2.5K
விடியல் – 17
“என்னடி சொல்ற..? நந்தினி அவங்க வீட்டுக்கு போயிட்டாளா..” என அதிர்ந்து போய் கேட்டார் நாதன்.
“பின்ன இப்படி ஒரு புருஷன் இருந்தா போகாம வேற என்ன பண்ணுவா..? இன்னைக்கு எனக்கு சங்கடமாப் போச்சுங்க.. அந்தப் பொண்ணு ரொம்ப பயந்து போய் வந்திருக்கா.. இவன் என்னடான்னா அங்க போய் அந்தப் பசங்களை அடிச்சிட்டு வந்து இவளையும் அடிச்சிருக்கான்..” என்றார் அவர் கவலையுடன்.
“என்ன சுஜாதா சொல்ற..? நம்ம மருமகள இவன் எதுக்கு அடிச்சான்..?”
“அவ பயந்து போய் அழுதாளாம்.. தைரியமா இருக்கலையாம்.. அதுவும் நடந்த எல்லாத்தையும் இவன்கிட்ட சொல்லாம அவங்க அப்பாக்கிட்ட சொல்லிட்டாளாம்.. இவனுக்கு கோவம் வந்திருச்சாம்.. பொண்ணுன்னா பயப்படக் கூடாது.. அப்படி இப்படின்னு சொல்லி அடிச்சிருக்கான்..
அவ பாவம்.. அவங்க அப்பா இங்க வந்ததும் எல்லாத்தையும் சொல்லி ஓன்னு அழுதுட்டா.. பொண்ணுக்கு ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்திருப்பாங்க போல.. அவங்க மேல தப்பு சொல்ல முடியாது.. ஒரே பொண்ணு.. செல்லமாதானே வளர்ப்பாங்க.. நாம மட்டும் நம்ம அமுதாவை எப்படி வளர்த்தோம்..? எல்லா தப்பும் உங்க பையன் மேலதான்.. எனக்கு வர்ற கோபத்துக்கு அவனை நல்லா திட்டிவிடணும் போல இருக்குங்க..” என்றார் சுஜாதா.
“திட்ட வேண்டியதுதானே.. அதைதானே நானும் சொல்றேன்..”
“ஏன் நீங்க கூப்பிட்டு திட்ட மாட்டீங்களா..? அந்தப் பொண்ணு திரும்பி வருமானு கூட தெரியல.. ரெண்டு நாள் இருந்துட்டு திரும்ப வந்திரும்மான்னு சொல்லித்தான் அனுப்பினேன்.. அதுக்கு அவ பதில் கூட சொல்லல.. இப்போ என்னங்க பண்றது..? நம்ம மேலதான் தப்பு இருக்கு..”
“புரியுது சுஜாதா.. கல்யாணம் பண்ணி இங்க வந்து ஒரு வாரம் கூட ஆகல.. அதுக்குள்ள அவங்க பொண்ணுக்கு இவன் அடிச்சிருக்கான்னு தெரிஞ்சா அவங்க மனசு என்ன பாடு படும்.. நான் ஏதாவது அவங்ககிட்ட பேசவா..”
“நீங்க பேசி என்னங்க பிரயோஜனம்.. அவன்தான் பேசணும்.. இவனே மன்னிப்பு கேட்டு நந்தினியை கூட்டிட்டு வந்துட்டான்னா பிரச்சனை பெருசாகாது.. ஆனா இவன் மன்னிப்பு கேட்கணுமே..”
“பைத்தியமா நீ.. இவனாவது மன்னிப்பு கேட்கிறதாவது.. இப்படி நாம சொன்னா அங்க போய் சண்டை போட்டாலும் போட்டுட்டு வந்திருவான்..” என்றார் நாதன்.
“இல்லங்க.. என்ன இருந்தாலும் இவன் மேலதான் தப்பு.. நான் சும்மா விடப் போறதில்ல.. கொஞ்ச நேரத்துல டின்னருக்கு அவன் கீழே இறங்கி வருவான்.. அப்போ இதைப் பத்தி தெளிவா பேசிடலாம்.. அவனுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டிய நாமளே இப்படி பயந்து போய் அமைதியா இருந்தா அவனுக்கு எப்படி எது சரி எது தப்புன்னு புரியும்..”
“சரிமா.. நீ வருத்தப்படாத.. இன்னைக்கு பேசலாம்..” என்றார் நாதன்.
அறைக்குள் இருந்த வர்மாவிற்கோ நந்தினி பற்றி எந்த எண்ணங்களும் பெரிதாக எழவில்லை.
