Home Novelsநளிர் 8, 9

நளிர் 8, 9

by Vageeswari
5
(4)

நளிர் 8, 9

காலையில் அபி விரும்பி கேட்டாள் என்பதற்காக, வெள்ளை நிறத்தில் சிறு சிறு பாசிகளை ஒன்றாக கோர்த்துக்கொண்டிருந்தாள்.

 

“அங்கிள் பத்து மணிக்கு பேங்க் போகணும். ரெடியா இருந்துக்கோங்க லேட் பண்ணிடாதீங்க…” சகாயத்தை கிளம்ப சொல்லி இருந்த இடத்திலிருந்தே சத்தம் போட்டாள்.

 

அப்போது அவளுக்கு ஜெயராமன் போனில் அழைத்திருக்கவும், ‘தனக்கு வேலை போனது தெரியுமோ தெரியாதோ…’ என்ற யோசனையுடன் போனை எடுத்து காதில் வைத்தாள்.

 

“ஹான் சொல்லுங்க அங்கிள்…” தாட்சா தயங்கியவாறே கேட்டாள்.

 

“தாட்சா நான் உன்கிட்டே பைல் ஒன்னு தந்தேனே. பர்சனல்ன்னு சொல்லி. அதை சரிபார்த்துட்டீன்னா, விக்ரம்கிட்டே கொண்டு போய் தந்திடும்மா. மற்ற விவரங்கள் நான் நேரில் வந்து கேட்டுக்கறேன். இங்கே நான் ரொம்ப பிசி ஆகிட்டேன்ம்மா. இங்கே இருந்தாகவேண்டிய அவசியம் இப்போ…” அவர் படப்படப்பாய் சொல்லவே.

 

புரிந்து கொண்டவளாக, “சரிங்க அங்கிள். நான் இப்பவே போய் கொடுத்துட்டு வரேன் அவர்கிட்ட…” என்றவளாய் பாசிமணிகளை பத்திரமாய் பாக்சில் போட்டு மூடிவிட்டு அங்கேயிருந்து எழுந்தாள்.

 

அறையில் இருந்த பைலை கையில் எடுத்துக்கொண்டு தன்னுடைய துப்பட்டாவை எடுத்து தோளில் போட்டுக்கொண்டவள், ஹோட்டலை நோக்கிச் சென்றாள்.

 

போகும் வழியிலேயே அவளை எதிர்கொண்ட ராபர்ட், “நல்லாயிருக்கியாம்மா தாட்சா?…” கனிவுடன் அவளை விசாரிக்க.

 

“நான் நல்லாயிருக்கேன் தாத்தா. நீங்கதான் இளைச்சு போய்ட்டீங்க போலவே, என்ன விஷயம்?…” அவரை கூர்மையாய் பார்த்து அவள் கேட்க.

 

“அதுக்கென்னம்மா ஆயிரம் காரணம் கிடக்கு. கவலைக்கு காரணம் சொல்லவா வேணும்? என்னமோ விதிவிட்ட வழி…” ராபர்ட் சொல்லிவிட்டு, “நீ போனாலும் சாப்பாடு சரியான நேரத்துக்கு வந்துடுதும்மா… முதலாளி தங்கமான மனுஷர்…” ராபர்ட்டின் பேச்சில் சந்தோசமாய் தலையசைத்து விடைபெற்றவாறே நடந்தவள்.

 

‘நல்லவன்தான் என்னைத் தவிர எல்லோருக்கும்…” நினைத்தவாறே விக்ரமின் அறையை நோக்கி சென்றவள் அறைக்கதவை நாசுக்காக தட்டவே.

 

அவன் அனுமதிக்கவும் உள்ளே சென்றாள்.

 

அவளைக் கண்டதும் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன், “வேலை வேணும்னு கேட்க வந்தீங்களோ யவனதாட்சாயினி?…” தாடையை தடவியவாறே கேள்வியாய் அவளைப் பார்க்க.

 

அதற்கு பதில் சொல்லாது அவனுக்கு முன்னே வந்தவள், “அங்கிள் இந்த பைலை உங்ககிட்ட தரச் சொன்னார் …” அமைதியாய் சொல்லிவிட்டு அவள் விடைபெற முயலவும்.

 

“வச்சுட்டு போனா எப்படி? வந்து எக்ஸ்பிலைன் பண்ணிட்டு போங்க யவனதாட்சாயினி…” அவன் தன் பெயரை சொல்லும் விதத்தில் கடுப்பானாலும் அதை மறைத்துக்கொண்டு அவனுக்கு எதிரே அமர.

 

“அங்கே இருந்து சொன்னா எனக்கு புரியாது. இங்கே வாங்க…” கண்களில் அதுவரை இருந்த கிண்டல் போக அதில் புலியின் சீற்றம் குடிக்கொள்ள, அதைப் பார்த்தவளுக்கு லேசாய் நடுக்கம் வந்தது.

 

அவன் அருகே உள்ள இருக்கையை கொஞ்சம் தள்ளிப்போட்டு அதில் தயங்கியவாறே அமர்ந்தவளை முறைத்தவன் தன் நீண்ட கால்களால் அவள் அமர்ந்திருந்த இருக்கையை தன் அருகே இழுத்தான்.

 

அதில் கீழே விழப்போனவள், மேஜையைப் பிடித்து தன்னை நிலைப்படுத்தியவள், அவனைப் பார்க்க. பைலை ஒரு பார்வை பார்த்தவன், அதுபற்றி விளக்குமாறு சைகை செய்தான்.

 

“சார் வினு சார் நம்மகிட்ட டீல் வச்சிருக்கார் இந்த ப்ராஜெக்டில்…” என ஆரம்பித்தவள் தொடர்ந்து அவனிடம் அதுபற்றி பேசவே, அவர்களுடன் சிந்துஜாவும் சேர்ந்துகொண்டாள் அதுபற்றி பேச.

 

தாட்சாவுக்கு சிந்துஜாவும் உடன் சேர்ந்து கொண்டது வியப்பாக இருந்தது. தன் முகம் பார்ப்பதைக்கூட விரும்பாதவள் இன்று தன்னுடைய விளக்கத்தை பொறுமையாய் அமர்ந்து அதுவும் சுவாரஸ்யமாய் கேட்பது ஆச்சரியம் அளிக்கக் கூடியதாக இருந்தது.

 

அப்பொழுதுதான் அது நடந்தது. ஆம் அவனது கைகள் சும்மாயிருக்காமல் அவளது இடையை அழுந்தப் பற்றவும், பேச்சு நின்று திகைப்புடன் அவனை நிமிர்ந்து பார்த்தவளிடம், “ம்ம் சொல்லு தாட்சா. இன்ட்ரஸ்டிங்கா இருக்கு…” சிந்துஜா சூழ்நிலை புரியாது கேட்கவே.

 

‘ஸ்டேட்டஸ் பார்த்து திரும்பிக் கூட பார்க்காம போறவங்களுக்கு இன்னைக்கு என்ன ஆச்சு?… ரொம்பத்தான் ஆர்வம்…” அவளுக்கு ஆயாசமாய் வரவே.

 

தன் இடக்கரத்தால் அவனது கரத்தை தடுத்தவாறே ஆரம்பித்தாள்.

 

அவனோ அவளது கையை தட்டிவிட்டுவிட்டு தன் எல்லையை மீற முயன்றவனாய் அவளது மெல்லிடையில் தன் இருவிரல் கொண்டு அழுந்தக் கிள்ள. துடித்துப் போனவளுக்கு வலியில் கண்ணீரே வந்தது.

