Home Novelsவிடிய மறுக்கும் இரவே15. விடிய மறுக்கும் இரவே 🥀

15. விடிய மறுக்கும் இரவே 🥀

by ஸ்ரீ வினிதா
4.9
(79)

விடியல் – 15

இரவு நெருங்கியதும் வர்ணாவிற்கோ இதயத்தின் துடிப்பு அதிகரித்தது.

ஸ்பைடர் மேனைப் பார்த்து விடுவதில் அவளுக்கோ அத்தனை ஆர்வம்.

ஏனோ அவன் மீது மட்டும் இனம் புரியாத ஈர்ப்பு உண்டானது.

இரவு மணி பத்தைத் தாண்டியதும் பல்கனியைப் பார்த்தவாறு அமர்ந்து விட்டிருந்தாள் அவள்.

அதே நேரம் அவளுடைய அறைக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டதும் அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

‘இந்த நேரத்துல யாரு நம்ம ரூம் கதவத் தட்டுறது அப்பாவா இருக்குமோ..? இல்ல அம்மாவா இருக்குமா..?’ எனச் சிந்தித்தவாறு வேகமாக சென்று கதவைத் திறந்தாள் வர்ணா.

வெளியே கொட்டாவி விட்டவாறு நின்றிருந்தார் அவளுடைய தாயார்.

‘ஐயோ இந்த லேடி டான் இப்போ எதுக்கு வந்திருக்காங்கன்னு தெரியலையே..’ என மனதிற்குள் எண்ணியவள் தன்னுடைய அம்மாவைப் பார்த்து,

“என்னம்மா ஏன் இந்த டைம்ல இங்க வந்திருக்கீங்க..?” எனக் கேட்டாள்.

“என் ரூம்ல ஏசி வேலை செய்யலடி.. அதனாலதான் உன் கூட தூங்கலாம்னு வந்தேன்..” என்றவர் அறைக்குள் நுழைந்து நேரே சென்று அவளுடைய படுக்கையில் படுத்து விட அவளுக்கோ உடல் பதறி விட்டது

எப்படியும் இன்னும் சற்று நேரத்தில் தன்னை பார்ப்பதற்காக ஸ்பைடர் மேன் இங்கே வந்து விடுவானே..

‘அச்சச்சோ இன்னைக்கு நான் செத்தேன்.. அம்மாகிட்ட நல்லா சிக்கப் போறேன்…’ எனப் பதறியவள் தன்னுடைய தாயைப் பார்த்து

“ம்மா இங்க படுத்தா உனக்கு தூக்கமே வராது.. நீ உன்னோட ரூமுக்கே போய்த் தூங்கலாமே..?” என்றாள்.

“அதெல்லாம் எனக்கு நல்லாவே தூக்கம் வருது.. பேசாம நீயும் தூங்கு..” என்றவர் விழிகளை மூடி உறக்கத்திற்குச் சென்று விட அவளுக்கோ தேகம் நடுங்க ஆரம்பித்து விட்டது.

‘இன்னைக்கு மட்டும் ஸ்பைடர் மேன் உள்ள வந்தா எங்க அம்மா என்ன கட்டி வச்சு தோலை உரிச்சிடுவாங்க… அவன் வந்ததும் அப்படியே அவன அனுப்பி வச்சிடலாம்..’ என எண்ணியவாறு பல்கனிக்கு வந்து நின்று கொண்டவளுக்கு பதற்றம் அதிகரித்தது.

சற்று நேரத்தில் அவளுடைய அன்னையோ தூக்கத்தில் இருந்து விழித்தவர் படுக்கையில் வர்ணா இல்லாததைக் கண்டதும் “அடியே தூங்காம என்ன பண்ற..?” எனக் கேட்டார்.

“அது.. வந்து ஹாங் படிச்சுக்கிட்டு இருக்கேன்மா..” என சமாளித்தாள் அவள்.

“லைட் போடாம பல்கனில இருந்து இருட்டுல எப்படி படிக்கிற..?”

