விடாமல் துரத்துராளே 16,17

4.4
(15)

பாகம் 16

வேதாசலத்தின் நெருங்கிய நண்பர் தான் மகேஸ்வரன்.‌இருவரும் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே நண்பர்கள். பள்ளி படிப்பை இருவரும் ஒன்றாக முடிக்க மகேஸ்வரன் மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார்..

வேதாசலம் தங்கள் குடும்ப தொழிலை நிர்வகிக்க நிர்வாக பிரிவை தேர்ந்தெடுத்து படித்தார். கல்லூரி வேற வேற மாறினாலும் அவர்களின் நட்பில் எந்த பாதிப்பும் இல்லை. இருவரும் கல்லூரி முடித்ததுமே வேதாசலத்திற்கு வீட்டினரால் மீனாட்சிக்கும் திருமணம் நடந்ததது. மகேஸ்வரன் உடன் படித்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.‌ இருவரின் நட்பை இவர்களின் மனைவிகளும் புரிந்து கொண்டதால் எந்த பிரச்சினையும் இன்றி இன்று வரை தொடர்கிறது. குடும்ப நண்பர்கள் ஆகினர்.

அதன் பின்பு வேதாசலம் மில் நிர்வாகத்தை கையில் எடுக்க, மகேஸ்வரன் ஆரோக்கியம் மருத்துவமனை பொறுப்பை கையில் எடுத்தார். ஆரோக்கியம் மருத்துவமனை மகேஸ்வரனின் தாத்தா சிறியதாக ஆரம்பிக்க அதை மகேஸ்வரன் தந்தை ஓரளவு பெரிதாக்கினார். மகேஸ்வரன் பொறுப்பேற்ற பின்பு தான் மருத்துவமனை மிகவும் பிரபலமானது.. மக்களிடம் நிறைய நன்மதிப்பைப் பெற்றது. மகேஸ்வரன் மருத்துவமனையை விரிவுப்படுத்தியது மட்டுமில்லாமல் நிறைய ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம் பார்க்க வசதி இல்லாத மலை வாழ் மக்களுக்கும் கூட இலவசமாக மருத்துவ உதவி நிறைய செய்தார். அதனால் மகேஸ்வரனுக்கும் மருத்துவமனைக்கும் நல்ல பெயர் கிடைத்தது. அந்த காலத்தில் எல்லாம் ராஜாக்களின் உயிர் ஏழு மலை ஏழு கடல் தாண்டி‌ ஒரு கிளிக்குள்ள இருக்கும் சொல்லுவாங்க. அதே போல் தான் மகேஸ்வரனின் உயிர் இந்த மருத்துவமனை என்றாகி போனது.

வேதாசலத்திற்கு ராஜேந்திரன், தேவேந்திரன், ராகேவந்திரன், இந்துமதி என்று நான்கு பிள்ளைகள். மகேஸ்வரனுக்கு கார்த்திக் என்று ஒரே ஒரு பையனே. வேதாசலத்திற்கு நான்கு பிள்ளைகள் இருந்தாலும் அவரின் செல்ல பிள்ளை தேவா தான். இன்று அவனை கண்டாலே வெறுப்பவர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை உயிரையே வைத்திருந்தார்.. அவனின் அண்ணன் தம்பி தங்கை கூட அவன் மேல் மிகுந்த அன்புடன் இருப்பார்கள்.

தேவாவும் தன் தாய் தந்தை மீது மிகுந்த அன்பு, பாசம், மரியாதை அனைத்தும் வைத்திருந்தான். தன் சகோதரர்கள் மீது அவர்களை விட அதிகமான பாசம் கொண்டு இருந்தான். படிப்பில் கெட்டிக்காரன் ஒழுக்கத்திலும் சிறந்தவன்… இன்று சிரிக்கவே தெரியாது என்பது போல் இறுக்கமான முகத்துடன் இருக்கும் தேவா. அப்பொழுது எல்லாம் சிரித்த முகத்துடனே வலம் வருவான். தம்பி, தங்கையரை கேலி செய்து சிரித்து அவர்களுடன் விளையாடி எப்பொழுதும் மகிழ்ச்சியாக தான் இருப்பான்.

