2.3K
விடியல் – 13
அந்த மாலில் பொருட்களை வாங்குவதற்காக வந்திருந்த மக்களில் கீழ் தளத்தில் இருந்த அனைவரும் ஒன்று கூடி இருந்தனர்.
செக்யூரிட்டி மாலின் கதவை திடீரென மூடியதும் அவர்களுக்கோ பதற்றம்.
ஒரு சிலரோ வெளியேற முயன்று தோற்றனர்.
“என்ன நடக்குது இங்க..?”
“எதுக்கு கதவை பூட்றாங்க..?”
“ஏதோ பிரச்சனையாம்.. போலீஸ்காரன் போல இருக்கு..”
“ஹேய் துப்பாக்கி வச்சிருக்காரு..”
“நாம எந்த தப்பும் பண்ணலையே..”
அங்கே கூடி நின்றிருந்த மக்கள் சிலர் கிசு கிசுக்க ஆரம்பித்தனர்.
யுகேஷ் வர்மாவின் பார்வையோ நந்தினியின் மீது அழுத்தமாகப் பதிந்தது
“இந்த கூட்டத்துல அவனுங்க இருக்கானுங்களா..?”
அவளோ தன் பதற்றத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அந்த இடத்தை சுற்றிப் பார்த்தவள் இல்லை என்பது போல தலையசைத்தாள்.
“அந்த ரெண்டு பேரும் எப்படி இருந்தாங்க..? அவங்களோட ட்ரெஸ்.. ஹைட் வெயிட்.. சொல்லு..” என்றான் அழுத்தமாக.
நந்தினியோ தயங்கியவாறு அவர்களின் உடைகளையும் தோற்றத்தையும் விவரித்தாள்.
“ஒருத்தன் சிவப்பு டி-ஷர்ட்.. கறுப்பு ஜீன்ஸ்.. மாநிறமா.. அஞ்சரை அடி உயரம் இருப்பான்.. இன்னொருத்தன் பச்சை கலர் ஷர்ட்.. காக்கி பேன்ட்.. கொஞ்சம் ஒல்லியா இருப்பான்..” என்றவளுக்கு நா உலர்ந்தது.
வர்மா ஒரு நொடி அவளைப் பார்த்து தலையசைத்தவன், செக்யூரிட்டியைப் பார்த்து, “சிசிடிவி ஃபுட்டேஜ் பார்க்கணும். கடைசி முப்பது நிமிஷத்துக்கு முன்னாடி நடந்த எல்லாத்தையும் செக் பண்ணு..” என உத்தரவிட்டான்.
அவரோ தலையசைத்து விட்டு வேகமாக அறைக்குள் சென்று விட,
யுகேஷ் வர்மாவோ மாலின் மையப் பகுதியை நோக்கி நடந்தான்.
அவனுடைய முகத்தில் அப்படியொரு அழுத்தம்.
நந்தினி அவனைப் பின்தொடர முயன்றாள். ஆனால் அவனுடைய வேகத்திற்கு அவளால் ஈடு கொடுக்க முடியவில்லை.
அவன் மாலின் மைய மாடியில் நின்று கீழே இருந்த கூட்டத்தை கூர்ந்து பார்த்தான்.
அவனுடைய பார்வை ஒரு புலியின் வேட்டைப் பார்வை போல இருந்தது.
கொஞ்சமும் சலனமின்றி இரையைத் தேடுவது போல கூட்டத்தை தன் பார்வையால் துளைத்துக் கொண்டிருந்தான் அவன்.
சில நிமிடங்களில் செக்யூரிட்டி திரும்பி வந்து, “சார்.. இந்த ரெண்டு பேருதான் இவங்க சொன்ன மாதிரி ட்ரெஸ்ல இருக்காங்க..” என ஒரு டேப்லெட்டை நீட்டினான்.
யுகேஷ் அதைப் பார்த்தவன் நந்தினியை அழைத்து “இவங்கதானா..” என்று கேட்டான்.
நந்தினி திரையைப் பார்த்து, உடனே தலையசைத்தாள்.
“ஆமா.. இவங்கதான்..” என்றாள் அவள் மெல்லிய குரலில்.
அவளுடைய குரலில் தெரிந்த பயத்தை உணர்ந்தவனுக்கு நந்தினியின் மீது கோபமாக வந்தது.
என்னுடன் இருக்கும் போது இப்படி பயப்பட வேண்டிய அவசியம் என்ன..?
