Tag:
#besttamilnovels #romantic novels
விடியல் – 19
எப்போதும் பெண்கள் இயல்பாக இருப்பது தங்களுடைய பிறந்த வீட்டில் தானே.
அப்படித்தான் நந்தினியும் தான் எப்போதும் போல அணியும் குட்டை கவுன் ஒன்றை அணிந்திருந்தாள்.
அது சற்று முழங்காலுக்கு மேலே வரை மட்டுமே இருந்தது.
அவள் சோபாவில் அமர்ந்திருந்ததால் அந்த கவுன் தாறுமாறாக தொடைவரை மேலே ஏறி இருக்க அதைப் பற்றி சிறிதும் கவலையில்லாமல் கையில் இருந்த குளிர்களியை ருசித்தவாறு தொலைக்காட்சியில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
அவளை அப்படிப் பார்த்தவனுக்கோ பெரும் அதிர்ச்சி.
தாறுமாறாக அலையும் தன் பார்வையை இழுத்து அடக்கியவன் வாசலில் அப்படியே நின்று விட்டான்.
“உள்ள வாங்க மாப்ள.. ஏன் அப்படியே நினைட்டீங்க..” என்றவாறு ராமகிருஷ்ணன் உள்ளே அழைக்க தன் தந்தையின் குரலைக் கேட்டு மகிழ்ச்சியோடு “அப்பா வந்துட்டீங்களா…?” என்ற சிறு கூச்சலுடன் திரும்பியவள் அங்கே நின்ற தன் கணவனைக் கண்டதும் உறைந்து போனாள்.
மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவளுடைய முகமோ நொடியில் இஞ்சி தின்ற குரங்கைப் போல மாறிப் போனது.
அவனையும் தன்னையும் குனிந்து பார்த்தவள் சட்டென தன்னுடைய கவுனை இழுத்து விட்டாள்.
என்னதான் இழுத்து விட்டாலும் அது அவளுடைய தொடையை மட்டுமே மறைக்கப் போதுமாக இருந்தது.
முழங்கால்களும் கெண்டைக்கால்களும் அப்படியே தெரிய அவளுக்கோ கூச்சமும் சங்கடமும் ஒருமித்தது.
‘ஐயோ இந்த போலீஸ்காரன் எதுக்கு இங்க வந்திருக்கான்னு தெரியலையே…’ மனதிற்குள் புலம்ப ஆரம்பித்தாள் அவள்.
“பாப்பா என்ன அப்படியே ஷாக் ஆகி நிக்கிற..? மாப்பிள்ளைக்கு இன்னைக்கு ரொம்ப வேலை ஜாஸ்தி… டயர்டாகி வந்திருக்காரு.. உன்னோட ரூமுக்கு கூட்டிட்டு போ ஃபிரெஷ் ஆகட்டும்…” என அவர் கூற,
‘அடப்பாவி டாடி…’ என மனதிற்குள் அலறி வைத்தாள் நந்தினி.
இப்போது அவளுடைய பார்வை தன் கரத்தில் இருந்த குளிர்களியின் மீது பதிந்தது.
“அத அப்புறம் சாப்பிட்டுக்கலாம் கண்ணம்மா..” அவளைப் பற்றி புரிந்தவராய் கூறினார் அவளுடைய தந்தை.
அதே கணம் சமையலறைக்குள் இருந்து வெளியே வந்த நிர்மலாவிற்கோ தன்னுடைய மாப்பிள்ளையைக் கண்டதும் அவ்வளவு சந்தோஷம்.
“அடடா வாங்க மாப்ள.. உள்ள வாங்க.. உட்காருங்க…” என அவர் அவனை வரவேற்க சிறு தலை அசைப்புடன் சோபாவின் அருகே வந்தவன் உட்காராமல் அப்படியே நின்றான்.
“என்னாச்சுப்பா..?” எனக் கேட்டார் ராமகிருஷ்ணன்.
“இல்ல நான் கொஞ்சம் டர்ட்டியா இருக்கேன்.” என்றான் அவன்.
“அதெல்லாம் பிரச்சனை இல்ல.. நீங்க உட்காருங்க..” என நிர்மலா மீண்டும் கூற வேறு வழியின்றி அங்கே இருந்த சோபாவில் அவன் அமர்ந்து கொள்ள வெடுக்கென்று எழுந்து நின்றாள் நந்தினி.
“என்ன சாப்பிடுறீங்க மாப்ள..? ஜூஸ் இல்லன்னா டீ ஸ்னாக்ஸ்..?”
“காபி…” என்றான் அவன் ஒற்றைச் சொல்லாக.
“இதோ கொண்டு வரேன்..” என்ற நிர்மலாவோ சமையலறைக்குள் நுழைய முயன்ற கணம்,
“அம்மா நானே காபி போடுறேன்..” என்றாள் நந்தினி.
நிர்மலாவுக்கும் ராமகிருஷ்ணனுக்கும் பேசியது தன்னுடைய மகளா என தலை சுற்றலே வந்து விட்டது.
இங்கே இருக்கும் போது ஒரு வேலை கூட செய்ய மாட்டாளே..
தன் கணவனுக்கு என்றதும் காபி போடுகிறேன் என்ற மகளை மெச்சுதலாகப் பார்த்தார் நிம்மலா.
பெருமை பொங்க பார்த்தார் ராமகிருஷ்ணன்.
அவர்கள் இவருடைய பார்வையும் பார்த்தவளுக்கோ,
‘அடக்கடவுளே நீங்க எத்தனை தடவை காபி போட்டாலும் அவன் சக்கர கம்மியா வேணும்னு திரும்பத் திரும்ப காபி போட வைப்பான்.. உங்கள காப்பாத்துறதுக்காகத்தான் நான் காபி போடுறேன்னு சொன்னேன்.. இது தெரியாம என்ன இப்படி பார்க்கிறாங்களே..’ என மனதிற்குள்தான் கூறிக் கொண்டாள் அவள்.
பின்னே அவள் நினைப்பதை எல்லாம் தற்சமயம் வெளியே கூறவா முடியும்..?
அவளோ அவனுடன் எதுவும் பேசாது சமையலறையை நோக்கிச் செல்ல அவனுடைய பார்வை அவளைத்தான் தொடர்ந்தது.
அவள் இறுக்கமாக அணிந்திருந்த அந்த சிறிய கவுனோ அவளுடைய இடையின் வளைவை அப்பட்டமாகக் காட்டியது.
இடையில் பதிந்த பார்வையை அப்படியே கீழே இறக்கியவன் அவளுடைய கெண்டைக் கால்களைப் பார்த்து விட்டு சட்டென தன் பார்வையை திருப்பிக் கொண்டான்.
உடல் தகிக்க ஆரம்பித்தது.
‘இதுக்கு நடு ரோட்லயே நின்னுருக்கலாம் போலையே…’ என எண்ணிக் கொண்டது அவனுடைய மனம்.
ராமகிருஷ்ணனும் நிர்மலாவும் இயல்பாக அவனுடன் பேச ஆரம்பித்தனர்.
யாரும் நடந்து முடிந்த சம்பவத்தை பற்றிப் பேச விரும்பவில்லை.
அவர்கள் இயல்பாக பேசும் போது அவனால் அதை புறக்கணிக்கவும் முடியவில்லை.
முடிந்த அளவு அவர்கள் பேசுவதற்கெல்லாம் பொறுமையாக பதில் கூறிக் கொண்டிருந்தான் அவன்.
சற்று நேரத்தில் காபியுடன் அவன் அருகே வந்தவள் அதை அவனுக்குக் கொடுக்க அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு காபியை வாங்கிக் கொண்டவன் அதை அருந்தத் தொடங்கினான்.
அவனுடைய உடலில் இருந்த சோர்வுக்கு அந்த காபி புத்துணர்ச்சியை கொடுப்பது போல இருந்தது.
அவன் எதிர்பார்க்கும் சுவை அப்படியே இருந்தது.
ஆனால் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாது குடித்து முடித்தவன் வெறும் கப்பை முன்னிருந்த டீபாய் மீது வைத்தான்.
அதே கணம் உள்ளே இருந்த வெள்ளை நிற நாய்க் குட்டியோ வர்மாவை பார்த்து குரைத்தவாறு ஓடி வந்தது.
புசுபுசுவென்று அழகாக இருந்த நாய்க்குட்டியை எரிப்பது போல பார்த்தான் அவன்.
எத்தனையோ வேட்டை நாய்களுடன் பழகுபவனுக்கு இந்த சிறிய நாயைப் பார்த்தா பயம் வரும்..?
வேகமாக குரைத்துக் கொண்டு வந்த அந்த அழகான நாய்க்குட்டிதான் அவனைப் பார்த்து பின்வாங்க வேண்டியதாக இருந்தது.
“ஏய் டோரா உஷ்.. அவர கடிக்கக் கூடாது..” என அதட்டினாள் நந்தினி.
‘டோராவா.. இது வேறயா..?’ என எண்ணிக் கொண்டான் அவன்.
அவளுடைய டோராவோ சமத்தாக அவளுடைய கால்களை சுற்றத் தொடங்கி விட அப்படியே அதை அள்ளி அணைத்து தன் மார்போடு சாய்த்துக் கொண்டவள்,
“என்னடி பட்டுத் தங்கம்..? உங்களுக்கு பசி வந்துருச்சா…?” என நாயோடு அவள் கொஞ்சத் தொடங்கி விட அவனுக்கோ பொறுமை பறந்தது.
“சரி நான் கிளம்புறேன்..” என்றவாறு எழுந்து கொண்டான் அவன்.
“ஃப்ரஷ் ஆகலாமே மாப்பிள்ளை..?”
“இட்ஸ் ஓகே… தேங்க்ஸ்.. இன்னும் கொஞ்ச நேரம்தான் வர்க் இருக்கு..” என்றான் அவன்.
ஆனால் அவனுடைய மனமோ ஃபிரஷ் ஆகினால் சற்று நன்றாக இருக்கும் என்றுதான் எண்ணியது.
உடல் முழுவதும் வியர்வை வழிந்து கசகசவென்று இருந்தது.
“ரொம்ப டயர்டா இருக்கீங்க.. இப்படியே எப்படி ஒர்க் பண்ண முடியும்..? ஏன்டி இப்படியே அமைதியா நிக்கிற.. மாப்பிள்ளைய உன்னோட ரூமுக்கு கூட்டிட்டுப் போ.. அவர் ப்ரஷ் ஆகட்டும்..” என்றார் நிர்மலா.
‘வில்லங்கத்துக்கு ரூம் மேட்டா ஆயிட்டோம்… விபரீதத்த ஃபேஸ் பண்ணித்தான் ஆகணும்..’ என எண்ணியவள் வேறு வழியின்றி அவனை “வாங்க..” என்று அழைத்தவள் தன்னுடைய அறைக்கு அவனை அழைத்துச் சென்றாள்.
பெற்றோருடன் அவன் அருகே இருக்கும் போது அவளுக்கு எந்தவிதமான பதற்றமும் எழவில்லை என்பதே உண்மை.
ஆனால் அவனைத் தனியாக தன்னுடைய அறைக்குள் அழைத்துச் செல்வதை நினைக்கவே அவளுக்கு தேகம் படபடக்க ஆரம்பித்து விட்டது.
மெல்ல படிகளில் ஏறியவள் முதல் தளத்தில் இருந்த தன்னுடைய அறைக்குள் அவனை அழைத்துச் சென்றாள்.
அவனும் அவளிடம் எதுவும் பேசவில்லை
அவளுக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை.
அத்துடன் அவள் இப்போது கோபமாக அல்லவா இருக்க வேண்டும் கோபித்துக் கொண்டுதானே வீட்டை விட்டு வந்திருக்கிறாள்.
அந்தக் கோபத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டவள் “பாத்ரூம் அங்க இருக்கு..” என குளியலறையை அவனுக்குக் காட்டினாள்.
அவளை மேலிருந்து கீழ் வரை ஆழ்ந்து பார்த்தவன்,
“உன் டவல் கொடு..” என்றான்.
“என் டவலா..? என்கிட்ட புது டவல் இருக்கு..” என்றவள் மடித்து வைத்திருந்த புதிய துவாலையை எடுத்து அவனிடம் நீட்ட அவளை அழுத்தமாகப் பார்த்தவன்,
“உனக்கு இன்பெக்ஷஸ் டிசீஸ் இல்லன்னா ரேஷஸ் ஏதாவது இருக்கா..?” எனக் கேட்டான்.
அவளோ அதிர்ந்து போனவள் “வாட்..?” என்றாள் அவனைப் பார்த்து.
“இருக்கா இல்லையா..? எஸ் ஆர் நோ..?” மீண்டும் அவனிடம் அதே அழுத்தம்.
அவனை முறைத்துப் பார்த்தவள் “எனக்கு எந்த டிசீஸும் இல்ல.. ஐ ஆம் ஃபர்பெக்ட்லி ஆல்ரைட்..” என்றாள்.
“தென் வை திஸ் நியூ டவல்..?” எனக் கேட்டான் அவன்.
அவளோ பதில் சொல்ல முடியாமல் திணறிப் போனாள்.
என்னவென்று சொல்வது..?
நான் உபயோகித்ததை நீ உபயோகிக்க கூடாது என்று சொல்வதா..?
அவன்தான் மனதை படிக்கும் வித்தைக்காரனாயிற்றே.
கைதிகளின் கண் அசைவிலும் உடலின் அசைவிலும் உண்மையை அறிந்து கொள்பவன் அவளின் எண்ண ஓட்டத்தையும் அக்கணம் அறிந்து கொண்டான்.
“உன்னையே யூஸ் பண்ணிட்டேன்.. உன் டவலை யூஸ் பண்ண மாட்டேனா என்ன..?” என அவன் கேட்டதும் அவளுக்கோ மூச்சடைத்துப் போனது.
இதற்கு மேலும் விட்டால் எக்குத் தப்பாக பேசி வைப்பான் எனப் புரிந்து தன்னுடைய துவாலை எடுத்து சட்டென அவனை நோக்கி நீட்டி விட்டாள் அவள்.
அவனோ அதை வாங்கியவன் தன்னுடைய யூனிஃபார்மை கழற்றத் தொடங்க அவளுக்கோ இன்னும் பதற்றம்தான் அதிகரித்தது.
“ஓகே.. நீங்க ப்ரஷ் ஆயிட்டு வாங்க… நான் கீழ வெயிட் பண்றேன்..” என்றவள் அங்கிருந்து நழுவ முயன்ற நேரம்,
“இப்போ நீ ரூமை விட்டு வெளியே போனா நடக்கிறதே வேற..” என்றான் அவன்.
அதிர்ந்து விட்டாள் அவள்.
இது என்ன அநியாயம்..?
நான் இந்த அறையில் இருக்க வேண்டுமா இல்லை வெளியே இருக்க வேண்டுமா என்பதை நான் தானே முடிவு செய்ய வேண்டும்.
இவன் என்ன கூறுவது..?
அவளுக்கோ கோபம் கோபமாக வந்தது.
இங்கே வந்ததும் அராஜகம் பண்ண ஆரம்பித்து விட்டானா..?
“இந்த யூனிஃபார்ம் ரொம்ப டர்ட்டியா இருக்கு.. வேற ட்ரஸ் இருந்தா நல்லா இருக்கும்..” எனக் கூறியவன் யூனிஃபார்மை அங்கிருந்த இருக்கையில் கழற்றி வைத்து விட்டு திரும்ப அவர்களுடைய அறைக் கதவு தட்டப்பட்டது.
அவனோ காக்கி பேன்ட் மட்டுமே அணிந்திருந்தான்.
நந்தினியோ சென்று கதவைத் திறந்தவள் வெளியே நின்ற தன் தந்தையைப் பார்த்ததும் “உள்ள வாங்கப்பா..” என்று அழைத்தாள்.
“பாப்பா மாப்பிள்ளை இங்க மறு வீட்டுக்கு வந்தா கொடுக்கணும்னு கொஞ்சம் ட்ரஸ் வாங்கி வச்சிருந்தேன்.. இப்போ அது அவருக்கு யூஸ் ஆகும்னு நினைக்கிறேன்.. இது எல்லாத்தையும் அவர்கிட்ட கொடு..” எனக் கூறிவிட்டு அவர் சென்று விட, சில பைகளுடன் அவனிடம் வந்தவள் அந்த ஆடைகளை அவனிடம் கொடுத்தாள்.
ராமகிருஷ்ணன் கூறியது அவனுடைய செவிகளையும் எட்டத்தான் செய்தது.
“தேங்க்ஸ்..” என்றவன் அவளுடைய துவையாலையுடன் குளியலுக்குள் சென்றுவிட அவளுக்கோ பெருமூச்சு.
இவன் இங்க இருந்து கிளம்பும் மட்டும் இவன் கூடவே இருந்து இவனுக்கு பணிவிடை செய்ய வேண்டும் போலையே..
அப்படியே அங்கிருந்த சோபாவில் அமர்ந்து விட்டாள் அவள்.
அவளுக்கு அருகே இருந்த அவனுடைய யூனிபார்மை பார்த்தவளின் விழிகள் விரிந்தன.
‘அப்பா ஏதோ ஆக்சிடென்ட் கேஸ்னு சொன்னாரே.. வேலை ரொம்ப அதிகம்னு வேற சொன்னாரு.. இவரும் பாவம்தான்..” என எண்ணிக் கொண்டாள் அவள்.
என்னதான் வெளியே கோபம் போலக் காட்டிக் கொண்டாலும் அவன் தன்னுடைய வீட்டிற்கு வந்தது அவளுடைய அடி மனதில் இனிக்கத்தான் செய்தது.
சற்று நேரத்தில் குளித்து முடித்து அவளுடைய துவாலையை மட்டும் இடையில் கட்டிக் கொண்டு வெளியே வந்தவனைப் பார்த்ததும் அவளுக்கும் இதயம் எகிறி குதிக்கத் தொடங்கியது.
முகம் சிவக்க திரும்பி நின்றவளின் அருகே வந்தவன்,
“வாட்..?” என்றான்.
“மு.. முதல்ல ட்ரெஸ்ஸ போடுங்க..” என்றாள் அவள்.
“ஏன் இதுக்கு என்ன குறைச்சல்..?” என்றான் அவன்.
“எல்லாமே குறைச்சலாதான் இருக்கு..” என்றாள் அவள்
அவளைத் தன்னை நோக்கித் திருப்பியவன்,
“நீயும்தான் செ**ஸியா ட்ரெஸ் பண்ணிருக்க.. நான் ஏதாவது சொன்னேனா..?” என அவன் கேட்டதும் அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
🥀🥀
குருவிக் குளியலொன்றை போட்டுக் கொண்டு அறைக்கு வந்தான் யுகேந்த்ராவ்!
இடுப்பிலிருந்த டவல் நழுவிக் கீழே விழாதிருப்பதற்காய், அதன் இரு பக்க நுனிகளை இழுத்து இறுக்கமாக சொருகிக் கொள்ளவும், மேஜையிலிருந்த அலைபேசி ஒலிக்கவும் சரியாக இருந்தது.
தலையை இருபுறமாக ஆட்டி நீர்த் திவலைகளை நாலாபுறமும் விசிறியடித்தவன் கேசத்தை வலது கையால் கோதி விட்டபடி மற்ற கையால் அலைபேசியை எடுத்துப் பார்த்தான்.
இந்த அழைப்பு வருமென ஏற்கனவே எதிர்பார்த்திருந்தான் போலும், கீழுதட்டை வளைத்து கேலியாய் நகைத்தபடி அழைப்பேற்றவன்,
“நீ கால் பண்ணுவேனு தெரியும். ஆனா இவ்ளோ சீக்கிரமா பண்ணுவேனு எதிர் பார்க்கல டியுட்!” என்றான். குரலில் நக்கலும் ஏளனமும் கொட்டிக் கிடந்தது.
மறுபுறத்தில் இருந்தவனின் கண்களில் லேசான திகைப்பு!
‘அழைப்பு விடுத்தது நானென அவன் அறிய வாய்ப்பில்லை; என்னை இனங்காணக் கூடாது என்பதற்காகத் தானே, புது எண்ணிலிருந்து அழைப்பே விடுத்தேன்? இருந்தும் ஊகித்து விட்டானே!’ என எழுந்த திகைப்பு மறுநொடியே கோபமாய் மாற,
“ஐ வார்ன் யூ யுகேந்த்! என் வழியில குறுக்கா வராத. அதான் உனக்கு நல்லது. இதுவரை நாள் நீ பார்த்த கரண்சிங், அவனை உசுப்பேத்தி விட்டதுக்கு அப்பறமா பார்க்க போறவனை விட ரொம்ப நல்லவன்..” என எச்சரிக்கும் விதமாகப் பேசினான்.
கை வந்து சேரவிருந்த பெரிய டீலைக் கை நழுவி போகும்படி செய்து விட்டது பத்தாதென, கரண்சிங்கின் உற்பத்தி பொருட்கள் யாவிலும் கலப்படம் என்ற தகவலை தேவையான இடத்துக்கு அனுப்பி வைத்து, அதை உண்மைப் படுத்துவதற்காக சிலபல விளையாட்டுகளையும் அரங்கேற்றி இருந்தான் யுகேந்த்ராவ்!
கையாலாகாத நிலையில் இருந்து கொண்டு மிரட்டுவதற்காய் அழைப்பு விடுப்பான் என ஏலவே இவன் எதிர்பார்த்திருக்க, கோபத்தின் உச்சிக்கு சென்றிருந்த கரண்சிங் ஊகத்தைப் பொய்ப்பிக்காமல் உடனே அழைத்து விட்டான்.
வாய் விட்டுச் சிரிக்கத் தோன்றியது யுகனுக்கு.
“ரியல்லி? சரி சொல்லு, உன்னை எப்படிலாம் உசுப்பேத்தி விட்டா நீ செமயா காண்டாவ? ஆக்சுவல்லி வர வர எனக்கும் இந்த கேம் போரடிக்குது..” என நக்கலாய் பேசியபடி ஜன்னலருகே திரும்பி நின்றவன்,
“முதல்ல, எதிர்ல இருக்கிறவனைப் பயமுறுத்தற மாதிரி பேச பழகுடா வெண்ணமவனே!” என்றுவிட்டு, அதற்கு மேலும் பேசுவதற்கு எதுவுமில்லை என்பது போல் அழைப்பை துண்டித்துக் கொண்டான்.
கண்கள் சாளரத்துக்கு வெளியே தெரிந்த தோட்டத்தின் வனப்பில் லயித்தன.
கதிரவனின் ஒளி பட்டு வெட்கிக் கொண்டிருந்த மலர்களைக் கண்ணாரக் கண்டு ரசித்தான். நினைவடுக்குகளில் ஏதேதோ நிழற்படங்கள்.. அவை யாவும் ஆடவனின் ஏகாந்தத்துக்கு மேலும் இதம் சேர்ந்தன.
‘அந்த பட்டர்ஃப்ளை அழகா இருக்கு யுகன்..’ என்றொரு குரல்.
‘அழகா இருக்கா? உன்னை விடவாடி..’ என குழையும் குரலோடு சேர்த்தி, கிண்கிணி நாதமாய் நகையொலியொன்று காதை நிறைத்தது.
கண்களை இறுக மூடித் திறந்து கடந்த காலத்தை நெஞ்சோடு புதைக்க முயன்றவனின் முதுகில் சட்டென்று வெண்பஞ்சு மூட்டையொன்று மோதி விழுந்தது.
மென் கரங்கள் இரண்டு கொடி போல் சுற்றி வளைத்தன, அவனது கட்டுடலை.
“உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்யா!” என்று கூறியவளின் சூடான கண்ணீர் அவனது வெற்று முதுகை பாரபட்சமின்றி நனைக்க, ஆடவனின் உடல் விறைத்தது.
“என்கிட்டே சொல்லிக்காமலே கெளம்பிப் போய்ட்ட.. சரிதான், அப்போ மீட்டிங் முடிஞ்சதும் வந்திருக்கலாம் இல்லையா?” என உரிமையாய் கேட்டு அவனின் முதுகில் தன் ஈர இதழ்களைப் பதித்தவள் அடுத்த நொடி,
“அம்மாஆ..” என்ற முனகலுடன் கன்னத்தில் கை வைத்து அதிர்ந்து நின்றாள்.
ஆமாம், தன் மீது படர்ந்திருந்த கைகளைப் பற்றி பார்வைக்கு முன்னால் இழுத்து நிறுத்தியவன், தன் கைகளை முழு வேகத்தில் வீசி விட்டான் அவளது கன்னத்தை நோக்கி! கை வந்து முழு விசையுடன் பாவையின் கன்னத்தில் மோதியதில் கன்னம் இரத்தமென சிவந்து போனது.
அவசரமாக கழுத்தை சுற்றிப் போட்டிருந்த டவலை உருவி உடலைப் போர்த்திக் கொண்டவனின் கண்களில் தெரிந்த பதற்றமெல்லாம் ஒருசில நிமிடங்கள் தான்!
அடுத்த க்ஷணமே, “யாரு உனக்கு என்கிட்ட இந்தளவு உரிமை எடுத்துக்க அனுமதி கொடுத்தா? ச்சை! இப்படி தான் வந்து திடுதிப்புனு வந்து அணைப்பியா..” என எரிந்து விழுந்தவன்,
“உன் வாசனைய என் பக்கத்துல உணர கூடாதுனு நினைக்கிறேன். உனக்கு புரியல?” என்று வினவியபடி டேபிள் மீதிருந்த பேர்ஃபியூம் பாட்டிலைத் திறந்து, அதிலிருந்த திரவியம் முடிந்து போகும் வரை தன் வெற்றுடலில் அடித்தான்.
அவனது செயலில் வெகுவாக மனம் நொந்து போனவள் கண்ணீர் நிறைந்த கண்களுடன் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். குதிரைப் படையொன்று பயணிப்பது போல், நெஞ்சம் கனத்தது.
அவனது வருகை அறிந்ததும் தடுக்க வந்த தந்தையைக் கூட சற்றும் மதியாமல் அவனைக் காண விரைந்தோடி வந்தாளே!
அறைக் கதவருகே நின்று கள்ளத்தனமாய் அவனைப் பார்த்து ரசித்து, அவன் செதுக்கி வைத்திருந்த கட்டுடல் அழகில் தன்னை மறந்து, அவனது உருவத்தை மொத்தமாய் தன் கண்களுக்குள் நிரப்பிக் கொண்டாளே..
