விழிகளில் நீருடன் நின்றவரை தோள் பிடித்து தன் புறம் திருப்பினான், இன்னுழவன்.
“என்ன மா…?” அவன் அவர் விழி நீர் துடைக்க
“என் தம்பிக்கும் எப்படியும் உங்கள மாதிரி வயசுல பிள்ளைங்க இருக்கும் இல்லடா இன்னுழவா…”
இன்னுழவன் ஆமோதிப்பாய் தலையசைக்க…
“எங்க இருக்கானோ? எப்படி இருக்கானோ? நான் சாகறதுக்குள்ள அவன பாக்கவே முடியாதாடா?” என அவன் தோள் சாய்ந்து குலுங்கி அழுத்தார் கோதாவரி.
இன்னுழவனோ அவரை நிமிர்த்தி தன் விழி பார்க்க வைத்தவன், “உன் தம்பி நல்லா சந்தோஷமா என்றவன் கூறும் போதே சோமசுந்தரத்தின் பதட்டம் தோய்ந்த நிலை மனதுக்குள் வந்து செல்ல அதை கடந்து… நல்லா இருக்காருமா. அது மட்டும் இல்லாம இன்னொரு சந்தோஷமான விஷயம் சொல்லட்டுமா?” என்றான் விழிகள் மின்ன.
“என்னடா…?”
“நீங்க இவ்வளவு நாள் யார நினைச்சு ஏங்கி தவிச்சிட்டு இருந்திங்களோ, அதான் உங்க தம்பி என்னோட அருமை மாமா நம்ம ஊருக்கு திரும்பி வராரு. அதுவும் நல்ல விஷயத்துக்காக வர்றாரு” இன்னுழவன் கூறி முடித்த அடுத்த கணம் அவன் கைகளை அழுத்த பற்றிய கோதாவரியோ,
“என்னடா சொல்ற என் தம்பி இங்க வர்றானா…!”
“ஹிம்… ஆமா நாளைக்கு இல்ல, நாள மறுநாள் மாமா தான் குடும்பத்தோட இங்க வர்றாரு. அது மட்டும் இல்லாம மாமாவோட பொண்ணுக்கு நம்ம ஊர்ல வச்சு தான் கல்யாணத்தை நடத்தணும்னு மாமா ஆசைப்பட்டு அதுக்கு உன் அருமை தம்பி என்கிட்டையே பர்மிஷன் கேட்டு கால் பண்ணாரு” என்றான் நக்கலாய்.
அவ்வளவு நேரம் வாடி இருந்த முகம் தன்னில் மலர்ச்சி உண்டானது. தாய் இல்லாத போதும் தாயாய் தன் முதல் குழந்தை என பாவித்து தூக்கி வளர்த்த தம்பியாயிற்றே!
“உண்மையாவா சொல்ற இன்னு! என் தம்பி வரானா… அதுவும் அவ பொண்ணுக்கு நம்ம ஊர்ல வச்சு கல்யாணமா…! ஏன்டா என்கிட்ட இதை முதலில் சொல்லல. ஐயோ எனக்கு கையும் ஓடல காலும் ஓடலையே…
என் தம்பி எப்படி பேசினான் இன்னு…? நல்லா பேசினானா…? நல்லா இருக்கானாமா? இப்ப எங்க இருக்கான்? எப்ப வரான்? காரில் வரானா பிளைட்ல வரானா? அவனுக்கு எத்தனை புள்ளைங்க? அவங்க என்ன பண்ணிட்டு இருக்காங்க? நல்லா இருக்காங்களா? அவங்க உன்கிட்ட பேசினாங்களா? நீ அவங்க கிட்ட எப்படி பேசுன? நீ பேசும் போது என்னையும் கூப்பிட்டு இருக்கலாம் இல்ல?” என சந்தோஷத்தின் உச்சத்தில் கேள்வி மழையை பொழிந்தார் கோதாவரி இன்னுழவனிடம்.
