜ்ல சில பசங்களோட பார்வையை என்னால ஃபேஸ் பண்ணவே முடியாது.. ரொம்ப சங்கடமா இருக்கும்.. கோபமா வரும்.. ஆனா உன்கிட்ட நான் இப்படி பீல் பண்ணதே இல்ல.. அதனாலதான் ஃபர்ஸ்ட் டைம் நீ என் ரூமுக்கு வந்ததும் என்கிட்ட தப்பா எதுவும் நடந்துக்க மாட்டேன்னு புரிஞ்சுது..
மிஞ்சி மிஞ்சிப் போனா என் கழுத்துல இருக்க சங்கிலியை அறுத்துட்டு போவேன்னு நினைச்சேன்.. ஆனா நீ எனக்கு ப்ராஜெக்ட்டுக்கு ஹெல்ப் பண்ணிட்டுப் போன.. வித்தியாசமா ஃபீல் ஆச்சு ஸ்பைடர் மேன்.. ஐ லைக் தட்..
நீ திருடணும்னு நினைச்சிருந்தா நான் கழுத்துல போட்டிருந்த செயின், கைல போட்டிருந்த ஹேன்ட் செயின்.. ரிங் எல்லாத்தையும் எடுத்திருக்கலாம்.. என் ரூம்ல இருந்த லேப்டாப் எலக்ட்ரானிக் ஐட்டம்ஸ் அதைக் கூட தூக்கி இருக்கலாம்.. ஆனா அது எதுவுமே பண்ணாம ரிலாக்ஸா பேசிட்டு நீ போனது ஆச்சரியமா இருந்துச்சு..
எந்த எதிர்பார்ப்பும் இல்லாம எனக்கு உதவி வேற பண்ணிட்டு போயிருந்த.. ஃப்ரெண்ட்லியா பீல் ஆச்சு.. அதனாலதான் அடுத்த நாளும் உன்னை எதிர்பார்த்தேன்.. அதே மாதிரி நீயும் வந்த.. இப்போ வரைக்கும் உன்னை தப்பா நினைக்கத் தோணல.. உன் பக்கத்துல இருந்தா பாதுகாப்பா ஃபீல் பண்றேன்..” என்றாள் அவள்.
அவளுடைய வார்த்தைகள் அவனை அதிரச் செய்தன.
வெகுளிப் பெண் என்றல்லவா நினைத்திருந்தான்.
முதல் நாளே இவ்வளவு அவதானித்திருக்கிறாளே என எண்ணி வியந்தவன் அமைதியானான்.
“நீ என்ன விட பெரிய பையனா இருக்க.. என்ன நிஜமாவே காதலிக்கிறியா..” என அவள் கேட்டவுடன் அப்படியே அவளை அணைத்துக் கொள்ள வேண்டும் என ஆர்ப்பரித்தது அவனுடைய மனம்.
அவளை அதிகம் அவனுக்கு பிடிக்கத்தான் செய்தது.
இல்லையென்றால் எவ்வளவோ முக்கியமான வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு இவளை பார்ப்பதற்காக ஓடோடி வருவானா..?
ஆம் முடிவெடுத்து விட்டான்.
இந்த குல்பியை தன்னுடையவளாக மாற்றிக் கொள்ளும் எண்ணம் அவனுக்கு எப்போதோ வந்து விட்டது.
அவளைப் பார்த்தவன் ஆம் என தலையசைத்தான்.
அவளிடமோ கசப்பான புன்னகை.
“என்ன தப்பா எடுத்துக்காத ஸ்பைடர் மேன்… நான் உனக்கு வேணாம்.. நீ ரொம்ப அழகா இருக்க… நல்ல வேலை தேடிக்கோ… அதுக்கப்புறம் உனக்கு நல்ல வரன் அமையும்.. ஏதாவது நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழு சரியா..” என அவள் கூறவும் அவனுக்கோ பேரதிர்ச்சி.