‘மானு..’ என்ற அழைப்புடன் ஓடி வந்து அணைத்து, ‘உன்னை எவ்ளோ மிஸ் செய்தேன் தெரியுமாடி?’ என்ற கொஞ்சல் மொழிகளை அவன் பேசப் போவதில்லை என அறிவாள் தான்.
இருப்பினும், காதல் வயப்பட்ட அவளின் மனதும், தன்பால் அதிக ஈடுபாடு கொண்டவனின் அக்கறைக்காய் ஏங்கி நிற்கும் நெஞ்சமும், இந்த அன்பெல்லாம் கிடைக்கப் போவதில்லை என அறிந்தும் எதிர்பார்த்துத் தொலைக்கிறதே..
“என் ஸ்மெல்.. என் வாசனையை உணர்ந்தா உன் கண்ட்ரோல் மிஸ் ஆகிடும்னு பயப்படறியா யுகன்?” அழுகையோடு வினவியவள் அவனை கேலிப் பார்வையை உணர்ந்து கொண்டு,
“நான் உன்னை எவ்ளோ மிஸ் பண்ணேன் தெ.ரியு..மா?” என வினவினாள்.
வாய் திறந்தானோ இல்லையோ, அவள் எழுப்பிய வினா அவனுக்கு வேறொரு நிகழ்வை நொடிப் பொழுதில் நினைவூட்டிச் சென்றது.
அவனுக்கு பன்னிரண்டு வயதிருக்கும் போது, ஸ்கூல் சுற்றுலா பற்றி அறிந்து கொண்டு, ‘முடியவே முடியாது! மானுவை விட்டுட்டு தனியால்லாம் போக மாட்டேன்..’ என அடம் பிடித்தவனை ஒற்றைக் காலில் நின்று ருத்ரவன் பஸ் ஏற்றிவிட்ட நிகழ்வு! மறக்க முடியாத அழகிய தருணங்களை சுமந்த காலமது.
அன்றும் கூட, சுற்றுலாவை முடித்துக் கொண்டு வீடு திரும்பியவனின் முதுகைக் கட்டிக் கொண்டு கண்ணீருடன் இதே வார்த்தைகளை தான் உதிர்த்தாள் மான்ஷி.
‘உன்னை எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா?’
‘நீ ஏன்டா என்னை விட்டுட்டு போன? நான் எவ்ளோ அழுதேன் தெரியுமா.. உனக்கு என்மேல கொஞ்சம் கூட பாசமே இல்ல..’
விம்மலோடு கொஞ்சல் மொழி பேசியவளின் கண்ணீர் கண்டு பதறி, தன் கைகளாலே அவள் கண்ணீரைத் துடைத்தெறிந்து, அவளைத் தன் நெஞ்சக்கூட்டோடு அணைத்து ஆறுதல் அளித்தவன், இன்று அவளது கண்ணீருக்கே காரணமானவனாய் இருக்கிறான்.
காலத்தின் கோலமா? விதியின் சதியா..
அவ்வளவு காலமும் மலர்களைக் கொய்து வந்து தன் கைகளில் பொத்தி, அவற்றைப் பாதுகாத்து வைக்குமாறு கூறியவனே ஒருநாள் திடீரென்று அந்த மலர்களை பறித்தெடுத்து, தன் அழுகையையும், கண்ணீரையும் பொருட்படுத்தாமல் அவற்றை காலால் நசுக்கி அநியாயமாக்கினால் எப்படி இருக்கும்?
பொக்கிஷம் பொக்கிஷமென நெஞ்சில் சேமித்து வைத்த அவனின் அன்பும், அக்கறையும், இன்று அவனாலே பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
நினைக்கும் போதே மூச்சடைப்பது போல் உணர்ந்தாள் பாவை.
“யுகன்ன்ன்..”
“ப்ம்ச், இந்த ஒரு வாரம்.. பத்து நாளா எவ்ளோ நிம்மதியா இருந்தேன்லனு நினைக்கிறப்போ அந்த நாட்களுக்காக மனசு ஏங்குது!” என கரடுமுரடான குரலில் சலித்துக் கொண்டவன் சென்று வாட்ரோபிலிருந்த பிளைன் டீஷர்ட் ஒன்றை எடுத்து, திரும்பி நின்று அணிந்து கொண்டான்.
“அப்போ நீ என்னை நிஜமாவே மிஸ் பண்ணவே இல்லையா யுகன்?”- ஏக்கத்தில் நெஞ்சம் வெடித்து விடுமோ என அஞ்சும்படியாய் இருந்தது அவளின் விம்மிப் போன குரல்.
நின்று திரும்பியவன் அவளைப் பார்த்த பார்வையில் உள்ளுக்குள் மரித்துப் போனாள் மான்ஷி. அப்படி ஒரு பார்வை! ‘பைத்தியமா நீ?’ எனக் கேட்டு நின்ற அந்தப் பார்வையின் பட்டவர்த்தனமான கேள்வியில் மொத்தமாக உடைந்து போனாள்.
இந்தப் பார்வை, கேலி கிண்டலை எல்லாம் இந்த ஓரிரு மாதங்களாகவே கடந்து வருகிறவள் தான். இருப்பினும், ‘உன்னை ஒரு வாரம் கழித்து பார்க்கிறேனே யுகன், சிறு புன்னகையை ஆவது என்னை நோக்கி வீசி இருக்கக் கூடாதா?’ என விம்மினாள்.
கத்தி அழுதால் மனப் பாரம் குறையுமெனத் தோன்றினாலும், அழுதால் என்ன.. அழுது களைத்து மயங்கியே போனாலும் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிவிக்க இங்கு ஆருமில்லை என விரக்தியுற்றாள்.
“யுகன்..”
சலிப்புடன், அவளைக் கிஞ்சித்தும் கண்டு கொள்ளாமல் நடந்தான் யுகேந்த்ராவ்.
“யுகன், ஐ க்னோ! ஐ க்னோ எவ்ரிதிங் அபௌட் வாட் ஹப்பெண்ட்.. எதுக்கு நீ அவொய்ட் பண்ணுறேனு தெரியும் யுகன். கியூட்டி பை’னு மைதிலி கிட்ட கொஞ்சுவியே! என்னை மட்டும் வெறுத்து ஒதுக்க காரணம் என்னனு எனக்கு தெரியும். என்னை நீ உன் பக்கத்துல சேர்க்க தயங்கறது ஏன்னும் தெரியும்..” என பொறுமை இழந்தவளாய் குரலுயர்த்தி கத்தினாள் மான்ஷி.
அவனது நடை தடைப்பட்டது. நின்று திரும்பிப் பார்க்கவில்லை தான் என்றாலும், வெட்டு விழுந்திருந்த புருவத்தை அழுத்தமாய் நீவியபடி அவள் கூறப் போவதைக் கேட்பதற்காய் காதுகளை கூர்மைப்படுத்திக் கொண்டான்.
‘காரணம் தெரிந்து விட்டதா?’ நினைக்கும் போதே உடல் சூடேறி, கண்கள் கோபத்தில் கோவைப் பழமாய் சிவந்து போயின.
“முடியாது, உன்னை விட்டு யாருமில்லாத இடத்துக்கு போய் என்னால இருக்க முடியாதுன்னு மறுக்க மறுக்க அப்பா என்னை படிக்கிறதுக்காக அப்ராட் அனுப்பி வைச்சாருல்ல?
அத்தை, மாமா ஆக்சிடண்ட்ல இறந்து போனதை கேள்விப்பட்டதும் எவ்ளோ துடிச்சேன் தெரியுமா? நானும் அவங்களை கடைசியா ஒரு வாட்டி பார்க்கணும்ங்குறதுக்காக வந்தே தீருவேன்னு அடம் பிடிச்சேன்.
அன்று,
‘நான் வருவேன், ப்ளீஸ் வர விடுங்களேன்..’ என அலைபேசி வழியே கதறிக் கொண்டிருந்தாள் மான்ஷி.
“வேணாம்டா. அதான் இங்க னாம எல்லாரும் இருக்கோமே, நீ பதறாத! எல்லாத்தையும் சரி வர பார்த்துக்கறோம்..” என யோசித்துப் பார்க்காமல் உடனடியாக மறுத்தார் சிவதர்ஷன்.
ருத்ரவனும், ரேணுகாவும் இறந்து விட்ட தகவல் காதை எட்டிய நேரத்திலிருந்து அவருக்கு நிமிடத்துக்கு ஒரு தடவை அழைப்பு விடுத்து கெஞ்சிக் கொண்டு தான் இருக்கிறாள். அவர் தான் பிடி கொடுக்காமல், தான் நினைத்தது தான் நடந்தாக வேண்டும் என்ற வீம்பில் மறுத்து பேசிக் கொண்டிருந்தார்.
“டாடி, யுகன் ரொம்ப உடைஞ்சு போயிருக்கான். அவனுக்காக நான் அங்க வரணும். ரொம்ப அழறான்ப்பா..” என கூறும் போதே,
‘எனக்குனு இப்போ இங்க யாரும் இல்லடி. எல்லாரும் என்னை விட்டு போய்ட்டாங்க. நீயும் தூரமா இருக்கே. தாங்கிக்க முடியல மானு..’ என உடைந்து பேசிய யுகனின் வார்த்தைகளை நினைத்து அழுதாள்.
அவனின் துயராற்றுவதில் தன் பங்கு என்னவென்பதைப் புரிந்து கொண்டதிலிருந்து அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. எந்தெந்த முறைகளில் கெஞ்ச முடியுமோ, அந்தளவுக்குக் கெஞ்சி கூத்தாடிப் பார்த்து விட்டாள் தந்தையிடம்.
அவர் உறுதியாக மறுத்தபடியால், அவரறியாமல் கள்ளத்தனமாய் புக் செய்த டிக்கெட்களும் கூட அவரின் கருணையால் கான்செல் ஆகிக் கொண்டே இருந்தது.
“ப்.பா ப்..ளீஸ்..” என கடைசி நம்பிக்கையில் கெஞ்சிப் பார்த்தாள்.
மகளின் கெஞ்சலைக் காது கொண்டு கேட்க முடியாமல் அழைப்பைத் துண்டித்துக் கொண்ட தர்ஷன், அதன் பிறகு அவளின் அழைப்புகளுக்கு பதில் கொடுக்கவே இல்லை.
கட்டிலில் விழுந்து உருண்டு அழுது கரைந்தவள் இறுதி முயற்சியாய் தன் மணிக்கட்டை அறுத்து, வழிந்தோடிய இரத்தத்தை புகைப்படமாக்கி தர்ஷனுக்கு வாட்ஸப் செய்தாள்.
இனியாவது யுகனைக் காணச் செல்ல சந்தர்ப்பம் அமையுமென எதிர்பார்த்தாள். நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் இறைவனின் இருப்பை எங்ஙனம் உணர்வதாம்..
“நீ பைத்தியகாரத் தனமா எதையாவது ட்ரை பண்ணி செத்துகித்துப் போயிடாதம்மா..” என அழைப்பு விடுத்து மிக மோசமாய் அதட்டியவர், ‘உன் ஆட்டம் என்னிடம் எடுபடாது!’ என அத்தோடே அலைபேசியையும் அணைத்து ஓரந்தள்ளி வைத்து விட்டார்.
எது எப்படியோ, இவள் கையை அறுத்துக் கொண்ட விடயமறிந்து யுகன் தான் உயிர் வரை பதறிப் போனான்.
தன் கவலை, கண்ணீரையெல்லாம் மறந்து அவளை திட்டித் தீர்த்து விட்டான். அவனிடமிருந்து அந்தளவுக்கு சரமாரியாகத் திட்டு வாங்கியது அதுதான் முதன்முறை..
‘நீ என் உயிருடி..’ என அவன் கூறிக் கலங்கிய வரியில் அவளின் இதயம் அடிபட்டுப் போனது. தனக்கு ஒன்றென்றதும் இவ்வளவு கலங்குகிறான், ஆனால் அவனின் இழப்பிற்கு ஆறுதல் கூற நான்தான் அருகில் இல்லாமல் போய் விட்டேன் என கலங்கினாள்.
பெற்றவர்களின் இறுதி சடங்குகள் முடிந்த மறுநாளே, மான்ஷியைக் காண்பதற்காக விமானம் ஏறியிருந்தான் யுகன்.
அங்கு சென்று அவளது பைத்தியக்காரத் தனத்தை கண்டித்து அவளைக் கன்னம் கன்னமாக அறைந்து, பின் அவளை தன் நெஞ்சோடு அணைத்து உச்சி முகர்ந்ததெல்லாம் வேறு கதை!
‘உன்னுடனே ஊருக்கு வந்து விடுகிறேன்..’ என அடம் பிடித்தவளை,
‘மாமாவுக்கு தெரிஞ்சா ரொம்ப கோபப்படுவாரு. நீ இங்கேயே இருந்து படி. நீ ஒரு கலெக்டராவோ, பெரிய ஆளாவோ வந்துட்டா எனக்கு இல்லையா பெருமை? நீ கலங்காதே.. வாரா வாரம் உன்னைப் பார்க்க ஓடோடி வருவேன்டி..’ என ஆறுதல்படுத்தி விட்டு வந்தவன், அன்று தான் அவளைப் பார்த்துப் பேசிய கடைசி நாளாகவும் அமைந்தது.
அதன் பிறகு அவனிடமிருந்து அழைப்புகள் வரவில்லை; இவளிடமிருந்து புறப்பட்ட அழைப்புகளுக்குக் கூட பதிலோ, பதில் அழைப்புகளோ இல்லை. என்ன ஏதேன்று புரியாமல் ஊருக்கு வர முயன்றவளை வலுக்கட்டாயமாய் அங்கே இருக்குமாறு தடுத்து வைத்திருந்தார் சிவதர்ஷன்.
அவனைக் காணவில்லை, அவனிடம் பேசவில்லை என ஏக்கத்திலே துடிதுடித்துப் போனவள், இன்று வரை பதில் தேடிக் கொண்டு தான் இருக்கிறாள், அவனது அலட்சியத்துக்கும், வெறுப்புக்கும், கோபத்துக்கும், விலகலுக்குமான காரணம் என்னவாய் இருக்கும் என்பதை!
தொடரும்.
அவனில்லாத இந்த ஒரு வாரத்தை எப்படி கழித்தேனென மான்ஷிக்குப் புரியவே இல்லை. கண்ணிமைக்கும் பொழுதில் நாட்கள் அதிவேகமாய் நகர்ந்து விட்டன, அவளது வாழ்வில் சந்தோசச்சாரல் வீசிச் சென்ற இலையுதிர் காலத்தைப் போலவே!
கண்களை இறுக பொத்தியபடி கட்டிலில் அங்குமிங்குமாய் உருண்டு கொண்டிருந்தவளின் மனக்கண் முன் தோன்றி, மனசாட்சியின்றி அவளை வெகுவாக இம்சித்தான் யுகன். சதிகாரன்!
“போறேன்னு ஒரு வார்த்தை கூட சொல்லலியேடா!” என ஆயிரமாவது முறையாகக் குறைபட்டுக் கொண்டவளின் மனமோ,
‘சொல்லிருந்தா நீ அவனைப் போக விட்டிருக்கவா போற? சும்மா இருக்கறவனோட பிபியை கண்டபடி எகிற விட்டுருப்ப! நானும் உன்கூட வந்தே தீருவேன்னு அடம் பிடிச்சிருப்ப..’ என நேரம் பார்த்து வாரியது.
“இல்லையா பின்ன.. அதுலென்ன தப்பிருக்கு?” என நொடித்துக் கொண்டவள்,
“இருந்தாலும் நீ ஒரு வார்த்தையாவது சொல்லிட்டு போயிருக்கலாம்யா! கொஞ்சம் கூடவா உனக்கு என் நெனப்பு வரல..” என முகம் கசங்கினாள்.
சரியாக ஒரு வாரத்துக்கு முன்பு அவனைத் தேடி வீட்டுக்கு சென்றிருந்த நேரத்தில் தான், அவன் ‘கிளையண்ட் மீட்’ விஷயமாய் ஹைதராபாத் கிளம்பியிருக்கின்ற விடயமே தெரிய வந்தது அவளுக்கு.
‘கடன்காரன்!’ என்ற புலம்பலுடன் சோபாவில் தொப்பென விழுந்து அவனுக்கு விடுத்த அழைப்புகள் யாவும் விழலுக்கு இறைத்த நீர் தான்! தன் அழைப்பு அவனை சென்றடையாதென தெட்டத் தெளிவாகத் தெரிந்த பிறகும் அவனுக்கு அழைப்பு விடுத்துக் களைப்பது அவளின் தவறுதானோ..
இங்கு விந்தை என்னவெனில், அந்த நேரத்தில் கூட ‘என்னிடம் சொல்லாமல் சென்று விட்டானே!’ என்ற கோபத்துக்கு மாறாக, ‘சொல்லியிருந்தா நானும் கூடவே வந்திருப்பேன்ல?’ என்ற ஏக்கம் தான் வந்து தொலைத்தது அவளுக்கு.
“யுகன், ஐ மிஸ் யூ..” என மெலிதான குரலில் சிணுங்கியவள் அயர்வாய் கட்டிலில் எழுந்தமர்ந்தாள்.
மனம் அவனைத் தேடியது; வெளிச்சத்தை நாடிச் செல்லும் விட்டில் பூச்சியாய் நினைவுகள் அவனது காலடியில் மண்டியிட்டுக் கிடந்தது; நெஞ்சம் தவித்தது.
முன்பென்றால் ஓரளவு பரவாயில்லை; ஆனால் அவனின் ஒதுக்கத்தைக் கண்ணாரக் கண்ட பிறகு, அதை ஓயாமல் அனுபவித்துக் கொண்டிருக்கும் போது அவனுடைய நொடி நேரப் பிரிவும் யுகம்யுகமாய்ப் பிரிந்திருந்த ஏக்கத்தைக் கொடுத்தது.
‘இன்னைக்கு வருவானோ?’ என்ற அவளுடைய தினசரி ஆர்வம் இரவு கழியும் வரை நீடித்து, ஈற்றில் ஏமாற்றத்தைத் தழுவுவதும், விடியலின் போது ‘இன்னைக்காவது வருவானா?’ என புதிதாய் ஏக்கம் கொள்வதுமென மேலும் ஒருசில நாட்கள் காற்றோடு போயின.
பசலை கண்ட தலைவியென சங்ககாலப் பாடல்களின் மூலம் கேட்டு அறிந்ததுண்டு! அதற்கான சிறந்த உதாரணமாய், உடல் மெலிந்து, முகம் சோர்ந்து பரிதாபமாய் மாறிப் போயிருந்த மகளைக் காண்கையில் இதயத்தில் சீழ் வடியும் வேதனையை உணர்ந்தாள் சகுந்தலா.
“மான்ஷி, வாடி தலைய எண்ணெய் தேய்ச்சி வாரி விடறேன்..” என ஆதூரமாய் அழைக்க,
“ப்ச், சும்மாரும்மா!” என சலித்துக் கொண்டவள் ஜீவனின்றி பின்னிக் கொண்ட கால்களை முன்னகர்த்திச் சென்று சோபாவில் படக்கென்று அமர்ந்தாள்.
‘அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டோமோ.. யுகனின் நலன் கருதி, மகளின் நல்வாழ்வையும் கருத்திற்கொண்டு இருவருக்கும் சிறு வயதிலே நிச்சயம் செய்திருக்கக் கூடாதோ?!’ என லட்சமாவது முறையாக வருந்தியவளுக்கு,
‘இவ இல்லனா அவன் உசுருக்கு ஆபத்துனு சொன்னாங்களே! ஆனா இப்போ அவனே தான் என் பொண்ணை ஒதுக்கித் தள்ளுறான். அப்படினா இப்போ மட்டும் அவன் உசுருக்கு உத்தரவாதம் கிடைச்சிடுச்சா என்ன?’ என தோன்றாமல் போனது தான் அதிசயம்.
எங்கோ லாஜிக் இடிக்கிறதே!!!
ஆனால் ஒரு விடயத்தை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். சகுந்தலாவுக்கும் தான், தர்ஷனுக்கும் தான்! யுகேந்திரனின் அன்பில், 0% வீதமெனும் ஐயமில்லை. மாற்றமாக, அவன் மனதை ஏதோவொரு விடயம் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது; மான்ஷியை நெருங்க விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது என தெள்ளெனப் புரிந்தது. இருந்தாலும் மனம் பொறுக்க மாட்டேன் என அடம் பிடிக்கிறதே! பாவம், அவர்களும் என்ன தான் செய்வதாம்..
“கீழ உட்காரு!” என அதட்டல் போட்டுக் கொண்டே சீப்பும் கையுமாய் வந்த சகுந்தலா சோபாவில் அமர, வாய் தன் பாட்டுக்கு மறுத்து உரைத்தாலும், மனதின் உந்துதலால் மறுகணமே தரையில் சம்மணமிட்டு இருந்தாள் மான்ஷி.
‘அப்பறமா சாப்பிடறேன்..’ என கட்டிலில் சுருளும் நேரங்களிலெல்லாம் அதட்டி மிரட்டிச் சாப்பிட வைத்து, அவளின் தலை வருடி ஆறுதல்படுத்தும் ஒரே உறவு!
கண்ணீர் சிந்துகையில் ‘அழாதே’ என்ற கர்ண கொடூரமான அதட்டலுடன் கண்களின் ஈரத்தை துடைத்தெறியும் ஈன்றவளின் அன்புக்கு அவள் என்றென்றும் அடிமை தான்!
முன்பெல்லாம் அக்கறை காட்ட, அன்பு செலுத்த மேலதிக இணைப்பாய் யுகனும் கூடவே தான் இருந்தான்.
தன் கண்ணீரைக் கண்ணுற்று விட்டால் நொடிப் பொழுதில் வெறி பிடித்தவன் போலாகி சம்பந்தப்பட்டவனை மண்ணோடு புரட்டும் அன்பாளன் எங்கே..
‘பசிக்கவில்லை’ என முகம் சுருக்கினால், ‘அப்போ நானும் சாப்பிடல போ..’ என முறுக்கிக் கொண்டு நகர்ந்து, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் உணவு தட்டோடு தன்னைத் துரத்த ஆரம்பிக்கும் அக்கறையாளன் எங்கே..
‘அம்மா திட்டுனா..’ என விசும்பி அழும் போதெல்லாம், ‘எதுக்குத்த அவளை அடிச்சீங்க?’ என அவளைப் பெற்றெடுத்த தாயிடமே எகிறிக் கொண்டு செல்லும் அவனின் அக்கறையும், அன்பும் எங்கே..
‘உன்னைப் புடிக்கும் மானு; உன்னை மட்டுந்தான் புடிக்கும். வேற யாரையும் புடிக்க மாட்டேங்குது..’ என கன்னங்கிள்ளி கொஞ்சல் மொழி பேசிய இனியவன் எங்கே.. எங்கே அவன்.. அன்பாலே மனம் கொய்தவன்..
‘ஆள் மாறாட்டம் ஏதும் நடந்து விட்டதா என்ன?’ என சாத்தியமற்ற பலதையும் சிந்தித்துக் களைத்தவளாய் தாய்மடியில் மெல்ல தலை சாய்த்தாள் மான்ஷி.
எவ்வளவு தான் ஆராய்ந்தாலும் விடை கிடைக்காத கேள்வியாய், தாய்மடி தந்த சுகத்தில் கவலைகள் மறந்து, மலையாய் கனக்கும் மனம் அமைதியாகிப் போவது எப்படியென்ற வினா..
பதில் தேவைப்படவில்லை அவளுக்கு. பாரங்கள் குறைந்து மனம் ஓரளவு சமன்பட்டதாய் உணர்ந்தவளிடமிருந்து ஆழ்ந்த பெருமூச்சொன்று வெளிப்பட்டது.
மகளின் நிலை எண்ணி சகுந்தலாவுக்கு இதயம் கனத்துப் போனது.
‘ஏம்மா இப்படி இருக்க?’ என வாய் வரை வந்த சொற்களை விழுங்கிக் கொண்டவள், இடை தாண்டி வளர்ந்து, ஒழுங்காகப் பராமரிக்கப்படாமல் அலங்கோலமாகிப் போயிருந்த கூந்தலை அலைந்தாள்.
“இந்த சாந்தனா ஆளையே காணோம்!” என சலித்தபடி ஒரு கையில் உணவுத் தட்டும், மறு கையில் அலைபேசியுமென கூடத்தில் வந்து அமர்ந்தாள் மைதிலி.
அவளை ஒரு மாதிரியாகப் பார்த்து வைத்தவள், “புக்ஸ் படிக்கிறது, சாப்பிடறது, ஃபோன் பார்க்கிறது, தூங்குறது.. திரும்பவும் அதே தான் ரிப்பீட் ஆகுது! உனக்கு சலிக்கவே சலிக்காதா..” என பற்களை நறநறக்க,
“நான் என்ன உன்னைப் போல ஒரே விஷயத்தையா திரும்பத் திரும்ப செய்யறேன்? நீ அத்தானை மட்டுந்தானே சுத்தி வர்ற.. ஏன் உனக்கு சலிக்கலயா?” என தேள் கொடுக்காய் சட்டென்று வாய் விட்டாள் மைதிலி, கேலியாக.
பொறுமை இழந்தவளாய், “ம்மாஆஆ!!” என கடித்த பற்களுக்கிடையே வார்த்தையைக் கடித்துத் துப்பினாள் மான்ஷி.
‘சும்மாவே ஆடுவாளே!’ எனப் பயந்த சகுந்தலா, “வாயை மூடிட்டு சும்மாருக்க மாட்டியாடி? பேச்சா பேசுற.. வர வர உனக்கு வாய் துடுக்கு கூடிப் போச்சு..” என இளைய மகளை கடிந்து கொள்ள,
“எப்போ பாரு என்னையவே சொல்லுங்க!” என முகம் சுளித்தவள், “சாப்பிடறியா?” எனக் கேட்டு தட்டை நீட்டினாள் அக்காளிடம்.
தட்டில் நாலைந்து பஜ்ஜிகள் சுடச்சுட கமகமத்தன.
“எனக்கு வேணா!” என முகத்திலடித்தாற்போல் மறுத்தவளை வருத்தம் மேலிடப் பார்த்த சகுந்தலா,
“நீ பிரேக்ஃபாஸ்ட் கூட சாப்பிடலடி. நேரத்தைப் பார்த்தியா?” என அதட்ட, “பசிக்கலம்மா!” என்றாள் அயர்வான குரலில்.