‘ஆத்தி ஆமால்ல… லைட் போடாதத மறந்து உளறிட்டேனே.. இருந்தாலும் இந்த லேடி டானுக்கு இவ்வளவு பிரைன் இருக்கக்கூடாது..’

“ம்மா… போன்ல நோட்ஸ் இருக்குமா.. லைட் எல்லாம் தேவலை.. நீங்க தூங்குங்க..”

“சரி ரொம்ப நேரம் கண்ணு முழிக்காத சீக்கிரமா வந்து படு..”

“ப்ச்.. ஒரு படிக்கிற பொண்ண இப்படித்தான் டீமோட்டிவ் பண்ணுவீங்களா..?” என அவள் ஆரம்பித்து விட,

“அம்மா தாயே.. நான் பெத்த முத்தே… நீ தூங்கு இல்ல தூங்காம விடு.. என்னவோ பண்ணு.. நான் தூங்குறேன்…” என இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்து விட்டார் அவர்.

அதன் பின்னரே நிம்மதி பெரு மூச்சுடன் பல்கனிக் கதவைப் பூட்டியவள் ஸ்பைடர் மேன் வரக்கூடாது என இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்க அடுத்த ஒரு மணி நேரத்தில் அவளைத் தேடி அங்கே வந்து சேர்ந்தான் அவன்.

அவளுக்கோ இதயம் எகிறிக் குதிக்கத் தொடங்கியது.

“ஹேய் குல்பி.. ரொம்ப நேரமா எனக்காக வெயிட் பண்ணியா..?” எனக் கேட்டவனுடைய வாயை அவசரமாக தன் கரத்தால் மூடினாள் வர்ணா.

அவனும் புரியாமல் அவளை அதிர்ந்து பார்த்தவாறு தன் கைகளை விரித்து புருவங்களை உயர்த்தி என்னவென்பது போல கேட்க, தன்னுடைய அறையை விழிகளால் காட்டினாள் அவள்.

அவனோ அந்த பல்கனிக் கதவை சற்றே திறந்து உள்ளே பார்த்தவன் அங்கே உறங்கிக் கொண்டிருந்த பெண்மணியைப் பார்த்ததும் அதிர்ந்து விட்டான்

“டேய் சத்தம் போட்டு என்னை மாட்டி விட்றாதடா.. எங்க அம்மா ரூம்ல ஏசி வேலை செய்யலன்னு இங்க வந்த படுத்திட்டாங்க.. இன்னைக்கு என்னால உன் கூட பேச முடியாது.. முதல்ல இங்கிருந்து போ..” என கிசுகிசுப்பான குரலில் அவனுக்கு மட்டும் கேட்க வண்ணம் கூறினாள் அவள்.

“போகணுமா பேபி கேர்ள்..?” சோகமாகக் கேட்டான் அவன்.

“இல்லன்னா ஒன்னா சேர்ந்து நாம ரெண்டு பேரும் சுடுகாட்டுக்கு போகணும் பரவால்லையா..?” என சீறினாள் அவள்.

அவனுக்கோ சிரிப்பு வந்து விட்டது.

சத்தம் இன்றி சிரித்தான் அவன்.

“அடப்பாவி இப்போ இங்க நின்னு எப்படி உன்னால சிரிக்க முடியுது..? எனக்கு பக்கு பக்குன்னு இருக்கு.. ப்ளீஸ் சீக்கிரமா இங்கிருந்து போ..”

“உங்க அம்மாதான் அசந்து தூங்கிட்டு இருக்காங்களே..”

“ஒருவேளை எழுந்து இங்க வந்துட்டாங்கன்னா என்னடா பண்றது..?”

“நீ சொல்றதும் சரிதான்.. அப்போ இன்னைக்கு உன் கூட பேச முடியாதா..?”

“நோ வே… சரி உன் போன் நம்பர் கொடு.. நான் மெசேஜ் பண்றேன்..” என்றாள் அவள்.

