எல்லோருக்கும் தலையாட்டியவள், ஒரு வழியாக அவர்களிடம் விடை பெற்று கல்லூரி பேருந்தில் ஏறினாள்.
கல்லூரியில் இருந்து பேருந்து கிளம்பிய கொஞ்ச நேரத்திலே, ஆட்டம் பாட்டம் என்று அமர்க்களம் பட. இவளும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புக்கு வந்தாள்.
********************
யுகித் டூயட் பாடலுக்கு வித்தியாசமாக ஒரு தீம் மாதிரி ரெடி பண்ணி இருந்தான்.
முதலில் இருவரும் ஒரு போட்டி பாட்டு பாடுவது போலவும், பிறகு காதலில் உருகி யுகித் பாடுவது போலவும், வெண்ணிலா ஏற்றுக் கொண்டு பாடுவது போல் ஒரு பாடலும், பிறகு ரெண்டு பேரும் சேர்ந்து டூயட் மாதிரி ஒரு பாட்டு பாடுவது போலவும் ரெடி செய்து வைத்திருந்தான்.
இந்த தீம் வித்தியாசமாக இருக்க. போட்டியில் முதல் பரிசை தட்டி தூக்கினார்கள் இருவரும்.அனைவரும் அவர்களை மனதார வந்து பாராட்டினார்.
யுகித்தின் குரலும் பார்வையும் அவளை என்னமோ செய்தது.
‘ இது நல்லதுக்கல்ல.’ என்று எண்ணியவள்,மனது கட்டுப்படுத்தி, முடிந்த அவனிடமிருந்து விலகிருந்தாள்.
அவளது அம்மா கூறியது போல், வெண்ணிலா முடிந்தவரை மேடம் அருகே இருந்தாள்.
அதோ இதோ என்று போட்டி முடிந்து நாளைக்கு கிளம்ப வேண்டும் என்றிருக்க. அன்று இரவு அவர்கள் தங்கி இருந்த இடத்தில் கேம்ப் பயர் ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆட்டம், பாட்டம் என்று எல்லோரும் கொட்டமடிக்க. அதில் கலந்துக் கொள்ள முடியாமல், அவஸ்தையுடன் இருந்தாள் வெண்ணிலா.
கொஞ்ச நேரம் அங்கிருந்த அவளால் அதற்குப் பிறகு இருக்க முடியாமல் எழுந்து செல்ல.
அவளை பின்தொடர்ந்த யுகித்தோ,”வெண்ணிலா!” என்றழைக்க.
திடுக்கிட்டுத் திரும்பினாள் வெண்ணிலா.
“நான் தான் வெண்ணிலா! எதுக்கு பயப்படுற. நானும் அப்போதுலிருந்து பார்க்குறேன். ஒரு மாதிரியா இருக்க? என்னாச்சு?” என்று வினவ.
“அது ஒன்னும் இல்ல சீனியர்.”
“என்னன்னு சொல்லு வெண்ணிலா! நாம தான் இப்போ ஃபிரண்ட்ஸ் ஆயிட்டோமே.”
“ அது வந்து.” என்று வெண்ணிலா தயங்கிக் கொண்டே இருக்க.
“உனக்கு ஏதோ பிரச்சினைன்னு தோணுது. என்கிட்ட சொல்லலனாலும் பரவாயில்ல. மதன் சாரை வரச் சொல்றேன். அவர் கிட்ட சொல்றியா?” என்று வினவ.
“அதெல்லாம் வேண்டாம்.” என்று வேகமாக மறுத்தாள் வெண்ணிலா .
“ வெண்ணிலா நீ இப்படி அவஸ்தப்படுறதைப் பார்த்தா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ப்ளீஸ் எதுவா இருந்தாலும் சொல்லு.” என்று கெஞ்சினான் யுகித்.
“ எனக்கு பீரியட்ஸ். எனக்கு இருந்த டென்ஷன்ல ப்ரிப்பேர்டா வரலை. எனக்கு நாப்கின் வேணும்.” என்று எங்கோ பார்த்துக் கொண்டு கூற.
“இது தானே. நான் வாங்கிட்டு வர்றேன்.” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே மழை பெய்ய.
எல்லோரும் அவசர, அவசரமாக அவரவர் அறைக்குச் சென்றனர்
“மழையில் நனையாத வெண்ணிலா. உள்ளே போ. நான் வந்ததும் உனக்கு கால் பண்றேன்.”
“ இந்த மழையில நீங்க எங்க எப்படி போவீங்க.” என்று வெண்ணிலா தயங்க.
“ அது பரவால்ல நான் பாத்துக்குறேன்.” என்றவன் அவன் அணிந்திருந்த ஹுடியில் உள்ள குல்லாவை தலையில் போட்டுக் கொண்டு ஓடினான்.
சற்று நேரத்திலே திரும்பி வந்த யுகித்தோ நன்கு நனைந்திருந்தான்.
“அச்சோ! சீனியர்… என்ன இப்படி நனைச்சிருக்கீங்க.”என்று வெண்ணிலா பதற.
