வேகமாக காருக்குள் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து அவளுடைய முகத்தில் தெளிக்க, மெல்ல தன் கண்களைத் திறந்தாள் அவள்.
கண்களைத் திறந்ததும், அவள் அருகே குனிந்திருந்த வர்மாவின் முகத்தைப் பார்த்து, பதறி காரின் இருக்கையோடு ஒன்றியவாறு படபடப்போடு தன் நெஞ்சில் கை வைத்தாள்.
அவளுடைய அனைத்து செயல்களையும் அழுத்தமாகப் பார்த்துக் கொண்டிருந்தவன், எதுவும் கூறாமல் அவளை விட்டு விலகி அமர்ந்தான்.
‘என்னைப் பார்த்து பயப்படுகிறாள்..’ என்பது மட்டும் அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது.
அவளோ கண்ணீரோடு தன் முகத்தைத் திருப்பிக் கொள்ள, அவன் அடித்த இடம் வீங்கி சிவந்திருப்பதைக் கண்டதும் அவனுக்கோ ஒரு மாதிரியாகிப் போனது.
அடிக்காமல் புரியும்படி எடுத்து கூறியிருக்கலாம்..
‘டாம்.. அவசரப்பட்டு அடிச்சுட்டேன்..’
கோபம் வந்ததும் கைதிகளை அடித்து அடித்து அவனுக்குப் பழகி விட்டது.
சட்டென கோபம் வந்தால் முதலில் அவனுக்கு கைதான் எழுகின்றது.
தவறு செய்யும் கைதிகளும் நந்தினியும் ஒன்றல்லவே.
மீண்டும் அவளைப் பார்த்தவனுக்கு அவளுடைய வீங்கிச் சிவந்த கன்னம் சிறு வருத்தத்தை உண்டாக்க, மன்னிப்பு கேட்டுவிடலாம் என எண்ணினான் அவன்.
என்ன இருந்தாலும், அவனுடைய அடியைத் தாங்கும் வல்லமை அவளுக்கு இல்லை என்பதுதான் உண்மை.
அவளுடைய வெண்ணிற முகத்தில் தெரிந்த தன் விரல்களின் தடத்தைப் பார்த்தவனுக்கோ குற்ற உணர்ச்சி.
இங்கே வைத்து பேசுவது சரியாக வராது.. வீட்டிற்குப் போனதும் பேசிக் கொள்ளலாம் என்று எண்ணியவன், காரைச் செலுத்தினான்.
அவளோ அழுது கொண்டே வந்தாள்.
துடைக்கத் துடைக்க அவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.
நடந்ததையெல்லாம் நினைத்து நினைத்து அழுகிறாள் போலும் என்று எண்ணியவன், காரின் வேகத்தை அதிகப்படுத்தினான்.
சற்று நேரத்தில் வீட்டிற்கு வந்ததும் அவன் காரை நிறுத்த, அங்கே நந்தினியின் தந்தையின் கார் நின்றிருந்தது.
‘போச்சுடா..’ என மனதிற்குள் எண்ணியவன், நந்தினியின் புறம் திரும்பினான்.
“இதோ பாரு நந்தினி.. மால்ல நடந்ததையெல்லாம் சொல்லி சீன் கிரியேட் பண்ணாத.. பிரச்சனை முடிஞ்சிருச்சுன்னு மட்டும் சொல்லு.. முக்கியமா அழாத..” என்று அவன் அறிவுரை கூறிக் கொண்டிருக்கும் போதே, தன்னுடைய தந்தையின் காரைப் பார்த்தவள், அடுத்த நொடியே அவன் பேசுவதைக் கூட கேட்காமல் “அப்பாஆஆஆ..” என்ற விம்மலோடு காரில் இருந்து இறங்கி குடுகுடுவென வீட்டுக்குள் ஓடிவிட, தன் தலையை அழுத்தமாக நீவிக் கொண்டான் யுகேஷ் வர்மா.