 

“சரி நீங்க பாருங்க… எனக்கொரு இம்பார்ட்டன்ட் கால் வந்திருக்கு…” சிந்துஜா அங்கேயிருந்து வெளியேற.

 

நிம்மதிப்பெருமூச்சுடன், பைலை மூடிவிட்டு தானும் வெளியேற முயன்றவளை வேகமாய் அணுகியவன், அவளது கைகளை பிடித்து இழுக்க. அவன் இழுத்த வேகத்தில் அவன் மார்பில் சாய்ந்தவள் அப்படியே கதறிவிட்டாள்.

 

“ஏன் இப்படியெல்லாம் நடத்துக்கறீங்க? என்னோட வேலையை நீக்கி என்னோட வாழ்வாதாரத்தை கெடுக்கறீங்க. இப்போ இப்படியெல்லாம் அசிங்கமா பிகேவ் பண்றீங்க… என்னாச்சு உங்களுக்கு…?”

 

தன்னிடம் கேள்வி கேட்பவளை வலுக்கட்டாயமாக தள்ளி நிறுத்தியவன், “அசிங்கம் யாருன்னு உனக்கே நல்லா தெரியும்டி…” என்றவனின் குரலில் அதிர்ந்து பின்னோக்கி அவள் செல்ல.

 

அவளை நெருங்கி சென்றவன், “நான் பார்த்த பெண்களிலேயே நீதான் ஸ்பெசல்டி…” அவன் இதழ்களில் சிரிப்பை அடக்கியவாறே சொல்ல.

 

திடுக்கிட்டு அவனைப் பார்த்தவளின் விழிகளில் வலியே மிகுந்திருந்தது. பிற பெண்களோடு அவனை கற்பனை செய்து பார்க்கவும் அவளால் இயலவில்லையே.

 

அவளை வெகு அருகில் நெருங்கியிருந்தவன், அவள் முகத்தின் அருகே குனிந்து, “உனக்கு யாரு ஸ்பெஷல்?, நானா இல்லை…” அவன் மேலே பேசுவதற்குள் அவளது கைபேசி அழைக்கவும்.

 

அவனிடம் இருந்து தப்பிப்பதற்காக அலைபேசியை காதில் வைத்தாள், “ஹலோ அங்கிள் சொல்லுங்க…” அவள் அவன் பேசக் கூடாதென சைகை காட்டியும் பிடிவாதமாகப் பேசவே.

 

“என்னாச்சும்மா ஏன் குரல் டல்லா இருக்கு…?” அவர் சந்தேகமாகக் கேட்கவும்.

 

“என் குரல் ஏன் டல்லாக இருக்குன்னா…” அவள் பேசுவதற்குள், அவன் போனைப் பிடுங்க வரவே, அவனிடமிருந்து வேகமாய் விலகி வேறுபுறம் சென்றவாறே, போனை காதில் அழுந்தப் பற்றிக்கொண்டாள்.

 

அவள் செயலில் அவனுக்கு கோபம் வரவும் டேபிளில் இருந்த பேப்பர் வெயிட்டை எடுத்து அவளை நோக்கி குறிபார்த்தான். அவள் மேல் அதை வீசுவதற்காய் கையை ஓங்கவும்.

 

அதில் மிரண்டு போய் விலகியவள்

அமைதியாக இருந்துவிட்டாள் எதுவும் பேசாது, “வேலையெல்லாம் நல்லாதானே போகுது தாட்சா? விக்ரம் உன்னை எதுவும் சொல்லலையே?” அவர் மீண்டும் கேட்கவும்.

 

இம்முறை அவனை தீர்க்கமாக பார்த்தவள், “அவர் என்னை வேலையை விட்டு தூக்கிட்டார் அங்கிள், உங்க ஹோட்டல்ல வேலை செய்யற அளவுக்கு எனக்கு தகுதி இல்லையாம். அப்புறம் உங்க ஹோட்டல் ஸ்வீட் சாப்பிடுற அளவுக்கு கூட எனக்கு வசதியில்லையாம்…” அவள் சொன்ன அடுத்த நிமிடமே.

 

எதிர்முனையில் போன் கட்டானது.

 

அவனது முகத்தில் தெரிந்த உக்ரத்தில் அவளுக்கு பயம் வந்தாலும் தன்னை சமாளித்துக்கொண்டவளாக, “அடுத்து உங்களுக்கு போன் வரும் பாருங்க…” ஆர்வமாய் குருகுருவென்று அவனது சர்ட் பாக்கெட்டையே அவள் பார்க்க.

 

விக்ரமிற்கு பயம் என்றெல்லாம் கிடையாது, அவன் தந்தை கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்ல வேணுமே என்ற அக்கறைதான். தாட்சாயினி இப்பொழுது பற்ற வைத்திருக்கும் நெருப்புக்கு சரியான பதில் சொல்லியாகணுமே.

 

அவளையே கோபமாய் முறைத்தவனை கண்டு கெத்தாக பார்வையிட்டவள், “நல்லா மாட்டிக்கிட்டீங்களா?…” என்று அவள் கேலியாய் சிரித்தும் வைத்தாள்.

 

சரியாய் ஜெயராமன் அவனை அழைக்கவும், அவளை உக்கிரமாக முறைத்தவன், “சொல்லுங்க டாட்…” என்றவனிடம் என்ன சொன்னாரோ தெரியவில்லை.

 

போனை கட் செய்தவன், “ம்ம்…! யவனதாட்சாயினிக்கு பெரிய இடத்தில் இருந்தெல்லாம் சிபாரிசு வருது போலவே…” என அவன் கேலியாய் கேட்கவே.

 

“பெரிய இடங்களுக்கு நிச்சயம் பெரிய மனசு இருக்கும். ஆனால் சிலருக்கு ரொம்ப குறுகிய மனசா இருக்கே…” அவள் போலி பவ்யத்துடன் அவனிடம் பதில் கூறினாள்.

 

“ஓ பதிலுக்கு பதில் பேசறீங்களோ யவனதாட்சாயினி?… சரி நாளையில் இருந்து வந்திடுங்க இங்கே… ஸ்டீபன் கூட சேர்ந்து ஒர்க் பண்ணு. மறந்தும் என் கண்ணுல பட்டுடாதே அப்புறம் சேதாரமாயிடுவே புரியுதா?…” அவளை எச்சரித்தவனாக திரும்பியவன் அவள் அறியாமல் ஒரு குறுஞ்சிரிப்புடன் அங்கே இருந்து விலக நினைக்க.

 

அவளோ வாய் அடங்காமல் அவனை வம்புக்கு இழுத்தாள். “இதோ பாருங்க… முதல்ல நீங்க என்னோட கண்ணுல பட்டுடாதீங்க. அப்புறம் உங்களுக்கும் சேதாரம் ஆகிடும் பார்த்துக்கோங்க… ஏன் நீங்க பண்றதை நான் பண்ணமாட்டேனா என்ன?…” அவள் சத்தமாய் கூற.

 

“நானும் ஆரம்பத்தில் இருந்து ஆன்டி ஹீரோவாக கூடாதுன்னுதான் பார்க்கிறேன். விட மாட்டேங்குறாளே குள்ளச்சி…” உதட்டை கடித்து வாய்க்குள் முனகியவனாக, அவளை நோக்கி வந்தவன்.

