
Tag:
Anti heroine
11. சிறைமிடாதே கருடா
written by Competition writers
கருடா 11
அமர்க்களத்திற்குக் குறைவில்லாமல் விடிந்தது விடியல். நேற்று இரவு முழுவதும் இருவரும் தூங்காமல் இரவிற்குத் துணை இருக்க, எனக்கும் வேண்டும் என்று வரவேற்றது விடியல். நான்கு மணிக்கெல்லாம் எழும் பழக்கம் கொண்டவன், கன்னியப்பன் நினைவோடு ஏங்கிக் கொண்டிருக்க, பலத்த சிந்தனையோடு கடற்கரையைப் பார்த்துக் கொண்டிருக்கும் தன்னவனைச் சிறிதும் கணக்கில் கொள்ளாது கிளம்பத் தயாராகினாள் ரிது.
படித்த படிப்பிற்கான வேலை கிடைக்கவில்லை. கிடைத்த வேலையில் போதுமான வருமானம் இல்லை. உடல் உழைப்பை மட்டுமே நம்பி வாடகைக்கு எடுத்த ஆட்டோவைச் சொந்தமாக்கிக் கொள்ளும் அளவிற்கு மாடு போல் உழைத்தான். வீட்டில் இருப்பவர்கள் முதல் கொண்டு, தெரிந்தவர்கள் வரை எதற்கு இந்தத் தொழில் என்று பலமுறை கேட்டும் விட மனம் வரவில்லை கருடேந்திரனுக்கு. என்னவோ, இதுதான் தனக்கான வழி என்று கன்னியப்பனை முழுவதுமாக நம்பி இறங்கி விட்டான்.
சிறு தொகையாக இருந்தாலும் சிறிது நேரம் கூட ஓய்வெடுக்காமல், கிடைக்கும் அனைத்துச் சவாரியையும் ஓட்டுவான். அது மட்டுமல்லாமல், காலையில் நான்கு பள்ளி சவாரியையும், அதன் பின் வங்கியில் வேலை செய்யும் இருவரின் சவாரியையும் பிடித்து நிலையான வருமானத்திற்கும் ஏற்பாடு செய்து விட்டான். அவர் இருவரின் உதவியால், மாலை மட்டும் உடல் ஊனமுற்ற ஒருவரைக் கடற்கரை வரை அழைத்துச் செல்லும் சவாரியும் கிடைத்தது. இப்போது அத்தனைப் பேரும் சங்கடத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
அனைவரையும் அழைத்துப் பத்து நாள் மட்டும் விடுப்புக் கேட்டிருந்தான். இவன் வராதது பெரிய தொந்தரவு தான் என்றாலும், கருடேந்திரன் மனத்திற்காக பழகிய பழக்கத்திற்காகச் சரி என்று சம்மதித்தார்கள். பத்து நாளில் ஆறு நாள் ஏற்கெனவே முடிந்துவிட்டது. இன்னும் நான்கு நாளில் கன்னியப்பனை மீட்க வேண்டும். தனக்காக இல்லை என்றாலும், தன்னை நம்பி இருக்கும் அவர்களுக்காக மீட்க முடிவெடுத்தவனுக்கு வழி ஒன்றும் கிடைக்கவில்லை.
“ஆட்டோக்காரா…”
அவள் அழைத்தும் திரும்பாதிருந்தவன் செயலில் யோசனைக்கு ஆளானவள், “ஏய்! காது கேட்கல?” கேட்டாள் அதிகாரமாக.
“சொல்லு!”
“சொல்லுங்க முதலாளி…”
“காலைலயே வந்துட்டியா?”
“ஆசை பாரு எனக்கு!”
“எப்போ என் கன்னியப்பனைத் தருவ?”
“எப்பவோ அதுக்கான பதிலைச் சொல்லிட்டேன்னு நினைக்கிறேன்.”
“என்னை நம்பி நிறையப் பேர் இருக்காங்க.”
“இதோ பாருடா, சோழ நாட்டு இளவரசர் பேச்சை!” என நக்கலாகச் சிரித்தவள், “ஏண்டா, நீ என்ன கலெக்டரா? இல்ல பெரிய பிஸினஸ் மேனா? உனக்குக் கீழ கைகட்டி நிக்க எத்தனைப் பேர் இருக்காங்க? உன் மயில் வாகனத்தை எடுத்துட்டுப் போகலைன்னா, சாப்பிடாம பட்டினி கிடந்து சாகப் போறாங்களா? கேவலம் ஒரு ஆட்டோக்கு இவ்ளோ சீன் ஆகாது.” என்றவளின் வார்த்தைகள் ஊசியாய் உடலைத் தைத்தாலும், வலியைக் காட்ட முடியாமல் நின்றிருந்தான்.
“வர வர, யாரு எவ்ளோ சீன் போடணும்னு விவஸ்தையே இல்லாமல் போயிடுச்சு. ஒரு நாள் முழுக்க ஓடுனா தான், அடுத்த நாளுக்கு ஓட டீசலைப் போட முடியும். இதுல என்னமோ, கோடி கோடியாய் சம்பாதிக்கிற மாதிரி பீலிங்! உன்ன விட என்கிட்ட வேலை பார்க்குற டிரைவருங்க அதிகமா சம்பாதிக்கிறாங்க தெரியுமா?”
“செய்யும் தொழிலே தெய்வம். என்னைப் பொறுத்த வரைக்கும் சோறு போடுற எந்த வேலையும் கேவலமில்லை. ஏசி ரூம்ல உட்கார்ந்து சம்பாதிக்க என்னாலயும் முடியும். அந்த அளவுக்குப் படிச்சும் இருக்கேன். இருந்தாலும், இந்த ஆட்டோதான் திண்டாடித் தவிச்சப்போ காப்பாத்துச்சு. என்னைக் காப்பாத்துனது, உயிர் இல்லாத ஒரு எந்திரமா இருந்தாலும் எனக்குச் சாமி தான்!”
“அடப்பாவி! ஒரு ஆட்டோக்கா இவ்ளோ பீல் பண்ற? இப்பத் தெரியுதா என் தகுதியும், உன் தகுதியும் எங்க இருக்குன்னு.” என்றதும் அவளை ஏறிட,
“வாழ்க்கையில இதுவரைக்கும் ஒரு தடவை கூட ஆட்டோல போனதில்ல.” என்றாள்.
“உழைக்காம சாப்பிட உடம்பு கூசுது.”
“அவ்ளோதான் உன் பிரச்சினையா? அதுக்கு ஒரு சூப்பரான வழி இருக்கு.” என்றதும் திரும்பி நின்றவன் சட்டைப் பாக்கெட்டில் தன் கார் சாவியை வைத்தவள்,
“இன்னையில இருந்து நீ தான் எனக்கு டிரைவர்…” என இரு கண்களையும் சிமிட்டினாள்.
அதுவரை கன்னியப்பனுக்காக வருந்திக் கொண்டிருந்தவன், அந்த முகத்தை வழியனுப்பி வைத்து ருத்ர முகத்தைப் போட்டுக் கொள்ள, “சம்பளத்தைப் பத்தி ஒன்னும் கவலைப்படாத. நான் கொடுக்கிற காசுல, உன் குடும்பம் மொத்தமும் சாப்பிட்டது போகச் சேர்த்து வைக்கிற அளவுக்கு இருக்கும். என்கிட்ட வேலை பார்க்குற வரைக்கும் தான் இந்தச் சலுகை. புத்தியுள்ளவனா இருக்குற வரைக்கும் சம்பாதிச்சுக்க…” என்றாள்.
“ரோட்ல உட்கார்ந்து பிச்சை எடுத்தாலும் எடுப்பனே தவிர, உனக்குக் கீழ வேலை பார்க்க மாட்டேன்டி.”
“எனக்கு டிரைவரா வேலை பார்த்தா, நாலு பேருக்குப் பிச்சையே போடலாம்.”
வெடுக்கென்று அவள் கழுத்தைப் பிடித்தவன் அங்கிருந்த கண்ணாடிச் சுவரில் சாய்த்து, “இவ்ளோ கொழுப்பு எங்க இருந்து வந்துச்சு உனக்கு. பணம் இருந்தா நீ பெரிய இவளா? என்னைக் குனிய வச்சு மட்டம் தட்டலாம்னு நினைக்காத. உன் ஆசை ஒருநாளும் நடக்காது.” என்றவனிடமிருந்து தன் கழுத்தைக் காப்பாற்றிக் கொள்ள எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை ரிது சதிகா.
ஆணவத்தோடு தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவள் பார்வையில், உஷ்ணம் தலைக்கேறி இன்னும் மூர்க்கத்தனத்தைக் காட்டியவன், “ஒரு நாள் இல்ல ஒரு நாள், ரோட்ல தான்டி நிப்ப. அந்த மாதிரி நேரத்துல ஒரு ஈ, காக்கா கூட உதவி செய்ய வராது. தாகத்துக்குத் தண்ணி கூடக் கிடைக்காம துடிதுடிச்சு சாகப் போறடி.” என்றதும் அவள் உதடுகள் விரிந்தது.
“சிரிக்காத, அப்படியே சாவடிச்சிடுவேன்.”
“உன் சாபம் என்னைக்கும் பலிக்காது.”
“திரும்பத் திரும்ப ஆணவத்துல பேசாதடி. என் சாபம் பலிக்குதோ இல்லையோ, கண்டிப்பா உன்ன ஒரு நாள் அப்படி நிற்க வைப்பேன்.”
“ஹா ஹா…”
“பணத்துக்கும், ஆணவத்துக்கும் பிறந்த ரத்தக் காட்டேரிடி நீ. உன்ன மாதிரி ஒருத்தி பக்கத்துல நிக்கிறது அவ்ளோ அசிங்கமா இருக்கு. கடவுள் எல்லாருக்கும் அளந்துதான் வைப்பான்னு உன் விஷயத்துல நிரூபணம் ஆயிடுச்சு. ஒண்ணுமே இல்லாம வெறும் பணத்த வச்சுக்கிட்டு இவ்ளோ ஆணவமா பேசுறியே, எல்லாம் இருந்துட்டா எவ்ளோ ஆடுவ? உன்னோட பாவம் தான்டி, உங்க அம்மாவ இப்படிப் படுத்த படுக்கையா வச்சிருக்கு.”
“கருடா!” என்றவள் குரலில் அந்த அறை நிலநடுக்கத்தின் அதிர்வைக் கண்டது.
“இன்னொரு தடவை என் பேரு உன் வாயில இருந்து வந்துச்சு, அப்படியே குரல் வளையக் கடிச்சுத் துப்பிடுவேன். என் பேரைச் சொல்றதுக்கு ஒரு தகுதி வேணும். உன்னை மாதிரி ஈவு இரக்கமில்லாத ரத்தக் காட்டேரி சொல்லக் கூடாது.”
“கைய எடு!”
“ஆணவம்!” என அவன் இன்னும் கழுத்தை நசுக்க, “கைய எடுடா…” என்று பல்லைக் கடித்தாள்.
“முடிஞ்சா எடுத்துக்க.”
“நீயா எடுத்துட்டா மரியாதையா இருக்கும்.”
“உன்கிட்ட இருந்து கிடைக்கிற மரியாதை எனக்கு வேண்டாம்டி.”
“எடுடா…”
“உன்னலாம் பேசவே விடக்கூடாது.” என அவள் மூச்சு சிதையும் அளவிற்கு இறுக்கத்தைக் கொடுத்தான். மீட்க முடியாமல் மீட்டெடுத்தவள்,
“பார்த்தீங்களா, உங்க பையன் பண்றதை.” என்றாள்.
இரவு போல் தன்னை ஏமாற்றுவதாக நினைத்தவன், “எங்க அம்மாவக் காட்டி என்னை அடக்கலாம்னு பார்க்கறியா? அவங்க முகத்துக்காகத் தான் இன்னும் நீ உயிரோடு இருக்க.” என்றான்.
“இப்பச் சொல்லுங்க, உங்க வளர்ப்பு நல்ல வளர்ப்பா?”
“எவ்ளோ தத்ரூபமா நடிக்கிற? உன்ன விட்டு வச்சால் தானடி எங்க அம்மா பேரைச் சொல்லி மிரட்டுவ.” என அவன் முழுத் தீவிரத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் நேரம்,
“கருடா…” என்ற அன்னையின் குரல் கேட்டது.
வெடிக்கத் துடிக்கும் இரு மின்சார ஒயர்களை முறுக்கி, இதயத்தில் சொருகியது போல் அரண்டு திரும்பினான். மகன் செய்யும் அட்டூழியங்களைப் பார்த்தபடி கைப்பேசிக்குள் இருந்தார் சரளா. அவரோடு சத்யராஜ் அமர்ந்திருந்தார். இவை ரிதுசதிகாவின் பக்காவான சதித்திட்டம்! நேற்று இரவு அவன் பேசியது மண்டையைக் குடைந்தது. அதற்கான தகுந்த பாடத்தையும், தனக்குக் கீழ் வேலை செய்ய வைக்கவும் முடிவெடுத்தவள் கட்டியவனின் பெற்றோர்களைத் தொடர்பு கொண்டாள்.
“நம்ம ஸ்டேட்டஸ்க்கு இனி ஆட்டோ ஓட்டாத, ஆபீஸ்ல வந்து வேலை பாருன்னு எவ்வளவோ சொல்லிட்டேன். உங்க பையன் முரண்டு பிடிச்சிட்டு நிக்கிறான். எங்களுக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு. அதை ஏற்கெனவே தாலி கட்டி, உங்க பையன் பாதி குறைச்சிட்டான். மீதி இருக்கிறதையும் குறைக்கப் பார்க்கிறான். என்னைப் பெத்த என் அப்பாவுக்கு என்னால எவ்ளோ தலைக்குனிவு தெரியுமா? நீங்களே உங்க பையன் எப்படி நடந்துக்கிறான்னு பாருங்க.” என்றவள் வீடியோ அழைப்பின் மூலம் அனைத்தையும் பார்க்க வைத்தாள்.
“அம்மா!” என்ற வார்த்தைக்குப் பின் கருடேந்திரன் வாயிலிருந்து எந்த வார்த்தையும் உதிக்கவில்லை. மகனைக் கண்காணிப்பதற்காக வாய்க்குப் பூட்டுப் போட்டு அமைதியாக அமர்ந்திருந்த சரளா,
“எதுக்குடா இவ்வளவு முரட்டுத்தனமா அந்தப் பொண்ணுகிட்ட நடந்துக்குற. நீ பண்ண எல்லாத்தையும் மன்னிச்சுட்டு, உன்ன ஒரு நல்ல இடத்துல உட்கார வைக்கணும்னு நினைக்கிறாடா. அதைப் புரிஞ்சிக்காம இப்படி நடந்துக்கறியே. திரும்பத் திரும்ப என்னையும், என் வளர்ப்பையும் ரொம்ப அவமானப்படுத்துற. உன் மேல இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போயிடுச்சு. இனி என்னையும், நம்ம குடும்பத்தையும் மறந்துடு.” என்றவர் அழைப்பைத் துண்டித்தார்.
“அம்மா… அப்பா…” என மறைந்தவர்களைக் கண்டு பதறி ஓடி வந்தவன் கையைப் பிடித்தவள்,
“அவங்க போயிட்டாங்க.” என்றாள் குதூகலமாக.
பதில் வாதம் செய்வதற்கு மனத்தில் தெம்பு இல்லாததால் முறைப்பும் தவிப்புமாக நின்றிருக்க, “நானா கண் காட்டுற வரை பேசாதீங்கன்னு சொல்லிட்டு மியூட்ல போட்டுட்டேன். நான் சொல்றதை நம்பி எப்படிச் சத்தம் போடாம இருந்தாங்க பார்த்தியா?” என்றவளின் கூர்மையான சதியைப் புரிந்து கொண்டவனால் ஒன்றும் செய்ய முடியாத நிலை.
விசில் அடித்துக் கொண்டு தன்னுடைய கைப்பையைத் தூக்கி அவனிடம் போட, பிடித்துக் கொண்டான்.
அதைக் கண்டவள், தன் வழிக்கு வந்து விட்டதை உணர்ந்து, “குட்” எனப் பாராட்டினாள்.
முறைக்கக் கூட முடியாமல் முழுத் தோல்வியில் நின்றிருக்கும் கருடனைப் பார்க்க மகிழ்வாக இருந்தது.
அந்த மகிழ்வோடு தன் மீது முழுவதும் வாசனைத் திரவியத்தை அடித்துக் கொண்டவள், “இன்னையில இருந்து இந்த ரிதுசதிகாவுக்கு நீ தான் டிரைவர். அந்தக் காக்கி சட்டையைத் தூக்கிப் போட்டுட்டு, பக்காவா ஒரு ஒயிட் ஷர்ட் போட்டுட்டு வந்து நில்லு. டிபன் முடிச்சிட்டு வரேன்.” எனக் கையசைத்து விட்டு வெளியேறினாள்.
***
“என்னடா ஆட்டோக்காரா ரெடியா?”
“ரெடிங்க முதலாளி!” என அவன் கை இரண்டையும் கட்டிக்கொண்டு பவ்யமாகக் குனிய, “பரவாயில்லையே, நடப்பைப் புரிஞ்சு சமத்தா நடந்துக்குற.” எனப் பாராட்டியவாறு வண்டியில் ஏறி அமர்ந்தாள்.
“எல்லாம் உங்க பாக்கியம் முதலாளி!”
“ரொம்பக் காக்கா பிடிக்காம ஆஃபீஸ்க்கு வண்டியை விடு.”
“சரிங்க முதலாளி!” என ஓட்டுநர் இருக்கையில் ஏறியமர்ந்தவன், இரு கைகளையும் ஒன்று குவித்துத் தலைக்கு மேல் உயர்த்தி, “தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!” எனச் சத்தமாகக் கூறினான்.
சாதாரணமாக அமர்ந்திருந்தவள், கார்க் கதவுகள் உடையும் அளவிற்குக் கத்தும் அவன் வாசகத்தில் அரண்டு, “டேய்! எதுக்கு இப்படிக் கத்துற?” கேட்க,
“முதல் தடவையா கார் ஓட்டப் போறேன் முதலாளி. எதிர்ல வர வண்டில மோதி உங்க மண்டையை உடைச்சிடக் கூடாதுன்னு அந்த ஆண்டவன் கிட்ட வேண்டுறேன்.” என்றானே பார்க்கலாம்.
“என்னடா சொல்ற?”
அதிர்ச்சியில் வாய் பிளந்து கொண்டதைக் கூட அறியாது முகப்புக் கண்ணாடி வழியாக அவனைப் பார்த்திருக்க, “உங்க தயவால இப்படி ஒரு அனுபவம் கிடைச்சிருக்கு முதலாளி.” எனத் திரும்பி வாய்க்குள் இருக்கும் அத்தனைப் பற்களையும் பளிச்சிட்டுக் காட்டினான்.
“நிஜமாவே இதுக்கு முன்னாடி கார் ஓட்டுனது இல்லையா?”
“என்னை மாதிரி ஆளுக்கெல்லாம் ஆட்டோவே அதிகம் முதலாளி. கார் எங்க இருந்து…”
“கார் ஓட்டத் தெரியாதுன்னு முன்னாடியே சொல்றது தான…”
“எங்க முதலாளி சொல்ல விட்டீங்க?”
“ச்சீ! முதல்ல கார விட்டு இறங்கு.”
“டிரைவர் சீட்ல உட்கார்ந்துட்டேன் முதலாளி. இனி நானே நினைச்சாலும் எந்திரிக்க முடியாது. உங்களைச் சேர்க்க வேண்டிய இடத்துல சேர்த்ததுக்கு அப்புறம் தான் இதுக்குப் பிரியா விடை கொடுப்பேன்.” என்றவன் ப்ளூடூத்தைக் கனெக்ட் செய்து,
“செல்லாத்தா, செல்ல மாரியாத்தா…” என்ற அம்மன் பாடலை மிகச் சத்தமாக வைத்தான்.
உயிர் பற்றிய பயத்தில் உறைந்திருந்தவள், அதை அலற வைப்பது போல் ஒலிக்கும் பாடலில் இன்னும் மிரண்டு, “பாட்ட ஆஃப் பண்ணுடா.” கத்தினாள்.
“இப்படிச் சத்தமாப் பாட்டு ஓடுனா தான், தூங்காம வண்டி ஓட்டுவேன் முதலாளி.”
“எது!”
“அட, ஆமா முதலாளி. ஒரு நாள் ஆட்டோ ஓட்டிட்டுப் போகும்போது என்னையும் மீறித் தூங்கிட்டேன். ஆட்டோல வந்த ரெண்டு பேரு எமதர்மன் காலடியில இடம் கேட்டுப் போயிட்டாங்க. அதுல இருந்து இப்படிச் சாமி பாட்டுப் போட்டா தான் வண்டி ஓட்டத் தெம்பு வரும்.”
“டேய் பரதேசி! இன்னும் என்னென்ன வச்சிருக்க? கொஞ்சம் கொஞ்சமா சொல்லி என் உசுர வாங்காம மொத்தத்தையும் சொல்லித் தொலை. உன்ன நம்பி உட்கார்ந்து இருக்கேன்.”
“இது மட்டும் தான் முதலாளி.” என்றவன் செய்த செயலைக் கண்டு பேசுவதையே நிறுத்தி விட்டாள் ரிது சதிகா.
சட்டைப் பையில் இருந்த முருகர் புகைப்படத்தைக் காரில் ஒட்ட வைத்தவன், அவரின் தந்தை முதல் கொண்டு தமையன் வரை வரிசையாகப் பக்கத்தில் ஒட்ட வைத்தான். அனைவருக்கும் மஞ்சள் நிறச் சாமந்திப் பூவைச் சூட்டியவன், ஊதுபத்தி ஒன்றை ஏற்றித் தீப தூப ஆராதனை காட்டினான். கடவுள் படத்திற்கு மூன்று முறை சுத்திப் புகை போட்டவன், பின்னால் திரும்பி ரிதுவிற்கு மூன்று முறை சுற்ற,
“லொக்! லொக்!” என இருமினாள்.
“நல்ல சகுனம்!” என அவள் இருமலுக்கு ஒரு பாராட்டைக் கொடுத்தவன், திருநீற்றை எடுத்து நெற்றியில் பட்டை போட்டான். ஏதோ மந்திரவாதியைப் பார்ப்பது போல் அவனின் கட்டியவள் பேய் முழியில் பார்த்துக் கொண்டிருக்க,
“வச்சுக்கோங்க முதலாளி!” அவள் புறமும் நீட்டினான்.
குமட்டிக் கொண்டு வந்தது அவன் தோரணையும், செயலும். அதை அவள் விழிகளை வைத்துப் புரிந்து கொண்டவன், “கடவுளே! எங்க முதலாளிக்கு தீர்க்க ஆயுசைக் கொடு!” என்று விட்டு மூன்று விரலில் திருநீற்றை நிரப்பி அவள் நெற்றியில் பட்டை போட்டான்.
“கையை எடுடா”
“கொல்லிமலை திருநீறு மேடம். வேண்டாம்னு சொல்லாதீங்க. எங்க அப்பனுக்குக் கோபம் வந்து சல்லுன்னு மேல இழுத்துக்கப் போறான். இங்கயாவது உங்க அம்மா, அப்பா ரெண்டு பேர் இருக்காங்க. அங்க உங்க அண்ணன் மட்டும் தான் இருக்காரு. அதுவும் இல்லாம அங்கப் பணமெல்லாம் இருக்காது.”
“உன் பைத்தியக்காரத் தனத்தை மூட்டை கட்டி வச்சுட்டு ஒழுங்கா ரோட்டப் பார்த்து வண்டிய ஓட்டு.”
“சரிங்க முதலாளி!” என்றவன் அவ்வளவு எளிதாக அந்த வண்டியை எடுத்து விடவில்லை.
ஆரம்பித்த உடனே சடன் பிரேக் போட்டவன், மீண்டும் இயக்க நான்கைந்து முறைகளை எடுத்துக் கொண்டான். பொறுமை கொஞ்சம் காற்றில் பறக்க ஆரம்பித்தது ரிதுவிற்கு. அதை முடிந்த மட்டும் சோதித்துப் பார்க்க முடிவெடுத்தான். வேகமாகக் காரை இயக்கிக் கேட்டில் இடிக்கச் சென்று அவள் இதயத்தை எகிற வைத்தான்.
“நீ வண்டி ஓட்டவே வேண்டாம். முதல்ல இறங்கு.”
“அம்மாக்குத் தெரிஞ்சா திட்டுவாங்க முதலாளி!”
“இறங்குடா…”
“அம்மா கிட்டச் சொல்லிடுவீங்க முதலாளி!” அநியாயத்திற்குச் சிணுங்கினான்.
“வாயில ஏதாச்சும் அசிங்கமா வந்துடும். இறங்குன்னு சொல்லிட்டேன்.”
அதுவரை பச்சைப்பிள்ளை போல் சிணுங்கிக் கொண்டிருந்தவன், கை முட்டியைப் பின்னால் ஓங்கி அவளை அடிக்கச் செல்ல, கைகளை முகத்திற்கு முன்வைத்துத் தலையைத் திருப்பிக் கொண்டாள்.
“அந்தப் பயம் இருக்கணும்!” என்று விட்டுக் கையைக் கீழ் இறக்கியவன்,
“இப்படித்தான் ஓட்டுவேன். நானா இறக்கி விடுற வரைக்கும் பேசாம இருக்கணும். இல்லன்னா பல்லு வாயெல்லாம் பறந்துடும். அப்புறம் கோடி கோடியாய் பதுக்கி வச்ச பணத்தைக் கொட்டி பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்க வேண்டியதா இருக்கும். இப்பவே உன் மூஞ்சியப் பார்க்க முடியல. இதுல அப்படி எல்லாம் பண்ணினா, எதிர்ல இருக்கிறவன் கண்ணு அவிஞ்சிடும்.” என்றதும் அவளின் முறைப்பு அதிகமானது.
“பெரிய ஆயிரம் கண் கண்ணாத்தா இவ… கண்ணாலயே எரிச்சுப் பஸ்பம் ஆக்கிடுவா. மூடிக்கிட்டு வாடி மூதேவி!”
“யூ ராஸ்கல்! உன்னை என்ன பண்றேன்னு பாருடா.” எனக் கைப்பைக்குள் இருந்த போனைத் தேட,
“இதுவான்னு பாருடி ராட்சசி!” எனத் தன் கைக்குள் இருந்த அவள் போனை உயர்த்திக் காட்டினான்.
“இது எப்படிடா உன் கிட்ட வந்துச்சு?”
“உன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல நேரம் இல்லை. நானா வண்டிய நிறுத்துற வரைக்கும் இந்தக் கார் உனக்கு ஜெயில், நான் சிறை அதிகாரி! நீ குற்றவாளி!” என வஞ்சகமான சிரிப்பைப் படர விட்டு,
“போவோமா, சிறை ஊர் கோலம்!” பாடினான்.
“வேணாம்டா, மரியாதையா இத்தோட நிறுத்திக்க. உண்டு இல்லைன்னு ஆக்கிடுவேன் உன்ன. எந்திரிக்க முடியாத அளவுக்கு அடிப்பேன்டா.”
ரிது சதிகா ஆக்ரோஷத்தோடு எச்சரித்துக் கொண்டிருக்க, சிறிதும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை கருடேந்திரன். அதில் அவளின் சினம் எகிறியது. கண்டமேனிக்கு, வார்த்தைகளைக் கடிந்து துப்பினாள். சின்னதாக இருக்கும் முன்பக்கக் கண்ணாடி வழியாக, அவள் முகத்தைக் கண்டவனுக்குக் காலையில் பட்ட அவஸ்தைக்கான மருந்து கிடைத்தது.
“இருடா, உனக்கு இருக்கு.” எனக் காரை விட்டு இறங்க முயற்சிக்கும் நேரம், “ட்டுர்ர்ர்…” வேகமாகக் காரை எடுத்தான்.
“ஆ… ஹே… இடியட்!”
“டோர க்ளோஸ் பண்ணுடி.”
“கார நிறுத்துடா…”
“க்ளோஸ் பண்றியா, இல்ல நேரா போய் செவுத்துல முட்டவா?”
“அப்பா…” எனத் தந்தையை அவள் அழைக்க, மின்னலை ஓட்டத்தில் காட்டினான். அடித்துப் பிடித்துச் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டவள் பலமான மூச்சுகளோடு அமர்ந்து வர, அவனின் வேகம் குறைவதாக இல்லை.
அங்கு ஆரம்பித்த அவளின் ஓட்டம், நான்கு மணி நேரம் ஆகியும் நின்ற பாடில்லை. ஒரு மணி நேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு, நான்கு மணி நேரமாக அலைந்து கொண்டிருக்கிறான். பின்னால் இருந்தவள், கத்திக் கூப்பாடு போட்டும் பிரயோஜனம் இல்லாமல் போனது. காலை உணவை முடித்தவள் மரண பயத்தில் அமர்ந்து வர, தாலி கட்டியவளை ஒருவழி செய்துவிட்டு, நேராக மதிய உணவையே உண்ணலாம் என்ற முடிவோடு ஓட்டிக் கொண்டிருக்கிறான்.
ஒரு வழியாக நண்பகல் 12 மணிக்கு அவளது அலுவலகத்தின் முன் காரை நிறுத்தினான். ராட்சத ராட்டினத்தில், ஒரு நாள் முழுவதும் சுற்றிய உணர்வோடு கண் மூடியவளுக்கு இன்னும் அந்தத் தலைசுற்றல் அடங்கவில்லை.
“முதலாளி! எந்திரிங்க முதலாளி!”
அவள் அசையாமல், இருக்கையில் தலை சாய்ந்து கண் மூடியவாறு அமர்ந்திருக்க, “அய்யய்யோ! செத்துப் போயிட்டீங்களா முதலாளி. இப்ப நான் என்ன பண்ணுவேன்? ஒரு நாள் சம்பளம் போச்சே. அப்பவே சொன்னேன், எங்க அப்பன் திருநீறைப் பகைக்காதிங்கன்னு. இப்படி அநியாயமா மொட்டத் தலையோட மேல போயிட்டிங்களே…” என அவளை உசுப்பி ஒப்பாரி வைத்தான்.
அவசரம் இல்லாமல், ஆர்ப்பாட்டம் காட்டாமல், அழுத்தமான பார்வையோடு கண் திறந்தவள், மூச்சு வழியாகத் தன் கோபத்தைக் காட்டிக் கொண்டிருக்க, “அப்பாடா!” என நெஞ்சில் கை வைத்தான்.
அவளின் கனல் மூச்சு இன்னும் அதிகரித்தது. அவை எனக்கு ஒரு விஷயமே இல்லை என்பது போல், “எப்படி முதலாளி இருந்துச்சு, என்னோட டிரைவிங்? சம்பளத்தைக் கொஞ்சம் கூட்டிக் கொடுப்பீங்க தான.” என்றான்.
