ஆதியோ தவிப்புடன் மீனாட்சியின் முகம் பார்த்து நின்றிருந்தான்.
“ மீனாட்சி நாம லண்டனுக்கு கிளம்பனும். ப்ளீஸ்…நான் பண்ணது தப்புதான்..என்னை மன்னிச்சிடு…உனக்காக தான் இப்படி பண்ணுனேன் . எதுக்காகவும் உன்னை இழந்திடக்கூடாதுன்னு பயம்…அது தான் என்னை வேற எதைப் பத்தியும் யோசிக்கவிடாம செஞ்சிடுச்சு…புரிஞ்சிக்கயேன்..” என்றவன் அவளது அமைதியைக் கண்டு ஒரு பெருமூச்சுடன் ,” சரி…இப்ப நான் பண்ணனும்…? என்ன பண்ணுனா உன்னோட கோபம் குறையும்…சொல்லு நான் என்ன பண்ணனும்…?” என்று அவளது முகம் பார்த்து நின்றான் ஆதித்யன்.
“ நீங்க என்னதேன் செஞ்சாலும் அவகளோட இழப்பை சரி செய்ய செஞ்சுட முடியாது. நீங்க செஞ்ச தப்பை நீங்களே உங்க வாயால அவர்கிட்ட ஒத்துக்கனும். மன்னிப்பும் கேக்கணும்.” என தீர்க்கமாக ஆதியிடம் கூறினாள்.
அவள் கூறியதை ஆதியால் ஏற்கவே முடியவில்லை.
அவனாவது ஈஸ்வரனின் சென்று மன்னிப்பு கேட்பதாவது…? யாருக்கும் வணங்காமல் தான் நினைத்ததை மட்டுமே செய்து முடித்தே பழக்கப்பட்டவனுக்கு மீனாட்சி கூறியதை சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதை விட ஈஸ்வரனிடமே சென்று அவனது நிலத்திற்கு தான் தான் நெருப்பு வைத்ததாக ஒத்துக்கொள்ளவது தற்கொலைக்கு சமமான ஒன்று என நினைத்தான்.
எனவே அவளது முகத்தை பார்த்தபடியே, “ மீனாட்சி வேற எதுவா இருந்தாலும் சொல்லு நான் பண்ணுறேன்…ஆனா இது இது…என்னால முடியாது மீனாட்சி…ப்ளீஸ்….!.புரிஞ்சுக்கோ…”
“ மீனா…மீனாட்சி…அந்த கருகிப் போன நிலத்துக்கு வேணா பணமா கொடுத்துடுறேன்…நிலத்தை எல்லாம் சரி பண்ணி கொடுத்துடுறேன்…ஏன் அந்த நிலத்தோட மதிப்போட அந்த நெல்லுக்குண்டான மதிப்புக்கும் இரண்டு மடங்கு பணம் தந்துடுறேன்….நாம எல்லாத்தையும் சரி பண்ணி கொடுத்திடலாம்…ஐ ..யம் சாரி நான் எல்லாத்தையும் சரி பண்ணி கொடுத்திடுறேன்…ஆனா மன்னிப்பு…மட்டும்…” என முடிப்பதற்குள் அவனை அறைந்திருந்தாள் மீனாட்சி.
அவனை அதிர்ந்து போய்,
“என்ன…என்ன…? மீனாட்சி அடிச்சிட்ட…?” என கன்னத்தை பிடித்து கொண்டு கேட்டான்.