“ஏன்டி இப்படி சொல்ற..? என்ன பிடிச்சிருக்கு என் மேல நம்பிக்கை வச்சிருக்கேன்னு சொன்னியே..”
“ம்ம்.. நான் இல்லைன்னு சொல்லவே இல்லையே.. நான் உனக்கு தகுதியானவளா இருக்க மாட்டேன்னு தோணுது.. நான்தான் சொன்னேன்ல நீ ரொம்ப அழகா இருக்கடா.. உனக்கு என்ன விட நல்ல அழகான பொண்ணு கிடைப்பா..” என்றவளின் கரத்தைப் பிடித்து தன்னை நோக்கித் திருப்பியவன்,
“நீதான்டி ரொம்ப அழகு.. இந்தப் பொண்ண விட வேற எந்த பொண்ணு மேலயும் எனக்கு இன்ட்ரெஸ்ட் வராது..” என்றான் அவன்.
“நான் சொல்றத புரிஞ்சுக்கோடா.. நான் உனக்கு செட் ஆக மாட்டேன்.. என்கிட்ட குறை இருக்கு.. முக அழகு மட்டும் இந்த வாழ்க்கைக்கு போதும்னு நினைக்கிறியா..? நான் நீ நினைக்கிற மாதிரி இல்ல.. என்னப் பத்தி தெரிஞ்சா நீ கூட என்ன வெறுத்துடுவ..” என்றவளின் விழிகள் கலங்கின.
அதிர்ந்து விட்டான் அவன்.
“இதுவரைக்கும் நான் யார்கிட்டயுமே என்ன பத்தி சொன்னது இல்ல.. உன்கிட்டயும் சொல்லப் போறது இல்ல.. ஏன்னா நீ என்னை பார்க்கும் போதெல்லாம் இந்த கண்ணுல தெரியுற பிரமிப்பு கலந்த சந்தோஷம் கடைசி வரைக்கும் அப்படியே இருக்கணும்னு நினைக்கிறேன்.. என்ன பத்தி முழுசா தெரிஞ்சா நீ என்னை பார்க்கவே வர மாட்ட ஸ்பைடர் மேன்… உனக்கு என்ன பிடிக்காம போயிரும்.. நம்ம கடைசி வரைக்கும் இப்படி ஃப்ரெண்டாவே இருந்திடலாமே.. அடிக்கடி என்னை பார்க்க வா ப்ளீஸ்..” என்றவளின் குரல் அழுகையில் உடைந்தது.
“ஏய் என்னடி..? ப்ச்.. ஏன் இப்படிலாம் பேசுற.. தகுதியில்ல குறை இருக்கு என்ன பேச்சுடி இதெல்லாம்..?” என அவன் அதட்டிக் கேட்டதும் உடைந்து போய் அழ ஆரம்பித்து விட்டாள் வர்ணா.
“ஓஹ் நோ நோ பேபி கேர்ள்.. இங்கே வா..” என அவன் தன் கையை விரிக்க,
தயங்கித் தயங்கி அவன் அருகே சென்றவளை அன்பாக அணைத்துக் கொண்டான் அவன்.
அந்த அணைப்பில் எந்த விதமான தவறான எண்ணமும் சிறு துளி கூட இல்லை.
அவளுடைய அழுகையை நிறுத்தும் சமாதான அணைப்பு அது.
அவளின் மனவேதனையை போக்கிவிட முயன்றான் அவன்.
பதறாமல் அவன் மீது சாய்ந்திருந்தவள் மெல்ல அவனுடைய மார்பில் தன் முகத்தைப் புதைத்தாள்.
இரவு நேரம்.
யாருமற்ற பிரதான வீதி.
சில்லென்ற காற்று.
ஆனால் அவள் மனமோ நெருப்பிற்குள் நிற்பது போல தகித்துக் கொண்டிருந்தது.
ஏன் எனக்கு மட்டும் இப்படியானது என்ற கேள்விதான் அவளுக்குள் அக்கணம் ஓடிக்கொண்டே இருந்தது.