“இதுக்கு உனக்கு இருக்குடா”
“சரிதான் போடி!” எனக் காரை விட்டு இறங்கினான்.
அவளும் இறங்கிட, “இங்க எதுக்குடா கூட்டிட்டு வந்திருக்க?” வினவினாள்.
“இந்த இன்ஸ்டிட்யூட்ல எவ்ளோ பெரிய பிரச்சினை போகுதுன்னு தெரிஞ்சும், எட்டிப் பார்க்காமல் இருக்க. இருக்கற பணத்தைப் பாதுகாக்கவே உன் ஆயுசு முடிஞ்சிடும். இன்னும் சேர்த்து வைக்காம உண்மையைக் கண்டுபிடி.”
“எப்ப, என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும். நீ எனக்கு ஆர்டர் போடாத.”
“இன்னைக்கு நீ இங்கதான் இருக்கணும். இந்த இடத்தை விட்டு எங்கயும் நகரக் கூடாது.”
பொறுமையே இல்லாதவள் பெயருக்கென்று பிடித்து வைத்த பொறுமையைத் தூக்கி அடித்து விட்டு, “மரியாதை கெட்டுடும். என் வீட்டு வேலைக்காரனா மட்டும் நடந்துக்க. என்னை இது செய், அது செய்யின்னு சொல்லாத. அப்புறம் பின் விளைவுகள் மோசமா இருக்கும்.”
“அடப்போடி!” என்றவன் பவ்வியமாகப் பட்டன் போட்டு வைத்திருந்த கை பட்டன்களை அவிழ்த்து, முட்டிவரை ஏற்றிக் கட்டி, “வா போகலாம்” என அலேக்காக அவளைத் தூக்கிக் கொண்டான்.
சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில், அவன் கொடுத்த தாக்குதலை எதிர்கொள்ள முடியாது தடுமாறியவள் துள்ள, “உன்கிட்ட வேலை பார்க்குறவங்க யாராவது பார்த்தாங்கன்னா, உன் மானம்தான் போகும்.” என அவள் வாயை அடைத்தான்.
10. சிறையிடாதே கருடா
written by Competition writers
கருடா 10
சமையல்காரர் எடுத்து வந்த உணவு அப்படியே இருந்த இடத்தில் இருந்தது. பசித்தாலும், உணவை எடுத்து உண்ணத் தன்மானம் தடுத்தது கருடேந்திரனுக்கு. பசி எடுக்காததால் மேகஸினில் மூழ்கிப் போனாள் ரிதுசதிகா. அவளுக்கு எதிராகக் காலியாக இருக்கும் இருக்கையில் கால் மீது கால் போட்டுக்கொண்டு அமர்ந்தான்.
ஒரே ஒரு விழித் தீண்டலை, அவன் மீது செலுத்தியவள் பழையபடி பார்வையைத் திருப்பிக் கொள்ள, வலது ஐவிரல்களை தாடைக்குக் கீழ் மடக்கி வைத்தவன் முழுப் பார்வையையும் அவள் மீது செலுத்தினான். அதை உணர்ந்தாலும், மதிப்பளிக்காது அப்படியே இருந்தவள் மீதான எண்ணத்தை ஆராய்ந்து கொண்டிருந்தான் கருடன். அவனைப் பொறுத்தவரை இந்த நொடியில் கூட ராட்சசியாகத் தான் தெரிந்தாள் கட்டியவள்.
ஆனாலும், அவள் உதட்டின் மீதான பார்வையை எந்த ரகத்தில் சேர்ப்பது என்ற தனிக் கணக்கு, யோசனைகளுக்கு நடுவில் யோசனையாக உலா வர, ‘ச்சைக்! இவளைச் சைட் அடிக்கிறதும் ஒன்னு தான், சாக்கடையில விழுந்து எந்திரிக்கிறதும் ஒன்னு தான்.’ அந்த நினைப்பை அவமானப்படுத்தினான்.
அந்த அவமானம் பத்து நிமிடங்கள் கூட நிலைக்கவில்லை. தன்னால் அவன் பார்வை அங்குச் சென்றது. எதையோ தீவிரமாகப் படித்துக் கொண்டிருக்கிறாள் போல. அந்தத் தீவிரத்திற்கு ஏற்பப் புருவங்கள், கரையைத் தொட்டுச் செல்லும் அலையாக அடிக்கடி தொட முயற்சித்தது. இமை முடிகள் கொஞ்சமும் நகராது பிடிவாதமாக நிற்க, கருவிழிகள் எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தது. இவைகளுக்கு நடுவில், அவனுக்கு விருப்பமான அதரங்கள் வளைவதும், நெளிவதும், சற்றென்று சுருங்குவதுமாக உயிரோட்டமாக இருந்தது.
அழகுச் சிலையும், மெழுகுச் சிலையும் பல இருக்கிறது இந்த உலகில். இவள் யார், பதுமையான வெண்ணெய்க் கட்டியாய் இருப்பது! மேனியில் ஒரு இடத்தில் கூடக் கருமை இல்லை. ஒட்ட வெட்டிய கேசமும், சின்னதாக மீன் முள்ளைப் போலிருக்கும் புருவங்களும் மட்டும்தான் விதிவிலக்காக இருந்தது. பித்தளைப் பாத்திரங்களைத் துலக்கி வைத்தது போல், சுத்தமாக இருந்த தோலில் எத்தனை ஆராய்ச்சியை நடத்தினாலும் சின்னப் புள்ளியைக் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை.
பணம், முழுவதும் அவள் மேனியை அலாவுதீன் விளக்காகப் பாதுகாத்து வைத்திருந்தது. இவள் அழகைப் பராமரிக்க, இவளை விடப் பணக்காரனால் மட்டும்தான் சமாளிக்க முடியும் என்ற முடிவிற்கு வந்தவன், ‘தன்னுடைய சம்பாத்தியம் நகப்பூச்சுக்குக் கூட உதவாது’ என்ற பெருத்த ஏமாற்றத்தை அடைந்தான். வாழ்ந்தால் இவளைப் போல் வாழ வேண்டும், என்று ஒரு நடுத்தர வர்க்கமாக நினைத்தவன்,
‘எவன் மாட்டிக்கிட்டு முழிக்கப் போறானோ?’ என அவனை நினைத்து அவனே பரிதாபப்பட்டான்.
பார்வை கையில் இருக்கும் புத்தகத்தில் இருந்தாலும், உணர்வு முழுவதும் புதிதாகத் தன்னுடன் உறவானவன் மீது தான் இருந்தது. வாழைப்பழத் தோலை உரிப்பது போல், விழியால் தன் அழகை உரித்துக் கொண்டிருக்கும் அவன் பார்வையின் அனலைத் தாங்க முடியாது,
“என்ன?” எனக் கேட்டாள்.
பதில் ஏதும் சொல்லாமல் உதட்டைப் பிதுக்கி, இரு தோள்களையும் பந்தாவாகக் குலுக்க, கூர்மையான முறைப்பை அவனிடத்திற்கு அனுப்பியவள் புத்தகத்தில் கவனமானாள். ரிதுவின் செயல்களைக் கண்டு பட்டும் படாமல் இதழை நகர்த்தாமல் நகைத்தவன், இன்னும் வசதியாகச் சாய்ந்து கொண்டு கால்களை ஆட்டினான்.
வசதியாகச் சாய்ந்ததில் அவள் பக்கம் கால்கள் நகர்ந்தது. தன்னை உரசும் அளவிற்கு நீண்டிருக்கும் அவன் கால்கள் மீது பார்வையை நகர்த்தியவள் சினத்தை உயர்த்த, “ஈஈஈ… சாரி!” எனப் பெரிய மனது வைத்துக் கொஞ்சமாக நகர்த்தினான்.
இந்த முறை பல்லைக் கடித்துக் கோபத்தைக் காட்டினாள். அதற்குப் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், சிறிது நேரம் அடங்கி அமர்ந்தவன் மீண்டும் கால்களை அவள் புறம் நீட்டினான். தன் கால் பெருவிரலை லேசாக உரசுபவன் செயலில் தீ பற்றிக் கொண்டது. நீலகண்டனின் உடல் ஆலகால விஷத்தால் நிறம் மாறியது போல், சினத்தால் சிவப்பு நிறத்தில் மாறிப் போனவள்,
“தள்ளுடா…” என அந்தக் காலை எட்டி உதைத்தாள்.
“ஒரு ஆம்பளைப் பையனை எட்டி உதைக்கிற, அறிவில்ல?”
“அந்த அறிவு உனக்கு இருக்கா? இன்னும் காலத் தூக்கி என் தலை மேல வையேன்.”
“ஓஹோ! அதான் உன் கோபமா?” என்றவன் கால்களை உயர்த்தினான் அவள் தலைக்கு.
“கால உடைச்சிடுவேன்!”
“நீங்கதான முதலாளி, தலையில வைக்கச் சொன்னீங்க.”
“முதலாளியா!”
“ஆமா முதலாளி! இன்னைல இருந்து நீங்க எனக்கு முதலாளி. உங்களுக்குச் சேவை செய்யற ஆட்டோக்காரனா, என் வாழ்க்கையை வாழ முடிவு பண்ணிட்டேன்.”
இல்லாத மூன்றாம் கண்ணைத் திறந்தவள், “என்னடா, என்ன பிளான் பண்ற?” கேட்க,
“அப்படியெல்லாம் எதுவும் இல்லைங்க முதலாளி.” எனக் கை இரண்டையும் கக்கத்தில் கட்டிக்கொண்டு, அநியாயத்திற்குக் குனிந்து அடிபணிந்தான்.
இப்போதுதான் அவளின் சந்தேகம் அதிகரித்தது. கையில் இருந்த புத்தகத்தை மூடி வைத்தவள், ‘சீனாதானா’ உளவாளிப் பார்வையைக் கையில் எடுத்தாள். விழியால் ஊடுருவித் தன் உள்ளத்தில் இருக்கும் எண்ணத்தைப் படிக்கப் பார்க்கும் தன்னவள் செயல் புரிந்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன்,
“டைரக்டா டீல் பேசிப்போமா?” என்றான்.
“அப்படி வா வழிக்கு. ஆட்டோக்காரன், அர்த்தமில்லாம அர்த்த ராத்திரில ஹாரன் அடிக்க மாட்டானே.”
“அடடடா! பழமொழி தூக்கல் முதலாளி!”
“ரொம்ப நெஞ்ச நக்காம விஷயத்துக்கு வா…”
“முதலாளி!” எனச் சினம் கொண்டவன், “தப்புத் தப்பாப் பேசாதீங்க.” என்றிட,
“உனக்கு இந்த நடிப்பு செட் ஆகலடா, அப்பட்டமா நடிக்கிறன்னு தெரியுது.” என்றாள்.
இரு கைகளையும் கட்டிக் கொண்டிருந்தவன், ஒரு கையை விலக்கி லேசாகத் தலையைச் சொறிந்தான். எவ்வளவு சொல்லியும் நடிப்பை விடாதவன் முகத்தில் புத்தகத்தைத் தூக்கி அடித்தாள். தன்னைத் தற்காத்துக் கொள்ள அதைத் தாவிப் பிடித்தவன்,
“எப்படி முதலாளி, கண்டு பிடிச்சீங்க?” எனப் பல்லைக் காட்டினான்.
“நீயும் சரி, நானும் சரி! கத்திய எடுத்துக் குத்தக் கூடத் தயங்காத ஆளுங்க. இந்த மண்டி போடுறது, மன்னிப்புக் கேட்கிறது இதெல்லாம் நம்ம சரித்திரத்துலயே இல்லை.”
தன்னைப் பார்த்த இந்தச் சில நாள்களிலேயே, அழகாக எடை போட்டு வைத்திருக்கும் தன்னவள் அறிவை உள்ளுக்குள் மெச்சிக் கொண்டவன், “எனக்கு இந்த லைஃப் செட்டாகாது. உனக்கும் இது சூட் ஆகாது. தேவை இல்லாத கல்யாண பந்தத்துல எதுக்காக வாழனும்?” என அவன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே பரபரப்பாக மாறியது அவள் முகம்.
அதைக் கண்டவன் பேச்சை நிறுத்த, “ஏன்டா நிறுத்துற, நான் கிளம்புறேன்னு சொல்லிட்டுக் கிளம்பு. உனக்கு என்ன வேணுமோ, அதை நான் பார்த்துப் பண்றேன்.” என இப்போது அவள் நடித்தாள்.
“பணத்துக்குப் பல்லக் காட்டுற ஆளு நான் இல்லடி!”
“முதலாளி! முதலாளி…”
“ஹான், பணத்துக்குப் பல்லக் காட்டுற ஆள் நான் இல்ல முதலாளி.”
“குட்!”
“உன்கிட்ட இருந்து எனக்கு முழுசா விடுதலை வேணும். என் கன்னியப்பன் முதல் கொண்டு எல்லாமே வேணும். அதுக்கு அந்தப் பத்து லட்சத்தை முடிவுக்குக் கொண்டு வரணும். என் தம்பிய அவ்ளோ மோசமா நடத்துனது யாருன்னு தெரியணும். வெட்டியா நமக்குள்ள சண்டை போட்டுக்கிட்டு இருக்காம, அதுக்கான வேலைய ஆரம்பிக்கலாம். உன் மேல எந்தத் தப்பும் இல்லன்னு நிரூபிச்சிட்டு டைவர்ஸ் அப்ளை பண்ணு. என் வீட்டுப் பிரச்சினை எல்லாத்தையும் சரி பண்ணிட்டு, எந்தப் பிராப்ளமும் பண்ணாம மியூச்சுவலா நானும் ஓகே சொல்றேன். ரகசியமா நடந்த இந்தக் கல்யாணத்தை ரகசியமாவே நமக்குள்ள முடிச்சிப்போம்.”
அவன் சொல்லிய அனைத்தும், அவளுக்குள் இருக்கும் சிந்தனைகள் தான். அதற்கான வழிமுறைகளில் இறங்குவதற்குள் தான் இத்தனைச் சலசலப்பு. அவன் எண்ணத்திற்கு முழுச் சம்மதம் சொன்னவள்,
“எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் பேச்சு மாறக்கூடாது.” என்றிட, “நீ மாறாம இருந்தால் போதும்.” என்றான்.
“அய்ய! உன்கூடச் சேர்ந்து வாழ என்னைக்கும் எனக்கு ஆசை வராது. இந்த மாதிரி முட்டாள்தனமா யோசிக்கறதை விட்டுட்டு வேலையப் பாரு.” என்றவள் இருக்கையில் தளர்வாகச் சாய்ந்து அவனைப் போல் கால் மீது கால் போட்டுக் கொண்டு,
“ஒருவேளை, உனக்கு வரலாம்.” என்றாள் கண்ணடித்து.
“ஹாஹா… எனக்கா?” எனச் சத்தமிட்டுச் சிரித்தவன், “இந்த வீடு மூச்சு முட்டுது. அதுவும் உன்ன மாதிரி ஒருத்தியை ஒரே ஒரு செகண்ட் கூடப் பொண்ணாய் பார்க்க முடியல. என்னைப் பொறுத்த வரைக்கும், நீ ஒரு பணப்பிசாசு. உன் கூட வாழறதும் ஒன்னு தான், தூக்குப் போட்டுச் சாகுறதும் ஒன்னு தான்.” என்றவன் வார்த்தைக்கு அமைதியைப் பதிலாகக் கொடுத்தாள்.
“ஹலோ!” எனச் சொடக்கிட்டவன், “என்ன முதலாளி, அமைதியா இருக்கீங்க, டீலுக்கு ஓகேவா?” கேட்டான்.
“எல்லாம் சரிதான். ஆனா, நான் எந்தத் தப்பும் பண்ணலைன்னு நிரூபிச்சிட்டா என்னடா பண்ணுவ?”
“பொய்ய உண்மைன்னு நிரூபிக்க முடியாது முதலாளி!”
“ஒருவேளை, நான் எந்தத் தப்புமே பண்ணாம என் கழுத்துல தாலி கட்டி இருக்கேன்னு தெரிய வந்தா என்ன பண்ணுவ?” என்ற கேள்விக்கான பதிலை வெகு நேரமாக யோசித்துக் கொண்டிருந்தும் பதில் கிடைக்கவில்லை.
“திடீர்னு எங்க இருந்தோ வந்தவன், இப்படி அதிகாரம் பண்ற அளவுக்கு முட்டாளா இருந்திருக்கியேன்னு என் எண்ணம், என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணுது. சம்பந்தமே இல்லாம கழுத்துல இருக்க இந்தக் கயிறு, ஒரு ஆட்டோக்காரனுக்குப் பொண்டாட்டியா நீன்னு நக்கல் பண்ணுது. எனக்கு இது எல்லாத்துக்கும் பதில் வேணும். இதுக்கான பதிலைத் தர மாதிரி இருந்தா, உன்னோட டீலுக்குச் சம்மதிக்கிறேன்.” என்றவள் பேச்சுக்கு இந்த முறை அமைதியாக இருப்பது கருடேந்திரன் முறை.
“ஹலோ ஆட்டோக்காரா…”
“சொல்லு!”
“நீ தான் சொல்லணும்!”
“ஒருவேளை, எந்தத் தப்புமே பண்ணாம நான் உன்னைக் கஷ்டப்படுத்தி இருந்தா, அதுக்கான தண்டனையா நீ என்ன பண்ணாலும் ஏத்துக்கிறேன். ஜெயில்ல போடணுமா, போடு. நாலு பேரு முன்னாடி நிக்க வச்சு செருப்பால அடிக்கணுமா, அடி. எதுவா இருந்தாலும் அதை மனப்பூர்வமா ஏத்துக்கத் தயாரா இருக்கேன்.”
“என்ன பண்ணாலும்?”
“என்ன பண்ணாலும்!”
“ம்ம், இன்னையில இருந்து நம்ம டீல் ஸ்டார்ட் ஆகுது.”
“இரு இரு!” என்றவன் அவளைப்போல்,
“நீதான் குற்றவாளின்னு நிரூபணம் ஆகிட்டா?” கேள்வியைத் தொடுத்தான்.
“அன்னைக்குச் சொன்னல்ல, என் வீட்ல வந்து சாணி அள்ளுன்னு. ஒருவேளை நான்தான் தப்புப் பண்ணன்னு நிரூபணம் ஆகிட்டா அதைப் பண்றேன்.”
இருவரும், பரஸ்பரமாகத் தங்களுக்குள் ஒர் ஒப்பந்த உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்கள்.
திருமணம் என்ற பந்தத்தின் ஒப்பந்தம் புரியாமல்.
***
இரவு உணவை முடித்தவன், எப்படியும் மெத்தையில் படுத்தால் அவளோடு வம்பு வரும் என்றறிந்து தரையில் படுக்கச் சென்றான். தாமரை படர்ந்திருப்பது போல் தன் மேனி முழுவதையும் மெத்தையில் படர விட்டுப் படுத்திருந்தவள், “ஓய் ஆட்டோக்காரா!” எனக் குரல் கொடுத்தாள்.
“சொல்லுங்க முதலாளி!”
“என்னடா, நீ பாட்டுக்குப் படுக்கப் போற.”
“வேற என்ன பண்ணனும்?”
“நான் தூங்குற வரைக்கும் நீ தூங்கக் கூடாது.”
“இங்கப் பாரு, ஏற்கெனவே மணி 12 ஆகப்போகுது. இதுக்கு மேலயும் வம்பு வளர்த்துட்டு இருந்தோம், விடிஞ்சிடும்.”
“அது என்னோட பிரச்சினை இல்ல.”
“எனக்குத் தூக்கம் வருது.”
“நான் தூங்காம நீ தூங்கக் கூடாது.” என்றாள் அழுத்தமாக.
“சில விஷயங்களை எவ்ளோதான் கட்டுப்படுத்தி வச்சாலும் கைய மீறி வெளிய வந்துடும். இப்பவே அரை மயக்கத்துல தான் உன்கிட்டப் பேசிட்டு இருக்கேன். சோ, மீதிப் பஞ்சாயத்தை நாளைக்கு வச்சுக்கலாம்.” என அவன் தரையில் படுத்துக் கொள்ள, அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
ரிதுவின் பார்வையை அறியாதவன், ஒருவழியாக அன்றைய இரவை முடித்து வைப்பதற்காகக் கண் மூட, “ஹலோ!” என்றாள்.
அந்தக் குரல் காதில் விழுந்தாலும், அசையாமல் அதே நிலையில் கருடேந்திரன் படுத்திருக்க, “நான்தான் ரிது பேசுறேன்.” என்றாள்.
என்னவோ சதி செய்வதாக, அவன் உள்மனம் எச்சரித்ததின் பிரதிபலனாகக் கண்கள் சுருங்கியது. அசையாமல் படுத்திருப்பவன் முதுகை வெறித்துக் கொண்டே, “உங்க பையன் என்னை ரொம்ப டார்ச்சர் பண்றான். உடம்பு முடியலன்னு சொல்லியும், கேட்காம ராத்திரி முழுக்கத் தூங்கக் கூடாதுன்னு தொல்லை பண்றான்.” என்றதும், அவனுக்குள் அசுர சக்தி புகுந்தது போல் தாவிப் பறந்து அவள் காதில் ஒட்டி இருந்த கைப்பேசியைப் பிடுங்கினான்.
“ஹா ஹா…”
அன்னைக்கு அழைக்கவில்லை என்பதை உறுதி செய்தவன், அவள் சிரிப்பில் கடுப்பாகிப் போனைத் தூக்கி அடிக்க, “பயந்துட்டியா…” என்று விட்டு மீண்டும் கலகலவென்று சிரித்தாள்.
முறைப்பின் தூக்கலை ஒரு படி அதிகரித்து, “பிசாசு!” என்று விட்டுப் படுக்கச் சென்றான்.
திரும்பி நான்கு அடி எடுத்து வைத்தவன், சொடக்கிடும் சத்தத்தில் அவள் பக்கம் திரும்ப, “உனக்கு செக் மேல செக் வச்சிருக்கேன். கட்டுப்பட்டு நடக்குறதைத் தவிர வேற வழியே இல்ல. நான் சொல்றதெல்லாம் செஞ்சுட்டு, என்னைத் தூங்க வச்சுட்டு, நீ போய்த் தூங்கு.” என்றவள் விழிகளில் அதிகாரத்திற்கான தோரணை மிளிர்ந்தது.
தன்னவன் அசையாமல் அப்படியே நிற்பதை வைத்துத் தன் வழிக்கு வந்து விட்டதை உணர்ந்தவள், “கால் புடிச்சு விடு.” என்றிட, அவன் உதடுகள் மேலும் கீழும் அசைந்தது. தன்னை வசை பாடுவது புரிந்தாலும் புரியாதது போல்,
“கமான் ஆட்டோக்காரா…” ஆள்காட்டி விரலை நீட்டி அழைத்தாள்.
‘ஆடும் ஒவ்வொரு ஆட்டத்திற்கும் தரமான பதில் உண்டு.’ எனத் தனக்குள் சொல்லிக் கொண்டவன் அடங்காத ஆக்ரோஷத்தைச் சிறிதும் பார்வையில் காட்டாது அவள் பக்கம் அமர்ந்தான்.
“ச்சைக்!”
மிக நெருக்கமாக அமரும் அவன் செயலைக் கண்டு அருவருக்கக் குரல் கொடுத்தவள், “தள்ளி உட்காருடா…” என்றாள்.
கருவிழிக்குள் தீ மூட்டி, எரிந்து கொண்டிருந்த ஒரு தீக்குச்சியை உருவி அவள் விழிகளை எரித்தான். அந்த நெருப்பை, ‘ஏளனம்’ எனும் நீரால் தோற்கடித்தவள்,
“என்னடா லுக்கு விடுற… என்னை மாதிரி ஆளுங்க பக்கத்துல இல்ல, பத்தடி தள்ளி நிக்கக் கூடத் தகுதி இல்லை உனக்கு. சாக்கடை மேல பட்டால் கூட, கழுவினால் போயிடும். உன் மேல இருக்க அழுக்கு பட்டா, பன்னீர்ல குளிச்சாலும் போகாது.” என்றாள்.
“அப்புறம் எதுக்குக் கால் புடிச்சு விடச் சொல்ற.”
“காலைப் பிடிக்க மட்டும் தான் உனக்குத் தகுதி இருக்கு.”
“இந்த ஆணவப் பேச்சுக்குத் தான்டி ‘புருஷன்’ என்ற பட்டத்தோட இப்படிப் பக்கத்துல உட்கார்ந்து இருக்கேன். பால்லயே குளிச்சுப் பஞ்சாமிர்தத்தால அபிஷேகம் பண்ணாலும் மிஸஸ் கருடேந்திரன்தான் உன் விதி.”
“நான் ஒத்துக்கிட்டா தான?”
“உலகத்துக்கு உன் சம்மதம் தேவையில்லை!”
“நிரந்தரம் இல்லாத ஒன்னுக்கு மதிப்புக் கொடுக்கணும்னு அவசியம் இல்ல.”
“அதேதான்! இப்போ உன்கிட்ட இருக்கற பணமும், பகட்டும் என்னைக்கா இருந்தாலும் மதிப்பில்லாமல் போகும். எந்த நிலையிலும் உன்னை விட்டுக் கொடுக்காம இருக்க உறவைத் தவிர எதுவும் இங்க நிரந்தரம் இல்லை.”
“பரதேசியா இருக்குறவனுக்கு உறவு நிலைக்காது.”
“ஒண்ணுமே இல்லாதவன் தான், சொந்த பந்தத்தோட சந்தோசமா வாழ்ந்துட்டு இருக்கான்.”
“அதெல்லாம் கற்பனை!”
“கற்பனையாய் இருந்தாலும் மனுஷனுக்குத் தேவையான ஒன்னு.”
“இந்த ரிது சதிகாவுக்குத் தேவையில்லை.”
“அப்புறம் எதுக்காக உன் அண்ணன் செத்துப் போனதும், பைத்தியக்காரி மாதிரி அலைஞ்சுகிட்டு இருந்த.”
“ஸ்டாப் இட்!”
“பேசக்கூடத் தடுமாறுற… உன்னோட தடுமாற்றம் தான் உறவுக்கான அர்த்தம்! ஒருவேளை, உன் அண்ணன் உன் கூட இருந்திருந்தா இந்த மாதிரி எவனோ ஒருத்தன், கழுத்துல தாலி கட்டி அதிகாரமா உட்கார்ந்து பேசிட்டு இருக்க மாட்டான்.”
“பேசாத!”
“ஆமா, உன் அம்மா எங்க இருக்காங்க? நானும் வந்ததுல இருந்து பார்க்கிறேன், அவங்களைப் பத்தின ஒரு சின்ன நியூஸ் கூட வர மாட்டேங்குது.”
“அது உனக்குத் தேவையில்லாதது.”
“என் மாமியார் பத்தி நான் தெரிஞ்சுக்கக் கூடாதா?”
“அவங்க மட்டும் சுயநினைவோட இருந்திருந்தா, இந்நேரம் நீ நீயா இருந்திருக்க மாட்ட.”
“பார்த்தியா… ஒரு உறவு கூட இல்லாததால தான், உன் நிலைமை இப்படி இருக்குன்னு நீயே ஒத்துக்கிட்ட.”
“உன்னைக் கூப்பிட்டது தப்புதான். நீ போய்த் தூங்கு.”
“கால் புடிச்சு விட்டுட்டுப் போறேன்.”
“தேவையில்லை!”
“தேவைப்படாததுக்கு ஆசைப்பட்டா நிலைமை இப்படித்தான் ஆகும்.”
“குத்திக் காட்டுறியா?”
“இதுக்கு மேலயும் யாரும் உன்னைக் குத்திடக் கூடாதுன்னு அக்கறைப் படுறேன்.”
“உன் அக்கறை தேவையில்லை. என்னை எப்படிப் பார்த்துக்கணும்னு எனக்குத் தெரியும்.”
“இப்படியே இருந்து வாழ்க்கைல என்ன சாதிக்கப் போற?”
“இதுவரைக்கும் என்னென்னமோ சாதிச்சிருக்கேன். இதுக்கு மேலயும் சாதிப்பேன்.”
“உண்மையாவே சாதிச்சு இருக்கியான்னு உன் உள்மனசைக் கேட்டுப்பார். உன்னைச் சுத்தித் தோல்வியும், தனிமையும் மட்டும் தான் இருக்குன்னு அது சொல்லும். உறவு இல்லாததால தான், என் குடும்பத்தைச் சிதைச்சு என்னை இப்படி வச்சிருக்க.”
“வாய மூடுடா! சும்மா குடும்பத்தைப் பிரிச்சுட்டேன், அது இதுன்னு பேசாத. உன்னைத் தாலி கட்டச் சொல்லி நானா சொன்னேன்? காசில்லாத உங்களுக்கு ஒன்னு நடந்தா தான் அது அநியாயம்னு இல்ல. யாருக்கு நடந்தாலும் அது அநியாயம் தான். எனக்கு நீ செஞ்ச பாவத்துக்குத் தான் இங்க வந்து உட்கார்ந்து இருக்கியே தவிர, என்னால இல்ல. இதுக்கு மேலயும் என்கிட்ட இதைப் பத்திப் பேசாத. ஒரு நேரம் மாதிரி ஒரு நேரம் பேசிட்டு இருக்க மாட்டேன்.” என்றவள் மடியில் இருந்த தலையணையைத் தூக்கி அடித்து விட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.
தன்னைத் தூங்க விடாமல் ஆர்ப்பாட்டம் செய்தவள் நிம்மதியைக் கெடுத்ததில், பெரும் நிம்மதி கருடேந்திரனுக்கு. மெல்ல அவளின் பலவீனம் புரிய ஆரம்பித்தது. தடுமாற்றத்தைத் தனக்குள் வைத்துக் கொண்டு, சாதுரியமாக நடிக்கும் தாலி கட்டியவளைத் தோற்கடிப்பது எளிதென்று உணர்ந்து கொண்டவனுக்கு அப்படி ஒரு ஆனந்தம்.
அந்த ஆனந்தம், வந்த உறக்கத்தை விரட்டி அடித்தது. தன்னைத் தூங்கக் கூடாது எனக் கட்டளையிட்டவளைத் தூங்க விடாமல் செய்தால் என்ன என்ற பெரும் ஆராய்ச்சி அவனுக்குள் உலா வந்தது. மனமும், அறிவும் சேர்ந்து உன் இஷ்டத்திற்குச் செல் என வழிகாட்ட, மெல்ல அவள் கால் விரல்களைப் பிடித்தான்.
வேண்டாத காயங்களை மனத்தில் போட்டுச் சலித்துக் கொண்டிருந்தவள், அவன் பக்கம் பார்வையைத் திருப்ப, “காலையில எங்க அம்மாக்கு போன் போட்டு, உங்க பையன் ராத்திரி முழுக்க என் காலைப் பிடிச்சு விட்டான்னு பெருமையாச் சொல்லு. எங்க அம்மா ரொம்பச் சந்தோஷப்படுவாங்க.” என்றவன் உள்ளத்தில் குரோதமும், விழிகளில் அன்பும் மின்னியது.
