சென்று அறைக்குள் முடங்கிக் கொண்ட யுகன் மடிக்கணனியோடு கட்டிலில் ஐக்கியமாகியதில், மணித்துளிகள் மெல்லக் கரையலாயின.
மாலை மங்கி அவனியை இருள் அசுரன் கவ்வத் தொடங்கிய நேரத்தில், கை விரல்களை விசைப்பலகையோடு சரசம் புரியவிட்டு சிந்தனைகளை நாலாபுறத்திலும் சிதற விரட்டிருந்தவன் சலித்துப் போனவனாய் கட்டிலை விட்டு எழுந்து கொண்டான்.
மனம் எதிலும் லயிக்காமல் இருக்கும் பட்சத்தில், மடிக்கணனியின் முன் அமர்ந்து எவ்வளவு நேரம் தான் மூச்சுமுட்ட வேலை செய்வது போல் நடிப்பதாம்..
நடிப்பா? ஆமாம், நடிப்பு தான்! ஒரு கட்டத்துக்கு மேல் அவனுக்கே சலித்தது.
எதிலுமே ஆழ்ந்து போகாமல் அலை பாய்ந்து கொண்டிருக்கும் தன் மனதை எண்ணி அதிருப்தியுற்றவனாய் கைகளை மேல் நோக்கி உயர்த்தி சோம்பல் முறித்தான்.
மனம் நிம்மதியின்றி எதை எதையோ சிந்தித்து வெறுப்பூட்டிக் கொண்டிருக்க, சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு சாரளமருகே சென்று நின்று கொண்டான்.
அளவுக்கதிகமாக டென்ஷன் ஏறி மன அழுத்தம் கூடிப் போகும் நேரங்களில் மட்டும், தன்னை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக சிகரெட்டை புகைத்துத் தள்ளுவது அவனது பழக்கம்!
ஒவ்வொரு தம்மாக இழுத்து, புகையை சுருள் சுருளாக வெளியேற்றியவன் கையிலிருந்த சிகரெட்டை கீழே போட்டு காலால் நசுக்கி அணைத்து விட்டுச் சற்றே மேலேறி இருந்த டீஷர்ட்டை இழுத்து சரி செய்தபடி,
“எதுக்கு இங்க வந்திருக்கே?” என வெகு நிதானமாகக் கேட்க, அறைக்குள் கள்ளத்தனமாய் நுழைய முயன்ற உருவமொன்று திடுக்கிட்டு நிமிர்ந்தது.
அவன் முதுகு காட்டி நின்றிருந்தபடியால் தன் வரவை அறிந்திருக்க வாய்ப்பில்லை என குறைத்து மதிப்பிட்டது தன் மடத்தனத்தை எண்ணி மானசீகமாய் தலையில் தட்டிக் கொண்டவள், “யுகன்.. ” என்றழைத்தாள் ராகமாய்!
வேறொவனாய் இருந்திருந்தால் அந்த மந்தகாசக் குரலிலே கிறங்கி, அவளின் முகபாவனைகளில் தொலைந்து போய் அவளை மொத்தமாக ஆட்கொண்டிருப்பது நிச்சயம்!
ஆனால் இந்த ரசனை கெட்டவனோ உதட்டைச் சுழித்தபடி திரும்பி பார்வையாலே என்னவென்று கேட்டான். கண்களே அவளை மிரட்டின.
ஒருகாலத்தில் அவை கனிவுக்கு அர்த்தம் சொல்லிய கண்கள் தாம்! நினைக்கும் போதே நெடுமூச்சொன்று வெளிப்பட்டது மான்ஷியிடமிருந்து.
மெலிதான குரலில், “சாப்பிட்டியா யுகன்? இப்போ நேரத்தைப் பார்த்தியா..” என வினவ, செக்கச்செவேரென சிவந்த கண்களை ஒருமுறை இறுக மூடித் திறந்தான் ஆடவன்.
தன் மீது அன்பு காட்ட, வேளா வேளைக்கு ‘சாப்பிட்டியா?’ என்று கேட்கவாவது தனக்கிருக்கும் உறவு அவள் மட்டுந்தான் என புத்திக்குப் புரிந்தாலும், அவளை ஏற்றுக் கொள்ள மனம் தயங்குகிறதே!