சரி எனத் தலை அசைத்தவன் அவளுடைய அலைபேசியை வாங்கி தன்னுடைய இலக்கத்தை அதில் சேமித்துவிட்டு அவளிடம் நீட்ட சிறு புன்னகையுடன் அதனை வாங்கிக் கொண்டவள் “ஓகே டா நீ கிளம்பு நான் உனக்கு மெசேஜ் பண்றேன்..” என்றாள்.

ஒரு நொடி தயங்கி நின்றவன் அவளுடைய நெற்றியில் புரண்ட கூந்தலை ஒதுக்கி விட்டான்.

அவளுக்கோ உதடுகளில் புன்னகை மிளிர்ந்தது.

“ஐ லவ் யூ குல்பி..” என்றான் அவன்.

அவளோ உறைந்து விட்டாள்.

“இன்னைக்கு நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன்..”

“ம்ம்…” என்றாள் அவள்.

“சரிமா நான் கிளம்புறேன்..” என்றவன் அவளுடைய பதிலை எதிர்பாராமல் அடுத்த நொடியே அங்கிருந்து கிளம்பி விட்டிருந்தான்.

அவளுக்குத்தான் ஏதோ வெறுமை உள்ளத்தில் குடியேறியதைப் போல இருந்தது

சற்று நேரம் பல்கனிலேயே நின்றிருந்தாள் அவள்.

அவனைப் பற்றிய எண்ணம் மட்டும்தான் அவளுடைய மனதிற்குள் ஓடிக் கொண்டே இருந்தது.

இது வெறும் நட்புதானா..? இல்லை நட்பைத் தாண்டியும் அவளுடைய மனம் அவனிடம் வேறு எதையும் எதிர்பார்க்கின்றதா..?

அவளுக்கு எதுவும் தெளிவாக புரியவில்லை.

ஆனால் தினமும் அவனை எதிர்பார்க்கின்றாள்.

அவனுடன் பேசும் அந்த நொடிகளை இரசிக்கின்றாள்.

இப்படியே அந்த நொடிகள் நீண்டு செல்லாதா என்ற ஏக்கம் அவளுக்குள் எழுவதை அவளால் தவிர்க்க முடியவில்லை.

இப்படி அவனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவள் மழை பெய்ய ஆரம்பித்ததும் மழையில் நனையாதவாறு சற்று உள்ளே தள்ளி நின்றாள்.

அவளுடைய ஸ்பைடர் மேனின் நினைவு மீண்டும் எழுந்தது.

இப்போது அவன் எங்கே இருப்பான்..?

ஒருவேளை திருடுவதற்காக வேறு எங்கும் சென்றிருப்பானா?

அவன் மழையில் நனையாமல் இருக்க வேண்டுமே..

அவனுக்காக அவள் மனம் பதறத்தான் செய்தது.

இப்போதுதான் அவனுடைய எண் அவளிடம் இருக்கின்றதே.. சிறு புன்னகையுடன் அந்த எண்ணிற்கு “ஹாய் ஸ்பைடர் மேன்..” என டைப் செய்து மெசேஜ் அனுப்பி வைத்தாள் வர்ணா.

அடுத்த நொடியே அவனிடமிருந்து பதில் வந்தது.

அவனுடைய மிக வேகமான பதிலில் அவளுடைய புன்னகை மேலும் விரிந்தது.

“ஹாய் குல்பி..” என அனுப்பி இருந்தான் அவன்.

“என்னடா பண்ற..?”

“வெட்டியா இருக்கேன்..” என்றான் அவன்.

“ம்ம்..” என அனுப்பி வைத்தாள் அவள்.

“ம்ம்னா என்னடி அர்த்தம்..?”

“ம்ம்னா ம்ம்தான்.. எதுக்கு என்கிட்ட ஐ லவ் யூ சொன்ன..?”

“உன்ன லவ் பண்றேன்.. சொல்லணும் போல இருந்துச்சு சொன்னேன்..”

