உயிர் 21
ஒரு பெருமூச்சுடன் நேஹா வெளியேறினாள்.
சங்கரபாண்டியன் என்றொருவர் அந்த வீட்டில் இருக்கிறார் என்பதே அனைவருக்கும் மறந்து விட்டது போலும்.
வேளாவேளைக்கு உணவு, தேநீர், அவருக்குத் தேவையான அனைத்தும் கிடைத்தது தான். ஆனால் இலவச இணைப்பாக மனைவி மற்றும் மகளின் பாராமுகமும் பழைய அன்பும் அவருக்கு மறுக்கப்பட்டது .
முதலில் அதனைப் பெரிதுபடுத்தாமல் இருந்தவருக்கு நாளைடைவில் தனிமையே பெருந்தண்டனையாக ஆகிற்று.
மனைவியின் இந்த அவதாரத்தை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை.
திட்டி திட்டி அவருக்கு வாய் வலித்தது தான் மிச்சம்.
கோமதியிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் போகவே அமைதியாகி விட்டார்.
கோமதியோ , சங்கர பாண்டியனை கல்லும் மண்ணும் பார்ப்பதைத் போல பார்த்து விட்டு சென்றார். அவரின் நிராகரிப்பும் அமைதியும் அவருக்கு வலித்தது. தான் எத்தனை முறை இவ்வாறு செய்துள்ளோம் என்பது நினைவுக்கு வந்தது.
நிராகரிப்பு மற்றும் அலட்சியத்தின் வலியை அவருக்கு உணர வைத்து கொண்டிருந்தார் கோமதி.
இவ்வளவு வருட திருமண பந்தத்தில் முதன்முறையாக தனது வெறுப்பினை அழுத்தமாக காட்டியிருந்தார் கோமதி.
மீனாட்சியை நெருங்கவே ஆதி பயந்தான். மீறி ஏதேனும் உதவி செய்ய முன் வந்தால்,” என் வேலையை செஞ்சிக்க எனக்குத் தெரியும்…எனக்கு கை கால் முடமுல்லை…” என விரட்டினாள்.
ஒருநாள் காலை அவளுக்கென்று சூடாக தேநீர் கலந்து எடுத்து வந்தான்.
“ ப்ளீஸ்…! மீனாட்சி இது மட்டும் எடுத்துக்கோ…” என நீட்டினான்.
அதை வாங்கியவுடன் அவனது முகம் பூவாக மலர்ந்தது.
சூடான தேநீரை கையில் வைத்திருந்தவள் அவனது முகத்தையும் தேநீர் கோப்பையையும் பார்த்தவள் , சுடாக இருந்த தேநீரை அவனது முகத்தில் ஊற்றிவிட்டு நகர்ந்து விட்டாள்.
“ ஆ….ஆ…” என லேசான அலறலோடு திரும்பியவன் பார்வையில் விழுந்தார் வடிவாம்பாள்.
காளியாக அவதாரம் எடுக்கத் தயாராக இருந்தவரை கெஞ்சி கூத்தாடி பேசாமல் இருக்க வைத்தான்.
அவரோ , “ என்னவோ ரொம்பத்தான் பண்ணுற ஆதி…இப்படித்தான் கட்டுன புருசன் முகத்துல காபி தண்ணிய ஊத்துவாகளோ…? அய்யோ …! உம் முகத்த பாரு எப்படி சிவந்து போய் இருக்கு…? அப்படி என்ன பொம்பளைக்கு திமுரு…? நீ சும்மா இரு…! நா நாக்கப்புடுங்குற மாதிரி நாலு வார்த்தை கேக்கறேன்….” என தைய்யாத்தக்கா என ஆதியின் முன்பு சாமியாடிவிட்டார் .
அவனுக்கு அவரை சமாதானம் செய்வதற்குள் போதும் போதுமென்றானது.
அன்று இரவே உணவு தட்டை அவன் மேல் விசிறியடித்தாள்.