‘இவ என்ன மதிக்கவே கூடாதுன்னு நினைக்கிறாளா..?’ என எண்ணியவாறு பற்களை நறநறத்தவன் கோபத்துடன் காரை விட்டு இறங்கி உள்ளே நுழைந்தான்.
அங்கே தன்னுடைய தந்தையை அணைத்து விம்மி அழுது கொண்டிருந்தாள் நந்தினி.
என்ன நடந்தது என்று புரியாமல் கைகளைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தார் சுஜாதா.
அமுதாவோ அங்கே நடக்கும் பிரச்சனையை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ப்பாஆ.. நான் ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா..” என்று தொடங்கியவள், தனியாக ஷாப்பிங் சென்றது தொடங்கி மாலில் நடந்தது வரை கூறி அழத் தொடங்கி விட, அவளோடு சேர்ந்து அந்தப் பெரிய மனிதரும் கலங்கி விட்டார்.
“என்ன மாப்பிள்ளை இது.. அவளை இப்படித்தான் தனியா அனுப்புவீங்களா..? நான் எங்க பொண்ண இதுவரைக்கும் எங்கேயும் தனியா அனுப்பினதே கிடையாது..” என்றார் அவர் ஆதங்கமாக.
அவளோ அவனை முறைத்துப் பார்த்தவள், ஏதோ குற்றவாளியைக் காண்பிப்பது போல தன்னுடைய கையை யுகேஷ் வர்மாவை நோக்கி நீட்டி,
“இந்த போலீஸ்காரர் அடிச்சுட்டாருப்பா..” என்று கூறி அழத் தொடங்கி விட, சட்டென அமுதாவிற்கு சிரிப்பு வந்து விட்டது.
தலையைக் குனிந்து தன் சிரிப்பை மறைத்துக் கொண்டாள் அவள்.
வர்மாவோ அதிர்ந்து விட்டான்.
தன்னைக் கணவன் என்று கூட அவள் குறிப்பிடவில்லை. போலீஸ்காரன் என்று அல்லவா சொல்கிறாள்.
சுஜாதாவோ அவனை அடப்பாவி என்பதுபோல பார்த்து வைக்க, வர்மாவிற்கு தலை சூடாகி விட்டது.
எத்தனை நாட்களும் மக்கள்தான் அவனிடம் வந்து குற்றப்பத்திரிகையை ஒப்புவிப்பர்.
இதோ இங்கே இருப்பவள் தனக்கு எதிராகவே குற்றப்பத்திரிகை வாசிக்கிறாளே.
“நா.. நான் எந்த தப்பும் பண்ணலப்பா.. என்னை டீஸ் பண்ணவங்க தடிமாடுங்க மாதிரி இருந்தாங்க.. அவனுங்களை எதிர்த்து நான் எப்படி சண்டை போட முடியும்..? நான் என்ன இவரை மாதிரி சிக்ஸ் பேக்ஸா வச்சிருக்கேன்.. நான் பயந்து அழுததுக்கு அடிச்சிட்டாருப்பா.. எனக்கு இவர பிடிக்கவே இல்லை..” என்று அவள் அழுகையோடு ஒவ்வொன்றாக ஒப்பிக்கத் தொடங்க, அங்கே இருந்த அனைவருக்கும் சங்கடமாகி விட்டது.
நந்தினியின் தந்தைக்கோ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கோபம் வந்தது.
அவர் தன்னுடைய மகளை பொக்கிஷமாக வளர்த்தவராயிற்றே.
கட்டிக் கொடுத்து ஒரு வாரம் கூட ஆகவில்லை, அதற்குள் அவளை அடித்து விட்டானே.
அவர் மனம் ஆற மறுத்தது.
அழுது கொண்டிருக்கும் மகளை அப்படியே எப்படி அவரால் விட்டுவிட முடியும்..?
“என்ன மாப்பிள்ளை இது..” என்றவரின் குரல் தழுதழுத்து விட்டது.
அமைதியாக நின்றவனுக்கு ஒரு மாதிரியாகிப் போனது.
