அசுரனின் குறிஞ்சி மலரே.. 16

4.8
(17)

குறிஞ்சி மலர்.. 16

நேரம் நடுநிசியைக் கடந்து கொண்டிருக்க, சுவர்க்கடிகாரத்தின் டிக் டிக் சத்தத்தை தவிர வேறு எந்த சத்தமுமே கேட்கவில்லை. அந்த பங்களாவே துயிலில் ஆழ்ந்திருந்த தருணம் அது.

கோதையும் பம்பரம் போல் சுழன்று செய்த வேலைகளின் அசதியினால் தன்னை மறந்து ஆழ் துயிலில் மூழ்கியிருந்தாள்.

இடது பக்கமாக ஒருக்களித்துப் படுத்திருந்த கோதைக்கு, ஏதோ அரங்குவது போன்ற சத்தம் லேசாகக் கேட்கவே, அவள் அடுத்த பக்கம் புரண்டு படுத்துக் கொண்டாள்.

மீண்டும் மீண்டும் ஏதோ அரங்கும் சத்தங் கேட்கவே, ஆழ் துயிலில் இருந்தாலும் சுற்றி நடக்கும் விஷயங்களில் பட்டென்று தூக்கம் கலைந்து எழுந்து கொள்ளும் ரகம் கோதை, அதனால் மெல்ல அவளது தூக்கம் கலைந்து போகவே திடுக்கிட்டு விழித்தவள், தான் படுத்திருந்த அறையைச் சுற்றிப் பார்வையைச் சுழல விட்டாள்.

அவளது கண்களுக்கு எதுவுமே தட்டுப்படவில்லை. ஆனால் ஏதோ ஒன்று அரங்கும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டேயிருந்தது. அவள் சட்டென்று செபமாலையும் எலிசபெத்தும் இருந்த மூலையைப் பார்த்தாள். அவர்கள் இருவரும் தூங்காமல் சுவரோரமாகச் சாய்ந்திருப்பது மெல்லிய வெளிச்சத்தில் நன்கு தெரிந்தது.

இருவரதும் முகபாவனை தெளிவாகத் தெரியாது விட்டாலுமே கூட, அவர்கள் பதட்டத்தில் இருப்பது அப்படியே கோதைக்குத் தெரிந்தது.

ஒரு வேளை சிறு சத்தம் கூட அவர்களைப் பதட்டப் படுத்துமோ, அது தான் அவர்கள் இருவரும் பதட்டப் படுகிறார்களோ என நினைத்த கோதை, அருகில் போய்த் தட்டிக் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் எழப் போனவள், சட்டென்று கீழே படுத்துக் கொண்டாள்.

அவள் படுத்திருந்த மூலைக்கு நேர் எதிராக, அறைக்கதவுக்கு அடுத்த பக்க மூலையோடு போடப் பட்டிருந்த பென்னம்பெரிய தேக்கு மரக் கட்டிலுக்குக் கீழே ஏதோ அசைவது போலத் தென்பட்டதைப் பார்த்ததும் தான், கோதை சட்டென்று படுத்துக் கொண்டு விட்டாள்.

கோதை தன் கால்கள் கிடந்த திசையில், இருந்த கட்டிலையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க, அவளுக்கு தான் மூச்சு விடும் சத்தங் கூடப் பயங்கரமாகத் தான் கேட்டது.

அசையாமல் படுத்தபடி கட்டிலின் கீழே இருந்த அசைவையே கவனித்த கோதைக்கு, பயத்தில் லேசாக உடல் வியர்த்தது.

“காளியாத்தா.. வீடா இது எந்தப் பக்கம் பாத்தாலும் பயங்கரமாவே இருக்குது.. சந்திரமுகியில வந்த அரண்மனைக் கணக்கா கட்டி அதுக்கு வீடெண்டு பேர் வைச்சிருக்குதுகள்.. ஏக்கனவே இதுக்குள்ள படுத்துக் கிடக்க பயத்துல உயிர் போகுது.. போதாக்குறைக்கு இப்ப என்ன இழவு வெளியால வரப் போகுதோ தெரியேல்லையே.. பேசாமல் எனக்குக் குடுத்த அறையிலயே படுத்துக் கிடந்திருக்கலாம்.. நான் தான் பெரிய இவள் மாதிரி இதுக்குள்ள படுப்பம் எண்டு வந்தன்.. இந்த அறைக்குள்ள ஏதும் அமானுஷ்ய சக்தியள் உலாத்தித் திரியுதோண்டும் தெரியேல்லையே.. காளியாத்தா கூடவே இருந்து காப்பாத்தும்மா..”
என ஹஸ்கி குரலில் தனக்குத் தானே சொன்னவள், பார்வையைத் தேக்கு மரக் கட்டிலுக்குக் கீழேயே பதித்திருந்தாள்.

