குறிஞ்சி மலர்..2
காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்த வேப்ப மரத்தின் கீழே, வெயில் தீண்டாமல் பாதுகாப்பாக இருப்பது போல, அந்த ஓட்டு வீடு அமைந்திருந்தது.
வெளியே மரத்தின் கீழே சாய்மனைக் கட்டில் போட்டு, அதில் சாய்ந்தமர்ந்து கொண்டு, வெத்திலையை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தார், அந்த ஓட்டு வீட்டின் ராணி திரிலோகநாயகி.
அவரது ஆனந்தமான அந்த வேலையைக் குழப்புவது போல, வீட்டின் வெளி வாசலில் காரின் கோர்ன் சத்தங் கேட்கவே, நம் வீட்டுக்கு யாருப்பா அது காரில் வருவது என்பது போல, எட்டிப் பார்த்தவர் அங்கே வந்து கொண்டிருந்த நபரைப் பார்த்ததும் தன் வெற்றிலைக் காவி படிந்த பற்களைக் காட்டி இளித்தபடி, அவரை நோக்கி வேகமாகப் போனார்.
“வாங்கோய்யா வாங்கோ.. என்னய்யா உங்கள்ரை பிள்ளைக்கு ஏதாச்சும் சீர்செனத்தி கொண்டு வந்தியளோ..”
என்று அவர் எதையாவது கொண்டு வந்திருக்க மாட்டாரா என்பது போல நாயகி கேட்க, நாயகியை முறைத்தபடி
“ஓம் ஓம் வண்டில் வண்டிலாச் சீதனங் கொண்டு வந்து வாசலில குவிச்சிருக்கிறன் போய் அள்ளு.. புத்தி கெட்ட மாதிரி கதையாத நாயகி.. புருஷன் செத்த ராசியில்லாதவளுக்கு என்னத்துக்கு சீரும் செனத்தியும்..”
என்று கொண்டு வேம்பின் கீழே கிடந்த கதிரையில் அமர்ந்து கொண்டார் தில்லையம்பலம்.
அவர் அவ்விதம் சொன்னதும் நாயகியின் முகம் அப்படியே வாடி வதங்கிப் போய் விட்டது. அந்த வாட்டத்துக்கான காரணம் தன் மருமகளை ராசியில்லாதவள் என்று சொன்னதனால் அல்ல, வந்தவர் எதையுமே கொண்டு வரவில்லை என்பது தான் அந்த வாட்டத்தின் காரணம்.
சில நிமிடங்கள் ஏனோதானோ என ஒருவரையொருவர் நலம் விசாரித்து விட்டு, வந்த விடயத்தைப் பார்த்தார் தில்லையம்பலம்.
“நாயகி.. உன்ரை மருமகளைக் கூப்பிடு..”
“உங்கள்ரை மகளைக் கூப்பிடெண்டு சொல்லுங்கோய்யா..”
“சரி சரி ஏதோ ஒண்டு.. மகளோ மருமகளோ கூப்பிடு..”
“இந்தா இப்ப கூட்டியாரன் ஐயா..”
“ஏன் இங்கினையிருந்து கூப்பிட்டா கேக்காதோ..”
“கேக்குமய்யா.. இருந்தாலும் வீட்டு மருமகளை இப்புடி நிண்ட இடத்துல இருந்து கூப்பிடுறது முறை இல்லைத் தானே ஐயா..”
“என்ன முறையோ ஏதோ கூப்பிடு..”
எனத் தில்லையம்பலம் சொல்லி விட்டு, வியர்த்திருந்த தன் உள்ளங் கைகளைத் தேய்த்து விட்டுக் கொண்டார். அந்தச் செயலிலேயே அவர் ஏதோ பதட்டமாக இருப்பது தெரிந்தது.
வீட்டின் பின்னால் இருந்த பூந் தோட்டம் நோக்கி வேகமாகப் போன நாயகி
“எடியே கோதை..”
எனக் கத்த, தோட்டத்தில் பூக்கள் பறித்துக் கொண்டிருந்த, அந்தப் பெயருக்குச் சொந்தமானவள் மெல்ல எட்டிப் பார்த்தாள்.
