4.6
(17)

காதல் : 02 

“என்ன பார்க்கிற இன்னைக்கும் நான் உன்னை முந்திட்டேனே… பாரு எப்பவும் நீ எங்கிட்ட தோத்துட்டேதான் இருக்க…” என்று சூரியனுடன் வழமை போல பேசிக் கொண்டு இருந்தாள் அன்னக்கிளி. ஆமாங்க தினமும் அன்னக்கிளி சூரியன் உதிப்பதற்கு முன்னரே எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டுவிடுவாள். அவளுக்கும் சூரியனுக்கும் யார் முதலில் எழுவது என்ற போட்டி நடக்கையில் தினமும் வெற்றி பெறுவது நமது அன்னக்கிளிதான். 

“அன்னம்…. அன்னம்….” என்று வீட்டின் உள்ளே இருந்து அழைத்தார் அன்னத்தின் அருமைத் தந்தை வேலுச்சாமி. தந்தை அழைத்ததும் சூரியனுக்கு பாய் சொல்லிவிட்டு உள்ளே சென்றாள். அங்கே நின்ற தந்தையை பார்த்து முறைத்தாள். 

“அப்பா… நான் உங்ககிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன் சமையல் கட்டுப்பக்கம் வர வேணாம்னு… ஏன்பா கேக்க மாட்டேங்கிறீங்க?” என்று கோபமாய் கேட்ட மகளிடம் தனது கையால் போட்ட தேநீர் கோப்பையை அவளிடம் நீட்டியவாறு, “என்ன செய்ற கண்ணு எனக்கு அப்பிடியே பழகிருச்சு.. சரி நீ இதை குடிச்சிட்டு வேலையை பாரு… நான் தோட்டத்து வரைக்கும் போயிட்டு வர்றேன்… நேரத்துக்கு காய்கறியைப் பறிச்சாத்தான் சந்தைக்கு அனுப்பலாம்…”என்றார். 

“சரிங்க அப்பா நீங்க தோட்டதுக்குப் போங்க.. நான் வீட்டில இருக்கிற வேலையை முடிச்சிட்டு வந்திடுறன்..”

“சரி அன்னம்..” என்று சொல்லிவிட்டு வேலுச்சாமி தனது காய்கறித் தோட்டத்திற்குச் செல்ல, அன்னக்கிளி தனது வேலையை செய்ய ஆரம்பித்தாள். 

………………..………………..………………

“அம்மா மிஸ் யூ சோ மச்… சீக்கிரமாசீக்கிரமா நான் எக்ஸாமை முடிச்சிட்டு வந்திடுறன்… அதுவரைக்கும் உங்க பெரிய மகனை சமாளிச்சுக்கோங்க…”

“ரோகித் அப்பாவை தொல்லை பண்ணாம நல்ல புள்ளையா இருக்கணும்… டைமுக்கு சாப்டணும்… அம்மா இல்லைனு வீட்டிற்கு லேட்டா வரக்கூடாது…” என்று மகனுக்கு அறிவுரைகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தார் பார்வதி. 

இவர்களின் பேச்சில் கலந்துகொள்ளாமல் தனது பிஸ்னஸ் விஷயமாக பேசிக் கொண்டு இருந்தான் கிருத்திஷ். அவனிடம் வந்த ஜனகன், “கிருத்திஷ்..” என்றார். தந்தையை அருகில் பார்த்ததும் போனில் இருந்தவரிடம் பின்னர் அழைப்பதாக சொல்லி போனை வைத்து விட்டு, “சொல்லுங்க டாட்..” என்றான். 

“கிருத்திஷ் அம்மாவை பத்திரமா பார்த்துக்க… அவ ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் இந்தியா போறா.. அவ என்னதான் இங்க சந்தோஷமா இருந்தாலும் இன்னைக்கு அவ முகத்துல இருக்கும் இந்த சந்தோஷம் தனிதான்… சொந்த நாட்டை விட்டு வெளிநாடுகள்ல இருக்கிறவங்க தங்களோட நாட்டுக்கு போகும் போது ஏற்படுற சந்தோஷத்தை வார்த்தையால் சொல்ல முடியாது… பார்வதி எவ்வளவு சந்தோஷமா இப்போ உங்ககூட இந்தியா வர்றாளோ அதே சந்தோஷத்தோட இங்க திரும்பி வரணும்… அவளை பார்த்துக்க.. எந்த இடத்திலேயும் உன்னோட அம்மா மனசு கஷ்டப்படுற மாதிரி நடந்துக்காதே…” என்றார். அவருக்கு தனது தலையசைப்பையே பதிலாகக் கொடுத்தான். பின்னர் ப்ளைட்டிற்கான அழைப்பு வந்ததும் இருவரும் உள்ளே சென்றனர். 

