
Category:
காளையனை இழுக்கும் காந்த மலரே
காளையனை இழுக்கும் காந்தமலரே : 32
written by Thivya Sathurshi
காந்தம் : 32
மோனிகாவுக்கு சபாபதி வீடியோ கால் பண்ணினான். வீடியோ காலை அட்டென்ட் பண்ணிய மோனிஷா அவனைப் பார்த்து இரு உதடுகளையும் குவித்து, ஒரு கண்ணை மூடிக் கொண்டு கண்ணடித்தாள். இதைப் பார்த்ததும் சபாபதிக்கு சிரிப்பு வந்தது.
“மோனி கம்பனியிலையா இருக்க?” என்றான். அதற்கு அவளும், “ஆமா சபா, கம்பனிக்கு வந்திட்டேன். ஆனால் வேலை பார்க்கவே முடியவில்லை. என்னோட கண்கள் உன்னோட இடத்தைத்தான் பார்த்திட்டு இருக்கு.” என்றாள். சபாபதிக்கு அவளது நிலை புரிந்தது. “நான் சீக்கிரம் வந்திடுறன் மோனி.” என்றான்.
இதைக் கேட்ட மோனிஷா, “என்ன சதா சொல்ற? ரெண்டு நாள்ல வந்துடுவேன்னு தானே சொல்லிட்டு போனே. ஆனால் இப்போ சீக்கிரமே வந்துடுவேன்னு சொல்ற. என்ன வீட்ல ஏதும் பிரச்சனையா?” என்று கேட்டாள் மோனிஷா. அவள் அப்படி கேட்டதும் தயங்கிக் கொண்டே சபாபதி,” ஆமா மோனி ஒரு சின்ன பிரச்சனை” என்று சொன்னான்.
உடனே மோனிஷா,” என்ன சபா உனக்கு ஏதாவது ஹெல்ப் வேணுமா? எதுவாக இருந்தாலும் சொல்லு சபா. “என்று கேட்டாள் மோனிஷா. சபாபதியும்,” இல்லை மோனி. என்னன்னு சொன்னால், என்னோட அத்தை பொண்ணுக்கும் என்னோட தம்பிக்கும் கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கு. மூத்தவனா நான் கல்யாணம் பண்ணாமல் இருக்கும்போது, தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைக்க வீட்டில யோசிக்கிறாங்க. அதனால் எனக்கு முதலில் கல்யாணம் பண்ணி வைக்க வீட்டுல பேசுறாங்க. “என்று சொன்னான் சபாபதி.
இதைக் கேட்ட மோனிஷாவுக்கு பயம் வந்தது. எங்கே சபாபதி தன்னை விட்டு விட்டு வீட்டில் உள்ளவர்கள் சொல்லும் பெண்ணை திருமணம் செய்து கொள்வானோ என்று யோசித்தாள். மெல்ல அவனிடம்,” சபா உன்னோட வீட்ல உள்ளவங்க சொன்னாங்கன்னு சொல்லி என்ன விட்டுட்டு நீ வேற பொண்ணை கல்யாணம் பண்ணுவியா?” என்று கேட்டாள்.
அதற்கு சபாபதி, “என்ன மோனி நீ இப்படி சொல்ற? நான் எப்படி உன்னை விட்டுட்டு வேறொரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்குவன்னு நீ நினைக்கலாம். இங்க பாரு மோனி, அப்படி எதுவும் நடக்காது. உனக்காக இந்த வீட்டை விட்டுட்டு வரவும் நான் தயாராக இருக்கிறேன்.” என்று சொன்னான்.
இப்படி சொல்வான் என்று மோனிஷா எதிர்பார்க்கவில்லை. அவளுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. ஆனாலும் அந்த கூட்டு குடும்பத்தில் வாழ அல்லவா அவள் விருப்பப்பட்டாள். அதனால் சபாவிடம், “அவசரப்படாத சபா. நம்மளோட விஷயத்தை நீ முதல்ல அவங்க கிட்ட சொல்லு. அதுக்கப்புறம் என்ன பண்ணலாம்னு பார்க்கலாம்” என்று சொன்னாள்.
சபாபதியும், “ஆமா மோனிஷா. இன்னைக்கு எங்க ஊரு கோயில்ல பூஜை இருக்கு அது முடிந்ததும் நைட்டுக்கு வீட்டிற்கு வந்ததுக்கு அப்புறம் நான் இதைப் பற்றி கண்டிப்பாக வீட்ல உள்ளவங்க கிட்ட சொல்லி ஒரு முடிவு எடுத்துட்டு உனக்கு சொல்றேன். ” என்று சொன்னான். மோனிஷாவும், “சரி சபா அதுக்காக நீ எதுவும் டென்ஷனாக வேண்டாம். நடக்கிறதை பார்க்கலாம். ஓகேவா” என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்.
கோயிலுக்கு சென்று பூஜை ஏற்பாடுகளை செய்துவிட்டு ராமச்சந்திரனும் தேவசந்திரனும் வீட்டிற்கு வந்தனர். பெருந்தேவனார், “என்னப்பா எல்லா வேலையும் முடிஞ்சுதா?”என்று கேட்டார். அதற்கு ராமச்சந்திரன்,” ஆமாப்பா பூஜை வேலை முடிஞ்சிருச்சு, நாம எல்லோரும் போனால் பூஜையை ஆரம்பிச்சிடலாம்.” என்று சொன்னார். உடனே பெருந்தேவனார் விசாகத்தை அழைத்தார்,. “விசாகம் பூஜைக்கு எல்லாம் தயார் பண்ணியாச்சு. நம்ம போனால் பூஜையை ஆரம்பிச்சிடலாம். நல்ல நேரம் முடியறதுக்குள்ள பூஜையை செஞ்சிடலாம்.” என்றார்.
அதற்கு விசாகம் ,”ஆமாங்க நல்ல நேரம் ஆரம்பிக்க இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு. அதுக்குள்ள நம்ம கோயிலுக்கு போயிடலாம் தானே. நான் போய் எல்லாரையும் தயாராக சொல்றேன்.” என்று சொன்னவர், துர்க்காவை அழைத்து, “துர்கா பிள்ளைங்க எல்லோரையும் கோயிலுக்கு போவதற்காக தயாராக சொல்லு. அப்படியே அண்ணிங்க ரெண்டு பேர்கிட்டையும் சொல்லிவிடு.” என்று சொன்னார்.
சரி என்று சொன்ன துர்க்கா குணவதியிடமும் நேசம்மதியிடமும் வந்து பூஜைக்கு சில தயாராக சொல்லிவிட்டு மலர்னிகாவை பார்க்க மேலே சென்றார். அங்கே கதவை திறந்த துர்க்காவின் கண்கள் விரிந்தன. ஆம் ஒரு பக்கம் மடியில் மலர்னிக்காவையும், மறுபக்க மடியில் காமாட்சியையும் நிஷாவையும் படுக்க வைத்து பின்னால் சாய்ந்து கொண்டு தூங்கிக் கொண்டிருந்தான் காளையன்.
ஒரு தந்தை எப்படி தனது பிள்ளைகளை மடியில் வைத்துக் கொண்டு இருப்பாரோ அதுபோல இருந்தது. சிறிது நேரம் அதை ரசித்து நின்றவர் நேரமாவது உணர்ந்து, காளையன் அருகில் சென்றார். முதலில் காளையனின் தோள் களைத் தொட்டு எழுப்பினார். காளையா என்ன இது? இப்படியே தூங்கிட்டியா? “என்று கேட்டார்.
எழுந்த காளையன் துர்க்காவைப் பார்த்து சிரித்து விட்டு,” ஆமா, அத்தை. மலர் கொஞ்சம் குழப்பத்தில் இருக்கிற மாதிரி இருந்தது. பேசிட்டு இருக்கும் போது அப்படியே மடியில தூங்கிட்டா. அதை பார்த்துட்டு காமாட்சியும் நிஷாவும் ஆசைப்பட்டாங்க. பிறகு அவங்களும் ஒரு பக்கம் வந்து தூங்கிட்டாங்க. நானும் உட்கார்ந்து இருந்தேன். அசதியிலை எனக்கும் தூக்கம் வந்துருச்சு. நீங்கள் எதுவும் தப்பாக எடுத்துக்காதீங்க அத்தை.” என்று சொன்னான்.
அதற்கு துர்க்கா, “என்னப்பா எதுக்கு இவ்ளோ பெரிய விளக்கம் கொடுக்கிற, நான் உன்கிட்ட எதுவும் கேட்கலையே. சரி கோவிலுக்கு போகணும் பூஜைக்கு எல்லாம் தயாராக இருக்கு. நம்ம போனா ஆரம்பிக்கலாம். அதனால சீக்கிரமா போய் ரெடியாகு.” என்று சொன்னார்.
“அத்தை அதுக்கு முதல் இவங்க எந்திரிக்கணும். அதுக்கு அப்புறம் தான் நான் எந்திரிக்க முடியும்.” என்று சொல்லி சிரித்தான் காளையன். “அதுவும் சரிதான் காளையா” என்றவர்,” அடியே எந்திரிங்கடி. நல்லா தூங்குறதை பாரு. ” என்று எழுப்பினார்.
மூவரும் கண்களை திறந்து பார்க்க, அவர்கள் காளையன் மடியில் படுத்திருப்பதை பார்த்தனர். பின்னர் நடந்தது ஞாபகம் வர, சிரித்துக் கொண்டு எழுந்தனர். துர்க்கா அவர்களிடம்,” போங்க கோயிலுக்கு போகணும். சீக்கிரமா ரெடியாகிட்டு கீழே வாங்க. ” என்றார்.
காமாட்சி, “சரி அத்தை நானும் நிஷாவும் போய் எங்களோட அறையில ரெடியாயிட்டு வார்றோம். அண்ணி நீங்க குளிச்சிட்டு ரெடியா இருங்க போயிட்டு வரலாம்.” என்று சொல்லி காமாட்சியும் நிஷாவும் சென்றனர். மலர்னிகா எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தாள். காளையன் அவளிடம் தலையசைத்து விட்டு, அத்தையிடம் சொல்லிவிட்டு தனது அறைக்குச் சென்றான்.