அவற்றை துடைத்துக் கொண்டு வரும்போது வடிவு பார்த்துவிட்டார்.
“ இங்கன பாரு ஆதி…நீ வேணா உம் பொஞ்சாதிய தலையில தூக்கி வச்சி ஆடு.. எனக்கு இதெல்லாம் பாக்கும்போது பத்திட்டு வருது. நானும் உங்க அப்பாவும் ஊருக்கு கிளம்புதோம். உனக்கிருக்க தாராள மனசு எனக்கு இல்லப்பு….அவ இனி இந்த மாதிரி ஏதாவது செஞ்சா நான் பொறுமையா இருக்க மாட்டேன் …சொல்லிபுடுதேன்…எதுவும் பஞ்சாயத்து ஆகக்கூடாது ன்னா நாங்க கிளம்புறதுதேன் சரி…நீ வரணும்ன்னா வா …இல்லை உம் பொஞ்சாதி கைல அடி வாங்குறதுதேன் புண்ணியம்ன்னா.. வாங்கிட்டு இரு. இதை பாக்குற சக்தி எனக்கில்லை அம்புட்டு தேன்…”என்றவர் சங்கர பாண்டியனிடம் மட்டும் கூறிக்கொண்டு மயில்வாகனத்துடன் தேனிக்கு கிளம்பிவிட்டார்.
கோமதியோ அதனை சிறிதும் கண்டுகொள்ளவில்லை.
“ இருன்னு சொல்றாளான்னு பாரு…ஆத்தாகாரிக்கும் மகளுக்கும் பேயடிச்சிடுச்சி போல…” என முணங்கியவாறு நடையை கட்டினார் வடிவு.
இதற்கிடையில் தனது நிலத்தில் கருகியிருந்த நெற்கதிர்களையெல்லாம் களைந்து விட்டு சுத்தம் செய்து வைத்தான் .
அடுத்த நடவிற்கு தயார் நிலையில் நிலத்தை வைத்திருந்தான்.
தனது சர்க்கரை ஆலையை விற்பனை செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்தான்.
அதனை வாங்குபவரிடமிருந்து அழைப்பு வந்திருந்தது.
எடுத்து பேசியவனின் முகம் யோசனையை தத்தெடுத்தது.
“ எண்ணன்னே…? பலமா யோசனை பண்ணிட்டு இருக்க..?” என்றாள் புகழினி.
“ ஒண்ணுமில்லை புகழு…நம்ம சக்கரை மில்லை விக்கறதுக்கு சொல்லிருந்தோம்ல அவகதான் கூப்டுருந்தாக….நா சொன்ன விலைக்கு முதல்ல ஒத்து வராதவக…இன்னிக்கு நான் சொன்ன விலையை விட ரெண்டு மடங்கு தர ஒத்துகிட்டாக…அதேன் எப்படின்னு யோசனை பண்ணிட்டு இருக்கேன். அது மட்டுமில்ல சக்கரை ஆலையை கொஞ்சம் சீக்கிரமா அவுகளுக்கு கைமாத்தி விடச் சொல்லி சொன்னாக…அதேன் யோசனை பண்ணிட்டு இருக்கேன். அந்த ஆளு இடத்தை வாங்க யோசனை பண்ணவே ரெண்டு நாளு அலைய வச்சாரு. விலை பேச பத்து தடவை சுத்த விட்டாரு. இப்ப என்னடான்னா நாம சொன்ன விலைய விட அதிகம் தர்றேங்கறாரு…அதேன் யோசிக்கிறேன்…”என்றான்
“ ரொம்ப யோசிக்காதண்ணே..நம்ம சக்கரை மில்லுக்கு பக்கமா வாய்க்கால் ஓடுது…கொஞ்ச அங்கிட்டு போனா காற்றாலை இருக்கு . அதனால தண்ணி செலவும் கரெண்ட் செலவும் மிச்சந்தேன். லாபமில்லாம யாரும் பணத்தை அள்ளி கொடுக்க மாட்டாகண்ணே. நம்ப மில்லும் நல்லாதனே ஓடுது…எல்லாம் கணக்கு போட்டு பார்த்தா சரியாதாண்ணே வரும். நீ ஒண்ணும் பேசாமஅவுக தர பணத்தை வாங்கி நடவை ஆரம்பிச்சிடு. ஆஸ்பத்திரி கட்றதுக்கு என் நகையை வச்சி பணம் வாங்கிக்கலாம். அப்பறம் கொஞ்சம் பேங்க் லோனும் போட்டுக்கலாம். பத்தலைன்னா என்னோட எப்ஃடி ய எடுத்துக்கலாம். நீ சீக்கிரம் அவங்க பேர்ல மாத்திடு. எல்லாம் நல்லதே நடக்கும் “ என ஊக்கமூட்டினாள் புகழினி.