அவள் சென்றவுடன் சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது.
இங்கேயே இருப்பாள் என்றுதான் நினைத்தான்.
ஆனால் அவள் தன் தந்தையுடன் கிளம்பியது அவனுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.
அடுத்த சில நிமிடங்கள் அவளுடைய இதழ்களைத் தீண்டிய உணர்வில் தத்தளித்தான்.
மீண்டும் அந்த முத்தம் வேண்டும் போலிருந்தது.
இறுக அணைத்து தன்னுடைய உணர்வுகளை அவளில் வடித்துவிட வேண்டும் போல ஆவல் எழுந்தது.
ஆனால் அதற்குத்தான் அவள் இல்லையே.
அட்வைஸ் செய்தால் இப்படியா கோபித்துக் கொண்டு செல்வது..?
அவளுடைய நன்மைக்குத்தானே சொன்னேன் என எண்ணியவன் அதன் பின்னர் அவளைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
தன்னுடைய வேலைகளில் மூழ்கிப் போனான்.
கிட்டத்தட்ட ஒரு கேஸ் சம்பந்தமாக பதினைந்து சிசிடிவி கேமராவின் ஃபுட்டேஜ்கள் அவனிடம் இருந்தன.
அனைத்தையும் சரிபார்த்து அதில் ஏதாவது தவறுகள் இருக்கின்றதா ஆதாரம் கிடைக்கின்றதா என அவன்தான் ஆராய வேண்டும்.
அந்த வேலையில் மூழ்கியதால் அவன் நந்தினியை மறந்தே போனான்.
இரவு நேரம் வந்ததும்தான் உணவு எடுத்து வர அவள் இல்லை என்ற நினைவே வந்தது.
‘அவள் இல்லை என்றால் என்னால் சாப்பிட முடியாதா என்ன..’ என நினைத்தவாறு இலகுவான ஆடை ஒன்றை அணிந்து கொண்டு கீழே வந்தவனை அழுத்தமான பார்வையுடன் எதிர் கொண்டார் நாதன்.
அந்தப் பார்வையிலேயே அவனுக்குப் புரிந்து விட்டது.
தன்னுடைய முகத்தை இன்னும் இறுக்கமாக வைத்துக் கொண்டான் அவன்.
சுஜாதா பேசத் தயங்கியவாறு அங்கே அமர்ந்து இருந்தார்.
அவனைப் பார்ப்பதும் பின்பு தன் முன்னே இருந்த தட்டைப் பார்ப்பதுமாக இருந்தவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவன் அமைதியாக உண்ணத் தொடங்கி விட நாதனுக்கோ தன் மகன் மீது கோபம் அதிகரித்தது.
“என்ன இருந்தாலும் இன்னைக்கு நீ பண்ணது ரொம்ப தப்பு வர்மா..”
தந்தையை ஒரு நொடி நிமிர்ந்து பார்த்தவன் “நான் தப்பு பண்ணல..” என்றான் அழுத்தமாக.
“போலீஸா இருந்துட்டு ஒரு பொண்ணைக் கை நீட்டி அடிக்கிறது தப்பு இல்லையா..? அதுவும் உன்னை நம்பி வந்த பொண்டாட்டியை இப்படித்தான் அடிப்பியா..?”
“அவ என்ன குழந்தையா..? அங்க ரெண்டு பசங்க இவள டீஸ் பண்ணியிருக்காங்க.. கண்ணைக் கசக்கி அழுதுகிட்டே வந்திருக்கா.. ஒரு ஏசிபியோட பொண்டாட்டியா இருந்துகிட்டு இப்படியா அழுறது.. எனக்கு அசிங்கமா இருக்கு..” என்றான் அவன் எரிச்சலுடன்.
“என்னடா பேசுற..? அவ ஒரு பொண்ணுடா.. அவளால என்ன பண்ண முடியும்.. அவனுங்களை எதிர்த்து சண்டை போட முடியுமா..”