சுஜாதா சட்டென சூழ்நிலையைத் தன் கையில் எடுத்துக் கொண்டவர்,
“மன்னிச்சிடுங்க சம்மந்தி.. தப்பா எடுத்துக்காதீங்க.. இவன் எதுக்கு பயப்படணும்னு நினைப்பான்.. அதனாலதான் இப்படி பண்ணிட்டான்.. அதுக்காக அடிச்சது சரின்னு சொல்ல வரல.. தப்புதான்.. இனி இப்படி நடக்காம நான் பார்த்துக்கிறேன்..” என்றார் அவர்.
“அதுக்காக அக்யூஸ்ட் அடிக்கிற மாதிரி அடிக்கணுமா சம்மந்தி..? இவளோட முகம் எப்படி வீங்கிருச்சுன்னு பாருங்க..” என்றார் அவர் கவலை மீதூறிய குரலில்.
சுஜாதாவிடம் பதில் இல்லை.
பெற்ற பெண் அழுதால், எந்த தந்தைக்குதான் அதைத் தாங்கிக் கொள்ள முடியும்..?
செய்யும் அனைத்தையும் செய்து விட்டு அமைதியாக நிற்கும் மகனின் மீது அவருக்கு அதிகமாக கோபம் வந்தது.
“சரிங்க.. என் பொண்ணு கொஞ்ச நாளைக்கு எங்க வீட்ல இருக்கட்டும்.. இவளை இப்படியே எப்படி என்னால விட்டுட்டு போக முடியும்..” என்று அவர் கூற, தன் தந்தையின் கையைப் பற்றிக் கொண்டு, இப்பவே கிளம்பிவிடலாம் என்பது போல நின்றிருந்தாள் நந்தினி.
மீண்டும் அமுதாவின் உதடுகள் சிரிப்பில் துடித்தன.
“என்னடாம்மா கிளம்புறியா..” என்று கேட்டார் சுஜாதா.
“ம்ம் அத்தை..” என்றாள் அவள்.
இனி என்ன சொல்லிவிட முடியும்..?
“சரிமா.. ரெண்டு நாள் இருந்துட்டு வந்துரு..” என்றார் அவர்.
“அப்பா.. என்னோட ஹேண்ட் பேக், ஃபோன் எல்லாம் மேல இருக்கு..”
“போய் எடுத்துட்டு வாம்மா..”
“சரிப்பா..” என்றவள், வேகமாக படிகளில் ஏறி தங்களுடைய அறைக்குள் நுழைய, அவர்கள் அனைவரையும் அழுத்தமான ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவளைப் பின்தொடர்ந்து அவனும் படிகளில் ஏறினான்.
சுஜாதாவிற்கோ பிபி எகிறியது.
கடவுளே, இன்னைக்கு என்னென்ன எல்லாம் நடக்கப் போகுதோ என்று மனதிற்குள் அரற்றினார் அவர்.
தன்னுடைய அறைக்குள் நுழைந்த நந்தினி, வேகமாக தன்னுடைய ஃபோனையும் ஹேண்ட் பேக்கையும் மட்டும் எடுத்துக் கொண்டு வெளியேற முயன்ற கணம், வழியை மறைத்து நின்றிருந்தான் யுகேஷ் வர்மா.
அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
எங்கே தன்னை மீண்டும் அடித்து விடுவானோ என்று பயந்தவள், அங்கிருந்தவாறே, “அப்பா..” என்று அலற முயன்ற கணம், “ஏய்..” என்று கர்ஜித்தவாறு அவளுடைய வாயைத் தன் கரத்தால் மூடினான் அவன்.
“கத்தினா கொன்னுடுவேன்..” என்றான் அவன்.
அவளோ மிரண்டு விழித்தபடி நின்றாள்.
அவளுடைய உதடுகளைத் தீண்டிய தன் கரத்தை இழுத்துக் கொண்டவன்,
“என்னடி.. என்னைப் பத்தியே கம்ப்ளைன்ட் பண்றியா..” என்று கேட்டான்.
அவளோ அமைதியாக நின்றாள்.