“அடியேய் கோதாவரி, நீ செய்ற கொழுக்கட்டை மாதிரி இல்லடி சுமார் தான்” என அந்தநேரம் பார்த்து உள்ளே வந்து சேர்ந்தார் அம்பிகாமா.
“கொழுக்கட்டை என்ன உங்களுக்கு நான் பாயாசமே செஞ்சு தரேன் என் கையால அத்தை. ஐயோ எனக்கு தலை எல்லாம் சுத்துதே ஐயோ சந்தோஷத்துல என்ன பண்ணனும்னே தெரியலையே…” என அவரை பிடித்து ஒரு ஆட்டு ஆட்டி அணைத்தபடி நின்றார் கோதாவரி தமையன் வருகையை நினைத்து.
“அடியே… அடியே… இவளே உனக்கு தலை சுத்துதுன்னு என்ன போட்டு ஏன்டி இந்த ஆட்டு ஆட்டுறவ. நீ ஆட்டுற ஆட்டுவலையில நான் போய் சேர்ந்திடுவேன் போல இருக்குடி இப்பதான் வயசு 25 கடக்குது. இன்னும் நிறைய லைபுல (லைப்) எனஜாய் (என்ஜாய்) பண்ண வேண்டி கிடைக்குது நானு விட்டு தொலைடி…” என்றவர் சாட
கோதவரியோ “போங்க அத்த நான் எவ்வளவு சந்தோசமா இருக்கேன் தெரியுமா” என அவரை விடுத்து இன்னுழவன் புறம் மீண்டும் திரும்பியவர் நிற்க…
“ஏன்டா பேராண்டி என்ன நடந்து போச்சுன்னு உங்க அம்மாக்காரி இப்படி டப்பாங்குத்து ஆடிக்கிட்டு இருக்கா வானத்துக்கும் பூமிக்கும்” என வினவினார் அம்பிகாமா.
“ஹிம் அவங்களோட முதல் பையன் ஊர்ல இருந்து வர்றாரு அப்பத்தா இத்தனை வருஷம் கழிச்சு” என்றான் சூட்சமமாக இன்னுழவன்.
அம்பிகாமாவும் “முதல் பையனா…!” யோசித்தவர் சிந்தையில் நொடி நேரத்தில் பதில் வந்து செல்ல, “சோமு வர்றானாடா இன்னு?” கேட்டார் ஆர்வமாக அவரும்.
இன்னுழவன் ஆமாம் என்னும் விதமாய் தலையசைக்க, “எப்படா வரான்? நல்லா இருக்கானா?” என்றவர் கேள்விக்கு அனைத்தையும் கூறியிருந்தான் இன்னுழவன் கோர்வையாக.
“ஹிம்… முன்ன மாதிரி நம்ம மட்டும் எல்லாரும் ஒன்னா சந்தோஷமா இருந்திருந்தா என் தம்பி பிள்ளைக்கே என் பையன கட்டிக் கொடுத்திருப்போம். அதுக்கு தான் எனக்கு கொடுப்பினை இல்லாம போயிருச்சே…” என அங்கலாய்த்து கொண்டார் கோதாவரி, ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த சக்திவேல், தங்கமணி நந்தனா உட்பட மூவர் மீதும் பார்வையை பதித்து.
“அடியேய் ஏண்டி இவ… ஒன்னுமண்ணா இருந்தாலும் யாருக்கு யாருன்னு கடவுள் எழுதி வச்சிருக்காரோ அவங்க கூட தான் வாழ்க்கை தொடரும். கண்டத போட்டு யோசிக்காம வர புள்ளையையும் அவன் குடும்பத்தையும் சந்தோஷமா வெச்சிக்கனும். நமக்கு இன்னும் சொந்தம் சேருதுன்னு நினைச்சுக்கடி” என்றார் அம்பிகாமா.
