தேவா வீட்டில் இருந்து கோவமாக கிளம்பிய சூர்யா அதே கோவத்துடனே காரை இயக்கி வீடு வந்து சேர்ந்தான்…
இந்நேரத்தில் வீட்டில் இருக்கும் யாரையும் தொந்தரவு செய்ய கூடாது என்று தன்னிடம் இருக்கும் சாவியை கொண்டு கதவை சத்தமில்லாமல் திறந்து அறைக்கு வந்தவன் அங்கு உறங்கி கொண்டு இருந்த அவனின் மனைவி ஷோபனா மகன் தேவ் தர்ஷன் உறக்கம் கலையாதவாறு மெத்தையில் படுக்க,
“என்ன சார் மாமா வேலை எல்லாம் சிறப்பா முடிஞ்சுதா” என்ற மனைவி ஷோபனா நக்கலாக வினவ, “ஷோபா நான் பயங்கர டென்சல இருக்கேன் பேசாமா படுத்திரு அதான் நல்லது”…
ஆனால் ஷோபனா அமைதியாக விடுவதாக இல்லை… “இப்ப தான் அங்க நடந்த கூத்த மஞ்சுக்கா போன் பண்ணி சொன்னாங்க… டாக்டர்ன்னு சொல்லி என்னை கல்யாணம் பண்ண… ஆனா இப்ப ப்ரோக்கர் வேலை பார்த்துட்டு இருக்க அசிங்கமா இல்ல… அந்த தியா சின்ன பொண்ணு என்னென்ன சொல்லி ஏமாத்தினானோ உன் ப்ரெண்ட், அதுக்கு நீயும் உடந்தையா இருக்காயா, இதே உன் தங்கச்சியா இருந்தா இப்படி” என்று சொல்லி முடிக்கும் முன் அறைந்து இருந்தான் சூர்யா…
சூர்யா,”என்னடி ஆளு ஆளாக்கு உன் கூடப் பொறந்த தங்கச்சியா இருந்த இப்புடி பண்ணுவியான்னு கேட்குறீங்க…தியா வெண்ணிலாவுக்கு மேல்ல தான்டி என் மனசில்ல வச்சு இருக்கேன்… அவளுக்கு இப்ப என்னடி அநியாயம் பண்ணிட்டேன் சொல்றீங்க… அவ ஆசைப்பட்ட வாழ்க்கை ஒரு அண்ணாண அவளுக்கு அமைச்சு கொடுத்து இருக்கேன்… இதுல்ல அசிங்கப்படுறதுக்கு என்னடி இருக்கு… அவ வாழ்க்கை நல்லா இருக்கும்… என் ப்ரெண்ட் தேவா அவளை தங்கமா தாங்க போறான்… அதை பார்த்து உன் நாத்தனாரும் நீயும் வயிறு எரிய தான் போறீங்க”…
“அப்புறம் என்ன சொன்ன மாமா வேலை பாக்குறான்னா, உன்னை லவ் பண்ற காலத்துல உங்க வீட்டுக்கு தெரியாமா நம்ம இரண்டு பேரும் மீட் பண்ணி பேசும் போது, நமக்காக வாசல்ல வெளிய வெயிட் பண்ணிட்டு தேவா உனக்கும் எனக்கும் காவல் காத்துட்டு மணிக்கணக்காக நிற்கலை… அவனுக்காக என் ப்ரெண்ட்க்காக நான் ப்ரோக்கர் வேலை மாமா வேலைன்னு எல்லாமே பார்ப்பேன்டி, இஷ்டம் இருந்தா என் கூட இரு, இல்லைன்னா கிளம்பி உன் அப்பன் வீட்டுக்கு போ” என்று கத்தி விட்டு படுத்து விட்டான்…
தன்னுடைய அறைக்கு வந்து மெத்தையில் படுத்த தேவா மனதில் மறுபடியும் குழப்பமே சூழ்ந்திருந்தது… வேறு என்ன பெரிதான குழப்பம் இன்று நடந்த அவன் திருமணத்தை பற்றியும் தியாவை பற்றியுமே, தன்னை தானே கேள்வி மேல் கேள்வி கேட்டு குழப்பி கொண்டு இருந்தான்… ஏனெனில் இப்போது தியா அவன் கன்னத்தில் முத்தமிட்ட போது, என்ன தான் அவளை வெளியே முறைத்தாலும் மனது அதை ரசிக்கமால் இல்லை… அதனாலே மறுபடியும் குழப்பம் கூடியது…
நான் ஏன் அவளுக்காக ஓடுனேன்? நான் ஏன் அவளுக்காக துடிச்சேன்? ஆறு மாதம் மட்டுமே தெரிந்த பொண்ணு கழுத்தில் தாலி கட்டும் வரை எப்புடி போனேன் என நடந்ததை ஏற்க முடியாது மனம் அதிலேயே சுழன்றது..