“பட் நான்தான் உன்கிட்ட ஆல்ரெடி சொன்னேன்ல.. நான் உனக்கு செட் ஆக மாட்டேன்.. வேற பொண்ண பாத்துக்கோ..”

“ஏய் அப்படியெல்லாம் வேற பொண்ண பார்க்க முடியாது..‌ என்ன மாதிரி திருடனை எல்லாம் யாருக்குத்தான் பிடிக்கப் போகுது..?”

“எனக்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்கு ஸ்பைடர் மேன்.. அப்போ மத்த பொண்ணுங்களுக்கும் உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும்..”

“அடியே நான் உன்ன லவ் பண்றேன்.. இது எப்பவும் மாறாது.. வேற பொண்ணு அது இதுன்னு உளறாத..” என்றான் அவன்.

அவனுடைய அந்த குறுஞ்செய்தியை படிக்கும் போது ஏனோ அவளுக்கு விழிகள் கலங்கின.

விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தே விட,

தன் புறங்கையால் கண்ணீரை துடைத்துக் கொண்டாள் அவள்.

அடுத்த நொடியே அவனிடமிருந்து அழக் கூடாது என்ற குறுஞ்செய்தி வந்ததும் அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

“நான் அழுறேன்னு உனக்கு எப்படித் தெரியும்..?” என அவனுக்கு பதில் அனுப்பி வைத்தாள் அவள்.

“சும்மா கெஸ் பண்ணினேன்.” என்றான் அவன்.

பெருமூச்சுடன் மீண்டும் விழிகளைத் துடைத்து விட்டு அலைபேசியைப் பார்த்தவள், “வீட்டுக்கு போயிட்டியா..? மழைல நனையலதானே..?” என டைப் செய்து அனுப்பி வைத்தாள்.

“இல்லடி.. இன்னும் மழைல நனைஞ்சுக்கிட்டேதான் இருக்கேன்..” என பதில் அனுப்பினான் அவன்.

“வாட்..? எதுக்குடா மழைல நனையுற.? உங்க வீடு ரொம்ப தூரமா..? எங்கேயாவது நனையாம ஓரமா நில்லு.. மழை விட்டதுக்கு அப்புறமா வீட்டுக்குப் போகலாம்..”

“நான் இன்னும் வீட்டுக்கு கிளம்பவே இல்லடி.. உங்க வீட்டுக்கு கீழேதான் நிக்கிறேன்.. உன்னத்தான் பாத்துக்கிட்டே இருக்கேன்… இன்னும் பாத்துட்டே இருக்கணும் போல தோணுது பேபி கேர்ள்..” என அவன் குறுஞ்செய்தி அனுப்பியதும் அவளுக்கு ஒரு கணம் எதுவுமே புரியவில்லை.

ஸ்தம்பித்து விட்டாள் அவள்.

சட்டென பல்கனி கம்பியைப் படித்தவாறு கீழே எட்டிப் பார்த்தவளுக்கு கீழே தன்னுடைய பைக்கில் சாய்ந்து நின்றவாறு தன்னையே பார்த்துக் கொண்டிருந்த அவனைக் கண்டதும் உள்ளம் உருகியே போனது.

கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு மேலாக இங்கேயே நிற்கின்றானா..?

இதயத்தில் சுருக்கென்ற வலி.

தன்னை நிதானப்படுத்திக் கொண்டவள்,

“உனக்கு என்ன பைத்தியம் புடிச்சிருக்கா..? எதுக்காக இப்படி மழைல நனையுற..?” என கோபமாகக் கேட்டாள் வர்ணா.

“கூல் குல்பி.. நான்தான் உன்கிட்ட சொன்னேன்ல.. எனக்கு உன்ன பாக்கணும் போல இருக்கு.. இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே நின்னு பாத்துட்டு போயிடுறேனே..” என அவன் பதில் அனுப்பி வைத்ததும் அவளிடமோ அமைதி.

ஆனால் அவள் உள்ளமோ ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.