ஏதேதோ கசப்பான நினைவலைகள் மனக்கண் முன் தோன்றி அவனை இம்சிக்க, கைமுஷ்டிகளை இறுக்கி, பதிலிறுத்தாமல் கல்லுளி மங்கனாய் அசையாமல் நின்றான்.
அவனை நெருங்கி வந்தவள், “ஏன் யுகன், நம்ம குமரனைக் கொன்ன? அவனுக்கு நீன்னா ரொம்ப இஷ்டம்..” என்று உற்சாகமிழந்து கூறியபடி விசும்பினாள்.
கண்கள் மேல் நோக்கி சொருகிய நிலையில் அவன் உயிர் துறந்த காட்சி இன்னுமே அவளை பயமுறுத்தியது. பயத்தில் மீண்டும் கைகால்கள் உதறல் எடுத்தன.
கேள்விகளுக்கு பொறுமையாய் நின்று பதில் கூறுவதொன்றும் அவனின் குணமல்லவே! கேள்வி கேட்பது அவனாக இருக்குமே தவிர, தன் செயலை நியாயப்படுத்தும் பொருட்டு எதிரில் இருப்பவனிடம் உரையாட என்ன.. இரண்டு வார்த்தை பேசவே யோசிக்கும் ரகம்.
உன் கண்களுக்கு கெட்டவனாகத் தெரிகிறேன் என்றால், நான் உண்மையில் கேடு கெட்டவனாகத் தான் இருப்பேன் என்பது போல் இருக்கும் அவனின் அடுத்தடுத்த செயல்கள். நான் நினைப்பது ஒன்று, அவன் செய்வது இன்னொன்று!
பதில் கூறாமல் அவளைக் கடந்து சென்று அறையை விட்டு வெளியேறியவன், “ஜான்..” என்று கத்த, பெயருக்கு சொந்தக்காரனோ துண்டைக் காணோம், துணியைக் காணோம் என வியர்த்து வழியும் முகத்துடன் வந்து கைகட்டி நின்றான்.
எச்சில் விழுங்கிய ஜான், ‘யாருயா இந்த தேவயில்லாத வேலைய பார்த்தது?’ என்ற கேள்வியுடன், யுகனின் ஓங்கரிப்பில் அதிர்ந்து கூடத்தில் வந்து வரிசை கட்டி நின்றிருந்த மற்றவர்களை நோக்கி பார்வையை வீசினான்.
“சாரி யுகி பையா!” என்று கூறிக் கொண்டு தலை குனிந்து முன்னால் வந்து நின்றான் ஒருவன்.
உண்மையை தான் ஒத்துக்கொள்ளா விட்டாலும் அதை சுயமாகவே அறிந்து கொள்ள யுகனுக்கு வெகுநேரம் எடுக்காது என்பதை அறிந்திருந்தபடியால் சற்றும் தாமதிக்காமல் ‘நான்தான்’ என அவன் முன் வந்து நின்று விட்டான்.
அவனை இகழ்ச்சியாய் பார்த்தவனின் கண்களில், ‘எதற்காக அப்படி செய்தாய்?’ என்ற கேள்வி பொதிந்து நின்றது. வருடக் கணக்காய் அவனைச் சுற்றியே வலம் வருபவர்களுக்கு அந்த பார்வைக்கான அர்த்தம் மட்டும் தெரியாமல் போய் விடுமா என்ன..
“ஓகே ஃபைன்! ஒன்னும் பிரச்சனை இல்ல. இப்போ என்னன்னா, அவளை நீயே கழுத்தைப் புடிச்சு வெளியே தள்ளிடு. ரைட் நவ்!” என அலட்டிக் கொள்ளாமல் கூறினான்.
மான்ஷி அதிர்ந்து போய் அவனைப் பார்க்க, அவளது பார்வையைக் கண்டு கொள்ளாதவனாய் மற்றவர்களைப் பார்த்து,
“இங்க என்ன ஷோவா ஓடுது?” என்று கேட்டது தான் தாமதம், கல் எறிந்து கலைக்கப்பட்ட காக்கா கூட்டத்தைப் போல் சிதறி மறைந்தனர் வேலையாட்கள்.