“அங்க என்னடி வாய் பாத்துக் கொண்டு நிக்கிறாய்.. கூப்பிட்ட உடன கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து என்ன மாமி எண்டு கேக்க வேண்டாமே..”
என்று நின்ற இடத்தில் நின்றபடி மேலும் சத்தங் கொடுத்தார் நாயகி.
அவர் அவ்விதம் அதட்டவும் எந்த ஒரு ரியாக்சனும் கொடுக்காமல், மெல்ல நடந்து வந்து நாயகியின் முகத்தை ஏறெடுத்துப் பார்த்தாள், நாயகியின் மூத்த மருமகள் பூங்கோதை.
“என்னடியம்மா நிண்டு நிதானமா அன்னநடை போட்டு வாறாய்.. அங்க உன்ரை கொப்பன் உன்னைக் கூட்டி வரச் சொல்லி ஆலாப் பறந்து கொண்டு நிக்கிறான்..”
என நாயகி சொன்னது தான் தாமதம், கையில் வைத்திருந்த பூக்கூடையை அப்படியே நாயகியின் கையில் திணித்து விட்டு, வீட்டின் முன் பக்கம் ஓடினாள் பூங்கோதை.
“எடுபட்ட கழுதை.. அதுக்கு இருக்கிற கொழுப்பை பாரன்.. அப்பன் எண்டதும் கொஞ்சங் கூடப் பயமில்லாம எப்புடி கூடையைச் செருகிட்டுப் போறாளெண்டு.. அப்பன்காரன் போகட்டும் அவாக்கு கிடக்கு..”
என்று தன்னுள் முணுமுணுத்தபடி, தகப்பனும் மகளும் அப்படி என்ன பேசப் போகிறார்கள் என்பது போல, அவர்கள் இருந்த இடத்துக்கு விரைந்தார் நாயகி.
வீட்டின் முன்னால் ஓடிப் போன பூங்கோதைக்கு, தந்தையைக் கண்டதுமே கண்கள் பனித்து விட்டன.
“அப்பா..”
என்று கொண்டு அவரிடம் ஓடிப் போக, அவளது குரல் கேட்டதுமே தில்லையம்பலம் முகத்தைச் சுளித்தார். அவளுக்கு வேணுமானால் அவர் தகப்பனாக இருக்கலாம். ஆனால் அவருக்கு என்றுமே அவள் மகளாகத் தோன்றியதேயில்லை.
பூங்கோதைக்கு ஆறு வயதிலேயே தாயும் தந்தையும் இறந்து போய் விட, அவளுடைய பாட்டி அவளை, ஒன்று விட்ட சித்தப்பாவான தில்லையம்பலத்திடம் ஒப்படைத்து விட்டார்.
ஊருக்குள் பெரிய மனித வேடம் போட்டு வலம் வந்த தில்லையம்பலமும் வெளிப் பார்வைக்கு பூங்கோதையைத் தனது மகள் போலவே நடத்தினார். ஆனால் உள்ளூரத் துளி கூட அவள்மீது பாசம் இருந்ததில்லை என்பது தான் உண்மை.
அதிலும் தில்லையம்பலத்தின் சொந்த மகள் ரூபவர்ஷியை விடவும், பூங்கோதை நன்றாகப் படிப்பாள், நன்றாகப் பாடுவாள். இருவருக்குமே ஒரே வயதென்றாலும் பூங்கோதை மாதத்தால் மூத்தவள், பள்ளியில் பாராட்டப்படும் பூங்கோதை மீது ரூபவர்ஷிக்குப் பொறாமை கொழுந்து விட்டெரியவே, அதை வீட்டில் வந்து காட்டிப் பூங்கோதையைப் புண்ணாக்கி விடுவாள்.
இத்தனைக்கும் ரூபவர்ஷியைப் பார்த்தவர்கள் அழகியென்றும் வெள்ளைத் தோல்காரியென்றும் அவளோடு வழிவார்கள். பூங்கோதை தேன்நிறத்தில் சுமாராகத் தான் இருப்பாள். ரூபவர்ஷி அதை வைத்தே உன் நிறமென்ன என் நிறமென்ன என்றெல்லாம் பூங்கோதையை மட்டந் தட்டுவாள்.