“ஒரு வாய் சாப்பிட்டா தான் என்ன.. போனது தான் போனான். என் பொண்ணோட நிம்மதியையும் கூடவே எடுத்துக்கிட்டு போய்ட்டானே பாவிப்பய!..” என மனந்தாளாமல் புலம்ப,
“ஹாஹா, ம்மா! அவன் இருக்குறப்போ ஒன்னும் நான் நிம்மதியா இருந்துடல. கொஞ்ச நேரம் சும்மாருக்க மாட்டியா?” என சிரிப்புடன் கேட்டாலும், மான்ஷியின் நலிந்த குரலில் வேதனை இழையோடியது.
அதை சகுந்தலாவும் உணர்ந்தாள்.
“ம்மா, ஒருவேளை இவ அத்தை மாமாவோட கடைசி காரியத்துக்கு வரலங்குற கோபத்துல தான் அத்தான் இப்படி இருக்காரோ.. என்கிட்டயெல்லாம் நல்லா தானே பேசுறாரு?” என தனது ஊகத்தைக் கூறியபடி பஜ்ஜியை கடித்த மைதிலி,
“வர வர உன்கிட்ட டேலண்ட் கூடிட்டே போகுது மைதிலி! பாரு, எவ்ளோ டேஸ்ட்டியா பஜ்ஜி சுட்டிருக்க?” என தன்னைத் தானே மெச்சிக் கொள்ளவும் மறக்கவில்லை.
“அதெல்லாம் இல்ல. அப்பறம் கூட அவன் என்னைப் பார்க்க அப்ராட் வந்திருந்தான்..” என உடனடியாக மறுத்தவள்,
“அந்த நேரத்துலயே அவன் கிட்டே சொன்னேன், நான் வர தான் ட்ரை பண்ணேன். ஆனா அப்பா தான், அங்க போனதைப் படிச்சிட்டே வானு சொல்லி, நான் கள்ளத்தனமா புக் செய்து வைச்ச டிக்கெட்ஸைக் கூட சாமர்த்தியமா கான்செல் பண்ணி விட்டார்னு!..” என்றாள்.
மைதிலி, “அதுக்கு அத்தான் என்னனு சொன்னாரு?”
“இங்கே நீ என்கூட நின்னிருந்தா, ஆறுதல் என் பக்கத்துலயே இருக்குதேங்குற எண்ணத்துல நான் ரொம்ப உடைஞ்சி போயிருப்பேன்டி; என் கடமைகளை விட்டு நீங்கி இருப்பேன். சரி வர செஞ்சிருக்க மாட்டேன். நீ வீணாக் கவலைப்பட்டு உடம்பைக் கெடுத்துக்காதனு சொன்னான்..”
“அப்படியா சொன்னாரு?” என வியந்தாள் மைதிலி.
அவளைத் தன்னால் இயன்ற மட்டும் முறைத்தவள், “ஏன் ப்ரூவ் பண்ண எதுனா எவிடென்ட்ஸ் வேணுமா?” என்று கேட்டு வைக்க,
“தரலாம், தப்பில்ல..” என்றாள் மைதிலி.
“அம்மா, அவளை மூடிட்டு கிளம்ப சொல்லுங்க..” என தாயிடம் எகிறி விழுந்தவள் அப்போது தான் நினைவு வரப் பெற்றவளாக,
“யுகன் ஹைதராபாத் போற விஷயம் உனக்கு முன்னவே தெரியுமா என்ன? இல்லனா உனக்கும் லேட்டா தான் தெரிய வந்துச்சா..” என்று வினவ,
“போக முன்னவே தெரியும், உனக்கு தெரிஞ்சிருக்கும்னு நெனச்சேன்..” என்றாள் மைதிலி.
கூடவே, “ஹைதராபாத்ல இருந்து எனக்கென்ன வாங்கிட்டு வரணும்னு வேற கேட்டாரு. அவர் போறதும், வாங்கிட்டு வற்ரதும் புதிய விஷயமா என்ன.. நீங்களே பார்த்து வாங்கிட்டு வாங்கனு சொல்லிட்டேன்..” மேலும் விளக்கும் விதமாய் மூச்சு விடாமல் பேசினாள்.
மான்ஷியின் முகத்தில் வேதனையின் சாயல். ‘இவளை விடவா நான் மூனாவது மனுஷி ஆகிப் போய்ட்டேன்?’ என்ற நினைப்பே கசந்தது; கண்கள் கரித்தன.
“ஏன்ம்மா இப்படி?” என இயலாமையுடன் கேட்டவள் துக்கத்தில் கரகரத்த தொண்டையை நீவி விட்டபடி, தன்னையே விழி அகலாமல் பார்த்திருந்த மைதிலியிடம்,
“அங்க போனதுக்கு பிறகு, உன் அத்தான் கால் ஏதும் பண்ணாரா என்ன?” என ஆர்வமும், தவிப்புமாய் வினாத் தொடுத்தாள்.
ஆமோதிப்பாய் தலை அசைத்தவள் ஏதோ கூற வாயெடுத்த நேரத்தில், அவளது அலைபேசி அதிர்ந்து மந்தகாசமாய் இன்னிசைத்தது.
“அத்தான் தான் கால் பண்ணுறாரு..” என தமக்கையிடம் தகவல் கூறியவள் அழைப்பை ஏற்க முன்பே, “ஸ்பீக்கர்ல போடு மைதிலி..” என பணித்தாள் மான்ஷி.
“ஹாய் அத்தான்..”
“கியூட்டி ப்பை! என்ன பண்ணிட்டு இருக்கே.. நான் ஃபோன் பண்ணலைனா நீயாவது பண்ண மாட்டியா என்ன?” என அழைப்பேற்றதும் பாகாய் உருகியது யுகனின் குரல்.
‘மானும்மா..’, ‘அடியே மான்குட்டி..’, ‘மானு’ என குழைந்த அதே குரல் தான். கரடுமுரடாய், கடுமையாய் ஒலிக்கும் தொனியை மாத்திரமே இந்த ஓரிரு மாதங்களாய் செவியேற்று வந்தவளின் செவிகள், அந்த குரலின் இனிமையில் சட்டென்று சிலிர்த்தன.
“அச்சோ, அப்படிலாம் இல்ல அத்தான். நீங்க மீட்டிங் விஷயமா பிஸியா இருப்பிங்களேனு தான்..” என மன்னிப்பு இறைஞ்சும் குரலில் கூறிய மைதிலி, மான்ஷியின் பார்வைக்கான அர்த்தத்தைப் புரிந்து கொண்டவளாய்,
“அதெல்லாம் விடுங்க, எப்போ வருவீங்க அத்தான்?” என்க,
“ஹாஹா, நான் இப்போ வீட்டுல தான் இருக்கேன் கியூட்டி ப்பை.. உனக்கு ஏதேதோ வேணும்னு கேட்டியே! அதையெல்லாம் தாராளமா அள்ளிட்டு வந்தேன், வந்து வாங்கிக்கோ என்ன.. ” என்றான், யுகேந்த்ராவ்!
“வந்தேன்னு சொல்லவே இல்லையே அத்தான்!! ஈவினிங்கே வரேன்..” என துள்ளிக் குதித்தவளை பொறாமை பொங்கும் விழிகளால் சுட்டெரித்த மான்ஷியின் உடம்பெல்லாம் பற்றி எரிந்தது.
தங்கையாகவே இருந்தாலும், தன்னிடம் இல்லாத நெருக்கமும், அக்கறையும் அவளிடம் மட்டும் ஏன் என ஆத்திரமாய் வந்தது. ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவன் ஊருக்குத் திரும்பி விட்டதை எண்ணி மகிழவேனும் முடியாதபடிக்கு மனம் வெதும்பிப் போயிருந்தாள்.
“வா கியூட்டி! வர முன்ன எதுக்கும் ஒரு கால் பண்ணிட்டு வா என்ன.. ஒருவேளை நீ வீட்டுல இருக்காம விட்டா, நான் வரும் வரை நீ வெயிட் பண்ண வேண்டி வரும்ல?” அக்கறைப்பட்டான்.
‘பார்றா!’ என மனதினுள் கேலி செய்த மான்ஷியின் இதழ்களில் கேலிப் புன்னகை ஒன்று நெளிந்தது.
‘அவ வெயிட் பண்ணுறதைப் பத்தி இவ்ளோ யோசிக்கிறான். அவனுக்காக தானே வெட்கத்தை, மானத்தை எல்லாம் ஓரந்தள்ளி வைச்சிட்டு, நாக்கை தொங்க போட்டுக்கிட்டு வெயிட் பண்ணி சாகுறேன் நான் இங்க.. அது அவன் கண்ணுக்கு தெரியலையாமா!’
“குழைஞ்சது போதும்; பார்க்க சகிக்கலனு சொல்லு!” என மனம் பொறுக்காமல் கடுகடுத்தவள், “ச்சே!” என காலை ஓங்கி சோபாவில் உதைந்து விட்டு எழுந்து சென்று விட,
“அவ வருத்தப்படறானு தெரியும்ல? பிறகு ஏன் அவ முன்னாடி நீ கால் பேசி இன்னும் உசுப்பேத்தி விடணும்.. நீ ரொம்ப ஓவரா போற மைதிலி..” என கடிந்து கொண்டாள் சகுந்தலா.
“உம்பொண்ணுக்கு தான் ஏதோ காத்து கறுப்பு அடிச்சிருக்கும்மா. அதுக்கு போய் சும்மா என்னைத் திட்டலாமா சொல்லுங்க?” என சலித்துக் கொண்ட மைதிலி,
“இல்லனா நாயி மாதிரி துரத்தி அடிக்கப்பட்ட பிறகும், திரும்பத் திரும்ப அத்தானை துரத்தி தொந்தரவு பண்ணிட்டு இருப்பாளா சொல்லுங்க.
எப்பவும் சொல்றது தான்ம்மா, குறிச்சோ வைச்சிக்கோங்க. இப்போவே அவளைக் கூட்டிட்டு போய் ஒரு நல்ல மனநல வைத்தியர் கிட்ட காட்டறது நல்லது. இல்லனா அத்தான் பேரை சொல்லிட்டு ரோடு ரோடா அலையப் போறா!” என்க,
“என்னடி வாய் நீளுது?” என அடிக்கப் பாய்ந்தாள் சகுந்தலா.
‘என்ன பேச்சு பேசுகிறாள்..’ என அந்தத் தாயுள்ளம் பதறிய அதேவேளை, அழைப்பின் மறுபுறத்தில் நின்றிருந்தவனின் இருதயமோ ஒருகணம் தன் துடிப்பை நிறுத்திக் கொண்டது.
அந்த இதய நிறுத்தத்துக்குக் காரணம் மான்ஷியைப் பற்றி மைதிலி கூறிய எதிர்வுகூறலா.. அல்லது, “அடிக்காதம்மா!” என அடி வாங்கிய வலியில் மைதிலி அலறிய அலறலா.. அவனுக்கு தான் வெளிச்சம்.
இது இப்படியிருக்க, சற்று நேரத்துக்கு முன்பு ரோஷம் கொண்டு அறைக்கு ஓடியவளோ கண்ணாடி முன் நின்று,
“இந்த சுடி யுகனுக்கு புடிக்கும்ல?” என தன்னிடமே கேள்வி எழுப்பியபடி தன்னைத் தானே அழகு பார்த்து திருப்தி பட்டுக் கொண்டிருந்தாள்.
“ம்ம், கண்டிப்பா புடிக்கும்!” என வினாவுக்கான பதிலை தானே செப்பிக் கொண்டு அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கைப்பை சகிதம் அறை விட்டு வெளியே துள்ளியோடி வந்தவள்,
“அம்மா, யுகனைப் பார்க்க போறேன்..” என உற்சாகமாய் சமையலறையில் நோக்கிக் குரல் கொடுக்க,
“அய்யே! இன்னைக்கு தான் ஊருக்கே வந்திருக்கார். ஒரு நாலாவது அவரை நிம்மதியா இருக்க விட்டா தான் என்ன?” என வெளிப்படையாகவே முகம் சுளித்தாள் மைதிலி.
“நீ மூடு!” என எரிந்து விழுந்தவள், “வரேன்ம்மா..” என கூறிக் கொண்டு அகலப் பார்க்க,
“மான்ஷி!” என்ற சிம்மக்குரல் அவ்விடத்தை அதிரச் செய்தது.
நின்று திரும்பிப் பார்த்தாள். அறை வாசலில் கை கட்டி நின்று அவளை பார்வையாலே பஸ்பமாக்கிக் கொண்டிருந்தார் சிவதர்ஷன்.
“ரொம்ப கஷ்டம்..” என சோர்வாய் முனகியவள், “சொல்லுங்கப்பா!” என பற்களை வாடகைக்கு விட்டு அப்பாவியாய் கேட்க,
“எங்கே போற?” என்று கேட்டார். விடை தெரியாதாமே!
“யுகன் வந்திருக்கான்ப்பா. ஒரு வாரமாவே காணலல? அதான் ஒரு எட்டு அங்க போய் அவனைப் பார்த்து பேசிட்டு வரலாம்னு..”
“நீ எங்கேயும் போகல மான்ஷி. போ, போய் ஆக வேண்டிய வேலையை எதுனா இருக்குனா செய். அவனை பார்க்க போக கூடாதுனு அன்னைக்கே ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டேன்..”
கோபப்பட்டு ஆகப் போவது எதுவுமில்லை என்பதைப் புரிந்து கொண்டவளாய், “அப்பா..” என செல்லமாய் சிணுங்கியவள் அவரை மலையிறக்கும் எண்ணத்தோடு தந்தையின் ஒரு பக்க தோளில் குரங்குக் குட்டியாய் தொங்கினாள்.
மனம் இரங்கியவர், “இனிமே எங்கேயும் சுத்தித் திரியாத குட்டிம்மா. அடுத்த வாரம் பொண்ணு பார்க்க வருவாங்க..” என்றிட,
“யாரைப்பா? மைதிலியையா?” என்றாள் வெள்ளந்தியாய். இத்தனைக்கும் தந்தையின் இந்த முடிவு தனக்கானதென அறியாமலில்லை அவள்.
மகளை இஷ்டத்துக்கு முறைத்தவர், “நான் உன்னைப் பத்தி பேசிட்டு இருக்கேன் மான்ஷி..” என சத்தம் வைக்க,
“ஓஓ..” ஒரு மாதிரியாக இழுத்தவள், “ஆனா நான்தான் சம்மதமே சொல்லலியேப்பா? என் சம்மதம் இல்லாம பொண்ணு பார்க்க வர வைக்க யாரு உங்களுக்கு உரிமை கொடுத்தா..” என்றாள் யோசனையுடன்.
“யாரு கொடுக்கணும்? பெத்து வளர்த்த எனக்கு உன்மேல எந்த உரிமையும் இல்லனு சொல்ல வரியா என்ன?” என பொறுமை இழந்தவராய் சீறி விழுந்தார் சிவதர்ஷன்.
“ப்ம்ச், போங்கப்பா! சும்மா நேரங்கெட்ட நேரத்துல போய் காமெடி பண்ணிக்கிட்டு.. நீங்க தான் சின்ன வயசுலயே யுகனுக்கு என்னை நிச்சியம் செய்து வைச்சிட்டிங்களே.. பிறகு எப்படி உங்களுக்கெல்லாம் என்மேல உரிமை மிஞ்சியிருக்கும்?” என வினவி, அவர் மறந்ததை நினைவு படுத்த முயன்றாள் மான்ஷி
இருள் மூண்ட வானம் போல், சட்டென்று தர்ஷனின் முகமெங்கிலும் கருமை படர்ந்தது.
தொடரும்..
சாரளம் வழியாக கசிந்து வந்த கதிரொளி முகத்தில் பட்டதும், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவன் மெல்ல விழி மலர்ந்தான்.
கண்களைத் திறக்க மனமின்றி கட்டிலில் அங்குமிங்குமாய் உருண்டவன் அப்போது தான் நினைவு வந்தவனாக, “மானு..” என்ற அழைப்புடன் படக்கென்று கட்டிலில் எழுந்து அமர்ந்தான். மின்விசிறி சுழன்று கொண்டிருந்த காற்றோட்டமுள்ள அவ் அறைக்குள்ளும் வியர்த்து ஊற்றியது அவனுக்கு.
மான்ஷியை காணவில்லை என்றதுமே மன அழுத்தத்தில் மயங்கி விழுந்தவனைத் தாங்கி வந்து கட்டிலில் படுக்க வைத்திருந்தனர், ரேணுகாவும், சகுந்தலாவும். ருத்ரவன் மான்ஷியை வீட்டுக்கு அழைத்து வந்த பிறகே சிறியவனின் மயக்கம் தெளிவிக்கலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு.
இல்லையேல் மயக்கம் தெளிந்து அவன் கேட்கப்போகும் கேள்விகளுக்கு பதில் கூறியாக வேண்டுமே! கூடவே வீணாக மன அழுத்தத்தைக் கூட்டிக் கொள்வான் என்கின்ற பரிதாபம் வேறு..
“மானு..” என்ற அழைப்புடன் கட்டிலை விட்டுத் துள்ளி எழுந்தோடியவனின் கண்ணையோ, கருத்தையோ தான் கண் விழிக்கும் வரை அறைக்குள் காத்திருந்த பெற்றோர் கவரவில்லை என்பது நிஜம்! ‘மானு’ என்ற ஒருத்தி மட்டுமே நினைவில் நின்றாள்.
மகனின் பதற்றத்தைக் கண்டு கவலையுற்ற ரேணுகா, கணவனின் முகத்தை வருத்தத்துடன் ஏறிட, தாடையை தேய்த்தபடி ஆழ்ந்த யோசனையில் மூழ்கினார் ருத்ரவமூர்த்தி.
மகனின் நடத்தைகளும், அவன் மான்ஷி மீது வைத்திருக்கும் கரை காணாத, அளவுக்கு மீறிய பேரன்பும் அவரை சற்றே அசைத்துப் பார்த்தது; நெஞ்சில் பல விதமான எண்ணங்களைத் தோற்றுவித்து, பயத்தையும் விதைத்தது.
விடயமறிந்து யுகன் மன அழுத்தம் எகிறி மயங்கியே விட்டான் என்பதை ரேணுகாவின் மூலம் அறிந்து கொண்டவரால், அதை கிஞ்சித்தும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இத்தனைக்கும் அன்பு ஆயிரம் யானைகளுக்கு சமமான பலத்தைக் கொடுக்கும் அதேநேரம், இரத்தமும் சதையுமாக இருப்பவர்களை சுக்குநூறாக உடைத்து பலவீனப்படுத்தவும் செய்யும் என்பதை அறியாதவரல்ல.
‘அதற்கென்று அவள் சம்பந்தப்பட்ட விடயங்களில் இவ்வளவு பலவீனம் வேண்டாம்’ என மனதினுள் குறைப்பட்டுக் கொண்டார்.
மான்ஷிக்கு ஏதாவது ஒன்றென்றால் அவன் அவனாகவே இல்லை. நொடியில் அரக்கனாய் மாறி, சம்பந்தப்பட்டவனை வெளுத்து வாங்கி விடுகிறான். இந்த தீவிரம் ஆரோக்கியமான நிலையல்ல எனத் தோன்றியது அவருக்கு.
“என்னங்க..”
சிந்தனைக் குதிரைக்கு கடிவாளம் போட்டு இயல்புக்கு மீண்டவரின் பார்வை மனைவியின் கலக்க முகத்தில் கேள்வியாய் பதிந்தது. அவரது முகத்திலும் சோக மேகங்கள் சூழ்ந்து கிடந்தன.
“ஒரு சில மாதங்கள் முன்ன, நாம ஒரு வயசானவரை எதேச்சையா சந்திச்சோமே! கோயில்க்கு போய் வர வழியில வண்டி ரிப்பேராகி ரோட்டோரமா நின்னுட்டு இருக்கும் போது அவர் சொன்னது நினைவிருக்கா?” தயக்கமாக தான் கேட்டாள். இதை எதற்கு இந்த நேரத்தில் நினைவு படுத்தினாய் என சத்தம் வைப்பாரோ எனப் பயமாக இருந்தது.
‘சந்தனப்பாவையின்பால் மனம் உடையான் கொண்ட நேசமே நேசம்! விதி வசத்தால் பிரிவின் வாசனை நுகர இருக்கும் இரு இருதயங்கள். ஹாஹா, எப்படி சாத்தியம்? இவளுயிர் அவன் ஆன்மாவிலும், அவளுயிர் இவன் ஆன்மாவிலும் இரண்டறக் கலந்திருக்கும் போது பிரிவென்பது சாத்தியமா என்ன.. எல்லாம் அவன் செயல்!’
அன்று அந்த வயதானவர் கூறிய வார்த்தைகள் ருத்ரவனின் காதில் அட்சரம் பிசகாமல் ரீங்காரமிட்டன.
கூற வருவது என்னவென புரியாவிட்டாலும், நிலைமை தீவிரம் என்பது மட்டும் புரிந்தது. இருப்பினும், ‘கண்டதையும் எண்ணி மனதைக் கெடுத்துக் கொள்வானேன்?’ என கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். அந்த அலட்சியம் தான் தவறோ..
“ரெண்டு பேரும் ஒன்னா இருக்கலனா, யாராவது ஒருத்தங்களோட உசுருக்கு ஆபத்து வந்தே தீரும்னு சொல்ல வராருனு அன்னைக்கே சொன்னேனே! எனக்கு என்னமோ மனசுக்கு பயமாவே இருக்குங்க..”
அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்ட ருத்ரவன், “சும்மா யோசிக்காத! அப்படி எதுவும் இருக்காது. எதுக்கும் ஈவினிங் கோயில் போய்ட்டு வந்துறலாம்..” என்றார் நிதானமாக.
‘காலதேவன் அவர்களின் பின்னோடு நிழலாய் வலம் வந்து கொண்டிருக்கிறான். புத்திரன் உயிர் பிழைக்க நினைத்தால், முடிச்சு போட்டு இணைந்த இதயங்களின் பந்தத்தை மேலும் பலப்படுத்தி விடு!’ – இறுதியாய் அவர் கூறிய வார்த்தைகள் இவை!
எவ்வளவு தான் சாதாரணமாக இருக்க நினைத்தாலும், ம்ம்கூம் முடியவில்லை. இருவரின் அன்பும் அளவு கடந்ததென இதற்கு முன்பே பல தடவைகள் தோன்றி இருந்தாலும் ஏனோ இப்போது மனம் பதைபதைத்தது.
இருவரின் நிம்மதி, அன்றோடு தொலைந்து போனது.
அவர்களைச் சிந்தனைப் பாதாளத்தில் தள்ளி விட்டவனோ, வில்லினின்று புறப்பட்ட அம்பாய் மான்ஷியின் அறையை விரைந்து நெருங்கினான்.
கதவு சாற்றப்பட்டு இருந்தது.
“மானுஊ..” என்ற கூவலோடு கதவைத் திறந்தவனின் தவிப்புற்ற கண்களுக்கு, அன்று மலர்ந்த ரோஜாவாய் பஞ்சணையில் துயில் கொண்டிருந்த பெதும்பை விருந்தானாள்.
விடலையின் பார்வை கனிந்தது.
கதவை சாற்றிக்கொண்டு மெல்ல அவளை நெருங்கி வந்தவனின் ஊடுருவும் பார்வை, அவளின் முகம், கைகால்களில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை வெகு தீவிரமாக ஆராய்ந்தது.
அப்படி எதுவுமில்லை என்பதைக் கண்ணாரக் கண்ட பிறகு தான் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது அவனால். காணும் வரை உள்ளுக்குள் அவன் எந்தளவு துடித்தான் என்பதை அவனையன்றி வேறாரும் அறிய வாய்ப்பில்லை.
நெருங்கிச் சென்றால் உறக்கம் கலைந்து விடுமோ என எண்ணி, தள்ளி நின்று, மார்புக்கு குறுக்காக கைகளைக் கட்டியபடி அவளையே பார்வைக்குள் நிரப்பிக் கொண்டிருந்தவனின் தோளில் கரம் பதித்து,
“கண்ணா!” என்று தர்ஷன் அழைக்க,
“ஷ்ஷ்!” என அவசரமாகத் தடுத்தவன், “அவ தூங்குறா மாமா! சத்தம் போடாதீங்க. உறக்கம் கலைஞ்சிடப் போகுது..” என்றான் கிசுகிசுப்பான குரலில்.
தர்ஷனின் முகத்தில் புன்னகைக்கு மாற்றமாய், ஒருவித வருத்தம் பட்டவர்த்தனமாய் இழையோடியது.
சற்றே தள்ளி வந்து, “யாரு மாமா மானுவை கடத்திட்டு போனது?” என கண்களில் ஒருவித தீவிரத்துடன் வினவ,
“உன் அப்பாவுக்கு பகையாளிபா. நீ ஆம்பள புள்ளைங்குறதால மான்ஷியைக் கிட்னப் பண்ணிட்டாங்க. அவ ருத்ரவன் பொண்ணுனு நினைச்சிட்டாங்களோ என்னவோ..” என்றார் தர்ஷன், மழுப்பலாய்.
நடந்ததை மொத்தமாகக் கூறிவிட்டால் இவ்விடத்தில் பூகம்பமே வெடிக்கும் என மனம் எச்சரித்தது. கூடவே, ‘எதுவும் யுகேந்துக்கு தெரியாம பார்த்துக்கோ தர்ஷா. அவனுக்கும் இப்போ விவரம் புரியிற வயசு இல்லையா? உடனே கோபப்படுவான். பாப்பா விஷயத்துல அவன் எந்தளவுக்கு உணர்ச்சி வசப்படறான்னு தெரியும்ல..
சம்பந்தப்பட்டவனைத் தேடி கொல்லவும் தயங்க மாட்டான். வாய் பத்திரம்டா. எனக்குனு இருக்கிற சொத்து அவன் மட்டுந்தான். இந்த வயசுலயே போலீஸும் கையுமா அவன் அலையக் கூடாதுனு யோசிக்கிறேன்..’ என ருத்ரவன் கூறியது வேறு அவரை வாய் திறக்க விடாமல் தடுத்தது.