தன் தந்தை மீது எவ்வளவு மரியாதை அன்பு எல்லாம் இருந்ததோ, அதே போன்ற அன்பு மரியாதையை ஒரு துளி கூட குறையில்லாது மகேஸ்வரன் மீதும் வைத்து இருந்தான். எப்போதும் மாமா மாமா என்று சிறு வயதில் இருந்தே அவர் பின்பே சுற்றுவான். அவரை பார்த்தே டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை வந்ததது.‌மகேஸ்வரனை தன் ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு அவரை போன்றே மருத்துவராகி நிறைய பேருக்கு உதவ வேண்டும் என்று எண்ணத்துடனே படித்தான்.

மகேஸ்வரனுக்கும் தேவா என்றால் மிகுந்த ப்ரியம். தன் மகன் கார்த்தியை போன்றே ஏன் ஒரு படி மேலேயே அவன் மேல் அன்பாக இருந்தார். தனக்கு ஒரு மகள் பிறந்தால் அதை கண்டிப்பாக தேவாவிற்கு தான் திருமணம் செய்து வைத்திருப்பேன் என்று மகேஸ்வரன் வேதாசலத்திடம் அடிக்கடி கூறுவது உண்டு. ஆனால் அவருக்கு ஒரே மகன் தான் கார்த்திக்…

கார்த்திக்கும் தேவாவிற்கும் ஒரே வயது இவர்களும் தங்கள் தந்தையை போன்றே நண்பர்கள். ஒன்றாக பள்ளி படிப்பை முடித்து மருத்துவ கல்லூரி அடியேடுத்து வைத்தனர்.‌ஒரே கல்லூரி என்றாலும் வேற வேற டிபார்ட்மெண்ட் வேற வேற வகுப்பு. கல்லூரியில் கார்த்திக்கு அறிமுகம் ஆகி நண்பர்கள் ஆனவர்கள் தான் ஜீவா, திவேஷ்.

தேவாவிற்கும் கல்லூரி முதல் நாளே கிடைத்த நட்பு தான் சூர்யா. தன் அருகே அமர்ந்த சூர்யாவிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்ட தேவா அவன் பெயர் கேட்க சூர்யா என்று சொன்னதும் இருவருக்கும் தளபதி பட தேவா சூர்யா நியாயபகம் வர அடுத்த நொடி கை குலுக்கி நண்பர்கள் ஆகினர். அந்த நொடி தேவா கையை பிடித்த சூர்யா இன்று வரை விடவில்லை. அவன் சோதனை காலங்களில் தோள் கொடுத்து அவனுக்கு உறுதுணையாக நிற்கின்றான்.

என் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன் என்ற நாடோடிகள் சசிகுமார் கொள்கையின் படி ஐவரும் நண்பர்கள் ஆகினர். சூர்யாவிற்கும் திவேஷ்ற்கும் ஏனோ அப்போது இருந்தே ஒத்து வராது. இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட அதை தேவா தான் தீர்த்து வைப்பான். ஒரு நாள் இருவரின் சண்டை முற்றி கைகலப்பு வரை சென்றது. அதை தடுத்து கார்த்திக் தேவா இருவரும் விசாரித்தனர்…

“டேய் நேத்து ஜுனியர் பையன் ஒருத்தனை ரேக்கிங்கிற பேர்ல் ரொம்ப போட்டு கஷ்டப்படுத்திட்டு இருந்தான் தேவா, ஏன்டா இப்படி செய்ற விடு அந்த பையனை சொன்னதுக்கு சண்டைக்கு வரான்டா” என்றான் சூர்யா.

