பரந்த நிலப்பரப்பில் தாராள மனதோடு கட்டி போடப்பட்டிருந்த அந்த பெங்களா வீடானது, பல ஏக்கர்களைத் தனதாக்கிக் கொண்டு வானளவு உயர்ந்து வெகு கம்பீரமாய்க் காட்சியளித்தது.
பழங்கால கலை நயங்களுடன் காணப்பட்ட அவ்வீடு, பற்பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து சகல வசதிகளுடன் வாழ்ந்து விட்டுப் போகலாம் என்று எண்ண வைக்கும்படி பிரம்மாண்டமானது என்றால், அது மிகையில்லை.
வீட்டைச் சுற்றி விரிந்திருந்த பசுமையான தோட்டம், குறைவற பூத்துக் குலுங்கியிருந்த மலர்ச் செடிகளாலும், அடர்ந்து வளர்ந்த பெரு விருட்சங்களாலும் பசுமை பெற்று பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும்படி இயற்கை அன்னையின் அழகைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.
அந்த விடிய காலை நேரத்தில், வீட்டினுள் கண்டபடி யாராலும் நுழைந்து விட முடியாது என்ற குறிப்புடன், கறுப்பு நிற இரும்பு கேட் அருகே சிலையென நின்றிருந்த செக்யூரிட்டியின் கை பிடித்து கெஞ்சிக் கொண்டிருந்தாள், மான்ஷி.
“ப்ளீஸ் பையா! நான் உங்க சாரைப் பார்க்கணும். பிகு பண்ணாம என்னை உள்ள போக விடுங்களேன். வெறும் ஃபைவ் மினிட்ஸ் தான், போனதும் வந்திடுவேன்..”
‘ஒவ்வொரு நாளும் வந்து வாங்கிக் கட்டிக் கொள்கிறாயே! உனக்கு தேவை தானா?’ என்பது போல் அவளைப் பரிதாபமாகப் பார்த்தவர் முடியவே முடியாது என விறைப்பாக நின்றிருந்தார்.
“ப்ளீஸ் பையா, இன்னைக்கு ஒருநாள் மட்டும்! லெட் மீ இன்..”
“உன்னை உள்ள போக விட்டுட்டேன்னா என் வேலை பறி போய்டும்மா. ரெண்டு மூணு வாட்டி என்னை மீறி நீ உள்ள போனதால நான் தான் வாங்கி கட்டிக்கிட்டேன்..” என்று பாவமாக முகம் சுருக்கினார், செக்யூரிட்டி.
அவரைப் பார்க்கும் போது ஐயோ என்று தோன்றினாலும், ‘அவனை’ப் பார்த்தாக வேண்டும் என்ற பேராசைத் தீ மனதினுள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததால், அருகில் யாரையும் பாவம் பார்க்க தோன்றவில்லை.
கெஞ்சிக் கெஞ்சி ஒரு கட்டத்தில் சோர்ந்து போனவளாக செக்யூரிட்டியை முறைத்தவள், அவர் எதிர்பாராத நேரத்தில் தன் ஹீல்ஸ் காலைத் தூக்கி ஓங்கி மிதித்ததோடு,
“ஐயோ அம்மாஆ..” என்று அலறியவரைக் கடந்து கொண்டு நொடி நேரப் பொழுதில் கேட்டைக் கடந்து உள்ளே ஓடியிருந்தாள்.
சில அடிகள் முன்னே ஓடியவள், திரும்பிப் பார்த்து, “ஐம் சாரி பையா!” என காது தொட்டு மன்னிப்பு வேண்ட,
“ஏம்மா பொண்ணு! சொல்றதைக் கேளுமா..” எனக் காலைப் பிடித்துக் கொண்டு அவர் கத்திய கத்தலெல்லாம் விழலில் இறைத்த நீர் போலாயிற்று!
“சாரி பையா! ஐ காட்ட கோ (gotta go)” என்று கண் சிமிட்டிக் கூறிச் சென்றவளின் பின்னால், “நில்லு மா..” எனக் கெஞ்சியபடி கெந்திக் கெந்தி ஓடினார், செக்யூரிட்டி!
என்றும் ஏதாவது ஒரு அராஜகத்தை செய்து கேட்டைத் தாண்டி உள்ளே நுழைந்து விடுபவள், கோட்டையினுள் இருக்கும் அரக்கனிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளாமல் வீடு திரும்பியதாய் சரித்திரமே இல்லை.
‘உங்கள் கவனயீனம் தான்’ என குற்றம் சுமத்தப்பட்டு மாதம் இரு முறைகள் செக்யூரிட்டி மாற்றப்பட்டுக் கொண்டிருப்பது தான் உச்சகட்ட கொடுமை!
அவள் இந்த வீட்டுக்கு வந்து செல்லத் தொடங்கியிருந்த கடந்த ஓரிரு மாதங்களில் மாத்திரம், நான்கு காவலாளிகளின் தொழில் அநியாயமாய் பறிபோனது தான் மிச்சம்.
செக்யூரிட்டியைப் பார்த்து பழிப்புக் காட்டியபடி ஓடியவள், திடீரென எதிலோ மோதி, “ஸ்ஸ்..” என நெற்றியை தேய்த்து விட்டபடி சட்டென்று நிமிர்ந்தாள்.
ஆங்கு, பாறையை விழுங்கியது போலான முக பாவத்துடன் கண்களை சுருக்கி அவளை முறைத்துக் கொண்டிருந்தான், ஆறடியை விட சற்றே உயர்ந்த தோற்றத்தை உடைய காளையொன்று!
கதிரோனைக் கண்ட கமலமாய் முகம் மலர்ந்தவள், “யுகன்..” என உற்சாகமாய் அழைக்க வருவதற்குள், அவளைத் தன்னிலிருந்து விலக்கி வேகமாகத் தள்ளி விட்டவனின் பார்வை, எச்சில் விழுங்கியபடி நின்றிருந்தவரின் மீது அழுத்தமாகப் பதிந்தது.
“சா.. சார்..”
“யூ மே கோ நவ்!” எனக் கணீர் குரலில் முழங்கியவன் அவர் கூற வரும் நியாயங்களைக் கேட்க விரும்பாமல் திரும்பி நடக்க, கை பிசைந்து நின்றவரிடம் மீண்டுமொரு முறை மன்னிப்புக் கோரி விட்டு பின்னோடு ஓடினாள், மான்ஷி!
தாயின் சேலை பற்றி பின்தொடரும் குழந்தையாய், அவன் கால்தடம் பின்பற்றி உள்ளே நுழைந்தவள் கண்டது, சோபாவில் ஒய்யாரமாய் சாய்ந்தபடி தொலைக்காட்சியில் ஓடிய ஆங்கில படத்தில் திளைத்துப் போயிருந்த மிதுனாவைத் தான்!!
பாலைவன சுடு மணலில் தெளிக்கப்பட்ட நீர் துளி போல், சட்டென்று பாவை முகத்திலிருந்த மலர்ச்சி மறைந்து கார்மேகங்கள் சூழ்ந்து கொண்டன.
கை முஷ்டிகள் இறுக, நறநறத்த பற்களுடன் யுகனை முறைத்தாள். அவளது கர்ண கொடூரமான முறைப்பை அவன் சற்றும் கண்டு கொண்டதாய் தெரியவில்லை.
அலட்சியமாகத் தோளை உலுக்கியபடி சென்று சோபாவில் அமர, மேஜையிலிருந்த வயின் நிரம்பிய கிண்ணத்தை அவனுக்கு நீட்டினாள், மிதுனா.
அவளின் பார்வை இன்னுமே தொலைக்காட்சியை விட்டு அகலாததால், தன்னை எக்குத்தப்பாய் முறைத்துக் கொண்டிருந்தவளின் கோபம் அவளுக்கு தெரியாமல் போயிற்று!
மான்ஷியை அவ்வப்போது பார்வையால் மொய்த்தவாறு வயினை மொத்தமாக வாய்க்குள் சரித்துக் கொண்டவன், அருகில் இருந்தவளின் கரம் பற்றியிழுத்து அவளை முத்தமிடப் போக,
“யுகன்ன்ன்!!” என அந்த இடமே அதிரும்படி ஆவேஷமாக கத்தி, என்ன ஏதென்று சுதாகரிக்க முன்னரே ஹீல்ஸைக் கழற்றி அவளை நோக்கி வேகமாக விட்டெறிந்திருந்தாள் மான்ஷி!
திடுக்கிட்டு நிமிர்ந்த மிதுனா, அவள் வீசியடித்த காலணி தன்னைப் பதமாகத் தாக்கிவிட்டுக் கீழே விழுந்ததும் கடுகடுத்த முகத்துடன் நிமிர,
“என்னடி முறைப்பு?” என அரிமாவாய் சீறி விழுந்தாள்.
மனம் திக்கென்றது, மிதுனாவுக்கு!
“அவனை விட்டுத் தள்ளியே இருனு நான் சொல்றது உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது மிதுனா?” என உச்சஸ்தாயியில் கத்தியவள் இரண்டெட்டில் அவளை நெருங்கி,
“சாவுடி!” என்ற ஆவேச முணுமுணுப்புடன் அவளது தோள் பற்றித் தள்ளி விட்ட கணம், ஆடவனின் கைரேகை அவளின் பட்டுக் கன்னத்தில் அழுத்தம் திருத்தமாய் ‘பளார்!!’ என்ற சத்தத்தோடு பதிந்தது.
“அவளுக்காக என்னையே ஸ்லாப் பண்ணுறியா யுகன்?” என ஆங்காரமாய் ஓங்கரித்தவள் ஆத்திரத்துடன் அவனை ஓங்கி அறையப் போக, அந்தோ! அவளின் மென்கரங்கள் அவனால் சிறை பிடிக்கப்பட்டு முதுகுக்குப் பின்னால் வளைத்து பிடிக்கப்பட்டது.
“அவுச்! ஆஆ.. கையை விடு பைத்தியம். ஸ்ஸ், வலிக்குதுய்யா!! ப்ளீஸ்!” என இறுதியில் அவள் வலியில் கத்திக் கதறும் வரை ஓங்கிய கைக்கு விடுதலை கிட்டவில்லை.
வேலைக்காரர்கள் கூட, ‘பெரிய வீட்டு சமாச்சாரம் நமக்கெதுக்கு’ என்ற எண்ணத்துடன் கண்டும் காணாதது போல் தலையை குனித்தபடி அவ்விடத்தினின்று நகர்ந்தார்களே தவிர, அவர்களின் புறம் பார்வையைத் திருப்பவே இல்லை.
“ப்ளீஸ் என் கையை விடுய்யா! ஸ்ஸ், வலிக்குதுஊ யுகன்..” என்று அணை திறந்த வெள்ளமாக கண்ணீர் சிந்தியவளின் கண்ணீர் அவனுக்கு சற்றே திருப்தி அளித்ததோ..
கோணல் சிரிப்புடன் தோள் பற்றி அவளைப் பின் நகர்த்தியவன் சென்று சோபாவில் கால் நீட்டி அமர்ந்து கொண்டான்.
மான்ஷியெனும் ஜந்துவிடம் அடியோ, கிள்ளலோ வாங்கிக் கொள்ள எண்ணமின்றி அங்கிருந்து எப்பொழுதோ ஓடி விட்டிருந்த மிதுனாவை நினைக்கும் போது, சிரிப்பதா அழுவதா என்று தெரியாத நிலை ஆடவனுக்கு!
தொலைக்காட்சி இன்னுமே கேட்பார், பார்ப்பாரற்று தன்பாட்டில் இயங்கிக் கொண்டிருந்தது.
அதில் ஓடிக் கொண்டிருந்த காட்சிகளை வெறித்தவள், வலித்த கையை மற்றொரு கையால் மெல்ல அமுக்கி விட்டாள். அசைக்க முடியாதபடி ரணமாய் வலித்தது, அவனால் முறுக்கப்பட்ட கரம் மட்டுமல்ல.. அவனை சுமந்து கொண்டு துடிக்கும் இருதயமும் தான்!
“ச்சு, ரொம்ப வலிக்குதோ?”
மூச்சை ஆழமாக இழுத்து வெளியேற்றி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், “இனிமே அந்த மிதுனா இங்க வரக்கூடாது!” என தனக்கே அந்நியமான ஒரு குரலில் அழுத்தமாகக் கூற,
“வர்றதையும், வராததையும் முடிவு பண்ணனுமானது நான் இல்லையா?” என குரலில் ஒட்டிக் கொண்ட கேலியின் மிச்சத்தோடு வினவியவன் அவளின் கசங்கிப் போன வதனம் பார்த்து கேலியாய் நகைத்தான்.