“ப்ச்! விடு.”
கால்களை இழுக்கும் மனைவியின் கணுக்காலைப் பிடித்துத் தன் மடியில் வைத்தவன், “உண்மையா தான் சொல்றேன். எங்கம்மா ரொம்ப சந்தோஷப்படுவாங்க. ஏன்னா, அவங்களுக்குப் பொண்ணுங்களை ரொம்ப மதிப்பா நடத்தப் பிடிக்கும். அதுவும், அவங்களோட மருமகளை ரொம்ப மதிப்பா நடத்தணும்னு ஆசைப்படுவாங்க. பெத்த புள்ளையாவே இருந்தாலும், மருமகளுக்கு அப்புறம் தான்னு தூக்கி அடிச்சவங்க. உன்னக் கஷ்டப்படுத்தினா, எங்க அம்மா என்னை மன்னிக்க மாட்டாங்க.” என்றவன் வார்த்தையைக் கேட்டும் கால்களை விட்டுக் கொடுக்காது எடுக்க முயற்சிக்க,
“அழுக்கு ஒட்டிக்கும்னு பயமா இருக்கா? வேணும்னா, கையச் சுத்தமாய் கழுவிட்டு வரவா…” என்றதும் கனிந்த பார்வை ரிதுவிடம்.
வார்த்தைக்குப் பின் எடுப்பதை நிறுத்தியவள் அமைதியாகப் படுத்திருந்தாள். அதில் மெல்லிய புன்னகையைக் காட்டியவன், மற்றொரு காலையும் மடி மீது வைத்துப் பிடித்து விடத் தொடங்கினான். முதல்முறையாக, ஒரு ஆண் இதுபோன்று சேவை செய்கிறான் ரிதுவிற்கு. அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்குச் சலனங்கள். என்ன நினைக்கிறோம் என்பதை உணராது ஏதேதோ சிந்தனையில் சுழன்று கொண்டிருந்தாள்.
“ஸ்ஸ்ஆஆ…”
“என்னாச்சு?” எனப் பதறியவன் வலது கால் சுண்டு விரல் வீங்கி இருப்பதை அப்போதுதான் கவனித்தான்.
“என்ன, இப்படி வீங்கி இருக்கு?”
ரிது சதிகா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, “ஆயில்மெண்ட் போடலையா?” கேட்டான்.
அதற்கும் அவள் அமைதியாகவே இருக்க, “ஆனாலும், ஒரு பொண்ணுக்கு இவ்ளோ வீம்பு இருக்கக் கூடாது.” என்றவன் மருத்துவர் கொடுத்த ஆயில்மெண்ட் எங்கே என்று விசாரிக்க, கை காட்டினாள்.
எடுத்து வந்தவன் பதமாக அந்த இடத்தை மருந்தால் மறையச் செய்ய, “திடீர்னு எதுக்கு இந்த நடிப்புன்னு தெரிஞ்சுக்கலாமா?” கேட்டவள் பார்வை அவன் மீதுதான் இருந்தது.
தலை குனிந்து இருந்தவன் நிமிர்ந்து ஒரே ஒரு பார்வையை அழுத்தமாக வீசிவிட்டு மீண்டும் குனிந்து கொள்ள, “அன்பால என்னைத் தோற்கடிக்கனும்னு நினைச்சா, தோல்வி உனக்குத்தான். உன் முன்னாடி இருக்குறது கல்லு இல்ல, பாறை! எவ்ளோ செதுக்குனாலும் உடையாது. நீ நினைக்கிற உருவத்துக்கு நிச்சயம் வராது.” என்றிட, சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் நகர்ந்து வந்தவன் விழிகளின் ஓரம் படிந்திருந்த காயத்தின் மீது மருந்தைப் பூசி விட்டு,
“குட் நைட்!” என்றான்.
8. சிறையிடாதே கருடா
written by Competition writers
கருடா 8
“ஹே…” என்ற பெரும் அதிர்வோடு வண்டியை ஓரம் நிறுத்திய கருடேந்திரன், காரை நோக்கி ஓடினான். நெடுஞ்சாலைக்கு நடுவில் இருக்கும் தடுப்புச் சுவரில் மோதி, புகைச்சலுக்குள் காணாமல் போனது அவன் மனைவி ஓட்டிச் சென்ற கார்.
அவனுக்குள் உண்டான அதிர்வு, அதிவேகத்தில் ஓட வைத்தது. அதற்குள் வாகன ஓட்டிகள் அந்தக் காரைச் சூழ்ந்தனர். பயத்தின் ஒலச்சத்தம் கேட்ட வண்ணம் இருந்தது. அருகில் வந்தவன், “ரிது!” என அழைத்துக் கொண்டு ஆள்களை விலக்கிட, சிறு ரத்தக் காயங்களோடு சுயநினைவு இல்லாமல் இருந்தாள் ரிதுசதிகா.
“ரிது!” எனக் கார் கதவைத் திறந்தான்.
கதவைத் திறந்ததுமே அவன் நெஞ்சில் வந்து விழுந்தாள். பயத்தின் உச்சத்தை அடைந்த அவன் மனம், கன்னத்தைத் தட்டி எழுப்ப முயற்சித்தது. மணாளனின் எந்தக் குரலுக்கும் செவி மடுக்காதவள் அதே நிலையில் அப்படியே இருந்தாள். நசுங்கிப் போயிருந்த தண்ணீர் பாட்டிலில் மீதமிருந்த தண்ணீரை எடுத்து முகத்தில் தெளித்தவன்,
“இங்கப் பாரு, கண்ணத் திற. உனக்கு ஒன்னும் இல்ல. நீ நல்லாத்தான் இருக்க…” எனக் கத்திக் கூப்பாடு போட்டும் எந்த அசைவும் இல்லை அவள் தேகத்தில்.
சுற்றி இருந்தவர்கள், ஆளாளுக்கு ஒன்று பேசி அவன் பயத்தின் அளவுகோலை இன்னும் உயர்த்தி வைக்க, உயிர் இருக்கிறதா எனச் சோதித்தவனின் கை கால்கள் நடுங்கியது. தன்னவளின் உயிர் நாடி பத்திரமாக இருப்பதை உணர்ந்து, அந்தப் பயத்திற்கு நடுவிலும் சின்னதாகப் புன்னகைத்தான்.
யார் உதவி செய்ததோ தெரியவில்லை, சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்து நின்றது. யாரையும் தன் மனைவி அருகில் விடாதவன் கையோடு தாங்கிக் கொண்டு வண்டியில் ஏறினான். உடனடி முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இமையின் விளிம்பில் வழிந்து கொண்டிருந்த ரத்தத்தைத் துடைத்தவன்,
“நல்லாத் தான இருக்காங்க?” என ஆழ்ந்த குரலில் கேட்டான்.
“பெருசா எதுவும் இருக்க மாதிரித் தெரியல சார். பயத்துல அன்கான்சியஸ் ஆகி இருக்கலாம். ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போனா என்னன்னு தெரிஞ்சிடும்.”
“கொஞ்சம் சீக்கிரம் போங்க சார்”
“இவங்க உங்களுக்கு யார் சார்?”
ஒரு நொடி தடுமாறியவன் தொண்டைக் குழிக்குள் சிக்கிக் கொண்ட வார்த்தையை மேல்நோக்கி இழுத்து, “என்னோட வைஃப்!” என்றான்.
முதல்முறையாக, அவளுடனான உறவை ஒப்புக் கொண்டவன் இமை சிமிட்டாது அவளையே பார்த்துக் கொண்டு பயணிக்க, துணைவனின் மடியில் சுகமாக உறங்கிக் கொண்டு வந்தாள் ரிதுசதிகா. ஓட்டநரின் அசாத்திய தைரியத்தால், இருபது நிமிடத்தில் மருத்துவமனைக்கு வந்தடைந்தாள். வண்டியை விட்டு இறங்கியதுமே ஓட்டுநரின் கைப்பிடித்தவன்,
“ரொம்பத் தேங்க்ஸ் சார்!” என்றான்.
அவர் சின்னப் புன்னகையுடன் கடக்க, அந்தச் சிரிப்புக்குப் பின் எத்தனை நபர்கள் இந்த நன்றியை உரைப்பார்கள் என்ற எண்ணம் ஒளிந்திருந்தது. உயிர்ச் சுமையைத் தாங்கிக்கொண்டு, எமனோடு போராடி பல உயிர்களைக் காப்பாற்றும் ஓட்டுநர்கள் நிலை, பெரிதாக வெளியில் தெரிவது இல்லை. சுய விளம்பரம் செய்து பணம் சம்பாதிக்கும் நபர்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் கூட இவர்களுக்குக் கிடைப்பதில்லை.
கண்ணாடிக் கதவின் வழியாக, மனைவியைப் பார்த்துக் கொண்டிருந்தான். மாமனார் சொன்ன போதே யோசித்திருக்க வேண்டும் எனத் தாமதமாக உணர்ந்தான். கம்பீரத்திற்குச் சொந்தக்காரி, ஒரு இருக்கையின் மேல் இவ்வளவு பயம் ஏன் கொள்கிறாள் என்ற கேள்வி அவனைத் துரத்தியது. அவள் தோரணையும், வாயிலிருந்து உதிக்கும் கடுமையான சொற்களும், ஒரு பயத்திற்குக் கட்டுப்படுவது ஆச்சரியமாக இருந்தது.
“ரிது எங்க?”
மாமனாரின் குரலுக்குத் திரும்பியவன் விலகி நின்றான். கண் கலங்கக் கண்ணாடி வழியாக மகளைப் பார்த்தவர், “டாக்டர் என்ன சொன்னாரு?” விசாரித்தார்.
“பெருசா அடி எதுவும் இல்லை. அங்கங்க சின்னக் காயம் தானாம்.”
மருமகனின் வார்த்தையை நம்பாது மருத்துவர் வெளியில் வரும் வரை அப்படியே நின்றிருந்தார் பொன்வண்ணன். கொடுக்க வேண்டிய சிகிச்சையைக் கொடுத்துவிட்டுக் கதவைத் திறந்த மருத்துவர்,
“ரொம்ப பேனிக் ஆனதோட ரிஃப்ளெக்ட் தான் இந்த மயக்கம். மத்தபடி பயப்பட எதுவுமில்லை. நர்ஸ் ட்ரெஸ்ஸிங் பண்ணிட்டு இருக்காங்க. கொஞ்ச நேரத்துல நீங்க போய் பார்க்கலாம்.” என்றார்.
உள்ளே சென்றவரின் கண்கள், கண்ணீருக்கு நடுவில் மிதந்து கொண்டிருந்தது. அங்கங்கே ரத்தக் காயங்களோடு, பயம் தெளியாது மருந்தின் வீரியத்தோடு படுத்துக் கொண்டிருக்கும் மகளைக் கரிசனத்தோடு பார்த்தார். அவருக்குப் பின் வந்தவன் மனநிலை, குற்ற உணர்ச்சியில் தத்தளித்தது. தன்னால் தான் இப்படி ஒரு நிலை என்று எண்ணியவன்,
“சாரி சார்!” என்றான் வருத்தத்தோடு.
மருமகன் பக்கம் திரும்பாதவர், மகள் தலையில் கை வைத்து மெதுவாக வருடிவிட்டு, “என்ன ஆனாலும் டிரைவ் பண்ண மாட்டான்னு நம்புனதால தான் எல்லாரையும் அனுப்பி விட்டேன். இந்த அளவுக்குத் துணிவான்னு எதிர்பார்க்கல. என் பொண்ணைப் பத்தி நானே சரியாப் புரிஞ்சுக்கல. இப்ப வந்த நீ எப்படிப் புரிஞ்சிப்ப?” என்றதும் புருவங்களைச் சுருக்கினான்.
“எதனால உங்க பொண்ணுக்கு இவ்ளோ பயம்னு தெரிஞ்சுக்கலாமா?”
மெல்ல மகள் மீதிருந்த பார்வையை மருமகன் மீது திருப்பியவர், “வாழ்க்கையில எந்தக் குறையுமே இல்லாம வளர்ந்தவ என் பொண்ணு. கேட்ட எல்லாத்தையும் உடனே நடத்திக் கொடுக்குற அண்ணன். பசங்களை மட்டுமே உசுரா நினைக்கிற அம்மான்னு, இவ உலகம் ரொம்பச் சந்தோஷமா இருந்துச்சு. என் பையனுக்குப் பொண்ணு பார்த்தோம். அன்னைக்கு ரிது ஒரு வேலை விஷயமா வெளிநாடு போயிட்டா. திரும்ப வந்தவ உடனே அண்ணனுக்குப் பார்த்த பொண்ணைப் பார்க்கணும்னு அடம் பிடிச்சா. நாங்க எவ்ளோ சொல்லியும் கேட்கல. அண்ணனைக் கூப்பிட்டுட்டுக் கிளம்பிட்டாள்.
அன்னைக்கு ரிது தான் டிரைவ் பண்ணிட்டுப் போனா… அதுதான் என் பொண்ணைச் சாதாரணமாய் பார்த்த கடைசி நாள். கொஞ்ச நேரத்துல ஆக்சிடென்ட்னு போன் வந்துச்சு. இதே மாதிரி தான் ஓடி வந்தேன். அன்னைக்கும் என் பொண்ணு இப்படித்தான் படுத்திருந்தா. பையன் தான் மொத்தமா படுத்துட்டான்…” என இடைவெளி விட்டார் தொண்டை அடைத்ததில்.
மாமனாரின் வார்த்தைகளை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தவன், “தண்ணி குடிக்கிறீங்களா சார்” கேட்டிட, தொண்டையைச் செருமிக் கொண்டு,
“அன்னைக்குப் படுத்த படுக்கை ஆனவதான் என் பொண்டாட்டி. பிள்ளையோட மரணம் அவளை மொத்தமா மாத்திடுச்சு. யாரைப் பார்க்குறதுன்னு தெரியாம திண்டாடி நின்னேன். சொந்தம்னு சொல்லிக்கிட்டு வந்து பார்த்த அத்தனைப் பேரும், அவங்களோட வன்மத்தைக் கொட்டிட்டுப் போனாங்க. அன்னைக்குத் தான் தெரிஞ்சுது, பணத்தைச் சம்பாதிச்ச நான் நல்ல மனுஷங்களைச் சம்பாதிக்கலன்னு.
நினைவு திரும்பிக் கண் முழிச்சதும் அண்ணனைக் கேட்டா. நல்லா இருக்கான்னு எவ்ளோ சொல்லியும் நம்பல. தன்னோட அண்ணன் உயிரோட இல்லன்னு தெரிஞ்சு துடிச்சா… அவனோட சாவுக்கும் நான் தான் காரணம்னு பைத்தியக்காரி மாதிரி உளறிட்டு இருந்தா. அதை இன்னும் அதிகப்படுத்துச்சு என் மனைவியோட விஷயம். கண்ணு முன்னாடி உணர்வில்லாமல் படுத்திருக்க அம்மா, தன்னோட ஆசையால உயிரை விட்ட அண்ணன், பெரிய இழப்பைத் தாங்கிக்க முடியாமல் தனியா நிக்கிற அப்பான்னு அவளோட தண்டனை ரொம்பப் பெருசு!” என்றவருக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை.
அவர் நிலை கண்டு ஆதரவாகத் தாங்கிப் பிடித்து அங்கிருந்த இருக்கையில் அமர வைத்தான். மருமகன் கையைத் தன் உள்ளங்கையில் வைத்து மூடியவர் ஆழமாகப் பார்த்தார். அந்தப் பார்வைக்குப் பின், ஒரு தேடுதலும் பாதுகாப்பும் இருப்பதை உணர்ந்து கொண்டவன் ஆதரவாகத் தட்டிக் கொடுத்தான்.
ரிது சதிகா அந்தச் சம்பவத்திலிருந்து மீள முடியாமல் மனநல மருத்துவரைத் தேடிச் செல்லும் அளவிற்குச் சிதிலமடைந்தாள். மனைவிக்காக வெளிநாட்டிலிருந்து கூட மருத்துவரை அழைத்து வந்து பார்த்து விட்டார். அதிர்வு தாங்காமல் சரிந்தவர், சரிந்தவராக இன்று வரை இருக்கிறார்.
பெற்ற பிள்ளையைத் தொலைத்துவிட்டு, மீதம் இருக்கும் மகளைத் தேற்ற முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தவர், மனைவியைத் தனி ஆளாக மருத்துவமனையில் சேர்த்துக் கவனித்துக் கொண்டார். தந்தையின் அவஸ்தைகளைப் புரிந்து கொள்ளாதவள், தனி ஒரு உலகில் குற்ற உணர்ச்சியில் நாள்தோறும் பயணிக்க ஆரம்பித்தாள்.
இம்மூவரின் தாக்கத்தால், முடங்கிப் போன நம்பிக்கையை மீட்டெடுக்க முடியாமல் இவர்களைச் சுற்றியே இருந்து விட்டார் பொன்வண்ணன். நன்றியோடு வேலை பார்க்க வேண்டிய சில கயவர்கள், இதுதான் சமயம் என்று அவர்கள் சொத்தை அனுபவிக்க ஆரம்பித்தார்கள். மெல்ல மெல்லச் சுரண்டி பெரும் நஷ்டத்திற்குத் தள்ளப்பட்டது பொன்வண்ணனின் தொழில்கள் அனைத்தும்.
வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, ஆறு மாதமாகச் சம்பளம் தராமல் இருக்கும் தகவலைத் தெரிந்து கொண்டவர் அனைத்துக் கையாடலையும் கண்டு பிடித்தார். தனி ஆளாக நிற்கும் இவர் என்ன செய்து விடப் போகிறார் என்ற எண்ணத்தில், பணத்தைச் சுருட்டிய அனைவரும் தைரியமாக ஒப்புக்கொண்டு வெளியேறினார்கள்.
ஏற்கெனவே மனமுடைந்து முடங்கி இருந்தவர், தப்புச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடத் திராணி இன்றி, போனது போகட்டும் என்று விட்டுவிட்டார். மனநல மருத்துவரைப் பார்த்துவிட்டு வரும் வழியில், மூடி இருக்கும் கம்பெனியைப் பார்த்தாள். தந்தையிடம் விசாரிக்கலாம் என்று வீடு வந்தவள் பாதி மயக்கத்தில் இருந்த தந்தையைக் கண்டு பதறினாள்.
“அப்பா…”
மகளின் அனத்தல் சத்தத்தில் அசைந்தவர் தண்ணீர் கேட்டார்.
அதைக் கூடச் செய்யாமல் அழுது கொண்டிருந்த தன் முட்டாள் தனத்தை எண்ணித் தலையில் அடித்துக் கொண்டவள், தந்தையை இயல்புக்கு மீட்டாள். வெகு மாதங்கள் கழித்துத் தந்தை, மகள் இருவரும் அன்றுதான் முகம் பார்த்துக் கொண்டனர். தங்களைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் விவரித்தவர் ஒன்றும் செய்ய முடியாத கையாலாகாதவராய் கண்ணீர் சிந்தினார்.
அந்தக் கண்ணீரும், சுற்றி இருந்தவர்கள் செய்த துரோகமும், அவளை எழ வைத்தது. இவ்வளவு இழப்புகளைத் தன்னால் சந்தித்த தன் தந்தைக்கு அனைத்தையும் திருப்பிக் கொடுக்க முடிவு செய்தாள். சொந்தம் என்று சொல்லிக்கொண்டு பணத்திற்காக உறவாட வந்தவர்களை முதல் வேலையாக வெட்டி விட்டாள். அவளுக்கென்று இருந்த நம்பகமான தோழர்களின் உதவியால் நம்பிக்கைத் துரோகம் செய்த அனைவரையும் பிடித்தாள்.
பெண், என்ன செய்து விடப் போகிறாள் என்ற எண்ணத்தில் அவளுக்குப் போக்கு காட்ட, கையடக்கக் கத்தியைக் கழுத்தில் வைத்து,
“எண்ணி ஒரு மணி நேரத்துல எடுத்த பணம் எல்லாம் முழுக் கணக்கோட வந்தாகணும். இல்லனா, செத்தது நீதான்னு கண்டு பிடிக்க முடியாத அளவுக்குக் கிழிச்சுக் குப்பையா போட்டுடுவேன்.” என்றவளின் புது அவதாரம் தான் கருடேந்திரன் பார்த்தது.
மகளைப் பற்றிய வரலாறைச் சுருக்கமாகச் சொல்லி முடித்தவர் அமைதியாகக் கண்மூடிச் சுவரில் சாய்ந்து கொண்டார். அவரையும், படுத்திருக்கும் மனைவியையும் பார்த்தவனுக்குப் பலத்த பெருமூச்சு.
***
கண் முழித்ததும் தந்தையானவர் ஓடிச் சென்று நலம் விசாரிக்க, தாலி கட்டியவன் பெயருக்கென்று நின்றிருந்தான். வாய்மொழி தந்தைக்காக இருக்க, விழிமொழி அவனுக்காக இருந்தது. சிவந்த விழிகள் கோபத்தின் அளவைப் புரிய வைத்தது. சிறிது குற்ற உணர்வு இருந்தாலும், வெளிக்காட்டிக் கொள்ளாது திடமாக நின்றிருந்தான் கருடேந்திரன்.
“என்ன நினைச்சு இவனை எனக்குக் கல்யாணம் பண்ணி வச்சீங்கன்னு தெரியல. இப்ப அது தப்புன்னு புரியுதா?” என்றவள் பார்வை அவன் மீதுதான் நிலை குத்தியது.
கொடுக்க வார்த்தைகள் இல்லாததால் தடுமாறிக் கொண்டிருந்தார் பொன்வண்ணன். தந்தையின் தடுமாற்றத்தைப் பார்த்தவள், வெற்றி பெற்ற மிதப்பில் லேசாக உதடு வளைத்து, “ரொம்ப அவசரப்பட்டுட்டிங்கப்பா… இதுக்கான விலையா என் உசுரை எடுக்கப் பார்த்திருக்கான். இனியும் இவன் கட்டுன இந்தத் தாலி என் கழுத்துல இருக்கனுமா?” என்ற இரண்டாவது கேள்வியில் அந்தத் தடுமாற்றம் ஆட்டம் கண்டது.
கனகச்சிதமாகத் திட்டம் போட்டுக் கொலை செய்யப் பார்த்தது போல் பிதற்றும், மனைவி மேலிருந்த சின்னக் கருணையும் மறைந்து போனது. அப்படியே விட்டுச் செல்லாமல் காப்பாற்றியதற்கான தண்டனையாகக் கருதியவன்,
“என்னமோ அந்தத் தாலிக்கு மதிப்புக் கொடுத்துக் கழுத்துல மாட்டிருக்க மாதிரிப் பேசுற. உனக்கெல்லாம் அது ஒரு தூசு. ஏற்கெனவே தூக்கிப் போட்டவ தான… காரியம் ஆகாம ஒன்னும் அது உன் கழுத்துல இல்ல. என்னை வச்சு உன்னை நல்லவளாக்கிக்காத.” என்றான்.
“நான், என் அப்பாகிட்டப் பேசிட்டு இருக்கேன்.”
“என்னைப் பத்திப் பேசிட்டு இருக்க.”
“சோ வாட்!”
“என்னைப் பத்திப் பேசினா நான்தான் பதில் கொடுப்பேன்.”
“முதல்ல உனக்கு இங்க என்னடா வேலை? அதான் கொலை பண்ணப் பார்த்த பர்ஸ்ட் அட்டெம்ட் நல்லபடியா முடிஞ்சிருச்சில்ல. அடுத்து என்ன பண்ணலாம்னு ஓசில தின்னுட்டு யோசி.”
“அடுத்த தடவை உன் வாயைக் கிழிக்கிற மாதிரி தான்டி ஸ்கெட்ச் போடுவேன்.”
“அதுக்கு நீ உயிரோட இருக்கணும்.”
“இப்படியே உன் மூஞ்சப் பார்த்துட்டு இருந்தா, சத்தியமா நெஞ்சு வலி வந்து செத்துடுவேன்.”
“அப்போ நல்லாப் பாரு.”
“ரெண்டு பேரும் நிறுத்துங்க.”
“அவன மட்டும் நிறுத்தச் சொல்லுங்கப்பா. உங்களுக்கும் எனக்கும் நடுவுல அவன் யாரு? பஞ்சப் பரதேசிய வீட்டுக்குள்ள விட்டதே தப்பு. இதுல நமக்கு நடுவுல விடுறது பெரிய தப்பு!” என்ற வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள் சரளா, சத்யராஜ் தம்பதிகள்.
மருமகளின் வார்த்தை ஊசியாய் உள்ளத்தைக் குத்தினாலும் காட்டிக் கொள்ளாது, “எப்படிம்மா இருக்க? பார்த்து வண்டிய ஓட்டிட்டுப் போகக் கூடாதா? நல்லவேளையா சின்னக் காயத்தோட ஆச்சு.” கருணையாக நலம் விசாரித்தார் சரளா.
“பெருசா எந்தப் பிரச்சினையும் இல்லல்ல சார்.”
மகள் பேசிய வார்த்தைகள் அவள் புகுந்த வீட்டு ஆள்களின் காதில் விழுந்திருக்கும் என்ற சங்கடத்தோடு நின்று கொண்டிருந்தவர், “அதெல்லாம் இல்ல.” என நெளிந்து கொண்டு பதில் கொடுத்தார்.
“பெருசா ஏதாச்சும் ஆகும்னு நினைச்சுப் போட்ட பிளான் சொதப்பிடிச்சா?”
தங்களைப் பார்த்துக் கேட்கும் கேள்வி புரியாததால் பக்கத்தில் நின்றிருக்கும் மகனைப் பார்த்தார்கள். அவனோ சுழற்றி அடிக்கும் சூறாவளி போல், கடுமையான பார்வையோடு நின்றிருந்தான். வாய் வார்த்தை, பிரச்சினையாக மாறிவிடக் கூடாது எனப் பயந்தவர் மகளை அடக்க முயன்றார்.
“என்னை எதுக்காகப்பா அடக்குறீங்க? குடும்பமா சேர்ந்துதான் இந்தப் பிளானைப் போட்டு இருப்பாங்க. உங்களுக்கு ஒரே வாரிசு நான் மட்டும்தான். என்னைக் கொலை பண்ணிட்டா, இவனைப் புருஷன்னு காரணம் காட்டி எல்லாச் சொத்தையும் வாங்கிக்கலாம் பாருங்க. அதுக்கான முயற்சியா தான் இவனை என் தலையில கட்டிய வச்சாங்க. அதுக்காக, இவங்க சொன்ன அத்தனையும் பொய்! அந்த ரவி கூடச் சேர்ந்து பித்தலாட்டம் ஆடி இருக்காங்க.”
“என்னம்மா இப்படிப் பேசுற?”
“இவ்ளோ சீக்கிரம் குட்டு உடையும்னு நினைக்கலையோ? நல்லா அருமையா அடுத்தவன் சொத்தை ஆட்டையப் போடுறதுக்காகவே பிள்ளையைப் பெத்து வச்சிருக்கீங்க.”
“ஏய்! என் அப்பா, அம்மாகிட்ட மரியாதையா பேசு. அவங்களுக்கும், நடந்ததுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.”
“சம்பந்தமில்லாம தான் இப்படி நல்லவங்க மாதிரி வந்து விசாரிக்கிறாங்களா? உங்களை மாதிரித் திருட்டுக் குடும்பத்து கிட்ட இருந்து சொத்தைக் காப்பாத்த தான்டா, கடவுள் என்னை உயிரோட விட்டு வச்சிருக்காரு.”
“உன் பொண்டாட்டி என்னப்பா சொல்றா?” என்ற தந்தையின் கேள்விக்குப் பதில் அளிக்காதவன்,
“உங்க பொண்ணை வாயை மூடச் சொல்லுங்க. தேவை இல்லாம என் அப்பா அம்மாவை அசிங்கப்படுத்துறதைப் பார்த்துட்டுச் சும்மா இருக்க மாட்டேன்.”
“இங்கப் பாருடா, கொலைகாரனுக்கு ரோஷத்தை. என்னைக் கல்யாணம் பண்ண கையோட வீட்ட மீட்டுட்ட. உன் தம்பிய பெரிய ஹாஸ்பிடல்ல சேர்த்து ட்ரீட்மெண்ட் பார்க்குற. இதெல்லாம் எனக்குத் தெரியாதுன்னு நினைச்சுகிட்டு இருக்கியா? என் வாழ்க்கைலயே பார்த்த மிகப்பெரிய பிச்சைக்காரத் திருட்டுக் குடும்பம் நீங்க தான்டா.” என்றவளை அடிப்பதற்காகப் பாய்ந்தான் கருடேந்திரன்.
பாயும் மகனைத் தடுத்துப் பிடித்தார் சத்யராஜ். ஒரு நொடியில் தலைகீழான சூழ்நிலையில், பதறிப் போன பொன்வண்ணன் மகள் பக்கம் நின்று கொள்ள, “சரியான ஆம்பளையா இருந்தா, மேல கை வச்சுப் பாருடா.” என அவனை உசுப்பேற்றினாள்.
“நீ பேசுறது ரொம்பத் தப்பா இருக்கும்மா. உங்க அப்பாவா வந்து தான் வீட்டை மீட்டுக் கொடுத்தார். நாங்க எவ்வளவோ வேணாம்னு சொன்னோம். அவர்தான் என் பொண்ணு பண்ணலனாலும், அவளால உங்களுக்கு ஏற்பட்டதைச் சரி பண்ண வேண்டிய கடமை எனக்கு இருக்குன்னு மீட்டுக் கொடுத்தார். என் பையன் முன்ன விட இப்ப ரொம்ப நல்லா இருக்கான். வேற ஹாஸ்பிடல் மாத்த வேண்டிய தேவையே இல்ல. அதையும் உங்க அப்பா தான் வலுக்கட்டாயமாய் பண்ணாரு. காசு பணத்துக்குப் பிள்ளையை விக்கிற பெத்தவங்க நாங்க இல்ல.”
“ஹா ஹா!” கம்பீரமாகப் பேசும் மாமனாரைக் கண்டு சத்தமிட்டு நகைத்தவள், “அவர் கொடுத்தா வெட்கமே இல்லாம வாங்கிப்பீங்களா? ரோஷத்தோட இருக்க எந்த மனுஷங்களும் இப்படிச் சொல்ல மாட்டாங்க.” என்றதைக் கேட்டதும் தந்தையை விட்டுத் திமிறப் பார்த்தான் கருடேந்திரன்.
அவனை அடக்க முடியாமல் அடக்கியவர், “அந்தக் காசை நாங்க திருப்பிக் கொடுத்திடறோம். எங்க பிள்ளைய எப்படிப் பார்த்துக்கணும்னு எங்களுக்குத் தெரியும். இன்னொரு வார்த்தை எங்க குடும்பத்தைப் பத்தியும், என் பிள்ளைங்களைப் பத்தியும் பேசாதம்மா.” என்றவரின் வார்த்தையில் இருக்கும் கோபத்தை அங்கிருந்த அனைவரும் உணர்ந்தார்கள்.
