ஆழி 5 

4.6
(8)

ஆழி 5 

துணி கடையில் பொம்மைக்கு புடவை கட்டி விடும் பாவனையில் இருப்பவனைப் பார்த்து, 

ஆழினிக்கு பெருத்த ஆச்சரியம். அதெப்படி ஒரு பெண்ணை, முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல், அவளது உடைகளை கழட்டவோ அல்லது உடுத்தி விடவோ முடியும். சின்ன உணர்ச்சிகளைக் கூட காட்டாமல் எப்படி இவ்வாறு இருக்க முடிகிறது. 

ஆழினிக்கு தன் அழகின் மீது எப்போதுமே ஒரு பூரிப்பு உண்டு. அழகிய உருவமும், முத்தமிட அழைக்கும் குண்டு கன்னங்களும், ரத்த சிவப்பாய் ரோஜா பூ போன்ற இதழ்களும் அவனை எதுவுமே செய்யவில்லையா, ஒருவேளை அவனா இருக்குமோ? 

அணைத்து பாஷைகளையும் அறிந்தவனுக்கு அவளது விழியின் பாஷை புரியாது போகுமா? “நான் கே இல்ல. நெக்ஸ்ட் வாட்?” உதடுகள் அசையாது அவளுக்கான பதிலை சொல்ல. 

“காட்!” திருட்டு முழி முழித்தாள். 

அடக் கடவுளே எந்திரிக்கவே முடியாமல் தான் இருக்கும் நிலையில் இப்படிப்பட்ட ஆராய்ச்சி தேவையா? வலி சுருக்கென குத்தினாலும், குளித்ததால் புத்துணர்ச்சியாக இருந்தது அவளுக்கு. 

அவளை அவன் சமதளமான இடத்தில் அமர வைத்திருந்தான். 

“ரெஸ்ட் எடு” என்று கூறிவிட்டு அவளை விட்டுவிட்டு அவன் சென்றிருக்க, அப்படியே தரையில் சரிந்து படுத்தவளுக்கு, ஒரு வலி மாத்திரையை போட்டால் தேவலை என்றிருந்தது. இரவில் கண் விழித்த சோர்வில் மெல்லக் கண் அயர்ந்தாள். 

அவன் இருக்கிறான் என்ற உணர்வால் அவள் நன்றாகவே தூங்க ஆரம்பித்திருந்தாள். 

சிறிது நேரத்தில் அவனும் அங்கே வந்திருக்க, அவளுக்கு தள்ளி தானும் தரையில் படுத்தவனுக்கு, யோசனையெல்லாம் எதுவுமில்லை. ராஜாவாய் உறங்க ஆரம்பித்தான். 

இருவருமே நன்றாக உறங்கி எழ, “ஓகே இந்த பழங்களை சாப்பிட்டுட்டு கிளம்பு போலாம்” கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தவன் சுற்றுமுற்றும் வேடிக்கை பார்த்தான். 

மண் நனைந்தும் வறண்டும் இருந்தது. மலை உச்சியில் இருந்து ஊற்று நீரும் திடீரென்று பெருகி வருமென்பதால், மரங்களின் வேர்களிலும், பாறை இடுக்கிலும் தண்ணீர் வெள்ளி நீராக ஓடியது. பார்க்கும் பொழுதே அள்ளிக் குடிக்க வேண்டும் போல ஆசையைத் தூண்டியது. 

பறவைகளின் இறைச்சல் சற்றே ஓய்ந்திருப்பது போலத் தோன்றியது அவளுக்கு. பறப்பதற்கே மறந்தது போல கிளைகளில் அமர்ந்திருந்தது. 

அவனது கூரிய பார்வை அவள் மீது படிய, அவளுக்கோ சற்று முன்னர் அவன் தனக்கு உடைமாற்றியது நினைவுக்கு வரவும் கூச்சமாக இருந்தது.

“இப்போ வலி இருக்கா. நடந்துடுவியா?” 

மரத்த குரலில் கேட்டவனிடம் ‘என்னால் நடக்க முடியாது, ஹெல்ப் பண்ணுவியா?’ என்று கேட்டிட ஆசைதான். 

ஆனால், சுற்றிலும் காடுகள், மழை நீரால் நனைந்த தரைகள், மரங்களின் அடர்த்தியில் இருட்டாய் தெரிந்த பாறைகள் என்று பார்க்கவே அச்சுறுத்தலை கொடுக்க, அதற்கு இணையாக இரக்கமே அற்ற விழிகளுடன் தவன் பார்வைக்கு தென்பட்டான். 

 இவனிடம் உதவி கேட்பதும் சீறும் நாகத்திடம் உதவி கேட்பதும் ஒன்றுதான் போலத் தோன்றியது. இரக்கமில்லாத அரக்கன் மனதுக்குள் சொல்லிக் கொண்டாள். 

“நல்லா மாட்டிக்கிட்டேன்” அவனால் தனக்கு ஆறுதல் கிட்டுமா என்ற தவிப்புடன் அவள் அவனது முகத்தையே பார்த்தாள். 

“அது என்னோட தப்பு இல்ல” அவனின் குரல் அவளை கத்தியாய்க் கிழிக்க முயன்றது. 

அவளுக்கோ விழிகள் கலங்கிட, சிறிதளவாவது ஆறுதல் பேச்சுக்கு ஏங்கினாள். 

“இந்தக் காட்டுல எத்தனை பேர் செத்திருக்காங்க தெரியுமா?” வெடுக்கெனக் கேட்டவாறே அவளது காயத்திற்கு ஒரு பச்சிலையின் சாற்றை கசக்கி ஊற்றினான். 