“ இதெல்லாம் ஒன்னுமில்லை.” என்ற யுகித், அவளுக்காக வாங்கி வந்ததைக் கொடுத்துவிட்டு நாகரிகமாக அங்கிருந்து விலகிச் சென்றான்.
“தேங்க்ஸ் சீனியர்.” என்று சத்தமாக வெண்ணிலா கூற.
திரும்பி பார்த்தவனோ,” தேங்க்ஸ் எல்லாம் வேணாம்.” என்றான்.
“வேற என்ன வேணும் சீனியர்.” என்று கேட்பதற்குள் அவளுக்கு படபடவென நெஞ்சம் அடித்துக் கொண்டது.
“நம்மதான் பிரெண்ட்ஸ் ஆகிட்டோம்ல. அதனால என்ன பேர் சொல்லி கூப்பிடணும். எங்க யுகித்துனு கூப்பிடு.” என்று கூற.
“அது நீங்க என்ன விட பெரியவர்…” என்று அவள் தயங்க.
“இந்த கதையேல்லாம் வேணாம்.என்ன பார்த்தா இரண்டு பிள்ளைகள் பெத்த அங்கிள் மாதிரியா இருக்கு?உன்ன விட இரண்டு வருஷம்தான் பெரியவன்.ஸோ இப்பவே நீ என்ன பேர் கூப்பிடுற.”என்று அவளை வற்புறுத்தி யுகித் என்று அழைக்க வைத்தான்.
அவளது மென்மையான குரலில் அவனது பெயரைக் கேட்டதும், அவனது முகமும் மென்மையை தத்தெடுக்க புன்னகையுடன் அங்கிருந்து கிளம்பினான்.
வெண்ணிலாவின் முகமும் விகசித்தது. ஏதோ ஒரு உணர்வு அவளை ஆட்டிப் படைக்க, அரைகுறையாக உறங்கினாள்.
மறுநாள் பேருந்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் யுகித் இயல்பாக இருக்க.
அந்த செயல் அவளுக்கு இதமாக இருந்தது. அவன்பால்சென்ற மனதை தடுக்க இயலாமல் தவித்தாள்.
********************
பெங்களூரில் இருந்து வந்த பிறகு வெண்ணிலா, இரண்டு நாட்களாக அவனைத் தேட.
அவள் கண்ணில் அவன் அகப்படவே இல்லை.
‘ யுகித்துக்கு என்னாச்சு? ஏன் காலேஜுக்கு வரல.மழையில வேற நனைஞ்சாரே. உடம்புக்கு முடியலையோ.’ என்று குழம்பித் தவித்தாள்.
“ஏண்டி இப்படி இருக்க?” என்று கேட்ட தோழிகளிடமும், “ஒன்னும் இல்லையே!” என்றுசமாளித்தாள் வெண்ணிலா.
“பெங்களூருக்கு போறதுக்கு முன்னாடி தான் டென்ஷனா இருந்த. இப்ப என்ன ஆச்சு? நாங்க ஏதும் ட்ரீட் கேட்டு விடுவோம்னு முகத்தை இப்படி வச்சிட்டு இருக்கியா?” என்று கேலி செய்தாள் மஹதி.
“ அதெல்லாம் இல்லடி!”
“அப்புறம் என்ன?” என்றாள் சபரீகா.
“அது வந்து… யுகித்தை இரண்டு நாளா காணுமேடி.” என்று கேட்க.
“என்னது யுகித்தா? எத்தனை நாளாடி இந்த கதை நடக்குது. சீனியர்னு கூப்பிட்டு இருந்தவ
இப்போ பேர் சொல்ற அளவுக்கு டெவலப் ஆயிட்டீயா. நாங்க உன்னை பச்சை புள்ளயா நெனச்சிட்டு இருக்கோம்.” என்று சபரிகா ராகம் பாட.
“ப்ச்! நீ நினைக்கிறது போல எல்லாம் இல்லடி. அவர் தான் பேர் சொல்லி கூப்பிடச் சொன்னார். அவ்வளவு தான்.”
“சரி இருக்கட்டும். அப்புறம் எதுக்கு இப்ப அவரை தேடிட்டு இருக்க.”
“அது வந்து பெங்களூர்ல எனக்கு ஒரு ஹெல்ப் பண்றதுக்காக மழையில வெளியே போனாரு. என்னாலதான் உடம்பு சரி இல்லையான்னு கில்டி பீலிங்கா இருக்கு. அவருக்கு ஒன்னும் இல்லைன்னு தெரிஞ்சிட்டா கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.”
“யுகாண்ணா எப்படி இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கணும் அவ்வளவு தானே.” என்ற நகுலன் தனது அண்ணனை தேடிச் சென்றான்.
சற்று நேரத்தில் வந்த நகுலன்,“ யுகாண்ணாவுக்கு லேசான ஃபீவர் தானாம். நாளைக்கு காலேஜுக்கு வந்துருவாராம்.” என்றுக் கூற.
வெண்ணிலாவிற்கு கண்கள் கலங்கியது.
“லூஸு ஜுரம் தானே சரியாகிடும். இதுக்கெல்லாமா வருத்தப்படுவாங்க.” என்று அவளது நண்பர்கள் பட்டாளம் சமாதானம் படுத்தினாலும், அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை.