உயிர் -31
ஈஸ்வரனது வருகை நேஹாவிற்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
கடவுளே நேரில் தோன்றியது போல ஒரு விதமான பரவச நிலையில் சுற்றிக் கொண்டு இருந்தாள்.
ஈஸ்வரனும் புகழனியும் அதனைக் கவனித்துக் கொண்டு தான் இருந்தனர்.
அதீத மகிழ்ச்சியால் சிரித்த முகத்தோடு வலம் வந்தாள்.
நேஹாவினுடைய வீட்டில் வேலையாட்கள் நான்கு பேர் இருந்தார்கள்.
வீட்டிற்கு வெளியே மூன்று காவலாளிகள் என மொத்தம் ஏழு பேர் இருந்தனர்.
அவர்களுக்கு நேஹாவின் வீட்டின் அருகிலேயே வீடு கட்டித் தரப்பட்டிருந்தது.
சுழற்சி முறையில் வீட்டில் இரு வேலையாட்கள் தங்குவார்கள்.
வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிகமாக நேஹா வீட்டிலிருப்பதில்லை.
நிறுவனத்தில் தான் இருப்பாள்.
வீட்டிற்கு வந்தால் தனிமை எனும் பேய் அவளை பயமுறுத்தும் என்பதால் வீட்டிற்கு இரவு உறங்க மட்டுமே வருவாள்.
இரவின் இனிமையும், ஈஸ்வரனின் நினைவும் அவளை படுத்தி எடுத்து விடும் இரவினில்.
நேஹாவே புகழனியிடம் ஆச்சரியப்பட்டுக் கொண்டாள்.
“ உங்கண்ணன் வந்தது ரொம்பவே சர்ப்ரைஸா இருக்கு…அதே சமயம் சந்தோஷமாவும் இருக்கு…முதல் முறையா அவரே ஆசைப்பட்டு வந்துருக்கார். ஐ யம் சோ ஹேப்பி…” என்றாள்.
புகழினி சிரித்தபடி, “ ஆமா நேஹா…வாழ்க்கைல அதுக்குன்னு மொத முறையா ஆசைப்பட்டு கேட்டுருக்கு…ஆமா சோஷியல் மீடியால கூட உங்களைப் பத்தி பெருசா தகவல் ஏதும் இல்லையே…? ஏன்…?” என்றாள்.
“ ம்ம்ச்…சும்மா வா…போன்னே கூப்பிடுங்க…மரியாதையா கூப்ட்டு என்னை தள்ளி வைக்காதீங்க… “ என்றாள் வருத்தமாக .
“ம்ம்..சரி…நீயும் என்னைய வா…போன்னே கூப்பிடு..எனக்கும் என்னவோ போல இருக்கு..” என்றாள்.
“ ஒகே..டன். என்ன கேட்ட…? சோஷியல் மீடியால என்னை பத்தி பெருசா தகவல் ஏதும் இல்லைன்னுட்டா….? அது வந்து…அப்பா அம்மா உயிரோட இருக்கும்போதே நான் இன்னாரோடு பொண்ணுன்னு எக்ஸ்போஸ் பெருசா பண்ணிக்க மாட்டேன்…என்னைய பத்தின தகவலும் யாருக்கும் தெரியாது. அவங்க போனதுக்கப்பறம் என்னோட வட்டம் ரொம்பவே குறுகிடுச்சு..முக்கியமா சேஃப்டி…இப்பவும் என்னை சுத்தி இருக்குறவங்க எல்லாரும் உண்மையா இருக்காங்கன்னு சொல்ல முடியாதுல்ல…ஏதோ ஒரு நம்பிக்கையில , சிசிடிவி…பாடிகார்டஸ்…பேட்ரோல்…இதையெல்லாம் டிப்பண்ட் பண்ணிதான் என்னோட பாதுகாப்பு இருக்கு.. உறவுகளும் தொடர்புல இல்ல…தட்ஸ் ஓகே..போற வரைக்கும் போகட்டும் ..”என சிரித்தாள்.