“அவ கூட உக்கார்ந்து இங்கிலிஷ் பிலிம்ஸ் பாக்குறது, அவ கையை தொடறது, அவ தரும் வயினைக் குடிக்கிறது, அவளை ஒட்டிக்கிட்டு உட்காருறது.. இது எதுவும் எனக்கு பிடிக்கல. அவ இனிமே இங்க வரக்கூடாது..” கூறும் போதே அவளின் கண்கள் செந்தூர நிறமாகின.
“உனக்கு பிடிக்கலன்னா என்ன.. எனக்கு பிடிச்சுருக்கே!” என்றவன் தன்னை நோக்கிப் பறந்து வந்த வயின் பாட்டிலை வாகாக கேட்ச் பிடித்து, தாமதிக்காமல் அதை அவளை நோக்கியே விட்டெறிந்தான்.
சட்டென சுதாகரித்து, அவள் இரண்டடி நகர்ந்து நின்று கொண்டதால் நலமாயிற்று! இல்லையேல் வயின் பாட்டில் அவளது தலையைப் பதம் பார்த்து வைத்தியசாலை வரை அழைத்து சென்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.
சுவற்றில் பட்டு உடைந்து சிதறிய கண்ணாடித் துண்டுகள் சில சுவரருகே நின்றிருந்தவளது உடலைக் கீறி இரத்தக் கசிவை ஏற்படுத்தியது.
அழக் கூட தோன்றாமல் விறைத்து நின்றிருந்தவள், “உன்னை வெறுக்கவும் முடியாம, காதலிக்கிற மனசுக்கு தடை விதிக்கவும் முடியாம தடுமாறி நிற்கிறேன் யுகன்.” என்றாள், உயிர் வெறுத்த குரலில்.
ஏதோ பெரிய நகைச்சுவையைக் கேட்டாற்போல் வாய் விட்டுச் சிரித்தவனின் குரலில் மெலிதான வருத்தம் இழையோடியதாய் ஒரு பிரமை..
“நீ ஏன் இப்படி பண்ணுறே? மிதுனாவை கூட்டிட்டு இனிமே இங்க வராதய்யா! வர்ற கோபத்துக்கு அவளை ஏதாவது பண்ணிடுவேனோனு பயமாருக்கு. உன் பிடிவாதத்தால அந்த பொண்ணோட உயிர் போறதை நான் கொஞ்சமும் விரும்பல யுகன்..” என்றாள் மான்ஷி.
நகைப்பை நிறுத்திக் கொண்டு, “வாட்! பைத்தியமா நீ?” என்றவன் தொடர்ந்து, “கொல்ல போறது நீ! இடைல ஏன் என் பிடிவாதத்தைப் பத்தி சொல்லுற?” என்று எள்ளி நகையாடினான்.
“நீ உன் பிடிவாதத்தை விட்டுட்டு, என்னைக் கடுப்பேத்த அவளை இங்க வர வைக்கிறதை நிறுத்து! அவளுக்கும் சேதாரம் இல்ல; எனக்கும் கவலை இல்ல.. “
“ஃபன்னியா இருக்கு!” என சிரிப்புடன் கூறியபடி எழுந்து உள்ளறைக்கு செல்ல எத்தனித்தவன்,
“இனிமே அவ இங்க வந்தா ஐ வில் டெஃபினெட்லி கில் யூ மேன்!” என்ற மான்ஷியின் அதட்டலில் நிதானமாக நின்று திரும்பினான்.
ஊகித்தாற் போலவே பழம் வெட்டும் சிறு கைக்கத்தியை நீட்டியபடி கண்கள் சிவக்க காட்டேரியாய் நின்றிருந்தாள், மான்ஷி!
கேலியாக உதடு வளைத்தவன் சடுதியில் பாய்ந்து சென்று, அவளின் கையிலிருந்த கத்தியைத் திசை திருப்பி அவளுக்கு பின்னால் வேகமாக எறிய, அப்போது தான் வீட்டினுள் நுழைந்த ஒருவனின் கழுத்தில் ஆழமாய் இறங்கியது கத்தி!
அவன் வைத்த குறி தப்பியதாய் தான் சரித்திரமே இல்லையே! “சதக்க்!” என குருதி நாலாபுறமும் தெளிக்க, நிலத்தில் அடியற்ற மரமாய் சாய்ந்தான் கத்திக் குத்து வாங்கியவன்.