தான் தங்கையென நினைத்துப் பாசம் வைத்தவள் தன்னை மட்டந் தட்டும் போதெல்லாம் அதை வாயை மூடியே கடந்து விடும் கோதை இயல்பிலேயே கலகலப்பானவள். அவளால் பேசாமலேயே இருக்க முடியாது. வளவள என எதையாவது பேசிக் கொண்டேயிருப்பாள். ஆனாலும் சில சமயங்களில் பேசாமடந்தையோ இவளென நினைக்கும் அளவுக்கு மௌனமாக இருப்பாள்.
கோதை மௌனமாக இருந்தால், அவளது மனதை யாரோ காயப் படுத்தி விட்டார்கள் என்று புரிந்து கொள்ளலாம். பிறகு ஒரு மணி நேரத்தில் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு கலகலப்பாகி விடுவாள்.
தன் மகளை விடவும் கெட்டிக்காரியாக இருந்த பூங்கோதை மீது தில்லையம்பலத்துக்கும் வெறுப்பு இருந்தது. ஆனால் அதை நெல்முனையளவு கூட வெளியாட்களுக்குத் தெரியாமல், தந்திரமாகக் காய் நகர்த்திப் பூங்கோதையின் மனதை நோகடிப்பார்.
அதில் முதற் கட்டமாக அவளின் படிப்பை நிறுத்தப் பார்க்க அது முடியாமல் போய் விட்டது, அதனால் அவளின் இருபத்தியிரண்டாவது வயதில் அவளை மூளைச்சலவை செய்து திருமணம் செய்து கொடுத்து விட்டார்.
தான் திரிலேகநாயகியின் குடும்பத்திற்கு கடமைப் பட்டிருப்பதாகவும், தன் மூத்த மகளை அவரின் மூத்த பையனுக்குத் திருமணம் செய்து தருவதாகத் தான் வாக்கு கொடுத்திருக்கிறேன் என்றும், தன் மூத்த மகள் நீ தான் என்றும் சொல்லியிருக்க, அவரின் ‘என் மூத்தமகள் நீ தான்’ என்ற சொல் கோதையை நெகிழச் செய்து விட்டது. தன்னை இத்தனை வருடம் வளர்த்த நன்றிக்கு அவரின் வாக்கை நிறைவேற்ற உதவியாக இருப்போம் என பூங்கோதை முடிவு செய்து விட்டிருந்தாள்.
அந்த முடிவின் காரணத்தால், உயர் படிப்பு படித்து முடித்து பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என்ற கனவைத் தன்னுள் புதைத்து விட்டு, தில்லையம்பலம் காட்டிய, திரிலோகநாயகியின் மூத்த மகன் வாகீசனுக்குக் கழுத்தை நீட்டியும் விட்டாள்.
வாகீசன் உண்மையில் ஒரு நல்ல மனிதன். அவன் பூங்கோதைக்கு நல்ல கணவனாக இருந்தானோ இல்லையோ நல்ல தோழனாக இருந்தான். இருவருக்கும் பதினைந்து வயது வித்தியாசம். சொத்துக்கு ஆசைப் பட்டு சின்னப் பெண்ணைத் தனக்குக் கட்டி வைத்த தாய் மீது அவனுக்குக் கோபமும் நிறையவே இருந்தது. பூங்கோதை மனதால் தன்னை கணவன் என்று ஏற்றுக் கொள்ளும் வரை தான் விலகியே இருக்க வேண்டும் என நினைத்து, திருமணமாகி இரண்டு கிழமைகளிலேயே வாகீசன் கொழும்புக்கு வேலைக்குப் போய் விட்டான்.
கொழும்புக்குப் போனவன் சடலமாகத் திரும்பி வந்தது தான் பூங்கோதையின் துரதிஷ்டமாகிப் போனது. இரண்டு கிழமைகளில் பூவிழந்து பொட்டிழந்து போன சின்னப் பெண்ணை மூலையில் முடக்கிப் போட்டு விட்டார்கள். அதிலும் திரிலோகநாயகியும் அவரது மற்ற மகன்கள் இருவரும் அவளை தீண்டத்தகாத பொருளாகப் பாவித்து ஒதுக்கியே வைத்து விட்டார்கள்.
அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் போன பூங்கோதை மீண்டும் தான் வளர்ந்த வீட்டுக்குப் போக, சுவரில் பட்டு வந்த பந்தாக, போன வேகத்தில் மீண்டும் புகுந்த வீட்டுக்கு திருப்பி அனுப்பப் பட்டாள்.
என்ன இருந்தாலும் இனி நீ அங்கு தான் வாழ்ந்தாக வேண்டும். இந்த வீட்டில் வந்திருந்தால் உன் தங்கைக்கு எப்படித் திருமணம் செய்து வைப்பது, அதோடு உன் புகுந்த வீட்டினர் என்னைத் தானே குறை சொல்வார்கள் அது இதெனக் கூறி, மனம் நொந்து வந்த பெண்ணை மீண்டும் அனுப்பி வைத்து விட்டார் தில்லையம்பலம்.
இருபத்தியிரண்டு வயதில் வாழ்க்கைப் பட்டு வருகிறேன் என்ற பெயரில், நாயகியின் வீட்டுக்கு வந்த பெண், இதோ தனது இருபத்தைந்தாவது வயது வரை இங்கே தான் குப்பை கொட்டுகிறாள். இந்த மூன்று வருடங்களுக்குள், நாயகியின் மற்ற இரண்டு பையன்களுக்கும் கூடத் திருமணமாகி விட, வந்த மருமகள்மாருக்கும் சேர்த்து, இந்த மருமகள் தான் மூன்று வேளையும் பொங்கிப் போடும் வேலைக்காரி.
பூங்கோதை இயல்பில் கலகலப்பான பெண் என்பதால், அவளுக்கு நடந்த அத்தனை துன்பங்களையும் எப்படியோ தாண்டி வந்து விட்டாள். மனதுக்கு இதமான பாடல்களைக் கேட்டு, அதையே யாரும் இல்லாத போது பாடிப் பார்ப்பாள், அவளின் குரலின் இனிமையோடு நல்ல சுருதியும் சேர்ந்து அவள் ஒரு மேடையேறாப் பாடகி என்பதை நிரூபித்து விடும்.
தன் மனம் நோகடிக்கப்படும் போதெல்லாம், ஏதாவதொரு மரக்கன்றோ, பூங்கன்றோ நாட்டும் பூங்கோதையால், நாயகியின் வீட்டின் பின்னால் இருந்த வெற்றிடம் இந்த மூன்று வருடங்களில் பூஞ்சோலையாகி விட்டிருந்தது. நாளின் பாதி நேரமும் பூங்கோதை அந்தப் பூந்தோட்டத்தில் தான் தவமிருப்பாள்.
கஷ்டத்தை அனுபவித்து அனுபவித்து, கலகலப்பான தன் சுபாவத்தையே தொலைத்திருந்த பூங்கோதைக்கு, வடிகாலாக இருந்த அழகான இடம் அந்தப் பூந்தோட்டம் மட்டும் தான். வேலைகளைக் கச்சிதமாக முடித்து விட்டு, அந்தத் தோட்டத்துக்குள் நுழைந்தாளென்றால் அவளின் உலகமே வேறாகி விடும். பூக்களோடு பேசுவாள், பூமரங்களோடு பேசுவாள், வண்ணத்துப்பூச்சிகளோடு பேசுவாள், தோட்டத்துக்கு வரும் பறவைகளோடு பேசுவாள். ஆக மொத்தம் அவளுக்கு பேச மனிதர் தேவையில்லை, மரஞ்செடி கொடி பறவைகளே போதும்.
இப்போதும் தோட்டத்தில் தன்னை மறந்து இலயித்திருந்தவளை தான், இனிய ஓசையின் நடுவே திடீரென ஒப்பாரி கேட்டால் எப்படி இருக்குமோ அந்த மாதிரி, நாயகி வந்து சத்தப் போட்டு அழைத்திருந்தார்.