துர்க்கா மகளிடம்,” மலர் நடக்கிறதை ஏத்துக்க பழகு. முதல் தடவை எல்லோரும் சேர்ந்து கோயிலுக்கு போறதனால புடவை கட்டிட்டு வா.” என்று சொல்லிவிட்டு, அவர் ரெடியாகச் சென்றார்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😀
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி 💙
காளையனை இழுக்கும் காந்தமலரே : 31
written by Thivya Sathurshi
காந்தம் : 31
மலர்னிகாவிற்கு அவளது தந்தையின் நினைவு மிகவும் வாட்டியது. அதனால் அவரை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தாள். அவ் அறையைத் தாண்டிச் சென்ற காளையன், அவளின் புலம்பல் கேட்டு உள்ளே வந்தான். மலர்னிகா பேசுவதை கேட்டக் கேட்க அவனுக்கு இனம்புரியாத வலி வந்தது.
அவள் அருகில் சென்று, குனிந்து படுத்திருந்தவளின் தலையை வருடிக் கொடுத்தான். யாரோ தன்னை தொடுவதை உணர்ந்து பதறி எழுந்தாள் மலர்னிகா. அவளுக்கு மும்பையில் நடந்தது ஞாபகம் வர, முகம் மாறியது. அதனால் அவனிடம் இருந்து பின்னால் சென்றாள். அவளுக்கு பயமாக இருந்தது. இதை அவதானித்த காளையனுக்கு மலர்னிகாவிற்கு ஏதோ பெரிய பிரச்சனை என்பதை அறிந்தான்.
ஆனால் அவளது செயலை கவனிக்காதவாறு, கட்டிலில் இருந்தான். பயந்து கால்களை கட்டிக் கொண்டு இருந்தவளின் கைகளை பிடித்து, “புள்ளை உனக்கு அப்பானா ரொம்ப பிடிக்குமா?” என்றான். தந்தை பற்றி பேச அவள் சகஜ நிலைக்கு திரும்பினாள். “ரொம்ப, ரொம்ப பிடிக்கும். எனக்கு அப்பாகூட இருக்கும் போது கவலை, சோகம் இதெல்லாம் தெரியவே தெரியாது.” என்றவள் கண்கள் கலங்கின.
அதை தனது பெருவிரலால் துடைத்த காளையன்,” மாமா எப்பவும் உன்கூடவே தான் இருப்பாங்க. உன்னை எப்பவுமே பார்த்துக் கொண்டு இருப்பாங்க. கவலைபடாத உனக்காக நாங்க எல்லோரும் இருக்கிறம். அதுவும் நான் எப்பவும், எந்த நிலையிலும் உன்கூடவேதான் இருப்பேன்.” என்றான். அதைக் கேட்டவள் அவனது முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.” நீ ரொம்ப யோசிக்கிறனு நினைக்கிறன். இங்க வா, வந்து என்னோட மடியில படுத்துக்க, தப்பா நினைக்க வேண்டாம். உன்னோட அப்பாவை என்னை நினைச்சிக்க. “என்றான்.
கட்டிலில் அவன் சாய்ந்து அமர, அவனின் மடியில் அவள் படுத்தாள். காடு மேடு அலைந்து திரிந்து வீடு வந்து சேர்ந்த மாதிரி இருந்தது. மனதில் எந்த சிந்தனையும் வரவில்லை. மெதுவாக கண்களை மூடிக் கொண்டாள். அப்போது அவளைப் பார்க்க அறைக்குள் வந்தனர், காமாட்சியும் நிஷாவும்.
காளையன் மடியில் அவள் படுத்திருப்பதைப் பார்த்து சிரிக்க, அவர்களை நிமிர்ந்து பார்த்த காளையன் உள்ளே வருமாறு சைகை செய்ய அவர்களும் வந்தனர். “என்ன காமாட்சிமா? நிஷாமாவும் நீயும் சேர்ந்து வந்திருக்கிறீங்க? “என்றான். இவர்கள் பேச்சுக் குரலில் எழ நினைத்தாள் மலர்னிகா. அவளை உணர்ந்தவன் போல, காளையன் அவளது கையை அழுத்தமாக பிடித்துக் கொண்டான். அதில் எழவேண்டாம் என்று சொன்னான். அவளும் அமைதியாகி விட்டாள்.
காமாட்சி,”வேலை எல்லாம் முடிச்சுட்டோம் அண்ணா. அண்ணியை பார்த்துட்டு அப்படியே போய் தூங்கலாம்னு வந்தோம்.” என்றாள். நிஷாவிடம் திரும்பிய காமாட்சி, “நானும் இப்படித்தான் சின்னண்ணா மடியில அடிக்கடி தூங்குவன். அண்ணா மடியில தூங்கினால் எந்த கவலையும் இருக்காது.” என்றாள். அதைக் கேட்டு சிரித்த நிஷா,” எனக்கு எல்லாம் அம்மா, அப்பா, அண்ணா, அக்கானு எந்த உறவுகளோடும் வாழும் குடுப்பனை எனக்கு இல்லை. ஆனால் மேடத்தை இப்படி பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு. அவங்களை அண்ணா நல்லா பார்த்துப்பாங்கனு நல்லாவே தெரியுது. ” என்றாள்.
அதைக் கேட்ட காளையனுக்கும் காமாட்சிக்கும் அவளை நினைத்து கவலையாக இருந்தது. காமாட்சி உடனே,” அதுக்கு என்ன நிஷா, சின்னண்ணா எனக்கு மட்டும் அண்ணா இல்லை. உனக்கும் அண்ணாதான். அதனால நாம ரெண்டு பேரும் அண்ணா மடியில அண்ணியோட சேர்ந்து தூங்கலாம். “என்றாள். நிஷா தயங்க, “அட வாம்மா. நீயும் எனக்கு காமாட்சி போலத்தான். என்னோட முதல் குழந்தை காமாட்சிதான்.” என்றான். அதில் நெகிழ்ந்தனர் இருவரும். இடது புறம் மலர்னிகா படுத்திருக்க, வலது புறம் வந்து காமாட்சியும் நிஷாவும் வந்து படுத்தனர்.
ஏதேதோ பேசிக் கொண்டு இருந்தவர்கள், பேசியபடியே தூங்கினார்கள். காளையன் பின்னால் சாய்ந்து கொண்டு, மலர்னிகாவின் கையில் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவன் அப்பிடியே தூங்கிவிட்டான்.
மோனிஷா கேசவனிடம் சொல்லிக் கொண்டு கம்பனிக்குச் சென்றாள். அவள் சென்றதும் முகேஷை அழைத்துக் கொண்டு கேசவன், ஒரு இடத்திற்கு வந்தார். அந்த இடத்தை பார்த்து எதுவும் புரியவில்லை முகேஷ்க்கு, “அப்பா இங்க எதுக்கு என்னை கூட்டிட்டு வந்தீங்க?” என்றான்.
அவரும் பேசாமல் வா முகேஷ் என்றவர் ஒரு கல்லறையின் முன்பு வந்து நின்றார். அவர் வரும் போது வழியில் வாங்கி வந்த பூமாலையை அந்த கல்லறை மீது போட்டார். “அப்பா இங்க எதுக்கு வந்திருக்கிறம்? இது யாரோட கல்லறை?” என கேட்டுக் கொண்டு நின்றான்.
ஒரு பெருமூச்சை விட்ட கேசவன் அந்த கல்லறை யாருடையது, அவரது வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை எல்லாம் முழுவதுமாக முகேஷிடம் சொன்னார். அதைக் கேட்ட முகேஷ்க்கு கோபம் வந்தது. “ஏன் அப்பா இத்தனை நாளாக எங்கிட்ட எதையுமே சொல்லலை. இதுக்கு காரணமானவங்களை எப்பவும் நான் மன்னிக்க மாட்டேன். அவங்களை பழிவாங்காமல் விடமாட்டேன்.” என்றான்.
கேசவனும், “ஆமா முகேஷ் பழிவாங்கணும். அவங்களை மன்னிக்கவே கூடாது.” என்றார். “அப்பா இனிமேல் இந்த விசயத்தை நான் பார்த்துக்கிறன். “என்றான். அதற்கு கேசவன்,” நான் அதுக்காகத்தான் ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செய்திட்டு வர்றன். இனிமேல் ரெண்டு பேரும் சேர்ந்து அதை பண்ணலாம்.” என்றார். இருவரும் அங்கிருந்து வீட்டிற்கு வந்தனர்.
கம்பனிக்கு வந்த மோனிஷா வேலையை பார்த்துக் கொண்டு இருந்தாள். ஆனாலும் அவளது கண்கள் அடிக்கடி சபாபதி இருக்கும் இடத்தை தொட்டு வந்தது. அவனை பார்க்காமல் நாளை கடத்துவது மிகவும் சிரமமாக இருந்தது. போனை எடுத்தது சபாபதிக்கு போன் பண்ணலாம் என்று நினைத்தாள். ஆனால் அவன் தூங்கிக் கொண்டு இருந்தால், தொல்லை செய்வது போல இருக்குமே என்றும் யோசித்தாள். பின்னர் சரி எதற்கும் ஒரு தடவை எடுத்துப் பார்க்கலாம் என்று சபாபதிக்கு போன் பண்ணினாள்.
சபாபதி பெருந்தேவனார் சொன்னதையே யோசித்துக் கொண்டே அவனின் நண்பனைக் காண செல்ல, அவன் வேலையாக டவுனுக்கு போயிருப்பதாக வீட்டில் சொல்ல, அப்பிடியே வந்து ஆற்றங்கரையின் அருகே நின்ற, ஆலமரத்தின் கீழே வண்டியை நிறுத்தி விட்டு அதில் ஏறி இருந்தான். அவனுக்கு குழப்பமாக இருந்தது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தான்.