அதில் வலியையும் தனிமையின் பயத்தையும் உணர முடிந்தது புகழினி மற்றும் ஈஸ்வரனால்.
முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டான் ஈஸ்வரன்.
அவள் பால் சாயத் தொடங்கிய மனதை கட்டுக்குள் கொண்டு வந்தான்.
எதிர்பார்ப்பில்லாத அவளது அன்பு அவனை சிறிது அசைத்து தான் பார்த்தது.
ஆனால் அவளது உயரத்தையும், அலட்டலில்லாத ஆளுமையையும் பார்த்தவன் தகுதிக்கு மீறிய எண்ணங்கள் வளர்வதை தடுக்க தன்னுள்ளே துளிர்த்த ஆசை விதையை புதைத்துக் கொண்டான்.
மீண்டுமொரு தோல்வியை சந்திக்க அவன் விரும்பவில்லை.
“ புகழினி…சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க…. மீனாட்சி இருக்குற இடம் இங்கிருந்து பக்கம் தான் …போய் பாக்கனும்ன்னா…பாத்துட்டு வரலாமா…?”எனத் தயங்கியபடி கேட்டாள்.
புகழினி பதிலளிப்பதற்கு முன்பே ஈஸ்வரன்,
“என்ன போட்டு பாக்குறீகளோ…? ஒண்ணுந்தேவையில்லை…முக்கியமா அவனை பாக்க நான் விரும்பல…அதோட மீனாட்சி என் வாழ்க்கையில முடிஞ்சு போன அத்தியாயம்…முடிஞ்சதாவே இருக்கட்டும்…எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்…அம்புட்டு தான்…” என்று முடித்துக் கொண்டான்.
“ சாரி…நான் உங்ககிட்ட போட்டு வாங்கலை…புகழினி மீனாட்சியோட ப்ரெண்டு தானே…அதான்…” என்றவளுக்கு தான் பேசுவது அபத்தம் என்று நன்றாகவே புரிந்தது.
ஏனெனில் இன்னும் ஈஸ்வரன் மீனாட்சியின் நினைவில் இருக்கின்றானோ என்ற சந்தேகம் லேசாக மனதை அரித்துக் கொண்டு தான் இருந்தது.
அந்த அளவிற்கு நேஹாவின் வார்த்தையில் பொதிந்திருக்கும் பொருள் தெரியாதவனா ஈஸ்வரன்.
இரு நாட்கள் புகழினியின் கலந்தாய்வு முடிந்தது .
மூன்றாம் நாள் சீக்கிரமே முடிந்துவிட்டது. பிக் பென்(Big Ben) அரண்மனை மணிக்கூண்டு, மற்றும் பக்கிங்காம் அரண்மனை ஆகியவற்றை சுற்றிப் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்தனர்.
மறுநாள் காலையில் கிளம்ப வேண்டும்.
முதல் நாள் இரவு புகழினி நேஹாவின் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தாள்.
அப்போது ஏதோ கோப்புகளை எடுத்துக் கொண்டிருந்தாள் நேஹா.
எடுக்கும் போது கீழே சில கோப்புகள் விழுந்ததை கவனிக்கவில்லை. அவசர அழைப்பு அவளுக்கு வரவே அலைப்பேசியில் பேசிக்கொண்டே வெளியே சென்றாள்.
அதனை நேஹாவிடம் கொடுக்க முயன்றாள் புகழினி.
அதற்குள் அவள் அறைக்கு வெளியே சென்றுவிடவே …சரி வந்த பிறகு அவளிடம் கொடுக்கலாம் என நினைத்து மேசையில் வைத்த போது அந்த கோப்புகளில் இருந்த எழுத்துக்கள் அவளது கவனத்தை ஈர்த்தன.
யோசனையுடன் அதை எடுத்துப் பார்த்தாள் புகழினி .
ஒரு கோப்பின் வெளிப்புறமாக கள்ளிக்குடியில் உள்ள அவர்களின் சர்க்கரை ஆலையின் பெயர் இருந்தது.
அவசரமாக அதைப் பிரித்துப் பார்த்தாள். அந்த சர்க்கரை ஆலையை கணேசன் என்ற பெயரில் அவள் தான் வாங்கியிருந்தாள்.