அவன் விரல்கள் காயத்தில் முரடாய் உரசவும், கண்களை இறுக்கமாக மூடினாள் வலி மிகுதியில். 

“உனக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்கேன்னு என்கிட்டே அட்வான்ட்டேஜ் எடுத்துக்காதே. இங்கருந்து வெளியே போனவுடனே உன்னோட வழியைப் பார்த்து கிளம்பிக்க” அவனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளது தன்மானத்தை சீண்டியது. 

“எதுக்கு இதெல்லாம் பண்ணுற. இப்ப நீ பண்ணுறதுக்கு பேர் என்ன. இப்படியெல்லாம் பேசிக் காயப்படுத்தி என்ன சாதிக்கப் போற?” கண்ணீரோடு கேட்டாள். 

அவளது பேச்சை அலட்சியமாய் புறம் தள்ளியவன், இருந்த இடத்திலிருந்து எழுந்தான். “சரி எழுந்திரு, நடக்க முயற்சி பண்ணு” அவளுக்கு காத்திராமல் அவன் நடந்தான். 

தானும் முயன்று எழுந்தவள் அவன் பின்னே மெதுவாய் கால்களை ஊன்றி நடக்க ஆரம்பித்தாள். 

“இதே நேர் பாதைதான். நடந்து வா” சொன்னவன் அவளை பொருட்டாகவே கருதாமல் முன்னோக்கி நடந்தான். 

வேக நடையுடன் இருபதடி தூரத்திற்கு சென்றிருந்தான். 

அவன் இந்த அளவிற்கு உதவி செய்வதே பெரிய விஷயமாக இவளுக்குத் தோன்றவும், அவனை குற்றம் சாட்டாமல் தானே முயன்று நடந்தாள். 

 

அவள் நடக்கும் பொழுது லேசாய் ரத்தம் கசிய ஆரம்பித்தது. ரத்தம் வலிவதை உணர்ந்தாலும் அதை துடைக்கக் கூட வலுவற்று அவன் சென்ற திசையில் மெல்ல நடந்தாள். 

இருக்குற கொடுமை போதாமல் தப்பிச்சு வர்ற அவசரத்தில் காலில் செப்பல் வேறு அணிந்திருக்கவில்லை. இதுவரைக்கும் அவனது முதுகில் தொற்றிக் கொண்டு வந்ததால் எந்த உபத்திரவமும் இல்லை. இப்பொழுது வெறும் பாதத்தை ஊன்றி நடக்கவும் முடியாமல் தட்டுதடுமாறி நடந்தாள். 

பஞ்சு போல மென்மையான பாதம் அவளுடையது. சில்வர் ஸ்பூன் பேபிதான். அப்படிப்பட்டவளின் பாதம் தரையில் படும் போதெல்லாம் ஊசியாய்க் குத்தியது. நடக்கும் பொழுதே ஒரு பெரிய பள்ளத்தை கண்டு விட்டவளுக்கு, புத்தி பேதலித்துப் போனது. 

இதற்கு மேல் முடியாது என்பது போல அவளது உடலும் மனதும் சோர்ந்து போய்விட, அந்தப் பள்ளத்தில் விழுந்து வாழ்க்கையை முடிச்சுக்கலாமா என்பது போல அதையே வெறித்தாள். 

அவளுக்கு யாரையுமே குற்றமாக நினைக்க முடியவில்லை. தன்னுடைய பிறப்பே ஆண்டவனின் தவறான படைப்போ என்று மறுகுபவளுக்கு யாரென்றே தெரியாத ஒருவன் மீது கோபமா வரும். 

நடுக்காட்டிலோ பாலைவனத்திலோ பனிப்பிரதேசத்திலோ தனிமையில் சிக்கிக் கொள்ளும் பலவீனமான மனிதனின் புத்தி பேதலித்துப் போகுமாம். தன்னைச் சுற்றிலும் பச்சை நிறமே பிரதானமாய், மரங்களின் அடர்ந்த நிழலும், பறவைகள் மற்றும் தண்ணீரின் இறைச்சலும் சேர அவனது மனதை குழப்பிவிடுமாம். அவனால் தன்னைப் பற்றியே யோசிக்க முடியாத ஒரு மாயையின் பிடியில் சிக்கிப் போவான். 

பைத்தியம் போல காட்டுக்குள் சுற்றி இறந்தே போவான். 

ஆழினியும் அப்படித்தான் நிலை கெட ஆரம்பித்தாள். 

தவன் மீது அவளுக்கு நம்பிக்கை இருந்தாலும் அவனுக்கு மிகப் பெரிய பாரமாக இருக்கிறோம் என்பது அவளுக்கு உணர முடிய அதுவே அவமானமாக இருந்தது. 

தான் இருக்குமிடத்தில் கொஞ்சம் உயரம் போனால் பள்ளம், நிமிர்ந்து பார்த்தவளுக்கு போதும் தன் வாழ்க்கையை இப்படியே முடிச்சுக்கலாம் என்று தோன்றிவிட்டது. எப்படிப் பார்த்தாலும் வெளியே சென்றால் தான் போலீஸிடம் மாட்டிக் கொள்ளப் போவது உறுதி. அவர்கள் தன்னை ஜெயிலில் போட்டு வதைப்பார்கள். அதற்கு தன் முடிவை தானே தேடலாம் என்று அங்கே செல்ல ஆரம்பித்தாள். 

தான் யாருக்குமே தேவையில்லாத பொழுது எதற்கு உயிரோடு இருக்க வேண்டும், விரக்தி நிலையில் அங்கே நெருங்கிவிட்டாள். 

காட்டின் அகோரமான தனிமை அவளை பைத்தியமாக்கியது. 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!