அந்த ஜுனியர் பையனிடமும் திவேஷுடமும் விசாரிக்க சூர்யா சொன்னது தான் உண்மை திவேஷ் மேல் தான் தவறு. இப்போதும் திவேஷ் தவறை ஒப்பு கொள்ளலாமல் சூர்யாவிடமே மறுபடியும் சண்டைக்கு வர தேவா திவேஷை அடித்து கண்டித்தான்… சூர்யாவையும் தான் கண்டித்தான்… இருவரும் இனி எப்போதும் சண்டை போடாமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினான். ஆனால் திவேஷ்ற்கு அந்நிகழ்வில் இருந்தே தேவா மீது சிறிய கோவமும் எரிச்சலும் உண்டானது…

ஒரு நாள் சூர்யா நண்பர்களை தன் வீட்டிற்கு அழைத்து இருந்தான். தன் தங்கையின் பிறந்த நாள் விழாவிற்காக, அனைவரும் சூர்யா அழைப்பை ஏற்று அங்கு சென்று இருந்தனர்.‌ அன்று தான் முதன் முதலாக தேவா வெண்ணிலாவை பார்த்தான்‌… பாவாடை தாவணியில் பதின் பருவ குமாரியாக இருந்தவளை பார்த்த மாத்திரத்தில் பிடித்து போனது தேவாவிற்கு.

வெண்ணிலா பேருக்கு ஏற்ப அந்த நிலவை போன்ற மாசு மருவற்ற பொலிவான முகம். பால் வண்ணம், வில் போன்று வளைந்த புருவம், காண்போரை ஈர்க்கும் மீன் விழி, ஒல்லியும் இல்லாத குண்டும் இல்லாத அளவான உடல் வாகு, ஆரஞ்சு சுளை ஒட்டி வைத்தது போன்ற அதரம்… வெண்ணிலா அப்படி தேவலோக ரம்பை போன்று பேரழகி தான். அழகில் மட்டும் இல்லாமல் குணத்திலும் ஒரு குறையும் சொல்ல முடியாது… தேவலோக இந்திரனே மயங்குவான் எனும் போதுப் மண்ணுலக தேவேந்திரன் மயங்க மாட்டானா? பார்த்த உடனே வெண்ணிலா மீது ஒரு ஈர்ப்பு உண்டானது. அந்த ஈர்ப்பு நாளைடைவில் காதலாக மாறியது.

ஆனால் அதை வெண்ணிலாவிடம் சொல்ல முடிய வில்லை.

வெண்ணிலாவை பார்ப்பதற்கு என்றே தினம் சூர்யா வீட்டுக்கு செல்லுவான். அங்கு சென்று அவள் அன்னையிடமும் அக்கா மஞ்சுவிடமும் கதை அடிப்பான். மஞ்சு வாய் ஓயாமல் பேசும் ரகம் என்றால் வெண்ணிலா எதிர்மறை அமைதியான குணம். தன் வீட்டில் உள்ளவர்களிடமே தேவைக்கு மீறி ஒரு வார்த்தை கூட பேச மாட்டாள்.

ஜீவா, கார்த்திக், திவேஷிடமாவது ஏதாவது பேசுபவள் தேவாவிடம் மட்டும் பேச மாட்டாள். அதற்கான காரணம் என்ன என்று தெரியாமல் தேவா குழம்பினான்.. தினமும் இரவில் வரும் நிலவை பார்த்து அதை வெண்ணிலாவாக எண்ணி அதனிடம் காதலை சொல்லி நிலா நிலா என்று கொஞ்சி கொண்டு இருப்பான்.. ஆனால் உரியவளிடம் காதலை சொல்லாமல் மனதுக்குள் வைத்து தவித்து கொண்டு இருந்தான் தேவா…