………………..………………..………………

வேலுச்சாமி தோட்டத்தில் இருக்கிற காய்கறிகளை எல்லாம் அங்கே வேலை செய்பவர்களின் உதவியுடன் பறித்துக் கொண்டு இருந்தார். வெண்டைக்காய், கத்திரிக்காய், தக்காளி என்று ஒவ்வொன்றையும் தனித்தனியாக பறித்துக் கொண்டு இருந்தனர். சிறிது நேரத்தில் அன்னம் அவருக்கு சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வந்தாள். 

“அப்பா வாங்க சாப்பிடலாம்..” என்றதும், அவரும் அருகில் இருந்த வாய்க்காலில் கை கால்களை கழுவி விட்டு அன்னம் அமர்ந்து இருந்த ஆலமரத்திற்கு அடியில் வந்தார். 

“ஏத்தா அன்னம் என்ன அப்பனுக்கு மட்டுமா சாப்பாடு எங்களுக்கு இல்லையா?” என்று ஒருவர் கேட்க, “உங்களுக்கு இல்லாததா மாமா? நீங்களும் வாங்க சாப்பிடலாம்..” என்றாள். 

“இல்லை அன்னம் நான் இப்போதான் சாப்பிட்டு வந்தன்… உங்கிட்ட சும்மா விளையாடிப் பாத்தேன்… நீங்க சாப்பிடுங்க நான் வர்றேன்…” என்று சொல்லிவிட்டு அவர் அங்கிருந்து சென்றார். பின்னர் இருவரும் பேசிக் கொண்டு சாப்பிட்டனர். சாப்பிட்டு முடிந்ததும் தந்தையுடன் சேர்ந்து காய்கறிகளை பறிக்க ஆரம்பித்தாள் அன்னம். 

காய்கறிகள் எல்லாம் பறித்து முடிந்ததும் அதை வண்டியில் சந்தைக்கு அனுப்பி விட்டு, வேலுச்சாமியும் சந்தைக்குச் செல்ல, அன்னக்கிளி வீட்டிற்கு சென்றாள். 

அன்னம் வீட்டிற்கு வரும் வழியில் சிறுவர்கள் வீதியில் நின்று விளையாடிக் கொண்டு இருந்தனர். இவளைப் பார்த்ததும் அவர்களுக்கு குஷியாகி விட்டது. 

“இங்க பாருடா அன்னம் அக்கா வருது… வாங்க அவளை பயம் காட்டலாம்…” என்றான் ஒருவன். அதற்கு மற்றையவனோ, “டேய் வேணாம்டா அந்த அக்கா பாவம்…”

“சும்மா இருடா உனக்கு வர விருப்பமில்லனா நீ போ நாங்க அத பயம் காட்டிட்டு வந்திடுறம்…” என்றவர்கள் அன்னத்தைப் பார்த்து, “ஐயோ அக்கா பாம்பு… உன்னோட காலுக்கு பக்கத்துல பாம்பு…” என்று கத்த, அன்னத்திற்கு தூக்கிவாரிப் போட்டது. அங்கேயே நின்று அழத் தொடங்கி விட்டாள். 

அன்னம் மிகவும் பயந்த சுபாவம் உள்ளவள். அவளுக்கு பயம் அதிகமானால் அழ ஆரம்பித்து விடுவாள். சின்ன விஷயத்திற்கும் பயப்படக் கூடியவள். வேலுச்சாமி சத்தமாக பேசி திட்ட ஆரம்பித்தாலும் உடனேயே அழுதிடுவாள். அதனாலேயே வேலுச்சாமி அவளை எதுவும் சொன்னது கிடையாது. தாய் இல்லாத பிள்ளை என்று மிகவும் பாசமாக வளர்த்து விட்டார். 

அன்னம் அழும் சத்தம் கேட்டு அங்கே வந்த ஒரு பெண், “அன்னம் என்னாச்சு எதுக்கு அழுற?” என்றார். 

“பாம்பு…. பாம்பு…” என்றாள் அழுதவாறு. அதைப் பார்த்து சிரித்துக் கொண்டு நின்ற சிறுவர்களைப் பார்த்ததும் அந்தப் பெண்ணிற்கு புரிந்து விட்டது இது யாருடைய வேலையென்று, “டேய் ஒழுங்கா இங்க இருந்து போயிடுங்க.. எப்போ பாரு அன்னத்தை வம்பிழுக்கிறதே உங்களுக்கு வேலையா போச்சு…” என்று அவர்களை அங்கிருந்து விரட்டி விட்டு அன்னத்தை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார். 

சந்தையில் காய்கறிகளை நியாயமான விலையில் வியாபாரிகளிடம் மொத்தமாக விற்று விட்டு, வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கே வந்த அவரின் நண்பர் ஒருவர், “என்ன வேலு எப்பிடி இருக்க?”