ஆலையின் பத்திரம் ஈஸ்வரனின் பெயருக்கு மீண்டும் மாற்றப்பட்டிருந்தது.
அருகிலிருந்த மற்றொரு கோப்பினை எடுத்துப் பார்த்தாள்.
அதில் புகழினியின் மருத்துவமனைக்கு உபகரணங்கள் வாங்கிய கணக்கு இருந்தன.
அனைத்தும் உலகத்தரம் வாய்ந்த உபகரணங்கள்.
ஒவ்வொரு உபகரணங்களின் விலையும் கோடியைத் தாண்டும்.
அடுத்தடுத்து கோப்புகளை பரபரவென பார்த்தவள் நிலைகுலைந்து தான் போனாள்.
ஏனெனில் மருத்துவர்களை வேலைக்கு அமர்த்துவது முதல், கடை நிலை ஊழியர்கள் வரை அனைத்தையுமே அவள் தான் ஏற்பாடு செய்திருந்தாள்.
அவர்களுக்கான சம்பளத்தில் இரு பங்கினை நேஹா கொடுத்திருந்தாள்.
மீதியை மட்டும் புகழினி அவர்களுக்கு சம்பளமாக வழங்குவது போல் கணக்கு எழுதப்பட்டிருந்தது.
தற்செயலாக அங்கு வந்த ஈஸ்வரன் பேயறைந்தார் போல் அமர்ந்திருக்கும் புகழினியை உலுக்கினான்.
“என்னாச்சு புகழு…? ஏன் இப்படி பேயறைஞ்சாப்பல உக்காந்திருக்க…? அதுவும் அவுக ரூம்ல…?” என்றான்.
புகழினி பதிலேதும் பேசாமல் கோப்புகளை அவனிடம் கொடுத்தாள்.
ஈஸ்வரனுக்கு ஓரளவிற்கு ஆங்கிலம் புரியும் எனபதால் அதனை வாங்கிப் பார்த்தான்.
“ எல்லாத்தையும் நேஹா தாண்ணே வாங்கிருக்கா…எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. நாம டாக்டர்ஸூக்கு இரண்டு பங்கு தான் சம்பளம் தரோம்…மீதி ரெண்டு பங்கு நேஹா தான் தரா…சர்க்கரை மில்லையும் அவ தான் ரெண்டு மடங்கு விலையை கொடுத்து வாங்கிருக்கா…அதை திரும்பவும் உம் பேர்லயே மாத்திட்டா…மெடிக்கல் எக்யூப்மெண்ட்ஸ்யெல்லாம் அவ தான் நமக்கு குறைச்சலான விலைக்கு கொடுத்திருக்கா…ஆனா எல்லாமே ஃபர்ஸ்ட் கிளாஸ் குவாலிட்டி….பாதி பணம் தான் நம்ம கொடுத்திருக்கோம். மீதியை அவ தான் கொடுத்திருக்கா…”என குரல் கமறக்கூறினாள்.
ஈஸ்வரனின் சற்று ஆடித் தான் போனான்.. தன்னிடம் அப்படி என்ன இருக்கிறது என்று இவ்வளவு இந்தப் பெண் செய்கின்றது…?
ஒருவேளை பணம் அதிகம் இருப்பதால் அதனை செலவழிக்கும் மார்க்கம் தெரியாமல் உதவிகின்றாளா…? என்ற சந்தேகமும் வந்தது.
அது அப்படியில்லை என்று அவனது ஆழ்மனதிற்கு நன்றாகவே தெரியும்.
ஆனாலும் வீம்புடன் அப்படித்தான் என மனதினுள் பதிய வைத்துக் கொண்டான்.
மறுபுறம் ஆத்திரமாகவும் வந்தது. தனது சுயமரியாதை சீண்டப்படுவதாக உணர்ந்தான்.
யாரிடமும் உதவி என்று போய் நின்றிராதவனுக்கு இவ்வளவு பெரிய தொகையை நேஹா கொடுத்திருந்தது அதுவும் தங்களுக்கேத் தெரியாமல் செய்த்தது அவனது கோபத்தை அதிகரித்தது.