வெண்ணிலாவிடம் தன் மனதை தெரிவிக்கமால் இருந்ததற்கு இரண்டு காரணம் உண்டு. ஒன்று அவள் அப்போது தான் ப்ளஸ் டூ படித்து கொண்டு இருந்தாள். இன்னோரு காரணம் சூர்யா தன்னை தவறாக எண்ணி கொள்வானோ என்பது தான். ஏனெனில் ஜீவாவும் கார்த்திக்கும் வெண்ணிலாவை தன் உடன் பிறவா சகோதரியாக எண்ணி தங்கச்சி என்றே அழைப்பர். அது தேவாவிற்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. நண்பனின் தங்கையை காதலிப்பது தவறோ என்ற எண்ணம் தோன்ற எப்போதும் தனக்கு குழப்பம் வந்தால் எங்கு போய் நிற்பானோ அதே மகேஸ்வரன் முன்பு போய் நின்றான்….

ஜீவா, கார்த்திக் வெண்ணிலாவை தங்கை என்று அழைப்பதை கவனித்த தேவா, அவளை திவேஷ் அவ்வாறு அழைக்க வில்லை என்பதையும், அவள் மீது படரும் அவன் பார்வையையும் கவனிக்க தவறி விட்டான்….

பாகம் 17

“என்ன கண்ணா என்ன குழப்பம்” தன் எதிரே அமர்ந்து இருந்த தேவாவை பார்த்து கேட்டார் மகேஸ்வரன்.

தன் முகத்தை பார்த்தை தன் மனநிலையை சொல்லும் மாமாவை பார்க்கையில் தேவாவிற்கு ஆச்சரியமும் பெருமையும் ஒரு சேர உண்டானது. நண்பனின் தங்கை மீது தனக்கு உண்டான காதல் சரியா தவறா என்ற தன் குழப்பத்தை அவரிடம் கூற,

“இதுல என்ன கண்ணா இருக்கு இது தப்பே கிடையாது… இது ஊர் உலகத்தில் நடக்காமையா இருக்கு.. என் தங்கச்சிக்கு உங்கப்பாவுக்கும் வயசு வித்தியாசம் நிறைய இல்லைன்னா லாவண்யா வை உன் அப்பாக்கு தான் கட்டி வச்சு இருப்பேன்.. உன் அப்பாவுக்கு தங்கச்சிமே இல்ல நான் கட்டுறதுக்கு, அதனால் தான் இப்ப கார்த்திக் இந்துமதிக்கு கல்யாணம் பண்ணி சம்பந்தியாவது ஆகனும் நினைக்கிறோம். நீ உன்னை குழப்பிக்கிற அளவு எல்லாம் இது அவ்ளோ பெரிய பிரச்சினை இல்லை கண்ணா” என்று மகேஸ்வரன் கூறினார்.

“நம்ம வீட்டு கதை வேற மாமா. ஒரு வேளை சூர்யாவுக்கு நாளைக்கு நான் வெண்ணிலாவை லவ் பண்றது தெரிஞ்சா இதை எப்படி எடுத்துப்பானோன்னு யோசனையா இருக்கு‌… உன்னோட ஃப்ரெண்ட்ஷிப்பே வேண்டாம் சொல்லி போய்ருவான்னோன்னு பயமா இருக்கு” என்று மேலும் குழம்ப,

“சூர்யா உனக்காக உயிரையே கொடுப்பான். தங்கச்சியை கொடுக்க மாட்டானா? என்ன இந்த விஷயம் தெரிஞ்சா ரொம்ப சந்தோஷம் தான் படுவான். அவன் தங்கச்சிக்கு இப்படி ஒரு அச்சு வெல்லகட்டி மாப்பிள்ளை வேற எங்க தேடினாலும் கிடைக்காது” என்று மகேஸ்வரன் கூற வெட்கப்பட்டு சிரித்து சரி என்று விட்டு தேவா அங்கிருந்து கிளம்பினாலும் அவன் குழப்பம் இன்னும் முழுவதும் தீரவில்லை என்பது மகேஸ்வரனுக்கு நன்றாக புரிந்தது.