மிகவும் டென்ஸனாக இருந்தது. அப்போது மோனிஷாவின் கால் வர, உடனே அட்டெண்ட் பண்ணியவன், “மோனி வீடியோ கால் பண்றன்.” என்றவன் கட் பண்ணி விட்டு, அவளுக்கு வாட்ஸ்ஆப்பில் வீடியோ கால் பண்ணினான். அந்தப் பக்கம் போனை எடுத்த மோனிஷா செய்த செயலில் சிரிப்பு வந்தது.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😀
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி 💙
காளையனை இழுக்கும் காந்தமலரே : 30
written by Thivya Sathurshi
காந்தம் : 30
மலர்னிக்காவை பற்றி நிஷா சொன்னதைக் கேட்டவர்களுக்கு மலர்னிகாவை நினைத்து மிகவும் பெருமையாகவும் அதே நேரம் அவளுக்கு நடந்த அநியாயத்தை நினைத்து கவலையாகவும் இருந்தது. காளையன் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றான்.
காமாட்சி,” நிஷா அண்ணி எவ்வளவு உறுதியானவங்களாக இருந்திருக்கிறாங்க என்பதை நினைக்கும் போது அப்படியே புல்லரிக்குது. அவங்களை நாம எப்படியாவது பழையபடி மாத்தணும்.” என்றாள். நிஷாவும் மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்.
அறைக்கு வந்த சபாபதி, மோனிஷாவிற்கு கால் பண்ணி ஊருக்கு வந்து விட்டதாக சொன்னான். அவளும்,” சரி சபா, அங்க என்ன நடக்குதுனு சொல்லு. அப்புறம் நம்மளோட விசயத்தை சொல்ல சரியான நேரம் வந்தால் சொல்லிடு. “என்றாள். அதற்கு அவனும், “கண்டிப்பா சொல்றன் மோனி, எனக்கு ரொம்ப களைப்பாக இருக்கு நான் குளிச்சிட்டு சாப்பிட்டு தூங்கணும். ஈவ்னிங் உனக்கு கால் பண்றன்.” என்றான். அவளும்,” சரி சபா டேக் கேர். ஐ மிஸ் யூ “என்று சொல்லி போனை வைத்தாள்.
காலையில் கேசவன், முகேஷ், மோனிஷா எல்லோரும் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது முகேஷ்,” அப்பா நான் தேன்சோலையூருக்கு போகணும். ” என்றான். அதற்கு கேசவன்,” என்ன தேன்சோலையூருக்கா? அங்க எதுக்கு நீ போகணும்? “என்றார்.
கேசவனிடம் முகேஷ், “போகணும்பா எனக்கு அங்க முக்கியமான வேலை இருக்கு.” என்றான். மோனிஷா, “அண்ணா சபாவோட ஊரும் அதுதான். நீங்க ஏன் அங்க தங்கக்கூடாது? அவன்கிட்ட கேட்டா நோ சொல்லமாட்டான்.” என்றார். கேசவன்,” இல்லை மோனி. அது சரிபட்டு வராது. மோனி நீ கம்பனிக்கு போ. முகேஷ் என்கூட ஒரு இடத்திற்கு வா. போங்க ரெண்டு பேரும் ரெடியாகுங்க “என்றார். அவர்களும் எதுவும் பேசாமல் சென்றனர்.
முகேஷ் தனது போனை எடுத்துப் பார்க்க நிறைய மிஸ்ட் கால் ஒரு நம்பரில் இருந்து வந்திருந்தது. உடனே அந்த நம்பருக்கு போன் பண்ணினான்.” ஹலோ. எதுக்கு இத்தனை தடவை கால் பண்ணி யிருக்க? “என்றான். மறுபக்கம் இருந்தவன்,” சார் முக்கியமான விசயம் சொல்லணும்னு தான் கால் பண்ணினேன்.”
“சரி சீக்கிரமா சொல்லு” என்று முகேஷ் சொன்னான். அதற்கு கால் பண்ணியவன், “சார் நீங்க கொலை பண்ணச் சொல்லியிருந்த மலர்னிகா பொண்ணுக்கும் காளையன் என்று சொல்ற ஒருத்தனுக்கும் கல்யாணம் முடிவாகி இருக்கு.” என்றான்.
இதைக் கேட்ட முகேஷ்க்கு அதிர்ச்சியாக இருந்தது. அவளுக்கு யாரோட சப்போர்ட்டும் கிடைக்கக் கூடாது என்றுதான் அவன் பாடுபடுறான். அப்படி யாரும் உதவிக்கு வந்தால் மலர்னிகா மீண்டும் பிஸ்னஸ்க்கு வருவாள் என்று அவனது உள்மனசு சொல்லியது. இதை நடக்க விடவே கூடாது. என்று நினைத்தவனுக்கு கொடூர எண்ணம் தோன்றியது.
“சார் லைன்ல இருக்கிறீங்களா?” என்றான். அதற்கு முகேஷ், “ஆ, இருக்கிறன். எனக்கு அந்த காளையனோட போன் நம்பரை உடனே எனக்கு அனுப்பி வை. நான் அப்புறம் கூப்பிடறேன் ” என்றான். அவனும் நம்பரை அனுப்பி வைத்தான்.
வழமை போல எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். பெருந்தேவனார் அவருக்கு அருகே இடது புறம் விசாகம், துர்க்கா, மலர்னிகா, காமாட்சியும் அவருக்கு வலது பக்கம் ராமச்சந்திரன், தேவச்சந்திரன், சபாபதி, காளையனும் அமர்ந்திருக்க குணவதியும் நேசமதியும் பார்த்துப் பார்த்து கவனித்தனர். எல்லோரும் சேர்ந்து உண்பதைப் பார்க்க அத்தனை நிறைவாக இருந்தது.
சாப்பிட்டு விட்டு, கூடத்தில் பேசிக் கொண்டு இருந்தனர் ஆண்கள் அனைவரும். விசாகம் மாலை கோயிலில் நடைபெற இருக்கும் பூசைக்கு தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தனர் பெண்கள். மலர் மட்டும் அறைக்குள் சென்றுவிட்டாள். அவளை யாரும் எதுவும் சொல்லவில்லை.
இதுதான் சரியான சந்தர்ப்பம் என நினைத்த பெருந்தேவனார் சபாபதியிடம் பேச ஆரம்பித்தார். “சபா நம்மளோட காளையாக்கும் மலருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு துர்க்கா ஆசைப்படுறா. எல்லோரும் இந்த கல்யாணத்ததில சந்தோசம். ஆனால் மூத்தவன் நீ இருக்கும் போது, அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது சரியில்லை. அதனால முதல்ல உனக்கு கல்யாணம் பண்ண பொண்ணு பார்க்கலாம்னு இருக்கிறம். நீ என்னப்பா சொல்ற? “என்றார்.
சபாபதிக்கு கடவுளே என்ன இது? இந்த தாத்தா இப்படி திடீர்னு கல்யாணப் பேச்சு பேசுறாரு. வேணும்னா அவனுக்கு பண்ண வேண்டியதுதானே. என்று மனசுக்குள் பேசிக் கொண்டான்.” இல்லை தாத்தா, இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம்? ” என்றான்.
ராமச்சந்திரன்,” சபா தாத்தாகிட்ட இப்படியா பேசுவ?” என்றார். அவனும் “இல்லை அப்பா நான் தப்பா பேசலையே. இப்போ கல்யாணம் வேண்டாம்னு சொல்றன். அவ்வளவு தான். எனக்கு சொந்தமா பிஸ்னஸ் ஆரம்பிச்சு, நிறையபேருக்கு வேலை குடுக்கணும்னு ஆசை. அது நிறைவேறாமல், என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. ” என்று சபாபதி சொல்லவும் பெருந்தேவனாருக்கு கோபம் வந்தது.
“இங்க பாரு சபா, உனக்கு கம்பனியில வேலை பார்க்கணும்னு ஆசைனு சொன்னதாலதான் நாங்க உன்னை அனுப்பி வைச்சோம். சொந்தமா கம்பெனி ஆரம்பிக்கணும்னு நினைக்காத சபா. அதனாலதான் துர்க்கா அவளோட புருஷனை இழந்திட்டு இருக்கிறாள்.” என்றார்.
அதற்கு சபாபதி ஏதோ பேச வர, விசாகம் அங்கே வந்தார்.” முதல்ல எல்லோரும் பூஜைக்கு ஆகவேண்டிய வேலையை பாருங்க. ராத்திரி வந்து அதைப் பற்றி பேசிக்கலாம். ” என்றார். அவரது பேச்சிற்கு எதிர்ப்பேச்சு யாரும் பேசாமல் கோயிலுக்குச் சென்று, அங்குள்ள வேலைகளை பார்க்க ராமச்சந்திரனும் தேவச்சந்திரனும் செல்ல, காளையன் மில்லுக்குச் சென்றான். சபாபதி ஊரிலுள்ள அவனது நண்பனை பார்க்கச் சென்றான்.
அறையில் படுத்திருந்த மலரது மனம் ரணமாகி இருந்தது. துர்க்காவும் அவளை புரிந்து கொள்ளாமல் கல்யாணத்திற்கு கட்டாயப்படுத்தியது அவளை மேலும் கஷ்டப்படுத்தியது. அவளது மனம் தந்தையை நினைத்து ஏங்கியது. “அப்பா,நீங்க என்கூட இருந்திருந்தா இப்படி கஷ்டம் வந்திருக்குமா? என்னால அழவும் முடியலை. உங்களை பார்க்கணும் போல இருக்கு அப்பா, உங்களோட மடியில் தலை வைத்து தூங்கணும் போல இருக்கு.” என்று பேசிக் கொண்டிருந்தாள்.
மில்லுக்குச் செல்லும் வழியில், காளையனுக்கு பணம் எடுத்து வராதது ஞாபகம் வரவும் , திரும்ப வீட்டிற்கு வந்தவன். பணம் எடுக்க அவனது அறைக்குள் செல்லும் போது, மலர்னிகா பேசுவதை கேட்டவன், அவளது அறைக்குள் சென்றான்.