“நல்ல டிராமா கம்பெனி! உங்க பையன் திட்டம் போட்டு என்னைக் கொலை பண்ணப் பார்ப்பான். அதுக்கு வக்காலத்து வாங்கப் பின்னாடியே நீங்க வருவீங்க. ஏன்டா இப்படிப் பண்ணிங்கன்னு கேட்டா துள்ளிக் குதிப்பீங்க. நல்லா இருக்கு உங்க கூத்து!”
“வேணாம்டி! என்னை மிருகமா மாத்தாத. அப்படியே செத்துத் தொலைன்னு விடாமல் கூட்டிட்டு வந்து சேர்த்ததுக்கு நல்லா நன்றியைக் காட்டுற.”
“ஆக்சிடெண்ட் ஆனதுக்குக் காரணமே நீதான்டா”
“இதுக்கு மேல இங்க இருக்குறது சரி வராது. நம்ம போகலாம் கருடா…” என மகனை இழுக்கும் கணவனைத் தடுத்த சரளா, “உனக்கு இப்படி ஆனதுக்கு எந்த விதத்துல என் பையன் காரணம்?” அழுத்தமாகக் கேட்டார்.
தான் பேச ஆரம்பித்ததற்குப் பின்னர், அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த மாமியார் கேள்வி எழுப்பியதும், வெகுண்டு எழுந்தவள் நடந்த அனைத்தையும் விவரித்தாள். உண்மையா என்பது போல் மகனை ஒரு பார்வை பார்க்க, தலை குனிந்து கொண்டான் கருடேந்திரன். அவன் கையைப் பிடித்திருந்த கணவனின் கையைப் பிரித்தார்.
“என் வளர்ப்பை அசிங்கப்படுத்தினதுக்காகத் தான் இந்தக் கல்யாணத்தையே நடத்தி வச்சேன். இப்பத் திரும்பவும் அதையே பண்ணிட்டு வந்து நிக்கிற. இனி ஒரு தடவை இந்தப் பொண்ணு என் வளர்ப்பைத் தப்புச் சொன்னா, உசுரோடவே இருக்க மாட்டேன்.” என்றவர் பொன்வண்ணனைப் பார்த்து,
“உங்க பணம் உங்க வீடு தேடி வரும், சார்.” என்றதோடு மகனை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேற, அவருக்குப் பின்னால் சத்யராஜும் வெளியேறினார்.
அன்னை பேசி விட்டுச் சென்ற வார்த்தையால் கடும் ஆத்திரத்திற்கு ஆளானவன், பக்கத்தில் இருந்த மருந்து பாட்டிலைத் தூக்கிப்போட்டு உடைத்து விட்டுச் சரசரவென்று வெளியேற, செய்வதறியாது நின்று கொண்டிருந்தார் ரிதுவின் தந்தை.
***
மாமனார் வீட்டிற்குச் செல்ல விரும்பாதவன் பூங்காவில் அமர்ந்து விட்டான். உள்ளம் கொதியாய் கொதித்துக் கொண்டிருந்தது. தன் வாழ்வில் மனைவி என்றவள் வந்த நாளிலிருந்து, தனக்கு எதிராக நடந்த அனைத்தையும் நினைத்துப் பார்த்தவனுக்குக் கொலைவெறி உண்டானது. இனி ஒரு நொடி கூட அன்னை முன்பு, இன்று நின்றது போன்ற சூழ்நிலையில் நிற்கக்கூடாது என்ற சபதத்தை எடுத்தவன், அடுத்தடுத்துச் செய்ய வேண்டிய அனைத்தையும் துல்லியமாகத் திட்டமிட்டான்.
முதல் வேலையாக, அந்த ரவியைச் சுற்றி வளைக்க நினைத்தவன் எண்ணத்தைக் குறுஞ்செய்தி கலைத்தது. கட்டியவள் தான், மருத்துவமனைக்கு வருமாறு செய்தி அனுப்பி இருந்தாள். அதைப் பார்த்ததும் குபுகுபுவென்று கோபம் கொப்பளிக்க,
“என்னால வர முடியாது. கூப்பிட்டதும் வரதுக்கு நான் உன் வீட்டு நாய் இல்ல.” எனப் பதில் அனுப்பி வைத்தான்.
“இதுதான உன்னோட அம்மா நம்பர்?” எனச் சரளாவின் எண்ணை அனுப்பி வைத்து மறைமுகமாக மிரட்ட,
“இவள…” எனப் பல்லைக் கடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.
அவன் வருகைக்காகக் காத்திருந்தவள் பார்த்ததும் மிதப்பாகக் காலை ஆட்ட, “அங்கங்க அடி பட்டதுக்குப் பதிலா இந்தக் கால் உடைஞ்சு இருக்கலாம்.” என முணுமுணுத்தான்.
“அடுத்த அட்டெம்ப்ட்ல ட்ரை பண்ணுடா.”
“உன்ன மாதிரி ஆளுக்கெல்லாம் மொத்தமா முடிச்சு விட தான் ட்ரை பண்ணனும்.”
“அடுத்த தடவையாவது சொதப்பாம ஒழுங்காப் பண்ணு.” எனக் கேலி செய்தாள்.
“இப்ப எதுக்கு என்னை வரச் சொன்ன?”
“ஹாஸ்பிடல் பில்ல யாரு கட்டுவா?”
“அடியே…” என அடிக்குரலில் சீறும் கணவன் முன்னால் கைபேசியை உயர்த்திக் காட்டியவள், “போன் போடவா?” என இழுத்து எள்ளல் செய்தாள்.
“எங்கிட்டக் காசு இல்ல.”
“அது என்னோட பிரச்சினை இல்ல.”
“ஏன்டி! என் உசுர வாங்கிட்டு இருக்க.”
“சீக்கிரம் போய் ஹாஸ்பிடல் பில்ல கட்டு.”
“முடியாதுன்னு சொன்னா…”
“சோ சிம்பிள்!” எனச் சரளாவிற்கு அழைப்பு விடுத்தாள். அதைப் பார்த்தவன் பிடுங்கப் போக, லாவகமாக அவனிடமிருந்து தப்பித்தவள்,
“ரொம்ப ஆடிட்ட. இனி என்னோட ஆட்டத்தைப் பார்க்கப் போற.” என்றாள்.
இப்போது தனக்கு நேரம் சரியில்லாததால், முறைக்க மட்டுமே முடிந்தது அவனால். அந்த முறைப்பிற்கு ஏளனத்தைப் பதிலாகக் கொடுத்தவள் வாசலைக் கை காட்ட, பல்லைக் கடித்துக் கொண்டே வெளியேறினான் ரிதுவின் கணவன்.
7. சிறையிடாதே கருடா
written by Competition writers
கருடா 7
குளிக்கும் நீரில் கூட உயர் ரகத்தை வைத்திருந்தவள் மேனியெங்கும் சந்தன வாசனை. அவை போதாது என்று செயற்கை வாசத்தை ஆடையாகத் தெளித்துக் கொண்டவள், பருத்தி ஆடையை அதற்கு ஆடையாக மேல் உடுத்தி, மீண்டும் ஒரு திரவியத்தைப் பட்டும் படாமலும் தெளித்தாள்.
கண்ணாடி முன் நின்று தன் அலங்காரத்தைப் பார்த்துக் கொண்டவளுக்கு, கழுத்தில் இருக்கும் மஞ்சள் கயிறு அசிங்கமாகத் தெரிந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்த அவள் எண்ணத்தில் அவன். கண்ணாடியில், சிரித்த முகமாக நின்றிருந்தவன் உருவத்தைக் கண்டு முறைத்தவள் கையில் இருந்த சீப்பைத் தூக்கி அடித்தாள்.
இவளால் ஒன்றும் செய்ய முடியாத அவனை, அந்தச் சீப்பு மட்டும் என்ன செய்யும்? பாவமாகக் கண்ணாடியில் பட்டுக் கீழே விழ, “பைத்தியக்காரி!” எனப் பல்லைக் காட்டிச் சிரித்தான் கருடேந்திரன்.
“ராஸ்கல்!” என்று சிங்கப்பல்லை மேலும் கீழும் நசுக்கிக் கோபம் கொண்ட ரிது, “உன்னை அழிக்கிறது மட்டும்தான்டா என் வாழ்நாள் லட்சியம்..” கர்வத்தோடு கூறும் நேரம் கதவு திறக்கப்பட்டது.
தலை திருப்ப, அவளுக்குத் தரிசனம் கொடுத்தவன் தாவி மெத்தையில் விழுந்தான். உடம்பு நோகாமல் சுகமாகத் தூங்குவதற்காகப் பார்த்துப் பார்த்துத் தனக்கென்று வரவழைத்த மெத்தையில், இப்படி யாரோ ஒரு குப்பையானவன் விழுவதைச் சகித்துக் கொள்ள முடியாது, “உவாய்க்!” எனக் குமட்டினாள்.
சற்றுத் தலையைத் தூக்கி அவளைப் பார்த்தவன், “ராத்திரி ஒன்னுமே நடக்கலையே, இதுக்கேவா வாந்தி வருது?” என்றதும் சிவக்கும் அவள் முகம் கண்டு மனம் மகிழ்ந்து,
“அப்போ களத்துல குதிச்சா உடனே புள்ள பொறந்திடும் போலயே.” என்றான்.
“கருமம்… கருமம்… ச்சீ! உன்ன மாதிரி ஒருத்தன் கூட வாழுறதே அசிங்கம். இதுல குழந்தை வேறயா? அதுவும் உன்ன மாதிரி லோ கிளாஸா தான் இருக்கும்.”
“நீ ஒன்னும் கவலைப்படாத செல்லம். நம்ம புள்ளைய நானே ஆட்டோல கூட்டிட்டுப் போய் ஸ்கூல்ல விடுறேன்.”
“நாயக் குளிப்பாட்டி நடுவீட்ல வச்சாலும், அது வாலாட்டிக்கிட்டு எங்கயோ போகுமாம். அந்த மாதிரித் தான்டா, எவ்ளோ வசதியான வீட்ல இருந்தாலும் உன் புத்தி குப்பைக்கே போகுது.”
“தேங்க்யூ!” எனச் சுகமாகப் படுத்துக் கொண்டான்.
பார்த்துப் பார்த்துத் தன்னை அலங்கரித்தவள், கோபம் என்னும் சிவப்பில் அத்தனை அழகையும் கெடுத்துக்கொண்டு கிளம்பினாள். அவளைப்போல், போகும் வரை அமைதியாக நின்றிருந்தவன், “அய்யய்யோ!” என அவசரமாகக் குரல் கொடுக்க, அலறியடித்துத் திரும்பியவளை அலேக்காகத் தூக்கிக்கொண்டு படியேறினான்.
பல நிமிடங்கள் கழித்தும், என்ன நடந்தது என்று புரியாமலே அவன் கைக்குள் குழந்தையாகச் சுருங்கி இருந்தவளைத் தன் அறையின் பால்கனிக்கு அழைத்துச் சென்றவன்,
“கன்னியப்பன் என் கைக்கு வர வரைக்கும் நீ இங்கதான் இருக்கணும்.” ஒவ்வொரு வார்த்தையாக இழுத்துப் பேசியவன், என்ன செய்யப் போகிறான் என்ற சிந்தனை சிறிதும் இல்லை ரிதுவிற்கு.
அவன் கத்திய வேகத்தோடு தன் சிந்தனையை இழந்தவள், இந்தப் பால்கனியில் என்ன செய்து விட முடியும் என அசாதாரணமாகப் பார்த்துக் கொண்டிருக்க, சிறிதும் அஞ்சாமல் பால்கனியிலிருந்து தூக்கி வீசினான். கீழ்த்தளத்தில் நின்று கொண்டு எமன் தன்னைக் கயிறு கட்டி இழுப்பது போல் அஞ்சியவள், இன்றோடு ரிதுவின் சரித்திரம் முடிந்தது என்று கண்களை மூடிக் கொள்ள, கஷ்டத்தையே பார்க்காமல் சொகுசாக வளர்ந்த அவளின் பூமேனி தண்ணீரில் விழுந்தது.
நீச்சல் குளத்தில்தான் தூக்கி வீசி இருந்தான் கருடேந்திரன். நல்ல வேளையாக இவன் மனைவி, முதல் தளத்திலேயே தன் அறையை வைத்திருந்தாள். அதற்கும் நீச்சல் குளத்திற்கும் பெரிதாக உயரம் இல்லாததால், எந்தச் சேதாரமும் இல்லாமல் நீருக்குள் வீணாக விழுந்தவள் தத்தளித்தாள். சத்தம் கேட்டு ஓடி வந்த பொன்வண்ணன் அலறித் துடித்துக் காப்பாற்ற ஓட,
“சேத்துப் பன்னி மாதிரி இங்கயே இருடி. செத்துடுவன்னு தோணுனா மட்டும் குரல் குடு, என் கன்னியப்பன் இருக்கான்… ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போக.”
பால்கனிச் சுவரில் இரு கைகளையும் ஊன்றிக் கொண்டு நின்றான். ஓடிவந்த தந்தை மகளின் நிலை எண்ணிக் காப்பாற்றக் கை கொடுத்தார். அவருக்காகத் தன் பயத்தைக் குறைத்துக் கொண்டவள் திடமாக, அவர் உதவியை நாடாமல் நீச்சல் குளத்தின் விளிம்பில் ஏறி அமர்ந்தாள்.
“உனக்கு ஒன்னும் இல்லைலடா ரிது…”
“ஒன்னும் இல்லப்பா”
“என்னடா ஆச்சு, எப்படி இதுல விழுந்த?”
“நான்தான் உங்க பொண்ணைத் தூக்கிப் போட்டேன்.”
“ஏம்பா இப்படிப் பண்ண? ஒன்னு கிடக்க ஒன்னு ஆகி இருந்தா என்ன ஆகுறது. உன் கோபத்துக்கு ஒரு அளவே இல்லையா? இவ எனக்கு ஒரே பொண்ணு. எனக்குன்னு வாழ்க்கையில இருக்கிறது இவ மட்டும் தான். இப்படி என் பொண்ண என் கண்ணு முன்னாடியே சித்திரவதை பண்றியே.”
மாமனாரின் குரலுக்குச் சீறியவன், “அப்படித்தான் பண்ணுவேன். அவளுக்கு இந்த மாதிரிப் பண்ணா தான் புத்தி வரும். இப்பக்கூட ஒன்னும் கெட்டுப் போகல. என் ஆட்டோவைத் திருப்பிக் கொடுத்தா இத்தோட எல்லாத்தையும் முடிச்சுப்பேன். இல்லனா, ஒவ்வொரு நாளும் உங்க பொண்ணுக்கு உயிர் பயத்தைக் காட்டிக்கிட்டே இருப்பேன்.” என்றவனைப் பார்க்கப் பயமாக இருந்தது அவருக்கு.
“டேய்!”
மாமனாரை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தவன் மனைவி புறம் பார்வையைத் திருப்ப, “இதுக்கெல்லாம் நடுங்குற ரகம் நான் இல்ல. இதுக்கான சேதாரத்தைப் பார்க்கறியா?” எனப் பொறுமையாக நீச்சல் குளத்திலிருந்து எழுந்தவள்,
“இவன் தங்கச்சி இந்நேரம் காலேஜுக்குக் கிளம்பி இருப்பா. சரியா பத்து நிமிஷத்துல எம் கே மெயின் ரோடுக்கு வருவா. கொஞ்சம் கூட யோசிக்காம வண்டியை ஏத்தி ஆறு மாசத்துக்கு நடக்க முடியாம பண்ணிடுங்க.” எனத் தன்னைக் காட்சிப் பொருளாகப் பார்த்துக் கொண்டிருக்கும் தன் வேலை ஆள்களுக்குக் கட்டளையிட்டாள்.
“ஏய்ய்ய்…”
“உன்ன விட என் குரல் ரொம்பச் சத்தமா ஒலிக்கும். அதோட சத்தத்தை உன்னாலயும், உன் குடும்பத்தாலயும் தாங்கிக்க முடியாது. நீ என்னடா எனக்கு உயிர் பயத்தக் காட்டுறது? நான் நெனச்சா நிமிஷத்துக்கு நிமிஷம் உன் குடும்பத்துக்கே அந்தப் பயத்தைக் காட்ட முடியும். வேணும்னா சாம்பிள் பார்க்கறியா?” என்றவள் அங்கு நின்றவர்களைச் சீற்றம் பொங்க நோக்கி,
“சொல்லிப் பத்து நிமிஷம் ஆகுது. இன்னும் என்னடா பண்ணிட்டு இருக்கீங்க? அவ கால் ரெண்டும் உடைஞ்சிடுச்சுன்னு நியூஸ் வரணும்.” எனக் கர்ஜிக்க அரக்கப் பறக்க ஓடினார்கள்.
தந்தை கத்துவதையும், அவன் கத்துவதையும் சிறிதளவும் காதில் வாங்கிக் கொள்ளாதவள், நனைந்த உடலோடு வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள். மொத்த நீரும் அந்த விலை உயர்ந்த இருக்கையில் சிந்திக் கொண்டிருக்க,
“ம்ஹூம்!” என அவனைக் கண்டு ஓசை கொடுத்தாள்.
“வேணாம்டி. என் தங்கச்சிக்கு ஏதாச்சும் ஒன்னு ஆச்சு, உன்னைச் சும்மா விடமாட்டேன். போனவங்களைத் தடுத்து நிறுத்து.”
“இல்லனா…”
“சார், உங்க பொண்ணுகிட்டச் சொல்லுங்க. இதுக்கான பலன் ரொம்ப மோசமா இருக்கும்.”
“அதையும் தான் பார்த்திடுவோம்.”
“ஏய்!” எனத் தாவிச் சென்று அவள் கழுத்தைப் பிடித்தவன், அவள் பார்க்கும் பார்வையில் இருக்கும் நகைப்பை உணர்ந்து,
“ரொம்ப விஷமுள்ள மனசுடி உனக்கு. குடும்பம்னா என்னன்னே தெரியாம வளர்ந்த உன்ன மாதிரிப் பிசாசுக்கெல்லாம் ஒரு உயிரோட மதிப்புத் தெரியாது. நீ செத்தா பணம் மட்டும் தான்டி உன்னைச் சுத்தி இருக்கும். எங்களை மாதிரி ஆளுங்களுக்குப் பாசமும், அன்பும்தான் நிக்கும். உங்க அப்பா இல்லனா நீ ஒரு அனாதைடி! அனாதையா இருக்கும்போதே உனக்குள்ள இவ்ளோ கொழுப்பு இருக்கே, இன்னும் அப்பா அம்மா சேர்ந்து இருந்து, கூடப் பொறந்த பொறப்பெல்லாம் இருந்தா எவ்ளோ ஆடி இருப்ப…” என்றிடப் பக்கத்தில் நின்றிருந்த பொன்வண்ணனின் மனம் நொறுங்கியது.
ரிதுசதிகா பேசாமல் பார்த்துக் கொண்டிருக்க, “போனவங்களைத் திரும்பி வரச் சொல்லுடி.” எனக் கழுத்தில் அழுத்தத்தைக் கூட்டினான்.
“விடு அவளை…”
“உங்களுக்கு உங்க பொண்ணு எப்படியோ, அப்படித்தான் என் தங்கச்சி எனக்கு. அவளுக்கு எதுவும் ஆகாதுன்னு சொல்லுங்க, உங்க பொண்ண விடுறேன்.”
“உன் தங்கச்சிக்கு எதுவும் ஆகாது. என் பொண்ண விடு.”
“அதை இவளைச் சொல்லச் சொல்லுங்க.”
“நான்தான் சொல்றேன்ல. முதல்ல என் பொண்ணு மேல இருந்து கையை எடு.” என்றதும் மெல்லக் கைகளை விலக்க, அவன் கொடுத்த அழுத்தத்தில் இருந்து உடனே மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
வேலையாள்களைத் தொடர்பு கொண்ட பொன்வண்ணன் கிளம்பி வர உத்தரவிட, எதுவும் பேசாமல் மௌனமாக அமர்ந்திருந்தாள். மாமனாரின் வார்த்தைக்குப் பின் கோபத்தை விட்டவன், “மோதுறதா இருந்தா என்கிட்ட மோது… என் குடும்பத்துப் பக்கம் போகாத. அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்.” என அங்கிருந்து சென்று விட்டான்.
“எதுக்கு ரிது இப்படிப் பண்ற? உன்னப் பார்க்க ரொம்பப் புதுசாத் தெரியுது. ஒரு சின்னப் பொண்ணு கால உடைக்கச் சொல்ற. நடந்த பிரச்சினைக்கே இன்னும் ஒரு தீர்வு கிடைக்கல. அதுக்குள்ள புதுப் பிரச்சினையைக் கிளறாத.”
தந்தைக்கு எந்தப் பதிலையும் உரைக்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள். அவள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு தனிமை கொடுக்க எண்ணி நகர்ந்தார். பல மணி நேரங்களுக்குப் பின், தன்னை மீட்டெடுத்துக் கொண்டவள் எதுவும் நடக்காதது போல் மீண்டும் குளித்துவிட்டுக் கிளம்பினாள்.
“கன்னியப்பன் எப்ப வருவான்?”
“உன்கிட்டப் பேச எனக்கு நேரமில்லை.”
“சொல்லிட்டுப் போடி!”
“உனக்கு எதுக்குடா நான் பதில் சொல்லணும்? நீ யாருடா எனக்கு.”
“அப்புறம் எதுக்காக நான் ஆட்டோ ஓட்டக் கூடாதுன்னு நினைக்கிற. யாருன்னு தெரியாதவன் மேல உனக்கு எதுக்கு அக்கறை?”
“அக்கறையா?” என அவன் முகம் நோக்கியவள், “விஷமுள்ள மனசுக்காரிக்கு அக்கறை எங்க இருக்கும்?” என்று விட்டுத் தன் பையைக் கையில் எடுத்தவள் குதிகாலணியை அணிந்துகொண்டு அவன் செவி அலற நடந்தாள்.
அவள் பேசிய வார்த்தையை விட, விழிகளில் தெரிந்த விரக்தி பெரும் யோசனைக்கு ஆளாக்கியது. அத்தோடு நின்றிருந்தவன் காதில், “பணம் இருந்தால் தான் பாசமுள்ளவங்களை எடுத்துப் போடக் கூட முடியும். பணம் இருந்தால் தான் உன் தம்பி, தங்கச்சிங்க மேல நீ எவ்ளோ பாசம் வச்சிருக்கன்னு காட்ட முடியும். பணம் இருந்தால் தான் நீ நீயா இருப்ப, உன்னச் சுத்தி இருக்கவங்க சொந்தக்காரங்களா இருப்பாங்க.” என்றவள் தன்னையே ஆராய்ந்து கொண்டிருக்கும் அந்த விழிகளுக்குள் தொலைய விரும்பாது,
“பணத்துக்காகத் தான்டா, உனக்கும் எனக்குமான இந்தத் திருமணமே நடந்திருக்கு. பணமில்லாத வாழ்க்கை உனக்கும் நரகம் தான், எனக்கும் நரகம் தான். பணத்த வச்சுப் பாசத்தை வாங்கிட முடியும். பாசத்தை வச்சுப் பணத்தை வாங்க முடியுமா?” என்ற கேள்வியோடு அங்கிருந்து விடை பெற்றாள்.
***
சிங்கத்திற்கும், புலிக்கும் திருமணம் ஆகி ஆறு நாள்கள் நிறைவடைந்து விட்டது. இந்த ஆறு நாள்களில், பொன்வண்ணன் தான் நொந்து நூலாகி விட்டார். இருவரும் சரிக்குச் சமமாக அடித்துக் கொள்வதைப் பார்த்தவர் சமாதானம் செய்ய நடுவில் செல்வதை நிறுத்தி விட்டார். அதிலும் நேற்று இரவு நடந்த சம்பவம் மொத்தமாகக் கொண்ட நம்பிக்கையை சரித்து விட்டது.
ஆட்டோவைச் சிறைப்படுத்தி வைத்துக் கொண்டவள், ஓயாமல் வீட்டோடு மாப்பிள்ளை என்று கருடனை வம்பு இழுத்துக் கொண்டிருக்க, பொறுக்க முடியாதவன் நேராக மாமனார் முன்பு நின்றான். அவர் என்னவென்று விசாரிப்பதற்குள்,
“இனி இந்த வீட்ல எந்த வேலைக்காரங்களும், டிரைவர்ஸும் இருக்கக் கூடாது. என் ஆட்டோவைத் திருப்பித் தர வரைக்கும் அவளேதான் எல்லாத்தையும் பார்த்துக்கணும்.” கடகடவென்று கட்டளையிட்டான்.
“அவ ட்ரைவ் பண்ண மாட்டாப்பா…”
“இவ்ளோ வாய் பேசுற உங்க பொண்ணுக்கு வண்டி ஓட்டத் தெரியாதா?”
மருமகன் முகத்தில் தெரியும் ஏளனத்தைக் கண்டு சிறிதும் வருந்தாதவர், “என் பொண்ணு ரேசர்! அவளை மாதிரி நுணுக்கமா வண்டி ஓட்டுற ஆளைப் பார்க்கவே முடியாது.” என்றதைக் கேட்டவன் தன் முகத்தைச் சிறிதும் மாற்றிக் கொள்ளாமல்,
“அப்புறம் என்ன கேடு?” என்றான்.
“அவ கார் ஓட்டிட்டுப் போகும்போது தான், ஆக்சிடென்ட் ஆகி அவ கண்ணு முன்னாடியே என் மூத்த பையன் இறந்தான். அதுல இருந்து அவ கார் ஓட்டுறது இல்லை. அவளுக்கு அந்த சீட்டைப் பார்த்தாலே பயம் வரும்.”
“ஓஹோ!”
“அவளைப் பத்தி உன்கிட்டக் கொஞ்சம் பேசணும்.” என்றதைக் காதில் வாங்கிக் கொள்ளாதவன்,
“உங்க பொண்ணு மாதிரி ஒரு ஆளு வண்டி ஓட்டாம இருக்குறதே நல்லது. கூடப் பிறந்தவனையே கொன்னவ, எத்தனைப் பேரைக் கொல்லுவாளோ? நான் சொன்ன மாதிரி எல்லா டிரைவரையும் அனுப்பிடுங்க.” என்று நகர்ந்து விட்டான்.
மருமகன் வார்த்தைக்காகப் பணி அமர்த்திய ஆறு ஓட்டுநர்களை வேலையை விட்டு நிறுத்தி விட்டார். அதில் ஒருவர் ரிதுவை அழைத்துக் கொண்டு அலுவலகம் சென்றிருந்தார். பாதியிலேயே மகளுக்குத் தெரியாமல் கிளம்பச் சொல்லி விட்டார். பணி முடித்து வந்தவள் ஓட்டுநரைக் காணாது அழைப்பு விடுக்க, நடந்த அனைத்தையும் கேட்டுக் குதித்தாள்.
“யாரைக் கேட்டு என் டிரைவரை நிறுத்துனீங்க?”
“என்னைக் கேட்டுத்தான்…”
சத்தம் தனக்குப் பின்னால் வருவதால் திரும்பியவள் நிற்பவனைக் கண்டு, “எல்லாம் உன்னோட வேலை தானாடா ராஸ்கல்.” பல்லைக் கடித்தாள்.
“புத்திசாலி தான்!”
“ச்சீ! உன் பாராட்டு ஒன்னும் எனக்குத் தேவையில்லை. எதுக்குடா இந்த வேலையைப் பார்த்த.”
“என் ஆட்டோவைக் கொடுக்கலன்னா, உன்னோட சலுகை ஒவ்வொன்னும் குறைஞ்சுகிட்டே போகும்.”
“என்னமோ உன் சம்பாத்தியத்துல சொகுசா வாழுற மாதிரி, சலுகையைக் குறைப்பேன்னு சொல்ற. நீயே ஓசில என் சலுகையை அனுபவிக்க வந்தவன் தானடா.”
“இந்த வாய் தான்டி உனக்குப் பெரிய எதிரி. இதைக் குறைக்காம உன் வாழ்க்கை விளங்கவே விளங்காது.”
“அதை நான் பார்த்துக்குறேன். என் விஷயத்துல இருந்து ஒதுங்கி இருக்குற வேலையை மட்டும் நீ பாரு.”
“அது எப்படி ஒதுங்கி இருக்க முடியும்? முறைப்படி இரண்டு தடவை தாலி கட்டி லைசென்ஸ் வாங்கி இருக்கேன்.”
“ஏய்!”
“என் குடும்பத்தை என்கிட்ட இருந்து பிரிச்சுட்ட. எனக்குன்னு இருந்த கன்னியப்பனையும் பறிச்சிட்ட. உன் வீட்ல ஒரு வேலைக்காரன் மாதிரி வச்சிருக்க. இத்தனையும் பண்ண உன்னைச் சும்மா விட, நான் என்ன புள்ளப் பூச்சியாடி. இனி என் ஆட்டத்தை மட்டும் தான் நீ பார்ப்ப. என் தொல்லை தாங்க முடியாம, இந்தாடா உன் ஆட்டோன்னு கையெடுத்துக் கும்பிட்டுட்டு எல்லாத்தையும் நான்தான் பண்ணன்னு போலீஸ்ல போய் சரணடைஞ்சிடுவ.”
“ஹா ஹா! அடப் பகல்கனவு காணுற பைத்தியமே! ஏன்டா உன் மண்டையில கொஞ்சம் கூட மசாலா இல்லையா? என் முன்னாடி செல்லாக் காசா இருக்க நீ…” என்றவள் அவனை நெருங்கி, “நல்லாக் கேட்டுக்கடா, செல்லாக்காசு.” என அசிங்கப்படுத்தினாள்.
“செல்லாக் காசா இருக்கற நீ தான் ஆட்டத்தைக் காட்டப் போறியா? உண்மை என்னன்னு தெரியுற வரைக்கும் தான் இந்த லைசென்ஸ்ல உன் பேரு இருக்கும். அதுவரைக்கும் ஓசில தின்னுட்டுப் போடா.”
“ஆமா, நீதான் கார் ஓட்டிட்டுப் போய் உன் அண்ணனைக் கொன்னுட்டன்னு கேள்விப்பட்டேன், உண்மை தானா? இந்தச் சொத்து மொத்தத்தையும் அனுபவிக்கத் தான அவனைக் கொன்ன? கூடப் பிறந்தவனையே கொன்னுருக்கியே நீயெல்லாம்…”
கட்டியவன் வார்த்தையைக் கேட்டவள், அவன் கைப்பேசியைப் புடுங்கித் தூக்கிப் போட, பல வருடமாகப் பாதி உசுரில் உலாவிக் கொண்டிருந்த அந்தக் கைப்பேசி தன் உயிரை மாய்த்தது. அதுவரை விளையாட்டாக இருந்தவன் உடனே மாறும் வானிலை மாற்றம் போல் முகம் சிவந்து பிடுங்கியவள் கையைப் பிடிக்க, அடுத்த நொடி அவன் முகம் போல் கன்னமும் ஐவிரல் மருதாணியில் சிவந்தது.