அப்போது தான் தேவா அண்ணா ஜெயேந்திரனுக்கு வரன் தேடி கொண்டு இருந்தனர். மகேஸ்வரன் நேரடியாக வேதாசலத்திடம் சென்று ஜெயேந்திரனுக்கு நம்ம சூர்யாவோட அக்கா மஞ்சுளாவை பேசி முடிக்கலாம் என்று யோசனையை கூற தேவா தந்தைக்கும் சூர்யாவை பற்றியும் அவன் குடும்பத்தில் உள்ளவர்களை நன்கு தெரியும் என்பதால் மகேஸ்வரனின் இந்த யோசனை பிடித்து போக அன்று மாலையே மஞ்சுவை பெண் கேட்டு சூர்யா வீட்டிற்கு சென்றனர்.

சூர்யாவின் தந்தை இப்போது இல்லை தாய் மட்டுமே. அவர் முதலில் தயங்கினாலும் பிறகு ஒப்பு கொண்டார். மஞ்சுளா, ஜெயேந்திரனிடம் சம்பந்தம் கேட்க, அவர்களும் தங்களுக்கு முழு சம்மதம் என தெரிவிக்க. அடுத்த முகூர்த்தத்திலே அவர்கள் திருமணம் நடந்தேறியது.

“இப்ப வெண்ணிலா உனக்கு ப்ரெண்டோட தங்கச்சி மட்டும் இல்ல உன் அண்ணியோட தங்கச்சியும் கூட உனக்கு கட்டிக்கிற முறை கூட இருக்கு. நீ தாராளமா வெண்ணிலா வை லவ் பண்ணலாம். இப்பவாவது அந்த பிள்ளை கிட்ட போய் உன் மனசில் இருக்கிறதை சொல்லு கண்ணா” என்று கூறிய மகேஸ்வரனை இறுக அணைத்து கொண்டான் தேவா. தன் மீது மகேஸ்வரன் வைத்திருக்கும் அன்பை எண்ணி பூரித்து போனான்..

“தாங்க்ஸ் மாமா தாங்க் யூ சோ மச்… எனக்காக நீங்க பண்ற எல்லாத்துக்கும் தாங்க்ஸ் மாமா” என்றான்…

“என்னது இது புதுசா தாங்க்ஸ் எல்லாம் சொல்ற கண்ணா… உனக்கு நான் செய்யமா வேற யார் செய்வாங்க. எனக்கு நீ கார்த்தி ஹார்ஷா மாதிரி இல்ல இல்ல கார்த்தி ஹார்ஷாவை விட ஒரு படி மேல் தான் என்றவரின் அன்பில் தேவா கரைந்து தான் போனான்.

ஆனால் இந்த அன்பு மாமா தான் நாளை தன் மானத்தை காப்பாத்த இவனை இரையாக்க போகிறார் என்பதை அவன் அறியவில்லை. மகேஸ்வரனுமே தன் மகனுக்கு மேலாக நினைத்த தேவா வாழ்க்கையை தானே அழிக்க போகிறோம் என்பதை கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்.

என்ன தான் மகேஸ்வரன் வெண்ணிலா விடம் காதலை தெரிவிக்க கூறினாலும் இப்போது வேண்டாம் அவள் படிப்பு முடியட்டும் என்று தேவா அமைதி காத்தான்‌…

