குறிஞ்சி மலர்.. 7
மரங்களை ஊடறுத்து வந்த மெல்லிய தென்றல் காற்று, தேகம் வருடிச் செல்ல, காற்று கலைத்து விட்டுச் சென்ற கூந்தலை ஒரு கையால் ஒதுக்கி விட்டபடி திரும்பிப் பார்த்தாள் பூங்கோதை.
அவள் வரும்போது இருந்த மாட்டுத் தொழுவத்திற்கும் இப்போது இருக்கும் மாட்டுத் தொழுவத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. எல்லாம் அவளின் கை வண்ணம் தான்.
மேலே வேயப்பட்டிருந்த ஓலை தவிரத் திறந்த வெளியாக இருந்த மாட்டுத் தொழுவம், கீழே குப்பை கஞ்சலாகப் பார்ப்பதற்கே அழுக்குப் படிந்து போய்க் காணப்பட்டிருந்தது. அதைக் கூட்டிப் பெருக்கித் துப்பரவு செய்து, தன்னிடமிருந்த சேலைகளை எடுத்து, தொழுவத்தைச் சுற்றி மறைப்பு போலக் கட்டி, ஒரு சிறிய அறை போலவே அந்த இடத்தை ஆக்கிவிட்டிருந்தாள் கோதை.
இப்போதைக்கு இவ்வளவும் போதும் போகப் போகப் பார்த்துக் கொள்ளலாம் என அவளின் ஆழ் மனது அவளுக்கே ஆறுதல் சொன்னது.
தென்றல் காற்றின் மெல்லிய தீண்டலை சில நொடிகள் நின்று அனுபவித்தவள், தொழுவத்தை விட்டு வெளியே வந்து, தன்னை அழைத்து வந்த பாடிகார்ட்ஸை தேடினாள்.
நல்ல வேளையாக அவர்கள் இருவரும் உள்ளே செல்லாமல் வெளியே தான் நின்றிருந்தார்கள், உடனே அவர்களை நோக்கி ஓடிவந்தவளை, என்னவென்பது போல அவர்கள் பார்த்தார்கள்.
“இல்லை இருக்குறதுக்கு எல்லாம் இடம் தந்துட்டீங்கள் இந்த குளிக்கிறதுக்கு..”
என மெல்ல இழுத்தாள் கோதை.
ஒருவரை ஒருவர் பார்த்தவர்கள் பின்னர் அவளோடு தொழுவத்தை நோக்கிச் சென்றார்கள். தொழுவத்திலிருந்து சற்று தூரத்தில் ஒரு கிணறு இருந்தது. அதற்குப் பக்கத்திலேயே ஒரு கழிப்பறையும் இருந்தது. அதைக் கைகாட்டி விட்டு தங்களது வேலை முடிந்து விட்டது என்பது போல இருவரும் சென்றுவிட, கோதை அப்படியே விக்கித்துப் போய் நின்றிருந்தாள்.
கிணற்றைச் சுற்றி பச்சை பசேல் என்று பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அது திறந்த வெளியாக இருந்ததால், அங்கே யார் நின்று குளித்தாலும் நிச்சயம் சுற்றி இருக்கும் அனைவருக்கும் அது படம் போட்டு காட்டுவது போல பளிச்சென்று தெரியக்கூடிய வகையிலேயே அமைந்திருந்தது.
குளிப்பதற்கு மறைவிடம் தராமல் இப்படித் திறந்த வெளியைத் தந்து விட்டுப் போனவர்களை நினைத்துக் கோபப்படுவதா, அல்லது இப்படி ஒரு இக்கட்டில் மாட்டி விட்ட தன்னுடைய தந்தையை நினைத்துக் கோபப்படுவதா என மனதோடு விவாதித்துக் கொண்டிருந்த பூங்கோதை, சட்டென்று தெளிந்தாள்.
“அடியேய் உனக்கு எப்போது தான் நியாயமான விஷயங்கள் கிடைத்திருக்கிறது.. ஒருபோதும் கிடைத்ததே இல்லை தானே.. நீதானே கிடைப்பவற்றை உனக்குத் தோதாக மாற்றிக் கொள்ள வேண்டும்..”
என மனதோடு நினைத்த பூங்கோதை வழமை போல தன்னைத் தானே தட்டிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டாள்.
அதன்படி இராத்திரியில் யாரும் இல்லாத நேரத்தில் குளித்துக் கொள்ளலாம் எனக் கோதை முடிவு செய்துவிட, அந்தப் பிரச்சனையும் அப்போது தற்காலிகமாகத் தள்ளி வைக்கப்பட்டது.