சற்று நேரத்திற்கு முன்பு தேவாவின் மனசாட்சி கூறிய உன் மனதிற்குள் உனக்கு தெரியாமலே அவள் திருட்டு பூனையாய் உள் நுழைந்து விட்டாள் என்ற பதில் அவனுக்கு ஏற்புடையதாக இல்லை… அவளை பார்க்கும் நேரம் தவிர மற்ற சமயங்களில் தியா என்ற ஒருத்தி இருக்கின்றாள் என்ற நியாபகம் கூட எழுந்தது கிடையாது… அப்புடி இருக்கும் போது இதை எப்புடி ஏற்று கொள்ள முடியும்…. ச்சே என்றபடி விழி மூடியவன் கண்களுக்குள்,
சாரி சாரி தெரியமா உள்ளே வந்துட்டேன் என்றபடி முதன் முறையாக அவன் அறையில் சிக்கிய போது கண்களை மூடியபடி இருந்த தியா முகம்,
நான் இனிமே உங்களை பாவானு தான் கூப்பிடுவேன் பாவா என்று கூறிய குறும்பு முகம்,
பாவா நீங்க டாக்டரா சொல்லவே இல்லையே என்று கண்களில் அவனை கண்ட மகிழ்ச்சியையும் ஆச்சர்யத்தையும் சேர்த்து வைத்து இமைக்கமால் அவனை பார்த்த விழிகள்,
அவளை கேட்டதுக்கு பதில் என்னை கேட்டு இருந்தீங்கனா டபுள் ஓகே சொல்லி இருப்பேனே என்று தன் காதலை முதன் முறையாக வாய் வார்த்தையாக கூறிய தியாவின் முகம்,
உங்களுக்கு ஒன்னுமில்லைல பாவா, எங்கேயும் அடிபடலைல என்று அவனுக்காக தவித்த முகம்,
உங்களை பத்தி தெரியுறதுக்கு முன்னாடியும் லவ் யூ தான்.. தெரிந்த ஆரம்புறமும் லவ் யூ தான்.. ஏன் சாகற வரை லவ் யூ மட்டும் தான்..
அவள் கழுத்தில் தாலி கட்டும் போது உலகின் ஒட்டுமொத்த காதலையும் விழிகளில் தேக்கி அவனை பார்த்த அவள் முகம்,
இந்த ஆறு மாதத்தில் அவளுடனான அனைத்து சந்திப்புகளும் கண்களுக்குள் காட்சியாய் விரிந்தது… படக்கென்று விழி திறந்து எழுந்து அமர்ந்தான்… அவள் நினைவு தனக்கு எழுந்ததே இல்லை என்று இறுமாப்பாய் அவன் உரைக்க, அவனின் ஆழ்மனமோ அனைத்தையும் ரகசியமாய் படம் பிடித்து வைத்து இருக்கின்றது என்பது புரிந்தது… இதுக்கு என்ன அர்த்தம்..