“ சரி புகழு…” என்றவனது வார்த்தை பாதியிலேயே நின்றது.
நேஹா தான் அவனது வீட்டின் முன்பு நின்றிருந்தாள்.
ஈஸ்வரனது பார்வை சென்ற திசையை பார்த்தவள் நேஹா நின்றிருப்பதைக் கண்டாள்.
“ உள்ள வா நேஹா…” என்றழைத்தாள்.
உள்ளே வந்தவள் ஈஸ்வரனைப் பார்த்தாள் .
அவனோ தனக்கும் அவளிற்கும் சம்பந்தமில்லை என்பது போல நெல் மூட்டைகளை கயிறு கொண்டு இறுகக் கட்டிக்கொண்டு இருந்தான்.
நெற்றியிலிருந்து வியர்வை காதோரமாக இறங்கி திண்ணிய மார்பில் வழிந்தது.
அவனையே பார்த்துக் கொண்டிருந்த நேஹாவை புகழினியின குரல் கலைத்தது.
“ என்ன விஷயம் நேஹா…?”
“நா…ம்ம்க்கும் ..உங்கண்ணன் கூட கொஞ்சம் தனியா பேசணும்…” என்றாள்.
“என் கிட்ட தனியா பேசறதுக்கு என்ன இருக்குன்னு கேளு புகழு..”
“இருக்குன்னு சொல்லுங்க புகழினி. நான் பேச வந்ததை பேசிட்டு போயிடுறேன்னு சொல்லுங்க…புகழினி…” அவனது முகத்தை பார்த்தவாறே கூறினாள்.
“ம்மச்…என்ன பேசணும் பேசணும்னு …” என கோபமாக திரும்பியவன் அவளது முகத்தை கண்டு அமைதியானான்.
புகழினியோ,” எப்பா சாமி…நீங்க பேசி ஒரு முடிவுக்கு வாங்க…நான் கிளம்புறேன்” என்று கூறி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
“என்ன சொல்லனும்…? சொல்லிட்டு கிளம்பு…” என்றான்.
“ம்ம்… ஹாஸ்பிட்டல்ல வச்சு மீனாட்சி பேசுனது பத்தி என்ன நினைக்குறிங்க..?” என்றாள்.
“ என்ன நினைக்கனும்…? “
அவளுக்கோ இவனிடம் எப்படித்தான் பேசுவது என்று புரியவில்லை. இப்படி இடைவெட்டியே பேசுபவனிடம் என்ன பேசுவது? ஏது பேசுவது..? என்று புரியாமல் திகைத்து நின்றாள்.
அவள் அமைதியாக இருப்பதைக் கண்ட ஈஸ்வரன், “ இன்னும் எம்புட்டு நேரம் இப்படியே நிப்ப…?” என்ன விசயம்ன்னு சொல்லிட்டு கிளம்பு…” எனக் கூறினான்.