நேரம் அப்படியே ஓடிக் கொண்டிருக்க, அடுத்து என்ன செய்வது ஏது செய்வது யாரிடம் போய் அதைப் பற்றிக் கேட்பது என்கின்ற குழப்பம் பூங்கோதைக்கு வரவே, தொழுவத்தின் வாசலில் அமர்ந்து கொண்டு அந்த வீட்டையும் வீட்டைச் சுற்றி இருப்பவற்றையும் நோட்டம் விடத் தொடங்கினாள்.
தொழுவம் வீட்டின் பின்னால் இடப் பக்க மூலையில் ஒதுக்குப்புறமாக இருந்தாலுமே கூட, ஆள் நடமாட்டம் என்பது இல்லாமல் இருக்கவில்லை. சற்றே தள்ளி நின்று வேலை செய்து கொண்டிருப்பவர்கள் கூட அவளை வேடிக்கை பார்ப்பது போல இருந்தது.
அந்த பங்களாவினுள் வந்ததிலிருந்து இதோ இந்த நேரம் வரையிலும் கோதை கண்டுபிடித்த ஒரே விடயம், இந்த வீட்டில் பெண்கள் என்று யாருமே இன்னும் அவளது கண்களில் தென்படவில்லை. அங்குமிங்குமாக சென்று கொண்டிருந்த அனைவருமே ஆண்களாகவே காணப்பட்டனர்.
“இந்த வீட்டில் வேலை செய்வதற்கு இத்தனை பேர் இருக்கிறார்களே அப்படியென்றால் என்னை எந்த வேலைக்கு விடுவார்கள்..”
எனத் தன்னைத் தானே கேட்டபடி கோதை இருக்க, அவளையும் ஒரு மனுஷியாக மதித்து வியாகேசு தான் தேடி வந்தார்.
“என்னம்மா வாசல்ல இருந்து என்ன யோசிச்சு கொண்டு இருக்கிறாய்..”
“ஏனுங்கப்பா உங்கடை வீட்டில வாசல் இப்புடித்தான் இருக்குமோ.. நீங்களாவது இத பாத்து வாசல் எண்டு சொன்னியளே அந்த வரைக்கும் போதும்..”
“உப்புடி இருக்காது தான் ஆனா.. நீ இருக்கிற தோரணைய பாத்து இதுதான் வாசலா இருக்கும் எண்டு யோசிச்சு அப்புடி கேட்டிட்டன்..”
“சரி அதை விடுங்கோ இதுல கொஞ்சம் நேரம் இருங்கோவன்.. உங்களோட கொஞ்சம் கதைக்கோணும்..”
“சொல்லம்மா என்ன கதைக்கோணும்..”
“எனக்கு இந்த வீட்டில ஆரையுமே தெரியேல்லை.. ஏன் உங்கள கூடத்தான் ஆரெண்டு தெரியேல்லை ஆனாலும்.. உங்களை பாத்தா புதுசா பாக்குற மாதிரி இல்லை பழக்கப்பட்ட ஆள் மாதிரி தான் கிடைக்கு அதுதான் கேக்கிறன்..”
“சரி கேள்..”
“என்ரை அப்பா என்னைய இங்க வேலை செய்யச் சொல்லித் தான் அனுப்பி விட்டவர்.. ஆனா வந்த நேரத்தில இருந்து இப்ப வரையில ஆரும் எனக்கு எந்த வேலையுமே தரேல்லை.. அதோட அப்பா இன்னொண்டும் சொன்னவர்..”
“என்ன சொன்னவர்..”
“என்னைய இந்த வீட்டை போன உடனே முதலாளியிட்டை போய் கதைக்கச் சொன்னவர்.. என்னை அவரிந்தை மகளெண்டு அதாவது தில்லையம்பலத்திந்தை மகள் எண்டு அறிமுகப்படுத்த சொன்னவர்.. ஆனா வந்த நேரத்தில இருந்து இப்ப வரை ஆருமே எனக்கு முதலாளியை காட்டவே இல்லை.. அதுதான் அது சம்பந்தமா உங்களுக்கு ஏதும் தெரியுமோ.. முதலாளியை எங்க போய் சந்திக்கலாம் அவர் எங்க இருப்பார் உங்களுக்குத் தெரிஞ்சால் சொல்லுங்கோவன்..”
“உன்ரை அப்பா வேறை ஒண்டும் சொல்லேல்லையோ..”
“வேறை.. ஆ சொன்னவர்..”
“என்ன சொன்னவர்..”
“அது.. இந்த வீட்டிந்தை முதலாளி இருக்கிறார் தானே.. அவரிட்டை நான் தான் தில்லையம்பலத்தின்ரை ஒரே ஒரு மகள் எண்டு சொல்ல சொன்னவர்..”