 

“என்ன தைரியம் இருந்தா நான் வேண்டாம்னு சொல்லியும். எங்கப்பா மூலமா வேலைக்கு வருவே?… அவ்வளவு தைரியமாடி உனக்கு?…” அவள் கைகளை அழுந்தப் பிடித்தவன்…

 

“சேதாரம் உனக்கா எனக்கான்னு போகப்போகத் தெரியும்டி… பார்க்கத்தானே போறே?…” அவளை விலக்கி விட்டு அவன் செல்ல.

 

வலிக்கும் மணிக்கட்டை தடவிவிட்டுக்கொண்டவள், “சும்மாயிருந்த சிங்கத்தை தட்டிவிட்டுட்டோமோ…” என்றவளாய் குழப்பமாய் பார்த்திருந்தாள் அவன் போன திசையையே…

 

அவளோ அவன் போன அடுத்த நிமிடம் நெஞ்சில் கைவைத்து நிம்மதி பெருமூச்சுவிட்டாள். கண்ணுல படவேண்டாம்னு சொல்லிட்டான். அந்த விஷயத்தில் தப்பிச்சோம் இவன் தொல்லை இல்லாம இருந்தா சரிதான்.

 

எப்படியோ திரும்ப இங்கேயே வேலை கிடைத்த நிம்மதி அவளுக்கு. பின்னே குழந்தைகளை விட்டுட்டு அங்கேயும் இங்கேயும் செல்வதா என்று மட்டும் அல்லாமல் இங்கே தவிர்த்து வேறு இடங்களில் வேலை செய்து அவளுக்கு பழக்கமும் இல்லையே…! இருபத்துமூன்று வயதில் இங்கே வேலைக்கு சேர்ந்தாள், இன்று வரை எந்த தொந்தரவும் இல்லாமல் சென்றது.

 

ஒரு பெருமூச்சுடன் அறையில் இருந்து வெளியேறியவளை தன் தட்டில் ஒரு குலாப்ஜாமுனுடன் எதிர்கொண்டான் ஸ்டீபன்.

 

போகிற போக்கில், “அழகிக்கு திரும்ப வேலை கொடுத்துட்டேன். பாவம் பார்த்து” என விக்ரம் சென்றிருக்கவே.

 

அவளை பார்க்க கிளம்பிவிட்டான்,

“ஹேய் அழகி…! உன்னோட ஸ்பெஷல் ஸ்வீட்டும் வந்தாச்சு. இந்த பிருந்தாவனத்து அழகியும் திரும்ப வந்தாச்சு…” அழகான புன்னகையோடு அவள் அருகில் அவன் வரவும்.

 

“உன்னை ஸ்டீபன் சொல்றதை விட ஹிருத்திக் சொல்லலாம். அப்படியே அவனை மாதிரியே இருக்க போ…” இனிப்பை சுவைத்தவாறே அவனைப் புகழ.

 

“ம்ஹும்…! என்னம்மா அழகி! ஒரு குலாப்ஜாமுனுக்காக என்னை ஹிருத்திக் ஆக்கிட்டேயே… என்றவன் வாய்விட்டு நகைக்க.

 

மனம் ஓரளவு நிம்மதியானதால் அவளும் அவனுடன் இணைந்து வாய்விட்டே நகைக்க. தன் அறையில் இருந்து இதை பார்த்திருந்த சிந்துஜாவுக்கு அவர்கள் சிரிப்பை பார்த்த கோபமா அல்லது தாட்சாவின் மீது உள்ள வெறுப்பா தெரியவில்லை அவர்களையே வெறித்தாள்.

 

தாட்சாவிடம் பேசிக்கொண்டிருந்தவனுக்கு தன் முதுகை குத்தும் அந்த பார்வை புரிந்ததுதான் என்றாலும். அவனால் எதுவும் செய்ய இயலாதே.

 

சிந்துஜாவின் மீது அவன் மனதில் அளவற்ற காதல் இருக்கிறதுதான், ஆனால் அவளது செல்வநிலையும். தற்போது கணவனை இழந்த நிற்கும் நிலையில் தான் போய்க் கேட்டால், இந்த வாய்ப்பை தான் பயன்படுத்திக் கொள்வது போலாகும். அதனால் செய்வதறியாமல் மௌனம் சாதித்தான்.

 

அதுமட்டும் அல்ல சிந்துஜாவிற்கு அவளை விட வசதிவாய்ப்பில் குறைந்தவர்களுடன் சரிக்கு சமமாக நின்று பேசக்கூடப் பிடிக்காது. இதை ஸ்டிபன் நிறைய முறை நேரில் பார்த்திருக்கிறான்.

 

அப்படியிருக்கையில் எந்த தைரியத்தில் அவளிடம் தன் காதலை வெளிப்படுத்துவான். ஒரு பெருமூச்சுடன் தாட்சாவிடம் பேச ஆரம்பித்தான்.

 

ஆம் சிந்துஜாவிற்கு திருமணம் ஆகி தற்போது கணவர் ஒரு விபத்தில் இழந்த நிலையில் தன் தந்தை வீட்டிற்கே வந்தும் விட்டாள்…

 

திரும்ப கணவர் வீட்டிற்கு அவள் செல்லவும் விரும்பவில்லை. அதனால் ஜெயராமனுக்கு உதவியாய் இருக்கிறாள்.

 

அவர்களையே பார்த்திருந்தவளுக்கு அவர்கள் பேச்சும் பார்வையும் அத்தனை உவப்பனதாக இல்லை. முகத்தை சுளித்தவள், வேகமாய் அங்கிருந்து நகர்ந்தாள்…

அதை இங்கிருந்தே உணர்ந்தவனுக்கு பெருமூச்சுதான் வந்தது.

 

தாட்சாயினியை புன்னகையோடு பார்த்தவன், “நானும் உன்னோட வெயிட்டை ஏத்தணும்னு என்ன என்னவோ செய்து தரேன். ஆனால் கொஞ்சம் கூட மாறலையே அழகி நீ…” அவன் குறும்பாய் கூறவே.

 

“அதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் இருக்கணுமே மிஸ்டர் செஃப்…” அவன் தலையில் உள்ள தொப்பியை தட்டி விட முயன்றவளாக கேலி செய்தாள்.

 

அவனுக்கு போன் வரவும், “சரி அழகி நீ கிளம்பு. குட்டீஸ்க்கு ஸ்கூல் விடுமுறை விடுறாங்க போல. ஏதேனும் விசேஷமா?…” ஸ்டீபன் கேட்கவும்.

 

“எனக்கும் ஆசைதான்ப்பா. அங்கிள்தான் பசங்க இங்கேயே இருக்கட்டும். நான் வேலை கத்துக்கொடுக்கறேன்னு சொல்லிட்டார். அவரை மீறி என்னால எதுவும் செய்ய முடியாது. பார்க்கலாம்…” அவனை பார்த்து சோம்பலாக சிரித்தவாறே கூறினாள்.

 

“அவர் என்னவோ திட்டம் போடறார். நானும் வேற ஒன்னு நினைக்கிறேன். ஆனால் கடவுள்ன்னு ஒருவர் இருக்காரில்லையா?…” என்றவள்.

 

“சரி நான் கிளம்பறேன். நாளைக்கு பார்க்கலாம். எனக்கு ரசகுல்லா வேணும் நாளைக்கு…” என்றவளாய் அவனுக்கு உரிமையாய் ஆர்டர் போட்டுவிட்டு கிளம்பிவிட.

 

தளர்வாய் செல்லும் அவளையே பரிவுடன் பார்த்திருந்தான் ஸ்டீபன்.