அவள் மேலெழுந்த சலனம், சர்க்கரை ஆலையை அவள் வாங்கியது, மருத்துவமனை விஷயத்தில் அவளது பங்கு..என அனைத்தும் அவனை தன்னிலை இழக்கச் செய்தது.
சிவந்த விழிகளுடன் அமர்ந்திருந்தான் ஈஸ்வரன்.
புகழினிக்கு அவனின் மனநிலை நன்றாகவே தெரிந்தது.
எச்சிலைக் கூட்டி விழுங்கிய படி அவனைப் பார்த்தாள்.
அவனது கோபம் அவளறிந்ததே.
“ஓகே..ஒகே..” என்றபடி அறையினுள் நுழைந்தாள் நேஹா.
ஈஸ்வரன் தனது கட்டிலில் உரிமையாக அமர்ந்திருந்ததை கண்டு இன்பமாக அதிர்ந்தாள்.
கட்டிலின் எதிரிலிருந்த நாற்காலியில் புகழினி கலக்கத்துடன் அமர்ந்திருந்தாள்.
“ என்ன ஈஸ்வரன்.. , புகழினி இரண்டு பேரும் அமைதியா இருக்கீங்க ? நாளைக்கு காலையில நானே வந்து ட்ராப் பண்றேன்…அதுக்கு முன்னாடி இந்தாங்க புகழினி உங்களுக்கு ஒரு சின்ன கிஃப்ட் “ என சிறிய அளவிலான அழகிய வேலைப்பாடமைந்த தங்க நிற டப்பாவை அவளிடம் கொடுத்தாள்.
புகழினியோ மிரட்சியுடன் ஈஸ்வரனைப் பார்த்தாள்.
அவனோ எந்நேரமும் வெடிக்கத் தயாராகும் எரிமலையாக இருந்தான்.
புகழினி ஈஸ்வரனை பார்ப்பதை கண்ட நேஹா அவளது கைகளைப்பிடித்து அதில் தனது பரிசினை வைத்து அழுத்தியவாறு, “ அட…! இதுக்கெல்லாம் உங்கண்ணன் ஒன்னும் சொல்ல மாட்டாரு…வச்சுக்கோங்க…நீங்க வந்ததுல ரொம்பவே சந்தோஷம்…” என வைத்து அழுத்தம் கொடுத்தாள்.
மெல்லிய சிரிப்புடன் ஈஸ்வரனின் அருகில் வந்தவள் , “ இ…இது…உங்களுக்கு…உங்களுக்காக மட்டும்…ஊருக்கு போன பிறகு பிரிச்சி பாருங்க…” என லேசாக நாணம் மேலிட அவனிடம் கொடுத்தாள்.
அவன் வாங்காமல் நிற்கவோ , அவளே, “ம்ம்ச்…இது சின்ன பொருள் தானே…? என்னவோ…சொத்தையே நான் எழுதித் தர மாதிரி வாங்காம இருக்கீங்க…பிடிங்க…”என சிறிய பெட்டியை அவனது கையில் வைத்து அழுத்தினாள்.
இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த கோபம் ஆழிப் பேரலையாய் பீறிட்டு வந்தது அவனுக்கு..
“சீலீர்..,.” என்ற சத்தத்துடன் உடைந்து சிதறியது உயர் ரக சிவப்பு கிரஸ்டலில் செய்த இதயத்தை தாங்கும் இரு அன்னப் பறவைகளின் சிலை.
நேஹாவின் இதயமும் சிவப்பு இதயத்தோடு இருந்த அன்னப்பறவை சிலையைப் போல சில்லு சில்லாக உடைந்து தான் போனது.
சட்டென்று நிமிர்ந்து கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டான் ஈஸ்வரன்.
“ அண்ணே…! என்னப் பண்ற..?” என பதறியபடி வந்தாள் புகழினி..
“ம்ம்..ம்..நீ கொஞ்சம் வெளியே போ…”என அவளிடம் காய்ந்தான் ஈஸ்வரன்.