எப்போது இவன் வழியை விட்டு விலகுவான் என்றிருந்தது அவளுக்கு.
“உங்க அப்பாவைப் பார்த்து நான் பயப்படணும்னு நினைச்சியா.. யாரைப் பார்த்தும் நான் பயப்பட மாட்டேன்.. மரியாதைக்காக அமைதியா நின்னேன்..” என்றான் அவன் அழுத்தமாக.
இதையெல்லாம் இப்போது இவனிடம் யார் கேட்டது..?
போடா சிடுமூஞ்சி என்று மனதிற்குள் அவனை வறுத்தெடுத்தாள் அவள்.
“வழிய விடுங்க.. இல்லன்னா அப்பாகிட்ட சொல்லிடுவேன்..” என்றாள் அவள் மிரட்டலாக.
எத்தனையோ ரௌடி அரசியல்வாதி கொலைகாரர்களை எல்லாம் நொடியில் சமாளித்து விடுபவன் அவளுடைய தந்தையை பார்த்து மட்டும் பயந்தா விடப்போகிறான்..?
அவனுக்கு முதல் முறையாக அவள் முன்பு சிரிப்பு வந்தது.
அடக்கிக் கொண்டவன்,
“நான் என்ன பண்ணாலும் உங்க அப்பாகிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவியா..” என்று அழுத்தமாகக் கேட்டான்.
அவளோ ஆம் என்று தலை அசைக்க,
“அப்போ நான் இப்போ பண்ணப் போறதையும் உங்க அப்பாகிட்ட சொல்லிடு..” என்றவன் அவளை இழுத்து தன் கை வளைவுக்குள் நொடி நேரத்தில் கொண்டு வந்தான்.
உறைந்து நின்றவளின் உதடுகளைச் சுவைத்தவனுக்கு, அவளை விட்டு பிரிய வேண்டும் என்ற எண்ணம் எழவே இல்லை.
அவளுக்கோ உள்ளமும் உடலும் பதறியது.
அவனுடைய நீண்ட முத்தம் அவளை கொஞ்சம் கொஞ்சமாக உருக்க, மெல்ல விழிகளை மூடிக் கொண்டாள் அவள்.
அவனுடைய கரத்தின் அழுத்தத்தை அவளுடைய இடை உணரத் தொடங்கியது.
நிற்க முடியாமல் தடுமாறி அவன் மீது நடுக்கத்துடன் சரிய, அவளைத் தன்னோடு இறுக்கிக் கொண்டவனுக்கு உணர்வுகள் தாறுமாறாகக் கிளர்ந்தன.
கொடிகள் படர்வதற்கு நாட்டப்படும் கொழு கொம்பைப் போல நின்றிருந்தான் அவன்.
அவளோ மெல்லிய பூங்கொடியாய் அவன் மீது படர்ந்திருந்தாள்.
அனைத்தையும் தன் அப்பாவிடம் சொல்லிவிடுவாளா அப்படியென்றால் இந்த முத்தத்தைப் பற்றியும் சொல்லட்டும் என்று வீம்பாக அவளை முத்தமிட ஆரம்பித்தவனுக்கு இப்போது நிலைமை கைமீறிவிட்டிருந்தது.
அவள் முழுதாக வேண்டும் என்று அவனுடைய உடல் முழங்க, அவளை இன்னும் தன்னோடு இறுக்கிக் கொண்டான் அவன்.
அவளுக்கோ அவனுடைய இறுகிய அணைப்பில் மூச்சு விடவே சிரமமாக இருந்தது.
சட்டென அவன் மார்பில் தன் கரத்தைப் பதித்து அவனைத் தன்னிடமிருந்து தள்ளி விட்டவளுக்கு கன்னங்கள் சிவந்து போயின.
அவன் அடித்த அவளுடைய ஒரு பக்க கன்னத்தை வருடி விட்டவன், அவளுடைய அதிர்ந்த பார்வையில் சட்டென அவளை விட்டு விலகி நின்றான்.
1 comment
Super super super super super super super super super super super super super super