நாட்கள் அதன் போக்கில் ஓடின… தேவா, சூர்யா, கார்த்திக், ஜீவா, திவேஷ் ஐவரும் ஆரோக்கியம் மருத்துவமனையிலே வேலைக்கு சேர்ந்தனர்… தேவா சிறிது காலத்திலே கை தேர்ந்த மருத்துவர் என்ற பெயர் வாங்கினான்… அவன் செய்த அறுவை சிகிச்சை எல்லாம் வெற்றி தான். மகேஸ்வரன் செய்து வந்த உதவிகள் போன்று தேவாவும் மலையை ஒட்டியுள்ள ஏழை எளிய மக்கள் ஆதிவாசி ஜனங்களுக்கு மருத்துவ உதவி நிறையவே செய்தான். அவனுக்கு இதன் மூலம் நிறைய நல்ல பெயரையும் புகழையும் கொடுத்தது… அவனுக்கு மட்டுமில்லாமல் ஆரோக்கியம் மருத்துவமனைக்கும் புகழ் கிடைத்தது. வெளி மாநிலம் வெளி நாட்டில் இருந்து கூட வைத்தியத்திற்கு ஆரோக்கியம் மருத்துவமனை வந்தனர்… திவேஷிற்கு ஏனோ தேவாவை மற்றவர்கள் புகழ்வது பிடிக்க வில்லை…

வெண்ணிலா பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்தாள். அவளும் மருத்துவதுறையை தேர்ந்தெடுத்து நான்காண்டுகள் கடந்து இறுதி ஆண்டுக்குள் வந்து விட்டாள்…

அன்று ஒரு நாள் சூர்யாவை பார்ப்பதற்காக தேவா அவன் வீட்டிற்கு செல்ல, அங்கு சூர்யா அவன் அம்மா இருவரும் இல்லை. வெண்ணிலா மட்டும் தனியாக இருந்தால், தேவா சூர்யாவிற்கு கால் செய்ய ஒரு டேன் மினிட்ஸ் டா வந்திரேன். வீட்டிற்குள்ள உக்கார் என்று சொல்லி காலை துண்டித்தான்.

தேவாவிற்கு வீட்டிற்குள் செல்ல தயக்கம் எப்படியும் அவள் தன்னிடம் பேச மாட்டாள். அதோடு யாரும் இல்லாத வயது பெண் மட்டும் இருக்கும் வீட்டிற்குள் அமர்வது தவறு என்று வாசலில் தனது பைக்கில் அமர்ந்து மொபைலை நோண்டி கொண்டு இருந்தான்…

அப்போது அவன் அருகே கொலுசு சத்தம் கேட்டது. சத்தத்தை வைத்தே அது யார் என்று தெரிந்தவன் நிமிர்ந்து பார்க்க. வெண்ணிலா கையில் ஒரு கோப்பையை ஏந்தியபடி புன்னகை முகமாக அவன் முன்னே நின்றாள். தேவா தான் நம்ம முடியாத அதிர்ச்சியில் நின்றான். ஏனெனில் தேவா சத்தம் கேட்டாலே அவள் ரூமை விட்டு வெளியே வர மாட்டாள். அப்படி இருக்கையில் இன்று அவளாகவே வந்து அவன் முன்பு நிற்கிறாள்…

வெண்ணிலா அதே சிரித்த முகத்துடன் “டீ எடுத்துக்கோங்க மாமா” என்று கூற, முதன் முறை அவளின் மாமா என்று அழைப்பில் தேவா மனதில் சாரல் அடித்தது போன்று அவ்வளவு குளுமையாக இருந்தது. இறக்கை இல்லாமல் விண்ணில் பறப்பது போன்ற உணர்வு… இமைக்காமல் அவளையே அவன் பார்த்து கொண்டு இருக்க. “ஏன் மாமா இப்படி வெயில்ல வெளியே நிற்கிறீங்க உள்ள வாங்க” என்று அவள் அசராமல் அடுத்த அதிர்ச்சியை கொடுக்க.. அதில் சுய உணர்வு பெற்றவன்…

என்ன இன்னைக்கு ஷாக் மேல ஷாக்கா கொடுத்து சாக அடிச்சிருவா போல என்று மனதில் எண்ணி கொண்டு வானத்தை பார்க்க, வெண்ணிலா புரியாமல் தேவாவை பார்த்தாள்.