 

*****

அன்று காலை எட்டு மணிக்கே ஜெயராமன் போன் செய்து அழைத்திருக்கவும். அவசரமாய் தயாராகி ஒரு லாங் ஸ்கர்ட் டாப்ஸ் அணிந்து கொண்டு அவரைப் பார்க்கச் சென்றாள்.

 

வேகமாய் அவரது அறைக்குள் சென்றவள் இடுப்பில் கைகளை ஊன்றி கோபமாய் அவரை முறைத்தாள், “அதான் பத்து மணிக்கு வருவேனே. அப்புறம் என்ன அவசரம் உங்களுக்கு?… இன்னும் என்னோட ரெஸ்ட்டாரெண்ட் வேலையை முடிக்கலை நான் அப்படி அப்படியே போட்டுட்டு வந்திருக்கேன்…” அவள் சத்தம் போடவே.

 

அவளை தனக்கு வெகு அருகில் அழைத்து, இருக்கையை இழுத்துப்போட்டு அதில் அவரை அமரச் சொன்னவர், “நம்ம ஊர்ல புதுசாய் ஒருத்தன் மசாலா பூரி கடை வைச்சிருக்கானாம் உனக்குத் தெரியுமா?…” அவர் மெதுவாய் ரகசியமாய் கேட்க.

 

அவளுக்கும் ஆர்வத்தில் கண்கள் விரிய, “அப்படியா நான் கவனிக்கவே இல்லையே எங்கே அங்கிள்?…” வாயெல்லாம் சிரிப்பாய் அவள் கேட்கவே. உண்மையில் விக்ரம் வருவது தெரிந்ததில் இருந்து எதையும் கவனிக்கவில்லை அவள்.

 

“ப்ச். இப்போவெல்லாம் உனக்கு விழிப்புணர்வே இல்லை தாட்சா. மசாலாப்பூரி நம்ம வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம், அதை கோட்டை விட்டுட்டே பாரு. எனக்கே நம்ம ஸ்பை சொல்லித்தான் தெரியும்…” என்றவராய் அவள் தலையில் ஒரு கொட்டு வைக்க.

 

“ஸ்ஸ்ஸ்! ஆஆ வலிக்குது அங்கிள்…” தலையை தடவியவளாய் அவரை முறைத்தவள்.

 

“பையனை பெத்திருந்தா கவலை இல்லை. ஆனால் நீங்க பெத்து வளர்த்தியிருக்கறது ஒரு ராட்சசன் ஆச்சே…”

 

அவரது தோள் மீது ஒரு அடி வைத்தவளை போலியாய் முறைத்தவாறே, “என் பையன் உனக்கு ராட்சசனா? வரட்டும் சொல்றேன்…” அவர் சொல்லவே.

 

“தாராளமாய் சொல்லிக்கோங்க. அவரை கண்டு எனக்கு ஒன்னும் பயமில்லை. சரி மசாலா பூரி சாப்பிட எப்போ போலாம்னு சொல்லுங்க…” அவள் கேட்கவும்.

 

“இன்னைக்கே போயிடலாம்…” அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே.

 

அப்பொழுது அறைக்கதவை திறந்தவாறே, “டாட் காபி கூட குடிக்காம வந்துட்டீங்களாம், அம்மா கோபமாய் இருக்காங்க…” விக்ரம் பேசியவாறே அறைக்குள் வரவே.

 

தாட்சாவும் ஜெயராமனும் தேள் கொட்டிய திருடனாக முழிக்க ஆரம்பித்தனர்.

 

இருவரையும் சந்தேகமாக பார்த்த விக்ரம், ‘முழியே சரியில்லையே…’ அவர்களை அவன் உற்று உற்றுப் பார்க்க.

 

“அங்கிள் அந்த பைல் நான் சரிபார்த்து வைக்கிறேன். நீங்க டைம்க்கு பிக்கப் பண்ணிக்கோங்க சரியா?…” என்றவாறே அவள் நழுவ முயன்றாள்.

 

“தாட்சா பிளாக் ட்ரெஸ் போட்டுட்டு பாரு. அதான் ராசி…” ஜெயராமன் கூறவும்.

 

தலையாட்டியவாறே வேகமாக வெளியேறியவளை, தானும் வேகமாய் பின்தொடர்ந்து அங்கே இருந்த மறைவிடத்தில் இழுத்து நிக்க வைத்தவன், “என்னடி திரும்பவும் நாடகத்தில் நடிக்கப் போறீயா?…” என்றவன் கோபமாய் பார்க்கவும்.

 

“என் வாழ்க்கை, கனவுகள் எல்லாமே நாடகமாகிடுச்சு சேனா. அதனால தனியாய் நடிக்க வேற போகனுமா நான்…?” அவனை வலியுடன் பார்த்தவள், அவனை தாண்டிச் சென்றாள்.

 

9… நிஜமறிய மறுப்பதேனோ…

 

அன்று மாலை.

 

கருப்பு நிற சல்வார் அணிந்து அப்பாவுக்கும் அங்கிளுக்கும் தெரியாது வெளியே வந்தவள், சற்று தள்ளி நின்ற ஜெயராமனை பிக்கப் செய்து கொண்டாள்.

 

“அங்கிள் உங்க மகன் பார்த்தா டின்னு கட்டிடுவார். இப்போ இருக்கற சூழ்நிலையில் நமக்கு மசாலா பூரி அவசியமா?…” தாட்சா கேட்கவும்.

 

“அதெல்லாம் பார்த்துக்கலாம் நீ தைரியமாய் வா…” அவளை அழைத்து சென்றவர், “அதோ கடை அங்கே இருக்கு தாட்சா…” அவளை கையைப்பிடித்து இழுத்துச் சென்றார் ஜெயராமன்.

 

“என்ன பார்க்க போறீங்க? நீங்க இருக்கும் போதுதானே என்னை வேலையை விட்டு தூக்கினார்?…” தாட்சா விடாமல் கேட்கவும்.

 

“அதான் அவனை மிரட்டி திரும்ப வேலையை கொடுக்க வச்சிட்டேனே…” ஜெயராமனும் விடாமல் பேசவே.

 

“சமாளிக்காதீங்க அங்கிள். நீங்களாவது மிரட்டறதாவது…” இருவரும் வழக்கடித்துக்கொண்டே நடந்தனர்.

 

ஜெயராமன் மப்ளர் போட்டிருப்பதால் அடையாளம் தெரியாது போய்விடவே, தாட்சாவும் துப்பட்டாவை கொண்டு தலையில் பாதுகாப்பாய் சுற்றிக்கொண்டாள்.

 

கடையை அடைந்தவர்கள், அங்கே உள்ள நீள பெஞ்சில் அமர்ந்து கொள்ள, “அண்ணே ரெண்டு பிளேட் சூடாய் தாங்க பார்க்கலாம்…” தாட்சா சொல்லிவிட்டு எதிரில் பார்க்க.

 

அங்கே விக்ரமின் ஜீப் நின்றிருக்க, அதற்குள் அமர்ந்திருந்தவன் போனில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தான். அதைப் பார்த்துவிட்டவளுக்கு பகீர் என்றானது. ‘அடக்கடவுளே நல்லா சிக்கிட்டோம் போலயே…’

 

பயத்தில் உதட்டைக் கடித்தவள் ஜெயராமன் அருகில் தள்ளி அமர்ந்து,

“அங்கிள் நான் சொன்னவுடனே டக்குன்னு திரும்பி பார்க்காதீங்க. பின்னாடி சேனாவோட கார் நிக்குது…” தாட்சா ரகசியமாய் சொல்லவும்.