“ யோவ்…..திருந்தவே மாட்டியா…? இவ்வளவு பண்ணிட்டு பணம் தாரேன்னு நிக்க. உமக்கு நான் சொல்றது புரியுதா…? இல்லையா..? நீரு கொளுத்துனது வெறும் நெல்லுமணியை நினைக்கீகளா…? அதெல்லாம் அவரோட சொந்த புள்ள மாதிரி…சொந்த புள்ளைங்க மேல கையை வச்சா அதை பணத்தால ஈடுகட்ட முடியுமா…? அதெல்லாம் அதோட உசுரோட கலந்ததது. மாமா இந்த மீனாட்சியை விட அதிகமா நேசிச்சது அந்த நெல்லுமணிகளைத் தான்…ஏசி ரூம்புல சும்மா உக்காந்து கையெழுத்து போட்டா சோறு வராது…இறங்கி வேலை செய்யனும்…மழை.. வெயில்ன்னு பார்க்கமா உழைக்கனும்…. உங்கெளுக்கல்லாம் அதெல்லாம் எங்கேயிருந்து தெரியப்போவுது…. அதெல்லாம் ஒரு ஆத்மார்த்தமான உணர்வு. அந்த உணர்வை நீரு கொன்னுட்டு நிக்கீரு…உம்மட்ட பேச எனக்கொன்னும் இல்லை…”அதோடு பேச்சை முடித்துக் கொண்டாள்.
அவனோ செய்வதறியாது திகைத்து நின்றான்.
லண்டனுக்கு கிளம்பவேண்டும் . மீனாட்சிக்கும் பாஸ்போர்ட், விசா எல்லாம் எடுத்தாகி விட்டது. அவள் தன்னுடன் வருவாளா..? என்ற சந்தேகம் மனதை அரித்துத் தின்றது .
வியாபாரத்தில் எதையும் அடித்துப் பறித்தே பழக்கப்பட்டவனுக்கு பெண்ணின் நுண்ணிய உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாமல் தவித்தான்.
இனி எந்த ஒரு விஷயமும் தவறாகிப் போவதை அவன் விரும்பவில்லை.
உண்மையாகவே தான் செய்த தவறை சரிசெய்து கொள்ள விரும்பினான்.
மறுநாள் காலை ஈஸ்வரனது வயற்காட்டிற்கு சென்றான்.
புதிதாக நாற்று நட்டுக் கொண்டிருந்தார்கள்.
அவற்றையெல்லாம் ஈஸ்வரன் மேற்பார்வை பார்த்துக் கொண்டு இருந்தான்.
ஓரிடத்தில் கடினமான களை இருந்ததால் அதை களைய ஒரு பெண்மணி போராடிக் கொண்டிருந்தார்.
அவரருகில் சென்ற ஈஸ்வரன் “ அதேன் வர மாட்டிக்குதுலக்கா…ஏன்அது கூட சண்டை போட்டுட்டு இருக்கீக…? நகருங்க…நான் எடுத்துடுறேன்….” என்றவன் சேற்றில் இறங்கி அதை சிரமப்பட்டு பிடித்திழுத்து களைந்தான்.
“ எனக்கும் இந்த வேலையை செய்ய சொல்லி தரீங்களா…?””என்ற குரல் கேட்கவே நிமிர்ந்து பார்த்தான் ஈஸ்வரன்.
நேஹா தான் நின்றிருந்தாள்.
கைகளிலிருந்த மண்ணை தட்டிவிட்டுக் கொண்டே , “ எதுக்கு…? இதெல்லாம் உனக்கு தேவையில்லாத வேலை…உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு…” என்று முகத்திலடித்தாற் போல் பேசினான்.
நேஹாவோ அருகிலிருந்த பெண்மணியிடம் , “அக்கா…எனக்கு இதெல்லாம் பாக்க ரொம்பவே புதுசா இருக்கு. இதை எப்படி இந்த மண்ணுக்குள்ள ஒட்ட வைக்கனும்ன்னு சொல்றீங்களா…?” என்றாள்.
அவரோ சிரித்தபடி, “அய்யோ…! கண்ணு அது ஒட்ட வைக்கிறது இல்ல மா….நட்டு வைக்கனும்..இந்தா இதைப்பிடி….நான் வைக்கற மாதிரியே நல்லா குனிஞ்சு வை…வா கீழ நில்லு…” என்றார்.