தலை கோதியபடி அவன் அங்கிருந்து நகர்ந்து விட, சில நொடிகள் அவனது முதுகை வெறித்துப் பார்த்திருந்த மான்ஷி, அந்த வேலையாள் தன் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள முன் தானே ஓடி விடுவது நலமென எண்ணி அங்கிருந்து நகர்ந்து விட்டிருந்தாள்.
இது ஒன்றும் புதிதல்ல என்பதை, அவளது வெறுமை பிரதிபலித்த முகமே பறைசாற்றி நின்றது.
எது எப்படியோ, ஸ்கூட்டி ஓட்டி வந்தாளோ அல்லது வான்வழியே பறந்து தான் வந்தாளோ என்னவோ அடுத்த அரைமணி நேரத்தில் அதிவேகமாக வீட்டை அடைந்திருந்தாள், மான்ஷி.
வந்ததும் வராததுமாய் நடு ஹாலில் நின்று கத்திக் கொண்டிருந்தவளைக் கழுவி ஊற்றிய சகுந்தலா, “உனக்கு என்ன தான் பிரச்சனைடி?” என்று கேட்டபடி சமையலறையிலிருந்து வெளிப்பட்டாள்.
நட்டநடு கூடத்தில் அமர்ந்து, மடக்கியிருந்த கால்களுக்கு இடையே முகத்தைப் புதைத்து குலுங்கிக் கொண்டிருந்த மகளைப் பார்த்ததும் திக்கென்றது, அந்த அன்னைக்கு!
‘திடீர்னு என்னாச்சு இவளுக்கு.. காத்து கருப்பு எதுவும் அடிச்சிருச்சா என்ன?’ என இயல்பாய் எழுந்த கேள்வியை, இருபுறமாகத் தலையை உலுக்கி விரட்டியடித்தவள், “மான்ஷி!” என்ற அழைப்புடன் மகளின் தோள் தொட,
“ப்ளீஸ்ம்மா! எனக்கு யுகன் வேணும். எப்படியாவது அவனை எனக்கு கட்டிக் கொடுத்துடுங்களேன்..” என்றபடி அவ்வளவு நேரமும் சிறுகுரலில் குலுங்கிக் கொண்டிருந்தவள் பெருங்குரலெடுத்து ஓவென்று அழத் தொடங்கினாள்.
சகுந்தலாவுக்கு நெஞ்சில் பாரமேறிய உணர்வு!
‘கடவுளே, ஏன் என் பொண்ணுக்கு இந்த கஷ்டம்?’ என்று மனதினுள் மறுகியவள் துயரத்தை தனக்குள்ளே விழுங்கிக் கொண்டு,
“மூத்த புள்ளைனு உனக்கு ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்துட்டோம்டி. காலைல போனவ இப்போ தான் ஊர் மேஞ்சிட்டு வீட்டுக்கு வந்திருக்கா. வந்ததும் வராததுமா ஹால்ல உக்காந்துட்டு அழ வேற செய்றா! ஏன்ங்க, நீங்களாவது இவளைக் கேட்க மாட்டிங்களா..” என்று மகளிடம் ஆரம்பித்து, அப்போது தான் வீட்டினுள் நுழைந்த கணவனிடம் குறைபட்டுக் கொண்டாள்.
“பொண்ணுக்குட்டிய தான் நான் டூவேண்டி ஃபார் அவர்ஸ் பார்த்துட்டு இருக்கேனே சகு?” என்று சிரிப்புடன் கேட்டவரின் கண்களிலுமே வலியின் சாயல்!
அவரை முறைத்தவள், “காலைலேர்ந்து எத்தன கால் பண்ணி இருப்பேன்? எடுக்கவே இல்லை. சின்னவ புக்கும் கையுமா அலையிறா! இவ அப்ராட் போய் வந்ததுலேர்ந்து அவன் வீடே கதினு கிடக்குறா..” எனப் புலம்பியபடி கலங்கிப் போன கண்களை மறுபுறம் திரும்பி துடைத்து விட்டுக் கொண்டாள்.