“இல்ல எப்பவும் என்னை பார்த்தா அடிச்சு புடிச்சு உள்ளே போயிடுவா. ஒரு வார்த்தை பேச மாட்ட, இன்னைக்கு நீயே வந்து பேசுறீயே அதான் அடைமழை ஏதும் வர போகுதான்னு பார்த்தேன்”…

“நான் உங்க கிட்ட பேசாமா இருந்ததுக்கு காரணம் பயம் தான்”.

“என்ன பயம் நான் என்ன பேயா” என்று தேவா கேட்க,

“இல்ல இல்ல என்று வேகமாக ஆட்டியவள்,அந்த பயம் வேற”,

“வேற என்ன” தேவா அழுத்தி கேட்க,

“நான் உங்க கிட்ட பேசுனா கார்த்தி அண்ணா ஜீவா அண்ணா மாதிரி நீங்களும் என்னை தங்கச்சி அப்படின்னு சொல்லிடுவீங்களோ அப்படிங்கிற பயம் தான்” என்று கூறி விட்டு தலை குனிய,

முதலில் அவள் கூறியதன் அர்த்தம் விளங்காமல் தேவா முழிக்க, திரும்ப அவள் என்ன கூறினாள் என்று ஓட்டி பார்த்தவனுக்கு மகிழ்ச்சி தாங்க வில்லை. அதே மகிழ்வுடன் “நிலா இப்ப நீ என்ன சொல்ல வர” என்று உறுதி படுத்தி கொள்ள மீண்டும் கேட்க.

“நீங்க டாக்டர் உங்களை கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணும் டாக்டரா இருந்தா தான் உங்களுக்கு மரியாதையாவும் உதவியாகவும் இருக்கும்னு தான் நான் டாக்டருக்கே படிக்கிறேன்” என்று தன் மனதில் உள்ள காதலை மறை முகமாக தெரிவித்து விட்டு வெட்கத்துடன் உள்ளே ஓடினாள்….

தேவா தான் அவள் கூறியதில் திக்கு முக்காடி போனான். சந்தோஷத்தில் அவனுக்கு வார்த்தையே வரவில்லை‌… வெண்ணிலா மனதிலும் தான் இருப்பதை நினைக்கையில் உலகையே வென்ற கர்வம் அவனுக்கு வந்தது. கை இரண்டையும் விரித்து வானத்தை நோக்கி கத்தி தன் மகிழ்வை வெளிப்படுத்தினான்…

“டேய் டேய் ஏன்டா ஏன் இவ்வளோ குடிக்கிற, உனக்கு இது பழக்கம் இல்லாத விஷயம்” என்று மதுப்பொத்தலை திவேஷிடம் இருந்து ஜீவா பறிக்க.

அதை தன்னோடு அணைத்து கொண்டு “இல்ல இல்ல நான் தர மாட்டேன் நான் குடிக்கனும்.. குடிச்சு என் கவலையை மறக்கனும்” என்று குமட்டிக் கொண்டே திவேஷ் கூறினான்…

“கவலையா குடிக்கிற அளவுக்கு அப்புடி என்ன கவலை” என்று அவனை தாங்கியபடியே ஜீவா வினவ,

“லவ் பெயிலியர் நான் வெண்ணிலா கிட்ட இன்னைக்கு ப்ரெபோஸ் பண்ணுனேன். ஆனா அவ என்னை பிடிக்கலன்னு சொல்லிட்டா”,

“என்னது நீ வெண்ணிலா வை லவ் பண்றயா, அவளை தான் தேவா பார்த்த முதல் நாள்ல இருந்தே லவ் பண்றானே, நம்ம கிட்ட கூட வந்து சொன்னேனே, அப்புறம் ஏன்டா நீ அவளை லவ் பண்ண”,

“ஏன் தேவாவ விரும்புன்னா, நான் லவ் பண்ண கூடாதா, எனக்கும் அவளை பார்த்த உடனே பிடிச்சிருச்சு. ஆனா அவ அந்த தேவாவை லவ் பண்றேன்னு என் கிட்ட சொல்றா” என்று அவன் அழுது கொண்டே கூற, ஜீவா தான் அவனை தேற்றி கொண்டு இருந்தான்…