நேஹாவோ செருப்பினை வரப்பின் மேல் கழட்டிவிட்டு சேற்றில் இறங்கினாள்.
கால் வழுக்கியது நேஹாவிற்கு.
அருகிலிருந்த பெண்மணி அவளது கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.
பிறகு எவ்வாறு நாற்று நடுவது என்பதை அவர் அவளது கைப்பிடித்து விளக்க…அவளும் அதே போல் செய்ய ஆரம்பித்தாள்.
கிட்டத்தட்ட ஒருமணி நேரம் கழிந்திருக்கும்.
அதற்கு மேல் அவளால் நிற்க முடியவில்லை. ஏசி காற்றில் கைகளில் சிறிதும் அழுக்குப் படாமல் வளர்ந்தவளுக்கு கொளுத்தும் வெயிலில் சேற்றில் இறங்கி வேலை செய்வதற்குள் அவளது முகம் சிவந்து வியர்த்து வடிந்தது.
நேஹாவிற்கு அப்போது தான் வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகளின் வாழ்க்கை புரிந்தது.
அவர்களின் வாழ்வாதாரமே நிலத்தை நம்பி தான் உள்ளது என்பது நன்கு புரிந்தது.
இவர்களுக்கு ஏதாவது ஒருவகையில் உதவ வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது.
அவள் அவதிப்படுவதைக் கண்ட அருகிலிருந்த பெண்மணி, “ கண்ணு போதும்மா…இதெல்லாம் உனக்குப் பழக்கப்படாத வேலை…எங்களால நாள் முழுசும் நிக்க முடியும் நீ கிளம்பு….பாத்து… வரப்பு மேல ஏறு கண்ணு….காலு வழுக்கும்.. அங்கன பம்பு செட்டு இருக்குது…போய் காலு கழுவிக்க…” என்றவர் அவளது கை கொடுத்து உதவி மேலே வரப்பில் நிற்கச் செய்தார்.
துப்பட்டாவில் முகத்தினை துடைத்தபடியே, “ஸ்…ஷ்ப்பா…” என நின்றிருந்தாள் .
அடுத்த அடி எடுத்து வைத்தவளுக்கு கால் வழுக்கியது.
“ அய்யோ..! எப்படி நடந்து போறது…? மெதுவா போ நேஹா….விழுந்து கிழுந்து தொலைச்சிடாதே…” என்றவாறே மெதுவாக நடந்து பம்பு செட் இருக்குமிடத்திற்கு சென்றாள் .
இவற்றையெல்லாம் தூரத்தில் இருந்து ஈஸ்வரன் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆதித்யனோ ஈஸ்வரன் அருகில் வந்து நின்றான்.
அவன் வந்திருப்பதை அறிந்தும் அவனை கண்டும் காணாமல் இருந்தான் ஈஸ்வரன்.
“ ஈஸ்வரா உன் கிட்ட கொஞ்சம் பேசணும்…”
“ என் கிட்ட பேச என்னயிருக்கு…?”என சுற்றுமுற்றும் பார்த்தபடி கூறினான் .
“ இல்லை கொஞ்சம் தனியா அங்க போய் பேசலாமா..?”
சரியென மோட்டார் அறை அருகில் சென்று நின்றிருந்தனர் இருவரும்.
ஆதிக்கோ எப்படி ஆரம்பிப்பது என தயக்கமாக இருந்தது.
அவனது அமைதியை கண்ட ஈஸ்வரன், “பேசணும்னு கூட்டிட்டு வந்து பேசாம நின்னா என்ன அர்த்தம்..?” என்றான்.
“அது…வந்து…உன்னோட…உன்னோட…” என நிறுத்தினான்.
“ என்னோட…?”