“ ம்ம்ம்…மீனாட்சி சொன்னதுக்காகயெல்லாம் நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு அவசியம் இல்லை . உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை செய்ங்க. நான் இதைப் பத்தி மீனாட்சி கிட்ட பேசிட்டு தான் வர்றேன். வாழ்கையை அடி மட்டத்துல இருந்து ஆரம்பிக்கறவங்களுக்கு தான் உழைப்போட அருமை தெரியும். அந்த வகையில நீங்க கிரேட் தான். வாழ்க்கையில எந்த நிலையிலும் நம்பிக்கை இழக்காம சுயமரியாதையோட இருக்குற ஆட்களை திமிர் பிடிச்சவங்கன்னு சொல்வாங்க. அந்த வகையில நீங்க திமிர் பிடிச்சவராவே இருங்க…அதுதான் உங்களுக்கு அழகு. இப்பவும் சொல்றேன் மீனாட்சிக்காக உங்களை உங்க மனசை கல்லாக்கிட்டு என்னை கல்யாணம் பண்ணிக்க வேண்டாம். உங்களுக்கு இப்ப எது வாழ்க்கைல முக்கியம்ன்னு படுதோ அதை செய்யுங்க. உண்மையை சொல்ல போன மீனாட்சிக்காக நீங்க செஞ்சது பார்த்தபோது , உங்களோட காதலை பாத்த போது எனக்கு கொஞ்சம் பொறாமையா தான் இருந்தது. உங்களை பாத்து ரொம்பவே அட்மையர் ஆனேன். உங்களோட கலங்கிப் போன முகத்தை பாத்த போது எனக்கு ரொம்பவே கஷ்டமா இருந்தது. ஆனா அது காதலான்னா கேட்டா தெரியலை. ஓப்பனா சொல்லப் போனா உங்களை கல்யாணம் பண்ணிக்கறதுல எனக்கு ரொம்ப இஷ்டம் தான். தயவு செய்து இப்படியே தனிக்கட்டையா இருந்து வாழ்க்கையை வாழாம விட்டுடாதீங்க. உங்களுக்கு ன்னு ஒரு துணை வேணும். ஒருவேளை உங்களுக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சிக்கனும்ன்னு நினைச்சீங்கன்னா என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க…இந்த வார்த்தையை நான் தயக்கமேயில்லாம ஏன் சொல்றேன்னா ….உங்களை மிஸ் பண்ண நான் விரும்பல. இன்னும் ஒரு வாரத்துல நான் லண்டன் கிளம்பிடுவேன்.. எவ்வளவு நாள் இல்லை வருஷம் ஆனாலும் பரவாயில்லை உங்களுக்காக காத்திருக்கேன்.”என ஒருவாறு தான் கூற வந்ததை கூறி முடித்தாள்.
அவனோ இரு கைகளையும் கட்டிக்கொண்டு அவளைப் பார்த்து தீர்க்கமாக, “ வீணா எனக்காக காத்திருந்து உன் வாழ்க்கையை பாழாக்கிகாத…நான் செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கு எனக்குன்னு ஒரு வாழ்க்கைன்னு தனியா யோசிக்கக் கூட முடியாத அளவுக்கு கடமை இருக்கு. உனக்கு தகுதியான ஆள் நான் கிடையாது. இனி என் வாழ்ககைல காதல்ங்கற அத்தியாயம் இருக்காது. முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும். நீ உன்னோட வாழ்க்கையை மட்டும் பாரு….” என ஆணித்தரமாக கூறினான்.
அவளோ மெல்லிய சிரிப்புடன், “காதல்ங்கற அத்தியாயம் வேணா இல்லாம இருக்கலாம்…ஆனா கல்யணம்ங்கற அத்தியாயம் வரும்ன்னு நம்புறேன்…” என பதிலளித்து விட்டு கிளம்பினாள் நேஹா.
என்றாவது தன்னை புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கையுடன் அவனது வீட்டை விட்டு வெளியேறினாள்.
செல்லும் அவளையே பார்ததிருந்தான் ஈஸ்வரன்.
அவனது மனதில் , “ காதல் இல்லாமல் எவ்வாறு திருமணம் நடக்கும்…?முட்டாள் பெண்…” என நினைத்துக் கொண்டான்.