“ஓ காட்.. உங்க மருமகளுக்கு கண் மூடித்தனமா சப்போர்ட் பண்றதை முதல்ல நிறுத்துங்க.. அவ தனியா காட்டுலயோ இல்ல தனி இடத்திலயோ மாட்டிக்கல.. அவ இருந்தது ஒரு பப்ளிக் ப்ளேஸ்.. அங்க கிட்டத்தட்ட நானூறு பேருக்கு மேல அந்த டைம்ல இருந்தாங்க.. கத்தி ஹெல்ப்னு கேட்டிருந்தாக் கூட அத்தனை பேரும் வந்து அவளுக்கு ஹெல்ப் பண்ணியிருப்பாங்க.. அதை விட்டுட்டு சைலண்டா அழுதுகிட்டே வந்திருக்கா.. வந்ததும் இல்லாம என்கிட்ட கூட சொல்லாம அவங்க அப்பாக்கிட்ட போய் சொல்லி அழுறா.. இப்படி ஒரு பயந்த பொண்ணை எதுக்கு எனக்கு கட்டி வச்சீங்க..” என அவன் அவர்களைக் குற்றம் சுமத்த அவனுடைய பெற்றோர்களுக்கோ தங்களுடைய தலையைச் சுவற்றில் முட்டிக் கொள்ள வேண்டும் போலிருந்தது.
இவனைப் பற்றி தெரிந்தும் திருமணத்தை ஏற்பாடு செய்து நடத்தி வைத்தது அவர்களுடைய பிழை அல்லவா..?
“நீதானடா பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்ன..” தாங்க முடியாமல் கேட்டு விட்டார் நாதன்.
“இப்படி பயந்தவளா இருப்பாள்னு முன்னமே தெரிஞ்சிருந்தா பிடிக்கலைன்னு சொல்லிருப்பேன்..” என்றான் சாதாரணமாக.
சுஜாதாவின் முகமோ ஒரு மாதிரி ஆகிவிட்டது.
“ஏன்பா இப்படி நடந்துக்குற.. உன்னை நாங்க இப்படியா வளர்த்தோம்..?”
“ப்ச்.. முதல்ல என்னை நீங்க வளர்க்கவே இல்லை.. நான் ஹாஸ்டல்லதான் வளர்ந்தேன்.. மறந்துடுச்சா..” என அவன் எதிர்க் கேள்வி கேட்க சுஜாதாவின் கண்களோ கலங்கி விட்டன.
தன் தாயைப் பார்த்தவன் “என்னோட பொண்டாட்டி எப்படி இருக்கணும்னு நான்தான் முடிவு பண்ணனும்.. இன்னொரு தடவை அவளுக்கு இப்படி நடந்துச்சுன்னா அவளே அந்தப் பிரச்சனையை பேஸ் பண்ணுவா.. இப்படி அழுதுட்டு பயந்து ஓடி வரமாட்டா.. அதுக்காகத்தான் அப்படி பண்ணேன்.. போதுமா..” என சத்தமாகக் கூறியவன் உணவுத் தட்டைத் தள்ளி வைத்தான்.
“இப்போ எதுக்குப்பா சாப்பாட்டைத் தள்ளி வைக்கிற..” பதறினார் சுஜாதா.
“எனக்கு வேணாம்..”
“கண்ணா.. நான் சொல்றது புரிஞ்சுக்கோ.. அம்மா உன்னோட நல்லதுக்குத்தானே சொல்லுவேன்.. இப்பதான் உன்னோட வாழ்க்கை ஆரம்பிச்சிருக்கு.. அதுக்குள்ளே பொண்டாட்டி வீட்டை விட்டு போறதெல்லாம் நல்லா இருக்கா..”
“ஓ மை காட்.. உங்களுக்கு புரியுதா இல்லையா.. அவளை வீட்டை விட்டு போகணும்னு நான் சொல்லல.. அவளேதான் போனா.. போனவளுக்கு வாழ்க்கை முக்கியம்னா திரும்பி வரத் தெரியும் தானே.. வாழ்க்கை வேணும்னா அவளே வரட்டும்..”
“நீ போய் நம்ம மருமகளைக் கூட்டிட்டு வா கண்ணா..”
“தயவு செஞ்சு என்னை கண்ணான்னு கூப்பிடாதீங்க.. அடுத்து என்னால எங்கேயும் போக முடியாது.. யாரையும் கூட்டிட்டு வரவும் முடியாது.. உங்களுக்கு வேணும்னா நீங்க போய் கூப்பிடுங்க..”
“வர வர நீ நடந்துக்கறதெல்லாம் சரியில்ல..” எனக் கோபமாகக் கூறினார் நாதன்.
“நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்.. நீங்க ரெண்டு பேரும் தான் புதுசா என்னோட விஷயத்துல தலையிடுறீங்க..” என்றதும் அதிர்ந்துவிட்டார் அவர்.
இதற்கு மேல் அவர்களால் என்னதான் பேசிவிட முடியும்..?
கரையவே மாட்டான் என கல்லாய் இறுகி அல்லவா நிற்கின்றான்.
