2.3K
விடியல் – 16
வரவேற்பறையைக் கடந்து மெயின் கேட்டைத் திறந்து வெளியே வந்தவளுக்கு பல்கனியைப் பார்த்தவாறு கீழே நின்றிருந்தவனைக் கண்டதும் ஏனோ மனம் கலங்கித்தான் போனது.
என்ன விதமான அன்பு இது..?
இதுதான் காதலா..?
இந்தக் காதல் கொட்டும் மழையில் ஒரு பெண்ணைப் பார்ப்பதற்காக இப்படி மணிக்கணக்காக ஒருவனை நிற்க வைக்குமா..?
வியப்பாக இருந்தது.
வேகமாக அவனை நோக்கி ஓடிச் சென்றாள் அவள்.
அவள் ஓடி வரும் சத்தத்தில் அவனும் அவளைக் கண்டு விட்டான்.
ஆனால் அவனுடைய முகத்தில் மகிழ்ச்சிக்குப் பதிலாக கோபம்தான் தோன்றியது.
“ஏய் நான்தான் சொன்னேன்ல.. கீழே வராத மழைல நனைஞ்சிடுவேன்னு.. சொல்லு பேச்சு கேக்க மாட்டியா..?” என அவன் கோபமாகத் திட்டத் தொடங்க அவனுடைய கரத்தை பற்றி இழுத்து அங்கே நின்ற மரத்திற்கு கீழே அவனை அழைத்து வந்தாள் வர்ணா.
“முதல்ல நீ உள்ள போடி..” என்றவன் தன் பாக்கெட்டில் வைத்திருந்த கைக் குட்டையை எடுத்து அவளுடைய முகத்தில் வழிந்த மழை நீரை வேகமாக துடைத்து விட்டான்.
“நீ ரொம்ப நேரமா நனைஞ்சிட்டு இருக்க ஸ்பைடர் மேன்..” என்றாள் கோபத்துடன்.
“நான் என்ன சக்கரையா இந்த மழையில நனைஞ்சதும் கரைஞ்சு போறதுக்கு..? எனக்கு இதெல்லாம் பழக்கம்தான்..” என்றவனை முறைத்தாள் அவள்.
“ப்ச் உள்ள போ குல்பி..”
“டேய் நானும் சக்கரை இல்ல.. கரைஞ்சுட மாட்டேன் பயப்படாத..” என்றவள் தன்னுடைய கரத்திலிருந்த துவாலையால் அவனுடைய தலையைத் துவட்டத் தொடங்கி விட கோபமாக எதையோ கூற வந்தவனின் வார்த்தைகள் அப்படியே நின்று விட்டன.
“ப்ச்.. கொஞ்சம் குனி ஸ்பைடர் மேன்.. இப்படி பனை மரம் மாதிரி வளர்ந்திருந்தா என்னால எப்படி உனக்கு தல துடைச்சு விட முடியும்..?” என அவள் கூற,
அவனோ சிறுவன் போல அவளுக்குக் கட்டுப்பட்டு தன் தலையைக் குனிய,
அவனுடைய தலையை தன் மார்பை நோக்கி தனக்கு மிக மிக அருகே இழுத்தவள் அதன் பின்னரே அவனுடைய தலையை துவட்டத் தொடங்கினாள்.
அவளுடைய அதீத நெருக்கத்தில் அவனால் பேச முடியவில்லை.
மூச்சுக் காற்று கூட சிரமப்பட்டு தான் உள்ளே சென்று வெளிவந்தது.
அப்படி இருக்கும் போது வார்த்தைகள் மட்டும் இலகுவாக வெளியே வந்து விடுமா என்ன..?
திணறிப் போய் விட்டான் அவன்.
மனதுக்குப் பிடித்த மங்கையின் நெருக்கம் அவனை அந்தக் குளிரிலும் தகிக்கச் செய்தது.
தன்னையும் தன்னுடைய உணர்வுகளையும் முழுமையாக கட்டுப்படுத்திக் கொண்டவன் தன்னுடைய கரங்களை ஒன்றோடு ஒன்று கோர்த்துக் கொண்டான்.
எங்கே அவளை இழுத்து அணைத்து விடுவோமோ என்ற பயம் அவனுக்கு.
அவனுக்கு உதவுகிறோம் என நினைத்தவாறு அவள் தலையை துவட்ட அவளுடைய அந்த செயலோ அவனை சித்தரவதைக்குள்ளாக்கியது.
தன்னுடைய மூச்சுக்காற்று படும் தூரத்தில் நிற்பவளை இழுத்து அணைத்து முத்தமிட அவனுக்கு ஒரு நொடி போதும்.