“அண்ணே..!” என இழுத்தவளிடம் , “உன்னைய வெளியே போகச் சொன்னேன் புகழு….” என்றான்.
அவனிடமிருந்த வந்த அழுத்தம் புகழினியை வெளியேற வைத்தது.
“ ஈஸ்..வரன்…ஏன்…?” எனத் திக்கியபடி எழுந்தவள் கட்டிலிலிருந்த கோப்புகளை பார்த்தாள்.
பாய்ந்து சென்று அதை எடுக்க முயன்றவளது முழங்கைகளை இறுக்கிப் பிடித்தவாறே அவளது மென்பஞ்சு போன்ற கன்னத்தைப் பார்தத்தான்.
அவனது ஐந்து விரல்களின் அச்சு வரி வரியாக பதிந்திருந்தது.
அவளது கன்னத்தை வருடத் நினைத்த கைகளை பின்னிழுத்துக் கொண்டு, “ எதுக்கு இப்படி பண்ணுனன்னு உன் கிட்ட கேக்க விரும்பல…ஒண்ணு தெரிஞ்சுக்க…இந்த ஈஸ்வரனை கையாலாகாதவனா தான் நீயும் நினைச்சிட்ட… யாரு கிட்டயும் கையேந்த மாட்டான் இந்த ஈஸ்வரன். அது யாரா இருந்தாலும் சரி. நான் வந்து உன் கிட்ட கேட்டேனா..? எனக்கு உதவி பண்ண்ன்னு…நீயே என்னவோ உரிமைபட்டவளாட்டம் எங்க வீட்டு விஷயத்துல இஷ்டத்துக்கு தலையிட்டு …இல்லாத வேலையெல்லாம் பண்ணி வச்சிருக்கவ…? யாரும் உதவி பண்ணச் சொல்லி உன்கிட்ட வந்து கேட்டோமோ…? இங்காரு… இது தான் கடைசியா இருக்கனும்…இனி எங்க வீட்டு விஷயத்துல ஏதாவது கோளாறுத்தனம் பண்ணனும்னு நினைச்சீன்னா…நான் மனுஷனா இருக்க மாட்டேன்…பாத்துக்க…இந்த பணம் பகட்டெல்லாம் பாத்து மயங்குற ஆள் கிடையாது நான். எவ்வளவு தில்லுமுல்லு பண்ணிருக்கவ…? என்னடா மில்லுக்கு அவ்வளவு தூரம் அலைய விட்டவன் ரெண்டு மடங்கா பணத்தை தாரேங்குறான்னேன்னு யோசிச்சேன். இந்த புகழு தான் ஏதேதோ சொல்லி விட்டுருச்சு. இல்லையின்னா அப்பவே சுதாரிச்சிருப்பேன். என்னென்ன ஏமாத்து வேலை பாத்துருக்க நீயு…இது எதுவுமே எனக்கு தெரியலை ல . என் கிட்ட இருக்குற சொத்தே என்னோட சுயமரியாதை மட்டுந்தான். அதையும் இழக்க வச்சிட்டு என்ன வெறுமன நிக்க வைக்காத…கடைசியா ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க…உனக்கேத்த மாதிரி ஒரு வாழ்க்கை அமைச்சிட்டு வாழப் பாரு….வீணா எனக்காக காத்திருந்து ஏமாறாதே…! உனக்கு எவ்வளவு பணம் தரணும்னு கணக்குப் போட்டு குடு. என்னால எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொடுத்துடுறேன்” என்றான்.