“அடடே கணபதி நான் நல்லா இருக்கேன்.. நீ எப்பிடி இருக்க? ஊர்ல இல்லைனு கேள்விப்பட்டேன்…”

“ஆமா வேலு என் பொண்ணோட பொண்ணுக்கு காது குத்து இருந்திச்சு.. அதுக்கு ஊருக்கு போயிருந்தேன்.. நேற்றுதான் வந்தேன்..” 

“அப்படியா ரொம்ப சந்தோஷம் கணபதி.. மல்லிகா அவ குடும்பம் எல்லாரும் நல்லா இருக்கிறாங்கதானே..”

“எல்லோரும் நல்லா இருக்கிறாங்க.. ஏன் வேலு நான் கேட்கிறேன்னு தப்பா நினைக்காத என் பொண்ணு மல்லிக்கும் உன் பொண்ணு அன்னத்தோட வயசுதானே… என் பொண்ணு கல்யாணம் பண்ணி இப்போ அவளுக்கு ஒரு குழந்தையே வந்திட்டு.. நீ அன்னத்திற்கு வரன் ஏதும் பாக்கலயா?” என்று கணபதி கேட்டதும் வேலுச்சாமியின் முகம் கவலையில் வாடியது. 

“கணபதி நானும் அன்னத்திற்கு பார்க்காத வரன் இல்லை.. எல்லாமே ஏதோ ஒரு காரணம் சொல்லி விடுபட்டே போகுது.. என்ன செய்றது என்று தெரியல… எனக்கும் என் பொண்ணுக்கு காலா காலத்தில கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசைதான்.. என்ன செய்ற அதுக்கும் காலம் வரணும் போல…”என்றார் வருத்தம் நிறைந்த குரலில். அவரது தோளைத் தட்டிய கணபதி, “இங்க பாரு வேலு.. எது எது எப்பப்போ அமையணும்னு நம்ம முருகன் நினைக்கிறானோ அப்போதான் அதை நடத்தி வைப்பான்.. நீ கவலைப்படாத.. அன்னத்திற்கு அவளோட மனசுக்கு ஏற்றமாதிரி நல்ல வாழ்க்கை அமையும்..” என்று சொல்லி வேலுச்சாமியை ஆறுதல்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றார் கணபதி. 

…….………………..………………..……….. 

விமான நிலையத்தில் வந்து இறங்கி, அங்கிருந்த ஃபார்மலிட்டீஸை முடித்து விட்டு வெளியே வந்தனர் கிருத்திஷிம் பார்வதியும். வெளியே வந்ததும் பார்வதியின் கண்கள் மகிழ்ச்சியில் கலங்கின. “எத்தனை வருடங்கள் எனது தாய் நாட்டின் மண்ணை மிதித்து, தாய் நாட்டில் வீசும் காற்றை நன்றாக மூச்சிழுத்து சுவாசித்தார். தாயின் கலங்கிய கண்களைப் பார்த்த கிருத்திஷ், “மாம் வொய் ஆர் யூ க்ரையிங்?” என்றான். 

“நத்திங் கிருத்திஷ்… என்னோட நாட்டிற்கு மறுபடியும் வந்தது என் அம்மாகிட்டையே வந்தது போல இருக்கு… இப்போ என்னோட உயிர் போனாலும் எனக்கு ரொம்ப சந்தோஷம்..” என்றவரை முறைத்தவன், “மாம் எதுக்கு இப்போ இப்பிடி எமோஷ்னலாகிட்டு இருக்கிறீங்க?”

“நான் சொல்றதோ, என்னோட இந்த பீலோ உனக்குப் புரியாது.. சரி வா போகலாம்…” என்றவர் மகனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து ஒரு டாக்ஸியில் அழைத்து பயணத்தை தொடர்ந்தனர். 

டாக்ஸியில் செல்லும் போது தனது சின்ன மகனுக்கு அழைத்தார். 

“ஹாய் கண்ணா… நாங்க பத்திரமா இந்தியா வந்திட்டோம்… ஊருக்கு போயிட்டு இருக்கோம்…”என்றார். 

“வாவ் மம்மி ஃபைனலி நீங்க இந்தியா போயிட்டீங்க.. சூப்பர் மாம்.. பட் நான் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்…”

“நானும்தான் உன்னை ரொம்ப மிஸ் பண்றன்…” என்றவர் ஜனகனுடனும் பேசி விட்டு போனை வைத்தார். போனை வைத்து விட்டு கிருத்திஷைப் பார்க்க, அவனோ காரில் சீட்டில் தலைசாய்த்து படுத்திருந்தான். மகனை பார்த்து பெருமூச்சு விட்டவர் வெளியே பார்க்க தொடங்கி விட்டார்.

(தொடரும்..)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!