கட்டிலில் படுத்துக் கொண்டு இருந்த மலர்னிகா அருகில் சென்ற காளையன் செய்த செயலில் பதறி எழுந்தாள் மலர்னிகா.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி 💙
காளையனை இழுக்கும் காந்தமலரே : 29
written by Thivya Sathurshi
காந்தம் : 29
துர்க்காவிடம் கல்யாணம் எனக்கு வேண்டாம் என்று மலர்னிகா சொல்லவும் துர்க்காவிற்கு கோபம் வந்தது. அவளிடம் கல்யாணம் வேண்டாம் என்று சொல்வதற்கான காரணத்தைக் கேட்க,” எனக்கு இப்போ இல்லை அம்மா. எப்பவும் கல்யாணம் வேண்டாம். எனக்கு கல்யாணம் பண்றதுல விருப்பம் இல்லை. என்னை விட்டுடுங்க.” என்றாள்.
துர்க்கா இவ என்ன லூசு மாதிரி பேசுறா என்று கோபப்பட்டார். “ஏன் மலர் இப்படி பேசுற? இந்த உலகத்துல ஒரு பொண்ணு தனியா வாழ்ந்திட முடியாது மலர், அன்னைக்கு நம்மகூட ஒரு ஆம்பளை இருந்திருந்தா, அந்த முகேஷ் நம்மகிட்ட இப்படி நடந்திருப்பானா? எனக்கு தெரியாது மலர் நீ இந்த கல்யாணம் பண்ணிக்கிற. காளையன்தான் உன்னோட புருஷன். இந்த கல்யாணம் நடக்கலை என்னை நீ உயிரோட பார்க்கவே முடியாது. “என்றார்.
அவரை அடிபட்ட பார்வை பார்த்தவள்,” என்னோட வாழ்க்கையில என்ன பண்ணணும்னு எனக்கு முடிவு எடுக்கிற உரிமை இல்லைல. சரி நீங்க சொல்ற மாதிரி அவரையே கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனால் அதுக்கு பிறகு என்னோட வாழ்க்கையில நான் எது பண்ணாலும் நீங்க தலையிடக்கூடாது. “என்றவள் பெட்சீட்டை எடுத்து முகத்தை மூடியபடி படுத்து விட்டாள். துர்க்கா சிரித்தபடி அங்கிருந்து சென்று கீழே உள்ளவர்களிடம் விசயத்தை சொல்ல, வீடே சந்தோசப்பட்டது. அப்போது அதைக் கேட்ட ஒரு உருவம் அங்கிருந்து யாரும் அறியாமல் சென்றது.
சபாபதிக்கு திடீரென வீட்டிற்கு வருமாறு ராமச்சந்திரன் சொன்னது, சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஏதாவது பிரச்சனையா இருக்குமோ என்ற யோசனையினுடனே புறப்பட்டு பேரூந்து நிலையத்திற்கு வந்தான். அங்கே மோனிஷா நின்றிருந்தாள். அவளை அங்கே சபாபதி எதிர்பார்க்கவில்லை. “மோனி, நீ வர்றதா சொல்லவே இல்லை.” என்றான்.
அவனருகில் வந்தவள், “உனக்கு ஒரு சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டும்னுதான் சொல்லலை. சரி ஊருக்கு போயிட்டு என்னை மறந்திடாத சரியா?” என்றாள். அதற்கு சபாபதி, “உன்னை மறப்பனா மோனி. போயிட்டு போன் பண்றன். நீ பத்திரமா வீட்டிற்கு போ. போயிட்டு போன் பண்ணு. ” என்றான். பஸ் எடுப்பதற்கு அறிகுறியாக ஹாரன் சத்தம் கேட்டது. அவளும் அவனை அணைத்து விடுவித்தாள். சபாபதியும் அவளது கன்னத்தில் தட்டி விட்டு பஸ்ஸில் ஏறினான்.
முகேஷ் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்தான். அவனது கையில் மலர்னிகா என்ன செய்கிறாள்? எங்கே இருக்கிறாள் என்ற விபரம் கிடைத்தது. அவளது நிம்மதியை கெடுக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் சென்னையில் விமானத்தில் வந்து இறங்கினான்.
அவனை அழைத்துச் செல்ல ஏர்போட்டில் காத்திருந்தார் கேசவன். மகன் வந்து காரில் ஏறியதும் காரை எடுத்தார். “என்ன முகேஷ் திடீரென வந்திருக்க? என்ன விசயம்?” என்றார். அதற்கு முகேஷ், “அப்பா அந்த மலர்னிகா அந்த துர்க்காவோட எங்க போயிருக்கிறானு தெரியுமா?” என கேட்டான்.
சிரித்த கேசவன், “வேற எங்க போயிருப்பாங்க? எங்கயாவது ஆச்சிரமத்துல போய் சேர்ந்திருப்பாங்க. இல்லைனா ஒரேடியாக போய் சேர்ந்திருப்பாங்க. “என்றார். அதற்கு முகேஷ், “அதுதான் இல்லை அப்பா, அவங்க தேன்சோலையூர் போயிருக்கிறாங்க. “என்று முகேஷ் சொன்னதும், சடார்னு காரை நிறுத்தினார் கேசவன்.
முகேஷ் பக்கம் திரும்பி,” முகேஷ் நீ சொல்றது உண்மையா? “என்றார். அதற்கு முகேஷ்,” ஆமா அப்பா, அவங்ககிட்ட இருந்து எல்லாத்தையும் பறிச்சிட்டு விட்டால் செத்துப்போவாங்கனு நினைச்சேன். ஆனால் அவங்க ஊருக்கு போயிட்டாங்க. அதை தெரிஞ்சிக்கிட்டு ஆளுங்களை அனுப்பி, அந்த மலர்னிகாவை கொலை பண்ணப் பார்த்தன். ஆனால் அவ ரெண்டு முறை தப்பிச்சிட்டா. அதுதான் அவளை நேர்ல சந்திக்க நான் வந்தேன்.” என்றான்.
கேசவனுக்கு எங்கேபோய் முட்டிக்கலாம் என்று இருந்தது.” முகேஷ் இப்போ என்ன செய்றது? ” கேட்டார். அதற்கு முகேஷ்,” அப்பா அதை விடுங்க. நான் பார்த்துக்கிறன். முதல்ல வீட்டிற்கு போகலாம். நான் காலையில அங்க போகணும். “என்றான். அவரும் சரி என்று சொல்லி காரை எடுத்தார்.
இரவில் திடீரென வந்து நின்ற அண்ணனை பார்த்து ஆச்சரியம் அடைந்தாள் மோனிஷா. முகேஷ் தங்கையை நலன் விசாரித்து விட்டு, அவளது ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணதுக்கும் வாழ்த்து சொன்னான். பின்னர் களைப்பாக இருப்பதாகவும், காலையில் பேசலாம் என்று சொல்லி விட்டு அவனது அறைக்குச் சென்றான்.
காலையில் ஆதவன் தனது வேலையை சரியாக செய்திட எழுந்து வந்தான். பெருந்தேவனாரின் குடும்பத்தில் இருந்தவர்கள் அனைவரும் சந்தோசமாக தமது வேலைகளை செய்து கொண்டிருந்தனர். கூடத்தில் இருந்து தேநீர் குடித்துக் கொண்டு இருக்கும் போது வெளியே இருந்து, “தாத்தா” என்றான் சபாபதி.
அவனது குரலில் திரும்பிய பெருந்தேவனார், “அடடே சபாபதி, உள்ளே வா ராஜா. எதுக்காக வெளியே நிற்கிற?” என்றார். சிரித்துக் கொண்டு உள்ளே வந்து சோபாவில் இருந்தான் சபாபதி. குணவதி காப்பி கொண்டு வந்து கொடுக்க, அதை வாங்கி குடித்தான். பின் துர்க்காவிற்கு சபாபதியையும் சபாபதியை துர்க்காவிற்கும் அறிமுகம் செய்து வைத்தனர். அங்கிருந்து குளித்து விட்டு வரலாம் என்று அறைக்குச் சென்றான்.
காமாட்சியும் நிஷாவும் கீழே வந்து பெரியவர்களுடன் பேசியவாறு இருந்தனர். விசாகம், “ஆமா, மலர் எங்க? ஆளையே காணோம். ” என்று கேட்டார். அதற்கு காமாட்சி, “அண்ணி தூங்கிட்டு இருக்கிறாங்க.” என்றாள். காலையில் தோட்டத்திற்கு சென்று விட்டு வந்த காளையனும் அவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டான்.
விசாகம், “என்னம்மா இது? மலர் எப்போ பார்த்தாலும் அறைக்குள்ளே இருக்கிறா? நம்மகூட வந்து பேசிட்டு இருக்கலாம்ல.” என்றார். அவருக்கு மகள் வயிற்றுப் பேத்தியை பக்கத்தில் வைத்துக் கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம்.
நிஷா அதற்கு பதில் சொல் முன்வந்தாள். “பாட்டி நீங்க இப்போ பார்க்கிற மலர் மேடம் வேற. முன்னாடி இருந்த மலர் மேடம் வேற. அவங்க மும்பைல எப்படி இருந்தாங்க தெரியுமா? அவங்க நடந்து வரும்போதும் சரி, எழுந்து நின்று பலபேரு முன்னாடி பேசும் போதும் சரி, அவங்களை பார்க்க ரொம்ப கம்பீரமா இருப்பாங்க.
சரியா காலையில ஐந்து மணிக்கே எழுந்து வாக்கிங் போவாங்க. சரியா எட்டு மணிக்கு கம்பனிக்கு போவாங்க. எங்க மேடம்க்கு எல்லாமே கரெக்ட் டைமுக்கு நடக்கணும். அவங்களோட கோபத்தை யாராலையும் தங்கவே முடியாது. மேடம்க்கு ரொம்ப கோபம் வரும். அப்படிப்பட்டவங்க மலர் மேடம். எதுக்குமே பயப்படாம எதிர்த்து நிற்கிறவங்க மலர் மேடம்.