ரிதுசதிகாவின் உள்ளங்கையில் எத்தனை ரேகைகள் இருக்கிறது என்று அவன் கன்னத்தை எண்ணியிருந்தால் தெரிந்து கொள்ளலாம். வாங்கிய அடியில் உடல் மொத்தமும் விரைத்து நின்றது. ஆத்திரத்தில் தாடையைக் கடித்துக் கொண்டு, தன்னைப் பார்வையால் தொலைக்கும் அவன் பார்வைக்குச் சிறிதும் அஞ்சாதவள்,
“உன் லிமிட்ல இருந்துக்க.” என விரல் நீட்டினாள்.
அந்த விரலோடு அவளையும் சேர்த்துப் பிடித்து அங்கிருந்த காரில் சாய்த்து நிற்க வைத்தவன், மூக்கு நுனி அனல் காற்றால் பொசுங்கும் அளவிற்கு முறைத்து, “நீதான உன் அண்ணனைக் கொன்ன? உன்ன மாதிரி ஒரு பணப் பிசாசுக்குக் கூடப்பிறந்தவன் கூடத் தொல்லையா தான் தெரிவான். உன் அப்பாவை மட்டும் ஏன் விட்டு வச்சிருக்கன்னு தெரியல. அவரையும் சீக்கிரம் ஏதாச்சும் பண்ணிட்டு இந்த மொத்தப் பணத்தையும் அள்ளி வாயில போட்டுக்க. உன்கிட்ட வந்தாலே பண நாத்தம் தான்டி வீசுது. உன்ன மாதிரி இரக்கமில்லாத பிசாசுக்குப் பயம் எதுக்கு? கொலை பண்ணது தெரியக் கூடாதுன்னு வண்டி ஓட்ட மாட்டேன்னு ஊர நம்ப வச்சுட்டு இருக்க. இன்னைக்கு உன் முகத்திரையைக் கிழிக்கிறேன்.” என அவள் வலது கை தோள்பட்டையில் மாட்டியிருந்த ஸ்லிம் பேகைப் பிடுங்கினான்.
அவன் வார்த்தை ஒவ்வொன்றும், முழுவது நீரை நிரப்பி வைத்து, அதில் தன் தலையை இறுக்கமாக அமுக்கி மூச்சு முட்ட வைத்தது போல் இருந்தது. நன்றாகப் பழுக்க வைத்த இரும்புக் கம்பியை ஈவு இரக்கம் பார்க்காமல் அங்கங்கே தொட்டு எடுத்தது போல் எரிச்சல். கரடு முரடான கற்கள் படிந்த பாதையில் படுக்க வைத்துத் தரதரவென்று இழுத்து வந்த உணர்வில் சிக்கிக் கொண்டவள் அப்படியே உறைந்து நின்றாள்.
தன்னவளின் மனத்தைப் படிக்கத் தவறியவன், “இப்ப எப்படி எதுவுமே இல்லாம நிக்கறியோ, அதே மாதிரிக் கூடிய சீக்கிரம் மொத்தமா நிர்கதியா நிக்க வைப்பேன்.” என்றவன் இருசக்கர வாகனத்தில் மறைந்து விட்டான்.
எப்படியும் அவளிடம் இருந்து ஆட்டோவை வாங்க முடியாது என நன்குணர்ந்து கொண்டவன், வீட்டிலிருந்த பழைய இருசக்கர வாகனத்தை எடுத்து வந்து விட்டான். ஆறு நாள்கள் எதுவுமே இல்லாமல் நடையாக நடக்க வைத்தவளை, அதேபோல் நடக்க வைக்கத்தான் இத்தனை நாடகம். மாமனாரிடம் பேசி ஓட்டுநரை நிறுத்தியவன், அவள் தேவைகளை நிரப்பி வைத்திருக்கும் அந்தப் பையையும் வாங்கிக் கொண்டான். கைப்பேசி உட்பட அனைத்தும் அதில் தான் இருக்கிறது.
அவளுக்குச் சொந்தமான அந்த வெள்ளை நிறக் காரும், அவளும் மட்டும் தான் அங்கு நின்றிருந்தார்கள். இரவு ஏழு மணி ஆகிவிட்டதால், அவள் அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருக்கும் அனைவரும் கிளம்பினார்கள். வரும் அனைவரின் முன்பும், கடைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அழகு பொம்மை போல் தன்னைக் காட்சிப்படுத்திக் கொண்டாள் ரிதுசதிகா.
என்றும் தங்கள் முதலாளியின் முகத்தில் தெரியும் கர்வம், இன்றுக் காணாமல் போய் இருப்பதை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டே அனைவரும் கிளம்ப, இன்னும் அவன் கொடுத்த திகைப்பிலிருந்து மீளவில்லை. தன் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட அந்த நாளுக்குச் சென்றது அவள் நினைவு. அங்கிருந்த காவலாளி, ஒரு மணி நேரமாகத் தங்கள் முதலாளி அங்கே நிற்பதைக் கண்டு,
“மேடம்!” என நிகழ்வுக்குக் கொண்டு வந்தார்.
“ரொம்ப நேரமா இங்கயே நின்னுட்டு இருக்கீங்க, ஏதாச்சும் பிரச்சினையா?”
“ரொம்ப நேரமா…” என நேரத்தைப் பார்த்த பின்பு தான் நிகழ்வை உணர்ந்தாள்.
தனக்குக் கீழ் பணி புரிபவரிடம், தன் நிலையைக் கூற விரும்பாதவள் யாரிடமும் உதவி கேட்கவும் விரும்பவில்லை. இங்கிருந்து நடையாக நடந்தால் கூட ஏழு மணி நேரமாகும் அவள் வீட்டிற்குச் செல்ல. தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் காவலாளியைப் பார்வையால் விலகிச் செல்ல வைத்தவள், அங்கு நிற்க முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டாள்.
அவள் தகுதியும், சுய கௌரவமும் அங்கு நிற்கத் தடை விதித்தது. அவன் விட்டுச் சென்ற கார் மட்டுமே வீட்டிற்குச் செல்ல ஒரே வழி. ஆனால், உடல் நடுங்கியது, அதில் ஏறி அமர. அவள் உடன்பிறந்தவன் மறைந்து பல மாதங்கள் ஆன பின்புதான் காரைப் பார்க்கவே தைரியம் வந்தது. பொன்வண்ணனின் ஆதரவால் மெல்ல இயல்புக்கு மீண்டவள், தங்கள் வாழ்க்கைக்காக அதில் பயணிக்கும் அளவிற்கு மாறினாளே தவிர, ஓட்டுநர் இருக்கையில் அமரும் அளவிற்குத் தேறவில்லை.
இரும்பு மனிதியாகத் தன்னை வெளிக்காட்டிக் கொண்டவள் மனத்திற்குள் சின்னப் பூ ஒன்று இருக்கிறது. அதைக் கருடேந்திரன் எனும் காற்று மொத்தமாக அடித்து வீழ்த்தியது. தோல்வியை ஒத்துக்கொள்ள விரும்பாது, கார்க்கதவைத் திறந்தவளுக்குப் பயம் எனும் அரக்கன் கண் முன் தெரிந்தான். வேகமாக அதைச் சாற்றி விட்டுத் திரும்பியவள் பார்வையில் அந்தக் காவலாளி. அவர் பார்வையும், தன்னை எடை போடும் எண்ணத்தையும் புரிந்து கொண்டவள் மூச்சை இழுத்து விட்டுக் காரில் ஏறி அமர்ந்தாள்.
எடுத்ததுமே அசுர வேகத்தில் அதை இயக்கியவள், கண்மண் தெரியாமல் ஓட்ட ஆரம்பித்தாள். உடன் பிறந்தவனின் அலறல் சத்தம் பின் தொடர்ந்து கொண்டிருந்தது. நெடுஞ்சாலைக்கு வரும் வரை பின் தொடர்ந்த அந்தச் சத்தம், இதயத்திற்குள் நுழைந்து இதயத்திற்குக் கை கால்களாக இருக்கும் ரத்தக்குழாய்களைப் பிடுங்கிப் போட்டது. அன்று அவன் அண்ணன் தேகத்திலிருந்து பீய்ச்சி அடித்த ரத்தம் போல், இவள் இதயத்தில் இருந்த ரத்தம் பிய்த்துக் கொண்டு சிதறியது.
அந்த அழுத்தத்தைத் தாங்க முடியாதவள் மெல்லக் கண் சோர ஆரம்பித்தாள். தன் மன நிலையை உணர்ந்து கொண்டவள், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தவரை போராடிக் கொண்டிருக்க, உணர்வுகள் ஒத்துழைக்க மறுத்தது. தன் கதை இத்துடன் முடிந்து விட்டது என்ற முடிவுக்கு வந்தவள், எதிரில் வரும் எந்த உயிருக்கும் எந்தச் சேதாரமும் நடக்கக்கூடாது என்ற வேண்டுதலோடு கண் மூடினாள்.
6. சிறையிடாதே கருடா
written by Competition writers
கருடா 6
“யூ… யூ ராஸ்கல்… ஐ கில் யூ” என நீருக்குள் இருந்த மீன் தவறித் தரையில் விழுந்து குதித்தது போல் குதித்துக் கொண்டிருந்தாள்.
அதைத் தாலி கட்டியவனோ, ஏதோ குரங்கு வித்தை காட்டுவது போல் பல்லை இளித்துக் கொண்டு பார்த்திருந்தான். அவன் பார்வையும், சிரிப்பும் அடிவயிற்றைக் கபகபவென்று எரிய வைத்தது. அந்த நெருப்பின் எரிச்சலைத் தாங்கிக் கொள்ள முடியாத பழங்களுக்கு நடுவில் மறைந்திருந்த கத்தியை உருவி எடுத்து,
“நாளைக் காலையில நீ செத்துட்டன்ற நியூஸ் தான்டா இந்தத் தமிழ்நாட்டையே யோசிக்க வைக்கப் போகுது.” அவன் வயிற்றில் குத்துவதற்காக ஓடினாள்.
அதுவரை சிரித்துக் கொண்டிருந்தவனுக்குக் கதி கலங்கியது. அவற்றைப் பார்வையில் காட்டினால் அவளின் ஆக்ரோஷம் அதிகமாகிவிடும் என்பதால், சுதாரிப்போடு நின்றிருந்தவன் தன் வயிற்றின் மேலிருக்கும் ஆடையை உரசிக்கொண்டு கத்தி வந்ததும் பாய்ந்து அவள் கையைப் பிடித்தான்.
“கைய விட்டின்னா ஒரே குத்துல சாவடிச்சிடுவேன். இல்ல உடம்பு முழுக்கக் குத்திக் குத்திச் சாவடிப்பேன்டா.”
“ஹேய்! இது அதுல்ல!” கேலி செய்து திசை திருப்பப் பார்த்தான்.
அவன் எண்ணத்தை அறியாதவள் குத்தும் செயலை நிறுத்திவிட்டு, “எதுடா?” எனச் சிடுமூஞ்சியைக் காட்டினாள்.
“அதான்டி! ஒரு நாளைக்கு ஒரு டிவி ஷோல ஐஸ்கிரீமைக் குத்திக் குத்திப் பார்த்துச் சாப்பிடுவன்னு உன்ன மாதிரியே ஒரு கிறுக்கி சொல்லிக்கிட்டு இருந்துச்சே, அதோட ஃபபேனா நீ”
“என்னடா பேசுற பைத்தியக்கார! உன் குடலை உருவிச் சாவடிக்கப் போறன்னு சொல்றேன், கொஞ்சம் கூடப் பயம் இல்லாம நக்கல் அடிக்கிற.”
“உன் கழுத்துல எனக்கு ஆறு முடிச்சுப் போட்டனோ, அன்னைக்கே நான் செத்துட்டேன். இந்த உடம்பு என் குடும்பத்துக்காக மட்டும் தான் இருக்கு. குத்தி என்ன பண்ணப் போற?” என்றவன் அவள் கைகள் தளறுவதை நன்கு உணர்ந்தான்.
எண்ணம் எளிதாக முடிந்தது, அவளைப் பிடித்திருந்த கையில் இறுக்கத்தைக் கூட்டிக் கத்தியை உருவும் செயலில் கண்ணும் கருத்துமாக கருடேந்திரன் இருக்க, “பரவால்ல, செத்த உடம்பா இருந்தாலும் திரும்பச் சாவு… இப்படி ஒருத்தன் பிணமாய் கூட என் வீட்ல இருக்கக் கூடாது.” எனத் தோல்வியின் பக்கம் சென்று கொண்டிருந்தாள்.
“அப்போ, குத்தத்தான் போற.”
“ஆமாடா நாயே!”
“சரிடி பேயே!”
“ஏய்! மரியாதையா பேசுடா…”
“அதை முதல்ல நீ ஃபாலோ பண்ணுடி களவாணி.”
“நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளு, உனக்கு மரியாதை ஒரு கேடு.” எனக் காரித் துப்ப முகத்தைத் திருப்பியவளின் கழுத்து சுளுக்கிக் கொண்டது.
கழுத்தை ஒரே வளையாக வளைத்தவன், “ஆம்பளை ஹேர்கட் வச்சிருந்தா, நீ பெரிய கபாலியா? மூஞ்சியும், மொகரையும் பாரு. என்னையவா குத்த வர, இருடி! நடுமண்டையில நச்சுன்னு கத்தியச் சொருகுறேன்.” என அவள் கையில் இருந்த கத்தியை லாவகமாகப் பிடுங்கினான்.
கழுத்தைத் திருப்ப முடியாது நொந்து போனவள் கத்தியை அவன் கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட, அவன் சொன்ன வார்த்தை உச்சி மண்டையில் சொருகியது பயத்தைக் கொடுத்தது. பயத்தில் விழிகளைச் சுழற்றி, அஞ்சிக் கொண்டிருக்கும் தைரியசாலி மனைவியைக் கண்டவன்,
“கொஞ்சமாச்சும் புத்தி இருந்தா தான மண்டையில மசுரு முளைக்கும். வளராத முடியை வெட்டிவிட்டு, எனக்கு திமிர் ஜாஸ்தின்னு பந்தா வேற.” என்றான் கேலியாக.
“என் கழுத்தை என்னடா பண்ண நாயே?”
“என்ன?”
“என் கழுத்தை என்னடா பண்ண நாயேன்னு கேக்குறேன்டா நாயே…” என்றதும் தான் தாமதம், சுளுக்கிப் போயிருந்த கழுத்தின் மற்றொரு புறத்தில் முள் எனும் பற்களால். கடித்தான்.
ஒரே நேரத்தில், இடதுபுறக் கழுத்தின் பக்கம் ஆயிரம் முள்கள் ஒன்றாகக் குத்தியது போல் அலறித் துடித்தவளுக்குச் சரியானது. அதைக் கூட உணராது, கடித்த பல் தடத்தின் மீது கை விரல்களை அழுத்தமாக வைத்தவள் துள்ளிக் குதித்தாள். அதையும் அவன் குரங்கு ஆடுவது போல் சாவகாசமாகப் பார்த்துக்கொண்டு மெத்தையில் அமர்ந்தான்.
“பொறுக்கி நாயே, ஏன்டா கடிச்ச?”
“நாய் கடிக்கத்தான் செய்யும்!”
“நாயே… அதுக்கு இப்படியாடா கடிச்சு வைப்ப…” என்றவளை ஒரே இழுப்பில் தன்மீது சரிய வைத்தவன், மெத்தையில் தள்ளிச் சுளுக்குப் பிடித்த கழுத்தின் பக்கம் பல். தடங்களைப் பதித்தான்.
“ஆ… ஹே… அம்மா…” என அவள் எவ்வளவு கத்தியும் பலனில்லாமல் போனது.
ஒரு கட்டத்திற்கு மேல் வலி பொறுக்க முடியவில்லை ரிதுவால். விழிகளின் விளிம்பில், ஒரு துளிக் கண்ணீர் தேங்கி நின்றது. அதை அறியாதவன் தன் ஆத்திரம் முழுவதையும் காட்டிவிட்டு,
“எதைக் கேவலம்னு சொல்லி என்னைக் குத்திக் காட்டுறியோ, அதுக்குக் கோவம் வந்தா உன் உடம்பு தாங்காது. வைக்கிறதும் உன் பாம்புநாக்கு கைல தான்டி இருக்கு.” என்றான்.
அதற்குமேல், ரிதுசதிகா என்னும் சூறாவளி அமைதி காப்பதாக இல்லை. வலி போகும் வரை தன்னைப் பொறுக்கச் செய்தவள், எழுந்து நின்று அவன் மூக்கில் ஒரு குத்து விட, மொத்த மூளையும் உருகி மூக்கு வழியாக வந்தது போல் இருந்தது. கருடேந்திரனுக்கு. சிவப்பு நிறச் சாயம் வழிவதைக் கண்டு பதறியவன் கழிவறைக்கு ஓட,
“எங்கடா போற?” என இழுத்துப் பிடித்து மெத்தையில் தள்ளினாள்.
“இந்த வயலன்ஸ் வேலையெல்லாம் இந்த ரிது கிட்ட ஆகாது. கராட்டெல்லாம் கரகாட்டம் ஆடுற மாதிரி எனக்கு. பணக்காரி தான, பஞ்சுமெத்த மாதிரி இருப்பான்னு நெருங்கிடாத. தூக்கி அடிச்சேன், ஒன்னுக்குப் போகக் கூட எந்திரிக்க முடியாது.”
விடாமல் இரத்தம் சிந்திக் கொண்டிருக்க மயக்கம் வருவது போல் இருந்தது. அதை எப்படியோ கட்டுப்படுத்தியவன், பெயருக்கென்று சிறிதாக வளர்ந்திருக்கும் அந்த முடிகளைக் கைக்குள் சுருட்டி, “பொண்ணா நீ! சரியான பஜாரிக்குப் பொறந்தான். பஜாரியா இருப்ப போல.” எனத் தலையைச் சுழற்ற,
“எங்க அம்மாவப் பத்திப் பேசாதடா” என எச்சரித்தாள்.
“அப்படித்தான்டி பேசுவேன். உன்ன உங்க அம்மா சரியா வளர்த்திருந்தா, இப்படிப் பஜாரி மாதிரி ஆடிட்டு இருக்க மாட்ட. எந்த ஹேங்கில்ல உங்கப்பனுக்கு நீ பொண்ணு. மாதிரித் தெரியுறன்னு இந்தக் கல்யாணத்தை நடத்தி வச்சிருக்காரு.”
பேசிக் கொண்டிருக்கும் பொழுதே வலது காலை அவன் இரு கால்களுக்கு நடுவில் வைத்தாள். ஒரு கையை அவன் இடையோடு சுற்றிக்கொண்டு, மறுகையால் அவன் கழுத்தை வளைத்து நடுமுதுகில் கை முட்டியால் ஓங்கிக் குத்த, சர்வமும் அடங்கிப் போனது அவளின் கணவனுக்கு. பிடித்திருந்த முடியை விட்டவன், கண்ணெல்லாம் இருந்து போய் தொப்பென்று அமர்ந்தான்.
“இதைத்தான்டா சொல்லுவாங்க, எங்கயோ போற மாரியாத்தா… இவனக் கொஞ்சம் என்னன்னு கேளாத்தான்னு. வார்னிங் கொடுத்தும் திருந்த மாட்டல்ல. நீ இன்னைக்கு எப்படித் தூங்குறன்னு பார்க்கிறேன்டா.”
அவளைப் போல் அவள் கால்களுக்கு நடுவில் இரு கால்களையும் நுழைத்தான். இடையில் கை நுழைத்து இழுத்த கருடன், அவள் பாரம் தாங்காது தரையில் விழுந்தான். அவனுடன் எந்தச் சேதாரமும் இல்லாமல் கணவன் மீது சரிந்தவள் விலகப் பார்த்தாள். சிறிதும் இடம் தராதவன் சேர்த்தணைத்துக் கொண்டு, அவளைத் தரையில் படுக்க வைத்து உரசாமல் கைகளை ஊன்றிப் படுத்திருந்தான்.
ரிதுசதிகா தரையில் படுத்துக் கொண்டு பார்வையால் எரிக்க, “ராத்திரியெல்லாம் தூங்காம நான் தூங்குற அழகைப் பார்க்கப் போறியா?” குறும்புடன் கேட்டதும்,
“இவர் பெரிய மன்மதக்குஞ்சு! தூங்குற அழகைப் பார்க்கப் போறாங்க.” என முகத்தைச் சுழித்தாள்.
“உன் முகரக் கட்டைக்கு மன்மதன் ஒரு கேடு!”
“எனக்கு என்னடா?”
கண்ணியமாக அவள் விழிகளை மட்டுமே நோக்கிக் கொண்டிருந்தவன், பார்வையைக் கீழே தாழ்த்தி மேலே கொண்டு வந்து, “ஒருத்தன் உருண்டு பிறந்து, பேண்ட்குள்ள கையை விட்டு இழுத்துப் படுக்கவச்சு இப்படிப் பேசிட்டு இருக்கான், கொஞ்சம் கூடச் சொரணை இல்லாம எருமை மாடு மாதிரிப் படுத்திருக்க. இந்த லட்சணத்துல மன்மதன் வந்து என்ன கிழிக்கப் போற? உன் இடத்துல வேற எந்த பொண்ணாவது இருந்தா, இந்நேரம் ஃபஸ்ட் நைட்ட முடிச்சிருப்பா…” எனக் கிசுகிசுத்தான்.
பொங்கி வரும் ஆத்திரத்தை அடக்க முடியாமல், வாய்க்குள் சுரந்த அனைத்து எச்சிலையும் குவித்து அப்படியே அவன் முகத்தில் இடம் மாற்றி, “எந்திரிடா…” என்றாள்.
சிறிதும் சலித்துக் கொள்ளாமல் அவள் கொடுத்த எச்சிலை அவள் முகத்திற்கே மாற்றினான் உரசி.
தன் முகத்தோடு முகம் உரசியவன் நெருக்கத்தை வெறுத்தாள். இரு முகத்திற்கும் நடுவில் உலாவிக் கொண்டிருக்கும் எச்சிலால், உச்சகட்ட அருவருப்பிற்கு ஆளானவள் தள்ளிவிட்டு, “வெளிய போடா” கத்தினாள்.
“நான் எதுக்காகப் போகணும்? உங்க அப்பாதான் என் பொண்ணுக்கு வாழ்க்கை கொடுன்னு கல்யாணம் பண்ணி வச்சாரு.’ நீதான் புடிக்கலனாலும் பரவால்ல. என்கூடவே இருன்னு இங்க கூட்டிட்டு வந்த. நான் இங்கதான் இருப்பேன். உனக்குப் பிடிக்கலைன்னா நீ வேற ரூமுக்கு…” என இழுத்தவன் அவளுக்கு நேராக விரல் நீட்டி,
“தெருவுல போய் படுடி களவாணி!” என்றான்.
“வெளிய போன்னு சொல்லிட்டேன்.”
“முடியாதுன்னு நானும் சொல்லிட்டேன்.”
“இது என்னோட வீடு, நான் சொல்றதைத் தான் நீ கேட்கணும்.”
“அது நான் வராத வரைக்கும். இனிமே இது என்னோட வீடு!” என்றவன் முழு உடலையும் மெத்தையில் ஒட்ட வைத்து, கால்களை அகலமாக வீசிச் சுதந்திரமாகப் படுத்தான்.
“சொல்லிட்டே இருக்கேன், படுக்கவா செய்யுற?”
மூக்கு விதைக்க முறைத்து, அருகில் இருக்கும் தண்ணீரை எடுத்து அவன் மீது ஊற்ற, “அய்யய்ய! பெரிய இம்சைடி நீ. இதுக்கு மேல உன்கிட்டப் பேச இந்த உடம்புல எனர்ஜி இல்லை.” என முகத்தைத் துடைத்து எழுந்தவன் அவளே அதிரும்படி ஒன்றைச் செய்தான்.
உன் போல் தனக்கு எந்த அதிர்வும் இல்லை என்று இரு கைகளால் அவளைத் தாங்கிக் கொண்டு அறையை விட்டு வெளியில் வந்தவன், நேராகப் பொன்வண்ணன் அறைமுன் நின்று,
“மாமனாரே… யோவ்! கேக்குதா இல்லையா? இந்த ராட்சசியைப் பெத்த என் மாமனாரே! வெளிய எழுந்து வாயா. நைசா இந்தப் பிசாசை என் தலையில கட்டிட்டு நிம்மதியாத் தூங்குற…” அறைக் கதவைக் காலால் உதைக்க ஆரம்பித்தான்.
காட்டுக் கத்தலாகக் கத்திக் கொண்டிருக்கும் மனைவியின் பேச்சைச் சிறிதும் காதில் வாங்காதவன், “யோவ்! வெளிய வாய்யா…” என்றிட கதவைத் திறந்தார்.
ஏதோ தலையணையை நீட்டுவது போல் கட்டியவளை அவருக்கு முன்பாக நீட்டியவன், “இது தொல்லை கொஞ்சம் கூடத் தாங்க முடியல. வருஷம் இது கூடக் குப்பை கொட்டுனியோ? இத்தனை வருஷம் கொட்டுன மாதிரி இன்னிக்கு ராத்திரியும் தூங்கி எந்திரிச்சுத் தோல. காலையில வந்து இந்தப் பிசாசைக் கூட்டிட்டுப் போறேன்.” என்றவன் மாமனார் பேசுவதைக் கூடக் காதில் வாங்கிக் கொள்ளாமல் மனைவியை உள்ளே தள்ளிவிட்டு,
“குட் நைட் டி களவாணி!” என நடையைத் திருப்பினான்.
இரவு எவ்வளவு தாமதமாகத் தூங்கினாலும், சரியாக எழும் நேரத்துக்கு எழுந்து விட்டான் கருடேந்திரன். எப்போது கண் விழித்தாலும் எதிரில் இருக்கும் குடும்பப் புகைப்படம் தான் வரவேற்கும். இன்று யார் என்று தெரியாதவள் வீட்டில், குடும்பத்தை இழந்து கண் விழித்திருக்கிறான். இயல்பை ஒத்துக் கொள்ள சிறிது நேரம் தேவைப்பட்டது அவனுக்கு. பெருமூச்சோடு எழுந்தவனுக்கு எல்லாம் புதிதாக இருந்தது.
இந்தப் புதிய சூழ்நிலையை ஏற்றுக்கொள்ள மனம் இல்லை என்றாலும், தன்னைப் புகுத்திக் கொண்டான் வலுக்கட்டாயமாக. அன்னையின் மனம் மாறும் வரை இங்குதான் இருக்க வேண்டும் என்ற நிலையை எண்ணி வருந்திக் கொண்டே கிளம்பியவன் கதவைத் திறக்க, நின்று கொண்டிருந்தாள் ரிது சதிகா.
மனையாளைச் சற்றும் எதிர் பார்க்காதவன், ஒரு நொடி திகைத்துப் பின் தெளிந்து, “பேய் மாதிரி வந்து நிக்கிற. காலங்காத்தால உன் மூஞ்சியப் பார்த்துட்டுப் போனா. தொழில் என்ன ஆகுறது?” என்றவன் நெஞ்சில் கை வைத்தவள்,
“ஆட்டோக்காரனுக்கு எப்படியும் அஞ்சோ பத்தோ தான் கிடைக்கப் போகுது. இதுக்கு எதுக்குடா இவ்ளோ பேச்சு?” எனத் தள்ளி விட்டு உள்ளே நுழைந்தாள்.
“எதுவா இருந்தாலும் உழைச்சுச் சாப்பிடுறேன். உன்னை மாதிரி அப்பன் காசுல வாழல.”
“எனக்கு இருக்கு, நான் சாப்பிடுறேன். உங்க அப்பா சம்பாதிச்சுப் போட்டு தான நீ படிச்ச. நீயா சுயமா முளைச்சிடலையே.”
“ஒரு வயசுக்கு மேல என் சொந்தக்கால்ல தான் நான் நிக்கிறேன்.”
“நல்லாப் பாருடா, நானும் என் சொந்தக்கால்ல தான் நிக்கிறேன்.”
“காலங்காத்தால ஏண்டி என்கிட்ட வம்பு பண்ற?”
“இன்னும் ஆரம்பிக்கவே இல்ல, அதுக்குள்ள சலிச்சுக்கிற.”
“ச்சீ ப்பே…”
வீட்டை விட்டு வெளியேறும் வரை பொறுமையாகக் கைகட்டிக் கொண்டு நின்றிருந்தவள், “எங்கடா போற?” அதிகாரமாகக் கேட்டாள்.
“தெரிஞ்சு என்ன பண்ணப் போற?”
“அட, சும்மா சொல்லு.”
“சவாரிக்குப் போறேன்.”
“சரி போ…”
“நீ என்னடி போன்னு சொல்றது?”
“எப்படியும் மூஞ்சக் கடுகடுன்னு வச்சுக்கிட்டுப் போன வேகத்துல வரப் போற. அதைத் தெரிஞ்சுதான் எதுவும் பேசாம, போயிட்டு வான்னு வழி அனுப்புது. வைக்கிறேன்.”
கட்டியவளின் வார்த்தைக்கு பின் அர்த்தம் புரியாது, முறைத்துக் கொண்டு தன் வீட்டிற்குக் கிளம்பினான். வரும் வரை இல்லாத தயக்கம் வீட்டு வாசலில் நின்றதும் உண்டாக, எப்போதும் அதிகாலை எழுந்து கிளம்பும் மகனுக்காகத் தேநீர் கோப்பையோடு நிற்பார். அன்னையின் சிரித்த முகமும், சுவையான டீயும் தான் அவனின் உற்சாகம்.
அந்த நினைவோடு எழுந்த சரளா, வாசல் தெளித்துக் கோலம் போடுவதற்காகக் கதவைத் திறக்க, அன்னைக்காக நின்று கொண்டிருந்தவன் அழகாகப் புன்னகைத்தான். மகனைப் பார்த்ததும் சடசடவென்று கண்ணீர் சுரந்தாலும்,
“இங்க எதுக்குடா வந்த?” கேட்டார்.
“நான் இங்க வரக்கூடாதாம்மா?”
“உன் பொண்டாட்டி இல்லாம வரக்கூடாது.”
“அவளுக்கும், நம்ம குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? நம்ம இந்த நிலைமையில இருக்குறதுக்கு அவ மட்டும்தான் காரணம். அவளுக்காக என்னை ஒதுக்கி வைக்கிறீங்க.”
“அவ இப்ப இந்த வீட்டோட மருமகள். புள்ள மட்டும் போதும்னு நினைக்கிற மாமியார் நான் இல்ல. சரியோ தப்போ, என் புள்ளைக்குப் பொண்டாட்டின்னு ஆகிட்டா. அவளை மையப்படுத்தி தான் நம்ம எல்லாரோட உறவும் இருக்கு. அது எனக்கும் நிலைக்கனும்னு தான் அவளோட உன்னை வரச் சொல்றேன்.”