தன்னை திடப்படுத்திக் கொண்டு, “ உன்னோட நிலத்துக்கு நெருப்பு வச்சது நாந்தான். சின்ன வயசுல இருந்து மீனாட்சியை விரும்புறேன். அவளை விட்டுக் கூடாதுன்னு தான் இங்க வந்தேன். உனக்கும் சங்கர பாண்டியனுக்கும் உள்ள பகையை பயன்படுத்தி நிலத்தை வாங்கி பள்ளிக்கூடம் கட்டுனது நான்தான். கல்யாண மண்டபத்துல நீ சங்கர பாண்டியனோட கால்ல விழுந்துட்டா எங்க மீனாட்சியை உனக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்துடுவாறோன்னு பயத்துல தான் என்னப் பண்றதுன்னு தெரியாம….அதான்…” என்பதற்குள் அவனது முகத்தை குத்தினான் ஈஸ்வரன்.
“ ஆ…ஆ..” என பின்னால் சாய்ந்தான் ஆதி.
கைக்காப்பினை முறுக்கி விட்டபடி அவளது சட்டையை பிடித்து இழுத்து நிமிர்த்தினான்.
“அதுக்குன்னு….அதுக்குன்னு…சோறு போடும் தெய்வத்தை கொளுத்துவியோ..? என்ன ஏத்தம் டா உனக்கு…? எங்கிட்டே தைரியமா சொல்லுத…? மீனாட்சிக்காக இந்த நிலத்தை கொளுத்தன..? மீனாட்சிக்காக நான் வாங்க வச்சிருந்த நிலத்தை ஏமாத்தி வாங்கி பள்ளிக்கூடம் கட்டுத…எல்லாம் மீனாட்சிக்காக மீனாட்சிக்காகன்னு சொல்லி சொல்லியே அவ மனசை உடைச்சு கல்யாணம் பண்ணிட்டு..இப்ப நல்லவன் வேசம் போடுதியோ…?” எனஅடி அடியென அடித்து நொறுக்கிவிட்டான்.
கடின உழைப்பினால் காப்பு காய்ந்த கைகளின் வலிமையை ஆதியின் தேகம் தாங்கமுடியாமல் இரத்தம் கொட்டியது.
அவனது இரத்தத்தை பார்த்தும் ஆத்திரம் அடங்காமல் அருகிலிருந்த கட்டையை எடுத்து, “இந்த கை தான் என் நிலத்துக்கு நெருப்பு வச்சது…” என கூறி ஓங்கி அடித்தான்.
வலி தாங்க முடியாமல் “ஆ…ஆ”வென அலறினான்.
அவன் கத்தியது நேஹாவின் காதில் விழவே பதறியடித்து வந்தவள் நண்பன் இருந்த கோலமும் ருத்ர மூர்த்தியாக ஈஸ்வரன் இருந்த கோலமும் அவளுக்கு ஏதோ விபரீதத்தை பறைசாற்றியது.
“ ஐய்யோ..! ஏன் இப்படி போட்டு ஆதியை அடிக்கிறீங்க…?” என ஆதியை மீண்டும் அடிக்க முயன்றவனை கைப்பிடித்து தடுத்தாள்.
ஈஸ்வரனோ அவளது கையை உதறிவிட்டு ஆதியை பார்த்து, “இனி என் கண்ணுல பட்டுடாத…அது தான் உனக்கு கடைசி நாளான இருக்கும்…” என கர்ஜித்து விட்டு சென்றான்.
அவளோ பதறியபடி, “என்ன ஆதி…? என்ன ஆச்சு டா..? ஏன் இப்படி ..? அய்யோ…! இவ்வளவு இரத்தம்…கை என்னாச்சு டா… என்னால தூக்க முடியலை…கொஞ்சம் இரு ஆதி…யாரையாவது கூட்டிட்டு வர்றேன் “ என்றவள் வேகமாக ஓடிச் சென்று சற்று தூரத்தில் இருந்த திடகாத்திரமான இரண்டு ஆண்களை அழைத்து வந்து ஆதியை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றாள்.