ஆனால் அந்த முகேஷ் துர்க்கா அம்மாவை கடத்தி வைச்சு, மேடம் கஸ்டப்பட்டு மேலே கொண்டு வந்த கம்பனியை மனசாட்சியே இல்லாமல், அவன் பேருக்கு மாத்தி எழுதி வாங்கிக்கிட்டான். அதுக்கு அப்புறம் அவங்களோட தைரியம் போயிடுச்சு. அவங்களை கம்பீரமா பார்த்த என்னால, இப்படி அவங்க அறைக்குள்ளே அடைஞ்சி இருக்கிறதை பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு. கொஞ்ச நாள் மேடத்தை அவங்க போக்குல விடுங்க. நான் ஏதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சிடுங்க. “என்றாள்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி 💙
காளையனை இழுக்கும் காந்தமலரே : 28
written by Thivya Sathurshi
காந்தம் : 28
ஒரு பெரிய மாமரத்தின் கிளை ஒன்றின் மேல் காமாட்சி ஏறி நின்று மாங்காய் பறிக்க, கீழே நின்று மாங்காய்களை பொறுக்கிக் கொண்டு நின்றாள் நிஷா. இதைப் பார்த்தவன் வேகமாக அவர்களருகில் வந்தான். அவனைப் பார்த்த காமாட்சி கிளையில் இருந்து கீழே குதித்தாள்.
“உங்களை எங்க எல்லாம்போய் தேடறது? காளையன் அண்ணே உங்களை தேடுறாங்க. வாங்க” என்றான். அதற்கு சிரித்துக் கொண்ட இருவரும், சில மாங்காய்களை தாவணியில் சுற்றிக் கொண்டும், ஆளுக்கொரு மாங்காய்களை கடித்துக் கொண்டும் கதிருடன் சென்றனர். கதிர் அவர்களை வீட்டிற்கு அருகில் விட்டு விட்டு, காளையனுக்கு போன் பண்ணி சொல்லிவிட்டு, தோட்டத்து வேலையை பார்க்கச் சென்றான்.
ஊரை சுற்றி பார்த்துவிட்டு கைகளில் மாங்காய்களுடன் வந்த, காமாட்சியிடமும் நிஷாவிடமும் மலருக்கும் காளையனுக்கும் திருமணம் செய்ய விரும்புவதாக வீட்டினர் சொன்னார்கள். இருவருக்கும் சந்தோசம் தாங்கவில்லை. இருவரும் குதித்து தங்களை சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.
நிஷா துர்க்காவிடம், “அம்மா மேடம்கிட்ட இதைப் பற்றி பேசியாய்சா? என்ன சொன்னாங்க?” என்று கேட்டாள். அதற்கு துர்க்கா, “இல்லை நிஷா, அவள் காளையனோட வெளியே போயிருக்கா, அதனால கேட்கலை. வந்ததும் கேட்கலாம்.” என்றார்.
ராமச்சந்திரனும், “துர்க்கா நீ எங்க முன்னாடி மலருக்கிட்ட கேட்காதம்மா. அவள் எங்க முன்னாடி பேச கூச்சப்படலாம். ஒருவேளை அவளுக்கு இந்த கல்யாணத்ததில் விருப்பம் இல்லைனா, நீ கட்டாயப்படுத்தக் கூடாது. காமாட்சி, நிஷா நீங்க ரெண்டு பேரும் மலருக்கிட்ட இதைப் பற்றி பேச வேண்டாம். அவள் வந்ததும் நீங்க மேலே கூட்டிட்டு போங்க.
குணவதி, மலர் மேலே போனதும், நீதான் காளையன்கிட்ட இதைப் பற்றி பேசணும். அவனோட மனசில என்ன இருக்குனு தெரிஞ்சிகிறது எல்லோருக்கும் நல்லது. முக்கியமா துர்க்கா நீ இங்க இரு. ” என்றார். அவரும் சரி என்றார்.
அப்போது காளையனும் மலர்னிகாவும் சேர்ந்து அங்கு வந்தனர். காளையன், “என்ன காமாட்சி ரொம்ப சந்தோசமா இருக்கிற மாதிரி தெரியுது” என்றான்.
அதற்கு காமாட்சி, “அண்ணே ரொம்ப சந்தோசம்தான். ஆனால் என்னனு சொல்ல மாட்டேன். மலர் அண்ணி நீங்க வாங்க நாம மேலே போய் மாங்காய் சாப்பிடலாம்.” என்றாள்.
அவள் தன்னை அண்ணி என்று அழைத்ததை புரியாமல் பார்த்த மலர் அவளிடம்,” என்ன என்னை அண்ணினு சொல்றீங்க? “என்று கேட்டாள். ஐயோ சொதப்பிட்டோம் என காமாட்சி விழிக்க, நேசமதிதான்,” மலரு அவள் உன்னை விட சின்னவ. அதனால உன்னை பெயர் சொல்ல முடியாதுல, அதுதான் அண்ணினு மரியாதையா சொல்றா” என்றார்.
அதற்கு மேல் மலர்னிகா எதுவும் கேட்கவில்லை. நிஷாவும் அவளை அழைக்க சரி என்று அவர்களுடன் மேலே சென்றுவிட்டாள். அவள் சென்ற பின்னர் குணவதி காளையனை அங்கிருந்த சோபாவில் இருக்கச் சொன்னார். அவனும்,” என்ன அம்மா? எங்கிட்ட ஏதாவது சொல்லணுமா? “என்று நேரடியாக கேட்டான். அதைக் கேட்டவர்கள் சிரித்தனர்.
விசாகம், “ஆமா காளையா, உங்கிட்ட உன்னோட குணவதி அம்மா ஏதோ கேட்கணுமாம்” என்றார். அதற்கு காளையன், “அப்படியா அம்மா, சொல்லுங்க அம்மா என்ன விசயம்?” என கேட்டான். குணவதியும்,” துர்க்கா மலருக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைக்கிற” என்றார்.
“ரொம்ப நல்ல விசயம்தானே அம்மா, இந்த ஊரே மூக்கு மேல விரலை வைச்சி, அசந்து போற மாதிரி செஞ்சிடலாம்.” என்றான். நேசமதி, “காளையா குறுக்க குறுக்க பேசாம அக்கா சொல்ல வர்றதை முழுசா கேளு.” என்றார்.
குணவதி,” துர்க்கா அவளோட பொண்ண நம்ம குடும்பத்தில மருமகளாக்கணும்னு விரும்புறா. மாமா மூத்தவன் சபாபதிக்கு பேசலாம்னு சொன்னாங்க. ஆனால் துர்க்கா, அவ பொண்ணை உனக்கு கட்டித்தரணும்னு ஆசைப்படுறா. எங்களுக்கு இந்த கல்யாணத்ததில் ரொம்ப சந்தோசம். உன்னோட முடிவு என்ன?” என்றார்.
இதைக் கேட்ட காளையன்,” அத்தை நீங்க எனக்கு உங்களோட பொண்ணை தரணும்னு நினைக்கிறது சந்தோசம். இதுல என்மேல நீங்க வச்சிருக்கிற நம்பிக்கை தெரியுது. ஆனால் அத்தை நான் படிக்காதவன். உங்களோட பொண்ணு ரொம்ப படிச்சவங்க. அவங்களோட வாழ்க்கை வேற மாதிரி, என்னோட வாழ்க்கை வேறமாதிரி.” என்றான்.
அதற்கு துர்க்கா,” படிப்பு ஒரு விசயமே இல்லை காளையா, உங்கிட்ட என்னோட பொண்ணை ஒப்படைச்சா நீ அவளை நல்லா பார்த்துக்குவனு நான் முழுசா நம்புறன். “என்றார். காளையன்,” அத்தை உங்களோட நம்பிக்கை சரி. நான் மலரு புள்ளைய நல்லா பார்த்துக்குவேன். ஆனால் அவங்களுக்கு எப்படிப்பட்ட கணவன் வரணும்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்ல. அதை உங்களோட ஆசைக்காக மறுக்க கூடாது அத்தை. ” என்றான்.
அப்போது பெருந்தேவனார்,” இப்போ என்ன காளையா, மலரு உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னால், நீ அவளை கல்யாணம் பண்ணிக்குவியா? “என்று கேட்டார். அவரையும் துர்க்காவையும் பார்த்தவன்,” மலரு புள்ளை என்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டா, எனக்கு அவங்களை கல்யாணம் பண்ணிக்கிறதுல எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அத்தை நீங்க அவங்களை கட்டாயப்படுத்தக் கூடாது. ” என்றான்.
அப்போதுதான் துர்க்காவிற்கு சந்தோசமாக இருந்தது. எப்படியாவது மலரை கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு,” நான் மலருட்ட கேட்டுட்டு சொல்றன். “என்றார்.
அவரவர் அவர்கள் அறைக்குச் சென்றனர். மலரின் அறைக்குள் வர அவள் கட்டிலில் படுத்திருந்தாள். எப்போதும் ஓடியாடி இருக்க நேரம் இல்லாமல் வேலை செய்யும் மகள். இன்று இப்படி படுத்திருப்பதை பார்க்க கவலையாக இருந்தது. மெல்ல மகள் அருகே வந்து கட்டிலில் இருந்தார்.
துர்க்கா வந்ததும் எழுந்து அமர்ந்தாள் மலர்னிகா. மகளின் முகத்தை வருடினார். “மலர் அம்மா உன்கிட்ட ஒண்ணு கேட்பேன். அதை நீ மறுக்க கூடாது.” என்றார். மலர்னிகா எதுவும் பேசாது துர்க்காவை பார்த்தாள்.
“நான் உனக்கும் காளையனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு ஆசைப்படறேன். வீட்டில எல்லோருக்கும் சம்மதம். எல்லோரும் ரொம்ப சந்தோசமா இருக்கிறாங்க. ஆனால் காளையன் என்ன சொன்னான் தெரியுமா,நான் மலருக்கு ஏத்தவன் இல்லை. நான் படிக்காதவனு சொன்னான் நான்தான் அது ஒரு விசயமே இல்லைனு சொல்லிட்டேன்.
ஆனாலும் கடைசியாக என்ன சொன்னான்னா, மலருக்கு இந்த கல்யாணத்ததில விருப்பமில்லைனு சொன்னா அவளை கட்டாயப்படுத்தாதீங்கனு. எவ்வளவு உயர்ந்த குணம் அவனுக்கு. மலர் நீ என்ன சொல்ற? “என்று கேட்டார்.