அவளோ கண்களை துடைத்துக் கொண்டு பொங்கி வந்த அழுகையை உள்ளிழுத்து ,” புருஷனுக்காக பொண்டாட்டி உதவுறது ஃபினான்ஷியல் சப்போர்ட்டா தான் எனக்குத் தெரியுது. எனக்கு அது தப்பா தெரியலை. நீங்க என்னைய தள்ளியே தான் நிறுத்திறீங்க. ஆனா…நான் …உங்களை …என்னோட வாழ்க்கைத் துணையா நினைச்சு தான் இந்த உதவியை பண்ணுனேன். நீங்க அதுனால ரொம்ப ஹர்ட் ஆகிருந்தா என்னைய மன்னிச்சிடுங்க…நான் கணக்குப் போட்டு தர்றேன்…ஆனா இந்தப் பணத்தை எனக்குத் தராதீங்க…உங்க ஊர்ல லேடீஸ்க்குன்னு ஏதாவது பண்ணனும்னு நினைச்சிட்டு இருக்கேன். அவங்களுக்காக வேலைவாய்ப்பை உருவாக்குற மாதிரி எல்லா வகையான கைவினை பொருட்களை தயாரிக்க ட்ரைனிங் கொடுத்து அவங்க அங்கிருந்து அவங்க செஞ்சி கொடுக்குறத பொருட்களை லண்டன்ல மட்டுமில்ல எல்லா கன்ட்டீரீஸ்லையும் இம்போர்ட் பண்ற மாதிரி ஃப்ளான் இருக்கு. அதுக்கான பில்டிங், மெஷினரீஸ் எல்லாம் வாங்கனும்…இதெல்லாம் இம்ப்ளிமெண்ட் எப்படியும் இரண்டு வருஷமாவது ஆகும். நீங்க எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை அந்த டிரஸ்ட்ககு கொடுத்திடுங்க….ப்ளீஸ்..இந்த விஷயத்துல பணம் கொடுத்து என்னைய அசிங்கப்படுத்தாதீங்க….” என்றாள்.பணம் நிறைய இருக்குன்னு நான் இதையெல்லாம் செய்யலை. உங்க ஊர்ல வந்து எல்லாத்தையும் எல்லாரையும் பாத்ததுக்கு அப்பறம் தான் இதெல்லாம் பண்ணனும்னு நினைச்சேன்.”என்றாள்.
அதைக் கேட்டவனுக்கு கோபம் இருந்த இடம் தெரியாமல் போயிருந்தது.
சொல்ல முடியாத உணர்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக முட்டி மோதிக்கொண்டு இருந்தன அவனது மனதில் .
ஆனாலும் இறுக்கமாகவே முகத்தை வைத்திருந்தான்.
அவனருகே வந்தவள் அவனது முகத்தை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, “ எந்த நிமிஷத்துல உங்களை பிடிக்க ஆரம்பிச்சதுன்னே தெரியல…ஆனா வாழ்க்கை முழுசும் உங்களோட கையைப் பிடிச்சிட்டு கூடவே வரணும்னு ஆசை…கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் ஆகப்போகுது…கொஞ்சம் கூட உங்க மனசுல என் மேல் அபிப்பிராயம் வரலன்னா நா ரொம்ப அன்லக்கி தான். இனி இந்த மாதிரி சந்தர்ப்பம் எப்ப அமையுமான்னு தெரியாது. ஆனா இப்ப இந்த நிமிஷத்தை நான் இழக்க விரும்பலை. எனக்குள்ள இருக்குற ஏக்கத்தை தீர்த்துக்குறேன். இதுக்கும் அடிக்கணும்ன்னா அடிச்சிக்கோங்க….ஐ யம் வெரி சாரி…”என்றவள் அவன் எதிர்பாராத விதமாக எம்பி அவனது முரட்டு இதழ்களில் தனது இதழ்களை பொருத்தினாள்..
தினமும் அவனது புகைப்படத்திற்கு முத்தமிட்டு கொண்டிருந்தவளின் இதழ்கள் ஏக்கத்தோடு அவனது இதழ்களை சிறைச் செய்தது. கண்களில் அவனுக்கான ஏக்கம் கொட்டிக் கிடந்தது.
முப்பத்தி மூன்று வயதில் ஒரு பெண்ணிடமிருந்து பெரும் முதல் முத்தம்.
சித்தத்தை கலங்கடித்துக் கொண்டிருந்தது. அவளது இதழ்கள் இன்னும் ஆழமாக அவனுள் புதைய தொடங்கிய நேரம் அவனையுமறியாமல் அவனது கரங்கள் அவளது இடைத் தொட முற்பட்ட போது சுதாரித்து அவளை விலக்கித் தள்ளினான்.