 

“அவன் கிடக்கிறான் விடும்மா. நீயும் நானும் இப்போதைக்கு மாறுவேசத்தில இல்ல இருக்கோம்…?” ஜெயராமன் அலட்சியம் போல சொல்லவே.

 

“ஜெயராமனின் உருவத்தைப் பார்த்தாலே யாவருக்கும் நன்கு தெரிந்து விடும். அவர் மிகப்பெரிய செல்வந்தர் என்று, விக்ரம் போலவே அவருக்கும் ஆளுமையான உருவம். அவர் உருவத்தைப் பார்த்தாலே மதிப்பும் மரியாதையும் தானாக வந்துவிடும். ஏன் இத்தனை செல்லமாக பழகும் தாட்சாவே அவர் கோபமாக இருக்கும் சமயங்களில் அருகே செல்லத் தயங்குவாள்.

 

“பூனைக்கு கண்ணை மூடினா உலகம் தெரியாதாம் அங்கிள். உங்க மகன் எமகாதகன், அவர்கிட்ட இருந்து தப்பிக்கறது கடவுள் அருள்தான்…” அவள் சொல்லும் பொழுதே கார் அந்த இடத்தில் இருந்து கிளம்பிவிடவே.

 

அதை ஓரக்கண்ணால் கண்டுவிட்டவர், “பார்த்தியா நான் சொன்னேன்ல?” அவர் வாய்விட்டு சிரிக்கவும்.

 

“அச்சோ அங்கிள் சிரிச்சே அவரை கூட்டிடாதீங்க…” அவர் வாயைப் பொத்தினாள்.

 

மசாலாப்பூரி வரவும் இருவரும் சாப்பிடலானார்கள். அப்போதைக்கு கூட்டம் இல்லாத காரணத்தால், அவர்கள் அருகில் அமர்ந்த கடைக்காரர், “என்ன சாரே இது உங்க மகளா?. உங்க வீட்டு ஜாடை போல பொண்ணு. என்ன கலர்தான் கொஞ்சம் மட்டு…” கடைக்காரர் இயல்பாக சொல்லவும்.

 

சுறுசுருவென கோபம் தலைக்கு ஏறவே, அவனிடம் சண்டைக்கு கிளம்ப தயாரானவளை, அடக்கிய ஜெயராமன், “மகள் இல்லைப்பா மருமகள். எங்க வீட்டுல எல்லோருமே சந்தனக்கலர் தெரிஞ்சுக்கோ…” ஜெயராமனும் சேர்த்து அவளை வம்பிக்கிழுத்தார்.

 

தாட்சா மருமகள் என்ற சொல்லில் அடங்கிப்போனாள். தெரியாமல் சொன்னார் என்றாலும் அது என்னவோ உண்மைதானே.

 

அதன் சுவையில் மெய்மறந்துபோன ஜெயராமன், தன்னிடம் இருந்த அடையாள அட்டையை எடுத்து கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு, “இந்த கார்டை கொண்டு போய் அந்த ஹோட்டல்ல கொடுத்தீன்னா, சுவையான உணவுகள் ஒரு வேளைக்கு ப்ரீயாவே சாப்பிட்டு வரலாம்…” அவர் சொல்லவே.

 

“அட போங்க சாப். அங்கே ஒரு இட்லியை இருபது ரூபாய்க்கு விக்குறாங்க. உங்களுக்கு வேணும்னா சொல்லுங்க. அதை விட நல்ல சாப்பாடா நான் போடறேன் உங்களுக்கு…” அவன் சொல்லவும் ஜெயராமனுக்கு கடுப்பாகிவிடவே.

 

கடைக்காரரிடம் சண்டைக்கு போக முற்பட்டவரை, தடுத்த தாட்சா, “வந்தது யாருக்கும் தெரியாம திருட்டுத்தனமா அங்கிள். சோ அடக்கி வாசிங்க. நாளைக்கு இவனைப் பார்த்துக்கலாம்…” தாட்சா அவரை எப்படியோ அழைத்து வந்துவிட்டாள்.

 

ஜெயராமனை ஹோட்டலில் விட்டுவிட்டு திரும்பும்போது சரியாய் மாட்டிக்கொண்டாள் விக்ரமிடம்.

 

காரின் அருகேயே விக்ரம் போகாது நின்றிருக்க, அதை அறியாமல் அவனை பார்க்காதவள் இயல்பாக நடந்து வரவும். தனக்கு முன் நீண்டிருந்த காலில் இடறி தடுமாறி விழப்போய் சமாளித்து நின்றாள்.

 

“எங்கே போய்ட்டு வந்தீங்க ரெண்டு பேரும்?…” விக்ரம் யோசனையாய் கேட்கவும்.

 

அவனை திருதிருவெனப் பார்த்திருந்தவளுக்கு என்ன சொல்வதெனப் புரியவில்லை. அவனுக்கு தெருவோரக் கடைகளில் சாப்பிடுவது பிடிக்காது. நிறைய தடவை இருவரையும் கண்டித்தும் அவர்கள் கேட்டபாடில்லை.

அதே தவறைத்தான் திரும்ப திரும்ப செய்கிறார்கள்.

 

அவள் எதுவும் பேசாது அவனையே திருட்டு முழி பார்த்திருக்கவும், “சொன்ன பேச்சை கேட்கறதேயில்லை நீங்க ரெண்டு பேரும். அது சுகாதாரமாக இருக்காதுன்னு சொல்லியும் அடங்கறது இல்லை…” கோபமாகவே விக்ரம் அவளைப் பார்க்க.

 

அவன் சொல்வதில் நியாயம் இருந்தாலும், அதென்ன ரோட்டோர கடைகள்ன்னா இளக்காரமா என்ன?… அவனை முறைத்தவாறே அவள் பேச முற்பட, அவளை கை உயர்த்தி பேசாதிருக்குமாறு தடுத்தவன், “உன் நியாயம் எனக்கு வேண்டாம். இனிமேல் இப்படி செய்யாதே. அவருக்கு இருக்குற நோய்கள் பத்தாதா?…” அவன் கேட்கவும்.

 

அவன் பேசுவதிலும் நியாயம் இருப்பது போலத் தோன்றவும்,

“சாரி இனிமேல் அப்படி செய்யமாட்டேன்… ஆனால் அவர்தான் ஆசைகாட்டினார், அங்கே போக…” அவள் தலைகுனிந்து மன்னிப்பு கேட்கவும்.

 

“வயசுக்கு தகுந்த ப்ரண்ட்ஸ் இன்னும் கிடைக்கலையா உனக்கு?…” அவன் கேட்கவும்.

 

நல்லதை சொல்றான்னு சாரி கேட்டு அமைதியாய் இருந்தா கொஞ்சம் ஓவராய்த்தான் போறார், கருவியவள், “உங்களுக்கு கூடத்தான் அப்படியொரு நண்பர் கிடைக்கலை நான் கேட்டேனா?…” என்றவள் அங்கே இருந்து கிளம்பிவிட.

 

அவளை இழுத்து காரில் அமரவைத்தவன், “அப்பா ஆசைகாட்டினார் கடைக்கு போனேன்னு சொன்னே. அப்போ நான் ஆசை காட்டினா என்கூட வருவியா?…” என்றவனின் கண்களில் அவளுக்கான தேடல் இருக்க. அவள் மீதான ஆசை அவன் கண்களில் அப்பட்டமாய் தெரியவே.

 

எச்சரிக்கையானவள் அங்கே இருந்து விலக முற்பட்டாள். ஆனால் அதற்குள் அவளை இறுக அணைத்திருந்தான்.

 

அவன் மார்பில் கைவைத்து தள்ளியவளாக, “விடுங்க என்னை…” விடுபட முயன்றாள்.

 

அவளை தன்னோடு சேர்த்தணைத்தவன், “விடறேன். எனக்கு இப்போ கிஸ் வேணும் கொடுத்துட்டு போய்க்கோ…” தன் ஒற்றை விரலால் அவள் மெல்லிதழ்களை வருடியவாறே அவன் கூறவே.

 

தனிமை, இருட்டு, அவன் அணைப்பு எல்லாம் அவளை லேசாய் தடுமாற வைத்தது என்னவோ உண்மைதான். ஆனாலும் தன்னை சமாளித்தக் கொள்ள முயன்றவளாக.

 

“சேனா ப்ளீஸ் இதெல்லாம் தப்பு, விடுங்க என்னை…” அவன் தொடுகையில் தடுமாறியவளாக அவள் சொல்லவும்.

 

“தப்பு சரியெல்லாம் நமக்குள் பார்க்கற நேரம் கடந்து போய்டுச்சுடி” மயக்கும் குரலில் கூறியவாறே அவள் முகம் பற்றியவன், அவள் இதழ்களை தன்வசமாக்கினான்.

 

“ஹா! சேனா ப்ளீஸ் வேணாம்…” அவன் இதழ்களுக்குள் மிகவும் பலவீனமாய் முனகியவளாக அவனிடம் இருந்து விடுபட முயன்றாள்.

 

“ப்ச் ! யவனா ப்ளீஸ் கொஞ்சம் அமைதியாய் இரு…” அவளை அடக்கியவன் அவள் மேனியில் தன் முத்தங்களை பதிக்க ஆரம்பிக்க.

 

அவளுக்கு பயம் பிடித்துக்கொண்டது, தோற்றுவிடுவோமோ என்று. அவனை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொள்ள துடித்த கைகளை கட்டுப்படுத்த முயன்றவளாய் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

 

கொஞ்சம் கொஞ்சமாக அவளது நிதானம் கெட, அவன் மார்பில் தன் முகம் புதைத்தவளை, தன்னோடு சேர்த்து இருக்கையில் சரித்தான்.

 

அவனுடைய மொபைல் அடித்தது. கிட்டத்தட்ட அவளை ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தவனுக்கு அந்த ஓசை காதில் விழுந்தது போல தெரியவில்லை. “யவனா லவ் யூ சோ மச்…” என்றவாறே அவள் இதழ்களில் மீண்டும் தொலைந்து போக முற்பட.

 

அவனை வலுக்கட்டாயமாக தள்ளிவிட்டவள், காரின் கதவைத் திறந்து வெளியேற முற்பட்டவளை அவன் பிடித்தது நிறுத்தி, “ஒருமுறை பயன்படுத்தியதை திரும்ப பயன்படுத்த மாட்டியோ?…”

 

திடுக்கிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு. ஒருநிமிடம் அவன் சிவந்த விழிகளை பார்த்து நடுக்கமே வந்துவிட்டது. அத்தோடு அவன் கேள்வியும் அவளை குத்திக்கிழிக்க அழுகையே வந்தது பலவீனமாய்.

 

“ப்ளீஸ் சேனா. இப்படி பேசியே என்னைக் கொல்லாதீங்க…” அழுதவாறே காரிலிருந்து இறங்கி ஓடினாள்.

 

அவள் போவதையே பார்த்திருந்தவனுக்குள் ஊசி குத்துவதைப் போன்ற வலி ஊடுருவியது.

 

*****

 

அடுத்தநாள் காலை வேகமாய் கிளம்பிக்கொண்டிருந்தாள் தாட்சா.

 

ஏற்கனவே அவன் எப்போடா சான்ஸ் கிடைக்கும், வேலையை விட்டு தூக்கலாம்னு இருப்பான். இதில் நாமும் லேட்டாப் போய் அதற்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று நினைத்தவளாய், நேரத்திலேயே கிளம்பினாள்.

 

சஜித்தின் நன்பர்கள் மதியம் வந்துவிடுவதாக கூறியிருக்கவே. மதியம் பர்மிஷன் கேட்டுட்டு வந்துவிடவேண்டும் என நினைத்து,

அவள் கிளம்பும் நேரம் பார்த்து சஜித்தின் நண்பர்கள் வந்துவிடவே.

 

பதற்றமாய் நெற்றியில் லேசாய் தட்டிக்கொண்டவள், ‘கடவுளே இவங்க மதியம்தானே வர்றேன்னு சொன்னாங்க… இப்போ வந்திருக்காங்க…’ அங்கிள்னா ஈசியா லீவ் சொல்லிக்கலாம். ஆனால் இப்போ வந்திருக்கவர்கிட்டே எப்படி லீவ் கேக்கறது?… அதுவும் நேத்துதான் போன வேலை திரும்ப கிடைச்சது…’ இப்படி பலவாறாக யோசித்து குழம்பியவாறு நின்றிருந்தவள் தன் நண்பர்களை வரவேற்காது அப்படியே நின்றிருக்கவும்.

 

“மாம் என்னோட பிரண்ட்ஸ் வந்திருக்காங்க பாருங்க. இன்வைட் பண்ணுங்க அவங்களை…” சஜித் அவளை உழுக்கவும்.

 

திடுக்கிட்டு தன் நினைவுக்கு வந்து, அவர்களை பார்த்து நட்பாய் ஒரு புன்னகையை வழங்கியவள், “வாங்க ஜெண்டில்மேன்ஸ். வாங்க பர்த்டே பாய் அன்வர்…” அவர்களை உள்ளே வருமாறு சொன்னவள்.

 

“சஜித் அவங்களை உட்கார சொல்லும்மா. நான் குடிக்க ஏதும் எடுத்துட்டு வரேன்…” என்றவள் அவர்களுக்கு ஜூஸ் எடுத்துவர உள்ளே சென்றுவிட.

 

சஜித்தை இழுத்து தன் அருகே அமர வைத்த க்ரிஷ், “எப்படிடா உங்க மாம் இவ்ளோ க்யூட்டா அழகா இருக்காங்க. உனக்கு எல்டர் சிஸ்டர் போலவே இருக்காங்க…” அவன் கேட்கவும்.

 

மென்மையாய் சிரித்த சஜித், “அவங்க எப்பவுமே கியூட்டாத்தான் இருப்பாங்க. சரி உட்காருங்க நான் போய் குடிக்க ஏதும் எடுத்துட்டு வரேன்…” என்றவாறே அம்மாவை தேடிச் சென்றான்.

 

அங்கே போனில் தாட்சா வாக்குவாதம் செய்து கொண்டிருந்தாள், “சார் ப்ளீஸ். எனக்கு இன்னைக்கு லீவ் வேணும். என் மகனோட பிரண்ட்ஸ் வந்திருக்காங்க. அவங்களை அப்படியே விட்டுட்டு என்னால வரவும் முடியாது…” கொஞ்சம் சத்தமாகவே சொல்ல.

 

எதிர்முனை என்ன சொன்னதோ தெரியவில்லை, “தாராளமாய் பிடிச்சுக்கோங்க சம்பளத்தை… இப்போ ஆளை விடுங்க…” கடுப்பில் போனை கட் பண்ணி வைத்தவள், “பெரிய இவர்னு நினைப்பு, லீவு கேட்டா சம்பளம் பிடிக்கறாராம். பிடிச்சா பிடிக்கட்டுமே…” கோபமாய் வெடுவெடுத்துக்கொண்டே.