அதற்கு மலர்னிகா,” இல்லை அம்மா எனக்கு கல்யாணம் வேண்டாம்.” என்றாள். துர்க்கா,” ஏன் மலர் இப்போ கல்யாணம் வேண்டாம்னு சொல்ற? ” என்று கேட்டவருக்கு மலர்னிகா சொன்ன பதிலில் கோபம் வந்தது.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி 💙
காளையனை இழுக்கும் காந்தமலரே : 27
written by Thivya Sathurshi
காந்தம் : 27
துர்க்கா பெருந்தேவனாரிடம், “அப்பா என்னோட பொண்ணு மலர்னிகா, இந்த வீட்டு மருமகளா இருக்கணும்னு நினைக்கிறேன்.” என்று அவர் சொன்ன உடனே ராமச்சந்திரன், “ரொம்ப சந்தோஷம் துர்க்கா. அதுக்கு என்ன என் தங்கச்சியோட பொண்ணு, எங்க வீட்டுக்கு மருமகளா வர்றது எங்களுக்கும் சந்தோசம் தானே.” என்றார்.
அப்போது பெருந்தேவனார், ” நல்லது தானே சபாபதி எப்போ வருவான்னு தெரியலை. தேவா அவனுக்கு போன போட்டு வரச் சொல்லு. பேசி முடிச்சிடலாம் ரெண்டு பேருக்கும். ” என்றார். அதற்கு துர்க்கா, கொஞ்சம் இருங்க அப்பா, நான் என் பொண்ணுக்கு கேட்டது சபாபதியை இல்லை. காளையனை.” என்றார்.
இதைக் கேட்ட எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். “துர்க்கா நீ புரிஞ்சுதான் பேசுறியா? காளையன் குணத்துல நல்ல பையன். அவனை ஒருகுறையும் சொல்ல முடியாது. ஆனால் மலர்னிகாவைப் போல அவன் படிக்கலையே. ஆனால் சபாபதி நல்லா படிச்சிருக்கான். பெரிய வேலையிலும் இருக்கிறான்.” என்றார்.
துர்க்கா, “அண்ணா பெரிய வேலையோ இல்லை நல்லா படிச்சிட்டு இருந்தா மட்டும் போதுமா? என் பொண்ணை நல்லா பார்த்துக்க நல்ல மனசு இருந்தால் போதாதா? எனக்கு என்னவோ காளையன் என் பொண்ணை பத்திரமா பார்த்துக் கொள்வான் என்று தோணுது. அப்பா, அண்ணா தயவுசெய்து என் பொண்ணு மலர்னிகாவிற்கும் காளையனுக்கும் கல்யாணம் செஞ்சு வச்சுடுங்க. ” என்று கைகூப்பினார்.
அவரது கையை இறுக்கிப்பிடித்த விசாகம் என்னடி இது கையேந்திக்கிட்டு நிக்கிற? உனக்கு என்ன இப்போ மலருக்கும் காளையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் சரியா?”என்றார்.
குணவதியும் நேசமதியும் பேசாமல் அமைதியாக இருப்பதை பார்த்தவர், “என்ன நீங்க ரெண்டு பேரும் எதுவும் சொல்லவே இல்லை. “என்றார்.
அதற்கு அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டு, “நாங்கள் ரெண்டு பேரும் காளையனுக்கு மலரை கேட்கலாம் என்று நினைத்தோம். ஆனால் நீ எப்படி நினைப்பியோன்னு தெரியலை. அதனாலதான் நாங்க அதை பற்றி பேசலை. எங்களோட ஆசையை மனசுக்குள்ளே வச்சுக்கிட்டோம்.” என்றார்கள்.
அப்போ ராமச்சந்திரன், “நல்ல வேளை துர்க்கா கேட்டுச்சு. இல்லைன்னு சொன்னால் நம்ம மலரை யாருக்காவது பேசி முடித்திருப்போம். என்று சொன்னார். அதற்கு பெருந்தேவனார், “யாருக்கு யார் என்று எழுதி இருக்கோ அவங்களுக்கு தான் அவங்களோட கல்யாணம் நடக்கும். ராமச்சந்திரா, அடுத்தது என்ன யோசியரை வரவச்சு நாள் பார்க்க வேண்டியது தான்.” என்றார்.
விசாகம், “அது எப்படி? முதல் பையன் சபா இருக்கும்போது, காளையனுக்கு எப்படி பண்றது?” என்று கேட்டார். அதற்கு பெருந்தேவனார்,” விசாகம் சொல்றதும் சரிதான். சரி முதல்ல போனை போட்டு நாளைக்கு சபாபதி வர சொல்லுங்க…” என்றார் தேவச்சந்திரனும் சபாபதிக்கு போன் அடித்து அவனை நாளை எந்தவித மறு பேச்சும் பேசாமல் ஊருக்கு வரச்சொன்னார் சபாவும் வருவதாக கூறி போனை வைத்தார்.
மாலை நேரம் கேசவனை சந்திப்பதற்காக வீட்டுக்கு வந்தான் சபாபதி. வந்த சபாபதியை வரவேற்று உட்கார வைத்து விட்டு, கேசவன் நேரடியாக தான் பேச வேண்டியதை பேச ஆரம்பித்தார். “மாப்பிள்ளை மோனி சொன்னா உங்களுக்கு சொந்தமா பிசினஸ் ஆரம்பிக்கிறது தான் பெரிய கனவு என்று சொல்லி உங்களுக்கு உதவி பண்ண சொன்னா.
அதுக்கு என்னால முடிஞ்ச உதவியை கண்டிப்பா செய்றேன். உங்களுக்கு நான் என்ன செய்யணும்?” என்று கேட்டார். அதற்கு சபாவும், “மாமா எனக்கு ஒரு கம்பெனி ஸ்டார்ட் பண்றதுக்கு கொஞ்சம் பினான்சியலா ஹெல்ப் பண்ணினா போதும்.” என்று சொன்னதும், உடனே, “அதுக்கு என்ன பண்ணிடா போச்சு. நாளைக்கு போறோம் ஒரு இடத்தை பார்க்கிறோம். உங்களோட கம்பெனிக்கான வேலையே ஸ்டார்ட் பண்றோம்.” என்று சொன்னார்.
சபாபதிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. தான் பிசினஸ் செய்ய போவதாக கூறிய போது அது செய்ய வேண்டாம் என்று கூறிய வீட்டினர்களும் ஆனால் நாளையே போய் பிசினஸ் வேலையை பார்ப்போம். என்ற கேசவனையும் நினைத்துப் பார்த்தான்.
சபாபதி கேசவன் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது சபாபதிக்கு போன் வந்தது. எடுத்து பார்க்க ராமச்சந்திரன் தான் அழைத்திருந்தார். போனை எடுக்கவில்லை. ஆனால் கேசவன் யாரு மாப்பிள்ளை போன்ல என்ற, அதற்கு சபாபதி, “என் வீட்டில் இருந்து தான் மாமா” என்றான். “சரி எடுத்து பேசுங்க ஏதாவது முக்கியமான விஷயம் இருக்கப்போகின்றது” என்றார்.
உடனே சபாவதியும், “பரவாயில்லை நான் அப்புறம் பேசிக் கொள்கிறேன்.” என்று சொல்ல,, “அட பேசுங்க மாப்பிள்ளை. பரவாயில்லை. அப்பாதானே போன் பண்றாங்க. ” என்று கேட்க, அவனும், “ஆமாம் மாமா” என்றவன் ஃபோனை எடுத்தான்.
“சொல்லுங்கப்பா” என்றான். ராமச்சந்திரனும், “சபா ஒரு முக்கியமான வேலை இருக்கு. நாளைக்கு நீ கட்டாயம் ஊருக்கு வரணும்.” என்றார். “என்னப்பா எதுக்கு நான் வரணும்? என்ன வேலை? என்று கேட்டான். அதற்கு ராமச்சந்திரன், “கேள்வி எதுவும் கேட்காத, நாளைக்கு காலையில நீ ஊர்ல இருக்கணும்.” என்று சொல்லி போனை வைத்தார்.
சபாவதியும் சரி என்று சொல்லிவிட்டான். “என்ன மாப்பிள்ளை” என்று கேட்டார் கேசவன்.” என்னன்னு தெரியல மாமா நாளைக்கு ஊருக்கு வரச் சொல்லி போன் பண்ணாங்க அப்பா.”
“அப்படியா மாப்பிள்ளை? நாளைக்கு நான் உங்க கம்பெனிக்கு இடம் பார்க்க போகலாம்னு நினைச்சேன். சரி பரவாயில்லை. முதல்ல ஊருக்கு போயிட்டு வாங்க. அப்புறம் கம்பெனியை பற்றி பார்க்கலாம்.” என்றார்.” சரி மாமா நான் போயிட்டு வரேன். நான் ஒரு ரெண்டு நாள்ல வந்துடுவேன். “என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
அப்போது அங்கே மோனிஷா வந்தாள்.” எங்க போற சபா? ” என்றாள். “ஊருக்கு போறன் மோனி. ” என்று சொல்லி போன் வந்தது முதல் நடந்ததை சொன்னான். அப்போ மோனி சபா, இது நல்ல சான்ஸ் தானே, நீ வேணும்னா நம்ம ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டதை உங்க வீட்டுல சொல்லிப்பாரு. ” என்றாள்.
அதற்கு கேசவனும்,”ஆமா சபா இதுவும் நல்ல ஐடியா தான். நிலைமையை பார்த்து உங்க ரிஜிஸ்டர் மேரேஜ் விஷயத்தை, வீட்ல சொல்லி பாருங்க.” என்றார். சபாவும்,” சரி மாமா சந்தர்ப்பம் கிடைச்சா நிச்சயமா பேசுறேன்.” என்று சொல்லிவிட்டு மோனிஷாவிடமும் சொல்லிவிட்டு சென்றான்.