சலிப்புடன் செக்யூரிட்டியை நோக்கித் திரும்பியவன்,
“இவனுங்க ரெண்டு பேரும் எங்க இருக்காங்க இப்போ..?” எனக் கேட்டான்.
“மூணாவது மாடில, ஃபுட் கோர்ட் பக்கம் இருக்காங்க சார்..” என்றார் அவர் பவ்யமாக.
யுகேஷ் வர்மாவோ நந்தினியைப் பார்த்து, “என்கூட வா..” என்றான்.
மறுக்க முடியாமல் அவனைப் பின் தொடர்ந்தாள் அவள்.
மூன்றாவது தளத்தை அடைந்ததும் அவர்களைக் கண்டு கொண்டாள் நந்தினி.
அவளுக்கு ஏனோ நடுக்கமாக இருந்தது.
கொஞ்சமும் இங்கிதமே இல்லாமல் கீழ்த்தரமாகப் பேசும் ஜென்மங்கள் அல்லவா இவர்கள்.
தயங்கி நின்றவளின் கரத்தை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டவன், அவர்கள் இருவரையும் நோக்கிச் செல்ல, அவளுக்கோ அடுத்து என்ன நடக்கப் போகின்றது என நடுக்கமாக இருந்தது.
இவன் தனியாக இருக்கின்றானே.
அவர்கள் இருவர் அல்லவா.
ஒருவேளை அவர்கள் இவனை அடித்து விடுவார்களோ..?
இல்லையென்றால் இன்னும் தன்னை அசிங்கப் படுத்தி விடுவார்களோ என்றெல்லாம் அவளுக்கு பயமாக இருந்தது.
ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்த இருவரும், தங்களின் முன்பு வந்து நின்ற நந்தினியையும் யுகேஷ் வர்மாவையும் பார்த்து சத்தமாக சிரித்தனர்.
“என்ன.. எங்கள அடிக்கிறதுக்கு ஆள் கூட்டிட்டு வந்திருக்க போல..” என்று கேட்டான் சிவப்பு நிற டி-ஷர்ட் அணிந்தவன்.
“இவகிட்ட ஒரு மணி நேரத்துக்கு எவ்வளவுன்னு கேட்டது யாரு..” என நிதானமாகக் கேட்டான் யுகேஷ்.
“நீ யாருடா..” என்று எகிறினான் பச்சை நிற ஷர்ட் அணிந்தவன்.
“இவ புருஷன்..” என்று மீண்டும் நிதானமாக வந்தது அவனுடைய வார்த்தைகள்.
“ஓஹோ.. உன் பொண்டாட்டி அழகா இருந்தா.. அதனால கொஞ்சம் ரசிச்சோம் அவ்வளவுதான்.. இதை பெருசா எடுத்துட்டு வந்து என்கிட்ட அடி வாங்காம ஓடிப்போயிரு..” என்றவனின் பின்னந்தலையை நொடியில் பற்றியவன், அப்படியே அருகே இருந்த சுவற்றில் நான்கு தடவை மின்னல் வேகத்தில் மோதிவிட,
கொடகொடவென அவனுடைய நெற்றியில் இருந்து உதிரம் கொட்டத் தொடங்கியது.
இந்தத் தாக்குதலை யுகேஷ் வர்மா வெறும் மூன்று வினாடிகளுக்குள் செய்து முடித்து விட்டு விலகி நின்றான்.
அவ்வளவு குறுகிய நேரத்திற்குள் என்ன நடந்தது என்பதை அந்த இருவராலும் கிரகிக்கவே முடியவில்லை.
தன்னுடைய நண்பன் இரத்த வெள்ளத்தில் தரையில் கிடப்பதைப் பார்த்தவனுக்கோ உடலும் உள்ளமும் நடுங்கி விட்டது.
“அவனை தூக்கி நிக்க வை..” என அவனிடம் உத்தரவிட்டான் வர்மா.
அவனோ அதிர்ந்து விழிக்க, “இப்போ நீ தூக்கி நிறுத்தலைன்னா இதே அடி உனக்கு விழும்..” என்றான் அவன்.
பதறிப் போனவனாய், கீழே வலியில் அலறிக் கொண்டு கிடந்த தன்னுடைய நண்பனைத் தன் மேல் சாய்த்தவாறு தூக்கி நிறுத்தினான் அவன்.