“நீ நினைக்கிற மாதிரி அவ இல்லம்மா. அவளுக்கும் நமக்கும் ஏணி வச்சா கூட எட்டாது. அப்படிப்பட்டவ இங்க வந்து வாழ்வான்னு எப்படி நினைக்கிற?”
“எல்லாம் உன் மேல இருக்க நம்பிக்கைதான். இதுவரைக்கும், எந்தச் சூழ்நிலையிலும் உன் மேல வச்ச நம்பிக்கையை நீ தோற்கடிச்சதே இல்லை.” என்றவர் கவலை படித்த முகத்தோடு,
“வலுக்கட்டாயமா அவளுக்குத் தாலி கட்டுனதைத் தவிர.” என்றார்.
அன்னை முன் தலை குனிந்து நின்றவன், “சாரிம்மா… ஏன் அப்படிப் பண்றேன்னு இப்ப வரைக்கும் புரியல. தெரியாமல் பண்ற தப்புக்கு இவ்ளோ பெரிய தண்டனையைக் கொடுக்குறீங்களே.” என்றான்.
“தெரியாமப் பண்ணாலும் அவதான் இனி உன் வாழ்க்கை. நான் எனக்கு வேணா உன் வாழ்க்கையை விட்டுப் போகலாம் கருடா. ஆனா, அவதான் உன் கூட கடைசியா. வரைக்கும் வரப்போறா… அப்படிப்பட்ட உறவை நல்லபடியா வச்சுக்கோன்னு சொல்றேன்.”
“சரி விடும்மா. அதெல்லாம் அப்புறம் பார்த்து. நேத்துல இருந்து ஒண்ணுமே சாப்பிடல, கொஞ்சம் டீ தரியா…” என்று கேட்டேன் அந்தத் தாயின் வயிறு பிரசவ வலிக்கு. ஈடான பன்மடங்கு வலியை உணர்ந்தது.
இந்த முறை வந்த கண்ணீரை மறைக்காது, மகன் முன்பு படம் போட்டுக் காட்டியவர், “என் மகன் வாழ்க்கைக்காகத்தான் இந்தப் பிரிவு. கொஞ்ச நாள் கஷ்டப்பட்டா வாழ்க்கை. முழுக்க நல்லா இருக்கலாம். அம்மா சொல்றதை இப்பவாவது கேட்டு நடந்துக்க…” எனச் சொல்லாமல் சொன்னார்.
தன் முகம் பார்த்தால் அன்னையின் மனம் கரைந்து விடும் என்ற எதிர்பார்ப்போடு வந்தவன், முழுவதும் தோற்றுப்போய் விரக்தியான புன்னகையோடு, “எனக்காக இல்லனாலும் என் அம்மாவுக்காக அவளை இங்க கூட்டிட்டு வருவேன்.” என்று விட்டுக் கிளம்பியவன் மீண்டும் அன்னையின் முகத்தைப் பார்த்து, “ஒன்னு மட்டும் சொல்றேம்மா. இப்போ உங்க மகன் ரொம்பக் கஷ்டப்படுறான். இந்தக் கஷ்டத்துக்கு நீங்களும் ஒரு காரணம். இனி நீங்களே பேசினாலும் உங்ககிட்ட நான் பேசமாட்டேன்.” என்று விட்டு வெளியேறினான்.
கதவைச் சாற்றிய சரளா, கண்ணீரோடு அறைக்கு ஓடிவிட்டார். இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த சத்தியராஜ் மனைவியின் தலை வருடி, “எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்.” என்றிட,
“என் புள்ள பசிக்குதுன்னு சொல்லிட்டுப் போறாங்க. பெத்தவளா அந்த வார்த்தையைத் தாங்க முடியல. அப்படி என்னங்க பெரிய பாவத்தைப் பண்ணிட்டேன்… பெத்த ரெண்டும் அங்கயும், இங்கயும் இருந்து கஷ்டப்படுத்துறானுங்க.” என மனம் விட்டு அழுதார்.
அவனது ஆட்டோ இரண்டு தெரு தள்ளி நின்றிருக்கும். இவன் இருக்கும் தெருவில், ஆட்டோ நிறுத்த இடமில்லை. குடும்பத்திற்கு அடுத்து நெருக்கமான ஒரு ஆள் இந்த ஆட்டோ தான். அதற்குக் கன்னியப்பன் எனப் பெயரிட்டவன், தம்பியைப் போல் நடத்திக் கொண்டிருப்பான். அந்த வாகனத்திற்குத் தெரியும், கருடனின் உழைப்பு, கஷ்டம், மன உளைச்சல், கண்ணீர் அனைத்தும்.
சில நேரம் உணவைக் கூட மறந்து ஓடிக் கொண்டிருப்பவனிடம், சிறிது நீரையாவது அருந்து எனக் கவலை கொண்டான் கன்னியப்பன். புது ஆட்டோ போல் தினந்தோறும் நேரமெடுத்து அதைத் துடைத்து, முத்தமிட்ட பின்பு தான் சவாரியை ஆரம்பிப்பான். கடந்த சில நாள் ஏற்பட்ட மனக்கசப்பால், கன்னியப்பனைச் சரியாகப் பார்க்காமல் இருந்தவன் காணச் சென்றான்.
அவனுக்காக என்றும் காத்திருக்கும் கன்னியப்பன் இன்று காத்திருக்கவில்லை. வண்டியைக் காணாது முதலில் மிரண்டவன், பின் தேடி அலைய ஆரம்பித்தான். கன்னியப்பனைத் தொலைத்துப் பெரும் அச்சத்திற்கு ஆளானவன், வீட்டிற்குச் சென்று கேட்கலாம் என்று நடந்து கொண்டிருக்க, அலைபேசியின் ஓசை காதை நிறைத்தது.
புதிய எண்ணமாக இருப்பதால் நெற்றிப் போட்டிக்கு நடுவில் கேள்விக் குறியைக் கொண்டு வந்தவன், ட்ரூ காலரில் வந்த பெயரைக் கண்டு செவியோடே ஓட்ட வைக்க,
“என்னப்பா புது மாப்பிள்ளை, உன் கன்னியப்பன் அங்க இருக்கானா?” என்ற எள்ளல் குரல் கேட்டது.
கட்டியவளின் வார்த்தையில் நடையை நிறுத்தியவன், கேள்விக் குறியைப் பெரிதாக்கி அடுத்து வரும் வார்த்தைக்காகக் காத்திருக்க, “ரொம்பத் தேடி அலையாத, நேரம் தான் வேஸ்ட். உன் கன்னியப்பனுக்கு உன்னைப் பிடிக்கலையாம். அதனால என்கிட்ட வந்துட்டான். இப்ப நீ என்ன பண்ற, போன வேகத்துலயே கிளம்பி வர… சாரி மேடம், நேத்து ராத்திரி உன்கிட்ட நடந்ததுக்காக மனப்பூர்வமா மன்னிப்புக் கேட்டுக்குறேன். தயவு செஞ்சு என் பொழப்பைக் கெடுத்துடாதீங்க. அதை வச்சுதான் நான் சோறு தின்னுட்டு இருக்கேன். கால்ல விழுறேன், என் கன்னியப்பனைக் கொடுத்துடுங்கன்னு சொல்லிக் கை எடுத்து கும்பிடு.” என்ற ரிதுவின் குரல் மிளகாய்ப் பொடியைக் கரைத்து வெறும் வயிற்றில் குடித்தது போல் இருந்தது.
நான்கு புறமும் பற்றிக் கொண்டு எரியும் எரிச்சலுக்கு நடுவில் எச்சிலை விழுங்கி, “நீ என் விஷயத்துல ரொம்ப விளையாடுற. என் குடும்பத்துக்காக ரொம்ப நாளுக்குப் பொறுமையா இருக்க மாட்டேன். பத்து நிமிஷம் டைம் தரேன், அதுக்குள்ள என் கன்னியப்பன் இங்க வந்து நிக்கணும்.” எனக் கருடேந்திரன் மிகத் தீவிரமாகப் பேசிக் கொண்டிருக்க,
“இல்லனா நீ வந்து எடுத்துட்டுப் போவியா?” எனக் கலகலவென்று சிரித்தாள் ரிதுசதிகா.
“வேணாம்!”
கணவன் என்ற பொறுப்பை ஏற்றுக் கொண்டவன், கடிக்கும் பல்லின் ஓசை தெள்ளத் தெளிவாகக் கேட்டது கட்டியவளுக்கு. அந்தச் சத்தத்தைக் கண்டு உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டவள் சாவகாசமாக,
“ஒரு ஆட்டோக்காரன் என் புருஷனா இருக்கக் கூடாது. வேலை வெட்டிக்கே போகாம, மூணு வேளைக்கும் இந்த வீட்டோட உட்கார்ந்து சோறு தின்னால் கூட எனக்கு. ஓகே. தாலி கட்டின பாவத்துக்கு வகை வகையா தின்னு. ஓசிக் காத்துல உட்கார்ந்து கூச்சமே இல்லாம வாழ்க்கையை அனுபவி. என்ன வேணா பண்ணிட்டுப் போ… ஆனா ஆட்டோ ஓட்டக் கூடாது.” பதில் கொடுத்தாள்.
“எந்த ஸ்டேட்டஸ்காக என்னை அவமானப்படுத்துனயோ, அதைத்தான் ஒண்ணுக்கு ரெண்டு தடவை தாலி கட்டிச் சிதைச்சிருக்கேன். இனியும் புத்தி கெட்டு மட்டமாப் பேசின, உன் சாம்ராஜ்யம் மொத்தமும் கலைஞ்சிடும்.”
“கலையுதோ, முளைக்குதோ? இனி நீ ஆட்டோ ஓட்டப் போகக்கூடாது.” என்றவள் தன் கையில் இருக்கும் கை கடிகாரத்தைப் பார்த்துவிட்டு,
“உனக்காக ஒதுக்குன இந்தப் பத்து நிமிஷத்தை என் வாழ்க்கையில ரொம்ப வேஸ்ட்டான டைமா பீல் பண்றேன். இனியும் டைம் வேஸ்ட் பண்ண என்கிட்ட டைம் இல்ல. சோ, பாய்டா வெட்டி புருஷா…” என்றவளின் நேரத்தை முழுதாகக் கெடுப்பதற்காக, இரண்டு கால் பாய்ச்சலோடு ஓடினான் கருடேந்திரன்.
5. சிறையிடாதே கருடா
written by Competition writers
கருடா 5
விட்டது தொல்லை என்று கருடேந்திரன் மாலையைக் கழற்றி விட்டு நிம்மதியாக ஓரிடத்தில் நின்றுகொள்ள, அவன் பெற்றோர்களுக்குத்தான் என்ன செய்வதென்று புரியவில்லை. மகளின் பின்னால் ஓடிய பொன்வண்ணன்,
“நீ பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல ரிது. தாலி கட்டுன கையோட யாராவது இப்படிப் போவாங்களா?” கேட்டார்.
“நீங்க பண்ணது மட்டும் நல்லா இருந்துச்சா? எல்லா அப்பாவும் தன் பொண்ணுக்கு, அப்படி மாப்பிள்ளை வரணும். இப்படி மாப்பிள்ளை வரணும்னு மெனக்கெட்டுப் பார்த்துப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வைப்பாங்க. நீங்க என்னடான்னா இந்தப் பொறுக்கிக்கு என்னைக் கல்யாணம் பண்ணி வச்சிருக்கீங்க.”
“அதை ஒரு பொறுக்கி சொல்லுது பாரு.” தூரமாக நின்றிருந்தவன் வேண்டுமென்றே கத்தினான்.
“கோவில்னு பார்க்குறேன்.”
“உன்னை விட நான் நல்லாவே பேசுவேன். கோவில விட்டு வெளிய வா, பேச்சு வார்த்தை வச்சுக்கலாம்.”
“உன்கிட்ட எனக்கென்னடா பேச்சு. நீ எனக்கு யாரு? தாலி கட்டுனமா, மூடிக்கிட்டுக் கிளம்புனமான்னு இருக்கணும்.”
“அதே தான்டி உனக்கும். ஒழுங்கு மரியாதையா என் பின்னாடி வந்து என் வீட்டுல சாணி அள்ளிக்கிட்டு இரு.”
“கருடா!”
“எவ்ளோ திமிராப் பேசுறான்னு பார்க்குறீங்க தான. இப்படி ஒருத்தியை என் தலையில கட்டிட்டீங்களே.”
“இது நீயா தேடிக்கிட்ட வாழ்க்கை!”
“தெரியாம நடந்த விபத்து அது. அப்படியே விட்டுட்டுப் போகாம, இந்தச் சனியனை என் கால்ல கட்டிட்டீங்க. இப்பப் பாருங்க, காலச் சுத்துன பாம்பா எப்படித் தொல்ல தரான்னு. இவல்லாம் குடும்பத்துக்குச் செட்டாக மாட்டாம்மா.”
“திருட்டுத் தாலி கட்டின உனக்கெல்லாம் என்னைப் பத்திப் பேசத் தகுதியில்லடா.”
“திருட்டுத் தாலியைக் கழற்றிப் போட்டவ, எதுக்குடி வந்து வெட்கமே இல்லாம உட்கார்ந்த.”
“அந்த வெட்கம் உனக்கும், உன் குடும்பத்துக்கும் இருந்திருந்தா இப்படி வந்து நின்னு இருப்பீங்களா? உழைச்சுச் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கு. அதை விட்டுட்டு ஒரு டிராமாவைப் போட்டு, நல்லா சொகுசா வாழலாம்னு பார்க்குறீங்க. இந்தப் பொழப்புக்குக் குடும்பத்தோட…” என்றவளைச் சீறிப் பாய்ந்து பிடித்தவன்,
“என் குடும்பத்தைப் பத்திப் பேசாத. அவங்களைப் பத்தி என்னடி தெரியும் உனக்கு. உன்ன மாதிரிப் பணத்துக்குப் பல்லக் காட்டுறவங்கன்னு நினைச்சியா எங்களை…” என இல்லாத முடியை இறுக்கிப் பிடித்தான்.
“விடுடா அவளை…”
“தயவு செஞ்சு ஓரமா போங்கம்மா. எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம்.”
“விடுடா கருடா…”
“முடியாதுப்பா, இவளை மாதிரி ஆளை விட்டு வைக்கிறது தப்பு.”
“என் பொண்ண விடு!” என்ற அதிகாரக் கட்டளையில் கருடனின் கைகள் அவள் தலைமுடியில் இருந்து விடுபட, “என் முன்னாடியே என் பொண்ண இப்படிப் பண்றது நல்லா இல்ல. நல்லாப் பார்த்துப்ப என்ற நம்பிக்கையில தான் நீ பண்ணதையும் மன்னிச்சு, இந்தக் கல்யாணத்தை நடத்தி வச்சிருக்கேன். அந்த நம்பிக்கையைக் கெடுத்துடாத.” என்றார்.
“உங்களை யாரு என் மேல நம்பிக்கை வைக்கச் சொன்னா? முதல்ல உங்க பொண்ண ஒழுங்கா வளர்க்காதது உங்க தப்பு. இத்தனைக்கும், பிள்ளையார் சுழி நீங்க தான். நியாயமானவரா இருந்திருந்தா, உங்க பொண்ணு பண்ண தப்பைத் தட்டிக் கேட்டு இருப்பீங்க. கல்யாணம் பண்ணி வச்சிருக்க மாட்டீங்க.”
“என்னடா பேச்சு இது? பெரியவங்கன்னு கூட இல்லாம. இந்தக் கல்யாணம் நடக்க அவர் காரணம் இல்ல, நீ தான் காரணம்! ஒரு அப்பாவா என்ன செய்யணுமோ அதைத்தான் அவரு செஞ்சிருக்காரு. இதுக்கு மேல எதுவும் பேசாத. எதுவா இருந்தாலும் நாங்க பேசிக்கிறோம்.” என மகனை அடக்கிய சரளா மருமகளின் தந்தையிடம் மன்னிப்புக் கேட்டார்.
“ரெண்டு பேருக்கும், கல்யாணத்தோட மதிப்புச் சரியாப் புரியல. புரியும்போது பேசுன வார்த்தைக்கு ரொம்ப வருத்தப்படுவாங்க.”
“உங்க டிராமா முடிஞ்சுதா, நான் கிளம்பலாமா?”
“எங்கம்மா போற?” எனத் தன்மையாகக் கேட்ட சரளா மருமகள் முன் நின்று, “புகுந்த வீட்டுக்கு வந்து விளக்கு ஏத்திச் சாமி கும்பிடுறது ஒரு மருமகளோட முதல் கடமை. அதைச் செய்யாமல் போற.” என்றவரை உதாசீனப் பார்வையோடு பார்த்தாள்.
“நான் உங்க மருமகளும் இல்ல, உங்க வீடு எனக்குப் புகுந்த வீடும் இல்லை.”
“ஒன்னுக்கு ரெண்டு தடவை என் மகன் தாலி கட்டி இருக்கான். அவன் உனக்குப் புருஷனா இருக்க வரைக்கும், நான் உனக்கு மாமியார் தான். நம்ம வீடு உனக்குப் புகுந்த வீடு தான்…”
“ஓஹோ… வர முடியாதுன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க?”
“நாங்க சண்டைக்கு வரலம்மா. உன்னை எங்க வீட்டுக்கு மருமகளாய் கூட்டிட்டுப் போக வந்திருக்கோம். இனி உன்னோட வாழ்க்கை அந்த வீட்லதான். உன்னோட கோபம் எங்களுக்குப் புரியுது. இருந்தாலும் நடந்ததை மறந்துட்டு ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ முயற்சி பண்ணலாமே.”
சரளாவை விட மிகவும் தன்மையாக சத்யராஜ் புரிய வைக்க, வர மாட்டேன் என்று ஒட்டாரம் செய்தாள். பொறுத்துப் பார்த்த பொன்வண்ணன், “அவன் உன்னைக் குடும்பத்துப் பொண்ணு இல்லன்னு சொல்லாம சொல்றான். அதுக்கு உனக்குக் கொஞ்சம் கூட ரோஷம் வரலையா? அவன் சொல்ற மாதிரி தான் உன்னை வளர்த்திருக்கனா?” என உசுப்பி விட முயற்சித்தார்.
அவை அவள் முகத்தில் நன்றாக வேலை செய்ய, “அவன்கிட்டத் தோத்துப் போயிட்டன்னு ஒத்துக்கப் போறியா?” என மீண்டும் அதே வேலையைக் கனகச்சிதமாகச் செய்தார்.
சில நொடிகள் பார்வை சுருக்கி யோசித்தவள், “நான் உங்க மருமக தான…” எனச் சரளாவைப் பார்த்துக் கேட்க, மன மகிழ்வில் ஒன்றும் புரியவில்லை அவருக்கு.
“சொல்லுங்க?”
“ஆமாடா!”
“மருமகளா உங்ககிட்ட முதல் முறையா ஒன்னு கேட்கப் போறேன்.”
“கேளுடா, உனக்கு இல்லாத உரிமையா?”
“உங்க வீட்டு மருமகள் கழுத்துல எவனாது ஒருத்தன் வற்புறுத்தித் தாலி கட்டுனா சும்மா விடுவீங்களா?” என்ற கேள்வியை அவர் தலையில் இடியாக இறக்க, அதைச் சற்றும் எதிர்பார்க்காதவர் உறைந்து நின்றார்.
“அதைப் பண்ண உங்க பையன் கூட எப்படிச் சேர்ந்து வாழ முடியும்? உங்க வீட்ட எப்படி என் புகுந்த வீடாய் பார்க்க முடியும்.”
“என் பையன் பண்ணது தப்பு தான். அதுக்கான பிராயச்சித்தமா தான் இந்தக் கல்யாணத்தைப் பண்ணி வச்சிருக்கோம்.”
“அப்போ வேற ஒருத்தன் தாலி கட்டினாலும், அவன் கூடவும் கல்யாணம் பண்ணி வச்சு வாழச் சொல்லுவீங்களா?”
தன் வார்த்தைக்குப் பதில் வார்த்தை கூறிய மருமகளை, எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் சத்தியராஜ் வாயை மூடிக்கொள்ள, “எங்க வீட்டுக்குத் தான் வரச் சொன்னமே தவிர, அவனை மன்னிச்சு ஏத்துக்கச் சொல்லல. அவனை மன்னிக்கிறதும் மன்னிக்காமல் போறதும் உன்னோட முழு உரிமை! என்னைக்கும், அதுல எங்க தலையீடு இருக்காது.” என வாக்குறுதி கொடுத்தார் சரளா.
“குட்!” என மெல்லிய புன்னகையை வீசியவள்,
“உங்க பையனை நான் மன்னிக்கிற வரைக்கும் உங்க வீட்டுக்கு வர மாட்டேன். அவனை வேணா என் கூட வந்து வாழச் சொல்லுங்க. ஒருவேளை என் மனசு மாறுனா, உங்க பையனையும் ஏத்துக்கிட்டு உங்க வீட்டுக்கு வரேன்.” என்றதும் அடித்துக் கொண்டிருந்த அலை நின்றது போல் திகைத்து நின்றான் கருடேந்திரன்.
இவ்வார்த்தையை அவனின் பெற்றோர்களும் எதிர்பார்க்காததால் அதே நிலையில் நிற்க, மகளை அடக்கப் பார்த்தார் தந்தை. “இது என் வாழ்க்கை விஷயம்!” என அவரை ஒதுங்க வைத்தாள்.
“இதான் உங்க பையனுக்கு நான் கொடுக்குற தண்டனை. எந்தக் குடும்பத்துக்காக எனக்கு இப்படி ஒரு பாவத்தைப் பண்ணானோ, அந்தக் குடும்பத்தை அவன் பிரிஞ்சு இருக்கணும். நீங்க அவனப் பார்க்க முடியாம, அவன் உங்களைப் பார்க்க முடியாம தவிக்கணும். என் வீட்ல ஒரு வேலைக்காரன் மாதிரி வாழனும். இதுக்கெல்லாம் சம்மதம்னு சொன்னா உங்க பையனைக் கார்ல ஏறி உட்காரச் சொல்லுங்க. இல்லன்னா நீங்க தனியாப் போங்க, நான் தனியாப் போய்க்கிறேன்.” என்று விட்டாள் ஒரே முடிவாக.
“கடைசி ஆப்ஷன் நல்லா இருக்கு. நீ அப்படியே கிளம்பு. என் குடும்பத்தை எல்லாம் விட்டு வந்து உன் முகரையப் பார்த்துட்டு இருக்க முடியாது.”
“அப்போ கடைசி வரைக்கும் வாழாவெட்டியா உன் வீட்டுலயே வாழு. எப்படியும் உன் தங்கச்சிக்குக் கல்யாணம் பண்ணுவ தான. அப்போ உன்னப் பத்தின கேள்வி வரும். உன் பொண்டாட்டி எங்கன்னு கேப்பாங்க. அன்னைக்கு அவங்க முன்னாடி வந்து நின்னு இவன் எனக்குத் திருட்டுத் தாலி கட்டிட்டான். அதனால வாழா வெட்டியா இருக்கான்னு சொல்லி உன் தங்கச்சி வாழ்க்கையைக் கெடுப்பேன்.”
“அடிங்க்குகுகு…” என அடிக்கப் பாயும் மகனை சத்யராஜ் தடுக்க,
“என் பையன் உன் வீட்டுக்கு வருவான். அவன் பண்ண தப்புக்குத் தண்டனையா வீட்டோட மாப்பிள்ளையா இருப்பான். நீ எப்போ சமாதானமாகி என் வீட்டுக்கு வரியோ, அப்பத்தான் அவன் எனக்குப் புள்ள… அதுவரைக்கும், அவனுக்கும் எனக்கும் எந்தப் பேச்சு வார்த்தையும் இருக்காது. இது என் மருமகள் உன்மேல சத்தியம்.” என்றவரால் பெரும் நிலநடுக்கம் அங்கு.
மனைவியின் வார்த்தையை உதாசீனம் செய்வது போல், அன்னையின் வார்த்தையைச் செய்ய முடியாது கருடேந்திரனால். அதனால்தான் பிடிக்காதவளைத் திருமணம் செய்திருக்கிறான். எடுத்த முடிவிலிருந்து நிச்சயம் பின்வாங்க மாட்டார் என்பதும் அவனுக்குத் தெரியும். எங்கு அடித்தால் எப்படி வளைவோம் என்பதைத் தெரிந்து அடித்திருக்கும் மனைவியைக் குரோதத்தோடு பார்த்தவன்,
“என்னால முடியாது.” என்றான்.
“அவளுக்கு நான் வாக்குக் கொடுத்திருக்கேன். ஒருத்தி என் முன்னாடி உன் புள்ள வளர்ப்பு இதுதானான்னு கேட்காமல் கேட்டுட்டா. அவ வாயாலயே உங்க புள்ளை மாதிரி ஒரு புள்ளை எங்க தேடி எடுத்தாலும் கிடைக்காதுன்னு சொல்லணும். உண்மையாவே நீ எனக்குத்தான் பிறந்தன்னா, அப்படி அவளைச் சொல்ல வச்சுட்டு வீட்டுக்கு வா…”
சரளாவின் முடிவில் யாருக்கும் உடன்பாடு இல்லை என்றாலும், ஒருத்தி மட்டும் மிகுந்த ஆனந்தத்தோடு நின்றிருந்தாள். சிரித்த முகமாக, “வரம்மா…” எனத் தலையசைத்து அவர் விடைபெற, எந்தப் பாவனைகளும் இல்லை அவளிடம். போட்ட திட்டம் அப்படியே நடந்ததில் மனமகிழ்ந்தவர், மகளின் திட்டத்தில் மனம் கசங்கி நகர்ந்தார்.
“என்னடா, வீட்டோட மாப்பிள்ளை! கக்கூஸ் கழுவத் தெரியுமில்ல… இன்னையோட வேலைக்காரங்களுக்குச் சம்பளம் கொடுக்குற காசு மிச்சம்.” என்றவள் அவனை நெருங்கி,
“இந்தப் பலி கொடுக்கப் போற ஆட்டைக் கயிறு கட்டி இழுத்துட்டுப் போவாங்க தெரியுமா, அப்படித் தெரியுற என் கண்ணுக்கு.” எனத் தலையை உயர்த்திச் சத்தமிட்டுச் சிரித்தாள்.
“யாரு யாருக்குப் பலியாகுறாங்கன்னு பார்த்துடலாம்.”
“பார்க்கலாமே!”
“ஆணவத்துல ஆடாதடி. எங்க அம்மா சொன்ன மாதிரி, எந்த வீட்டுக்கு வர மாட்டன்னு சொன்னியோ அந்த வீட்டுக்கு வர வச்சு, எங்க எல்லாருக்கும் சோறாக்கிப் போட்டு, வேர்வை சிந்தி வேலை பார்த்து அக்மார்க் மருமகளா நடக்க வைக்கல, என் பேரு கருடேந்திரன் இல்லடி.”
“கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்…” என நக்கலாகப் பாடியவள்,
“வேலைக்காரனா வாழப் போற வசந்த மாளிகைக்குப் போகலாமா?” என முன்னே நடக்க, ஒவ்வொரு செல்லிலும் அவள் மீதான குரோதத்தைச் செலுத்தி, பகையைத் தீயாக உருவாக்கி வைத்தவன் அதை அணைக்கும் நாளுக்காகக் காத்திருக்கிறான்.
***
எந்த வீட்டின் முன்பு கழுகாகக் காவல் காத்தானோ, அந்த வீட்டிற்குள் இப்படியான தருணத்தில் நுழைவோம் என்ற எண்ணம் சிறிது கூட உதித்ததில்லை. முதல்முறையாக இந்தக் கட்டிடத்தைத் தலை உயர்த்திப் பார்க்கும்பொழுது, ‘இன்னும் ரெண்டு மாடி சேர்த்துக் கட்டிருந்தா சூரியன், நிலா, நட்சத்திரம் எல்லாத்தையும் கைலயே பிடிச்சிருக்கலாம்.’ என்ற எண்ணம் தான் அவனுக்குள்.
என்ன கோபம் இருப்பினும், இந்தக் கட்டிடத்தை அவன் உள் மனம் ரசித்தது. ஆனால், இன்று நிலைமையோ வேறு. அவன் விரல் நுனி பட்டால், இந்த மொத்தக் கட்டிடமும் எரிந்து சாம்பல் ஆகிவிடும். அந்த அளவிற்கு இறுகிப் போயிருந்தது மொத்த உடலும். துடிக்கும் இதயம் கல்லாக மாறி, அதில் யாரோ உளியை வைத்து அடிப்பது போன்ற ஓசை.
வெடிக்கத் துடிக்கும் எரிமலைக்குள் இவனைத் தள்ளிவிட்ட சூழ்நிலை, எரிமலையின் நிலையைச் சிறிதும் கவனிக்கவில்லை. பூமி மொத்தத்தையும் தன் சூட்டால் கதி கலங்க வைக்கும் அந்த எரிமலையே இவனால் கதி கலங்கிப் போயிருக்கிறது. விழிகளுக்குள் இரு கத்தி கூர்மையாக நின்று கொண்டிருக்க, அழுத்தத்தின் மொத்த உருவம் இந்தக் கருடேந்திரன்.
தன்னவன் நிலையைச் சிறிதும் கணக்கில் எடுத்துக் கொள்ளாதவள், வந்த கையோடு வேறு கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட, “உன்கிட்டக் கொஞ்சம் பேசணும்.” என்றார் பொன்வண்ணன்.
அவன் மறுக்கவும் செய்யாமல், சம்மதிக்கவும் இல்லாமல் அதே இடத்தில் அப்படியே நின்றிருக்க, “என்னை உனக்கு நினைவு இருக்கா?” முதல் கேள்வியை மருமகனிடம் இடமாற்றினார்.
பதில் உரைக்காமல் புருவத்தை மட்டும் சுருக்கியவனுக்கான பதிலைக் கொடுக்க, “சரியா ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நான் உன்னைப் பார்த்தேன்.” எனப் புதிதாகப் புதிர் ஒன்றைப் போட்டார்.
சுருங்கிக் கொண்ட புருவங்கள் இன்னும் நான்கு ஐந்து சுருக்கங்களைக் காட்டி, அவன் நெற்றியில் கேள்விக் குறியாக வந்து நிற்க, “எஸ்7 போலீஸ் ஸ்டேஷன்!” என்ற வார்த்தையோடு கடந்த காலத்திற்குள் நுழைய, புத்திக்குள்
பொறி அடித்த உணர்வு அவனுக்கு.
இரண்டு வருடத்திற்கு முன்பு, லட்சக்கணக்கில் பணத்தைப் பையில் அடுக்கி வைத்தவர் தன் காரில் பயணித்துக் கொண்டிருந்தார். நள்ளிரவைத் தொடப்போகும் நேரத்தில் சென்று கொண்டிருந்த வாகனம் பழுதாகியது. பணத்தைப் பத்திரமாக எடுத்துச் செல்ல முடியாமல், நடுரோட்டில் திண்டாடிக் கொண்டிருந்தவருக்குத் தரிசனம் கொடுத்தான் வருங்கால மருமகன்.