அதே கணம் சுஜாதாவின் அலைபேசி அலறியது.
“ஏங்க சம்மந்தி அம்மாதான் கால் பண்றாங்க.. நான் எப்படிங்க அவங்ககிட்ட பேசுறது..? எனக்கு சங்கடமா இருக்கு..” எனத் தயங்கினார் சுஜாதா.
“இப்போ நீ காலை அட்டென்ட் பண்ணாம விட்டா இன்னும் அவங்க நம்மளை தப்பாதான் நினைப்பாங்க.. எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்.. போனை ஆன் பண்ணு..” என்றார் நாதன்.
எழுந்து செல்ல முயன்ற வர்மாவோ அப்படியே அமர்ந்திருந்தான்.
தயக்கத்துடன் அந்த அழைப்பை ஏற்றவர் “சொல்லுங்க சம்மந்தி..” என்றார்.
அழைப்பு ஸ்பீக்கரில் இருந்தது.
“நல்லா இருக்கீங்களா அக்கா..” என சாதாரணமாகக் கேட்டார் நந்தினியின் அன்னை.
அவருடைய இயல்பான பேச்சில் நிம்மதி பெருமூச்சு விட்டவர் சற்றே நிதானமாக பதில் கூறத் தொடங்கினார்.
“நான் நல்லா இருக்கேன் சம்மந்தி..” என்றார் சுஜாதா.
“தப்பா எடுத்துக்காதீங்க சுஜாக்கா.. பொண்ணுக்கு ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்துட்டோம்.. அவ அழுதா இவருக்கு தாங்கிக்கவே முடியாது.. அதனாலதான் நந்தினியை இங்க கூட்டிட்டு வந்துட்டாரு.. நான் கோயிலுக்கு போயிருந்ததால எனக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியல.. வீட்டுக்கு வந்து பார்த்தா அப்பாவும் பொண்ணும் ஒரே ரகளை..”
“இல்லம்மா.. எங்க மேலதான் தப்பு.. நந்தினி பாவம்தான்..” என்றார் சுஜாதா.
அவரை முறைத்துப் பார்த்தான் யுகேஷ் வர்மா.
போடா என்பது போல அவனை ஒரு பார்வை பார்த்த சுஜாதாவோ அலைபேசியில் தொடர்ந்து பேசினார்.
“இனி இப்படி எல்லாம் நடக்காது சம்மந்தி..”
“மாப்ள சொன்னதும் சரிதானே அக்கா.. இப்படி சின்ன விஷயத்துக்கெல்லாம் பயந்து அழக் கூடாது.. அவளே எல்லாத்தையும் எதிர்த்து போராடணும்.. அதுதான் என்னோட விருப்பம்.. ஆனா இவர்தான் அவளைத் தனியா எங்கேயுமே விடுறதில்லையே.. ஒரே பொண்ணுன்னு ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்துட்டோம்..”
“பரவால்ல சம்மந்தி.. எனக்குப் புரியுது..”
“நானே அவளை சமாதானப்படுத்தி அங்க அனுப்பி வைக்கிறேன்..” என நந்தினியின் அன்னை கூறியதும்தான் சுஜாதாவுக்கும் நாதனுக்கும் நிம்மதியாக இருந்தது.
“இப்ப நந்தினி எப்படி இருக்கா.. அழுதுட்டுதான் இருக்காளா..?” எனக் கேட்டார் சுஜாதா.
“ஐயோ.. நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல.. சோபால படுத்திருந்து டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் பாத்துட்டு இருக்கா.. அவளை நினைச்சு நீங்க கவலைப்படாதீங்க..” என்றவர் சற்று நேரம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்ததும்தான் அவர்களுக்கு நிம்மதியாக இருந்தது.
வர்மாவோ எதுவுமே கேட்காதவன் போல எழுந்து உள்ளே சென்று விட,
“ஏங்க இவனைப் பெத்ததுக்கு நாமளும் பேசாம டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் பாத்திருக்கலாம்..” என்றார் சுஜாதா.
சுஜாதாவின் பேச்சில் பக்கென சிரித்து விட்டார் நாதன்.
அறைக்குள் சென்று படுக்கையில் விழுந்த வர்மாவிற்கோ நந்தினியின் இதழ்களின் சுவையை அறிய மனம் ஆவல் கொண்டது.
மோகக் குளத்தில் மூழ்கும் நிலையில் இருந்தான் அவன்.
🥀💜🥀
1 comment
அருமை அருமை அருமை அருமை அருமை