தர்ஷன் கூறியதைக் கேட்டு லேசாக இதழ் விரித்தவன், “அவளுக்கு எதுவும் ஆகலைல?” என்று செவி வழியாய் கேட்டு நிம்மதியடையும் பொருட்டு யோசனையுடன் வினவ,
“எதுவும் ஆகலபா, நம்ம போய் சேருற வரைக்கும் அரை மயக்கத்துல தூங்குறாப்புல கண்ணை மூடிட்டு நின்னுருக்கா. கண்ணைத் தொறந்தா எங்க அவங்க போட்டுத் தள்ளிடுவாங்கனு பயந்துட்டா போல..” என்றார்.
“அவ பெரியவ ஆகுனதும், மார்ஷியல் ஆர்ட்ஸ், கராத்தே எல்லாம் கத்து கொடுக்கணும் மாமா. அவளுக்கு அப்பாவைப் போல தைரியசாலியா இருக்க ரொம்ப புடிக்கும்..” என்றவனைப் பார்த்து ஆமெனும் விதமாகத் தலை அசைத்தவர்,
“அவ தூங்கட்டும் கண்ணா! நீ போய் அப்பறமா வா..” என அவனை அப்புறப்படுத்த முயன்றார்.
சட்டென்று யோசனை வயப்பட்டவன், “ஏன் இப்போ பார்த்தா ஆகாதா மாமா?” என ஒரு மாதிரியான குரலில் வினவ,
“அது.. அவ தூங்குறா!” என தடுமாறினார், தர்ஷன்.
“நான் அவளை எழுப்ப போறதுல்ல மாமா..” என்றவன் அவர் கூற வருவதைக் கேளாமலே சென்று மான்ஷியின் அருகே அமர்ந்து கொள்ள, அதற்கு மேலும் மறுக்க மனமில்லை பெரியவருக்கு.
‘சரிதான், போகட்டும்..’ என எண்ணியபடி அவ்விடத்தினின்று அகன்று விட,
“மானும்மா..” என பெயருக்கே வலித்து விடுமோ எனும்படி மென்மையிலும் மென்மையாய் சிறு குரலில் அழைத்தவன், துவண்டு வீழ்ந்திருந்த அவளின் கரங்களைத் தன் கைகளுக்குள் சிறை பிடித்துக் கொண்டான்.
“நீ ரொம்ப பயந்து போயிருப்ப இல்லையா? நீ இல்லனதும் என் ஹார்ட்டே நின்னு போன மாதிரி இருந்துச்சு. பாரு, இன்னுமே தாறுமாறா தான் துடிச்சுக்கிட்டு இருக்கு..” எனக் கூறியபடி அவளின் கரங்களைத் தன் இடது நெஞ்சில் வைத்து அழுத்தினான்.
“யுகன்..” உறக்கத்தில் முனகினாள் மான்ஷி.
“நான்தான். தூங்குனது போதும், கொஞ்சம் கண்ணைத் திறந்து பாரேன். என்கிட்ட பேசேன்டி..” என புலம்பியபடி குனிந்து பாவையின் பிறை நுதலில் முத்த அச்சாரம் பதித்தவனின் விழிநீர் அவளின் கன்னத்தில் துளியாய் சொட்டியது.
“யுகி..” சிணுங்கினாள்.
“நீ தைரியசாலி தான்! அதுக்குனு இனிமே எங்கயும் தனியா போயிடாத என்ன..” என்றவனின் மென்மையில் உருகியவள் மெல்ல நகர்ந்து வந்து, தாயின் மடி தேடும் குழந்தையாய் யுகனின் மடியில் தலை வைத்து, முகத்தை அவனின் வயிற்றோடு புதைத்தாள்.
“ஹே, சோம்பேறி! எழுந்திருடி. தூக்கம் தான் கலைஞ்சிருச்சில்ல?” எனக் கேட்டு வலிக்காதவாறு சிறியவளின் தோளில் பட்டென்று ஒரு அடி வைத்தவன்,
“ஸ்கூல் போகல?” என்று கேட்டது தான் தாமதம்,
“நேரம் என்ன?” என பதறிக் கொண்டு எழுந்தமர்ந்தவள், முற்று முழுதாக விடிந்திருந்த அதிகாலைப் பொழுதின் வெளிச்சத்தில் கண்கள் கூசி முகம் சுருக்க,
“மான்குட்டி..” என அவளின் கன்னம் கிள்ளினான் யுகன்.
“ப்ச், பாரு! விடிஞ்சிருச்சு. அம்மா என்னை ஓட விட்டு அடிக்க போறாங்க யுகன். ஏன் ஏர்லியா என்னை எழுப்பி விடல?” என குறைப்பட்டுக் கொண்டவள் கட்டிலை விட்டு எழுந்திருக்க முயல,
“பாத்ரூம் போகணுமா?” என்று வினவினான் யுகன், அவசரமாக.
“ஆமா! விட்டா இந்த இடத்துலயே பாஸ் பண்ணிடுவேன் போல யுகனு..”
சிரித்தவன், “வா, நான் கூட்டிட்டு போறேன்..” என அவளைத் தன் கைத்தாங்கலாக அழைத்து செல்ல முயன்ற போது தான், நேற்றைய நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாய் நினைவடுக்குகளில் தோன்றின.
சட்டென்று பொன்மேனி விறைத்தது.
உடல் வெடவெடக்க, “யுகன்..” என்றழைத்தவளின் முக மாற்றத்தைப் புரிந்து கொண்டவனாய், “என்னடி? என்ன பண்ணுது.. உனக்கு எதுவும் ஆகலைல..” என பதற,
“அந்த அங்கிள் என்னை.. என்..” என ஏதோ கூற வாய் திறந்தவள், கதவோரம் நின்று ‘சொல்லாதே’ என சைக்கினை செய்து கொண்டிருந்த தந்தையைக் கண்டு விட்டு,
“ப்பாஆஆ..” என்று அழைத்தாள் தவிப்புடன்.
“மான்ஷிம்மா..” என்று கொண்டே விரைந்து மகளை நெருங்கியவர், “என்னமா.. பாத்ரூம் போகணுமா? வா, நானே உன்னைக் கூட்டிட்டு போறேன்..” என யுகனிடமிருந்து மகளை பிரித்து நிறுத்த,
“அவ ஏதோ சொல்ல நினைக்கிறா மாமா. என்னனு கேளுங்க..” என அவளைத் தன்னிலிருந்து விலக்கி நிறுத்தியது கூட உறைக்காதபடிக்கு பதறித் துடித்தான் யுகன்.
“அவ ரொம்ப பயந்து போயிருக்கா.. இல்லம்மா மான்ஷி?” என மகளிடம் கேட்க, என்ன புரிந்ததோ ஆமெனும் விதமாகத் தலை அசைத்தவள் கூற வந்ததை அத்தோடு விழுங்கிக் கொண்டாள்.
கடத்திச் சென்றவர்களில் ஒருவன் அவளை தகாத முறையில் தீண்டியதைப் பற்றி, அவளை வீட்டுக்கு அழைத்து வரும் வழியிலே, அரை மயக்கத்தில் புலம்பியிருந்தாள் மான்ஷி.
அதைப் பற்றி எதையாவது மான்ஷி உளறி வைப்பாளோ என்று தான் தர்ஷன் பயந்து போனார். ஆனால் அரை மயக்கத்திலிருக்கும் போது நடந்தவை பற்றி அவளுக்கு எந்தவொரு நினைவும் இல்லை என்பது அவர் அறியாத உண்மை.
சாதாரணமாக, ‘நான் ரொம்ப பயந்து போயிருந்தேன். அவங்க என்னை ரொம்ப மெரட்டுனாங்க யுகன்..’ என்று தான் கூற வந்தாள். அதற்குள் அவர் தான் முகம் வெளிறிப் போகும் அளவுக்கு வீணாகப் பதறி விட்டார்.
ஆனால் ஈற்றில் ருத்ரவமூர்த்தி எதை எண்ணிப் பயந்தாரோ.. எதை எண்ணி தர்ஷனிடம் முன்னெச்சரிக்கை செய்தாரோ அதே விடயம் தான் நடந்தேறியது.
ஆம், தர்ஷன் தன்னிடம் எதையோ மறைப்பதைப் புரிந்து கொண்டு, தாயை வைத்து தந்தையிடம் விடயத்தைப் புத்தி சாதுர்யமான முறையில் கறந்தவன், சம்பந்தப்பட்டவனை தாக்கி கோமாவுக்கே அனுப்பி வைத்திருந்தான்.
இந்த விடயத்தில் உயிர் நண்பனான தினேஷிடம் கூட அவன் எந்தவொரு உதவியையும் பெற்றுக் கொள்ளவில்லை; அந்த ரவுடிகளின் இருப்பிடம் வரை தனியாகச் சென்று அவர்களது எலும்புகளை கச்சிதமாக எண்ணும் அளவுக்கு மூர்க்கனாகிப் போயிருந்தான்.
விடயம் அறிந்து பதறிப் போனார், ருத்ரவமூர்த்தி.
சமயோசிதமாக சிந்தித்து காவல்துறையில் பிரச்சனைகள் எழாதபடி சமாளித்தவருக்கு,
‘இதுக்கு மேலயும் நாம இங்க இருக்குறது நல்லதில்ல ருத்ரா! மான்ஷி விஷயத்துல யுக கண்ட்ரோல் இல்லாம இருக்கான். அவளால அவனுக்கு ஏதும் பாதகம் வந்திடுமோனு மனசு பதறுது. நம்ம வீட்டுக்கு போய்டறோம்டா..’ என்ற தர்ஷனின் முடிவே சரியென்று தோன்றியது.
அப்போது தான் பிரச்சனை பூதாகரமாய் வெடித்தது.
விடயம் தெரிந்து வானுக்கும் பூமிக்குமாய் குதித்தவன், “என்னையும் மானுவையும் பிரிக்க உங்க யாருக்கும் உரிமை கிடையாது. அவ எங்க இருப்பாளோ, அங்க தான் நானும் இருப்பேன்..” என ஆடிய ஆட்டமெல்லாம் கொஞ்ச நஞ்சமல்ல.
ஏற்கனவே தன்னிடம் அடி வாங்கி உடல் முழுதும் புண்ணாகிக் கிடந்தவனை மேலும் வருத்த எண்ணமின்றி ருத்ரவன் பற்களைக் கடித்தபடி பொறுமையோடு நின்றிருக்க,
“எந்நாளும் இங்கயே இருக்க முடியாதுல கண்ணா. அடிக்கடி வந்து பார்த்துட்டு போ! நீ பெரியவன் ஆகுனதும் மான்ஷியை உனக்கே கட்டி கொடுக்குறேன். அப்பறம் அவளை உன் கைக்குள்ள வைச்சுப் பார்த்துக்கோ..” என சமாளிக்கப் போராடிக் களைத்ததென்னவோ தர்ஷன் தான்.
ம்ம்கூம், சற்றும் அசைந்தானில்லை.
மறுப்புகள் எதிர்வாதங்கள் வலுக்க, தன் இடுப்பை கட்டிக் கொண்டு அழுது கொண்டிருந்தவளைத் தன்னிலிருந்து விலக்கி நிறுத்திய கோபத்தில் யுகன் அந்த விபரீதத்தை செய்தான்.
ஈற்றில் கையிலிருந்து அருவியாய் இரத்தம் வழிய, “எங்கே.. இப்போ அவளை என்கிட்ட இருந்து பிரிச்சி கூட்டிட்டு போங்களேன், பார்ப்போம்..” என்று சபதமிட்டான் வெற்றிச் சிரிப்புடன்.
அறைக்குள் இருந்த ஆளுயர கண்ணாடி சிதிலமடைந்து, டைல்ஸ் தரையில் துகள்துகளாகச் சிதறிக் கிடந்தது இரத்தத் திட்டுக்களோடு.
இனியென்ன.. ருத்ரவன் ஆடித் தீர்த்து விட்டார். மூன்றாம் உலகமகா யுத்தமே தலை தூக்கியது வீட்டினுள்!
எல்லாம் ஒரு முடிவுக்கு வர, மகனின் கட்டுப்போடப்பட்டிருந்த கையைப் பார்த்து மூக்கு சிந்திக் கொண்டிருந்த ரேணுகாவின் மனதில் அந்த வயோதிபர் கூறிய வரிகளின் உண்மைத் தன்மை வலுப்பெற்றது.
அவளை அமைதிப்படுத்த, யுகனுக்கு ஜோசியம் பார்த்தேயாக வேண்டுமெனப் புரிந்து கொண்டார் ருத்ரவன். அப்படியாவது சமன்பட்டால் சந்தோசம் என எண்ணிக் கொண்டு அவளை அழைத்துச் சென்றவருக்கு தலையில் இடி விழுந்த பிரமை!
அந்த வயதானவர் கூறிய அதே விடயம் மீண்டுமொரு முறை ஜோசியக்காரனால் உறுதிபடுத்தப்பட்டது.
யுகனின் பாதுகாப்புக் கேடயம், அவனின் உயிரோடு உடலோடு கலந்த மாளவிகா. அதாவது மான்ஷி மட்டுமே!
ரேணுகா அழுது கொண்டே இருந்தாள். அவளின் பிடிவாதத்தின் பிரகாரம், தனது பத்தொன்பதாம் வயதில் காலடி எடுத்து வைத்த யுகேந்திரனுக்கும், பதினான்கே வயதான மான்ஷிக்கும் நிச்சயம் செய்யப்பட்டது.
“சின்ன பசங்க..” என வருத்தப்பட்ட சகுந்தலாவுக்கு, தாம் வறுமையுற்று புகலிடமின்றி சுற்றித் திரிந்த காலங்களில் தெய்வாதீனமாய் கரம் கொடுத்தவர்களுக்கு பிரதியுபகாரம் செய்த மகிழ்வு இல்லாமல் இல்லை.
‘இருந்தாலும் இந்த வயதில்..’ நினைக்கும் போதே மனம் விம்மியது.
“ச்சு, சும்மாரு சகி!” என மனைவியை அதட்டிய தர்ஷன், முகம் விகசிக்க புதுப் பொலிவுடன் நின்றிருந்த யுகனைக் கண் ஜாடையால் அவளுக்குக் காண்பித்து விட்டு,
“எப்போவும் சந்தோசமா இருங்க!” என மனதார வாழ்த்தினார். மனதை வருத்திக் கொண்டிருந்த பாரமொன்று நெஞ்சை விட்டு அகன்ற உணர்வு!
“நான் என் மானுவை கண்ணுக்குள்ள வைச்சுப் பார்த்துப்பேன் மாமா. அவள்’னா எனக்கு உயிரு!” – இவை மான்ஷியின் கரம் பற்றிக் கொண்டு பத்தொன்பது வயது வாலிபன் உறுதி தொனிக்க கூறிய வார்த்தைகள்.
ஆனால் அந்த உறுதி வார்த்தைகள் இன்று பொய்ப்பிக்கப்பட காரணம் தான் என்னவோ..
தொடரும்..
சில வருடங்கள் முன்பு, குடும்பத்தினரின் மோசடிக்கு இலக்காகி ஒரு வேளை உணவுக்கு வழியின்றி ஸ்டேஷனுக்கு வந்திருந்தவர் தான் சிவதர்ஷன். ஐந்து மாத கர்ப்பிணியாக வயிற்றைத் தள்ளிக் கொண்டு அவரின் பின்னோடு வந்திருந்தாள் சகுந்தலா.
நம்பும் படியாக ஏமாற்றி, இவரிடம் இருந்த சொத்துக்களை மொத்தமாக தங்கள் பெயருக்கு மாற்றியமைத்துக் கொண்டதோடு, அவரை ஊரை விட்டே துரத்தி அடித்து விட்டனர் பணவெறி பிடித்த குடும்பத்தினர்.
அதற்கு சாட்சியாக, தர்ஷனிடம் எந்த ஆதாரங்களும் இல்லையென்றபடியால், பிரச்சனையை தீர்த்து அவருக்கு நியாயம் பெற்றுத் தர வழியின்றித் திணறிய ருத்ரவமூர்த்திக்கு அவர்மேல் பரிதாபம் எழுந்தது.
கர்ப்பமான மனைவி வேறு!
எதுவுமே செய்ய இயலாதென தானும் கை விரித்து விட்டால் உடைந்து போவார்கள் எனக் கருதி, நயமாகப் பேசிக் கதைத்து அவர்களை தன் வீட்டுக்கே அழைத்து வந்துவிட்டார் மூர்த்தி. அவருக்கு என்றுமே பிறருக்கு உதவுவதில் அதீத ஆர்வமுண்டு!
கணவனின் மூலம் நடந்ததை அறிந்து கொண்ட ரேணுகாவுக்கும் அவர்களின் மேல் தனிப்பிரியம் தலைதூக்கியது. கணவனுக்கு ஏற்ற மனைவி.
‘இத்துணை பெரிய பங்களாவில் அவர்களுக்கு தங்கிக் கொள்ள இடமில்லையா?’ எனக்கேட்டு அவர்களை அன்புற அரவணைத்துக் கொண்டாள். அப்போது யுகனுக்கு வெறுமனே ஐந்து, ஐந்தரை வயது தான்.
இத்தனை வருடங்கள் கடந்த பிறகும், இரு குடும்பத்தினரும் எந்தவொரு மனஸ்தாபமும் இன்றி ஒன்றாகத் தான் வசித்து வருகின்றனர்.
ருத்ரவனே தர்ஷனின் திறமையைக் கண்டு மெச்சி, ஒரு நல்ல அலுவலகத்தில் தன் செல்வாக்கை உயர்ந்த அளவில் உபயோகித்து வேலை வாங்கிக் கொடுத்திருந்தார்.
எப்படியோ அவரின் உதவியோடு வாழ்வில் முன்னேறி ஒரு தரத்துக்கு வந்த தர்ஷன், ‘அட்டையாய் ஒட்டிக்கொண்டு உங்களுக்கு தொந்தரவாய் இருக்க முடியாது..’ எனக் கூறிக்கொண்டு தான் சிறுக சிறுகச் சேமித்து சொந்தமாகக் கட்டிப் போட்ட வீட்டுக்கு குடிபுகப் பார்த்தாலும்,
‘என்ன பேசுறீங்கணா? நீங்க எல்லாரும் போய்ட்டிங்கனா அப்பறம் நானும் அவரும் உங்க பின்னாடியே, உங்க வீட்டுக்கு குடி பெயர்ந்துருவோம்..’ என செல்லமாக மிரட்டி, அவர்களைத் தங்களோடே நிறுத்திக் கொள்வதில் ரேணுகா பலே கில்லாடி!
இடைப்பட்ட காலத்தில் சகுந்தலா- ரேணுகாவுக்கு இடையில் தூய நட்பு வேர் விட்டிருந்தது. இரத்த தொடர்பின்றியே அக்கா, தங்கை என உரிமையோடு உறவாடும் ஆறுதலான அணைப்புகளும், தலை கோதல்களுமாய் மிக அழகியதொரு பந்தம்..
மறுபுறம் சிவதர்ஷன் மேல் எழுந்த பரிதாபம் காலப்போக்கில் அன்பாக மாற்றம் பெற்று, அவர்கள் இருவரும் கூட உற்ற தோழர்களாக உருமாறி இருந்தனர். விறைப்பாய் திரியும் போலீஸ்காரனிடம் உரிமையாக உரையாடும் தைரியம் தர்ஷனுக்கு மட்டுமே உள்ளது.
அன்று ஆற்றங்கரையிலிருந்து வீடு திரும்பிய கையோடு, “அந்த வாத்தி நம்ம மானுவை போட்டு அந்த அடி அடிச்சிருக்காருப்பா. அவனை முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே தள்ளுங்க..” என பதினாறு வயது சிறுவன் தந்தையிடம் அடம்பிடித்து நின்றான்.
ஓரிரு தடவைகள் மறுத்துப் பார்த்த ருத்ரவன், “அடங்க மாட்டியா? வாத்தி’னா அடிக்க தான் செய்வாங்க..” என அதட்டி, அதுவும் பயனளிக்காது போனதால் யுகனுக்கு நாலைந்து அடிகளைத் தாராளமாகக் கொடுத்திருந்தார்.
அவர் அடித்தது கூட வலிக்கவில்லை யுகனுக்கு. ஆனால் மானுவுக்கு கால்கள் தடிக்கும் அளவுக்கு அடித்தது தெரிந்தும் பெரிதாக கண்டு கொள்ளாமல் விட்டாரே என கவலையாக வந்தது.
அதிருப்தி கொண்டு, முதன்முறையாக தந்தையிடம் முகம் திருப்பியவனை, தந்தை ருத்ரவமூர்த்தி தனிப்பட்ட முறையில் கனகவேலைச் சந்தித்து அதட்டி விட்டுச் சென்ற விடயம் எட்டியிருக்க வாய்ப்பில்லை தான்.
‘இவர் கிட்ட சொல்லி எதுவும் நடக்கப் போறதுல்ல..’ என சலித்து, தானாகவே களத்தில் இறங்கினால் என்ன என யோசிக்கத் தொடங்கினான்.
*******
வெய்யோனின் தகிப்பு தணிந்திருந்த முன் அந்திமாலைப் பொழுது!
கண்களிலிருந்து பாதியாய் இறங்கி மூக்கில் தேங்கிய கண்ணாடியை சரி செய்தபடி, தோட்டத்திலிருந்த கல் இருக்கையில் அமர்ந்து மாணவர்களின் பயிற்சி புத்தகங்களை திருத்திக் கொண்டிருந்தார், கனகவேல். கணக்கு வாத்தியார்!
ஸ்கூலில் பாடம் எடுப்பதற்கே நேரம் சரியாக இருப்பதால் ஹோம் ஒர்க் எழுதி வரும் மாணவர்களின் புத்தகங்களை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வருபவர், மாலை நேரங்களில் ஓய்வாகி, கல் இருக்கையில் கால் மேல் கால் போட்டமர்ந்து கொண்டு அவற்றை சரி பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.
அவ்விடத்துக்கு அருகேயிருந்த புதருக்குள் இருந்து ஓணானாய் தலை நீட்டினான் யுகன்.
கனகவேலை பார்க்கும் போது கோபம் கோபமாக வந்தது அவனுக்கு.
“எவ்ளோ தைரியம் இருந்தா என் மானுவையே அந்த அடி அடிச்சிருப்பாரு?” என பற்களை நறநறத்தவனின் மனக்கண் முன் வந்து சென்றது, தடித்துச் சிவப்பேறியிருந்த மான்ஷியின் வாழைத் தண்டுக் கால்கள்.
தந்தையிடம் கூறி வேலைக்காகவில்லை எனப் புரிந்ததும், டியுஷன் முடிந்த கையோடு வீட்டுக்கு செல்லாமல் நேராக வாத்தியின் வீட்டுக்கு வந்திருந்தவன் அவர் பயிற்சி புத்தகங்களில் கவனமாய் இருப்பதை பார்த்து நகைத்தான்.
சுற்றும் முற்றும் பார்த்தவன், மண்ணோடு பாதியாய் புதைந்திருந்த பெரிய சைஸ் கல்லொன்றைத் தூக்கி வீசியடித்து, அவரின் வீட்டின் கண்ணாடி ஜன்னலை உடைத்து விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.
அவருடன் நேரில் மோதும் அளவுக்கு தைரியமில்லை. அதை விட, விடயம் அறிந்தால் ருத்ரவமூர்த்தி அடி பிளந்து விடுவாரென்ற பயம். அதனால் தான் இந்த வேண்டாத வேலை சிறியவனுக்கு.
“டேய்! யாருடா அங்க?” என்ற கனகவேலின் காட்டுக் கத்தல் அவனைப் பின் தொடர,
“என் மானுவையா அடிக்கிற? இன்னொரு வாட்டி அவளை அடிச்சா உங்க சொட்டை தலையில மாவரைப்பேனாக்கும்!” என காற்றோடு எச்சரிக்கை விடுத்தபடி மூச்சிறைக்க அவன் வந்து நின்றது தன் வீட்டுக்கு முன்னால் தான்.
குனிந்து, முழங்காலில் கைகளை ஊன்றி மூச்சு வாங்கியவன் நிமிரும் போது, கையில் பிரம்புடன் கண்கள் சிவக்க நின்றிருந்தார், ருத்ரவமூர்த்தி. யுகனுக்கு அச்சத்தில் ஒருகணம் இதயம் நின்று துடித்தது.
“அ.ப்..பா..” என அழைத்தவனின் தோளில் வலிக்காதவாறு ஒரு அடி வைத்தவர்,
“டியுஷன் போனவன் வீட்டுக்கு வர இவ்ளோ நேரமானது ஏன்?” என்று கேட்டபடி அவனது கைபற்றி இழுத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தார்.
எதிரில் இருப்பவர் வேறொருவராக இருந்திருந்தால் வாயில் வந்ததை அடித்து விட்டு, அவரை சாமர்த்தியமான முறையில் நம்ப வைத்திருப்பான். ஆனால் உயிரான தந்தையிடம் பொய் கூற நா எழவில்லை. தந்தையின் கோபமுகம் பார்க்கும் போதே தெரிந்து விட்டது, தான் பார்த்து விட்டு வந்த வேண்டாத வேலை பற்றி அவர் அறிந்து விட்டாரென்று!
“கேட்ட கேள்விக்கு பதில் வரல..”
தந்தையின் அதட்டலில் தெளிந்தவன், டைல்ஸ் தரையில் அமர்ந்திருந்த மான்ஷியையும், அவளின் தலை வாரிக் கொண்டிருந்த ரேணுகாவையும் பார்த்து விட்டு ருத்ரவனை ஏறிட்டான்.
அவரும் விட்டபாடில்லை. பதில் கூறியே ஆகவேண்டும் என்பது போல் விடாக்கண்டனாய் அவனையே ஊடுருவும் பார்வையால் துளைத்துக் கொண்டிருந்தார்.
இன்று தரமானதொரு சம்பவம் நடக்கப் போகிறதென யுகனின் மண்டைக்குள் அபாயமணி ஒலித்தது. மான்ஷிக்காக பேச வந்து, தந்தை நேற்று சாதாரணமாக முதுகில் போட்ட நான்கு அடிகளின் வலியே இன்னும் குறையவில்லை.
முதுகில் அவரின் ஐந்து விரல்களும் அழகாய் பதிந்திருக்கிறதென ரேணுகா இரவில் மூக்கு சிந்தி கண்ணீர் வடித்து முற்றாக ஒருநாள் கடந்திருக்கவில்லை. அதற்குள் இன்னொன்று..
தலையை திருப்பி மான்ஷியைப் பார்த்தான் மீண்டும்.