“இப்படி எல்லாம் பேசக்கூடாது பேபி கேர்ள்..” என்றவன் அவளுடைய தலையை வருடி சமாதானம் செய்ய சற்று நேரத்தில் அவனுடைய அணைப்பில் இருந்து வெளியே வந்தவள் தன் விழிகளைத் துடைத்துக் கொண்டாள்.
“போதும்டா.. என்னோட சோக கதையை இதோட ஸ்டாப் பண்ணிடலாம்.. அழுது டயர்டான மாதிரி இருக்குடா.. ஏதாவது வாங்கி குடுக்குறியா..? பசிக்குது… சத்தியமா இந்த காசையும் சேர்த்து நான் திருப்பிக் கொடுத்து விடுவேன்..” என அவள் கூற மீண்டும் அவனுக்கோ அதிர்ச்சி.
இப்போதுதான் பிழியப் பிழிய அழுதாள்.
அதற்குள் சட்டென மாறி விட்டாளே.
அவளுடைய மனதிற்குள் ஏதோ ஒரு பெரிய சோகம் இருக்கின்றது என்பது மட்டும் அவனுக்குப் புரிந்தது.
இப்போது அதைப் பற்றி கேட்டு தூண்டித் துருவினால் அவளுடைய மனம் காயப்பட்டு விடுமோ மீண்டும் அழுது விடுவாளோ என அச்சம் கொண்டான் அவன்.
அவனைப் பொறுத்தவரை அவனுடைய குல்பி சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
எப்போதும் ஜாலியாக துள்ளலாக குறும்பாக பேசும் அவளை கண் கலங்கிப் பார்க்க அவனுக்கு சிறிதும் இஷ்டமில்லை.
“நீ கேட்டு நான் இல்லைன்னு சொல்லுவேனா..? ஷாப் திறந்திருந்தா கண்டிப்பா வாங்கித் தரேன்..” என்றவன் அவளுடன் நடக்க ஆரம்பித்தான்.
அப்படி என்ன சோகம் அவளைத் தாக்குகின்றது..?
புரியவில்லை அவனுக்கு.
அவளுடைய வீடு வந்து விட்டது.
“தேங்க்யூ டா.. நாளைக்கு நானும் காலேஜுக்கு போய் படம் செமையா இருந்துச்சுன்னு சீன் போடுவேன்..” என்றாள் உற்சாகமாக.
அவனோ அவளுடைய கரத்தைப் பற்றிக் கொண்டவன்,
“நீ எப்படி இருந்தாலும் நான் உன்னை வெறுக்க மாட்டேன்.. இந்த குல்பியை மட்டும்தான் எப்பவும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. இத எப்பவும் நீ மறந்துடாத..” என்றவன் அவளுடைய கரத்தில் அழுத்தம் கொடுத்து விட்டு விலகி நிற்க அவனை விழிகள் கலங்க தலை சரித்துப் பார்த்தவள்.
“நீ இப்படி எல்லாம் பேசினா நான் அழுதுடுவேன் ஸ்பைடர் மேன்..” என்றாள் தழுதழுத்த குரலில்.
“சரிடி இனி இப்படி பேச மாட்டேன்..” என்றான் அவன் சட்டென்று.
உடனே அவளுடைய முகம் மலர்ந்தது.
“பை ஸ்பைடர் மேன் குட் நைட்..” என்றவள் அவளுடைய வீட்டுக்குள் சிட்டாகப் பறந்து சென்றுவிட அவனுடைய மனதிலோ சட்டென ஏறிக் கொண்டது அழுத்தம்.
அப்படி என்ன பிரச்சனை இந்தப் பெண்ணுக்கு..?
அவளைப் பற்றி சிந்தித்தவாறு மீண்டும் தன்னுடைய பைக் நிறுத்தி வைத்த இடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான் அவன்.
🥀🥀