“யுகி ப்.. பாய்ய்!!” என்ற அலறல் சத்தத்தில் திடுக்கிட்டுத் திரும்பிய மான்ஷிக்கு, இரத்த வெள்ளத்தில் குற்றுயிரும் குலையுயிருமாய் கிடந்தவனைப் பார்த்ததும் ஒரு நொடி இதயம் நின்று துடித்தது.
பயத்தில் உடல் வெடவெடக்க ஆரம்பித்து விட, குளிரில் நனைந்த கோழிக் குஞ்சு போல் யுகனின் பின்னால் பதுங்கியவள், இறுதி மூச்சுக்களை எண்ணிக் கொண்டிருந்தவனைப் பயத்தோடு ஏறிட்டாள்.
அவன் வேற்றான் அல்ல, குமரன்! யுகனுக்கு நம்பிக்கைக்குரிய கையாள் என்பதை விட, அவனின் வலது கை என்றே குமரனை இலகுவாக அடையாளப்படுத்தலாம்.
“குமரனா!? நோ, நீ எது.. எதுக்கு யுகன் அவனைக் கொன்ன?” என்று கேட்டபடி உடல் நடுநடுங்க அவன் முதுகில் முகம் புதைத்தாள், மான்ஷி.
தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளும் போது வராத பயமும், நடுக்கமும் மற்றொருவனின் உடலிலிருந்து வெளிப்பட்ட குருதியைக் கண்டதும் அவளுக்கு வந்து விட்டது.
“எது! நான் கொன்னேனா? கத்தியை நீதானே பிடிச்சுட்டிருந்த? அதுல உன் கைரேகை தான் அச்சுபிசகாம பதிஞ்சி போயிருக்கும். மறந்துட்டியா என்ன?” என்று கேட்டவன் தன்னோடு அட்டை போல் ஒட்டிக் கிடந்தவளை இழுத்து ஒரு புறமாக நிறுத்தி விட்டு குமரனின் அருகில் சென்றான்.
“குமரன்! குமரன்!” என்ற எள்ளல் அழைப்புடன் அவனருகே குனிந்தவன்,
குமரனின் உடலினின்று வெளியேறிய அளவுக்கதிகமான இரத்தத்தைக் கண்டு திக்பிரமை அடைந்தவளாக அரை மயக்கத்தில் தள்ளாடிக் கொண்டிருந்தாள், மான்ஷி!
“ஹே, இங்க பாரு! மயங்கித் தொலைச்சிடாத என்ன.. அப்பறம் மயக்கம் தெளிஞ்சு கண்ணு திறக்க உன் உடம்புல உயிர் இருக்காது, சொல்லிட்டேன்!” என்று ஈவிரக்கமின்றி சத்தம் வைத்தவன்,
“யாரங்க..” என உள்நோக்கிக் குரல் கொடுத்ததும் அருகில் வந்து தலை குனிந்து நின்றவனிடம் குமரனைக் கண்காட்டி விட்டு எழுந்து கொள்ள,
“யுகன்..” என்ற முனகலுடன் தள்ளாடிக் கொண்டிருந்தவள் தொபுக்கடீரென்று மயங்கி விழுந்தாள்.
பற்களைக் கடித்து கோபத்தை விழுங்கிய கன்நெஞ்சக்காரன், “எவனும் இவளை நெருங்கக் கூடாது!” என்று எச்சரிக்கை செய்து விட்டு அவளைத் தாண்டி நடந்தான்.
ஊருக்கு நல்லது செய்யும் கடவுள் எனப் போற்றிப் புகழப்பட்டாலுமே, காலைச் சுற்றிச் சுற்றி வரும் சிறு பெண்ணிடம் அவன் நடந்து கொள்ளும் விதம் அவ்வளவு உவப்பானதாக இருக்கவில்லை அங்கிருந்தோருக்கு!
ஆனால் அவனை இடித்துரைக்கும் தைரியம் இங்கு யாருக்குத் தான் உள்ளதோ!? மாடியேறிச் சென்ற அசுரனை பயம் பொதிந்த பார்வை பார்த்து வைக்க மட்டுமே முடிந்தது அவர்களால்.