நிலை தடுமாறி கட்டிலில் விழுந்தாள்.
தன் மீதே ஈஸ்வரனுக்கு கோபமாக வந்தது . கேசத்தை அழுத்தமாக கோதினான்.
அவளை விட்டு விலக வேண்டும் என்ற முடிவு கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்து கொண்டே இருந்தது.
அவளை முறைத்து பார்த்து விட்டு விறுவிறுவென வெளியேறினான்.
கட்டிலில் மல்லாந்து விழுந்திருந்தவளின் கண்ணீர் தலையணை நனைத்தது.
கன்னத்தை தொட்டுப் பார்த்தவளுக்கு எரிந்தது.
முத்தத்தின் இனிமையும் , அவனது வார்த்தைகளினால் எழுந்த வலியும் ஒருங்கே எழுந்தது.
மெல்ல எழுந்தவள் அவன் உடைத்துச் சென்ற பரிசுப்பொருளின் துகள்களை சுத்தம் செய்தாள்.
தன்னை ஏற்றுக் கொள்ளவே மாட்டான் என்ற எண்ணம் வலுவடைந்தது அவளுள்.
அவளது முத்தத்தை சில கணங்களுக்கு உள்வாங்கி கொண்டவனின் தடுமாற்றத்தை அவள் உணர்ந்து கொள்ளாமல் போனாள்.
தன்னுடைய அறைக்குள் வந்தவனுக்கோ நிலை கொள்ளவே முடியவில்லை.
ஓரளவிற்கு மேல் அவளிடம் தன்னால் கடுமை காட்ட முடியவில்லை என்பது நிச்சயமாக தெரிந்தது.
கலங்கிய விழிகளும் நடுங்கிய இதழ்களும் அவனை இம்சித்தன..
இரவு முழுவதும் தூக்கத்தை தொலைத்தனர் இருவரும்.
மறுநாள் விடியற்காலையில் நேஹாவே அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றாள்.
மூவரிடமும் மௌனமே ஆட்சி செய்தது.
விமானம் கிளம்ப சற்று நேரம் இருந்தது.
“ புகழினி நான் உங்கண்ணன் கிட்ட சில விஷயம் சொல்லிருக்கேன்…அப்பறம் உனக்கு ஃபோன் பண்ணுறேன்…ரிமெய்னிங் அமௌண்ட்ட அதுக்கு யூஸ் பண்ணிக்கலாம்…பை…டேக் கேர்…” என்றாள்.
பின்னர் ஈஸ்வரனின் அருகில் வந்து , “போயிட்டு வர்றேன்…டேக் கேர்.. எப்படியும் என் மெசேஜ் தினமும் வந்துட்டு தான் இருக்கும்…. கோவப் படாதீங்க…உடம்புக்கு நல்லதில்லை…”என்றவள் அவன் கோபமாக பதில் கூறும் முன்பே இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள்.
திரும்பி நடந்தவள் தனது கன்னத்தை தொட்டு தொட்டுப் பார்த்து கொண்டே நடந்தாள். இதழோரம் மெல்லிய சிரிப்பு .
அவள் செல்லுவதையே பார்த்துக் கொண்டே இருந்தான் ஈஸ்வரன்.
லண்டனிலிருந்து ஊர் திரும்பி ஒருமாதம் ஆகியிருந்தது.
வழக்கம் போல தனது வேலைகளை தொடர்ந்தான் ஈஸ்வரன்.
அவனது தாய் புகழினியின் திருமணத்தை பற்றி நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்.
ஈஸ்வரனோ , “ சரி மா…தரகர் கிட்ட இன்னிக்கு சொல்லுதேன்.. வெசனப்படாதே இந்த வருசத்துக்குள்ளாற கல்யாணத்தை முடிச்சிபுடலாம்…”என்றான்.
புகழினி பாண்டியனிடம் ஈஸ்வரன் தனக்கு வரன் பார்க்கப் போவதாக தாயிடம் கொண்டிருப்பதாக அவனிடம் தெரிவித்தாள்.