தட்டிலிருந்த மாதுளை முத்துகளை சுவைத்து கொண்டிருந்தவள் தன்னைப் பார்த்து உதிர்த்த புன்னகைக்காக எத்தனை அடிகளை வேண்டுமானாலும் வாங்கலாம் என்று தோன்றியது அவனுக்கு.
‘என் மானுவையே அடிச்சாருல?’ என ஆழ்கடலாய் பொங்கியவன், “அப்பா..” என்ற விளிப்போடு தந்தையை நோக்க,
“ஒரு உண்மையை மறைக்க ஆயிரம் பொய்கள் தேவைப்படும் யுகேந்த்ரா. பொய் சொல்லி தப்பிக்கிறதை விட, உண்மையை சொல்லி தண்டனை அனுபவிக்கிறது பெட்டெர். இது என் ஆசிரியர் சொல்லி கொடுத்த படிப்பினை!
நான் உனக்கு அப்பா இல்லையா? நீ என்ன பண்ணுவ, எதை பண்ணனும்னு யோசிப்பன்னு எனக்கு தெரியும். என் பார்வை எப்போவும் உன்னைச் சுத்தி தான் இருக்கும்..” என்றார் கேலியும், கண்டிப்பும் இரண்டறக் கலந்த குரலில்.
தலை குனிந்தவன், “வாத்தி மானுவை அடிச்சிருந்தாருல்ல அப்பா? அவ கால் சிவந்திருக்கு. பாவம் அவ..” என மறைமுகமாக தன் செயல் பற்றி விளக்க முயன்றான்.
அதன் பிறகு அந்த வீட்டினுள் இருந்து கேட்டதெல்லாம் யுகனின் கத்தலும், மான்ஷியும் அழுகையும், ரேணுகாவின் ‘என்னங்க..’ என்ற தவிப்புடன் கூடிய அழைப்புகளும் தான்.
“நான் தான் வேணாம்னு சொன்னேனே. வாத்தி திட்டுறாரு, அடிக்கிறாருன்னா அதுல ஒரு நல்லது இருக்கு. கேட்க மாட்டியா?”
“எப்போத்தில இருந்து அப்பா பேச்சையே மீறி நடக்க ஆரம்பிச்ச?”
“ஒழுங்கா வளரலை, நானே உன்னை கொன்னுடுவேன்..”
“நிலத்தை விட்டு வளரல, அதுக்குள்ள அப்பா பேச்சையே மீற ஆரம்பிச்சிட்ட! இங்க எனக்கென்ன மதிப்பு..”
ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு அடி வீதம் இழுத்து விளாசினார் மகனை. அவன் கண்ணீர் விட்டு அழவில்லை, ஆனால் ஒவ்வொரு அடிக்கும் தாங்கமாட்டாமல் அலறினான்.
“மாமா, யுகனை அடி..க்காதீங்க.” என்ற கதறலுடன் வந்து அவரின் காலடியில் சாஷ்டாங்கமாய் விழுந்தாள் மான்ஷி.
யுகன் சிவந்து போன கைகளை தேய்த்து விட்டபடி சுவற்றோடு ஒட்டி உடல் குறுக்கி அமர்ந்து கொண்டான்.
ருத்ரவமூர்த்தி இலகுவில் பிரம்பு தூக்க மாட்டார். தூக்கினால் இனி மரண அடி தான்! ஒவ்வொரு முறையும் அவன் அடி வாங்குவதற்கான பின்னணியில் குட்டி மான்ஷி தான் இருந்தாள்.
அவளைக் கலாய்த்ததற்காக பள்ளி மாணவனின் சீருடை கிழியும் அளவுக்கு மண்ணில் பிரட்டி உருட்டி அடி பிளந்ததால்..
‘அவளோட டிபன் பாக்ஸ்ல இருந்த சாப்பாட்டை எடுத்து சாப்பிட்டிருக்கான். அவளுக்கு பசிக்கும்ல..’ என எதிரில் இருந்தவனின் மூக்கிலே குத்து விட்டதால்..
‘இவ பென்சிலை எதுக்கு அந்த மங்கம்மா எடுக்கணும்? அவ எடுத்ததால தான் இன்னைக்கி சித்திர பாட டீச்சர் இவளை கிளாஸை விட்டு வெளிய அனுப்பிட்டா..’ என மங்கம்மா என பட்டப்பெயர் வைத்து அழைக்கப்பட்ட மீராவின் கூந்தலைப் பிடித்து பலங்கொண்ட மட்டும் பீய்த்து இழுத்ததால்..
‘அவ விளையாடற பாலை(ball) நீ எதுக்குடா எடுக்கணும்? பாரு, அவ அழறா!’ என பக்கத்து தெருவில் வசிக்கும் சமவயது தோழனின் முகத்தை உடைத்ததால்..
அப்படி இப்படியென, எப்படியோ மாதத்துக்கு இரண்டு முறையாவது ருத்ரவமூர்த்தியிடம் சரமாரியாக வாங்கிக் கட்டிக் கொள்வான்.
‘இனிமே யாரையும் கை நீட்டி அடிக்க மாட்டேன்ப்பா’ எனக் கூறுபவன், மற்ற தடவை மான்ஷி கண்களை கசக்கி விட்டால் தந்தைக்கு பண்ணி கொடுத்த சத்தியத்தை மறந்து சம்பந்தப் பட்டவனை/ளை புரட்டி விடுவான். பிறகினி வீட்டுக்குள் பூஜை தான்.
இது வாடிக்கையாகிப் போன ஒன்று! ஆதலால் தான் என்ன நடந்திருக்கும் என்பதை வெகு சாமர்த்தியமாக ஊகித்து, அதை அவனது வாயாலே கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டு ருத்ரவன் கண்டித்தது.
“பாவம் யுகன், அவனை அடிக்காதிங்க மாமா..” என ஒரே வரியை பற்பல விதங்களில் கண்ணீரும், கதறலுமாய் கூறியவளின் அழுகை, வாடி வதங்கியிருந்த யுகனைப் பார்க்கும் போது நொடிக்கு நொடி அதிகரித்தது.
“இனிமே நீ ஒழுங்கா ஹோம் ஒர்க் எழுதிட்டு ஸ்கூல் போகலைனா மாமா உன்னையும் இப்படி தான் அடிப்பேன்..” என்ற அதட்டலோடு விருட்டென்று நகர்த்தவரின் பார்வை, மகனை பார்த்து கண்ணீர் சிந்தி நின்ற ரேணுகாவை தழுவி மீண்டது.
அவரின் பார்வைக்கான அர்த்தம் புரியாதவளா என்ன அவரின் மனையாள்?
‘துணிப் பொட்டலத்தில் ஊதி, பிரம்பு பட்டு சிவந்திருக்கும் இடங்களில் வலிக்காதவாறு ஒற்றி எடு! காயமாக முன் மருந்திடு!’ என்ற செய்தியை அவளிடம் உணர்த்தி நின்றன, ருத்ரவனின் கண்கள்.
ரேணுகா தலை குனிந்தபடி அவரைக் கடந்து நடந்தாள்.
மகனை திரும்பிப் பார்த்த ருத்ரவனின் கண்களில் ஏக வருத்தம்! ஆனால் என்ன செய்வது? செய்யும் தவறை இப்போதே அதட்டி மிரட்டி திருத்தவில்லையெனில் பிறகொரு நாளில் சமூகத்தில் கெட்ட பெயரை தாங்கி வாழ வேண்டிய நிலை ஏற்படுமே என்ற பதைபதைப்பு.
அவனை அடித்துப் போடும் நாட்களில், ரேணுகாவோடு சேர்த்து அவருமே இரவு பூரா உறக்கம் தொலைப்பார்.
யுகன் தூங்கிய பிறகு அவனறைக்கு சென்று, தடித்திருக்கும் கையையும் காலையும் வருடிப் பார்த்து, கலங்கும் கண்களுடன் அவனது நெற்றியில் முத்தமிட்டு விட்டு வெளியே வருவார். அதன் பிறகு ஓரளவாவது கண்ணயர்வார்.
மகனை சில நொடிகள் பார்த்திருந்தவர் பெருமூச்சுடன் நகர்ந்து விட,
“அந்த மனுஷன் தான் வேணாம்னு சொன்னாருல்ல? நீ எதுக்கு வாத்தி வீட்டுக்கு போன..” என்று கேட்டபடி மகனின் கைகளுக்கு மருந்து தேய்த்து விட்டாள், ரேணுகா.
“அவரு மானுக்கு அடிச்சிட்டாரும்மா..” என வலியின் விசும்பலுடன் கூறியவன், ஈரம் காயாத மான்ஷியின் கன்னங்களைத் தன் டீஷர்ட்டை இழுத்து மென்மையாகத் துடைத்து விட்டான்.
இப்படி நாட்கள் அதன் போக்கில் கடந்து சென்றன.
அன்று மாலை நேர ஸ்விம்மிங் கிளாஸ் சென்று விட்டு வீட்டுக்கு வந்த யுகன், யாரும் அறியாமல் மான்ஷிக்காக வாங்கி வந்த ஆரஞ்சு மிட்டாயை எடுத்துக் கொண்டு அவளறைக்குச் சென்றான்.
வழமையாக அவள் ஸ்கூல் ஹோம் ஒர்க் செய்யும் நேரமிது! அன்று ருத்ரவன் யுகனை அடி வெளுத்ததில் இருந்து சாப்பிட மறந்தாலும், ஹோம் ஒர்க் எழுத மறக்க மாட்டேனெனும் அளவுக்கு பயந்து போயிருந்தாள்.
ஆயிரம் வேலைகள் தான் இருந்தாலும், மாலை நேரத்தை ஹோம் ஒர்க் செய்வதற்காகவென்றே தனித்துவமாய் ஒதுக்கி வைத்திருந்தாள். தன்னால், தன் உயிரோடு கலந்தவன் துன்பமுறுவதை அனுமதிக்க அவளென்ன முட்டாளா..
“ஹோம் ஒர்க் பண்ணற நேரமாச்சே! மானு எங்க போனா..” என தன்னிடமே கேட்டுக் கொண்டு சமையலறைக்கு சென்றவன், அங்கு பதட்டமாக நின்றிருந்த தாயையும், சகுந்தலாவையும் பார்த்து குழம்பிப் போனான்.
“ம்மா, மானுவை ரூம்ல காணோம். எங்க போயிட்டா?”
“இல்லைடா, கிளாஸ் விட்டு அவ வீட்டுக்கே வரல. எங்க போய்ட்டானு டென்ஷனா தேடிட்டு இருக்கும் போது தான் தெரிஞ்சுது, அப்பா மேல இருக்குற கோபத்துல பாப்பாவை யாரோ கிட்னப் பண்ணிட்டாங்கனு.. அப்பாவும், தர்ஷன் அண்ணாவும் பாப்பாவை அழைச்சிட்டு வர போயிருக்காங்க..” என யோசிக்காமல் பார்க்காமல் உண்மையை மறைக்காமல் புட்டுபுட்டு வைத்தார் ரேணுகா.
‘என்ன!’ என நொடியில் பதறி விட்டான் யுகேந்த்ரன்.
“இல்ல, மானுவுக்கு எதுவும் ஆகாது..” என மூச்சுவிட மறந்து இடையும்றாது முணுமுணுத்தவன், பதற்றத்தைக் குறைபதற்காக குவளையிலிருந்த தண்ணீரை மொத்தமாக வாய்க்குள் சரித்தான்.
“யாரும்மா கிட்னப் பண்ணி இருக்காங்க?” என்று மூச்சு வாங்க கேட்டவனிடம் பதில் கூற தயங்கிய ரேணுகா, அவனது இந்தப் பதட்டமும், தவிப்பும் கூட ஆபத்தானதோ என பயந்தாள்.
சாதாரண பதற்றமல்ல அது! முகத்தில் அருவியாய் வியர்வை வழிய, தொண்டைக் குழி ஏற இறங்க மேஜையின் ஓரத்தை அழுத்தமாக பற்றியபடி பதினெட்டு வயதேயான மகன் நின்றிருந்த கோலம் ஒருவித பயத்தை கொடுத்தது, அவனைப் பெற்ற தாய்க்கு.
“அவ இருக்குற இடம் தெரிஞ்சிடுச்சு. நீ டென்ஷன் ஆகாத தம்பி! பாப்பாவுக்கு எதுவும் ஆகாது..” என சகுந்தலா முந்திக் கொண்டு கூறிய எதுவும் அவனது காதில் ஏறவே இல்லை.
தலையை பற்றியபடி அப்படியே தரையில் மடங்கி அமர்ந்தவனிடமிருந்து, “மானுவுக்கு ஏதாவது ஆச்சு.. அப்பறம் நா..நான் எவனையும் சும்மா விட மாட்டேன்..” என்ற வெஞ்சின சபத வார்த்தைகள் வெளி வந்தன.
அயர்வாய் மெல்ல சுவற்றில் தலை சாய்த்தவன், “மானு..” என்ற முனகலோடு அடுத்த கணமே நான்காக மடிந்து, தொப்புக்கடீரென்று மயங்கி விழுந்திருந்தான்.
தொடரும்..
விடிய காலையிலே வெளிக் கிளம்பிச் செல்வதற்கென ஆயத்தமாகி வந்து உணவு மேஜையில் அமர்ந்தவளை குறுகுறுவெனப் பார்த்தார் சிவதர்ஷன்.
தந்தையின் பார்வையை உணர்ந்து, “ஏம்ப்பா அப்படி பார்க்குறீங்க?” என்று கேட்டவாறு சகுந்தலா தட்டில் வைத்த தோசையை விள்ளி உணவு கேட்டு சத்தமிட்ட வயிற்றை காயப்போடாமல், வாயில் வைத்தாள் மான்ஷி.
“எங்கேம்மா கெளம்பிட்ட?” என்றவரின் குரல் மாற்றத்தை அவள் உணரவில்லை என்றாலும் சகுந்தலா சரியாகவே கண்டு கொண்டாள். சட்டென்று பயம் துளிர்த்தது நெஞ்சோரத்தில்..
“வேற எங்க தான் போக போறேன்ப்பா? யுகனைப் பார்க்க தான்..”
“ஏன்!” என ஆதங்கமாய் அவர் குரல் வெளிப்பட,
“ஏன்னா கேட்குறீங்க? ஏன்ப்பா உங்களுக்கு தெரியாதா என்ன..” என துணுக்குற்று எதிர் வினா எழுப்பியவளின் குரலில் கேலி கூத்தாடியது.
தட்டில் கையைக் கழுவியபடி, “இனிமே நீ அவனைப் பார்க்க போகக் கூடாது..” என்று இழுவையாய் நிறுத்த,
“ஏன் போக கூடாது?” என சற்றும் அலட்டிக் கொள்ளாமல் கேட்டு அவரின் இரத்த அழுத்தத்தை ஏற்றிவிட்டபடி தோசையை மென்று விழுங்கினாள்.
வித்தியாசமாய் எதுவுமில்லை. அவ்வப்போது இருவரும் காரணமின்றியே முட்டிக் கொள்வது சகஜம் தான். ஆனால் என்றுமில்லாதவாறு ‘யுகன்’ என்ற தலைப்பை முன்னிறுத்தி ஏதேனும் புதிதாய் கிளம்பி விடுமோ என்ற அச்சம் சகுந்தலா நெஞ்சை ஆட்டிப் படைத்தது.
“எதிர்த்து கேள்வி கேட்காத மான்ஷி. இனிமே நீ அங்க போக கூடாது; அவனைப் பார்க்க கூடாது. அவ்ளோ தான் சொல்லுவேன்.
பேசாம வீட்டுல கிட! வீட்டுல இருக்க போரடிக்குதுனா சொல்லு, நான் ஒரு நல்ல ஆஃபீஸா பார்த்து வேலைக்கு ஏற்பாடு பண்ணுறேன். அப்ராட் அனுப்பி உன்னை படிக்க வைச்சது அவன் பின்னால நாயா அலைஞ்சு திரிஞ்சி நேரத்தை வீணாக் கரைக்க இல்ல..”
“ஓ, கமான் டேட்! நான் ஏன் அவனைப் பார்க்க போக கூடாதுங்கறீங்க?” என பெரிதாக விரிந்து கொண்ட விழிகளோடு வினவியவளை சில நொடிகள் கூர்ந்து பார்த்திருந்தவர்,
“நீ ஏன் அவனைப் பார்க்க போகணும்னு சொல்லு..” என்றார், ஏளனம் சொட்டிய குரலில்.
“இதென்ன கேள்விப்பா? அவனைத் தானே சின்ன வயசுல நீங்க விரும்பி எனக்கு முடிவாக்குனீங்க..” என்றவளை, ‘திடீர் திடீர்னு என்னாகுது இவருக்கு?’ என்ற வினா ஆட்கொண்டது. கூடவே கோபமும் வந்தது.
“காலம் மாறிப் போச்சு மான்ஷி. அவன் உன்னைத் தூசா கூட பொருட்படுத்த மாட்டேங்குறான். தோள்ல தூசு படிஞ்சா அதை தட்டி விடறதுக்காகவாவது பார்வையை தாழ்த்தி தோளைப் பார்ப்போம்.
ஆனா நீ உன் மனசைத் தொட்டு சொல்லு, அவன் அப்படியாவது உன்னை பார்க்கறானா? லவ்வு, லவ்வருனு சொல்லிட்டு நீதான் அலையிற.. இந்த அவமானமெல்லாம் உனக்கு அவசியமா குட்டிமா?
கடல்ல ஒரேயொரு மீன் தான் இருக்கா என்ன.. ஊருலகத்துல வேற யாரும் என் பொண்ணுக்கு கிடைக்காமலா போய்ட போறான்?” என்று சிறிதான குரலில், இழுத்துப் பிடித்த பொறுமையோடு வினவினார்.
தொண்டைக்குழி தாண்டி இறங்க மறுத்த தோசையை தண்ணீர் விழுங்கி உள்ளே தள்ளியவள், “ஆனா அந்த ஒத்தை மீனைத் தான் எனக்கு அப்போத்துல இருந்தே புடிக்கும்ப்பா..” என்றாள், குறும்பு சொட்டும் குரலில்.
சிவதர்ஷனின் பொறுமை மெல்ல காற்றோடு கலக்கத் தொடங்கியது.
“ஒன்றென்ன.. ஆயிரம் பேர் கிடைப்பாங்க. ஆனா எல்லாரும் என் யுகனைப் போல ஆகிடுவாங்களா அப்பா? இல்லேன்னா எல்லார் மேலயும் எனக்கு லவ்வு தான் வந்திடுமா சொல்லுங்க..
நீங்க என்ன சொல்ல வர்றீங்கனு புரியுது. எஸ், இப்போல்லாம் அவன் என்னைக் கண்டுக்குறதே இல்ல தான், ஆனா என்னால அவனை விட்டு ஒதுங்கியிருக்க முடியாம இருக்கு. அதுவுமில்லாம, இந்த ஒதுக்கத்துக்கு ஏதோவொரு வலிட் ரீசன் இருக்கும்னு தோணுது.
என் கால்ல முள்ளு குத்துனாலும், பிழிய பிழிய அழறவன். எனக்காக விவரம் புரியிற வயசுலேர்ந்து ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செய்து கொடுத்தவன். அவனோட அன்புக்கு நிகரே இல்லப்பா.
அவனை ஏதோவொன்னு என்கிட்ட நெருங்க விடாம தடுக்குது. யூ க்னோ? நான் அவனுக்கு.. அவனோட அன்புக்கு, காதலுக்கு அடிமையாகிட்டேன். ஒத்துக்கறேன் அப்பா, எனக்கு வெட்கம்ங்குறதே இல்ல தான்..” மான்ஷியின் குரல் கரகரத்தது.
பேச்சு திசை மாறிப் போவதை உணர்ந்து, “மான்ஷி..” என்ற அழைப்போடு சட்டென்று இடை புகுந்தாள் சகுந்தலா. அவள் முகத்தில் முத்து முத்தாய் வியர்வைத் துளிகள் அரும்பின.
“இரும்மா! பதறாத! சொல்ல வந்ததை மொத்தமா சொல்லி முடிச்சிடறேன்..” என தாயின் முகம் பாராமலே கூறியவள், தன்னைக் கலக்கமாய் பார்த்திருந்தவரை ஏறிட்டுப் பார்த்தாள்.
ஒருவேளை சகுந்தலாவின் முகம் கண்டிருந்தால், தாயின் பதற்றம் தணிப்பதற்காகவேனும் பேச்சை அத்தோடு முடித்துக் கொண்டிருப்பாளோ என்னவோ..
சகுந்தலா வியர்வை ஊற்றெடுத்த நெற்றியைப் புடவைத் தலைப்பால் துடைத்துக் கொண்டாள். மகளின் பிடிவாதத்தையும், கணவனின் கோபத்தையும் நன்றாகவே அறிந்தவளல்லவா?
“அவனை துரத்தி துரத்தி லவ் பண்றதொன்னும் எனக்கு அவமானம் இல்லை அப்பா. இன்னைக்கு இல்லைன்னாலும் என்னைக்கோ ஒருநாள், அவன் என்னை புரிஞ்சிப்பான். நான் அவனுக்கு பொண்டாட்டினு மனசார ஏத்துக்குவான். அதை நீங்களும் பார்க்க தான் போறீங்க. அன்ட் ஐம் சியூர், அன்னைக்கு நீங்க ரொம்ப சந்தோசப்படுவீங்கப்பா..” என்றவள் மேற்கொண்டு அவ்விடம் நின்றிருக்க இஷ்டமின்றி சாப்பிட்ட பாதி, சாப்பிடாத பாதியாய் எழுந்து நகர்ந்தாள்.
“அப்படி நடந்தா நான் சந்தோசப்படாமலா இருக்கப் போறேன்?” என தர்ஷன் அயர்வாய் புலம்ப,
“சாப்பிடாமலே எழுந்து போயிட்டா..” என மகளின் பசி தீர்ந்திருக்க மாட்டாதே என வருந்தினாள் சகுந்தலா.
அவளை முறைத்தவர், “நான் எதை சொல்லுறேன், நீ எதைப் பேசுற! பார்த்தியா, உன் பொண்ணு அப்பானு இல்லாம எவனோ ஒருத்தனுக்காக என்ன பேச்சு பேசிட்டு போறானு?” என எகிறிக் கொண்டு வர,
“ஏதோ நான் மட்டும் மெனக்கெட்டு பெத்துக்கிட்ட மாதிரியில்ல பேசுறாரு?” என நொடித்துக் கொண்டாள், அவரின் மனையாள்.
இங்கே, சிங்கில் கையை கழுவிக் கொண்டு நீரருந்தவும் மறந்து சமையல் மேடையில் ஏறி, தலையை இருகைகளால் பற்றியபடி தலை குனிந்து அமர்ந்திருந்தாள் மான்ஷி.
“இவர் மட்டும் அன்னைக்கு நான் ஊருக்கு வரணும்னு சொன்ன நேரத்துல, படிப்பு அது இதுனு மழுப்பாம அதுக்கான ஏற்பாடுகளை செஞ்சி தந்திருந்தா, யாருமில்லாம உடைஞ்சி போயிருந்தவனுக்கு நானாவது ஆறுதலா இருந்திருப்பேன்.
இப்போ பாருங்க, எப்படி முரடனா ஆகிப் போய்ட்டான்னு! ஈ, எறும்புக்கு கூட தீங்கு நினைக்காதவன் தானே என்னோட யுகன்?” என வருந்தியவள் அறியாமல் போன விடயம் தான், இன்றும் கூட யுகேந்த்ராவ் யாருக்கும் துன்பம் இழைக்கவில்லை. மாற்றமாக சமூக பிரச்சனைகளுக்கு மூல காரணமாய் இருப்பவர்களைத் தான் அழித்து ஒழித்துக் கொண்டிருக்கிறான் என்பது!
‘ஆயிரம் தடைகள் வந்தாலும், நீங்க ரெண்டு பேரும் ஏழேழு ஜென்மத்துக்கும் ஒன்னாவே இருக்கணும்னு கன்னம் தட்டி வாழ்த்தி, நீ எனக்கு பையன்டானு என் யுகனை கொஞ்சிட்டு திரிஞ்சவர் தானே?
என்னை விட, அவன் மேல தானே அப்பாவுக்கு பாசம் ஜாஸ்தி. என்ன நடந்திருக்கும்? அத்தை, மாமா காரியத்துக்கு என்னை வர விடாம தடுக்கும் போதே ஏதோ பிரச்சனைனு என் மனசு சொல்லுச்சு.
ஆனா அதை உறுதிப் படுத்துறாப்புல தான் யுகனோட நடத்தை, அப்பாவோட திடீர் வெறுப்பு, கோபம்லாம் இருக்கு..’ என பலதையும் சிந்தித்தவளுக்கு, என்ன ஏதென்று தெளிவாகப் புரியாது விடினும் ஏதோவொன்று இருக்கிறதென புலப்பட்டது.
யுகனுடனான பால்ய பருவ நினைவுகளை இரை மீட்டும் பிராணிகளைப் போல், நினைவூட்டிப் பார்த்தாள்.
கனத்துக் கிடந்த நெஞ்சம் சட்டென்று இளகிப் போன உணர்வு! தொலைந்து போயிருந்த மென்முறுவல் மீண்டும் அவளது இதழில் குடியமர்ந்தது.
என்னே வாழ்க்கை.. எத்தனை அருமை அருமையான தேனொழுகும் நினைவுகள். கடந்து வந்த காலங்கள் அரிதிலும் அரிது; அழகிலும் பேரழகு என கோஷமிட்ட மனமோ, மெல்ல மெய்யுருக்கிய நினைவுகளில் மூழ்கிப் போனது.
****
தாமரை மொட்டுக்கள் குவிந்து, ஆம்பல் மலர்கள் மலர ஆரம்பித்திருந்தது அந்த ஆற்றங்கரையில்..
சலசலத்து ஓடிக் கொண்டிருந்த ஆற்று நீரில் விழுந்து மங்கலாக சிரித்துக் கொண்டிருந்தாள், அப்போது தான் அவனியை எட்டிப் பார்த்த வளர்பிறை நிலவவள்.
“யுகன் எனக்கு இந்த கணக்கு புரியவே மாட்டேங்குது. ஹோம் ஒர்க்கு செஞ்சிட்டு போகலைன்னா கணக்கு வாத்தி வேற அடி வெளுக்குறாரு. ப்ளீஸ் இதை எனக்கு சொல்லிக் கொடுக்கிறியா?” என தன்னருகே கேட்ட கிளிக் குரலில்,
“மானு..” என்ற விளிப்புடன் சட்டென தலை தூக்கிப் பார்த்தான் யுகன்.