அவரின் சந்தோஷம் என்னும் வார்த்தை கேட்டவுடன் மனதில் சற்றென்று பதட்டம் குடியேற இன்னுழவனை பார்த்தார் கோதாவரி.
தாய் பார்வையின் அர்த்தம் புரிந்தவன், “பயப்படாதீங்க மா நான் இருக்கேன் இல்ல நான் பாத்துக்குவேன். மாமாக்கும் மாமா குடும்பத்துக்கும் என்ன தாண்டி எதுவும் நடக்காது. நம்மளே முன்ன நின்னு கல்யாணத்தை நடத்தி வைக்கலாம் சரியா. நான் போயிட்டு வரேன்” என கிளம்ப எத்தனித்தவன்…
“அப்புறம் அம்மா, மாமா என்கிட்ட பேசினாரு தான். நாலு வார்த்தை இன்னுன்னு உரிமையா பேசினாருன்னா… அதுக்கு அடுத்த பத்து வார்த்தையும் ஊர் தலைவர் என்கிற முறையில் தான் என் கிட்ட பேசினாரு. நீங்க பார்த்து நடந்துக்கோங்க” என்று நகர்ந்தான்.
பல வருடங்கள் கழித்து தமையனவனை பார்த்த சந்தோஷத்தில் பேசவிருக்கும் தன் தாயிடத்தில் அவர் வார்த்தைகள் காயப்படுத்தி விட்டால் மனதளவில் அவர் தாங்க மாட்டார் என எண்ணியவன்,
அனைத்து உரிமையும் உள்ள
தன்னையே ஊர் தலைவராக மட்டுமே பாவித்து பேசிய மாமனவனை குறித்து எச்சரித்து சென்றான் இன்னுழவன் முன் கூட்டியே.
“என்னத்த இவன் இப்படி சொல்லிட்டு போறான். அப்ப என் தம்பி என்கிட்ட பேச மாட்டானா…?” கோதாவரி கவலை கொள்ள,
“அப்படி இல்லடி அவனுக்கும் காயங்கள் எல்லாம் இருக்கும் தான. எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா சரி பண்ணிடலாம், முதல்ல அவன் ஊருக்கு வரட்டும். பேசுவான் பேசாம எங்க போய்ட போறான்” என அவரை தேற்றினார் அம்பிகாமா.
சக்திவேலன் தங்கமணியின் பேசிக் கொண்டிருக்க அவர்களிடமிருந்து மெல்ல எழுந்து வெளியே வந்தாள் நந்தனா.
வந்தவள் “ஆஆ…” எனக்கு கால்கள் தடுமாற சரியாக மோதி இருந்தாள் எதிரில் வந்த அகரன் மீது.
“ஏய் நந்து…” என தடுமாறி கீழே விழ போனவள் இடை பிடித்து தன்னோடு நிறுத்தியிருந்தான் அகரன்.
தாங்கிப் பிடித்த வேளையில் இருவரது இதழ்களும் பட்டும் படாமல் உரசி செல்ல இருவருக்கும் ஒரு கணம் மின்னல் வெட்டிச் சென்றது மௌனமாய் உள்ளுக்குள்.
ஆம், அகரன் பைக் சத்தம் கேட்டே மெல்ல சக்திவேல், தங்கமணியிடம் இருந்து நழுவி இருந்தாள் நந்தனா.
“என்னடி காலைல இந்த பக்கம் காத்தடிக்குது?”
அவனை மேலும் நெருங்கி நின்றவள், “ஹிம் மாமாக்கு பால் கொழுக்கட்டை பிடிக்கும்னு அம்மா செஞ்சாங்க அதான் அம்மா கூட நானும் வந்தேன்.”
“ஓ… உன் மாமாக்கு பால் கொழுக்கட்டை பிடிக்கும். அப்போ எனக்கு என்ன பிடிக்கும்?” அவன் கீழ் இதழ் கடிக்க,
கடித்தவன் இதழில் யாரும் பார்க்காத மென்மையாய் ஏம்பி இதழ் பதித்து விடுத்தவள், “என்னதான் பிடிக்கும்” என்றாள் கள்ள சிரிப்புடன்.