“அவர் ஏன் அப்புடி சொல்லச் சொன்னவர்..”
“அது இந்த வீட்டு முதலாளி எங்கடை அப்பாந்தை மகளை தான் தன்ரை வீட்டை வந்து வேலை செய்து கடனை அடைக்கோணும் எண்டு சொன்னவராம்.. என்ரை தங்கச்சிக்கு வீட்டு வேலையள் எல்லாஞ் செய்து பழக்கம் இல்லையா.. அது தான் என்னைய அனுப்பினவர்..”
“உனக்குச் செய்து பழக்கமோ..”
“ஓ.. எனக்குப் பதினெட்டு வருஷப் பழக்கம் இருக்கு.. குடுத்த வேலையை கச்சிதமா செய்திடுவன்.. அதுதான் என்னை இங்க அனுப்பினவர்..”
“இந்தா பாரு பிள்ளை உன்ரை பேரு என்ன சொன்னனீ..”
“அதுக்குள்ள மறந்துட்டியளா.. பூங்கோதை..”
“வயசாயிட்டுது தானே பிள்ளை அது தான்..”
“என்ன பெரிய வயசு உங்களுக்கு..”
“தாயே விட்டிரு.. எனக்கு வயசாகேல்லை இளமையா தான் இருக்கிறன் ஏதோ ஒரு அவசரத்துல மறந்துட்டன் போதுமா..”
“அப்புடி சொல்லுங்கோ..”
“அதெல்லாம் கிடக்கட்டுக்கும் பிள்ளை நான் உன்னை ஒண்டு கேப்பன் கோபப்படாமல் பதில் சொல்லுவியோ..”
“நீங்கள் கோபப்படுத்தாத மாதிரி கேள்வி கேட்டா நான் ஏன் கோபப்பட போறன்.. கேளுங்கோ..”
“ம்ம்..நல்ல தெளிவு தான்..”
“சரி கேள்வியைக் கேளுங்கோப்பா..”
“இல்லை உன்ரை அப்பா ஒரு வயசுப் பிள்ளையை இப்புடி வேலை செய்ய சொல்லி.. தனியா அனுப்பி இருக்கிறது எவ்வளவு பெரிய பிழை.. இது பிழை எண்டு உனக்குத் தெரியேல்லையோ..”
“ம்ம்ம்.. நீங்கள் சொல்லுறதும் சரிதான்.. ஆனா பிழையோ சரியோ அப்பா சொல்றதை நிறைவேத்திறது தானே பிள்ளையிந்தை கடமை..”
“கடமை எண்டாப் போல கண்டதையும் கண்ணை மூடி கொண்டு செய்ய ஒத்துக் கொள்ளுறதோ.. சரி அதை விடு தில்லையம்பலம் உன்ரை உண்மையான அப்பா தானோ..”
“புரியேல்லை..”
“இல்லை தில்லையம்பலம் தான் உன்னைப் பெத்தவரோ.. அதாவது உன்ரை இரத்த சம்பந்தவழி அப்பாவோ எண்டு கேக்கிறன்..”
“இல்லை நான் அவரிந்தை சொந்த மகளில்லை.. வளர்ப்பு மகள் தான்..”
“அதுதான பாத்தன்..”
“என்ன பாத்தனீங்கள்..”
“பிள்ளை இன்னுமொரு கேள்வி கேக்கிறன் மறைக்காமல் வெளிப்படையாய்ச் சொல்லுவியோ..”
“நான் ஏன் மறைக்கப் போறன் கேளுங்கோவன் சொல்லுறன்..”
“நீ உன்ரை வீட்டில இருந்து வரும் போது.. முதல் சொன்னதைத் தவிர வேறை ஒண்டுமே தில்லையம்பலம் சொல்லி விடேல்லையோ..”
“இல்லையே சொல்லி விடேல்லையே ஏன் கேக்குறீங்கள்..”
“எனக்கு என்ன சொல்லுறது எண்டே தெரியேல்லை பிள்ளை உன்னையப் பாத்தாலும் பாவமாக் கிடக்குது.. இந்த வயசுல உனக்கு இந்த வேண்டாத வேலையெல்லாம் தேவையோ.. நீ தான் அப்பா அப்பா எண்டு பொங்குறாய் ஆனால் தில்லையம்பலம் உன்னைய இங்கினை அனுப்பிச் சரியான இக்கட்டில மாட்டிவிட்டு இருக்கிறான்.. அவனுக்கு உண்மையிலும் உம்மேல பாசமே இல்லை..”