விலையைக் கூடப் பேசாமல் செல்ல வேண்டிய இடத்தைக் கூறியவர், பந்தாவாக ஆட்டோவில் ஏறி அமர்ந்தார். சரியாக இருபது நிமிடத்தில் அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. அவரது ஓட்டுநர், கார் சரியாகிவிட்ட செய்தியைக் கூறத் தான் இருக்கும் இடத்தைக் கூறியவர் காத்திருந்தார்.
“சார்!” எனக் குரல் கொடுத்தான்.
“என்னப்பா?”
“எக்ஸ்ட்ரா 200 ரூபாய் இருக்கு சார்.”
“பரவால்லப்பா, வச்சுக்க.”
“என் உழைப்புக்கான பணம் மட்டும் போதும் சார். உங்க உழைப்புக்கான பணம் உங்க கிட்டயே இருக்கட்டும்.” என்றவன் முகத்தை அப்போதுதான் பார்க்கவே செய்தார் பொன்வண்ணன்.
வருங்காலத்தில், திமிர் பிடித்தவளின் கணவனாகவும், இந்தக் கதையை மாமனார் சொல்லிக் கேட்கப் போகும் மருமகனாகவும், அந்த இரவு வெளிச்சத்தில் தன் முகத்தை ஆழமாகப் பதிவு செய்தான். கைநீட்டிக் காசை வாங்கிக் கொண்டவர்,
“இந்தக் காலத்துல உன்ன மாதிரி மனுசனைப் பார்க்குறது ரொம்ப அபூர்வம். பியூச்சர்ல நீ ரொம்பப் பெரிய ஆளா வருவ…” என வாழ்த்திட, சிரித்த முகமாக அங்கிருந்து கிளம்பினான்.
காரில் ஏறியவர் வீடு வந்ததும் இறங்கி, “உள்ள இருக்கற பேகை எடுத்துட்டு வாப்பா…” என ஓட்டுநருக்குக் கட்டளையிட்டார். அடுத்த சில நிமிடங்களில்,
“உள்ள எந்தப் பேகும் இல்லையே சார்.” என்றார் ஓட்டுநர்.
அப்போதுதான் ஆட்டோவில் அந்தப் பையை அப்படியே விட்டது நினைவிற்கு வந்தது. பல லட்சங்கள் என்பதால் பெருத்த மனஉளைச்சலுக்கு ஆளானவருக்கு, எங்குச் சென்று அந்த நல்லவனைத் தேடுவது என்று தெரியவில்லை. எவ்வளவு நல்லவனாக இருந்தாலும், அத்தனைப் பணத்தை மொத்தமாகப் பார்க்கும் பொழுது மனம் மாறி இருப்பான் என அஞ்சியவர் காவல் நிலையத்திற்கு ஓடினார்.
அங்கு அவருக்கு முன்பாகக் கருடேந்திரன் நின்றிருந்தான். யோசனை படிந்த முகத்தோடு இருந்தவருக்கு, அங்கிருந்த அதிகாரி அனைத்தையும் புரிய வைத்தார். தன்னைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காமல், பணம் இருப்பதைக் கண்டதும் இந்தக் காவல் நிலையத்திற்கு வந்திருக்கிறான்.
“காசு கரெக்ட்டா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க சார்.”
லட்சங்களை எண்ணிப் பார்க்காமல், “உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல. இது மிஸ் ஆகி இருந்தா பெரிய லாஸ் ஆகி இருக்கும். நீ பண்ண உதவிக்கு என்ன வேணும்னாலும் கேளு. எதுவா இருந்தாலும் செஞ்சு தரேன்.” என்றிட,
“அதெல்லாம் எதுக்கு சார்? உங்களைப் பத்தி எந்த டீடைல்ஸும் தெரியல. எப்படியும் இந்த ஏரியாவைச் சுத்திதான் இருப்பீங்கன்னு கெஸ் பண்ணி இங்க வந்தேன். பணம் கரெக்டா இருக்கான்னு பார்த்துக்கோங்க சார்.” என்றான்.
“இவ்ளோ தூரம் வந்தவன் ஒத்தத் தாளையா உருவி இருக்கப் போற?”
தன்னை நம்பியவருக்கு நன்றியுரைத்தவன் அங்கிருந்து கிளம்பும் முன், “இந்த மாதிரி நேரத்துல ரொம்ப ஜாக்கிரதையா வரணும் சார். அடுத்த தடவை யாரையாவது கூடக் கூட்டிட்டு வாங்க.” என அறிவுரை கூற,
“உன்ன மாதிரி நம்பிக்கையான ஆளு என் பக்கத்துல இல்லப்பா…” என்றவர் முகத்தில் அத்தனை வேதனைகள்.
அதை நன்கு உணர்ந்து கொண்டவன், கனத்த மனத்தோடு அங்கிருந்து கிளம்பினான். வீடு வந்தவர் தன் மகளிடம் நடந்த அனைத்தையும் சொல்லிப் புகழாரம் சூட்டிவிட்டார். இப்படிப் புகழும் அளவிற்கு என்ன செய்து விட்டான் என அலுத்துக் கொண்டவள், ஒரு கட்டத்திற்கு மேல் யார் அவன்? என்று யோசிக்க ஆரம்பித்தாள். சில நேரம் நம் தேடுதல், வாழ்க்கையோடு இணைந்து விடும் என்பதை எந்நொடி உணர்வாளோ அவனைத் தேடியவள்.
நடந்த அனைத்தையும் கூறியவர், “உன்ன மாதிரி ஒருத்தனுக்கு, என் பொண்ணைக் கட்டிக் கொடுக்கணும்னு பல நாள் யோசிச்சிருக்கேன். நீயே அதுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததுக்கு அப்புறமும் எப்படி நழுவ விடுவேன்?” என்றவரின் செயலுக்கான காரணம் இப்போதுதான் புரிந்தது கருடேந்திரனுக்கு.
“இனி என் சாம்ராஜ்யமும், என் பொண்ணும் உன்னோட பொறுப்பு. பல வருஷத்துக்கு அப்புறம் இன்னைக்குத் தான் கொஞ்சம் நிம்மதியா பீல் பண்றேன். கூடிய சீக்கிரம் இந்த நிம்மதி சந்தோஷமா மாறனும்.”
“சாரி சார். கிடைச்ச நிம்மதியே நிலைக்குமான்னு தெரியல. எனக்கும் உங்க பொண்ணுக்கும் சுத்தமா செட் ஆகாது. என் அம்மாவுக்காக மட்டும் தான் இந்தக் கல்யாணம். இதை முறியடிக்க, ஒரு சின்னச் சந்தர்ப்பம் கிடைச்சா கூட உதறித் தள்ளிட்டுப் போய்கிட்டே இருப்பேன்.”
“என் பொண்ணு வார்த்தையை வச்சு அவ கேரக்டரை முடிவு பண்ணாத. இந்த சொசைட்டிக்காக, அவளுக்கு அவளே போட்டுகிட்ட வேஷம் அது. ரொம்ப சென்சிட்டிவான பொண்ணு. என்னைக்கு அவ கண்ணு முன்னாடி அவ அண்ணன், இந்த உலகத்தை விட்டுப் போனானோ அன்னைக்கே மொத்தமா மாறிட்டா. என் பொண்ணைப் பழைய மாதிரி நீ தான் மீட்டுத் தரணும்.”
“அது என் டியூட்டி இல்ல சார். என் குடும்பத்துகிட்ட இருந்து பிரிச்சுக் கூட்டிட்டு வந்த உங்க பொண்ணப் பார்க்கவே எனக்குப் பிடிக்கல. என் தம்பி கேஸ்ல உங்க பொண்ணுதான் குற்றவாளின்னு நிரூபிச்சுட்டு இங்க இருந்து கிளம்பிடுவேன்.”
“நிச்சயமா அதைப் பண்ணது என் பொண்ணா இருக்காது. இந்த விஷயத்துல உனக்குத் தோல்வி மட்டும் தான் மிச்சம்.” என்றவர் அவனை நெருங்கித் தோள் மீது கை போட்டு,
“உன்னை வெளிய எடுக்கும்போதே ரவியையும் வெளிய எடுத்துட்டேன். அதுக்கு என்ன காரணம் தெரியுமா?” என மருமகன் முகத்தைப் பார்த்தார்.
அவனோ எந்த உணர்வுகளையும் காட்டாமல் ஜடமாக நின்றிருக்க, “என் பொண்ணைச் சுத்தி, துரோகமும் பகையும் மட்டும் தான் சொந்தமா இருக்கு. உன் தம்பிக்காக நீ தேடப் போற வேட்டையில, அந்தத் துரோகமும் பகையும் அழிஞ்சு என் பொண்ணு மீண்டு வந்துடுவா…” என மருமகன் மீதுள்ள அதீத நம்பிக்கையில் வகுத்து வைத்த திட்டத்தைப் போட்டு உடைத்தார்.
அப்போதும் அவனிடம் எந்த மாற்றமும் இல்லை. அதை உணர்ந்தவர், அவனுக்கான நேரம் வரும்வரை காத்திருக்க முடிவு செய்து, “உன் வீட்டுப் பத்திரம் இந்நேரம் உன் அப்பா கையில சேர்ந்திருக்கும். உன் தம்பியோட வேலையும், மெடிக்கல் செலவும் இனி என்னோட பொறுப்பு. என் பொண்ண மட்டும் பத்திரமா பார்த்துக்க கருடா…” என அங்கிருந்துச் சென்று விட்டார்.
***
இரவுப் பார்ட்டியை முடித்துவிட்டு, நள்ளிரவு ஒரு மணி அளவிற்கு வீடு திரும்பினாள் ரிதுசதிகா. நண்பர்களோடு ஜாலியாக லூட்டி அடித்து விட்டு வந்தவள், தன் அறையில் தாலி கட்டியவன் இருப்பதைப் பார்த்துக் கொந்தளித்து விட்டாள். அவனோ, அவள் வந்ததைக் கூட அறியாமல் தீவிர சிந்தனையில் அமர்ந்திருந்தான்.
“டேய் வேலைக்காரா! உனக்கு என் ரூம்ல என்னடா வேலை?”
அந்த அதிகாரக் குரலில் தன் நினைவைக் கலைத்தவன் ஆயாசமாகத் திரும்பி, “இதெல்லாம் பழைய டயலாக்!” என மூக்கை அறுத்தான்.
“பிளடி ராஸ்கல்…”
பாய்ந்து அவன் சட்டைக் காலரைப் பிடிக்கப் போக, அவள் வரும் வேகத்தை வைத்து எண்ணத்தைப் படித்தவன், “ப்பே! ஓரமா…” என மெத்தையில் தள்ளி விட்டான்.
“ஹேய்! என்ன தைரியம் இருந்தா என் மேல கை வைப்ப? உச்சி மண்ட சூடாகி உன்னைக் கடிச்சுக் குதறுறதுக்குள்ள இங்க இருந்து போயிடு.”
“மப்புல எப்படி உளறுது பாரு. திருடின்னு மட்டும் தான் நினைச்சேன், நீ குடிகாரியாடி!” எனத் தன் இடையில் விரல்களை ஒட்ட வைத்தவன்,
“சரக்கு மட்டும் தானா, இல்ல எல்லா மேட்டரும் கைவந்த கலையா?” அருவருப்பான முகத்தோடு வினவினான்.
தலையணையைத் தூக்கி அவன் முகத்தில் அடித்து, “என்னைப் பார்த்தா குடிகாரி மாதிரியாடா இருக்கு.” சீறினாள்.
“ம்ம்… மகா மட்டமான தண்ணிப் பார்ட்டின்னு அப்பட்டமாய் தெரியுது.”
என்ன சொல்லித் திட்டுவதென்று தெரியாமல் வார்த்தையைத் தேடிக் கொண்டிருந்தவள் செவியில், “போதை தெளிஞ்சாதான் கை நடுங்கும். உனக்கு என்னடி இப்பவே நடுங்குது?” என்ற வார்த்தைகள் விழுந்தது.
3. சிறையிடாதே கருடா
written by Competition writers
கருடா 3
“எதுக்கு இப்படிப் பண்ண?”
“முதல்ல உங்க பொண்ணு என்ன பண்ணாங்கன்னு கேளுங்க.”
“அவ எதுவும் பண்ணிருக்க வாய்ப்பில்லை. அப்படியே பண்ணி இருந்தாலும் அதை நீ என்கிட்டச் சொல்லி இருக்கலாம். இப்படியா தாலி கட்டுறது?”
“உங்க பொண்ணுக்குத் தாலி கட்டணும்னு எனக்கு ஒன்னும் ஆசை இல்லை. ஒரு செருப்ப விடக் கேவலமா என்னைப் பேசுனா. இப்ப அந்தக் கேவலமானவன் தாலி கட்டி இருக்கான், அவ்ளோதான்.”
“அவ தப்பே பண்ணி இருந்தாலும், நீ பண்ணது பெரிய தப்புன்னு தெரியலையா?”
“எனக்கு நடந்த துரோகத்துக்கு முன்னாடி தெரியல.”
“அப்படி என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்கலாமா?”
“உங்க பொண்ணு ட்ரைனிங் இன்ஸ்டிட்யூட் நடத்துற பேர்ல அங்க படிக்கிறவங்க கிட்ட வேலை வாங்கித் தரன்னு காசு பிடுங்குறா. அதுல ஏமாந்த என் தம்பி என் அப்பாவை பிரைன் வாஷ் பண்ணி எனக்கே தெரியாம வீட்டுப் பத்தரத்தை அடமானம் வச்சு உங்க பொண்ணு கையில பத்து லட்ச ரூபா குடுத்து இருக்கான். காசு கொடுத்து ஆறு மாசம் ஆகுது. வேலை எப்பக் கிடைக்கும்னு கேட்டதுக்கு அவனை என்ன தெரியுமா பண்ணா…” என ரிதுவைப் பார்த்துப் பல்லைக் கடிக்க,
“ஸ்டாப் இட்!” உரக்கக் கத்தினாள்.
“இவன் சொல்றது உண்மையா?”
“என்னப்பா, நீங்களும்…”
“எனக்குத் தெரியும் ரிது. இருந்தாலும் அவன் தெரிஞ்சுக்கக் கேட்கிறேன்.”
“இவனையும், இவன் தம்பியையும் யாருன்னு கூட எனக்குத் தெரியாது. நம்மகிட்ட இல்லாத பணமாப்பா. நான் எதுக்கு இந்த மாதிரிக் கேவலமான ஒருத்தன்கிட்ட இருந்து காசு வாங்கப் போறேன்.”
“பொய் சொல்லாதடி!”
“டி போட்ட, செருப்பு பிஞ்சிடும்.”
“என் தம்பி கிட்ட இருந்து பத்து லட்ச ரூபா வாங்கல?”
“வாங்கல!”
“வேலை எப்ப வரும்னு கேட்டதுக்குப் படிக்க வராதன்னு துரத்தி விடல?”
“விடல!”
“உன்கிட்டக் கெஞ்ச வந்தவனைத் துரத்தி அடிக்கல?”
“அடிக்கல!”
“விஷயம் தெரிஞ்சு கேட்க வந்த என்னைப் பார்க்க விடாமல் துரத்தி அனுப்பல?”
“அனுப்பல!”
“ஆளுங்களை வச்சு என் தம்பிய…” என்றவன் சொல்ல முடியாமல் கண் கலங்கினான்.
“சும்மா அழுது டிராமா போடாத. நீ சொல்ற எதையுமே நான் பண்ணல. உன் தம்பி பேர் என்னன்னு கூட எனக்குத் தெரியாது. அதனாலதான், அன்னைக்கு நீ பேச வரும்போது பார்க்க முடியாதுன்னு விரட்டி விட்டேன்.” என்றதும் கலங்கிக் கொண்டிருந்த கண்கள் பாறையானது.
அங்கிருந்த அதிகாரிகள் அனைவரையும் துச்சமென எண்ணிப் பாய்ந்தவன், அவள் கழுத்தைப் பிடித்து அப்படியே தள்ளிக் கொண்டு சென்று கதவில் மோதி நிறுத்தினான். அவன் கொடுத்த அதிர்வில் இருந்து மீளாமல், விடுவிக்கப் போராடிக் கொண்டிருந்தவளைக் காப்பாற்றப் பொன்வண்ணன் ஓடினார்.
அவரால் அவன் திடத்திற்கு முன் ஒன்றும் செய்ய முடியவில்லை. அங்கிருந்த அனைவரும் சூழ்ந்து கொண்டு அந்த ராட்சத ராவணனைத் தடுக்கப் பார்க்க, “பேர் தெரியாமல் தான் கவர்மெண்ட் வேலை வாங்கித் தரன்னு காசு வாங்குனியா? உன்கிட்டப் பணத்தைக் கொடுத்ததுக்கான சாட்சி இருக்கு. ஒழுங்கா உண்மைய ஒத்துக்க… இல்லன்னா, உன்னக் கொன்ன கொலைகாரனா தான் ஜெயிலுக்குப் போவேன்.” எனக் கழுத்தை நெறித்தான்.
அத்தனைப் பேராலும் தடுக்க முடியாத ஒருவனை சத்யராஜ், “கருடா!” என்ற ஒரே வார்த்தையில் தடுத்தார்.
அவளை விட்ட கையோடு காவலர்கள் கையில் சிக்கிக் கொண்டவனை சரமாரியாக அடித்தார்கள். அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டவன் அசராமல் முறைத்துக் கொண்டு நிற்க, “உன்கிட்ட என்ன சாட்சி இருக்கு?” அழுத்தமாகக் கேட்டார் பொன்வண்ணன்.
“இவ கூடவே ஒரு பன்னாட மேனேஜர் சுத்துவானே, அவன்தான் என் தம்பி கைல இருந்து காசை வாங்கி இவ கையில கொடுத்து இருக்கான்.”
“இல்லவே இல்ல. இவன் சொல்ற மாதிரி என்கிட்ட ரவி எந்தப் பணத்தையும் கொடுக்கல. இவன் சொல்ற எதையும் நம்பாதீங்கப்பா.”
“ரவிக்கு போன் போட்டு இங்க வரச் சொல்லு!”
“அப்பா!” என்ற அதிர்வோடு அவள் பேச்சை நிறுத்த, “சொல்லு!” என்றார் அதிகாரமாக.
***
அரை மணி நேரமாக, அந்த அறை அமைதியில் கழிந்தது. அமைதியாக இருந்ததே தவிர கருடேந்திரன் கோபத்தில் சிறுகுறைவு இல்லை. அதேபோல் தான் அவன் முன்பாக நின்று கொண்டிருந்தவள் விழிகளிலும் ரௌத்திரம் அடங்கவில்லை. இருவரையும் கவனத்தில் கொண்டிருந்தார் பொன்வண்ணன். அவர் மனதில் கருடேந்திரன் பற்றிய ஞாபகங்கள். வியந்து பார்த்தவனை இப்படி ஒரு நிலையில் பார்ப்போம் என்பதைச் சிறிதும் அறியாது யோசனையில் இருந்தவரை ரவியின் குரல் கலைத்தது.
நடந்த அனைத்தையும் சுருக்கமாகக் கூறியவர், “இவன் சொல்ற மாதிரி இவன் தம்பிகிட்ட இருந்து காசை வாங்கி ரிது கிட்டக் கொடுத்தியா?” எனக் கேள்வி எழுப்ப, அவன் முதலாளியைப் பார்த்தான்.
“என்னை எதுக்காகப் பார்க்குறீங்க? அப்பா கேக்குறதுக்கு இல்லன்னு பதில் சொல்லுங்க.”
“நீ சும்மா இரு ரிது. எதுவா இருந்தாலும் நான் பேசுறேன்.”
“என்னப்பா நீங்க, அவன் சொல்ற மாதிரி என்னைக் குற்றவாளியாய் பார்க்கறீங்க.”
“அப்படி எதுவும் இல்ல ரிது. உன் மேல இவ்ளோ பெரிய குற்றச்சாட்டை வச்சிருக்கான். அதை இல்லன்னு ப்ரூப் பண்ணா தான், அவன் மேல கேஸ் கொடுத்து உள்ள தள்ள முடியும்.”
“என்னப்பா புதுக்கதை சொல்றீங்க? அவன் எவ்ளோ பெரிய பிராடு வேலையைப் பண்ணி இருக்கான், பொறுமையா விசாரிச்சுட்டு இருக்கீங்க. இந்த விஷயத்துல இருந்து நீங்க ஒதுங்கிக்கோங்க. என்ன பண்ணனுமோ அதை நான் பண்ணிக்கிறேன்.”
சற்றுக் குரலைக் கூட்டி, “உன் மேல தனிப்பட்ட முறையில குத்தம் சொன்னா பரவால்ல. அவன் சொல்றது நம்ம இன்ஸ்டிடியூட்ட. முப்பது வருஷமா கண்ணியமா நடத்திட்டு இருக்கேன். அது மேல ஒரு பழி வர நான் விடமாட்டேன். பல மாணவர்கள்கிட்ட சொல்லித் தரதுக்குக் காசு கூட வாங்காம அரசு உத்தியோகத்துல உட்கார வச்சிருக்கேன். அப்படிப்பட்ட இடத்து மேல வீண் பழி வரலாமா? உண்மைய நிரூபிக்கிற வரைக்கும் வாய மூடிட்டுச் சும்மா இரு.” என மகளைக் கண்டித்தவர் ரவியிடம் பார்வையைத் திருப்பினார்.
“அது… அது வந்து சார்…”
“எதுக்கும் பயப்படாம உண்மையை மட்டும் சொல்லு.”
“அந்தப் பணத்தை வாங்கி மேடம் கிட்டதான் சார் கொடுத்தேன்.” என்றதும் வானம் மொத்தமும் அவள் தலையில் விழுந்தது.
பெரும் அதிர்வுக்கு உள்ளான பொன்வண்ணன், “என் பொண்ணுகிட்ட தான் கொடுத்தியா?” என நம்பாமல் கேட்க,
“ஆமா சார். அந்தப் பணத்தை மேடம் கிட்டதான் கொடுத்தேன்.” என்றான் தெளிவாக.
“அடப்பாவி! எப்படா என்கிட்டக் காசு கொடுத்த? ஏன்டா இப்படிப் பொய் சொல்ற. இப்ப மட்டும் நீ உண்மையச் சொல்லல, சாவடிச்சிடுவேன்.”
தாவி அவன் சட்டைக் காலரைப் பிடித்தவள் பகிரங்கமாக மிரட்ட, “என்ன மேடம் நீங்க, இது நமக்குள்ள ரெகுலரா நடக்குறது தான. கேஸ் எதுவும் வராது. அப்படியே வந்தாலும் நான் பார்த்துக்கிறேன்னு நீங்க சொன்னதால தான மீடியேட்டரா இருந்து காசை வாங்கிக் கொடுத்தேன். இப்படி என்னைக் கழற்றி விட்டுட்டு மாட்டிவிடப் பார்க்குறீங்க.” என்றதும் ஆத்திரத்தில் புத்தியை இழந்தவள் கண்டமேனிக்கு அடிக்க ஆரம்பித்தாள்.
அங்கிருந்த அனைவரும் இப்பொழுது இவளைத் தடுக்க, “எப்படி நடிக்கிறா பாருங்க. இவ்ளோ நேரம் காசே வாங்கலன்னு சாதிச்சா… இப்போ உண்மை தெரிஞ்சதும், அவன் மேல பழியப் போட்டுத் தப்பிக்கப் பார்க்குறா…” என வார்த்தையால் கொந்தளித்தான்.
“நான் பணம் வாங்குனதை நீ பார்த்தியாடா. சும்மா உனக்குத்தான் வாய் இருக்குன்னு பேசாத. இவன் என்கிட்ட எந்தக் காசும் தரல. ஏன் இப்படிச் சொல்றான்னு சத்தியமா தெரியல.”
“என் பொண்ணு காசு வாங்கி இருக்க மாட்டான்னு நான் நம்புறேன். கடைசியா உனக்கு ஒரு சான்ஸ் தரேன், உண்மையைச் சொல்லிடு.”
“சத்தியமா மேடம் கிட்டதான் சார் கொடுத்தேன்.”
அடிக்கப் போகும் மகளைத் தடுத்து நிறுத்தியவர், “இவன்கிட்ட ஏதோ ஒரு பொய் இருக்கு. இத்தனைப் போலீஸ்காரங்க முன்னாடி இவ்ளோ தைரியமா சொல்றான்னா, இதுக்குப் பின்னாடி வேற யாரோ இருக்காங்க. இந்த விஷயத்தைப் பொறுமையா தான் ஹேண்டில் பண்ணனும்.” என்றிட,
“யார் இருந்தா எனக்கென்ன? நான் அடிக்கிற அடியில இவன் எப்படி உண்மையைச் சொல்றான்னு மட்டும் பாருங்க.” என்றாள்.
“சார், இவதான் பணம் வாங்கி எங்களை ஏமாத்திட்டான்னு கம்ப்ளைன்ட் கொடுத்தும் யாரும் எடுக்கல. உங்க முன்னாடியே இவகிட்ட தான் பணத்தைக் கொடுத்தேன்னு அந்த ஆள் சொல்றான். இப்பவாவது கம்ப்ளைன்டை எடுத்து இவ மேல கேஸ் ஃபைல் பண்ணுங்க. கூடவே என் தம்பியை அவ்ளோ சித்திரவதை பண்ணதுக்கும் சேர்த்துத் தண்டனை வாங்கிக் கொடுங்க.”
“கொஞ்சம் பொறுமையா இருப்பா… இந்த விஷயத்துல வேற யாரோ விளையாடி இருக்காங்க. அது யார் என்னன்னு கண்டுபிடிக்கலாம்.”
“சும்மா உங்க பொண்ணு மாதிரியே நடிக்காதீங்க சார். திரும்பவும் உங்களை நம்பி ஏமாற நான் ஒன்னும் என் தம்பி இல்ல. நீங்க எந்த உண்மையை வேணா கண்டுபிடிச்சு, என்ன வேணா பண்ணிக்கோங்க. ஆனா, இப்ப இவளை அரெஸ்ட் பண்ணியே ஆகணும்.”
“நீ சொல்லிட்டா என்னை அரெஸ்ட் பண்ணிடுவாங்களா? இவன் எப்படிப் பணம் கொடுத்தன்னு சொல்றானோ, அதே மாதிரி நான் பணம் வாங்கல. நீ என்ன கம்ப்ளைன்ட் கொடுத்தாலும் என்னால ஒத்துக்க முடியாது.”
இருவருக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு சிக்கித் தவித்தார்கள் அதிகாரிகள். அதைவிடப் பெரும் தலைவலி பொன்வண்ணனுக்கு. ரவியிடம் பலமுறை பல கோணத்தில் விசாரித்தும், கிளிப்பிள்ளை போல் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த விஷயத்தில் அவசரத்தைக் காட்ட விரும்பாதவர்,
“கேஸ் எதுவும் வேண்டாம் சார். இந்த விஷயத்தை நாங்களே பேசி சால்வ் பண்ணிக்கிறோம். நீங்க அந்தப் பையனை அனுப்பிடுங்க.” என்றார்.
“என்ன சார் விளையாடுறீங்களா? என்னமோ உத்தமர் மாதிரிக் கூப்பிட்டு வச்சு விசாரிச்சுட்டு, இப்போ உங்க பொண்ணு தப்புப் பண்ணான்னு தெரிஞ்சதும் நழுவப் பார்க்குறீங்க. என் மேல எத்தனை கேஸ் வந்தாலும் பரவால்ல. உங்க பொண்ணு உள்ள போயே ஆகணும்.”
“சார், இவன் மேல கொடுத்த கம்ப்ளைன்டோட சேர்த்து இந்த ரவி மேலயும் கம்ப்ளைன்ட் கொடுக்கிறேன். ரெண்டு பேரும் கூட்டுக் களவாணிங்களா இருக்க நிறைய வாய்ப்பு இருக்கு. என்னை மாதிரிப் பணக்காரங்களை டார்கெட் பண்ணிப் பணம் பறிக்குறதுக்கான வேலை இது. ரெண்டு பேரையும் சும்மா விடாதீங்க சார்.” என்ற மகளிடம் எவ்வளவோ பேசிப் பார்த்து விட்டார்.
இதில் நீங்கள் தலையிடாதீர்கள் என்று முழு முடக்குப் போட்டவள், அதிகாரத்தோடு அதிகாரிகளுக்குக் கட்டளையிட, கருடேந்திரனைச் சிறை வைத்தார்கள்.
****
எல்லாம் நடந்து முடிந்து நான்கு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. கருடன் அதிகாரிகள் பாதுகாப்பில் இருக்கிறான். இத்தனைக்கும் காரணமான ரவி மீது வழக்குப் பதியப்பட்டு இருக்கிறது. தந்தையோடு காரில் பயணித்துக் கொண்டிருந்தவளுக்கு, இன்னும் ஆத்திரம் குறையவில்லை. வீட்டில் இருந்தால் தான் இதே போல் இருக்கிறாள் என்று வெளியில் அழைத்து வந்தும் பலன் இல்லாமல் போனது.
“நீ கொஞ்சம் ரிலாக்ஸா இருந்தாதான் இதைப்பத்திப் பேச முடியும்.”
“என்னால முடியலப்பா. யாருன்னே தெரியாத ஒருத்தன் ஒரே ஒரு நாள்ல என் லைஃப மாத்திட்டானே.”
“அதே எண்ணம் அவனுக்கும் இருக்கலாம்ல.”
“நீங்க என்னப்பா அவனுக்கு சப்போர்ட் பண்றீங்க? நான் உங்க பொண்ணா இல்ல, அவன் உங்க பொண்ணா? என் கழுத்துல ஒருத்தன் தாலி கட்டிட்டான்னு சொன்னப்போ, எவ்ளோ கோவப்பட்டிங்க. இப்ப என்னடான்னா அவனுக்கு வக்காலத்து வாங்குறீங்க.”
“உன்கிட்ட நான் நிறையப் பேசணும் ரிது. அதையெல்லாம் கேட்க நீ நார்மலா இருக்கனும். ரிலாக்ஸ் ஆகிட்டுச் சொல்லு, பேசிக்கலாம்.”
பொன்வண்ணனின் செயல் இன்னும் எரிச்சலைக் கொடுத்தது அவளுக்கு. அவரிடம் பேச விரும்பாது மௌனமாகி விட்டாள். அதிகாரிகளிடம் பேசிப் பார்த்துத் தோல்வியோடு இல்லம் திரும்பினார் சத்யராஜ். திரும்பி வந்த கணவரைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்த சரளா மகனைப் பற்றிக் கேட்க, நடந்த அனைத்தையும் தெரிவித்தார்.