இவ்வளவு நேரம் தன்னை பார்ப்பதற்காக மழையில் நனைந்து கொண்டிருக்கின்றானா..?

சட்டென பல்கனியிலிருந்து அறைக்குள் வந்துவிட்டாள் அவள்.

அவன் பாவம்..

நான் அங்கே நின்றால்தானே கீழே நின்று என்னை பார்த்துக் கொண்டிருப்பான்.. நான் உள்ளே வந்தால் அவனால் பார்க்க முடியாதல்லவா.. சென்று விடுவான் என எண்ணியவள்

“இனி என்ன பாக்க முடியாது.. நான் உள்ள வந்துட்டேன்.. ப்ளீஸ் நீ சீக்கிரமா உங்க வீட்டுக்குப் போ..” என மெசேஜை அனுப்பி வைத்தாள்.

“ஓய் குல்பி ஒரே ஒரு முறை வெளிய வா.. ரெண்டு நிமிஷம் மட்டும் உன்னை பார்த்துட்டு போறேனே..” என்றான் அவன்.

அவளுக்கு அவனுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் இதயத்தில் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியது.

“என்னத்தான் டெய்லி பார்க்கிறியே.. இந்த ரெண்டு நிமிஷம் பார்த்தா மட்டும் அப்படி என்ன உனக்கு கிடைக்கப் போகுது..?” என அனுப்பி வைத்தாள் அவள்.

“அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாதுடி.. சீக்கிரமா வா..”

“சரி வெயிட் பண்ணு.. நான் கீழ வரேன்..”

“இல்ல இல்ல வேணாம் குல்பி.. நீ கீழ வராத.. மழை பெய்து நனைஞ்சிடுவ.. பல்கனிக்கு வா..”

“டேய் நீயும் நனைஞ்சுக்கிட்டுதான் இருக்க..”

“அது பரவால்ல.. பட் நீ நனையாத.. பல்கனிக்கு வாடி..”

“என்ன இப்படியே தூரத்துல இருந்து பார்த்தா மட்டும் போதுமா..? அதுக்காகவா இவ்வளவு நேரம் மழையில நின்ன..?”

“எனக்கு இதுவே போதும் குல்பி.. நான்தான் சொல்றேன்ல நீ ரெண்டு நிமிஷம் பல்கனியில வந்து நின்னாலே எனக்குப் போதும்.. என் மனசு நிறைஞ்சு போயிடும்..”

அவனுடைய வார்த்தைகளால் அவளை கொஞ்சம் கொஞ்சமாக உருக்கிக் கொண்டிருந்தான் அவன்.

அவளை இப்படி உருக்க வேண்டும் என்பதெல்லாம் அவனுடைய நோக்கமில்லை.

நிஜமாகவே அவளை அவனுக்குப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலத்தான் இருந்தது.

சற்று நேரத்திற்கு முன்பு தான் கீழே நிற்பது தெரியாமல் பல்கனியில் நின்றவாறு அவள் சிந்தித்ததும் பின்பு தனக்கு சிறு புன்னகையுடன் குறுஞ்செய்தி அனுப்ப ஆரம்பித்தது என அனைத்தையும் ரசித்துக் கொண்டே நின்றான் அவன்.

அவளைப் பார்க்கப் பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு.

இதோ மீண்டும் அவளை பல்கனிக்கு வரும்படி அழைத்து விட்டான்.

அவள் வந்ததும் இரண்டு நிமிடங்கள் அவளைப் பார்வையால் விழுங்கி விட்டு அங்கிருந்து சென்றுவிடலாம் என்பதே அவனுடைய எண்ணம்.

அவளோ தன்னுடைய துவாலை ஒன்றை கரத்தில் எடுத்தவள் சத்தமே இன்றி தன்னுடைய அறைக் கதவைத் திறந்து வேகமாக வெளியே சென்றாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 79

No votes so far! Be the first to rate this post.

You may also like

1 comment

Nirmala Devi October 4, 2025 - 10:39 am

Super super super super super super super super super super super super super super super

Reply

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!