ஆனாலும் தந்தை வந்திருக்கிறார் என்ற சொல்லே அவளது சந்தோஷத்துக்குப் போதுமானதாக இருக்க, புள்ளி மானாய்த் துள்ளிக் குதித்து ஓடி வந்து விட்டாள். அவளைப் பொறுத்தவரை அவளுக்கு அடைக்கலம் கொடுத்த உன்னத ஆத்மாவாகத் தான் தில்லையம்பலம் இன்று வரை அவள் மனதில் இருக்கிறார்.
அப்பா என்றழைத்துக் கொண்டு வந்தவளின் அழைப்பு தனக்கு கேட்கவில்லை என்பது போல இருந்தவரின், கால்களைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டவள்,
“அம்மாவும்.. தங்காவும் எப்புடி இருக்கினமப்பா..”
என்று ஆசையோடு கேட்க,
“ம்ம்.. இருக்கினம் இருக்கினம்.. நீ ஒரு அஞ்சு மாசத்துக்கு அங்க என்ரை வீட்டுல வந்து இருக்கோணும்.. அது தான் கூட்டிக் கொண்டு போக வந்தனான்.. வெள்ளன வெளுக்கிடு.. உன்னை அங்க வீட்டை விட்டிட்டு நான் வேறை சோலியைப் பாக்கப் போகோணும்..”
என்று கொண்டு எழுந்து விட்டார் தில்லையம்பலம்.
அவர் சொன்னதைக் கேட்ட இருவருக்கு சரியான திகைப்பாக இருந்தது. ஒருவர் அவருக்கு முன்னால் நின்றிருந்த பூங்கோதை. மற்றையவர் சற்றுத் தள்ளி நின்று அவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த நாயகி.
பூங்கோதை உண்மையிலேயே சந்தோஷமாகி விட்டாள். அவள் வளர்ந்த வீட்டுக்கு ஒரு நல்ல நாள் பெருநாளில் கூட அவள் போய் ஒரு நாள் கூடத் தங்க முடிந்தது கிடையாது. அதை மீறி அவள் தங்கிக் கொள்ள நினைத்தாலும், நாயகி அவள் பின்னோடே வந்து இழுத்துக் கொண்டு வந்து விடுவார். தில்லையம்பலங் கூட ஒரு நாள் தங்கிப் போ என்று வார்த்தைக்குக் கூட மறந்தும் கேட்க மாட்டார் என்பது தான் உண்மை. அப்படி இருந்த மனிதர் ஒரு நாள் இரண்டு நாள் இல்லாமல் ஐந்து மாதங்கள் அங்கே வீட்டில் வந்து இரு என்று சொன்னால், அவள் அதை ஏன் எதற்கு என்றா ஆராய்ந்து கொண்டிருப்பாள்.
உடனேயே சரியெனத் தலையை ஆட்டி விட்டு, வீட்டினுள் ஓடிய தன் மூத்த மருமகளைக் கொலைவெறியோடு பார்த்தார் பூங்கோதை.
உள்ளே ஓடிய பூங்கோதை அடுத்த அஞ்சாவது நிமிஷமே கையில் ஒரு துணிப்பையோடும் மரப் பெட்டியோடும் வந்து நின்றாள்.
நாயகியிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லிக் கொள்ளாமல் தில்லையம்பலம் முன்னால் செல்ல, பின்னால் நின்றிருந்த நாயகியைப் பார்த்து
“போட்டு வாரன் மாமி..”
என்று தலையை ஆட்டி விட்டு அவரைத் தொடர்ந்தவளையே இயலாமையோடும் எரிச்சலோடும் பார்த்தபடியே நின்றிருந்தார் திரிலோகநாயகி.
- தில்லையம்பலத்தின் பின்னால் சந்தோஷமாக நடைபோட்ட பூங்கோதைக்கு தெரியவில்லை, தனக்கு முன்னால் செல்லும் காரியவாதி தன்னை வைத்து என்ன காரியம் செய்யப் பலியாடென தன்னை அழைத்துச் செல்கிறார் என்று, அவர் தன்னை அழைத்துப் போகும் காரணம் என்னவென அறிய வரும் போது எல்லாமே அவளின் கையை மீறிப் போயிருக்கும் என்பது அவளுக்கோ, அழைத்துச் செல்லும் அவருக்கோ இந்த நிமிடம் வரை தெரியாதென்பது தான் விதி.