நிலவொளி வெளிச்சத்தில், ஆற்றங்கரை மணலில் சம்மணமிட்டு அமர்ந்து, மெனக்கெட்டு பாதியாய் கட்டி முடிந்திருந்த பட்டம் அவனின் கையினின்று நழுவி விழுந்தது.
முழங்கால் வரைக்குமான வெள்ளை நிற சட்டை அணிந்திருந்தாள். அவளின் முட்டைக் கண்கள், செவ்விதழ்களை விட அதிகமாய் கதை பேசியது அவனிடம். இரவு நேரத்தில் கூட ரோஜா மொட்டுக்கள் மலருமா என வியக்கும்படியாக இருந்த அவளின் ரோஜா நிற இதழ்களின் அழகோ தனி.
நிலத்தை விட்டு உயராமல், குட்டையாக, கொழுகொழு பொம்மை போல் சுற்றிக் கொண்டிருப்பவளின் கொஞ்சும் தமிழும், நாக்கு நுனியில் கொச்சையாய் வந்து விழும் ஆங்கிலமும் அவள்பால் யாருக்கும் மனதை லயிக்கச் செய்துவிடும்.
“கண்ணுல போடற கண்ணாடியை மூக்குக்கு இறக்கி, இடுக்கு வழியா அவர் முறைச்சு பார்க்குறப்பவே பயந்து வரும் யுகன்..”
முகம் சுருக்கி கவலையாய் கூறியவளைப் பார்த்து நகைத்தவன், சட்டையை அள்ளிக் கொண்டு தன்னருகே அமரப் போனவளிடம்,
“இங்கே உக்காராத மானு. உன் ட்ரெஸ் வயிட் கலர்ல இருக்கு. மண்ணுல உக்காந்தா மஞ்ச கலர்ல கறை படிஞ்சிடும். அப்பறம் அத்தை உன்னை திட்டுவா..” என்றான் அக்கறையாய்.
இதழ் பிதுக்கி ஆமெனும் விதமாகத் தலை அசைத்த மான்ஷி, “அப்போ என்னை இப்படி நிறுத்தி வைச்சிட்டே பாடம் சொல்லி கொடுக்க போறியாடா? என் காலு வலிக்குமே!
ஏற்கனவே கணக்கு வாத்தி அடி அடின்னு அடிச்சதால என் முட்டிக்கு மேல ஒரே புண்ணா இருக்கு..” என தயங்கியபடி கூறினாள்.
கூறும் போதே ‘இனிமே ஹோம் ஒர்க்கு பண்ணிட்டு வருவியா?’ என்று கேட்டுக் கேட்டு அடி பிளந்த கணக்கு வாத்தியாரின் முகம் கண் முன்னால் வந்து நின்று அவளை பயமுறுத்தியது.
“அ.. அடி வாங்குனியா?” பதறினான் யுகன்.
அவசரமாக, பாதியாகக் கட்டி வைத்திருந்த பட்டத்தின் வண்ணத் தாளை கிழித்து மணலின் மீது வைத்தவன், “உக்காரு மானு..” என கூறிக்கொண்டே அவளைத் தன்னருகே அமர்த்திக் கொண்டான்.
தந்தை கண்டால் அடி பிளந்து விடுவார் என்ற பயத்தில், அவர் அசந்த நேரம் பார்த்து ஆற்றங்கரைக்கு ஓடி வந்து ஆசை ஆசையாக கட்டிய பட்டத்தை நொடியும் சிந்தியாமல் கிழித்து பாய் விரிக்கும் அளவுக்கு, சிறியவனுக்கு அந்த சிட்டுக்குருவி மீது அன்பு.. பாசம்..
“தேங்க்ஸ் யுகன்..” என மற்றது மறந்து, மலர்ந்து சிரித்தாள் மான்ஷி.
எதையும் உணராதவனாய், “உனக்கு ரொ.. ரொம்ப வலிக்குதா?” என்று கேட்டபடி, சட்டையை முட்டிக்கு மேலாக கொஞ்சமாக உயர்த்திப் பார்த்தான்.
கணக்கு வாத்தியின் பிரம்பின் உதவியுடன் ஆங்காங்கே சிவப்பேறி வாழைத் தண்டுக் கால் தடித்துப் போயிருந்தது. பார்த்ததும் நொடிப் பொழுதில் கண்கள் கலங்கிப் போயின.
“ரொம்ப வலிக்குதாடி? நீ ஏன் ஹோம் ஒர்க் பண்ணாம ஸ்கூல் போகணும்.. எல்லாத்தையும் வந்து வந்து கேட்குறவ தானே? இதை ஏன் கேட்காம விட்ட மானும்மா. நான் என்ன அவ்ளோ தொலைவுலயா இருக்கேன். ஒரே வீட்டுக்குள்ள இருந்துக்கிட்டு.. ப்ச், என்ன மானு நீ.. சொல்லித்தானு கேட்டிருந்தா நான் எழுதி கொடுத்திருப்பேன் இல்ல..” என குரல் நடுங்க படபடத்தவனைப் பார்த்து கலகலவென சிரித்தவள்,
“அழாத! அழாத! முதல்ல இதை சொல்லிக் கொடு. இப்போ நீ இந்த கணக்கை சொல்லித் தராமவிட்டா நாளைக்கும் இதே மாதிரி அடி வாங்கிட்டு வருவேனாக்கும்..” என்றாள்.
அனைத்தையும் ஓரந்தள்ளி விட்டு, அவள் கேட்டதைத் தெளிவாக, தனக்கு தெரிந்த எல்லா முறைகளிலும் சொல்லிக் கொடுத்தவன், “புரிஞ்சிதா?” என்று வினவியபடி பெருமூச்சுடன் நிமிர்ந்தான்.
அவளின் அழகு முகம் அஷ்டகோணலாய் வளைந்து போயிருப்பதைக் கண்டதுமே தான் சொல்லிக் கொடுத்த எதுவும் அவளுக்குப் புரியவில்லை என்று புரிந்து போனது. அவளின் முக பாவனைகளை வைத்தே உள்மனதை அறியும் ஆற்றல் அவனுக்கு மட்டுந்தான் உண்டு!
“என்ன மானு.. புரியலையாடி?”
இல்லையென்று பாவமாய் தலை அசைத்தாள் மான்ஷி.
சலித்துக் கொள்ளாமல், இன்னும் ஒருசில தடவைகள் அவளின் தலையில் கொட்டிக் கொட்டி சொல்லிக் கொடுத்ததன் பின்னர், ஒரு வழியாக புரிந்ததெனத் தலை ஆட்டினாள் மான்ஷி.
அவள் தலை ஆட்டிய வேகத்தில், கழுத்து வரைக்குமான குட்டை முடியை வகிடெடுத்துப் பிரித்து இருபுறமாக பின்னி, பின்னல் நுனியில் கட்டி இருந்த ரிப்பன் அவிழ்ந்து அலங்கோலமாகியது.
“சரி, இப்போ நீ எழுது..” என்றவன் சரியென்று விட்டு நிலவொளி வெளிச்சத்தில் எழுத ஆரம்பித்தவளைப் பார்த்து புன்னகைத்தபடி அவளின் அவிழ்ந்த ரிப்பனைக் கட்டி விட்டான்.
பற்களைக் காட்டி சிரித்தவள் அப்போது தான் நினைவு வரப் பெற்றவளாக, “பட்டம் கட்டத் தான் ஆத்தங்கரைக்கு வந்தியா?” என்று கேட்க, ஆமோதிப்பாய் தலை அசைத்தான்.
“ஓ, பட்டத்தை ரொம்ப கஷ்டப்பட்டு கட்டி இருப்பே இல்ல? பார்த்தியா.. இப்போ என்னால அதுவும் இல்லாம ஆச்சு உனக்கு.” என மூக்குறிஞ்சினாள்.
“ம்ப்ச், விடுடி! நாளைக்கு பார்த்துக்கலாம். அதில்லை, அந்த வாத்தி எதுக்கு உன்னை இந்தளவுக்கு அடிச்சு வைச்சிருக்காரு? அப்பா கிட்ட அவரை ஜெயில்ல அடைங்கனு சொல்ல போறேன். அவர் ஒன்னும் சும்மா ஆளில்லை. கமிஷனர் ஆஃப் போலீஸ்..” என்றான் தீவிரமான முக பாவனையோடு.
உண்மைதான், ருத்ரவமூர்த்தி! பெயரைப் போலவே, எங்காவது ஓரிடத்தில் எந்நேரமும் ருத்ர தாண்டவம் தான் ஆடிக் கொண்டிருப்பார். ஊராருக்கு கடவுள்.
‘பிரச்சனைனு வந்துட்டா தீர்த்து வைக்க தான் நம்ம ஐயா இருக்காரேய்யா.. இதுக்கு மேல என்ன கவலை?’ – இது அந்த ஊராரின் வாயிலிருந்து அடிக்கடி உதிரும் வார்த்தைகள். அந்தளவுக்கு மதிப்பும், நம்பிக்கையும், மரியாதையும் வைத்திருந்தனர் அவர் மீது.
விடிந்தது முதலே முறைப்பும், விறைப்புமாய் திரிந்தாலும், சிறிய விடயங்களுக்கெல்லாம் திட்டி அதட்டித் தீர்த்தாலும் அவர் மேல் கொள்ளை இஷ்டம் யுகேந்த்ராவுக்கு.
‘யுகேந்த்ரா!’ என்ற தந்தையின் சிம்மக்குரல் காதில் விழுந்த நொடி எங்கிருந்தாலும் இரண்டே நொடிகளில் அவர் முன் ஆஜராகி விடுவான். அதற்கு பெயர் பயம் என்பதை விட, அதீத அன்பும், மதிப்பும் எனக் கூறிவிடலாம். அவனுக்கு எல்லாமுமானவர். தாயை விட தந்தையிடம் தான் அதிக ஒட்டுதல்.
தொடரும்..
மான்ஷி அதீத கோபத்தில் வீசியடித்த ஜாடி காற்றில் பறந்து வந்து அவனைத் தாக்கி விட்டுக் கீழே விழுந்துடைந்து நாலாபுறமும் சிதறிப் போனது.
அவன் கையில் காயமாகி இரத்தம் வெளியேற ஆரம்பித்ததும், வீசி அடித்தவளுக்கே உயிர் வரை வலி கண்டது தான் விந்தை!
ஜாடி தன்னை நோக்கி வீசப்படுவதைக் கண்டதும் நகர்ந்து நிற்பான். பிறகு அந்த ஜாடி மீண்டும் தன்னை நோக்கியே வீசியெறியப்படும் என்றல்லவா நினைத்தாள்? கல்லுளி மங்கன் போல் நின்ற இடத்திலே நின்றிருப்பான் என கனவா கண்டாள்..
“ஐயோ யுகன், ரத்தம்!” என பதறிக் கொண்டு வந்தவளின் கண்களில் மாலை மாலையாய் வழிந்தது, கண்ணீர்.
அவளின் காட்டுக் கத்தலில் தான், நடந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் உறைந்து நின்றிருந்த மிதுனா என்ற சிலைக்கு உயிரே வந்தது. யுகனை ஏறிட்டுப் பார்த்தவள் கையில் இரத்தம் வழிய அவன் நின்றிருந்த கோலம் கண்டு அதிர்ந்து கண்களை இறுக பொத்திக் கொண்டாள்.
“ஐயோ யுகன், உன் கைல பிளட் வருது. அதான் வீசி அடிக்கிறேன்னு தெரியுதுல? அப்பறம் அப்படியே நின்னுட்டு இருப்பியா பைத்தியம்! நீ என்ன லூசாய்யா?”
வார்த்தைக்கு வார்த்தை மூக்குறிஞ்சியபடி விம்மலுடன் பேசியவள், அவனின் கை பற்றி, காயத்திலிருந்து வழிந்த இரத்தத்தைத் தன் துப்பட்டாவால் துடைத்து விட்டாள். காயம் பட்டது அவனுக்கு, ஆனால் வலியின் தாக்கத்தில் துடித்துப் போனதென்னவோ அவள்..
“சாரிடா..” என கண்ணீர் வழிய மன்னிப்பு இறைஞ்சியவள் அழுதழுது மூச்சிறுகிப் போய் இடது கையால் மெல்ல நெஞ்சை நீவிக் கொண்டாள்.
மூச்சை ஆழமாக இழுத்து வெளியேற்றியவாறு உள்ளே ஓடப் பார்த்தவளின் இடை வரை வளர்ந்த கூந்தலைப் பற்றி இழுத்து நிறுத்தியவன்,
“ஆக்ட்டிங் போதும்! இப்போ நீ வீட்டுக்கு கிளம்பு..” என அலட்டிக் கொள்ளாமல் சிடுசிடுத்தான், யுகன்.
“ஆக்ட்டிங்கா?” என்று கேட்டவளுக்கு அழுகையையும், கோபத்தையும் மீறி சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வந்தது.
“ஆகட்டிங் இல்ல?” என்று தன்னிடமே கேட்டுக் கொண்டு கண்களை துடைத்தபடி விரக்தியாகச் சிரிக்க முயன்றவள், அவன் முடியைப் பற்றி இழுத்துக் கொண்டிருப்பதால் எழுந்த வலியில் சட்டென முகம் சுணங்கினாள்.
“ஸ்ஸ்ஸ்..” என பற்களைக் கடித்து வலியை விழுங்கிக் கொண்டவள் அவனின் கைகளுக்குள் சிறையாகி பாடுபட்டுக் கொண்டிருந்த முடியை ஒரே இழுவையாக இழுத்து விடுவித்துக் கொண்டு வீட்டினுள் ஓடினாள்.
அடுத்த அரை நிமிடத்தில் முதலுதவிப் பெட்டியோடு அவன் முன் வந்து நின்றவள், அவனது உஷ்ண முறைப்பை சற்றும் கண்டு கொள்ளாமல் மருந்து கட்டி விட முயல, அவள் கையைத் தட்டி விட்டவன்,
“மிதுனாஆ..” என்று உச்சஸ்தாயியில் கத்த, அவ்வளவு நேரம் இருவரையும் ஆவென வாய் பிளந்து பார்த்திருந்தவள் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.
“ஃபர்ஸ்ட் எயிட் பாக்ஸை அவ கைல கொடுத்துட்டு மரியாதையா இங்கேருந்து கிளம்பு. என் பொறுமைய சோதிக்காத!” என அதட்டியவன் இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்ற குறிப்புடன் விறுவிறுவென வீட்டினுள் சென்று விட்டான்.
கோபத்தில் புசுபுசுவென மூச்சு வாங்கியவள், “எல்லாம் உன்னால வந்தது. எனக்கும் அவனுக்கும் இடைல ஆயிரம் சண்டைகள் இருக்கும்; கோபம் இருக்கும்; ஏன் வெறுப்பு கூட இருக்கும். ஆனா நீ வந்து குறுக்கா நிற்க வேண்டிய அவசியமில்ல மிதுனா. அப்பறம் உன் அம்மாப்பாவுக்கு அவங்க பொண்ணு இல்லாமலே போய்டுவா..” அவனை நெருங்க முடியாத இயலாமையைக் கொட்டித் தீர்க்க, அவளைப் பயப்பார்வை பார்த்து வைத்தாள் மிதுனா.
யுகனையே பயமின்றி தாக்கியவளாயிற்றே! தன்னைத் தாக்க முடியாத கோபத்தில் தான் ஜாடியை அவனை நோக்கி விட்டெறிந்தாள் என அவளுக்குப் புரியாமலில்லை.
“அவன் ரொம்ப ரோஷக்காரன். இப்போ நான் போகலைன்னா மருந்து கட்டிக்காம, கைல வழியிற ரத்தத்தை கூட துடைக்காம அப்படியே உக்காந்துட்டு இருப்பான். ஸோ போறேன். மருந்து போட்டு விட்ட கையோட நீ இடத்தை காலி பண்ணிட்டு போயிட்டே இருக்கணும். இனி இந்த பக்கம் மறந்தும் கூட எட்டிப் பார்த்திடாத! என்னை கொலைகாரி ஆக்காதே மிதுனா.” என கட்டளையாய் கூறியவள் முதலுதவி பெட்டியை அவள் கையில் திணித்து விட்டு நகர்ந்தாள்.
மிதுனா பெருமூச்சுடன் வீட்டினுள் நுழையும் போது, கூடத்து சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கையில் வழியும் இரத்தத்தை வெறித்துக் கொண்டிருந்தான், யுகன்.
“யுகன் சார்!” என்ற அழைப்புடன் அவனை நெருங்கிச் செல்லவென்று காலடி எடுத்து வைத்தவள் அவன் பார்த்த பார்வையில் அவ்விடமே தேங்கி விட, கை நீட்டி முதலுதவி பெட்டியைக் கை காட்டினான்.
“உங்க கைல..” என பதற்றமாகப் பேச வந்தவளை முறைத்தவன், “உன் வேலை எதுவோ, அதை மட்டும் பாரு மிதுனா..” என்றான் அழுத்தமாய்.
மேற்கொண்டு விதண்டாவாதம் செய்ய தைரியமின்றி முதலுதவிப் பெட்டியைக் கொடுத்து விட்டு அவனுக்கு சற்றுத் தள்ளி சோபாவில் அமர்ந்து கொண்டாள், கைகளைப் பிசைந்தபடி.
பற்களைக் கடித்து வலியை தனக்குள் புதைத்தபடி காயம்பட்ட கையில் மற்றொரு கையால் சுயமாகவே கட்டுப் போட்டுக் கொண்டான் யுகன். இடையிடையே பதறி தன்னருகே வந்து நின்றவளை தீப் பார்வை பார்த்து தூர நிறுத்தவும் மறக்கவில்லை.
•••••••
நிலத்தில் விழுந்து வலியால் துடி துடித்துக் கொண்டிருந்தவனை ஆசை தீரப் பார்த்திருந்தான் யுகன். காயம்பட்ட கையில் கட்டு போட்டுக் கொண்டதும் அடுத்ததாய் அவன் வந்து நின்றது இந்த இடத்துக்கு தான்!
அவனின் கியூட்டி ப்பை’யை தொட்டவனை அப்படியே விட்டு விட அவன் ஒன்றும் அவ்வளவு நல்லவன் இல்லையே!
ஏற்கனவே அவனைப் பற்றி ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் காதில் வந்து விழுந்திருக்க, ‘சரிதான் விட்டுப் பிடிக்கலாம்’ என நினைத்திருந்தவன் அந்தப் பொறுப்பை அப்படியே இந்தரிடமே ஒப்படைத்தும் விட்டிருந்தான்.
ஆனால் மைதிலியிடம் வம்பு வளர்த்து அவளது கைப் பற்றியது பத்தாதென்று அவளின் கூந்தலை வேறு பிடித்திழுத்திருக்கிறானே! அவள் வலியில் துடித்துப் போயிருக்க மாட்டாளா என அவளை விட இவன் தான் சினந்தான். அவளது கசங்கிய முகத்தைக் கற்பனை செய்து பார்த்தவனுக்கு இவனைக் கொன்று விட வேண்டுமென்று தான் ஆசை பிறந்தது.
“எவ்ளோ தைரியம் இருந்தா பொண்ணுங்க கையைப் பிடிச்சிழுப்ப.. பொண்ணுங்கன்னா அவ்ளோ இளக்காரமா போச்சா உனக்கு?” என்று கேட்டவன் ஜீவனற்று நிலத்தில் விழுந்திருந்தவனது கையில் ஷூக் காலால் அழுத்தம் கொடுக்க,
“அம்மாஆஆஆ.. ” எனப் பெருங் குரலெடுத்துக் கதறினான், குமரனின் மகன்.
“ச்சை, அம்மானு சொல்லாதடா..” என பற்களைக் கடித்தவனின் கண்கள் கலங்கிச் சிவப்பேறின.
இருவரையும் ஓரமாய் நின்று வேடிக்கை பார்த்திருந்த இந்தருக்கு யுகனின் கோபம் அதீத பயத்தைக் கொடுக்க, எச்சிலைக் கூட்டி வறண்டு போயிருந்த தொண்டையை ஈரப்படுத்திக் கொண்டவன், “யுகி பையா..” என்றழைத்தான், இறங்கிய குரலில். அவன் அழைத்தது அவனுக்கே கேட்காத நிலையில் சிங்கமாய் கர்ச்சித்து நின்றவனுக்கு கேட்டிருக்க முடியுமா என்ன..
“ஃபர்ஸ்ட் அன்ட் லாஸ்ட் வார்னிங்! இன்னொரு வாட்டி உன்னைப் பத்தி ஒரு சின்ன கம்ப்ளைன்ட் என் காதுல வந்து விழக் கூடாது..” என விரல் நீட்டி எச்சரிக்கையாய் கூறியவன் நாவை மடித்து,
“ஜாக்கிரதை!” என சீறி விட்டு விருட்டென்று அங்கிருந்து வெளியேறி விட, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க தொப்பென்று நிலத்தில் அமர்ந்தான் இந்தர்.
என்ன நடக்குமோ.. ஏது நடக்குமோ என்ற யோசனையில் ஒழுங்காய் மூச்சு விடக் கூட மறந்து போயிருந்தான் அந்த அப்பாவி.
பெண்களை லேசாகத் தொட்டவனின் கையையே கதறக் கதற துண்டித்து தூர எறிபவன் மைதிலியை நடு சாலையில் வைத்து வம்பு செய்தவனை விட்டு வைக்க மாட்டான் என உறுதியாய் நம்பினான். ஆனால் அவன் அடித்து மிரட்டியதோடு விட்டு விட்டுச் சென்று விட்டானே..
‘நாம் நினைத்தது என்று தான் நடந்திருக்கிறது? நினைப்பது ஒன்று.. நடப்பது ஒன்று!’ எனப் பெருமூச்சு விட்டவன்,
“உனக்கு இது தேவையாடா? நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்திருந்தா லைஃபைக் கூட சந்தோசமா வாழாம இப்படி பாதிலயே முடமாகி கிடப்பியா?” என்றான்.
குரலில் அத்தனை ஆதங்கம்..
எதற்கு இந்த வீண் வேலை? உன் பாட்டில் இருந்திருக்கலாமே.. இவ்வளவு நாள் குடியால் உடம்பைக் கெடுத்துக் கொண்டிருந்தவன் பெண்ணைத் தொட்ட.. இல்லை தொட்டு கலாய்க்க நினைத்த ஒரே காரணத்தினால் முடமாகியே விட்டானே என அவன் மேல் பரிதாபப் படாமல் இருக்க முடியவில்லை இந்தரால்.
“அது அவனோட விதி! இவனைப் பார்த்து இன்னும் நாலு பேர் நடு ரோட்டுல பொண்ணுங்க கிட்ட வம்பு பண்ணுறதை நிறுத்திடுவாங்க..” என முதுகுக்கு பின்னே ஒலித்த யுகனின் சிம்மக் குரலில் வாரி சுருட்டிக் கொண்டு எழுந்து நின்றான். போகிறேன் என்று சென்றவன் மீண்டும் வந்து நிற்பான் என அவன் எங்கே அறிந்தான்?
“ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய், நல்ல ட்ரீட்மென்ட் கொடுத்துடு..” வலியில் முனகிக் கொண்டிருந்தவனைப் பார்த்தவாறே இந்தரிடம் கூறியவன் அவனின் பதிலை எதிர் பாராமல் அங்கிருந்து சென்று விட,
“உங்களை புரிஞ்சிக்கவே முடியல பையா!” அழாத குறையாய் முணுமுணுத்தான் இந்தர்.
தவறென்று ஒன்றைக் கண்டு கொண்ட நொடியில் சம்பந்தப்பட்டவனை அடி வெளுத்து விட்டு, காயமாகியவனை ‘ஹாஸ்பிடலில் சேர்த்து விடு ‘ எனக் கூறினால் பாவம் இவனும் என்னதான் செய்வான்? சரியென்று தலை அசைத்து விட்டு கூறுவதை கூறியபடியே செய்து முடிப்பவன் இரவில் காமினியிடம் புலம்பித் தள்ளுவான்.
அதற்கென்று மனதளவில் சாதாரணமாகவேணும் யுகனை வைதது கிடையாது. அவனது எந்தவொரு செயலிலும் அதிருப்தியில் முகம் சுழித்ததும் கிடையாது. செய்தவன் அனுபவிக்கட்டுமே என ஆழ்மனம் கூறிவதைக் கேட்டு தன்னைத் தானே ஆறுதல்படுத்திக் கொள்வான்.
பக்கவாத நோயாளியைப் போல் கையையும் காலையும் இழுத்துக் கொண்டிருந்தவனை அள்ளித் தோளில் போட்டுக் கொண்டவன், ஒப்படைக்கப்பட்ட வேலையை செய்து முடிக்கவென அங்கிருந்து கிளம்பினான்.
*******
இருள் அடர்ந்த நேரத்தில் சமையலறையில் பாத்திரம் உருட்டிக் கொண்டிருந்தாள், சகுந்தலா.
இரவுணவை தயாரிப்பதற்கென வெட்டி வைத்திருந்த காரட் துண்டுகளை நறுக் நறுக்கென கடித்த வண்ணம் சமையலறையின் படியில் ஏறி அமர்ந்து ஆழ்ந்த யோசனையில் இருந்தாள், மான்ஷி.
யோசனை முழுவதும் யுகனை சுற்றித் தான் வலம் வந்தது. கைக் காயம் என்னவாயிற்றோ.. இந்நேரம் உணவு உட்கொண்டு இருப்பானோ.. என்ன செய்து கொண்டிருப்பான்.. அந்த ரோஷம் கெட்டவள் மிதுனா அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டிருப்பாளா, இல்லையா.. பெயின் கில்லர் மருந்து போட்டிருப்பானா.. அதைப் போட்டிருந்தால் கொஞ்சமாவது வலி குறைந்திருக்குமே.. என பலவாறெல்லாம் சிந்தித்துக் கொண்டிருந்தவளின் தொடையில் வலிக்கும்படி கிள்ளி வைத்தாள், சகுந்தலா.
தொடையில் சுள்ளென்று வலித்ததும் தான், விரண்டோடிக் கொண்டிருந்த சிந்தனைக் குதிரை ஓரிடத்தில் மூச்சிறைக்க நின்றது போலும், “ஸ்ஸ்..” என வலியில் முகம் சுருக்கியபடி தாயை முறைத்தாள்.
“அப்படி என்னடி யோசனை உனக்கு?”