 

திரும்பியவள் எதிரே சஜித் நின்றிருக்க, “சாரி மாம். மதியம்தான் வரேன்னு சொல்லியிருந்தாங்க. பார்த்தா இப்போ வந்துட்டாங்க. என்கிட்டே முன்கூட்டியே சொல்லவுமில்லை…” ஒன்பது வயது மகன் இந்த அளவு தன்மையோடு பேசுவதே பெரிது.

 

அதனால் லேசாய் புன்னகைத்தவள் சஜித்தின் கன்னத்தை தட்டி, “நீ போய் உன் நண்பர்களை கவனி சஜித். அம்மா பார்த்துக்கறேன் எல்லாத்தையும்…” என்றவளாய் சுறுசுறுப்பாய் செயல்படலானாள்.

 

எல்லோருக்கும் ஜூஸ் எடுத்துப்போனவள், ரெஸ்ட்டாரெண்டினுள் நுழைந்தவனை பார்த்துவிட, வேகமாய் தட்டை பசங்களிடம் கொடுத்துவிட்டு. அவனை தானாகவே எதிர்கொண்டாள்.

 

அவனுக்கு முன்பாக போய், தன் இருகைகளையும் நீட்டி தடுத்தவாறு நின்றவள், “அதான் நான் லீவுன்னு சொல்லிட்டேனே சார்…” அவள் சொல்லவும்.

 

“உன்னை தேடி வந்து பார்க்கற அளவுக்கு நீ ஒன்னும்

வி. ஐ. பி கிடையாதுடி. வழியை விடு. இங்கே ஏதோ பார்ட்டியாமே…” என்றவனாய் அவளை நகர்த்திவிட்டு செல்ல முயலவே.

 

“இதோ பாருங்க உங்ககிட்ட நான் அப்படி சொல்லி லீவுதான் கேட்டேன். உங்களை வரச்சொல்லை நான்…” அவனை அவள் மீண்டும் தடுக்க முற்படவே.

 

சகாயம் இதை யோசனையுடன் பார்த்தவாறே ஒரு வாடிக்கையாளரிடம் பேசிக்கொண்டிருந்தார்.

 

“இது ஒரு ரெஸ்ட்டாரெண்ட். இங்கே வர்ற வாடிக்கையாளர்களிடம் இப்படித்தான் வம்பு பண்ணுவியா?…” அவன் இடக்காய் கேட்டவாறே உள்ளே செல்ல முயல.

 

“உங்களை பார்த்தா வாடிக்கையாளரா வந்த மாதிரி எனக்கு தெரியலை. வம்பு பண்ண வந்த மாதிரியே இருக்கு. இதோ பாருங்க உங்க கூட பழகி நான் நாசமாய் போனது போகட்டும். என் பிள்ளைங்களுக்கும் என் கதி வரவேண்டாம்…” அவனை தடுத்தவாறே சொன்னவளின் கண்களில் நீர் நிறைந்திருந்தது.

 

அவளையே அவன் பார்த்திருக்க, அவனை ஆழ்ந்து பார்த்தவளாய், “அதுமட்டும் இல்லை. உங்களை மாதிரி ஹைகிளாஸ் ஆளுங்க கூட பழகறது எங்களுக்கு நல்லதும் இல்லை…” அவள் சொல்லவே.

 

அதற்குள் அவனை பார்த்துவிட்ட அன்வர், “ஹாய் அங்கிள் இங்கே வாங்க…” என்றழைக்க.

 

திகைப்பாய் அவனை பார்த்தாள் தாட்சா, “அப்போ நீங்க வந்தது…?” என்று இழுக்க.

 

தோள்களை ஸ்டைலாக குழுக்கியவாறு, “நிச்சயம் உன்னை பார்க்க வரலை. இப்போவாவது வழியை விடு…” அவளை எளிதாய் தூக்கி வேறு பக்கம் நிறுத்தியவன்.

 

இளையவர்களை நோக்கிச் சென்றான், அபி அவனையே சின்ன விழிகள் விரிய ஆச்சரியமாய் பார்த்திருந்தாள். பின்னே தன் அம்மாதான் பலசாலி, சூப்பர் ஹீரோ என்று அந்த குட்டிப்பெண் நினைத்திருக்க, தன் அம்மாவையே ஒருவன் அசால்ட்டாக அதுவும் ஒற்றை கையால் தூக்கி நிறுத்தினால்? அவளுக்கு வியப்பாக இருந்தது போலும்.

 

தன் அருகில் அமர்ந்தவனின் புஜங்களை அவனுக்கு தெரியாது தொட்டு பார்க்க.

 

அவள் தொடுகையை உணர்ந்தவனாய், அவளை திரும்பி பார்த்து , “ஹாய் பேபி. உங்க நேம் என்ன?…” அவள் கன்னத்தை லேசாய் தட்டி அவன் கேட்க.

 

“அபிஷனா அங்கிள்…” அவள் சொல்ல முற்படும் முன்னர். அவள் அருகே வந்த தாட்சா, “அபி சஜித் முன்னே பின்னே தெரியாதவங்களை அங்கிள் சொல்ல வேண்டாம். ஒழுங்கா சார் சொல்லி கூப்பிடுங்க…” என்று மிரட்டவே.

 

அவளை முறைத்தவன், “அதுவும் சரிதான் சேனான்னு சொல்லிக்கோங்க. அறிமுகமாவாதவங்க அப்படித்தான் கூப்பிடுவாங்க…” அவன் பார்வையில் குறும்பு தெரிய.

 

“அதுவும் வேணாம். நான்தான் உங்க அம்மா நான் சொல்றதை மட்டும்தான் கேட்கணும். சார்னே சொல்லுங்க…” மூச்சு வாங்க அவள் சொல்ல.

 

இருக்கையில் இருந்து எழுந்து அவள் அருகே வந்த சஜித், “மாம் கூல். எதுக்கு டென்ஷன் ஆகறீங்க?… அவர் யாரோதானே. சோ சார்ன்னே சொல்லிட்டு போறோம் சிம்பிள்…” அவள் முதுகை சஜித் வருடி விட.

 

தலையாட்டிவிட்டு போனவளுக்கு அபி விக்ரமையே வைத்த கண் வாங்காமல் பார்ப்பது கண்டு கடுப்பாக வரவே, அவள் கன்னத்தை லேசாய் கிள்ளிவிட்டு போனாள்.

 

அதில் அபிக்கு வலியில் முகம் சுருங்க, தாட்சாவை முறைத்துப் பார்த்தவாறே “ஒஹ் பேபி சார்ம்… அம்மா உன்னை கொஞ்சதான் அப்படி செய்தாங்க… இப்போ வலிக்காது என்ன?…” என்றவன் தன் இதழ்களை அவள் கன்னத்தில் ஒற்றி எடுக்கவே.

 

அவள் மனதில் விக்ரம் பாகுபலியை போல உயர்ந்து கொண்டே சென்றான். தாட்சாவோ ஒரு படி குறைந்துதான் போனாள்.

 

பின்னே தன் கன்னத்தை கிள்ளும் அம்மா மேல் கோபம் வரும்தானே.

 

கற்பனையில் விரிந்த காட்சியால் அம்மாவை பார்த்து சிரிப்பு வரவும். வாயை மூடி குறும்பாக சிரித்த அபியை பார்த்த விக்ரம் “என்ன சிரிப்பு?… ரகசியமாய் அவன் கேட்கவே.