ஆனால் அதை அவன் விரும்பவில்லை.
மனம் முழுவதும் ஆசை முகிழ்த்து இருந்தாலும் சிறு பெண்ணின் மனதைக் கலங்கச் செய்து விடக்கூடாது என்ற உறுதியோடு இறுகிப் போய் நின்றான் அவன்.
அவளுடைய நெருக்கம் அவனைத் தடுமாறச் செய்தது.
“பேபி கேர்ள் போதும்..” என்றான் அவன் கரகரப்பான குரலில்.
இதற்கு மேல் அவனால் தன்னைக் கட்டுப் படுத்த முடியும் என்ற நம்பிக்கை அவனிடம் கிஞ்சித்தும் இல்லை.
மரத்திற்கு கீழே இருவரும் நின்றதால் மழை அவர்களைத் தீண்டி நனைக்கவில்லை.
ஒருவாறாக அவள் அவனுடைய தலையை துவட்டி முடித்துவிட்டு விலகி நின்றதும்தான் இயல்புக்குத் திரும்பினான் அவன்.
“இனி இப்படி கிறுக்குத்தனமா பண்ணினா உன்ன கொன்னுடுவேன்..” என்றவளின் கரத்தில் இருந்த துவாலையை பறித்து சற்றே நனைந்திருந்த அவளுடைய தலையை துவட்டி விட்டவன் மீண்டும் அவளிடம் துவாலையைக் கொடுத்தான்.
“ஸ்பைடர் மேன்..”
“என்னடி..?”
“ப்ளீஸ் இனி இப்படி பண்ணாத எனக்கு அழுகையா வருது..”
“அச்சோ சோ ஸ்வீட் பேபி நீ..” என்றான் அவன்.
“நீயும்தான்..” என்றாள் அவள்.
“சரிமா நீ உள்ள போ..”
“அப்போ நீ..?”
“நானும் வீட்டுக்கு கிளம்புறேன்..”
“அவ்ளோதானா..?”
“வேற என்னடி..?”
“எனக்காக இவ்வளவு நேரம் மழைல நின்னுருக்க.. சோ உனக்கு ஏதாவது தரலாம்னு யோசிச்சேன்..” என்றதும் அவனுடைய விழிகளோ அதிர்ச்சியில் விரிந்தன.
அவளை நெருங்கி வந்தவன் “வாவ்.. என்ன தருவ..?” என ஆர்வமாகக் கேட்டான்.
“நான் சொன்னா நீ என்ன தப்பா நினைச்சுடுவ..” என அவள் கூற அவனுக்கோ ஜிவ்வென ஏறியது உணர்வு.
‘ஐயோ கொல்றாளே..’ என மனதிற்குள் முணுமுணுத்தவன்
“தப்பால்லாம் நினைக்க மாட்டேன் கொடுடி..” என்றான்.
அவனுக்கோ முத்தம் தரப் போகின்றாள் என்றுதான் தோன்றியது.
உடல் முழுவதும் இருந்த அணுக்கள் எல்லாம் புத்துயிர் பெற்றதைப் போல சிலிர்த்து அவளைப் பார்த்தான் அவன்.
“நிஜமாவா தப்பா நினைக்க மாட்டியே..? அப்போ ஓகே வெயிட் பண்ணு.. நான் போய் எடுத்துட்டு வரேன்..” எனக் கூறியவள் மீண்டும் வீட்டை நோக்கி ஓட முயல சட்டென அவளுடைய கரத்தைப் பிடித்து இழுத்து தன் அருகில் நிறுத்தியவன்,
“எனக்கு தர்றேன்னு சொன்னத தராம எங்க போற..?” எனக் கேட்டான்.
“நான் தரேன்னு சொன்னது கிச்சன்லதான் இருக்கு.. இப்போ போய் எடுத்துட்டு வரேன்..” என்றதும் அவனுக்கோ உற்சாகம் அத்தனையும் வடிந்து போனது.
“வாட் கிட்சன்லையா..? நீ என்ன தரலாம்னு இருந்த..?” எனப் புருவம் உயர்த்தியவாறு கேட்டான் அவன்.
“மேகி நூடுல்ஸ்..” என்றாள் அவள்.
“எதே நூடுல்ஸ்ஸா..? அடிப்பாவி இதுக்கு எதுக்குடி நான் தப்பா நினைக்க..?”
“இல்ல அந்த மேகி நூடில்ஸ்ல பாதிய நான் சாப்பிட்டேன்.. பாதிதான் இருக்கு.. பாதிய கொடுத்தா நீ தப்பா நினைச்சுருவியோன்னுதான் அப்படி கேட்டேன்…” என்றாள் அவள்.
அவனுக்குள் எழுந்த உணர்வுகள் யாவும் இப்போதே முத்தம் வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்தன.
பெருமூச்சுடன் தன் தலையை இடம் வலமாக அசைத்தவன் “இல்லடி எனக்கு வேணாம்..” என்றான்.
“ஏன் ஸ்பைடர் மேன்..? நீதானே ரொம்ப ஆர்வமா கொடுன்னு கேட்ட.. இப்போ எதுக்கு வேணாம்னு சொல்ற..?”
“நீ கொடுக்கிறேன்னு சொன்னத நான் வேற மாதிரி நினைச்சுட்டேன்.. இப்போ நூடுல்ஸ் சாப்பிடுற மூடு எனக்கு சுத்தமா இல்ல.. நீயே சாப்பிட்டுக்கோ.. நாம நாளைக்கு மீட் பண்ணலாம்..” என்றான் அவன்.
“ஏன் நீ என்ன நினைச்ச..?” என அவள் கேட்டதும் அவனுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
“அத விடு பேபி கேர்ள்..” என சமாளிக்கப் பார்த்தவனின் கரத்தை பிடித்துக் கொண்டவள் “மரியாதையா உண்மைய சொல்லு..” என்றாள்.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல டி..”
“இப்போ நீ சொல்லப் போறியா இல்லையா ஸ்பைடர் மேன்..?”
“ஊப்ஸ்.. ஒரு காதலன் ஒரு காதலிகிட்ட என்ன எதிர்பார்ப்பானோ அதைத்தான் நானும் உன்கிட்ட எதிர்பார்த்தேன்..” என அவன் வெளிப்படையாக கூற முடியாமல் சுற்றி வளைத்துக் கூற,
“ஒரு லவ்வர் தன்னோட லவ்வர் கிட்ட அப்படி என்ன கேட்பான்..?” என அவனிடமே கேட்டு வைத்தாள் வர்ணா.
“ஏய் ஏன்டி என்ன படுத்துற..?”
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லுடா..”
“வேற என்ன எதிர்பார்ப்பாங்க கிஸ் தான்.. என் மேல பாசம் ஓவர் பிளோவாகி கிஸ் பண்ண போறியோன்னு நினைச்சேன்.. ஆனா நீ மேகி நூடுல்ஸ் பத்தி பேசி இருக்க..” என அவன் சோகமாகக் கூற அவளுக்கோ சிரிப்பு வந்துவிட்டது.
“ஹா ஹா ஆச தோச..”
“அடியேய் வெறுப்பேத்தாத..”
“பின்ன உனக்கு என்கிட்ட கிஸ் வாங்குற ஆசை எல்லாம் இருக்கா..?”
“லைட்டா..” என்றவன் அவளுடன் சேர்ந்து தானும் சிரித்துக் கொண்டான்.
மழையின் வேகம் குறைந்திருந்தது.
“அடுத்த மழை வர்றதுக்குள்ள நீ உள்ளே போ குல்பி..” என்றான் அவன்.
“ஓகேடா.. நீயும் ஜாக்கிரதையா வீட்டுக்குப் போ.. ரோட் எல்லாம் தண்ணியா இருக்கு.. பார்த்து வண்டியை மெதுவா ஓட்டு..”
“சரிமா.. நீயும் போனதும் இந்த ட்ரெஸ்ஸ மாத்து.. இப்படியே ஈரத்தோட தூங்கிடாத..” என்றான் அவன் அக்கறையுடன்
அவனுடைய அக்கறையில் அவளுக்கு இதமாகத்தான் இருந்தது.
எதுவும் கூறாமல் அவனை இமைக்காமல் பார்த்தவள் அவனை நெருங்கி வந்தாள்.
“ஸ்பைடர் மேன்..?”
“என்னடி..?”
“வே.. வேணும்னா நீ கிஸ் பண்ணிக்கோ..” எனக் கூறிவிட்டு அவள் விழிகளை மூடி அமைதியாக நின்று விட அவனுக்கோ திகைப்பாக இருந்தது.
அவளோ வேகமாக மூச்சை இழுத்தவாறு விழி மூடி நின்றிருந்தாள்.
“அப்படியே அறைஞ்சேன்னா பல்லு அத்தனையும் கொட்டிடும்..” என்றான் அவன்.
அவளோ அதிர்ந்து விழிகளை திறந்து அவனைப் பார்த்தாள்.
“நீதானே கிஸ் எதிர்பார்த்தேன்னு சொன்ன.. எனக்காக இவ்வளவு நேரமா மழைல நின்னியே அதனாலதான் உன்ன கிஸ் பண்ண சொன்னேன்.. ஆனா இப்போ இப்படி என்ன திட்டுறியே..” என்றவளுக்கு விழிகள் கலங்கி விட்டன.
“பேபி பேபி பேபி.. நான் உன்கிட்ட கிஸ் எதிர்பார்த்தேன்தான் இல்லைன்னு சொல்லல.. அதுக்காக இப்படி கண்ண மூடி பக்கத்துல வந்து நின்னு பண்ணிக்கோன்னு சொல்லுவியா..? ஒருவேளை நான் உன்கிட்ட அத்து மீறி நடந்துக்கிட்டா என்ன பண்ணுவ..?” கோபமாகக் கேட்டான் அவன்.
“நீ அப்படி பண்ண மாட்டேன்னு எனக்குத் தெரியும் ஸ்பைடர் மேன்..” என்றாள் அவள் அழுகை கலந்த குரலில்.
“இதோ பாருடி.. எனக்கும் உன் மேல கொள்ளை கொள்ளையா ஆசை இருக்கு.. அதெல்லாம் என்னன்னு இப்போ சொன்னா உனக்கு புரியுமான்னு கூட எனக்குத் தெரியல..
முதல்ல என்னோட லவ்வுக்கு நீ எஸ் சொல்லணும்.. அதுக்கப்புறம் நான் உங்க வீட்ல பேசணும்.. உன்ன பெத்தவங்க இதுக்கு சம்மதிக்கணும்.. அதுக்கப்புறமா நம்ம கல்யாணம் நடக்கணும்.. அதுக்கப்புறம்தான் இதெல்லாம்.. என்னோட எல்லா ஆசைகளையும் மொத்தமா உன்கிட்ட கொட்டி தீக்கிற நாள் அதுவாதான் இருக்கும்..
அதுவரைக்கும் எவ்வளவு ஆசையா இருந்தாலும் நான் என்ன கண்ட்ரோல் பண்ணிப்பேன்.. இதுல எல்லாம் நீ உன்னோட மனச அலைபாய விடாதே..” என அவன் கூற அவளுக்கோ தேகம் படபடத்து விட்டது.
அவர் சொல்வது அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை அல்லவா..?
எந்தத் தைரியத்தில் அவனை நெருங்கி முத்தமிடு என்று கூறினோம்..?
அவள் முகம் சட்டென மாறிப் போனது.
அவன் தன்னை தவறாக நினைத்து இருப்பானோ என தயங்கியவள் அவனை விட்டு விலகி நிற்க,
“லவ் யூ கண்ணம்மா.. நீ எனக்கு மட்டும்தான் சொந்தம்.. உனனோட உச்சில இருந்து உள்ளங்கால் வரைக்கும் இருக்க எல்லா பாகமும் என்ன மட்டும்தான் தீண்டணும்.. உன்னோட ஒவ்வொரு முத்தமும் எனக்கு மட்டும்தான்.. அதே மாதிரி நானும் உனக்கு மட்டும் தான்..” என அவன் ஆழ்ந்த குரலில் கூற அவளுக்கோ அவனை மிகவும் பிடித்துக் கொண்டது.
தன்னுடைய நெகிழ்ச்சியை மறைத்தவள்,
“போடா நான் உன்னோட லவ்வுக்கு எஸ் சொல்லவே மாட்டேன்..” என்றாள்.
“அதையும் பார்க்கலாம் குல்பி..” என்றவன் அவளுடைய தலையை பாசமாக வருடி விட்டு அவளை அங்கிருந்து கிளம்பும் படி கூறினான்.
அவனிடம் சரி என தலையசைத்தவள் அவனைத் திரும்பித் திரும்பி பார்த்தவாறு அங்கிருந்து தன்னுடைய வீட்டை நோக்கி செல்லத் தொடங்கினார்.
அவள் சென்ற சிறிது நேரத்தில் தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு நெடுஞ்சாலை வீதியில் பயணிக்கத் தொடங்கியவனின் பார்வை அதே வழியாய் வந்த ஏசிபி யுகேஷ் வர்மாவின் மீது பதிந்தது.
யுகேஷ் வர்மாவும் அவனைத்தான் பார்த்தான்.
‘இந்த மிட்நைட்ல கூட ஏசிபி சார் ட்யூட்டியை கரெக்டா பண்றாரு போல இருக்கே..’ எனக் கேலியாக எண்ணிக் கொண்டவனின் மோட்டார் பைக்கோ யுகேஷ் வர்மாவின் ஜீப்பைத் தாண்டி வேகமாக முன்னேறியது.
🥀🥀
1 comment
Super super super super super interesting