“ப்ச்!” என சலித்துக் கொண்டவள் கை நீட்டி சோம்பல் முறித்தபடி,
“வேற எதைப் பத்தி தான் யோசிக்க போறேன்ம்மா? எவ்ளோ அன்பா இருந்தான்.. மைதிலியை விட என்னைத் தான் ரொம்ப புடிக்கும் யுகனுக்கு. ஆனா இப்போ என்னைக் கண்டுக்குறதே இல்ல, பார்த்தியா? கண்டாலே வள்ளுனு எரிஞ்சு விழறான். ஏன்ம்மா..
படிப்புக்காக நான் அவனை விட்டுட்டு அப்ராட் போயிருக்கவே கூடாதும்மா. அதான் அவன் இப்போ என்கிட்ட பேசாமலே இருக்கானோ, என்னவோ..” என்றாள், தன்னை சிந்தனைக்குள் மூழ்கடித்துக் கொண்டே..
“அப்படி சொல்லவும் முடியாது கண்ணம்மா. நீ அப்ராட் போன பிறகும் கூட வாரா வாரமோ, மாசம் ரெண்டு தடவையோ தவறாம உன்னைப் பார்க்க வந்தானே? திடீர்னு தான் இப்படி ஆகிட்டான். பாவம் யுகி தம்பி!”
ஆமோதிப்பாய் தலை அசைத்தாள், மான்ஷி.
“அப்பாம்மாவை ஒரே டைம்ல இழந்ததுக்கு பிறகு தனிமைல இருந்து இப்படி முரடனா ஆகிப் போய்ட்டான், மான்ஷி. நீங்க போய் உங்க வீட்டுல இனி தங்கிக்கோங்கனு திடீர்னு ஒருநாள் வந்து சொன்னதும், நாங்களும் அதான் சரினு யோசிச்சி நம்ம வீட்டுக்கே வந்துட்டோம்.
அப்போ நம்ம கூடவே தங்கிக்கோப்பானு சொன்னேன்; கேட்கல. எத்தனையோ வாட்டி நானாகட்டும், உன் அப்பாவாகட்டும்! போய் கூப்பிட்டு பார்த்தும் எதுவும் வேலைக்கு ஆகல. ஒரேயடியா மறுத்துட்டான்.
அவங்க இறப்பு பிறகு தம்பி அவ்ளோவா நம்ம வீட்டு பக்கம் வந்து போகல. நானோ, உன் அப்பாவோ போனாலும் முகம் கொடுத்து பேசல.
ஆனா மைதிலி கூட பேசினான்; அடிக்கடி ஃபோன் பண்ணி மணிக் கணக்கா பேசி சிரிப்பான்; இவளும் அங்க போய் வருவா! தம்பி இங்க வரதுனாலும், அவளைப் பார்க்குறதுக்காக மட்டுந்தான் வந்தேன்னு சொல்லுவான்.
இப்போல்லாம் யாருக்கிட்டயும் ஒட்டி பழக பயப்படறானோ என்னவோனு தோணுது, மான்ஷி! ருத்ரா அண்ணாவை அவனுக்கு எவ்ளோ புடிக்கும்னு உனக்கு தான் தெரியுமே..”
ஆமெனும் விதமாகத் தலை அசைத்தவளுக்கு, இடைப்பட்ட காலத்தில் ஏதோவொன்று நடந்திருப்பதாய் உள்ளுணர்வு உறுத்தியது.
யாரிடமும் நெருங்கிப் பழக பயப்படுகிறான் என்றே வைத்துக் கொண்டாலும், அப்படியாயின் மைதிலியிடமும் கூடத் தானே அளவோடு பழகி இருக்க வேண்டும்? ஆனால் அன்னை கூறுவதை வைத்துப் பார்த்தால், அதற்கு தலை கீழாக அல்லவா நடந்திருக்கிறது?
காலையில் ஷாப்பிங்மால் சென்றிருந்த இடத்தில் நடந்த விடயம் பற்றி மைதிலி அன்னையிடம் கூறக் கேட்டாளே..
நடந்த சம்பவம் கேள்வியுற்றதும் அவளைக் காண ஓடோடி சென்றிருக்கிறான் என்றால்! ம்ம்கூம், மேற்கொண்டு சிந்திக்காமல் அயர்வோடு தலை சிலுப்பிக் கொண்டாள், மான்ஷி.
“மான்ஷி!” என நான்காவது முறையாக அழைத்து பார்த்துவிட்டு தோளில் ஒரு அடி வைத்து, மீண்டுமொரு முறை இயல்புக்கு அழைத்து வந்தாள், சகுந்தலா.
“ஹான்!!” எனத் தெளிந்து திருதிருத்தவள்,
“அத்தை, மாமா இறந்ததுக்கு அப்பறம் என்னைப் பார்க்க வந்தவன், எனக்குன்னு உன்னைத் தவிர வேற யாருமே இல்லைனு எவ்ளோ அழுதான் தெரியுமா? அந்த அழுகை இன்னுமே என் கண்ணுக்குள்ள இருக்கும்மா. ரொம்பவே உடைஞ்சு போயிருந்தான்.
அன்னைக்கு வந்து என்னை பார்த்து பேசிட்டு போனவன் பிறகு எனக்கு ஃபோனே பண்ணல; நான் பண்ணினாலும் எடுத்து பேசல; திடீர்னு அவொய்ட் பண்ண தொடங்கிட்டான்.
என்மேல எதுனாலும் கோபமோ நினைச்சுக்கிட்டு, இங்க வர என்னாலான முயற்சிகளை எல்லாம் செய்தேன். அப்பா, இருந்த அத்தனை வழிகளையும் அடைச்சு, என்னை இங்க வர விடாம பண்ணாரு!
சரிதான், பழசு எதுக்கு? நான் தான் வந்துட்டேனேம்மா. எதுக்கு என்னை இந்தளவு தவிர்க்கறான்? நான் என்னம்மா தப்பு பண்ணேன்.. இந்த ரெண்டு மாசத்துல அவன் என்கிட்ட ஒழுங்கா பேசின நாள்னு ஒரு நாளே இல்ல, தெரியுமா?” என்றவளின் குரல் பாதியிலே உடைந்தது.
மனம் நொந்தவராய் மகளை மிகுந்த வருத்தத்துடன் ஏறிட்டாள் சகுந்தலா.
“மானும்மா எப்போடி என்கிட்டே வருவனு தினம் தினம் ஃபோன் பண்ணிக் கேட்டவன் தானேம்மா.. நான் வந்ததும் வந்திட்டியா மானுனு கேட்டுட்டு ஓடி வந்து அவனோட மான்குட்டியை கட்டி அணைச்சு கொஞ்சி இல்லையா இருக்கணும்?
எதுக்கும்மா கோபப்படனும்? என்னை முறைக்கணும்.. விலகி நடக்கணும்.. வே.. வேதனைப் படுத்தனும்?”
பதில் சொல்லத் தெரியாமல், கனத்த மௌனத்தை அவ்விடம் நிலைக்க விட்டவளின் கரம் மான்ஷியின் தலை வருடிக் கொடுத்தது, வெகு ஆதூரத்துடன்.
“அவன் என்னை ஸ்ட்ரேஞ்சரைப் போல பார்க்கிறான்ம்மா. அவனோட மானு இல்லம்மா நான்? மைதிலி கிட்ட ரொம்ப நல்லா பேசத் தெரிஞ்சவனுக்கு, ஏன் என்னைப் பிடிக்கல?”
“தம்பிக்கு உன்னைப் புடிச்ச அளவுக்கு வேற யாரையும் பிடிக்காது, கண்ணம்மாஆ!” என மகளின் துயராற்ற முயன்றாள், சகுந்தலா.
விரக்தியுடன் சிரித்துக் கொண்டவள், “காலம் மாறிப் போய்டுச்சும்மா..” என்க,
“வாய்க்கு வந்தபடி பேசாதடி!” என அதட்டினாள், மருமகனின் கரைக் காணாத அன்பையும்.. காதலையும் மனக்கண் முன் காட்சியாக்கியபடி.
“எனக்கென்னவோ, இத்தனை வருடங்கள் அவனைத் தவிக்க விட்டதுக்காக தான் என்னை இப்படி ஒதுக்கி வைக்கிறானோனு தோணுதும்மா. கண்டிப்பா அவனை நான் அடைவேன்; உங்க மருமகன் கையை கோர்த்துட்டு ஒருநாள் நான் இந்த வீட்டுக்கு வரல!! சத்தியமா என் பேரை நான் மாத்திக்கிறேன்..” என சபதம் எடுக்க,
“ஏற்கனவே உன் பேரை தான் தம்பி மாத்தி வைச்சிருக்காரே, மாளவிகா!” என மகளை இலகுவாக்கும் பொருட்டு கேலி செய்தாள், சகுந்தலா.
நினைத்தாற்போலவே, மான்ஷியாக மாற்றம் பெற்ற மாளவிகாவின் முகம் விகசித்தது.
தலை அசைத்து மெல்ல சிரித்துக் கொண்டவள்,
“அப்பப்பா! அவ பேரு மாளவிகாடானு நாங்க எல்லாரும் சொல்லுறதைக் கேட்காம, இல்ல மான்ஷி தான்னு அவன் சின்ன வயசுல செய்த சேட்டைகள் இன்னுமே கண்ணுக்குள்ள நிற்குது!
மாளவிகானு அவன் காதுபட யாராவது கூப்பிட்டா போதுமே! மான்ஷி சொல்லுனு அடிக்க வருவான். கோபம் பொத்துகிட்டு வரும் தம்பிக்கு! அந்த வயசுலயே உன்மேல அன்பு வைச்சவன் தான், இப்போ ஒதுக்கிறான்னா.. ஏதாவது காரணம் இருக்கும்னு என் மனசு சொல்லுதும்மா!
பொறுமையாரு! காலம் எல்லாத்தையும் சரி செய்யும்னு நம்புவோம்..” என்றவளைப் பார்த்து புரிந்ததாகத் தலை அசைத்தாள்.
நினைவுகள் மீண்டும் மனம் கவர்ந்தவனை நோக்கி அவசர கதியில் பயணித்தன.
‘ஓ.. வருஷங்கள் எல்லாம் நிமிஷங்கள் ஆக..
அவன் வருவான் என்று காத்திருந்தேன்..
ஓ.. அவன் குரல் கேட்கும் திசைகளிலெல்லாம் புது புது கோலம் போட்டு வைத்தேன்..
என் இருபது போகும், எழுவதும் ஆகும்..
அவனை விடமாட்டேன்..
என் மடியினில் ஒருநாள் தலை வைத்து தூங்கும்..
அழகை நான் பார்ப்பேன்..’
தொடரும்.
மக்கள் அதிகமாகப் புலங்கும் அந்த நாலடுக்கு ஷாப்பிங்மாலின் முன், அரை போதையில் தள்ளாடியபடி கடந்து செல்லும் பெண்களிடம் வம்பளந்து கொண்டிருந்தான் ஒருவன்.
தன்னைப் பார்த்து அஞ்சி தள்ளி நின்ற யுவதிகளின் கரம் பற்றி இழுத்து அவர்களிடம் வம்பளக்க, கடுப்பாகி அவனை கை நீட்டி அறைந்தே விட்டாள் அவர்களில் ஒருத்தி.
அவமானத்தில் முகம் கறுத்தவன், “ஹேய்! யூ!என்னையே அடிச்சிட்டல்ல.. நான் யார்னு தெரியுமா உனக்கு?” என்று தள்ளாட்டத்துடன் கேட்டபடி நேராக நிற்க முடியாமல் அவள் மீதே விழப் போக,
“ஸ்டே அவே!” என விரல் நீட்டி எச்சரித்தவள் பொறுமையாக இரண்டடி பின்னகர்ந்து நின்று கொண்டு,
“நீ யார்னா கேட்குற? ஹாஹா, யாரா இருந்தா எனக்கென்ன.. கண்டவ கையை பிடிச்சி இழுத்துக்கிட்டு போதைல அலையிற நீயெல்லாம் நல்ல அப்பனுக்கு பொறந்தவன் இல்லனு தெரியுது!” என்றாள், அருவருப்பில் சுழிந்த உதடுகளுடன்!
“ஏய்ய்!” என எகிறிக் கொண்டு வந்தவனது வயிற்றிலே ஒரு குத்து வைத்தவள்,
“என்னடா எகிறிட்டு வர? ரொம்ப நல்லவன் மாதிரியில்ல சீறிப் பாய்ற.. ச்சீய்! முதல்ல போய் மனுஷனா வாழ பழகு. அப்பறம் அவனை மதிக்க பழகு. பிறகு இந்த உலகம் உன்னை மதிக்கும்..” என்றாள், ஏளனக் குரலில்.
இவனிடம் பேசி பயனில்லை எனத் தெரிந்தாலும், சூழ்ந்திருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்காவது உறைக்கட்டும் என்ற நினைப்போடு தான் கூறினாள்.
ஒரு வயதுப் பெண்ணிடம் நடு சாலையில் வம்பு செய்கிறானே.. அவனை அதட்டி இரண்டு கேள்வி கேட்டால் என்ன என்ற எண்ணமின்றி, ‘ஃப்ரீ ஷோ’ பார்ப்பது போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களை பார்க்கும் போது பற்றிக் கொண்டு வந்தது பூம்பாவைக்கு.
“ஹே.. ஹேய்! இவன் ரொம்ப மோசமானவன்டி. எதுக்கு வீண் வம்பு? வா, நம்ம போலாம் மைதிலி..” எனப் பயத்தில் வெளிறிப் போன முகத்துடன் சாந்தனா தோழியின் வாயை அடைக்க முயன்றாள்.
“ப்ச், விடுடி! இந்த மாதிரி பொறுக்கிங்க எல்லாம் தட்டி கேட்க ஆளில்லைங்கிற தைரியத்துல சுத்திட்டு இருக்கானுங்க. சுத்தி நின்னு வேடிக்கை பார்க்கிறாங்களே தவிர அதட்டி ஒரு கேள்வி கேட்குறாங்களா, பாரு.
இதனால தான் இந்த கழிசடை நாய்ங்க இன்னுமே உருப்படாம தைரியமா சுத்திட்டு இருக்காங்க. பொறுக்கிப் பய!
இன்றைக்கு இவனை நான் சும்மா விடப் போறதுல்ல. எவ்ளோ தைரியம் இருந்தா என் கையைப் புடிச்சு இழுப்பான்?” என தோழியிடம் எகிறிய மைதிலி, அவன் புறம் தன் பார்வையை ஓட்டினாள்.
“ஏய்!!” என மீண்டும் சீறியவனை,
“ஏய் ச்சி, கம்முனு கெட!” என முறைப்புடன் அடக்கியவள்,
“அதில்ல, நீ யாருனு கேட்டல்ல என்கிட்டே? நீ என்னடா சொல்றது! உங்கப்பன் பெரிய அப்பாட்டக்கரா.. இல்ல இந்த நாட்டு மந்திரியா? நான் சொல்றேன் கேட்டுக்க, நான் யுகி பையாவோட ஒரே மச்சினி.
உடனே ஒரு கால் போட்டு அவரை இங்க வர வைச்சா உன் கதை கந்தல் தான். அப்பறம் உனக்கு இந்த மண்ணுல இடமிருக்கானு கேட்டா, கண்டிப்பா இல்லை.” என்றதோடு மட்டுமல்லாமல், கோபத்தில் நடுங்கிய விரல்களால் அலைபேசி திரையில் தட்டினாள்.
‘யுகி பையா’ என்றதும் குலை நடுங்கிப் போயிருந்தவன் அவள் அழைப்பு விடுக்கப் போவது கண்டு பதறிப் போனவனாய்,
“அவருக்கு கால் பண்ணாத! பேயடி அடிச்சு ஒரே நாள்ல என்..னை கொன்னுடுவாரு.” என வாய் குழறினான்.
“இவ்ளோ பயம் இருக்கிறவன் என்ன ம**க்கு அவர் இருக்கிற ஏரியாலேயே பொண்ணுங்க கிட்ட தப்பா நடந்துக்கணும்? கொஞ்சமும் பயமில்லாம போதையிலே ரோட்டுல நடமாடணும்..” என்று நக்கல் வழியும் குரலில் கேட்டு நகைத்தாள், மைதிலி.
“லுக், ரெண்டு நிமிஷம் டைம் தர்றேன். அதுக்குள்ள என்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு, இருந்த இடத்துக்கும் உத்தரவில்லாம ஓடிப் போய்டு!”என்று கூறி தன் காலை நீட்டிக் காட்ட,
“விட்டுருடி..” என அவளின் காதோரம் ஈனஸ்வரத்தில் முனகினாள் சாந்தனா.
இவனின் இந்த அசிங்கத்துக்கு காரணம், ஒன்றோ அவனது தந்தையின் அதிகாரமாக இருக்கும். இல்லையேல் எது நடந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற அலட்சியப் போக்காக இருக்கும். இவனிடம் வம்பளந்து வீண் பகையை வளர்த்துக் கொள்கிறாளே என பயமாக இருந்தது அவளுக்கு.
முடியாதென மறுத்தவளை கெஞ்சிக் கொஞ்சிக் கெஞ்சி ஷாப்பிங்மால் அழைத்து வந்ததற்காக நன்றாக செய்து விட்டாள் என மனதினுள்ளே புலம்பித் தீர்த்தாள் சாந்தனா.
அவளின் நீட்டப்பட்ட காலைப் பார்த்ததும், அசட்டு தைரியம் மீண்டும் தலை தூக்கிப் பேயாட்டமாட, “திமிரு..” என பற்களைக் கடித்தவன் பாய்ந்து அவளின் முடியைப் பற்ற வந்தான்.
அது வரையே காத்திருந்தாற்போல், வேகமாக அவனை சூழ்ந்து கொண்டனர் ஓரிருவர்.
இவ்வளவு நேரமும் நடப்பதை வேடிக்கை பார்த்தபடி கூட்டத்தோடு கூட்டமாய் நின்றிருந்தவர்கள், இந்தரின் ஆட்கள். யுகேந்த்ராவ் அவனின் உதவிக்காக நியமித்தவர்கள்.
‘தைரியமாக சமாளிக்கிறாளே!’ என அமைதி காத்து நின்றவர்கள், அவளுக்கு பிரச்சனை என்றதும் தாமதியாமல் கிளர்ந்தெழுந்து கிளம்பி விட்டனர்.
இந்தரை அடையாளம் கண்டு கொண்ட மைதிலி ஆச்சரியத்தில் விழி விரித்தாள்.
“நீங்களா? இங்க என்ன பண்ணுறீங்க அண்ணா?”
அவளிடம் வம்பிழுத்த குமரனின் மகனைக் கை காட்டிய இந்தர், “இவனை தேடி தான் இங்க வந்தேன் சிஸ்டர். கவனமா வீட்டுக்கு போங்க. நான் பார்த்துக்குறேன்.” என்று கூறிவிட்டுப் புன்னகையுடன் ஒதுங்கி நின்றான்.
போற போக்கில், “என் கையை பிடிச்சிழுத்தான் பையா. அதுக்கு சேர்த்து எக்ஸ்ட்ராவா நாலு உதை கொடுங்க.” என்று கூறி அவனுக்குப் பழிப்பு காட்டி விட்டுத் தான் நகர்ந்தாள் மைதிலி.
“எதுக்குடி அவன் கிட்ட வம்பு பண்ண? நாய் எங்களை கடிச்சா நம்ம நாயைக் கடிக்க போவோமான்னு அம்மா எப்பவும் கேட்பாங்க. அவன் வம்பு பண்ணா கண்டுக்காம கடந்து வந்திருக்கணும்.” என்றவளை முறைத்தபடி கடைக்காரன் நீட்டிய தண்ணீர் பாட்டிலை பணம் கொடுத்து பெற்றுக்கொண்டவள்,
“சுத்தி நின்னு எவ்ளோ பேர் வேடிக்கை பார்த்தாங்கனு நீயே பார்த்தல்ல.. எவ்ளோன்னாலும் நாம கேர்ள்ஸ் இல்ல?” என்று விடாமல் புலம்பியவளை என்ன செய்தால் தகும் என்கின்ற ரீதியில் பார்த்து வைத்தாள்.
“மைதிலி!!”
பாட்டிலை உடைத்து அவன் பற்றியிழுத்த கையில் ஊற்றி தேய்த்துக் கழுவியபடி, “இதென்ன அநியாயமா இருக்கு. பொண்ணுங்கன்னா அடங்கி போகணுமா? அப்பறம் இன்னைக்கு கையைப் பிடிப்பான். சும்மா போய்ட்டோம்னா நாளைக்கு இடுப்பைத் தொட வருவான். மத்தவங்க எப்படினு தெரியல. ஆனா எனக்கு சொரணை இருக்கு. அவன் பிடிச்சு இழுத்தது என் கையை!” என்றாள், கோபத்தில் மின்னும் கண்களுடன்.
இவளிடம் பேசி வேலைக்காகாது எனப் புரிந்து கொண்ட சாந்தனாவிடமிருந்து பெருமூச்சொன்று வெளிப்பட்டது.
அவள் பழகும் ஆயிரம் தோழிகள் மத்தியில் மைதிலி தனி ஒருத்தி. கோபத் திமிரிலும், எதிராளி யாராக இருந்தாலும் சந்தர்ப்பம் பார்த்து வீழ்த்துவதிலும், அவளுக்கு நிகர் அவளே தான்!
அடங்கிப் போவதெல்லாம் தந்தை சிவதர்ஷனுக்கும், அத்தான் யுகேந்த்ராவுக்கும் மாத்திரமே!
தொட்டவனின் கையை முறுக்கி உடைக்காமல் விட மாட்டேன் எனும் ரகம். தன்னை சீண்டியது யாராக இருந்தாலும் அவர்களை திருப்பியடித்து ‘மைதிலியிடம் மோதாதே!’ என விரல் நீட்டி எச்சரிப்பாள்.
இதனாலே கல்லூரிக் காலத்தில் அவளுக்கென ஒரு தனி விசிறிக் கூட்டமொன்றே கிளம்பி இருந்ததெல்லாம் வேறு கதை!
சில்லறை இல்லை எனக் கூறி கடைக் காரன் நீட்டிய பபிள்கம்மின் கவரை உரித்து, அதில் பாதியை சாந்தனாவின் வாயில் திணித்தவள் மீதியை மென்று பபிள்ஸ் விட்டபடி பேருந்துக்காக காத்திருக்கத் தொடங்கினாள்.
“ப்ச்! அந்த பஸ் வர இன்னும் எவ்ளோ நேரமாகுமோ.. இதுக்கு தான் சொல்றது, நான் என்னோட ஸ்கூட்டியை ஓட்டிட்டு வரேன்னு.. கேட்டியா நீ?” என வெயில் கொடுமையை சகித்துக் கொள்ள முடியாமல் புலம்பினாள் சாந்தனா.
“லைஃப்ல ஒவ்வொரு நிமிஷத்தையும் என்ஜோய் பண்ணி வாழனும் சாந்து. கடந்து போய்ட்டோம்னா கோடி கொடுத்தாலும் அந்த இடத்துக்கு திரும்ப வர முடியாது.
பஸ்ல போறதுல்லாம் தனிடி. கார், ஸ்கூட்டினு.. ப்ச்! அலுப்படிக்கிது.” எனக் கண்களை அங்குமிங்கும் உருட்டியபடி கூறியவள், சடேரென புழுதி கிளப்பிக் கொண்டு வந்து தன் முன் நிறுத்தப்பட்ட காரைக் கண்டு திகைத்த நேரத்தில்,
“கியூட்டி ப்பை!” என்ற அழைப்புடன் காரிலிருந்து இறங்கி வந்தான், யுகேந்த்ராவ்!
அவனை அங்கு எதிர்பார்த்திருக்காத மைதிலியின் முகத்தில், உவகையின் சாயல்.
“அத்தான்..” என்று கூவி அழைத்தவளை வேக எட்டுகளுடன் நெருங்கி வந்தவன், “ஆர் யூ ஓகே?” என்று கேட்டபடி பார்வையாலே அவளை ஆராய்ந்தான்.
“அதுக்குள்ள நியூஸ் வந்திடுச்சா அத்தான்?” எனப் பற்களை வாடகைக்கு விட்டபடி கேட்டவளை விளையாட்டுக்குக் கூட முறைக்க முடியவில்லை அவனால்.
‘அத்தான்’ என்ற அழைப்பு தந்த அதிருப்தியில் முகம் சுழித்தவன், மைதிலியின் கலைந்திருந்த கூந்தலை சரி செய்து ஹேர் பேன்ட்டை ஒழுங்காக மாட்டி விட்டுக் கொண்டே,
“விளையாடிட்டு இருக்காம ஒழுங்கா வீடு போய் சேரு!” என அதட்டினான்.
அவசரமாக ஏதோ கூற வாயெடுத்தவளைப் பார்வையாலே அடக்கியவன், “இன்னொரு வாட்டி நீ ரோட்டோர பஸ்ஸுக்காக காத்திருக்குறதை நான் பார்க்க கூடாது. இதென்ன புது பழக்கம்?” என்று கடிந்து கொண்டான்.
“அத்தான், அதுலாம்..” என்றவள் மேற்கொண்டு பேச வர முன்பே, “டேக் கேர்!” என்று விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டிருக்க,
“ரொம்ப ரூடா இருக்காருல்லடி?” என தோழியின் காதைக் கடித்தாள் சாந்தனா.
“ப்ச், அத்தானை அப்படி சொல்லாத! அவரு என்னோட ரோல் மாடல். ரொமான்டிக் பாய்யா சிரிச்சிட்டே இருந்தவரு தான், அத்தை மாமாவோட இறப்புக்கு அப்பறம் இப்படி ஆகிட்டாரு..” என்றவளின் கண்கள் வலியின் தாக்கத்தில் லேசாக கலங்க, அதை சாந்தனா காண முன் நாசுக்காக துடைத்து விட்டுக் கொண்டாள்.
“அவங்க எப்படி இறந்தாங்க?”
“எப்பா! கேள்வி கேட்டே என் காதை அவுட் பண்ணிடுவ போல. பேசாம வாயேன்..” என்ற மைதிலி, தனக்கு முன்னால் வந்து நின்ற பஸ்ஸில் ஓடிச்சென்று ஏறிக் கொண்டாள்.
அதற்கு மேலும் அவளிடம் எதையும் கறக்க முடியாதென்று புரியாதா என்ன, சாந்தனாவுக்கு?