“நான் கேள்வி கேட்டா கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லணும்.. உன்னோட இஷ்ட ம××××த்துக்கு பேசுவியா..” என அடிவாங்கியவனிடம் கேட்க, அவனுக்கோ மயக்கம் வந்து விடும் போல இருந்தது.
நிற்கவே முடியவில்லை.
நந்தினியோ வாயில் கை வைத்தவாறு நடுங்கிப் போய் நின்றாள்.
தலையில் அடி வாங்கியவனின் உதிரம் வழிந்து தரையில் கிடந்தது.
“வெல்… இப்போ நான் கேட்கிற கேள்விக்கு சரியா பதில் சொல்லணும்.. என் பொண்டாட்டிகிட்ட ஒரு மணி நேரத்துக்கு எவ்வளவு ரேட்னு கேட்டது யாரு..” என்றான் வர்மா.
அதே நிதானமான இயல்பான குரல் அவனிடம்.
அவன் குரலை உயர்த்தவே இல்லை.
ஆனால் அந்த நிதானமான குரலுக்கே, அடி வாங்கியவனுக்கும், அடி வாங்காமல் அவனைச் சுமந்து நின்றிருந்தவனுக்கும் பயத்தில் இதயம் வெடித்து விடும் போல இருந்தது.
“சார்.. எதோ தெரியாம பண்ணிட்டோம்.. அதுக்காக எங்களை கொலை பண்ணப் பார்க்கிறீங்களா.. போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்..” என்றான் அடி வாங்காதவன்.
“ஐ அம் யுகேஷ் வர்மா.. அசிஸ்டன்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ்.. சொல்லுங்க.. என்ன கம்ப்ளைன்ட் பண்ணப் போறீங்க..” என்றானே பார்க்கலாம்.
பேசியவனுக்கு வியர்த்து விட்டது.
போலீஸ்காரனின் பொண்டாட்டி மீது கை வைத்திருக்கிறோம் என்பது புரிந்ததும் இருவரும் நடுங்கித்தான் போயினர்.
“சார்.. மன்னிச்சிடுங்க சார்.. ஏதோ தெரியாம..” என்று அடி வாங்காதவன் கூறிக் கொண்டிருக்கும் போதே, அவனுடைய தலை வேகமாக அருகே இருந்த சுவற்றில் யுகேஷ் வர்மாவால் மோதப்பட்டது.
மூன்றாவது மாடியில் கூட்டம் கூடிவிட, ஒரு சிலரோ அந்தக் காட்சியைத் தங்களுடைய கையடக்கத் தொலைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்ய முயன்றனர்.
வர்மாவின் அழுத்தமான பார்வை அவர்கள் மீதும் விழ, சட்டென தங்களுடைய போனை அணைத்தவர்களுக்கு அவனைப் பார்க்க பயமாக இருந்தது.
அதன் பின்னர் அவன் அதிக நேரம் எடுத்துக் கொள்ளவே இல்லை.
ஒரு நிமிடம் தான், அந்த இருவரையும் புரட்டி எடுத்து விட்டான்.
அவனைத் தடுக்கும் அளவிற்கு அங்கே இருந்த யாருக்கும் தைரியம் இருக்கவில்லை.
நந்தினிக்கு ஒருபுறம் திருப்தியாக இருந்தது.
எவ்வளவு அசிங்கமாகப் பேசினார்கள், இவர்களுக்கு இது தேவைதான் என எண்ணினாலும், வர்மாவின் ஆக்ரோஷத்தையும் அதிரடியையும் அவளால் ஜீரணிக்க முடியவில்லை.
அவனைப் பார்த்து அவளுக்கே அச்சமாக இருந்தது.
அவனுடைய கரங்கள் முழுவதும் உதிரம்.
விட்டால் அவர்களைக் கொன்று விடுவான் போல இருந்தது.
சற்று நேரத்தில் அவனுடைய கட்டளைக்கேற்ப அங்கே சில காவல் அதிகாரிகள் வந்து சேர்ந்தனர்.
“இவனுங்க ரெண்டு பேரையும் ஜீப்ல ஏத்துங்க.. ஒவ்வொரு மணி நேரத்துக்கும் எழுப்பி எழுப்பி அடிங்க.. நான் சொல்லும்போது ஹாஸ்பிடல்ல சேர்த்தா போதும்..” என்றவன், அவர்களுடன் அந்த இருவரையும் அனுப்பி விட்டு, சுவற்றோடு ஒட்டி நின்ற நந்தினியைப் பார்த்தான்.