“ இங்க பாருங்க பாண்டியன் என்ன பண்ணுவீங்களோ தெரியாது…சீக்கிரம் உங்க அப்பா அம்மாவை அழைச்சிட்டு வந்து பொண்ணு கேளுங்க…முக்கியமா உங்கப்பா தான் பேசணும்…நானும் எங்க வீட்ல நம்ம விஷயத்தை சொல்லிடுதேன்…என்ன புரியுதா…?” என்றாள்.
“அதென்ன…எங்க அப்பா வந்து பேசணும்…அம்மா பேசுனா ஆவாதா.?” என்றான்.
“உங்கப்பா தான் முறைப்படி வந்து கேக்கணும். மீனாட்சி கல்யாணம் மறந்து போச்சா…? நீங்க எனக்கு வேணும் தான். அதே சமயம் எங்கண்ணனோட கௌரவத்தை என்னால விட்டு கொடுக்க முடியாது…புரிஞ்சிக்குங்க அட்லீஸ்ட் நம்ம கல்யாணத்துக்காவது உங்கப்பா இறங்கி வந்து பேசட்டும்….* என் திட்டவட்டமாக கூறிவிட்டாள்.
பாண்டியனோ ,”இந்த மனுசன் எந்த கிறுக்குத்தனமும் பண்ணாம இருக்கனும்…இல்லன்னா எங்களையும் பிரிச்சி விட்டுருவாரு” என முணுமுணுத்துக் கொண்டான்.
லண்டனில்…
இரவு முழுவதும் காய்ச்சலின் பிடியில் உறங்கவேயில்லை மீனாட்சி.
உடல் அனலாய் தகித்தது.
மருத்துவரிடம் மீனாட்சியை அழைத்துச் சென்று வந்திருந்தான் ஆதி.
மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் அவளது உடல்நிலை சரியாகவில்லை.
அவளுக்கு தேவையானது அனைத்தும் ஆதி செய்து கொண்டிருந்தான்.
உடற்சோர்வு அவளைப் போட்டு படுத்தியெடுத்தது.
மணிக்கொரு தரம் திரவ உணவை தயாரித்து அதட்டி உருட்டி எடுத்துக் கொள்ளச் செய்தான்.
அவளது உடல் நிலையோடு மனநிலையும் தள்ளாட ஆரம்பித்ததில் மிகுந்த மன உளைச்சலோடு இருந்தாள் .
அவனது அக்கறையில் அவள் மனம் இளகத் தொடங்கியது.
போதுமான அளவு அவனை தண்டித்து விட்டதால் அவளது மனம் சமன்பட்டிருக்கிறது தான். விருப்புக்கும் வெறுப்புக் கும் இடையே தத்தளித்தது அவள் மனம்.
அவன் மீதே சாப்பிட்ட அனைத்தையும் வாந்தி யெடுத்தாள்.
அருவருப்படையாமல் அனைத்தையும் சுத்தம் செய்து எடுத்து வைத்துவிட்டு அவளுடைய கையில் சிறிது வெதுவெதுப்பான நீரைக் கொடுத்து பருகச் சொன்னான்.
சோர்வான முகத்துடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் பெண்ணவள்.
அவனால் ஏற்பட்ட காயத்தை ஆற்றும் மருந்தாக அவனே ஆனான்.
எவ்வளவு ரணங்களையும் ஆற்றும் சக்தி காலத்திற்கு உண்டு.
அவளது ரணங்களும் மெல்ல மெல்ல ஆறிக் கொண்டு வந்தது கணவன் என்ற உரிமையினால்.ஆதி அவளைக் கவர மெனக்கெடவில்லை. ஆனாலும் இயல்பாகவே ஒரு ஈர்ப்பு அவனிடம் தோன்றியது உண்மையே. தன்னையே நொந்து கொண்டாள் மீனாட்சி.
“அவ்வளவு சீக்கிரம் நடந்ததனைத்தும் மறந்து விட்டு புதிய வாழ்க்கையை வாழ ஆசைப்படுகின்றாயா…? என சபித்தது அவளது மனம்.