“கருடாவா இப்படிப் பண்ணது!” என்ற பெரும் அதிர்வு அவரிடம்.
“என்னாலயும் கொஞ்சம் கூட நம்ப முடியல. என் பையன் இல்லன்னு சொல்லிடுவான்னு மலை மாதிரி நம்பிட்டு இருந்தேன். இப்ப எப்படி அவனை வெளிய எடுக்கப் போறன்னு தெரியல. ஒருத்தன் என்னடான்னா, நமக்குன்னு இருந்த இந்த வீட்ட அடமானம் வச்சு ஒன்னும் இல்லாம படுத்து இருக்கான். அவன் ஸ்டேஷன்ல உட்கார்ந்து இருக்கான். நல்லா இருந்த குடும்பத்துல யாரு கண்ணு பட்டுச்சோ.”
“நீங்க வருத்தப்படாதிங்கப்பா. எப்படியாவது அண்ணனை வெளிய எடுத்துடலாம். அண்ணா மேல கேஸ் கொடுத்தவங்க கிட்டப் பேசிப் பார்க்கலாம்.”
“என்ன பேசுனாலும் வேலைக்கு ஆகாது நதியா. அந்தப் பொண்ணு கிட்டதான் காசு கொடுத்தன்னு சொல்லியும் யாரும் காதுல வாங்கிக்கல. சொன்னவன் மேலயே கேஸ் போட்டு உள்ள தள்ளிட்டாங்க. பணம் இருக்குறவங்க பக்கம்தான் அதிகாரமும் இருக்கும்.”
“பணத்தையும் ஏமாத்திட்டு, என் புள்ளையை உள்ளயும் வச்சுட்டாளே. எந்தக் கடவுளுக்கும் கண்ணு இல்ல. என் குடும்பம் இப்படிச் சிதறிப் போயிருக்கு. அதைப் பார்த்தும் சும்மா இருக்கியே.”
தாய் தந்தையர் படும் அவஸ்தையைப் பார்க்க மட்டுமே முடிந்தது நதியாவால். கடைசியாக இவ்வீட்டில் பிறந்தவள், கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள். வசதிக்குக் குறைவு என்றாலும், வசந்தத்திற்குக் குறைவு இல்லாத வீடு. சொந்த வீட்டைப் பாலமாக வைத்துக்கொண்டு, மூன்று பிள்ளைகளையும் வளர்த்து விட்டார் சத்யராஜ். மூத்த மகன் கருடேந்திரன் கல்லூரி முடித்துவிட்டு வேலைக்குச் செல்லும் சமயம், இதயப் பிரச்சினையால் பெரும் பண நெருக்கடிக்கு ஆளாகியது இந்த வீடு.
அன்னையின் உயிர் மட்டுமே முக்கியம் எனக் கருதியவன், பெருந்தொகையைக் கடன் வாங்கித் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தான். அவர் தேறி வீட்டுக்கு வருவதற்குள், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வேலைக்குச் செல்ல முடியாத நிலைக்கு வந்தார் சத்யராஜ். குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டிய முழுப் பொறுப்பு மூத்த மகன் தலையில் விழுந்தது.
ஒரு தனியார் துறையில், டெலிகாலிங் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அந்த வருமானம் குடும்பம் நடத்தவே போதுமானதாக இருக்க மற்றவைகளுக்குப் போதவில்லை. முக்கியமாக மருத்துவச் செலவிற்கு வாங்கிய கடன் கழுத்தை நெரித்தது. வேலைக்குச் சென்று வந்த பின் மீதமிருக்கும் நேரத்தில் ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தான். அதில் வரும் வருமானம், வேலைக்குச் சென்று வாங்கும் வருமானத்தை விட அதிக அளவு இருப்பதால், வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக இதில் ஈடுபட ஆரம்பித்தான்.
உழைப்பவனுக்கு உழைப்பு மட்டுமே மூலதனம். முன்புபோல் ஓரிடத்தில் நின்று கொண்டு, வரும் சவாரியைப் பேசும் சூழ்நிலை இன்றைய காலகட்டத்தில் இல்லை. நவீனத் தொழில் நுட்பத்தில் ஒரு கைப்பேசி போதும் சம்பாதிக்க. ஒன்றுக்கு மூன்று ஆப்களைத் தரவிறக்கம் செய்தவன், காலை ஐந்து மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினால், மதியம் மூன்று மணிக்கு வருவான். சாப்பிட்ட கையோடு கிளம்பியவன் இல்லம் திரும்ப நள்ளிரவு ஆகும்.
அப்படியெல்லாம் உழைத்துத்தான் இந்த வீட்டைக் கவனித்துக் கொண்டிருக்கிறான். சின்னவன் மூர்த்தி அரசு பதவி மீது ஆசை கொள்ள, தம்பியாவது நல்ல இடத்தில் இருக்கட்டும் என்ற நல்லெண்ணத்தில் ரிதுசதிகாவின் பயிற்சியகத்தில் சேர்த்து விட்டான். அங்குக் காட்டிய ஆசை வார்த்தையில் மயங்கி, அண்ணனுக்குத் தெரியாமல் தந்தையைச் சமாளித்து வீட்டை அடமானம் வைத்தான்.
எப்படியும் அரசு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இதில் அவன் இறங்க, பணத்தை வாங்கிக் கொண்டு ஆறு மாதம் ஆகியும் இழுத்து அடித்தார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் அடமானத்திற்கான வட்டியைக் கட்டப் பணம் புரட்ட முடியாமல் அண்ணனிடம் கூறிவிட்டான். உடன் பிறந்தவன் என்றும் பாராமல் அடித்து உதைத்து, வீட்டைக் கலவரம் செய்தவன் ரிதுவைத் தேடிச் சென்றான்.
ஒரு வாரம் அலைந்தும் இவளைப் பார்க்க முடியவில்லை. அதன்பின், காவல் நிலையத்திற்கும் அலைந்து விட்டான். அடிதடிச் சண்டை நடத்தி ஒருவழியாக அவளைப் பார்த்து விட்டான். சொல்ல வருவதைக் காதில் கூட வாங்காமல் விரட்டி அடித்தாள். எங்கும் கருடனுக்கான பதில் கிடைக்கவில்லை. இதற்கு நடுவில் மூர்த்திக்கு நடக்கக் கூடாத விபரீதம் ஒன்று நடந்து விட்டது. அந்த ஆத்திரத்தில் தான் இரண்டு நாள்களாகக் காத்திருந்து அவளுக்கு இப்படி ஒரு சதியைச் செய்து விட்டான்.
***
“வணக்கம்!”
“நீங்க எதுக்கு இங்க வந்தீங்க?”
“உங்க கோபம் புரியுது சார். நடந்ததுக்கு என் பொண்ணு காரணம் இல்ல. அதைப் பத்தி விளக்கமா பேசத்தான் வந்திருக்கேன்.”
“யாருங்க இவரு?”
“என் பேரு பொன்வண்ணன். உங்க பையன் ஸ்டேஷன்ல இருக்கக் காரணமான பொண்ணோட அப்பா…” என்றதும் சரளா கோபம் கொள்ள, “கொஞ்சம் நேரம் கொடுத்தீங்கன்னா, உங்க பையனை வெளிய எடுக்குறதுக்கான வழியைச் சொல்லுவேன்.” என்றவரை நம்பி உள்ளே அழைத்தார்கள்.
வந்து அமர்ந்தவருக்கு நதியா நீரை எடுத்து வந்து கொடுக்க, அவளைக் கண்டு சிநேகமாகப் புன்னகைத்தவர், “என்னை வீட்டுக்குள்ளயே விட மாட்டீங்கன்னு நினைச்சேன். பரவால்ல தண்ணிலாம் கொடுக்குறீங்க.” என்றார்.
“அண்ணா வெளிய வரதுக்கான வழியச் சொல்றன்னு சொன்ன உங்களை, அப்படியே எப்படி சார் அனுப்ப முடியும்?”
“அண்ணன் மேல ரொம்பப் பாசமோ?”
“எங்களுக்கு அண்ணன் தான் எல்லாமே!”
“சுத்தி வளைச்சுப் பேச விரும்பல. உங்க சின்னப் பையன் காசைக் கொடுத்து ஏமாந்து இருக்கான். அதுக்கு எந்த வகையிலும் என் பொண்ணு காரணம் இல்லை. உங்களுக்கே தெரியும், நாங்க எவ்ளோ வசதியானவங்கன்னு. பத்து லட்ச ரூபா எங்களுக்குப் பெரிய விஷயம் இல்லை. அப்படி இருக்க என் பொண்ணு எப்படி வாங்கி இருப்பான்னு யோசிங்க. இதுல அந்த ரவி ஏதோ திருட்டுத்தனம் பண்ணி இருக்கான். அதுக்கு என் பொண்ணோட பேரை யூஸ் பண்ணிக்கிட்டான். அது தெரியாம, என் பொண்ணு மேல கோபப்பட்ட உங்க பையன் அவசரப்பட்டுத் தாலியக் கட்டிட்டான்.”
“என் பையன் பண்ண தப்புக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்குறேன் சார். இனிமே அவன் உங்க பக்கமே வரமாட்டான். எங்களுக்கு அந்தக் காசு கூட வேண்டாம். எங்க மகனை எங்ககிட்ட ஒப்படைச்சிடுங்க போதும்.”
“உங்க காசும் வரும், உங்க பையனும் வீட்டுக்கு வருவான்.” என்றவரைத் தம்பதிகள் ஆனந்தத்தோடு பார்க்க, “அதுக்கு நீங்க ஒரு சின்ன வேலை பார்க்கணுமே.” என இழுத்தார்.
“எதுவா இருந்தாலும் சொல்லுங்க சார். எங்க பையனுக்காக நாங்க பண்றோம்.”
“என் பொண்ணுக்கும், உங்க பையனுக்கும் கல்யாணம் பண்ணனும்.”
பொன்வண்ணன் வார்த்தையைக் கேட்ட அம்மூவருக்கும் வாயடைத்தது. உயிருக்குள் ஒளிந்து கொண்டிருந்த அவர்கள் உணர்வுகள், அப்படியே ஸ்தம்பித்து நின்றது போல் உணர்ந்தவர்கள் திகைப்போடு பார்த்துக் கொண்டிருக்க, “உங்க அதிர்ச்சி புரியுது. இருந்தாலும், எந்தத் தப்பும் பண்ணாத என் பொண்ணை ஊர் பார்க்கத் தாலி கட்டி அசிங்கப்படுத்திட்டான். இதுக்கு மேல என் பொண்ண யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க. அதனால உங்க பையனுக்கே கல்யாணம் பண்ணி வச்சிடுங்க.” என்றார்.
“அது முடியாது சார். நீங்க என்ன சொன்னாலும், உங்க பொண்ணு தப்புப் பண்ணலன்னு எங்களால நம்ப முடியல. உண்மை எதுன்னு சட்டப்பூர்வமா நிரூபிங்க. அதை விட்டுட்டு…” என்ற சத்யராஜின் கைப்பிடித்தார் சரளா.
“அதை நிரூபிக்கிற வரைக்கும், உங்க பையனால வெளிய வர முடியாது. இந்தப் பிரச்சினை ரொம்பப் பெருசு. உண்மையைக் கண்டுபிடிக்க எத்தனை வருஷம் ஆகும்னு தெரியல. அதுவரைக்கும், என் பொண்ண அப்படியே வச்சிருக்க முடியாது. உங்க பையனும் ஜெயில்ல இருக்க முடியாது. இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு கல்யாணம் தான்… நல்லா யோசிச்சுப் பார்த்தீங்கன்னா உங்களுக்கே புரியும். அவசரப்படாம நிதானமா யோசிச்சுச் சொல்லுங்க.” என அவர் கிளம்ப,
“எங்களுக்குச் சம்மதம் சார்.” என்றார் சரளா.
சத்யராஜ் மனைவியின் வார்த்தையைக் கேட்டு மறுக்க, புன்னகையோடு அமர்ந்தார் பொன்வண்ணன். தன் கடைசி மகளை உள்ளே செல்ல உத்தரவிட்டவர், “ஒரு பொண்ணப் பெத்தவளா, இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்கிறேன். ஆயிரம் காரணம் சொன்னாலும் என் பையன் பண்ணது தப்பு. எங்களால ஒரு பொண்ணோட வாழ்க்கை கெட்டுப்போகக் கூடாது. நீங்க சொன்ன மாதிரி, உங்க பொண்ணு காசு வாங்காம இருந்தா ரொம்ப சந்தோஷம். சீக்கிரம் உண்மையைக் கண்டுபிடிச்சு இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கொடுங்க.” என்றவர் வார்த்தையில் உருகினார்.
“இந்த ஒரு வார்த்தை போதும். இனி நடக்க வேண்டிய எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். ஈவினிங் உங்க பையன் வெளிய வந்துடுவான். நல்ல நாள் பார்த்து ரெண்டு பேத்துக்கும் கல்யாணத்தை முடிச்சிடலாம். அதுக்கப்புறம் இந்தக் காசுப் பிரச்சினையைப் பார்த்துக்கலாம்.” என்றவர் இரு கைகளை வணங்கி,
“என் பொண்ணு பண்ணலனாலும், அவளால உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்துக்கு மனசார மன்னிப்புக் கேட்டுக்குறேன். அவ கோபக்காரி தான். ஆனா, ரொம்ப நல்லவள். இந்த வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் நீங்களே அவ மேல எந்தத் தப்பும் இல்லன்னு புரிஞ்சிப்பீங்க.” என்று விட்டு வெளியேறியவருக்குப் பெருத்த பயம் மகளை நினைத்து.
அவருக்கு நிச்சயம் தெரியும், ஒரு சதவீதம் கூட இதற்கு மகள் சம்மதிக்க மாட்டாள் என்று. என்றோ ஒரு காலத்தில், இவனைப்போல் மாப்பிள்ளை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று மகளிடம் சொன்னவர், அதற்கான வாய்ப்புக் கிடைத்ததும் பயன்படுத்திக் கொள்கிறார். இதில் இருவரும் பாதிக்கப்படப் போவது தெரியாமல்.
சிறைக்குள் இருக்கும் கருடன் தாலி கட்டிச் சிறைப் பிடிப்பானா? தாலியைச் சிறையாக மாற்றி அவனை அடிமையாக்குவாளா? என்பதைத்தான் இனிவரும் காலங்களில் இவர் பார்க்கப் போகிறார்.
2.சிறையிடாதே கருடா
written by Competition writers
கருடா 2
தாழ் போடாமல் சாற்றி இருந்த கதவை நாகரிகம் கருதிக் கூடத் தட்டாமல், வெடுக்கென்று உள்ளே நுழைந்த காவல் அதிகாரிகள் வீடு முழுவதும் தேட ஆரம்பித்தார்கள். ஐந்து நிமிடத்தில் முழு வீட்டையும் சுற்றி வந்துவிடலாம். அவ்வளவு சின்ன வீட்டைப் பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சுற்றி வளைத்தனர்.
“என்ன சார் வேணும், யாரைத் தேடுறீங்க?”
தன் வீட்டிற்குள் நுழைந்த காவலர்களைக் கண்டு பதறிய சரளா இதயம் தடதடக்க விசாரிக்க, “உன் பையன் எங்க?” கேட்டார்கள் அதிகாரமாக.
“சின்னவன் ஹாஸ்பிடல்ல இருக்கான். பெரியவன் ஆட்டோ ஓட்டப் போயிருக்கான்.”
“ஏய்! பொய் சொல்லாம உண்மையச் சொல்லு. உன் பெரிய பையன் இப்ப எங்க?”
“சத்தியமா என் பையன் ஆட்டோ ஓட்டத்தான் சார் போயிருக்கான். அவனை எதுக்காகத் தேடுறீங்க?”
“எதுக்காகவா? கஞ்சா கேஸை அவன் மேல போட்டு ஆயுசுக்கும் உள்ள தள்ள…”
“ஐயோ! என்ன சார் சொல்றீங்க? அவன் அந்த மாதிரிப் பையன் இல்ல சார். இப்பத்தான், என் சின்னப்புள்ள உயிர் பிழைச்சு ஹாஸ்பிடல்ல படுத்திருக்கான். அதுக்குள்ள இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுறிங்களே.”
“உன் ஒப்பாரியக் கேட்க எங்களுக்கு நேரமில்லை. ஒழுங்கு மரியாதையா உன் பையன் எங்கன்னு சொல்லிடு.” என அவர்கள் விசாரித்துக் கொண்டிருக்கும் பொழுதே சரளாவின் கணவர் சத்யராஜ் உள்ளே நுழைந்தார்.
“என்னங்க! இவங்க என்னென்னமோ சொல்றாங்க, என்னன்னு கேளுங்க. நம்ம மகனைக் கஞ்சா கேஸ்ல பிடிச்சிட்டுப் போக வந்திருக்காங்களாம். அவன் அந்த மாதிரிப் பையன் இல்லைன்னு நீங்களாவது சொல்லுங்க.”
உள்ளே நுழைந்த சத்யராஜுக்கும் பெரும் பதற்றம் தான் என்றாலும், பொறுமையாக அவர்களிடம் காரணத்தைக் கேட்க, “உனக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. உன் மகன் எங்க இருக்கான்னு சொல்லிட்டா நல்லது.” என்றார்கள்.
“ஒரு நிமிஷம் இருங்க சார். நான் அவனுக்கு போன் பண்ணிட்டு வரேன்.”
“நாங்க வந்த விஷயத்தைச் சொல்லித் தப்பிக்க வைக்கலாம்னு பார்க்கறியா. அவனை எப்படி ஸ்டேஷனுக்கு வர வைக்கனும்னு எங்களுக்குத் தெரியும்.” என்றவர்கள் சத்யராஜைப் பிடித்துக் கொண்டு சென்றார்கள்.
கணவனை விட்டுவிடச் சொல்லிக் கதறியப்படி, சரளா பின்னால் கெஞ்சிக் கொண்டு செல்ல, சிறிதும் மனம் இறங்காமல் அங்கிருந்து புறப்பட்டார்கள் அதிகாரிகள். அக்கம் பக்கத்தில் இருக்கும் அனைவரும், தங்களை வேடிக்கை பார்ப்பதில் கூனிக்குறுகிப் போனவர் உடனே தன் மகனுக்கு அழைப்பு விடுத்தார். பத்து முறைக்கு மேல் அழைத்தும் எடுக்காத மகனை எண்ணிக் கவலையில் ஆழ்ந்தவர் கணவனைத் தேடி காவல் நிலையத்திற்குச் சென்றார்.
பொறுமையாக வீட்டிற்கு வந்தவன் காதில் நடந்த சம்பவங்கள் விழ, அவனும் அடித்துப் பிடித்து ஓடினான். அவர்கள் ஏரியா காவல் நிலையத்தில் ஏற்கெனவே சரளா விசாரித்துக் கொண்டிருந்தார். அங்கு இப்படியான யாரும் வரவில்லை என்ற செய்தி இடியாக விழ,
“போலீஸ்காரங்க வந்துதான் சார், என் புருஷனைக் கூட்டிட்டுப் போனாங்க. கொஞ்சம் என்ன ஏதுன்னு விசாரிங்க சார். என் மகனை வேற, யாரோ அடிச்சுப் போட்டு ஹாஸ்பிடல்ல இருக்கான். இவரையும் யாருன்னே தெரியாதவங்க கூட்டிட்டுப் போயிட்டாங்க. எங்களுக்கு ஒரு நல்ல வழியைக் காட்டுங்க சார்.” என அங்கிருந்த அனைவரிடமும் கெஞ்சிக் கொண்டிருக்கும் நேரம் சரியாக வந்து சேர்ந்தான் கருடேந்திரன்.
“கருடா…” என ஓடிவரும் தாயைச் சேர்த்தணைத்துக் கொண்டவன் நடந்ததைக் கேட்டறிந்தான். உடனே தந்தை சத்யராஜைத் தொடர்பு கொள்ள, “கமிஷனர் ஆபீஸ்க்கு வாடா” என்றதோடு அந்த அழைப்புத் துண்டிக்கப்பட்டது.
எதனால்? என்பதைக் கண்டு கொண்டவன், தன்னுடன் வருகிறேன் என்ற அன்னையைச் சமாதானம் செய்து வீட்டில் விட்டுவிட்டுப் புறப்பட்டான். மகன் அழைப்பைப் பார்த்ததும்,
“என் பையன் ரொம்ப நல்லவன் சார். அவனை எதுவும் பண்ணிடாதீங்க.” எனக் கோரிக்கை வைத்தார்.
“நல்லவனா? நல்லவன் தான் ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்டிட்டுப் போவானா?” என்ற கரகரத்த குரலில் சத்யராஜ் திரும்ப, இறுகிப்போன முகத்தோடு நின்றிருந்தார் பொன்வண்ணன்.
“என்ன சார் சொல்றீங்க?”
“என் பொண்ணு கழுத்துல வலுக்கட்டாயமா தாலி கட்டிட்டுப் போயிருக்கான். உன் பையனைச் சும்மா விட மாட்டேன். வாழ்க்கை முழுக்க ஜெயில்ல தான் இருக்கப் போறான். இப்படி ஒரு பிள்ளையைப் பெத்ததுக்காக நீயும் இந்தத் தண்டனையை அனுபவி.”
“நீங்க சொல்ற மாதிரி என் பையன் ஒரு நாளும் பண்ணி இருக்க மாட்டான் சார். அவன் ரொம்ப நேர்மையானவன். அவனுக்கு ஒரு தங்கச்சியும் இருக்கா. அதனால நிச்சயம் பண்ணிருக்க மாட்டான்.”
“கூடப்பிறந்தவள் இருக்கும்போதே இப்படி ஒரு காரியத்தைப் பண்றான்னா, அவன் எப்படிப்பட்ட கேடுகெட்டவனா இருப்பான்.” என்ற பொன்வண்ணன் அங்கிருந்த அதிகாரிகளிடம்,
“அவன் வந்ததும் என்ன, ஏதுன்னு கேட்காம அடிச்சு நொறுக்குங்க சார். பல பேர் பார்க்க என் பொண்ணு கழுத்துல தாலி கட்டி அசிங்கப்படுத்தி இருக்கான். எங்களுக்கு இருக்க ஸ்டேட்டஸ்க்கு எப்படி வெளிய தலை காட்ட முடியும். இப்பவே ஆளாளுக்கு போன் பண்ணி, என்ன பொன்வண்ணன் இப்படி ஆயிடுச்சான்னு குத்தலா கேக்குறாங்க. இதுக்கெல்லாம் காரணமான அவன் நல்லாவே இருக்கக் கூடாது.” எனக் கட்டளையிட்டார்.
“நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க சார். இனி அவனை ஆண்டவனால கூடக் காப்பாத்த முடியாது.”
“வந்துட்டானா?” என்ற அதிகாரக் குரலுக்கு சத்யராஜ் திரும்ப, விரைப்பான முகத்தோடு உள்ளே நுழைந்தாள் ரிதுசதிகா.
“இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவான் மேடம்.”
“கையோட இழுத்துட்டு வர்றதை விட்டுட்டு விளையாடிட்டு இருக்கீங்களா? இந்த விஷயத்துல நான்தான் ஜெயிக்கணும். தெரியாமல் தாலி கட்டிட்டேன், என்னை விட்டுடுன்னு என் கால்ல விழுந்து கதறனும். அப்படி நடக்கல… அவனோட சேர்த்து உங்களையும் கொன்னுடுவேன்.”
“ரிது…”
“பின்ன என்னப்பா? அவனைக் கூட்டிட்டு வராம அவன் அப்பாவக் கூட்டிட்டு வந்திருக்காங்க.”
“போலீஸ்காரங்களுக்கு மரியாதை கொடு. அவங்க டூட்டியை அவங்க கரெக்டா பார்ப்பாங்க.”
“என்னத்தப் பார்ப்பாங்க?”
“இந்த விஷயத்தை இவ்ளோ தூரம் எதுக்குப் போக விட்ட? ஒருத்தன் என்னை ஃபாலோ பண்ணிட்டு இருக்கான்னு சொல்ல வேண்டியது தான.”
“எனக்கு என்ன தெரியும், அந்தப் பரதேசி இப்படிப் பண்ணுவான்னு. என்னென்னமோ வந்து உளறிட்டு இருந்தான். அது என்னன்னு கூட எனக்கு சரியாப் புரியல. அதுக்குள்ள இப்படி ஒரு காரியத்தைப் பண்ணிட்டான்.”
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது உள்ளே நுழைந்த கருடேந்திரன் பார்வையில் முதலில் விழுந்தது இவள்தான். பார்வையால் அவன் சுட்டெரிக்க, இவள் வெட்டிக் கொண்டிருந்தாள். இருவரின் பார்வையும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் இருக்க,
‘இவனா!’ எனத் திகைத்தார் பொன்வண்ணன்.
“வாடா வா…” என அன்பாக அழைத்த காவல் அதிகாரிகள், “இப்படி வந்து நில்லுடா” என்றிட, அவர்களைச் சிறிதும் கண்டு கொள்ளாது தந்தையிடம் சென்றவன்,
“உங்களை ஏதாச்சும் பண்ணாங்களாப்பா?” என அவர் நலத்தை விசாரித்தான்.
“அதெல்லாம் இல்லப்பா. நீதான் இந்தப் பொண்ணு கழுத்துல தாலி கட்டிட்டன்னு பேசிக்கிறாங்க. என் புள்ள அப்படி எதுவும் பண்ணிருக்க மாட்டான்னு எவ்ளோ சொல்லியும் நம்பல.”
“இவங்கெல்லாம் பணத்துக்கு வேலை பார்க்குறவங்க. இவங்ககிட்ட நியாயத்தை எதிர்பார்க்கக் கூடாதுப்பா.”
“என்னடா, போலீஸ்காரங்களையே நக்கல் பண்றியா?”
“ஆமா சார். நீங்க பணத்துக்காகத் தான இவ்ளோ விசுவாசமா வேலை பார்க்குறிங்க. நேர்மைக்கு வேலை பார்க்குறவங்களா இருந்தா, ஒரு மாசமா போலீஸ் ஸ்டேஷனுக்கு நடையா நடந்துட்டு இருக்க என் கேஸை எடுத்து இவளை உள்ள தள்ளி இருப்பீங்க.” என ரிதுவைக் கை காட்டினான்.
“யூ ராஸ்கல்! இன்னும் உன் கொழுப்பு அடங்கலையா? இப்பப் பாருடா, உன்னை என்ன பண்றன்னு.”
“தப்புப் பண்ணாதவன் கொழுப்பு அடங்காது. உன்னால இந்தப் போலீஸ்காரங்களைத் தான் விலை பேச முடியும், உண்மையை இல்லை.”
“என்ன சார், இவனப் பேச விட்டு வேடிக்கை பார்க்குறீங்க. நாய அடிக்கிற மாதிரி அடிச்சு உள்ள தள்ளுங்க.”
ரிதுசதிகா கட்டளையை ஏற்ற அதிகாரிகள், அவன் சட்டைக் காலரைப் பிடித்துச் சுவரில் தள்ளி விட்டு விசாரிக்க, “ஆமாம். நான்தான் தாலி கட்டினேன்.” என சத்யராஜை அதிரவிட்டான்.
“எவ்ளோ திமிரா சொல்றான் பாரு.” எனப் பல்லைக் கடித்தவள், “என்னை ஃபாலோ பண்ணி வந்து என் பேக்ல இருந்த இருபது லட்சத்தையும் திருடிட்டுப் போயிட்டான் சார். அதையும் என்ன ஏதுன்னு விசாரிங்க.” என ஏற்றி விட்டாள்.
“உன் வாயில உண்மையே வராதாடி களவாணி. இந்த மாதிரிப் பாவத்துக்கு மேலப் பாவம் பண்ணிக்கிட்டே போனா புழு பூத்து தான் சாவ…”
பேசிக் கொண்டிருந்த கருடேந்திரன் கன்னத்தில் ஓங்கி அடித்த அங்கிருந்த அதிகாரி, “எங்க முன்னாடியே இவ்ளோ திமிராப் பேசுற. வாய மூடிட்டுக் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லணும். இல்லன்னா உன்ன மட்டும் இல்ல, உன் அப்பாவையும் சேர்த்து உள்ள தள்ளிடுவேன்.” என்ற பின்னும் அவள் மீதான பார்வையை மாற்றவில்லை கருடேந்திரன்.
“எங்கடா அந்த இருபது லட்சம்?”
“நான் எடுக்கல சார்…” என்றவனை நம்ப மறுத்த அதிகாரிகள் அவர்கள் பாணியில் விசாரிக்க ஆரம்பித்தார்கள்.
அடி வாங்கும் மகனைக் கண்ட சத்யராஜ் கதற, ஆனந்தத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் ரிது. வாயிலிருந்து வழியும் ரத்தத்தைத் துடைக்க கூட நேரம் கொடுக்காதவர்கள், திருடிய பணத்தைக் கொடுக்கும்படி எச்சரிக்க, “முதல்ல இவ என்ன பண்ணான்னு கேளுங்க சார்” என்றான் வலிகளுக்கு நடுவில்.
“அவ இவன்னு பேசுவியா?” என நான்கு சுவர் அதிரும்படி அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்த அதிகாரி, “நீங்க கம்ப்ளைன்ட எழுதிக் கொடுங்க மேடம். ரெண்டு கேஸ் இல்லாம, ஆள் கிடைக்காம இருக்க மொத்தக் கேஸையும் இவன் மேல போட்டு உள்ள தள்ளுறேன்.” என்றார்.
புன்னகை முகமாகச் சரி என்று தலையசைத்தவளிடம் சத்யராஜ் கெஞ்சிக் கொண்டிருக்க, “அவகிட்டக் கெஞ்சாதிங்கப்பா. அவ அந்த அளவுக்கு வொர்த் இல்லை. நம்மளை மாதிரி ஆளுங்ககிட்ட பணத்தை வாங்கி வசதியா வாழற பிச்சைக்காரி.” என்றதும் வெகுண்டெழுந்தவள் அவனை அடிக்கப் பாய்ந்தாள்.
தன் மகனை அடிக்கப் போகும் அதிர்ச்சியில், சத்யராஜ் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு நிற்க, காவலர்கள் கையைப் பிடித்திருப்பதால் விடுவிக்கப் போராடிக் கொண்டிருந்தான். எல்லாம் அவள் வசம் இருப்பதால், ஓங்கிய கையைக் கன்னத்தோடு “பளார்!” என்று சேர்க்கும் நேரம் யாரோ தடுத்தார்கள். ரிதுசதிகா யார் என்று பார்க்க, அவள் தந்தை பொன்வண்ணன்.
“அப்பா…” என்ற மகளின் கைகளை விட்டவர், “அவனை விடுங்க சார்.” என அனைவரையும் திகைக்க வைத்தார்.
“அப்பா…”
“ஒரு நிமிஷம் இரு.” என முன்னே நகர்ந்து கருடேந்திரன் முன்னால் நின்றார்.
1. சிறையிடாதே கருடா
written by Competition writers