காமாட்சியையும் நிஷாவையும் தேடி ஊரெல்லாம் திரிந்தான் கதிர். அவனுக்கு காளையன் சொன்னதை கேட்டதில் இருந்தே பயமாக இருந்தது. கடைசியாக அவர்கள் ஒரு மாந்தோப்பில் இருப்பதைப் பார்த்து அங்கே செல்ல முயன்றான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி 💙
காளையனை இழுக்கும் காந்தமலரே : 26
written by Thivya Sathurshi
காந்தம் : 26
சபாபதி தனது எண்ணத்தை மோனிஷாவிடம் சொல்ல நினைத்தான், “மோனிஷா நான் கேட்டால் தப்பா நினைக்க மாட்டே இல்லை.” என்றான். அதற்கு அவளும், “என்ன சபா இப்படி கேட்டுட்ட? என்னன்னு சொல்லு.” என்றாள். அதற்கு சபாபதி, “இல்லை மோனிஷா எனக்கு சொந்தமா கம்பெனி ஆரம்பிக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. அதுக்கு உங்க அப்பாவால் எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா?” என்று கேட்டான்.
அதற்கு மோனிஷா ,”உனக்கு ஹெல்ப் பண்ணாம வேற யாருக்கு சபா ஹெல்ப் பண்றது, சரி நமக்கு நிறைய கம்பெனி இருக்கும்போது நீ எதுக்கு சொந்தமாக கம்பனி ஆரம்பிக்க நினைக்கிற? நம்மளோட கம்பெனியையே பார்த்துக் கொள்ளேன்.” என்று சொன்னாள்.
அதற்கு சபாபதி, “இல்ல மோனிஷா, எனக்கு நான் ஆரம்பத்தில் இருந்து உழைச்சு சுயமா ஒரு கம்பெனி ஆரம்பிக்கணும் என்றது என்னோட சின்ன வயசுல இருந்து ஆசை.” என்றான் கண்களில் கனவு மின்ன.
அவனது ஆசையை கேட்ட மோனிஷாவும், “சரி சபா, நான் அப்பாகிட்ட பேசிட்டு சொல்றேன். ஆமா நீ என்ன கம்பெனி ஆரம்பிக்கலாம்னு இருக்கே.” என்று கேட்டாள். அதற்கு சபாபதியும் எனக்கு ஆர்ட் அண்ட் டிசைனிங்ல இன்ட்ரஸ்ட் இருக்கு. அதனால கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கம்பெனி ஒன்று ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறன் மோனி. என்றான்.
மோனிஷா,”வாவ் சூப்பர் சபா உன்னோட டிசைன்ஸ் எல்லாம் நானும் பார்த்திருக்கேன், சூப்பரா இருக்கும். கண்டிப்பா இந்த வொர்க் உனக்கு ஷூட்டா இருக்கு. சரி நான் டாடி கிட்ட பேசிட்டு உனக்கு சொல்றேன்.” என்றாள்.
அதற்கு சபாவும், “தேங்க்ஸ் செல்லம்.” என்றான். அவளும் வெட்கத்துடன் சிரித்துக் கொண்டாள்.
பின்னர் மாலையில் கேசவனுடன் பேசி விட்டு சபாவிடம் சொல்லலாம் என்று நினைத்தாள். மோனிஷா போனை எடுத்து சபாவின் கனவையும் அவன் ஆரம்பிக்கப் போகும் பிசினஸ் பற்றியும் கேசவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“எதுக்கு மோனிஷா மாப்பிள்ளை இன்னொரு கம்பெனி ஆரம்பிச்சுட்டு, இருக்கிற நம்மளோட கம்பெனியை பார்த்துக்க சொல்லுமா.” என்று சொன்னார். அதற்கு அவளும், “இல்லப்பா நான் இதை முன்னாடியே கேட்டேன். ஆனால் அவர் சுயமாக ஆரம்பிக்கணும்னு நினைக்கிறாரு. உங்களால ஹெல்ப் பண்ண முடியுமா? ” என்று கேட்டாள்.
அதற்கு மோனிஷாவின் அப்பா, “மாப்பிள்ளை ஆசைப்பட்டுட்டாரு அது செஞ்சு கொடுக்கிறது நம்மளோட கடமை. அவர் வந்து என்ன ஈவினிங் சந்திக்க சொல்லு.” என்றார். மோனிஷாவும் சரி அப்பான்னு சொல்லிவிட்டு, சபாவதியிடம் ஃபோனை எடுத்து கேசவன் சொன்னதை சொன்னாள். அவன் மகிழ்ச்சியுடன் ரொம்ப சந்தோஷம் மோனிஷா நான் ஈவினிங் போய் மாமாவை பார்க்கிறேன் என்று சொன்னான்.
அருவிக்கரைக்கு வந்த மலர்னிகாவின் மலர்ந்த முகத்தை பார்த்துக்கொண்டு நின்றான் காளையன். “அம்மணி நீங்க இப்படி சிரிச்ச முகமா இருக்கும்போது ரொம்ப அழகா இருக்கிறீங்க.” என்று சொன்னான் காளையன். அப்படியா என்று கேட்டு திருப்பிக்கொண்டாள் மலர்னிகா. “இங்க வாங்க அம்மணி, இந்த பாறையில் உட்கார்ந்துகொள்ளுங்க. நல்லா உட்கார்ந்திட்டு காலை தண்ணீரில் போட்டுக்கோங்க, நல்லா இருக்கும். என்று சொன்னான்.
அவளும் காளையன் சொன்ன மாதிரியே பாறையில் இருந்து கொண்டு காலை தண்ணீருக்குள் விட்டுக்கொண்டு இருந்தாள். அதே பாறையில் காளையன் சற்று தள்ளி உட்க்கார்ந்தான்., “அம்மணி நாங்க இங்கதான் சின்ன வயசில் விளையாடிட்டு இருப்போம். அதிலும் இந்த பாறையில் இருந்து இந்த அருவியோட சத்தத்தை ரொம்ப நேரம் கேட்டுட்டு இருப்பேன். அதுவும் பௌர்ணமி நேரத்தில இங்க வந்தா ரொம்ப அருமையா இருக்கும். அது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.” என்று அவனுக்கு பிடித்த விசயங்களை சொல்லிக் கொண்டு இருந்தான்.
மலர்னிகாவும் அதை அமைதியாக இருந்து கேட்டுக் கொண்டு இருந்தாள். பின்னர் அவள் புறம் திரும்பிய காளையன்,” உங்களுக்கு பிடிச்சதை பற்றி சொல்லுங்க அம்மணி “என்றான். அதற்கு அவள்,” அப்பா, அம்மா, நிஷாவை ரொம்ப பிடிக்கும். அவங்களுக்கு அடுத்து எனக்கு பிடிச்சது பிஸ்னஸ் பண்றது. என்று சொல்லும் போதே முகேஷ் செய்தது ஞாபகம் வர, அவளது முகம் மாறியது.
இதை கவனித்த காளையன் சட்டென்று அவளை திசைதிருப்பும் வகையில், “சரி அம்மணி நாம வந்து ரொம்ப நேரமாச்சு. வீட்டில தேடுவாங்க. போகலாமா?” என்று சத்தமாக கேட்க, சுயநினைவுக்கு வந்த மலர்னிகா, “போகலாம்” என்றாள். இருவரும் வீட்டுக்கு திரும்பிச் சென்றனர்.
மதிய நேரம் வீட்டிற்கு சாப்பிட வந்த ராமச்சந்திரனும், தேவ சந்திரனும் கூடத்தில் அமைந்திருந்தனர். விசாகம் பாட்டியும் பெருந்தேவனாரும் வந்து அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். சமையலறையில் குணவதியுடனும் நேசமதியுடனும் சேர்ந்து துர்க்கா பேசிக்கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது துர்க்கா கூடத்தில் எல்லோரும் இருப்பதை பார்த்தார். இதுதான் தான் பேசுவதற்கு சரியான சந்தர்ப்பம் என்று நினைத்தவர் அண்ணிகள் இருவரையும் அழைத்துக் கொண்டு கூடத்திற்கு வந்தார். எல்லோரையும் தயக்கத்துடன் பார்த்து, “அப்பா அம்மா நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். அண்ணா அண்ணி நீங்களும் இங்க இருக்கனும்னு நினைக்கிறேன்.” என்றார்.
உடனே, “என்ன துர்க்கா இது? அனுமதி எல்லாம் கேட்டுட்டு இருக்க, உனக்கு என்ன வேணும்? என்ன கேட்கணுமோ தாராளமா பேசலாம், கேட்கலாம்.” என்ற பெருந்தேவனார். சிரித்துக் கொண்ட துர்க்கா, “இத்தனை நாள் உங்களை எல்லாம் பிரிந்து ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்.
ஆனால் இதுக்கு மேல என்னால உங்களை விட்டு இருக்க முடியாது. நான் உங்க கூட இருந்திடுறன் அப்பா. “என்றார். அதற்கு அவர்கள், “நீ இங்கிருந்து போகணும்னு நினைச்சாலும், உன்னை நாங்க அனுப்புறதா இல்லைம்மா. நீ எப்பவும் போல எங்க தங்கச்சியா எங்க கூட இருக்கலாம். மலர்னிக்காவுக்கும் நிஷாவுக்கும் நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்கிறது எங்களோட பொறுப்பு.” என்றார் ராமச்சந்திரன்.
துர்க்கா, “ஆமா அண்ணா அதைப் பற்றித்தான் நான் இப்போ பேச நினைக்கிறேன். ” என்றார். ராமச்சந்திரனும் பெருந்தேவனாரும்,” என்ன துர்க்கா ஒரு மாதிரி இருக்கிறா, ஏதாவது பிரச்சனையா? “என்றார். அதற்கு துர்கா,” ஒன்னும் இல்லைப்பா. எனக்கு மனசுல ஒன்னும் பட்டுச்சுது. அதுதான் உங்ககிட்ட பேசி பார்க்கலாம் என்று நினைத்தேன். ” என்றார்.