கட்டிலுக்கு கீழே உருண்டை வடிவமான கரிய உருவத்தில் ஏதோ ஒன்று மெல்ல ஊர்ந்து ஊர்ந்து வெளியே வந்தது. தன்னை அறியாமல் ஐயோவெனக் கத்தப் பார்த்த கோதை, ஒரு கணத்தில் சுதாகரித்து தன் இரண்டு கரங்களாலும் தன் வாயை இறுக பொத்திக்கொண்டு மூலையோடு ஒட்டிக் கொண்டாள்.

சிறிது நேரத்திலேயே ஊர்ந்து வந்தது ஒரு மனித உருவம் என்பதை கண்டு கொண்டவள், மேலும் தன் வாயை இறுக பொத்திய வண்ணம் தனக்கு முன்னால் கிடந்த அலுமாரியின் பின்னால் ஒளிந்து கொண்டாள்.

கட்டிலுக்கு கீழேயிருந்து முழுதாக இரண்டு மனித உருவங்கள் ஊர்ந்து ஊர்ந்து வெளியே வந்து, எழுந்து நிற்கும் வரையில கூட கோதை மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு தான் அலுமாரிக்குப் பின்னால் பதுங்கியிருந்தாள்.

மனித உருவங்களின் பின்புறத் தோற்றம் மட்டுமே கோதைக்கு தெரிந்ததால், அவர்கள் யாரென அவளால் சட்டென்று அறிய முடியவில்லை. இருந்தாலும் சிறு சத்தங் கூட எழுப்பாமல், யாரிவர்கள் இந்த நேரத்தில் இவர்களுக்கு இங்கே என்ன வேலை என்ற யோசனையோடு அவர்களின் அசைவுகளையே பார்த்த வண்ணமிருந்தாள்.

தேக்கு மரக் கட்டிலுக்குக் கீழே இருந்து வெளியே வந்த இரண்டு மனித உருவங்களும், எலிசபெத் மற்றும் செபமாலையை நோக்கி நடக்கத் தொடங்கவும் தான், அவர்கள் யாரென்பதே கோதைக்குத் தெளிவாகத் தெரிந்தது.

அந்த இருவரும் வேறு யாருமல்ல அல்போன்சும் ஜோசப்பும் தான். இவர்கள் இருவருக்கும் இந்த இராத்திரி நேரத்தில் அதுவும் நடுநிசியில் இங்கே என்ன வேலை. என யோசித்த கோதையின் விழிகள் சட்டென்று தேக்குமரக் கட்டிலை நோக்கிப் பாய்ந்தன.

ஏற்கனவே இந்த இருவர் மீதும் கோதைக்கு ஏனோ நல்ல அபிப்பிராயமே தோன்றவில்லை. அது போக பூட்டியிருந்த அறைக்குள் எப்படி வந்திருப்பார்கள், ஒரு வேளை மாந்திரீகம் தெரிந்தவர்களாக இருப்பார்களோ என யோசனை செய்த கோதை. இல்லை இல்லை அந்தக் கட்டிலுக்குக் கீழே தான் ஏதோவொரு மர்மம் இருக்கிறது. சற்று முன்னால் தானே ஏதோ அரங்குகின்ற சத்தங் கேட்டது எனக் குந்தியிருந்த வாக்கில் தலையைப் பிய்த்துக் கொண்ட கோதைக்கு, அடுத்துக் கேட்ட அலறல் சத்தம் குலையை நடுங்க வைத்தது.