காதலினால் ஏற்கெனவே காயம் கண்ட இதயம்… அதன் வடு கூட இன்னும் மறையாமல் இருக்கும் போது இது எப்புடி சாத்தியம்? சிறு குழந்தை தெரியமால் நெருப்பில் கையை சுட்டுக் கொண்டால் திரும்ப நெருப்பு இருக்கும் பக்கம் கூட போகாது… அந்த குழந்தையை விட பலவீனமானதா என் மனம்… சிறு பெண் பாசமாக பேசிய இரண்டொரு வார்த்தைகளில் பழைய வடுவை மறந்து அவள் பக்கம் சாய்ந்ததா? இது எப்புடி சாத்தியம்? குழப்பத்திற்கு விடை தேடி யோசித்தவனுக்கு குழப்பம் அதிகரித்தது… ஆனாலும் அவன் மனம் கூறும் எதையும் தேவா ஒத்துக் கொள்ள தயாராக இல்லை…
“இல்லை இல்லை எனக்கு அவளை பிடிக்காது… அவ சரியான இம்சை… அவளே பார்த்தாலே கடுப்பு தான் வரும்… அதுவும் வாய் திறந்து பேச ஆரம்பிச்சிட்டா இன்னும் எரிச்சல் தான் ஆகும்… நான் போய் அவளையா அது எல்லாம் ஒன்னுமில்லை… எல்லாம் அந்த சூர்யாவால தான் அந்த பரதேசியால தான் இப்ப இவ்ளோ பிரச்சனையும், எனக்கு அவளை சுத்தமா பிடிக்காது டாட் அவ்ளோ தான்”…
இப்போதைக்கு அவ வீட்டுல கோவம் குறையற வரை அவ இங்க இருக்கட்டும்…அப்புறம் அவளை அவங்க வீட்டுக்கு அனுப்பி வச்சிரலாம்… அவங்க வீட்டுல ஏத்துக்கலைன்னா அவ படிப்பு முடிஞ்சதும் ஒரு நல்ல வாழ்க்கையை நாமளே அமைச்சு கொடுக்கனும் என்று எல்லாம் யோசிக்க… அடுத்து என்ன பண்றதுன்னு நாளைக்கு பார்க்கலாம் இப்ப தூங்கலாம் என்று ஏனோ இந்த வேதாளம் முருங்கை மரத்தில் இருந்து இறங்க மறுத்தது…
தூங்கலாம் என்று எண்ணி தனது வலது புறம் திரும்பி படுத்தவன், மீண்டும் கோவமாகி எழுந்து அமர்ந்தான்…
“ஏய் நீ எப்படி இங்க வந்த”? என்று கோவமாக அருகில் படுத்து இருந்த தியாவை பார்த்து கோவத்தில் கத்த,
அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை… நன்றாக உறங்கி இருந்தாள்… அதில் கடுப்பானவன் தூங்குபவர்களை எழுப்ப கூடாது என்ற தனது கொள்கைகளை தூர எறிந்துவிட்டு, ஏய் எழுந்திருடி என்று தியாவை உலுக்க,
“ம்ச் என்ன பாவா? தூங்க விடமா டிஸ்டர்ப் பண்றீங்க.. காலையில்ல பேசிக்கலாம் எனக்கு தூக்கம் வருது”…
“அந்த ரூம்ல போய் படு”…
“அப்ப நீங்களும் வாங்க”…
“ஏய்… போன்னு சொல்றேன்ல”..
“முடியாதுன்னு நானும் சொல்றேன்ல”.