இதோ இன்று மூன்று ஜோடிகளுக்கு விமர்சையாக நிச்சயதார்த்தம் நடந்து கொண்டு இருக்கிறது. ஒன்று மகேஸ்வரன் மகன் கார்த்திக் தேவா தங்கை இந்துமதிக்கும். அடுத்த ஜோடி சூர்யா- ஷோபனா. மூன்றாவது ஜோடி தேவா- வெண்ணிலா…

வெண்ணிலா காதலை சொன்ன பிறகும் தேவா அமைதியாக இருப்பானா. அடுத்த நாளிலிருந்தே கோவையில் இனி இடமே இல்லை என்னும் அளவிற்கு ஜோடியாக ஊர் சுற்றி, மொபைலையே என்னை விட்டுருங்க என்று கூறும் அளவுக்கு விடிய விடிய சேட்டிங், காலிங் எல்லாம் செய்து காதலை வளர்த்தனர். இவர்களின் காதல் விரல் தீண்டா காதல் என்று எல்லாம் கூறி விட முடியாது கட்டுப்பாட்டோடு கூடிய இறுகிய அணைப்பு இதழ் முத்தம் இது எல்லாம் கணக்கு வழக்கு இல்லாமல் பகிர பட்டு உள்ளது. அதற்கு மீறி தேவா எதிர்பார்த்ததும் இல்லை வெண்ணிலா அனுமதிக்கும் இல்லை.

இதோ நிச்சயதார்த்தம் இனிதே முடிந்தது முதலில் கார்த்திக் இந்துமதி திருமணம். அடுத்த முகூர்த்தத்தில் சூர்யா ஷோபானா திருமணம். இந்த இரண்டு திருமணம் முடித்து ஒரு மாதம் கழித்து தேவா வெண்ணிலா திருமணம் என்று பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டது…

திவேஷ் தான் தினமும் குடித்து விட்டு வெண்ணிலா இல்லைன்னா செத்துருவேன்டா என்று ஜீவா விடம் புலம்பி அழுது கொண்டு இருப்பான். இதை ஜீவாவும் யாரிடமும் சொல்லத்தால் தேவாவிற்கு தெரியாமலே போனது…

இரண்டு திருமணமும் நல்ல முறையில் நடந்தேறியது. இவர்களின் திருமணமே மிக ஆடம்பரமாக விமர்சையாக நடை பெற வேண்டும் என்று அனைவரும் விரும்பினர். வேதாசலம், மகேஸ்வரன், சூர்யா மூவரும் திருமண ஏற்பாட்டை கவனித்து கொண்டனர்.. தேவா வெண்ணிலா தங்கள் திருமண நாளை எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தனர். ஏனோ நகரும் நொடிகள் இவர்களுக்கு மட்டும் யுகங்களாக தெரிந்தது. தேவா ஹனிமூன் செல்வதற்காக வெளி நாட்டிற்கு டிக்கெட் கூட புக் செய்து வைத்திருந்தான்.ஃப்ரீ வெட்டிங் சூட் எல்லாம் முடித்து திருமணத்திற்கு தயாராகி இருந்தனர்.

இன்னும் திருமணத்திற்கு நான்கு நாட்களே இருந்தது.. தங்கள் திருமணம் எவ்வாறு எல்லாம் நடை பெற வேண்டும். அதன் பின்பு தங்கள் வாழ்வு எப்புடி இருக்க வேண்டும் என்று இருவரும் பல கற்பனை கோட்டையை கட்டிவைத்து இருந்தனர். 

ஆனால் அந்த கற்பனை கோட்டை எல்லாம் சிதறி மண்ணோடு மண்ணாக போனது. மகேஸ்வரன், ஜீவா, திவேஷ் மற்றும் தெரிந்தோ தெரியாமாலோ 15 வயதான தியா இந்த நால்வரால்,

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.4 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!