அவளுடைய பார்வையோ மிரட்சியாக அவன் மீது விழுந்தது.
“நீ போய் நம்ம கார்ல வெயிட் பண்ணு..” என்று அவளை அங்கிருந்து அனுப்பி வைத்தவன், அந்த மாலின் ஓனர் மற்றும் செக்யூரிட்டியிடம் பேசி விட்டு காரை நோக்கி வந்தான்.
முன் இருக்கையில் வெளிறிப் போன முகத்துடன் அமர்ந்திருப்பவளைப் பார்த்தவன் எதுவும் பேசவில்லை.
அவன் உள்ளே வந்து அமர்ந்ததும், சில நொடிகள் தயங்கி அமைதியாக இருந்தவள், பின்பு என்ன இருந்தாலும் தனக்காக இவ்வளவு தூரம் வந்திருக்கிறான் என நினைத்து,
“தேங்க்ஸ்..” என்ற கணம், அவளுடைய கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் யுகேஷ் வர்மா.
“அறிவில்லையா உனக்கு..? யார் என்ன பேசினாலும் இப்படித்தான் அழுதுட்டு உங்க அப்பாகிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவியா..?
திருப்பிக் கொடுக்க தைரியம் இல்லையா.. இத்தனை பேர் இருக்காங்களே அப்புறம் என்ன பயம்..? உன்னை இடிச்சு தப்பா நடந்திருக்கானுங்க.. அவனுங்களைப் பார்த்து பயந்து அழுதுட்டே வந்திருக்கே.. வெக்கமா இல்லை..?
ஷிட்… உன்னை என் பொண்டாட்டின்னு சொல்லவே எனக்கு அசிங்கமா இருக்குடி.. உன்னாலதான் எதுவும் பண்ண முடியல.. அந்த இடத்துல இருந்து எனக்கு போன் பண்ணி இருக்கலாம்ல..?
இல்ல வீட்டுக்கு வந்த அப்புறமாவது நீ என்கிட்ட சொல்லி இருக்கணும்.. அதை விட்டுட்டு உங்க அப்பாக்கு சொல்ற..
என்னைப் பாத்தா எதுக்கும் கையாலாகாதவன் மாதிரி தெரியுதா..? என்னை அசிங்கப்படுத்த ட்ரை பண்றியா.. யூ ஸ்டுப்பிட்..” என்று அவன் கர்ஜிக்க, அவளோ விக்கித்துப் போனாள்.
அவன் அடித்த கன்னம் தீப் பற்றிக் கொண்டது போல எரிந்தது.
அதிர்ச்சியில் அவளுக்கு மூச்சு எடுக்கவே முடியவில்லை.
அவளால் எப்படி அவர்களை எதிர்த்துப் போராட முடியும்..?
தடிமாடுகள் போல இருக்கும் அந்த இருவரையும், சாதாரண பெண்ணான அவளால் எதிர்த்து சண்டை போட்டு விட முடியுமா..?
என்ன பேசுகின்றான் இவன்.
கொஞ்சமும் நியாயமே இன்றி இப்படி அடித்து விட்டானே.
அவளுக்கோ தன் மீது கழிவிரக்கம் பொங்கியது.
சட்டென கண்ணீர் கண்களில் இருந்து வழிய, காரோடு ஒன்றிக் கொண்டாள் நந்தினி.
அப்பாவிடம் சொல்லி விட்டேன் எனத் திட்டுகின்றானே…
துணைக்கு வராத பொறுப்பில்லாத கணவனாக இவன் இருந்தால், அவள் வேறு என்னதான் செய்ய முடியும்..?
சற்று நேரத்திற்கு முன்பு அவன் மீது தோன்றிய ஒரு இதமான மனநிலை அப்படியே அழிந்து போனது.
நொறுங்கிப் போனாள் அவள்.
அவனோ திட்டி முடித்ததும், அவளுடைய முகத்தை கோபத்தோடு பார்க்க, அவளோ பயந்து ஒடுங்கிப் போய் அமர்ந்திருந்தாள்.
“ஏய்.. முதல்ல இப்படி பயப்படுறதை நிறுத்து.. தைரியமா இருக்கணும்.. புரியுதா..” என்று அவன் மேலும் கோபத்தில் கத்த, அவ்வளவுதான் மயங்கியே விட்டாள் நந்தினி.
ஒரு நாளில் எத்தனை அதிர்ச்சிகளைத்தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியும்..?