 

“இல்லை உங்களை பாகுபலியாவும் அம்மாவை தேவனாவும் நினைத்தேன் சிரிப்பு வந்திட்டு எனக்கு…” அபி மேலும் ரகசியமாய் சிரிக்கவும்.

 

“இது மட்டும் உங்க அம்மாவுக்கு தெரிந்ததுன்னு வை, என்ன நடக்கும்?…” விக்ரம் குறும்பாக கேட்கவும்.

 

“அம்மா எங்களோட பிரண்ட். திட்டமாட்டங்க என்னை…” அபி பெருமையாய் சொல்லவும்… அதில் விக்ரமிற்கு ஹர்ட் ஆனது போல இருந்தது போலும். ஒரு சிறு புன்னகையுடன் தலையாட்டினான் அபியைப் பார்த்து.

 

எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும் போதே தாட்சா தான் தயார் செய்த உணவு வகைகளை எடுத்து வந்தாள்.

 

டேபிளில் பரப்பி வைத்தவள், எல்லோருக்கும் சர்வ் பண்ண ஆரம்பிக்கவே, சஜித் விக்ரமுக்கும் ஒரு தட்டு வைத்து பரிமாறலானான்…

 

அதைக் கவனிக்காதவளாய் பசங்களுக்கு பார்த்து பார்த்து எடுத்து வைத்தாள்.

 

திடும்மென அவளுக்கு ஒரு நினைவில் கைகள் அப்படியே நின்றுவிட, திரும்பி பார்த்தவள் அதிர்ந்து போனாள்.

 

கிட்டத்தட்ட இரண்டு வாய் சாப்பிட்டு விட்டான் விக்ரம், வேகமாய் அவன் அருகில் சென்றவள், “அச்சோ இதில் கேபேஜ் வச்சு செஞ்சிருக்கேன்…” அவள் கையில் இருந்து அதைப் பிடுங்கியவள்.

 

“எழுந்து வாங்க முதல்ல…” அவனை அவள் எழுப்பவும். குட்டீஸ் முன் எதையும் காட்டிக்கொள்ள விரும்பாதவனாய்.

 

“நீங்க சாப்பிடுங்க நான் வரேன்…” என்றவனாய் அவளுடன் சென்றவனுக்கு லேசாய் தலை சுற்றும் நிலை.

 

ஆம் கேபேஜ் அவனுக்கு சேராது, ஒவ்வாமையை கொடுக்கும், தன் அறைக்குள் அவனை அழைத்து சென்றவள், அவனை படுக்கையில் அமர வைத்துவிட்டு ஓடிப்போய் சுடுநீரை வெதுவெதுப்பாக கொண்டு வந்து தந்தாள், ஜெயராமனுக்கு போன் செய்தும் விட்டாள் பதட்டத்தில்.

 

“சாரி நான் கொஞ்சம் கூட கவனிக்கலை உங்களை. நீங்க இதை சாப்பிடுவீங்கன்னும் நான் நினைக்கலை. உங்களுக்கு வேற செஞ்சு எடுத்துட்டு வந்திருந்தேன். சத்தியமா இதை வேணும்னே செய்யலை நான்…” அவன் நெஞ்சை நீவியவாறே அவள் சொல்ல.

 

அவனுக்கு லேசான மூச்சிரைப்பு வரவும் அப்படியே படுக்கையில் சரிந்து தலையில் கைவைத்து படுத்துக்கொண்டான்.

 

அதில் மேலும் பதறியவாறே, அவன் நெஞ்சில் கைவைத்து நீவியவாறே, “அச்சோ என்னதான் ஆச்சு உங்களுக்கு?…” அவள் அழுகையோடு கேட்கவும்.

 

“ப்ச் நொய் நொய்ன்னுட்டு. அமைதியாய் இரேன் கொஞ்ச நேரம். அதுவே சரியாகிடும் ரெஸ்ட் எடுத்தா…” என்றவனை டென்ஷன் ஆக்கும் விதமாய் அங்கே ஆம்புலன்ஸ் ஒன்று வந்து நிற்கவும், சிந்துஜாவுடன் வந்த டாக்டர்ஸ் இருவர் அவனை பரிசோதித்து விட்டு அழைத்து செல்ல முயன்றனர்.

 

“ஜஸ்ட் ஸ்டாப் இட் சிந்து… ப்ளீஸ் கெட் அவுட் நவ்…” என்று தங்கையை முறைக்கவே.

 

அதில் மிரண்டவளாய் அப்படியே நின்றாள் சிந்துஜா.

 

திரும்பி தாட்சாவை முறைத்தவன், “எதை செய்தால் எனக்கு பிடிக்காதுன்னு தெரியுதோ அதை நல்லாவே செய்றடி…” என்றுவிட்டு அதற்கு மேலும் நிற்காது வெளியேறிவிட்டான்.

 

சகாயம் பசங்களுக்கு எதுவும் தெரியவேண்டாம் என அவர்களுடன் தானும் அமர்ந்து கொண்டார் வெளிப்புறம்.

அவருக்கு மனதுக்குள் நிறைய குழப்பம் தாட்சாவுடன் அமர்ந்து பேசினால் ஒழிய இது தீராது என்ற நிலை. அவளுடன் பேசவேண்டும் என முடிவெடுத்தவர் அமைதியானார்.

 

அறைக்குள் தாட்சாவை முறைத்த சிந்துஜா, “உன்னை மாதிரி ஆளுங்க பக்கத்தில் நிக்குறதைக் கூட கேவலமாய்

நினைப்பேன் நான்… அப்படியிருக்கும் போது எனக்கே அண்ணியா வரணும்னு பார்க்கிறியாடி?… கனவுல கூட அது நடக்காது…” என்றவள் தாட்சா அதிர்ந்து அவளையே பார்த்திருக்க.

 

“என்னடி பார்க்குறே? உன்னோட பசங்க ரெண்டும் வெளி உலகத்துக்குத்தான் அப்பன் பேர் தெரியாதவங்க. ஆனால் எனக்கு நல்லாவே தெரியும்டி. அதுக்கு அப்பா என் அண்ணன்தான்னு…” என்று நயவஞ்சகமாக சிரித்தவாறு.

 

“ஒருவேளை சாப்பாட்டுக்கே எச்சில்கிளாஸ் எடுக்கற உனக்கு கோடீஸ்வரன் கேட்குதாடி… எங்கேயாவது அண்ணன்கிட்டே போகணும்னு விரும்பினே கொன்னுடுவேன் பார்த்துக்கோ…” தாட்சாவை மிரட்டிவிட்டு செல்ல முயன்றவள் மீண்டும் அவளருகே வந்து.

 

“இனி ஒருதரம் அண்ணன் முன்னாடி வந்தே. உசுரோட தப்பிக்க மாட்டேடி நீ. நான் எதுக்கும் துணிஞ்சவன்னு உனக்குத்தான் நல்லாவே தெரியுமே…” என்றவள் வேகமாய் வெளியேற.

 

அங்கேயிருந்து ஓட்டுக்கேட்ட ஒரு உருவம் அவசரமாய் வெளியேறியது.

 

சிந்துஜா வெளியேறவும், சிந்துஜாவின் நான் எதுக்கும் துணிந்தவ…’ என்ற வார்த்தையில் ‘உடம்பெல்லாம் பதறவும் அப்படியே அமர்ந்து கொண்டாள்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!