செபமாலை தான்
“ஐயோ ஆண்டவா.. இந்த கொலைகாரப் பாவியளிட்டை இருந்து எங்களைக் காப்பாத்தவே மாட்டியோ.. எவ்வளவு காலம் தான் இப்புடியே நரகத்தை அனுபவிக்கிறது..”
எனப் பெருங் குரலெடுத்துக் கதறியழ, அல்போன்ஸ் அவரின் வாயைத் துணியால் அடைத்து விட்டு
“ஏய் கிழவி.. நீ என்ன கத்தினாலும் இந்த அறையை விட்டு உன்ரை சத்தம் வெளியால போகாதெண்டு தெரியும் தானே.. வழமையா நாங்கள் ஊசி போட வார நேரத்துல பேசாமல் வாயைப் பொத்திக் கொண்டு தானே இருக்கிறனீ.. இண்டைக்கு மட்டும் என்ன புதுசா சீனைப் போடுறாய்..”
என்று கொண்டு அவரது கன்னத்தில் அறைந்தது, கோதைக்குத் தெளிவாகத் தெரிந்தது.

அறையினுள் இருக்கும் கோதை, ஒரு வேளை நல்ல பெண்ணாக இருந்தால் அவளுக்கு தங்கள் நிலை தெரியட்டுமே என்ற காரணத்துக்காகத் தான் செபமாலை அவ்விதம் கத்தியழுதிருந்தார்.

அவர்களது பேச்சிலும் நடத்தையிலும் அப்படியே உறைந்து போய் இருந்த கோதைக்கு மூச்சுத் திணறுவது போல இருக்கவே, ஊரில் இருக்கும் தெய்வங்களை எல்லாம் மனதினுள் கூச்சலிட்டு அழைத்து, அந்த இருவரும் வந்த வழியே வெளியே போகும் வரை, என்னை அவர்களிடம் காட்டிக் கொடுத்து விடாதே என வேண்டிக் கொள்ள, ஒரு பத்து நிமிடங்கள் அப்படியே அவளைத் திணறித் திண்டாட வைத்து விட்டு, தாங்கள் வந்த வேலையை முடித்துக் கொண்டு அல்போன்ஸும் ஜோசப்பும் போய் விட்டனர்.

இருவரும் தேக்கு மரக் கட்டிலின் கீழே புகுந்து, மீண்டும் அந்த அரங்கும் ஓசை கேட்டு முடிந்து, மறுபடியும் மயான அமைதி சூழவும் தான், முட்டுக்காலில் இருந்த கோதைக்கு மூச்சுச் சீரானது.

அதுவரை இறுகிப் போயிருந்தவள் சட்டென்று தொய்ந்து போய் அப்படியே கீழே விழுந்து படுத்துக் கொண்டு, பெரிய பெரிய மூச்சுக்களை எடுத்துத் தன்னை நிதானப்படுத்திக் கொள்ள, அவளது உடம்பு நடுக்கம் மட்டும் குறைவேனா நான் என்பது போல அவளைப் போட்டு ஒரு வழி செய்ய, சில நிமிடங்கள் அப்படியே கிடந்தாள் கோதை.

அலுமாரியின் பின் பக்கமாக, கீழே உடலைச் சுருட்டிப் படுத்துக் கிடந்த கோதை
“ஆக இந்த அறைக்குள்ள அடைபட்டுக் கிடக்கிற ரெண்டு பேருமே மன நோயாளியள் இல்லை.. அதுலயும் அந்த அம்மாச்சி கத்தி அழுததைப் பாத்தால் அவாக்கு எல்லாம் விளங்குது.. அதோட உள்ள வந்த ரெண்டு பேருல ஒருத்தன் அம்மாச்சியை ஏசேக்குள்ள ஏதோ ஊசி போடுறது எண்டு சொன்னவன்.. அப்ப அது போதை ஊசியாத் தான் இருக்கோணும்.. ஆக மொத்தம் அந்த ரெண்டு பேரும் தான் இந்த ரெண்டு பேரையும் ஏதோ கொடுமைப் படுத்தி அடைச்சு வைச்சிக்காங்கள்..”
என யோசனையோடு தனக்குத் தானே சொல்லிக் கொண்டிருக்க, அறையின் மூலையில் இருந்து வந்த விசும்பல் சத்தம் அவளது எண்ணவோட்டத்தைக் கலைக்கவே, வேகமாக எழுந்து எட்டிப் பார்த்தாள்.

செபமாலை தான் ஏதேதோ சொல்லிப் புலம்பி அழுது கொண்டிருந்தார்.