ஒன்னா நீங்களும் அங்க வாங்க… இல்லைன்னா நான் இங்கேயே படுத்துக்கிறேன். எனக்கு தனியா படுக்க பயமா இருக்கு பாவா” என்றவளை தேவா முறைக்க,
“அச்சோ இப்புடி முறைக்காதீங்க பாவா, உண்மையாவே எனக்கு தனியா படுக்க பயம்.. எங்க வீட்டுல கூட தனியா படுக்க மாட்டேன் அம்மா பக்கத்தில் தான் படுப்பேன்… அதனால்ல இங்கயே படுத்துக்கிறேன் ப்ளீஸ் பாவா” என்று தேவா தாடை பிடித்து கெஞ்ச,
தியா கையை தட்டி விட்டவன் “அதற்கு எல்லாம் நீ உங்க வீட்டுல இருந்திருக்கனும்.. காதல் பண்றேன் கத்திரிக்காய் பண்றேன்னு இம்சையை கூட்டி இங்க வந்துருக்க கூடாது”…
“ஆ…. ஏதோ நானா உங்க வீட்டுக்கு வந்த மாதிரி பேசுறீங்க… ப்ர்த்டே விஷ் பண்ணிட்டு போலாம்னு வந்தவ கழுத்தில்ல தாலி கட்டி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டு இப்புடி கொடுமைப்படுத்துறீங்களே இதெல்லாம் நியாயமா? இந்த அநியாயத்தை தட்டி கேட்கிறதுக்கு யாருமே இல்லையா”? என்று மூக்கை சிந்தி அழுவது போல் பாவ்லா செய்ய,
“ஏய் நான் ஏதோ உன் மேல ஆசைப்பட்டு கல்யாணம் பண்ண மாதிரி பேசற”,
“அது எப்புடி பாவா எனக்கு தெரியும்… உங்க மனசில்ல என்ன இருக்குன்னு, நீங்க சொன்னா தானே எனக்கு தெரியும்… இப்ப சொல்லுங்க நான் தெரிஞ்சிக்கிறேன்” என்று தேவா அருகில் செல்ல,
“ஏய் உன்ன உன்ன” என்று தியா கழுத்தை நெறிப்பது போல் வந்து, பின்பு சே என்றவன் தன் தலையில் அடித்து கொள்ள,
“பாவா நான் இனிமே இங்க தானே இருக்கப்போறேன்… பொறுமையா நாளைக்கு சொல்லுங்க… இப்ப தூங்கலாமா? நான் இங்கயே படுத்துக்கிறேன்… என்னை நம்புங்க பாவா.. உங்க கற்புக்கு நான் க்ராண்டி.. நான் அப்பவே சொன்ன மாதிரி உங்களை ஒன்னும் பண்ண மாட்டேன்.. மதர் ப்ராமிஸ் உங்களை ஒன்னுமே பண்ண மாட்டேன்” என கண்சிமிட்டி சொன்னவளை தேவாவால் முறைக்க மட்டும் தான் முடிந்தது..
“குட்நைட்” என்றவள் படுத்து விட்ட உறக்கத்தை தொடர்ந்தாள்… சிறிது நேரம் அவளையே பார்த்த தேவாவிற்கு ஒன்று புரிந்தது… சற்று முன்பு அவன் யோசித்தது போன்று தியாவை அவன் வாழ்வை விட்டு விலக்குவது அவ்வளவு எளிதல்ல ரொம்ப கடினம் என்பது… அவனும் அவள் அருகிலே படுத்து தூங்க ஆரம்பித்தான்…
சற்று நேரத்திலே அண்டை நாடுகள் எல்லையை மீறி சில இடங்களை ஆக்கிரமிப்பது போல் உறக்கத்தில் தியாவும் தன் எல்லையை தாண்டி தேவா நெஞ்சில் படுக்க, இம்சை இம்சை இவளோட என தள்ளி நகர்த்தி படுக்க வைக்க, மீண்டும் மீண்டும் அதே தொடர, தேவாவும் அப்புடியே விட்டு விட்டான்.. கொஞ்சம் நேரம் கழித்து நல்ல உறக்கத்தில் இருந்த தேவாவின் கரங்களும் அவளை அணைத்து இருந்தது…
அந்த அழகான இரவு கடந்து மறுநாள் பொழுது விடிந்தது… தேவா தியா திருமணம் விஷயம் அனைவருக்கும் தெரிந்தது.. அதை அறிந்து மிகவும் அதிர்ந்தவர்கள் இருவர் ஒன்று ஜீவா தந்தை செந்தில்… இன்னொன்று வெண்ணிலா…
காலை நேரம் வெளியே சென்று விட்டு தன் காரில் வீடு வந்து சேர்ந்தான் தேவா… ஆனால் அவன் வீட்டின் முன்பு ஏதோ கூட்டமாக சத்தமாகவும் இருக்க… தன் மனைவிக்கு தான் ஏதோ பிரச்சினை என்று எண்ணிய தேவா… அவசரமாக போய் விசாரிக்க பிரச்சினையை இழுத்து வைத்தே அவன் மனைவி தியா தான்… அதுவும் அந்த பிரச்சினை என்னவென்று விசாரித்தவனுக்கு எங்காவது சென்று முட்டி கொள்ளலாமா என்று இருந்தது… அப்புடி ஒன்றை செய்து வைத்து இருந்தாள் அவன் தர்மபத்தினி…