“இங்க பாருங்கப்பா எனக்கு என்னைய யாரும் பாவம் பாத்தால் சுத்தமாப் பிடிக்காது.. தயவு செய்து இனிமேல் என்னைப் பாவம் பாக்காதீங்கோ.. அதோட இங்க நானா விரும்பித் தான் வந்தனான்.. ஆரும் என்னைய கட்டாயப்படுத்தி அனுப்பி இல்லை.. அவர் எம்மேல பாசம் காட்டாட்டிக்கும் அவர் வீட்டுல நான் வளந்தனான் அந்த நன்றிக் கடனுக்காண்டி எண்டாலும் அவர் சொல்லுறதை நான் கேட்டுத் தான் ஆகோணும்.. தயவு செய்து இந்தப் பேச்சை இதோட விடுங்கோ..”
“இல்லையம்மா நான் சொல்ல வாரதைக் கொஞ்சம்..”
“வேண்டாமப்பா வேண்டாம்.. நான் உங்களை வெறும் வாய் வாத்தையில அப்பா எண்டு சொல்லேல்லை.. உள்ளுக்குள்ள மனசுல இருந்து தான் சொல்லுறன்.. நீங்களும் ஏதோ அக்கறையில தான் என்னோட கதைக்க நினைக்கிறியள் எண்டும் எனக்கு விளங்குது.. நீங்கள் சொல்லுறதை நான் கேக்கிறதால என்ரை இந்த நிலைமை மாறப்போறதும் இல்லை.. உண்மைதான் இங்க எனக்கு தங்கிறதுக்கு குடுத்த இடத்தைப் பாக்கும்போதே எனக்குப் புரிஞ்சுட்டுது இங்க என்ரை நிலைமை எப்படி இருக்கும் எண்டு.. ஆனாலும் அங்க அவரிட்டை இங்க போறதுக்குச் சம்மதம் எண்டு சொல்லீட்டுத் தானே வந்தனான்.. நான் இங்க வேலை செய்ய எண்டு வந்தன் அதை மட்டும் செய்யிறன்.. உங்கடை அக்கறைக்கு நன்றி.. முடிஞ்சால் எனக்கு நான் கேக்கிற பொருளுகள் மட்டும் வாங்கிக் குடுங்கோ.. சம்பளம் வந்ததும் காசு குடுக்கிறன்..”
என்றவளை இமை வெட்டாது பார்த்துக் கொண்டிருந்தார் வியாகேசு.
தான் உதவி கேட்டதும் அவர் திகைத்துப் போய்விட்டாரோ எனப் பார்த்த கோதை
“பொருள் வாங்கிக் குடுக்கிறதுக்குக் காசு இல்லையோ.. நீங்களும் பாவம் தானே உங்களுக்கும் சம்பளம் வந்தாத் தானே கையில காசு இருக்கும்.. என்னட்டை ஒரு கொஞ்சக் காசு கிடக்குது.. அதைத் தாரன் அதுக்குள்ள வாங்கக் கூடிய பொருளுகளை மட்டும் வாங்கித் தாரியளோ..”
என்று கொண்டு தனது சேலைத் தலைப்பில் முடிந்து வைத்திருந்த ஐயாயிரம் ரூபாய் தாளை எடுத்து அவரிடம் நீட்டினாள்.
அந்த காசை வாங்க மறுத்த வியாகேசு
“உனக்குப் பொருளுகள் வாங்கிக் குடுக்க என்னட்டைக் காசு இல்லை எண்டு நான் சொன்னனானோ.. என்ன பொருளுவள் வேணுமெண்டு எழுதிக் குடு வாங்கியாரன்.. காசை ஆறுதலா இருக்கும் போது குடு..”
எனச் சொல்ல,
“உங்களோட நம்பர் குடுங்கோவன் நான் யோசிச்சு லிஸ்டு போட்டு அனுப்பி விடுறன்..”
என்று கோதை சொல்ல, தன் அலைபேசி இலக்கத்தை அவளிடம் கொடுத்தார் வியாகேசு.
“நீ ஃபோன் எல்லாம் வச்சிருக்கிறியோ..”
“ஏன் நான் வெச்சிக்கக் கூடாதோ..”
“சேச்சே.. அப்புடி நான் சொல்லேல்லையே.. வெச்சிக்கியோண்டு தானே கேட்டனான்..”
“ஓம் ஓம் வைச்சிருக்கிறன்.. நானே காசு சேத்து வாங்கினது..”
எனச் சிரித்தவளைப் பார்க்கப் பார்க்க வியாகேசுவுக்கு அவளின் மேல் கனிவும் பாசமும் கூடிக் கொண்டே போனது.