“அம்மாச்சி நான் அறைக்குள்ள வந்து கதவை உள்பக்கமாப் பூட்டேக்குள்ள பதட்டமாயும் பயந்து போயும் பாத்தவா.. அதுக்கு காரணம் இப்ப வந்திட்டுப் போன பன்னாடைப் பரதேசியளாத் தான் இருக்கோணும்.. நல்ல காலம் அவங்கள் என்னைக் காணேல்லை.. கண்டிருந்தால் கொண்டு வந்த ஊசியில ஒண்டை எனக்கும் குத்தீட்டுப் போயிருப்பாங்கள்.. காளியாத்தா நான் இப்ப என்ன செய்யிறது..”
என முணுமுணுத்தபடி செபமாலையையே பார்த்திருந்தவளுக்கு உண்மையில் அடுத்து என்ன செய்வது ஏது செய்வது என்ற பதட்டம் தான் தொற்றிக் கொண்டது.

சில நிமிடங்கள் அப்படியே இருந்தவள், இப்படியே இருந்தால் வேலைக்காகாது என நினைத்தபடி மெல்ல எழுந்து செபமாலையின் பக்கத்தில் போய் அமர்ந்து கொண்டாள்.

சுவரோடு ஒட்டிக் கொண்டு, கீழே பார்த்து அரற்றிக் கொண்டிருந்த செபமாலையின் தோளில் கோதை மெல்லக் கையை வைக்க, அவர்கள் தான் மீண்டும் வந்து விட்டார்களோ என்ற பயத்தில், அவர் வேகமாக மூலையோடு ஒண்டிக் கொள்ளவே கோதைக்கு மனதை ஏதோ செய்து விட்டது.

“அம்மாச்சி நான் தான் நான் தான் பயப்பிடாதேங்கோ..”
என்று கொண்டு, அவரைத் தொட்டுத் தடவித் தன் நெஞ்சோடு கோதை அணைத்துக் கொள்ள, முதலில் முரண்டுபிடித்த செபமாலை மெல்ல மெல்ல மேய்ப்பனின் முன் பணியும் கிடை ஆடு போல அவளுக்குப் பணிந்து அவளின் நெஞ்சில் முகத்தைப் புதைத்துக் கொண்டார்.

அவரை ஆதுரமாகத் தட்டிக் கொடுத்தபடி
“பயப்பிட வேண்டாம் அம்மாச்சி.. இனி உங்களுக்கு எந்தக் கெட்டதும் நடக்க நான் விட மாட்டன்.. எந்த விஷமிகளையும் நெருங்கவும் விட மாட்டன்.. உங்களுக்கு எப்பவும் துணையா நான் இருப்பன்..”
எனச் சொல்ல, செபமாலை சட்டென்று நிமிர்ந்து அவளது முகத்தைப் பார்த்தார்.

கோதையின் விழிகளுக்குள் எதையோ தேடியவர்
“நீ அவனுங்க ஆளில்லையே..”
எனத் திக்கித் திணறிக் கேட்க,
“அம்மாச்சி என்னையப் பார்த்தால் அந்தப் பன்னாடையள்ரை ஆள் போலயோ கிடக்குது.. இத்தனை நாட்களில என்னையப் பத்தி உங்களுக்கு கொஞ்சங் கூடவோ நம்பிக்கை வரேல்லை..”
எனப் பதிலுக்கு அவரின் கண்களுக்குள் பார்த்தபடி சொன்னவளை, சில நொடிகள் பார்த்தவர், அவள் மீதே மீண்டும் சாய்ந்து கொண்டார்.

அடுத்த மூலையில் இருந்த எலிசபெத் மாத்திரம் கோதையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது பார்வையை எதேச்சையாக பார்த்த கோதை, அவர் தன்னை நம்புவதா வேண்டாமா என்கின்ற மனநிலையில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டாள்.

ஆனாலும் அவரின் மனநிலையை அப்போதைக்கு மாற்ற அவள் முயலவில்லை. இன்னும் சிறிது காலம் இவர்களோடு தானே இருக்கப் போகிறேன். அப்போது அவராகவே என்னைப் புரிந்து கொள்வார். அதுவரை நான் தான் பொறுமையாக இருக்க வேண்டும் என முடிவெடுத்த கோதை, செபமாலையைத் தட்டிக் கொடுத்து தூங்க வைத்தாள்.

அவளுக்கு ஏனோ அவர்கள் இருவரையும் மிகவும் பிடித்திருந்தது. அதிலும் அவர்கள் இருவரும் சொந்த வீட்டிலேயே கைதிகள் போல மன வேதனை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் என அறிந்த நொடியே, அவர்களை அந்த நரகத்தில் இருந்து மீட்டு விட வேண்டும் என்ற வெறியே அவளுக்கு வந்து விட்டது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!