அதில் மேனி சிலிர்த்து லயித்தவன், “வர வர உனக்கு ரொம்ப தைரியம் தாண்டி… எங்க நின்னு எப்படி பேசிகிட்டு இருக்க என்கிட்ட. இத மட்டும் மாமாவும் உங்க அம்மாவும் பார்க்கணும்… என் கெதி அவ்வளவு தான்” குறைபட்டு கொண்டான் அகரன்.
“பார்த்தா என்ன? என்ன பண்ணிடுவாங்க அப்படி?” என்றவள் அவன் கழுத்தில் மாலையாக கைகோர்க்க போக…
சட்டென்று அவளை தன்னில் இருந்து விலக்க முயற்சித்தவனாய், “வர வர கொழுப்பு ஓவரா போய்கிட்டு இருக்குது டி உனக்கு. ஒழுங்கு மரியாதையா விலகு நந்து… யாரும் பார்த்தா அவ்வளவு தான்” என கடிந்து கொண்டான் அகரன் அந்நிலை தன்னை மனம் விரும்பினாலும் இருக்கும் இடம் கருதி.
“அப்பிடியா அப்போ கொழுப்பை குறைக்க ஏதாவது வழி பண்ணலாமே…” என்றவள் அவனுடனான பேச்சை வளர்க்க…
“ம்க்கும்… இன்னும் எவ்வளவு நேரம் தாண்டா ரெண்டு பேரும் வழிய மறைச்சுகிட்டு நின்னு ஒரு இளம் வயசு பிள்ளைய நீங்க பண்ற அழிச்சாட்டியத்த எல்லாம் பார்க்க வைச்சி மனச நோக அடிக்கப் போறீங்க” என காதில் ஹெட்போன் சகிதம் வந்து நின்றார் அவர்களுக்குப் பின் அம்பிகாமா.
“அப்பத்தா நீ எப்ப வந்த…?”
“ஆத்தா நீ எப்ப வந்த…?”
இருவரும் அதிர்ந்து விலக…
“அவ விழும் போகும் போது நீ தாங்கி பிடிச்சியே அப்பவே நான் வந்துச்சு பீலிங்சூ… வந்துச்சு பீலிங்சூ… ன்னு பேக்கு ரவுண்டு மிக்ஸியோட ( பேக்ரவுண்ட் மியூசிக்) வந்துட்டேன் டா…” என்றவர் நகைக்க…
“ஐயோ அப்பத்தா… ஆத்தா…” என இருவரும் வெட்கப் புன்னகை உதிர்த்து தலை குனிந்தனர் நிமிர்ந்து பார்க்க சங்கடபட்டவர்களாய்.
“ஹிம்… பரவால்ல டா அகரா வாசல்ல வச்சி அதுவும் என்ற மகனையும் மகளையும் உள்ளற வச்சுக்கிட்டே கக்கு(ஹக்) பண்ற அளவுக்கு தேறிட்ட போலயே…” என்றவர் கேலி பேசி நகைக்க…
“ஹக் மட்டுமா பண்ணோம்” என அவர் கேட்காது பிடரி வருடி முணுமுணுத்தவன்,
“ஆத்தா அது ஹக்” என்றவன் திருத்த,
“அடேய் பேச்ச மாத்தாத…”
“ம்க்கும்… அப்படியே தேறிட்டாலும்” நந்தனா சலித்து கொள்ள…
அவளை முறைத்தவன் அம்பிகாமாவை தோளோடு அணைத்தவனாய், “என் ஆத்தா நீ இளம் வயசு பிள்ளையாக்கும். இதெல்லாம் பார்த்து உன் மனசு நோகுதாக்கும்” கேட்டான் புருவம் உயர அகரன்.