பெருந்தேவனார், “அதற்கு என்ன துர்க்கா. நம்மகிட்ட சொல்ல என்ன தயக்கம்? உனக்கு என்ன தோணுச்சு? ” என்று கேட்டார். ” அது வந்து அப்பா, மலர்…. என்று இழுத்தார். தேவச்சந்திரன், “எதுக்கு இப்போ தயங்கிட்டு இருக்க? நாங்க யாரு உன்னோட அப்பா அம்மா தானே ஏன் இவ்வளவு தயங்கிட்டு இருக்க? நீ சொல்ல வந்தது என்னவோ அதை சொல்லிடு துர்க்கா” என்றார். அதற்கு துர்க்கா பட்டென்று விசயத்தை போட்டு உடைத்தார்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி 💙
காளையனை இழுக்கும் காந்தமலரே : 25
written by Thivya Sathurshi
காந்தம் : 25
கதவைத் தட்டும் சத்தத்தில், யார் என்று கேட்டான் காளையன். நான் தான் என்றாள் மலர்னிகா. குரலில் அவள் தான் வந்திருப்பது என்று உணர்ந்தவன், “உள்ளே வா மலர் புள்ள.” என்றான். அவளும் உள்ளே சென்றாள்.
“சொல்லு புள்ள ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டான். அதற்கு அவள் எதுவும் பேசாமல், தனது கையில் இருந்த கிரீமை அவனிடம் நீட்டினாள். சிரித்தவாறு அதை வாங்கிக் கொண்டவன், “ரொம்ப நன்றி புள்ள.” என்று சொல்லியவாறு, அவனது வலது கையில் காயம் பட்டிருந்ததால் இடது கையால் கிரீமை போட முயன்றான். இடது கை அவனுக்கு பழக்கம் இல்லை. அதனால் வலது கையில் இருந்த காயத்திற்கு மருந்து போடுவது கடினமாக இருந்தது.
அதைப் பார்த்த மலர்னிகா அவனுக்கு உதவ வந்தாள். மெல்ல காளையனுக்கு அருகில் சற்று இடம் விட்டு கட்டிலில் அமர்ந்தாள். அவனது கையை தனது ஒரு கையில் பிடித்துக் கொண்டு மறுக்கையால் அந்த கிரீமை அவனது காயத்தில் பூசி விட்டாள். கிரீமை காயத்தில் போடவும் காளையனுக்கு எரிச்சல் மிகுந்தது. “ஐயோ அம்மா எரியுதே.” என்றான்.
அதற்கு மலர்னிகா எதுவும் பேசவில்லை. பேசாமல் இருந்து கிரீமை போட்டுட்டு காயத்தில் ஊதிக் கொண்டிருந்தாள். காளையன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் மெல்ல அவளிடம் பேச்சு கொடுத்து அவளின் பிரச்சனையை அறியாமல் என்று நினைத்தான்.
“அம்மணி நான் ஒன்னு கேட்டா சொல்லுவீங்களா?” என்றான். அதற்கு மலர்னிகா பதில் பேசவில்லை. நீங்க முன்னாடி நல்லா பேசுவீங்கனு அத்தை சொன்னாங்க. ஆனால் இப்போ பேசுறீங்களே இல்லை. ஏன் எங்களையும் ஊரையும் யாரையும் பிடிக்கலையா உங்களுக்கு?” என்று கேட்டான்.
அவள் இல்லை என்று தலையாட்டினாள். அப்போ உங்களோட அளவிற்கு நாங்க படிக்கலைன்னு யோசிக்கிறீங்களா?” என்றான். அதற்கும் அவள் இல்லை என்று தலையாட்டினாள். “சரி அப்போ உங்களுக்கு வேற ஏதோ பிரச்சனை அது உங்களுடைய தனிப்பட்ட விஷயம். என்னனு எங்கிட்ட சொல்ல வேண்டாம். ஆனால் நீங்க பேசினா நல்லா இருக்கும்ன்றது என்னோட அபிப்பிராயம்.
கொஞ்சமாவது எங்க கூட பேசுங்க ரொம்ப நாள் கழிச்சு நீங்க அத்தை எல்லாரும் இங்க வந்தது எங்க வீட்ல எல்லாருக்கும் சந்தோஷம். ஆனால் நீங்க பேசாம இருக்கிறது அவங்க எல்லோரையும் ஏதோ ஒரு வகையில் உறுத்திட்டே இருக்கும். முக்கியமா அத்தைக்கு. உங்களோட சந்தோசம்தான் அவங்களோட சந்தோசம் என்று இத்தனை நாள் இருந்தாங்க.
இப்போ நீங்க இங்க வந்ததுக்கு பிறகு இப்படி உம்மென்று இருக்கிறது பார்க்க அவங்களுக்கும் கஷ்டமா இருக்காதா? ” என்றான். அப்போதுதான் வாயை திறந்தாள் மலர்னிகா.” அப்பிடி இல்லைங்க எனக்கு புது இடம், அதுதான் எனக்கு பேசறது கஷ்டமா இருக்கு. ” என்றாள்.
அதற்கு காளையன்,” ஏன் புள்ள எங்களை புதுசா பாக்குறீங்க? நாங்க உங்களோட சொந்தக்காரவங்கதான். முதல்ல அப்படித்தான் இருக்கும். பிறகு சரி ஆயிடும்.” என்றான். அவளும் சரி என்றாள். பின்னர் காளையன் தயக்கத்துடன்,” நான் உங்ககிட்ட ஒண்ணு கேட்பேன். தப்பா எடுத்துக்காதீங்க. உங்களுக்கு யாராலாவது ஏதாவது பிரச்சனை வந்து இருக்கா, நீங்க இருந்த ஊர்ல? ” அப்படி கேட்டான் காளையன். இப்படி திடீரென கேட்பான் என்பதை அறியாத மலர்னிகா உடனே திடுக்கிட்டு பார்த்தாள்.
அவளது பார்வையிலே புரிந்து கொண்டான். மேலும் அதைப் பற்றி கேட்டு அவளை சங்கடப்படுத்த விரும்பவில்லை.” உங்களை இங்க இருக்கிற ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன் வரீங்களா?” என்று கேட்டான்.
மலர்னிகாவிற்கு ஏனோ போகலாம் என்று தோன்றியது. இருந்தாலும் அவனது காயம் ஞாபகம் வந்தது. “உங்களோட கையில காயம் இருக்கே.” என்றாள். அதற்கு அவன் நாம நடந்து போற தூரம்தான் புள்ள, போகலாம்.” என்றான்.
அவளும் சரி போகலாம் என்றதும், இருவரும் கீழே வந்தனர். அப்போது கீழே இருந்த நேசமதி,” என்ன எங்க கிளம்பிட்டீங்க? “என்று கேட்டார். அதற்கு காளையன்,” அம்மா மலர்புள்ள வந்ததிலிருந்து அறைக்குள்ளே இருக்குது. அதுதான் நான் அருவிக்கரை ஓரமாக மலைப்பக்கமா கூட்டிட்டு போய் காட்டிட்டு வாரேன்.” என்று சொன்னான்.
அதற்கு குணவதி, “அதுவும் சரிதான் காளையா. பத்திரமா கூட்டிட்டு போய் கூட்டிட்டு வா.” என்று சொன்னார். உடனே அவனும் சரி என்று சொல்லிவிட்டு வெளியே வந்தான் இருவரும் சேர்ந்து செல்வதை பார்த்துக் கொண்டு நின்றார் குணவதி.
இருவரும் சேர்ந்து நடந்து கொண்டிருந்தனர். வழியில் இருந்தவற்றை பற்றி காளையன் பேசிக் கொண்டு வர, அவற்றை மௌனமாக கேட்டுக் கொண்டு வந்தாள் மலர்னிகா. அவள் பதில் பேசவேண்டும் என்று காளையனும் எதிர் பார்க்கவில்லை.
மலையடிவாரத்தில் அருகில் சென்றனர். அங்கே மேலே இருந்த நீர்வீழ்ச்சியில் இருந்து ஓடி வருகின்ற அருவி அந்த மலையடிவாரத்திலே விழுந்தது. சில்லென்று வீசும் காற்றும் நதிகளின் சலசலப்பும் மலர்னிகாவின் மனதுக்கு குளிர்ச்சியை தந்தது.
மெதுவாக தனது காலில் இருந்த காலணியை கழட்டி வைத்துவிட்டு தண்ணீரில் இறங்க போனாள் பாவம் இதுவரை அருவியில் இறங்கி பழக்கம் இல்லை போல பாசியில் காலை வைத்து விட்டாள். அவள் விழப்போகிறாள் என்பதை உணர்ந்த காளையன் சட்டென்று அவளது கையைப் பிடித்துக் கொண்டான் இருவர் கண்களும் பாஷை பேசியது.
கம்பெனிக்கு வந்த மோனிஷாவின் கண்கள் சபாபதியின் இடத்தை நோக்கியது. சபாபதி இன்னும் கம்பெனிக்கு வந்திருக்கவில்லை. என்னாச்சு சபாக்கு? எப்பவும் நேரத்தோட வந்துருவான் கம்பெனிக்கு. இன்னைக்கு லேட்டாகுது என்று யோசித்துக் கொண்டு இருந்தாள் மோனிஷா.
அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே வேக வேகமாக வந்தான் சபாபதி. சபாபதியை பார்த்ததும் கண்களை சிமிட்டி சிரித்தாள் மோனிஷா. பதிலுக்கு சபாபதியும் சிரித்துக் கொண்டான். பின் இருவரும் அவரவர் வேலைகளை பார்க்க ஆரம்பித்தனர். பின்னர் இடைவெளியின் போது கேண்டினில் இருந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது சபாபதி அவளிடம் எதையோ பேச வருவதும் பின்னர் அதை சொல்ல தயங்குவதுமாக இருந்தான். அவன் வந்ததில் இருந்து அவனைக் கவனித்துக் கொண்டு இருந்த மோனிஷா, என்ன சபா எங்கிட்ட ஏதாவது கேட்கணுமா? இல்லை ஏதாவது சொல்லணுமா?” என்று கேட்டாள்.
அவள் அவனைப் பார்த்து இப்படி கேட்டதும் அவளை பார்த்து பேச மேலும் தயங்கினான் சபாபதி.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி 💙
காளையனை இழுக்கும் காந்தமலரே : 24
written by Thivya Sathurshi