*******
“ஒரு பெண்ணாக உன் மேல் நானே பேராசை கொண்டேன்..
உனை முன்னாலே பார்க்கும் போது பேசாமல் நின்றேன்..
எதற்காக உன்னை எதிர்ப்பார்க்கிறேன்..
எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன்..
இனிமேல் நானே நீயானேன்..
இவன் பின்னாலே போனேனே..
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டெழுத்து..” என்ற பாடலை முணுமுணுத்தபடி யுகனின் வரவை எதிர்பார்த்து கூடத்தில் அமர்ந்திருந்தாள் மான்ஷி.
பாடலின் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்றாற்போல் அவளின் தளிர் விரல்கள் சோபாவில் தாளம் தட்டிக் கொண்டிருந்தன.
விடிந்தது முதலே அவனைக் காணவில்லை. அவன் என்றோ அவளது எண்ணை பிளாக் லிஸ்டில் சேர்த்து விட்டிருந்தபடியால் அழைப்பும் செல்லவில்லை.
அப்படியே சென்றடைந்திருந்தாலும் அந்த அழைப்புக்கு பதில் கொடுத்திருப்பானா என்று கேட்டால், கண்டிப்பாக வாய்ப்பே இல்லை.
பொறுத்து பொறுத்துப் பார்த்தவள் ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமை இழந்தவளாய் எழுந்து நிற்கும்போது தான் வீட்டினுள் கள்ளத்தனமாக எட்டிப் பார்த்த மிதுனாவைக் கண்டு கொண்டாள்.
திடீர் கோபத்தில் பற்களை நறநறத்தபடி அவளருகே விரைந்தாள் மான்ஷி.
அழைப்பு விடுத்து அவளை ‘வா’ என அழைத்தது யுகன் தான். என்றாலும் ‘எப்படி உள்ளே செல்வது? ஹாலில் வேறு சைக்கோ ஜந்து உக்காந்து இருக்கிறதே..’ என்ற தவிப்புடன் கை பிசைந்து நின்றிருந்தவள் முன் வந்து நின்றவள்,
“திரும்ப வந்துட்டியா?” என இடுப்பில் கை ஊன்றி முறைப்புடன் கேட்டாள்.
துள்ளி விழுந்து இரண்டடி பின்னகர்ந்து நின்றவள் இழுத்துப் பிடித்திருந்த மூச்சை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றியபடி, “யுகி சார் தான்..” என்று இழுக்க,
“அடிங்! அவன் வான்னு சொன்னா உடனே வந்திடுவியா? நீ என்ன அவனுக்கு பொண்டாட்டியா.. வான்னு சொன்னானாம்; உடனே ஓடோடி வந்திடுவியாம். தொண்டை குழி தண்ணி வத்தற அளவுக்கு கத்துறேனே.. கொஞ்சம் கூட வெட்கமா இல்ல?” என்று சீறி விழுந்தாள் மான்ஷி.
‘அவன் துரத்த துரத்த நீயும் தான் சொரணை கெட்டு அவனைத் தேடி வர.. அப்ப இதுக்கு பெயரென்ன?’ என நேரம் காலம் தெரியாமல் மனசாட்சி அவளை வார, மேலும் கடுப்பாகியவள் முன்னால் நின்றிருந்தவளைக் கடுமையாக முறைத்தாள்.
அந்நேரம், “உள்ள வா மிது..” என்று வரவேற்றபடி பேண்ட் பாக்கெட்டினுள் கைகளை நுழைத்து ஸ்டைலாக மாடியிறங்கி வந்தான் யுகன்.
“அவ எதுக்கு இங்க வரணும்?” என அளவு கடந்த கோபத்துடன் கேட்டவள் கை தொடும் தூரத்தில் இருந்த ஜாடியை தூக்கி, என்ன ஏதென்று ஊகிக்கும் முன்னரே அவனை நோக்கி விட்டெறிந்திருந்தாள்.
“அம்மாஆ..” என அலறிய மிதுனா, இரத்தம் சொட்டச் சொட்ட கைகளை உதறியவனைப் பார்க்க திராணியற்று கண்களை இறுக மூடிக் கொண்டாள், அச்சத்தில்!
தொடரும்.
அங்கிருந்து விறுவிறுவென நகர்ந்தவன் பத்தே நிமிடங்களில் குளியலை முடித்துக் கொண்டு கூடத்துக்கு வரவும், மான்ஷி துள்ளலும் நடையுமாக வீட்டினுள் நுழையவும் சரியாக இருந்தது.
அவனைக் கண்டதும் தடுப்பு போட்டாற்போல் தன் நடையை நிறுத்திக் கொண்டவளின் கண்களில் ஹார்டின் பறந்தது. காதலின் உச்ச கட்டத்தில் அவனைச் சுற்றி உலா வந்து கொண்டிருக்கிறாள் பாவை, விளக்கைச் சுற்றி வட்டமிடும் விட்டில் பூச்சியாய்!
தலை துவட்டியபடி, அவளைக் கண்டும் காணாத பாவனையில் டைனிங் டேபிளில் சென்றமர, அதற்காகவே காத்திருந்த வேலைக்காரப் பெண் காமினி அவனுக்கு உணவு பரிமாறினாள்.
சற்றுநேரம் மௌனமாய் அவனது முகத்தையே சிந்தனை மீதுறப் பார்த்திருந்த மான்ஷியிடமிருந்து சோகப் பெருமூச்சொன்று வெளிப்பட்டது.
கூடவே, ‘நீ மயங்கி விழுந்தேல்ல? ஜன்னல் கேர்டன்ஸை ஓரந்தள்ளிட்டு, ரூம்குள்ளேர்ந்து உன்னை தான் யுகி பையா பார்த்துட்டே இருந்தாரு. லேப்டாப்பை திறந்து வைச்சுக்கிட்டு வேலை செய்றதெல்லாம் சும்மா ஒரு கண் துடைப்பு..’ என நேற்று அவள் கூறிய நினைவில் முகம் கனிந்தாள்.
நேற்று மயக்கம் தெளிந்ததும், வரண்டிருந்த தொண்டையை நனைத்துக் கொள்வதற்காக சமையலறை சென்றிருந்த நேரத்தில் காமினி உண்மையைப் போட்டு உடைத்திருந்தாள்.
இது இன்று நேற்றல்ல, எப்போதெல்லாம் அவளை அளவுக்கு அதிகமாக காயப்படுத்துகிறானோ, அன்றெல்லாம் சகோதரியாய் பழகும் காமினியிடமிருந்து உண்மை அம்பலமாகி விடும்.
இப்போது கூட, என்றும் போல், ‘ஒருவேளை அந்த வேலையாளை ஏவி இவனே தான் என் மயக்கத்தை தெளிவுச்சு இருப்பானோ?! பிறகு இவன் திட்ட, அவன் மன்னிப்பு இறைஞ்ச.. ப்ச், எல்லாம் செட்டப் ட்ராமாவா இருக்குமோ..’ என்று தான் தோன்றியது.
ஏதேதோ சிந்திக்கத் தோன்றியது.
அவற்றை ஓரந்தள்ளி விட்டு, காமினிக்குக் கண் காட்டி விட்டு மெல்ல நகர்ந்து வந்து அவனருகே நின்று கொண்டவள், அவள் அங்கிருந்து நகரும் வரை காத்திருந்து விட்டு,
“இன்னும் கொஞ்சம் சாம்பார் ஊத்தவா யுகன்?” என்று கேட்டுக் கொண்டே அவனுக்கு பரிமாற வர, அடுத்த நொடி தட்டு கீழே தூக்கி எறியப்பட்டு இட்லிகள் அங்கொன்றும், இங்கொன்றுமாய் சிதறின.
“உன்னை என் பக்கத்துல வர வேணாம்னு சொல்லி இருக்கேன் இல்ல? ஏன் என்னை இப்படி டார்ச்சர் பண்ணுற.. மனுஷனை நிம்மதியா இருக்க விடவே மாட்டியா நீ?” என சத்தம் வைக்க,
“ரொம்ப பண்ணாதய்யா!” என கடுப்புடன் முனகினாள் மான்ஷி.
“என்னை டென்ஷன் ஏத்தாத! உன்னை இந்த வீட்டுக்குள்ள விட்டு வைச்சிருக்க ஒரே காரணம், சின்ன வயசுல கைக்குள்ள வைச்சு வளர்த்த நாயி, எவ்ளோ துரத்தினாலும் ஓடிப் போக மாட்டேங்குதேங்குற ஆதங்கம் தான்..
எவ்ளோ திட்டி அசிங்கப்படுத்தினாலும் சொரணை இல்லாம ஓடியோடி இங்கயே வர்ற! திட்டி, விரட்டி நானும் ஓய்ஞ்சு போய்ட்டேன். இப்போ திறந்து வைச்சிருக்கேன், வர்றவன் எல்லாம் அனுமதி இல்லாம வந்துட்டு போகட்டும்னு!
அக்கறை காட்டறேன்ங்குற பெயருல என்கிட்ட உரிமை எடுத்துக்க ட்ரை பண்ணாத.. இன்னொரு தடவை இதை என் வாயால, இந்தளவு பொறுமையோட சொல்லிட்டு இருக்க மாட்டேன்.
உங்க யாரோட சக்கரையையும் நான் எதிர்பார்க்கல. இன்னொரு வாட்டி பக்கத்துல வந்தா ஐ வில் கில் யூ டெஃபனெட்லி!” எனப் பல்லிடைக்குள் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.
அவனது பார்வை அவளை துச்சமெனப் பார்த்திருக்க, வாயோ சரமாரியாக சொல்லம்புகளினால் பாவை மனதைக் குத்தி கிளறிக் கொண்டிருந்தது.
இது ஒன்றும் புதிய விடயமில்லை தான் என்றாலும், அவனின் கோபத்தில் உள்ளுக்குள் கிலி பரவி சற்று நகர்ந்து நின்றவளின் கண்கள் ஏகத்துக்கும் கலங்கிச் சிவப்பேறிப் போயிருந்தன.
எவ்வளவு தான் கேவலமாகப் பேசினாலும் ‘என் தன்மானத்தை சீண்டி விட்டாய்!’ என அங்கிருந்து புறப்பட்டுச் செல்லாமல் சொரணை கெட்டு அவன் காலடியிலே விழுந்து கிடப்பாள் பைத்தியக்காரி.
ஏதோவொரு காரணம் அவனை தன் பால் நெருங்க விடாமல் தடுத்து, அவனை வருத்திக் கொண்டிருப்பதாய் மனதார நம்பியவளுக்கு, தன் நெருக்கம் அவனை இம்சிக்கிறதென புரிந்தது.
ஆதலால் தான் எவ்வளவு துரத்தி விட்டாலும் ‘போடாங்..’ என ரோஷம் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அவனிடமே ஓடி வருகிறாள்.
பிபி எகிறி மணிக்கணக்கில் அவளைக் கேவலமாய் திட்டி அவன்தான் வீணாகக் களைத்துப் போவானே தவிர, மறுவார்த்தை பேசாமல் சொல்வதை எல்லாம் இந்தக் காதால் வாங்கி மற்ற காதால் வெளியேற்றி விடுபவளிடம் எந்த முன்னேற்றமும் இருக்காது.
ஒரு கட்டத்தில் சலித்துப் போனவனாய், ‘என்ன பெண்ணிவள்! இவ்வளவு திட்டியும் அப்படியே நின்று கொண்டிருக்கிறாளே’ என அற்பப் புழுவை பார்ப்பது போல் கடந்து செல்லப் பழகி இருந்தான்.
அவனால் வளர்த்து ஆளாக்கப்பட்ட குட்டி மான்ஷி.. சிறு வயதிலே அவனுக்கு நிச்சயிக்கப்பட்ட மான்ஷி.. தன்னால் உயிரெனக் கருதி நேசிக்கப்பட்ட மான்ஷி.. அவள் இவளல்ல. அவள் மிகுந்த தன்மானம் உடையவள்!
யாராவது தன்மானத்தை சீண்டி விட்டால், பதிலுக்கு பெண் அரிமாவாய் சீறி சம்பந்த நபரின் பெயரைக் கெடுக்காமல் ஓய மாட்டாள். ஆனால் இப்போது முழுதாக முழுதாக மாறிவிட்டாள் என்பதை விட, அவனின் மாற்றம் அவளை இந்தளவுக்கு மாற்றி விட்டது எனச் சொல்வதில் தவறில்லை.
கடந்த காலத்தை நினைக்கும் போது ஆடவனிடமிருந்து பெருமூச்சொன்று வெளிப்பட்டாலும், அவளின் நடத்தை கண்டு எரிச்சலும் சற்று அதிகமாகவே வந்து தொலைத்தது.
“ச்சை!” எனக் கைகளை உதறியவன், கோபத்துடன் இருக்கையை ஓங்கி உதைந்து விட்டு அங்கிருந்து நகர முயல,
“சாப்பிடாமலே போறியா யுகன்? ப்ளீஸ், ஐம் சாரி!” என்ற கிள்ளையின் கெஞ்சல் குரல் முதுகுக்குப் பின் ஒலித்தது.
கண்களை மூடித் திறந்தான் யுகன். ஆழ மூச்சிழுத்து தன்னை ஆசுவசப்படுத்திக் கொள்ள முயன்றவன், தன் முயற்சியில் தோல்வி எய்தியவனாய் இருக்கையை தூக்கி அவளை நோக்கி எறிந்தான்.
பதறி இரண்டடி பின்னகர்ந்து நின்றவள் ஏதோ கூற வாயெடுப்பதற்குள்,
“ஷட்டப் இடியட்! நான் திரும்ப இந்த இடத்துக்கு வரும்போது நீ இங்க இருக்கக்கூடாது.” என்று எச்சரித்து விட்டு அறைக்குள் சென்றடைய,
“ஸ்ஸ்.. ஒருநாள் இல்லனா ஒருநாள், இவன் கத்துறதை கேட்டே என் காது அவுட் ஆகிட போகுது. என்னமா கத்தி தொலைக்கிறான்? மானுனு என் பின்னாடி உருகி வழிஞ்சவன் இவன்தானா? என்ன ம*த்துக்கு இப்படி அவொய்ட் பண்ணி தொலைக்கிறான்..” என சலித்துக் கொண்டவள் இரண்டு இட்லிகளை பொறுமையாக உள்ளே தள்ளினாள்.
இங்கே அவலம் என்னவென்றால், அவனின் அருகாமையின்றி உணவும் கூட உள்ளிறங்க மறுக்கிறது. வயிறு பசியில் கூப்பாடு போட்டு களைத்துப் போனாலும் சாப்பிட மனமின்றி திரும்பி படுத்துக் கொள்வாள்.
வீட்டுக்கு சென்றாலும் உண்ணப் போவதில்லை என்ற உண்மை புலப்பட்டதால் தான் இப்போதே அவசர அவசரமாக இரண்டு இட்லிகளை உள்ளே தள்ளியது!
அறைக்கதவு திறக்கப்படும் சத்தத்தில் துள்ளி எழுந்தவள் கைப்பையை எடுக்க மறந்து அங்கிருந்து ஓடி விட முயல,
“இதையும் எடுத்துட்டுப் போ..” என்ற யுகனின் கணீர் குரலைத் தொடர்ந்து கைப்பை அவளது முதுகில் வந்து மோதி கீழே விழுந்தது.
திரும்பி அவனை முறைத்தவள், “பேக்ல என் ஃபோனும் இருக்கு யுகன்..” சற்று கோபமாகக் கத்த வர,
“இன்னுமே போகலையா நீ..” என்று கேட்டவன் சோபாவிலிருந்து எழுந்து நின்றான் நிதானமாய்.. அதற்கு மேலும் அங்கு நின்றிருக்க அவள் என்ன பைத்தியமா?
கைப்பையை தூக்கிக் கொண்டு குடுகுடுவென ஓடி மறைந்தவள், மீண்டும், மாலை மங்கும் நேரத்தில் அவன் கண்முன் தான் வந்து நின்றாள்.
கெட்ட வார்த்தைகள் யாவும் மறந்து விட்ட தோரணையில், சலிப்புடன் அறைக்குள் நுழைந்து கொண்டான் யுகன்.
தூங்குபவனை தட்டி எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவனை என்ன செய்வதென்ற கடுப்பு அவனுக்கு!
*******
“இன்னும் ரெண்டு நாள்ல ஹைதராபாத் கிளையன்ட்ஸ் கூட சார்க்கு மீட்டிங் இருக்கு. மீட்டிங்காக இங்க வரவங்க கூட அவரும் அங்க போய்டுவாருனு ஒரு தகவல். திரும்பி வர எப்படியும் ஒருவாரம், பத்து நாள் ஆகலாம்னு நினைக்கிறேன்.
நடக்க போற மீட்டிங் ஆல் இந்தியன் கிரேட் பிசினஸ்மேன்ஸ் கூட நடக்க போகுதாம். தலைமை யுகி பையாவுக்கு! வரவங்க..” என்று மூச்சு விடாமல், தேவையான விடயங்களை எல்லாம் அலைபேசி வழியாக இன்னொரு காதுக்கு கடத்திக் கொண்டிருந்தான், குமரன். யுகேந்தின் வலது கை!
தனக்குத் தெரிந்தவற்றைக் கூறி முடித்துப் பெருமூச்சு விட்டவன், “இதெல்லாம் என் காதுபட கேட்ட தகவல்கள். இன்னுமே டைரக்ட்டா விஷயத்தை யுகி பையா என்கிட்டயோ மத்தவங்க கிட்டயோ சொல்லல கரண்சிங்! இன்னும் ரெண்டு நிமிஷத்துல பிலைட்னு இருக்கும் போது சொல்லுவாரு..” என்று கூறினான், தன்னைப் போன்றவர்களுக்கு இங்கே முன்னுரிமை கிடைக்கப் போவதில்லை என்ற ஆதங்கத்துடன்.
“யுகேந்த் இங்கிருந்து ஹைதராபாத் புறப்பட்ட அடுத்த நொடி எனக்கு தகவல் வரணும் குமரன். உனக்கு நான் கொடுத்த உரிமை வேற யாருக்கும் கொடுத்ததில்லை என்னோட இடத்தில! அது உனக்கே தெரியும்..” என விடயத்தை அந்த அண்டாவாயனிடம் கரக்கும் நோக்கில் உருக்கமாகப் பேசினான், கரண்சிங்.
சட்டென்று குமரனின் அகமும் புறமும் ஒருசேர மலர்ந்தது.
உற்சாகத்துடன் சரியென்றவன் சற்று நேரம் வாயாலே வடை சுட்டு விட்டு நல்லவன் வேஷம் அணிந்து கொண்டு யுகேந்தைக் காண அவனின் கோட்டைக்குள் நுழைந்தான்.
அதன் பிறகு தான் அவனின் கத்தி வீச்சை வாங்கிக் கொண்டு கீழே சரிந்து, துடிதுடித்து இறந்து போனதெல்லாம்!
கரண்சிங்கோடு பேசி சரியாக ஒரு மணி நேரம் கூட தாண்டாத நிலையில் அவனுடன் குமரன் உரையாடியதை இவன் எப்படி அறிந்தான் என எவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. குமரனின் மரணத்துக்கான காரணம் என்னவென்று எவரும் அறிய முற்படவுமில்லை.
குமரனின் உயிரை காவு வாங்கியவனோ மொட்டை மாடியில் நின்றிருந்தான் இப்போது.
சிகரெட் புகையை பொறுமையாக வெளியேற்றியபடி, மற்றொரு கையால் அருகில் இருந்தவனின் கையைப் பலங்கொண்ட மட்டும் முறுக்கிக் கொண்டிருந்தான்.
“யுகி பையா! த்..தெரியாம உங்க வழியில குறுக்கா வந்துட்டேன். விடுங்க.. ஆஆ.. பையா, ஸ்ஸ்ஸ்..” என வலியில் கதறிய குரலெல்லாம் யுகனுக்கு கேட்கவே இல்லை போலும்!
செவிடன் போல் நின்றிருந்தவன் அவனின் கத்தலில் மனமுருகவும் இல்லை; அவனைத் திரும்பிப் பார்க்கவுமில்லை.
இரவு வானை வெறித்தபடி படுரசனையுடன் சிகரெட் புகையை சுருள் சுருளாக வெளியேற்றிக் கொண்டிருந்தான்.
மொட்டை மாடிக்கு வரலாம் என மன அமைதிக்கென வந்தவனை பின்னிருந்து தாக்க வந்து வசமாக மாட்டிக் கொண்டு விட்டான் மற்றவன்.
அவனைப் பற்றி ஊரே அறிந்து, இரண்டு வார்த்தைகளை நேரில் நின்று பேசவே தயங்கும் பட்சத்தில் வந்தவன் மட்டும் விதி விலக்கா என்ன.. ஆனால் கையில் வந்து சேர்ந்த பணக்கட்டைக் கண்டு பயம் மறந்து யுகனை தாக்க வந்து விட்டவன் இதோ இப்போது வலியில் அலறிக் கொண்டிருக்கிறான்.
விடாமல் கத்திக் கொண்டிருந்தவனை எண்ணிப் பரிதாபமாகத் தான் இருந்தது. ஆனால் தன்னைத் தாக்க வந்த கை உடைந்து, அவன் மரண வலியில் அலறும் வரை விட்டு விடவில்லை. அப்படி விட்டால் அவன் யுகனும் அல்லவே!
வலியில் அலறிக் கொண்டிருந்தவனைப் பார்த்து, “ஷ்ஷ்..” உதடுகளுக்கு குறுக்காக ஆள்காட்டி விரலை வைத்து சத்தம் போடாதே என செய்கை செய்ய, அதற்கு மேலும் அலற அவன் ஒன்றும் வாழத் தெரியாதவன் அல்லவே..
வலியை பற்களைக் கடித்து விழுங்கிக் கொண்டான். கண்ணீர் ஆறாக வழிந்தது.
“கரண்சிங் கிட்ட போய் அடுத்த வாட்டி நல்ல ஆளா அனுப்பி வைக்க சொல்லு டியூட். வர்றவன் எல்லாம் முதுகெலும்பு இல்லாதவனுங்க. லேசா கையைப் புடிச்சாலே அலறித் துடிக்கிறானுவ! இப்படியே போனா இந்த கேமும் எனக்கு போர் அடிச்சிடும்..” என நக்கல் வழித்தோடும் தொனியில் கூறியவனை உடைந்த கையை தாங்கிக் கொண்டு பயப்பார்வை பார்த்தான் வாலிபன்.
“ச்சு! இன்னும் எதுக்கு நின்னுட்டு இருக்க? இடத்தைக் காலி பண்ணு!” என்று அதட்டியவன் சிகரெட்டை நசுக்கி அணைத்து விட்டு நிமிரும் போது அவன் அங்கிருக்கவில்லை.
கையை மற்றொரு கையால் தாங்கிப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டிருந்தான்.
அலுப்புடன் கை நீட்டி சோம்பல் முறித்தவன், “பையா..” என்ற அழைப்பில், “சொல்லு இந்தர்..” என்று கொண்டே திரும்பினான்.
அவனுக்கு மிகவும் பழக்கப்பட்ட, உயிர் தோழனுக்கு அடுத்ததாய் அவனுக்கு நம்பிக்கையானவன் தான் இந்தர். அந்த வீட்டில் சமையல் வேலை பார்க்கும் காமினி, அவனின் மனைவி.
அவர்கள், இரு வீட்டினரின் எதிர்ப்புக்கு மத்தியில் மனமொத்து திருமணம் செய்து கொண்டவர்கள். காமினியின் தந்தை ஒரு மாதிரியான ஆள்!
அவரால் தங்களுக்கு ஆபத்து நேரிடக் கூடும் எனப் பயந்து கடைசியாக இருவரும் வந்து சரணடைந்தது யுகனிடம்.. இந்த ஊரில் பாதுகாப்பான இடமென்றால் அது ‘யுகேந்த்ராவ் மேன்ஷன்’ மட்டுமே!
பாதுகாப்புக்கென சரண் புகுந்து விட்டால் அதன் பிறகு வாழ்நாள் பூரா அவனின்/அவளின் பாதுகாப்புக்கு அவன் கியாரண்டி.
சொந்த விருப்பத்தின் பேரில் திருமணம் நடந்தேறி நான்கு வருடங்கள் ஓடிவிட்டன. மூன்று வயதில் ஒரு குழந்தை. பெயர் இந்து!
உண்ணக் கொடுத்த வீட்டுக்கு இரண்டகம் செய்யாமல் இன்று வரைக்கும் அவனுக்கு பாத்திரமாய் தான் நடந்து கொண்டிருக்கின்றனர் இருவரும்.
படைகளோடு மகளையும் மருமகனையும் தாக்க வந்த காமினியின் தந்தை, யுகனின் கோட்டைக்குள் அவர்கள் இருக்கும் விடயத்தை அறிந்து கொண்டதும் பின்வாங்கி திரும்பி விட்டார்.
பிறகு, யுகனின் ஏவலின் பேரில் பக்கத்து ஊருக்கு சென்றிருந்த இந்தரை காமினியின் தந்தை ஆள் வைத்து தாக்கியதன் பொருட்டு, வயதான காலத்தை கட்டிலோடு கழிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிப் போனது அவருக்கு.
அவர்களுக்கு, ஒரு படுக்கையறையுடன் கூடிய அளவான வீடு கோட்டைக்குப் பின்னாலே கொடுக்கப்பட்டிருந்தது.
வீட்டில் சமையல் வேலை பார்க்கும் பெண், இந்தரின் கெஞ்சலில் வேலை நிறுத்தம் செய்யப்பட்டு, அந்த இடம் அன்றிலிருந்து காமினிக்கு சொந்தமாக்கப்பட்டு இருந்தது.
“பையா, அந்த குமரன் விஷயம்..”
“அவனுக்கு தாலி கட்டின ஒரு பொண்டாட்டியும், சின்ன வீடு ரெண்டும் இருக்கு. பொண்டாட்டிக்கும், குழந்தைங்களுக்கும் மாதா மாதம் செலவுக்கு போதுமான பணத்தை ஏற்பாடு பண்ணிடு. அன்ட் தென், அவனோட மூத்த பையன் ஊருல தறுதலையா சுத்திட்டு இருக்கான்னு கேள்வி. அவனையும் கவனிச்சுக்க..”
‘கவனித்துக் கொள்’ என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை சரியாகவே புரிந்து கொண்ட இந்தர் கோணல் சிரிப்புடன் தலை அசைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
தொடரும்.
Newer Posts