‘மயக்கத்துல கிடந்தேன்ம்மா. அப்பறம் எப்படி உன் காலை அட்டென்ட் செய்து பேசுவேன்? சும்மா நிலவரம் தெரியாம கத்தாதம்மா, காண்டாகுது!’ என கத்தத் துடித்த நாவை கடினப்பட்டு அடக்கிக் கொண்டவள்,
“எனக்கு அவன் வேணும்!” என்று அழுத்தமாய் உரைத்தாள்.
“கேட்டதும் வாங்கிக் கொடுக்க அவன் என்ன ஷோகேஸ் பொம்மையா.. நல்லாருக்கு உன் பேச்சு..” என கேலி செய்தாள், வௌவால் போல் தலை கீழாக சோபாவில் தொங்கியபடி புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தவள்!!
“ப்ச், மைதிலி..” என இளையவளை அதட்டியவர் மான்ஷியின் தலை வருடியபடி,
” அப்பா சொல்றேன், உனக்கு அவன் வேணாம்டா. என் பொண்ணுக்குட்டியை உள்ளங்கைல வைச்சு தாங்குற மாதிரி ஒரு மாப்பிள்ளை பார்த்து நான் கட்டித் தர்றேன்.
அவனுக்கு உன் அருமை தெரியல; உன் காதல் புரியல; உன்னோட அன்பை அனுபவிக்க அவனுக்கு கொடுத்து வைக்கல. அவனை மறந்திடுடாம்மா!” என்க,
“இந்த மாதிரியான ஆறுதல் எனக்கு வேணவே வேணாம்!” என்று கடித்த பற்களுக்கிடையே வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள் மான்ஷி.
“என்ன பேச்சு பேசுறா பாருங்க. எல்லாம் நீங்க கொடுக்குற செல்லம் தான்!” என பற்களை நறநறத்த மனையாளைப் பார்த்து அமைதியாக இரு என்ற குறிப்புடன் கண்களை மூடித் திறந்தவர்,
“இப்ப என்ன பண்ணனும்ங்குற?” என்று கேட்டார் பெருமூச்சுடன்.
“யுகன் என்னைக் கண்டுக்கவே மாட்டேங்குறான்ப்பா. திடீர்னு அவனுக்கு என்னாச்சு? எனக்கேதோ நான் அப்ராட் போய் வந்த இடைவெளில ஏதோ பெருசா நடந்திருக்கும்னு தோணுதுப்பா.
சின்ன வயசுல எனக்கும், அவனுக்கும் நிச்சயம் பண்ணி வைச்சீங்கல்ல? அப்போவே கலியாணத்தையும் முடிச்சிருந்தா இவ்ளோ பிரச்சனை வந்திருக்குமா, சொல்லுங்க?” என்று புலம்பினாள்.
தமக்கையின் சிறு பிள்ளைத் தனமான பேச்சில் அடக்கமாட்டாமல் வீடதிர சிரித்தாள், மைதிலி.
“அக்கா உனக்கும், அத்தானுக்கும் நிச்சயதார்த்தம் பண்ணி வைச்சது, நீ குட்டிப் பொண்ணா இருக்கும் போதாம்! அப்போவே கலியாணமும் பண்ணி வைச்சிருந்தா உங்க ரெண்டு பேரையும் பார்த்துக்க ஒரு நல்ல ஆயா நியமிக்கணுமேனு அப்பா புத்திசாலித் தனமா யோசிச்சிருப்பாரு..” என்று கிண்டலடிக்க,
“மூடிட்டு படிக்கற வேலையைப் பாரு..” எனத் தங்கையை அதட்டியவள் எழுந்து கோபத்துடன் காலைத் தூக்கி சோபாவில் உதைந்து விட்டு அறைக்கு ஓடினாள்.
“அம்மா, அக்காவை இப்போவே ஒரு நல்ல டாக்டருக்கு காட்டிடு! அத்தான் மேல பைத்தியமாகி கொஞ்ச நாள்ல ரோட்டுல இறங்கிட போறா..” என்று தாயிடம் கேலி பேசினாள் மைதிலி.
“ம்ப்சு, என்ன பேச்சு பேசற..” என்ற அதட்டலுடன் சின்ன மகளின் நடு மண்டையில் நங்கென்று கொட்டு வைத்த தர்ஷன், மலையெனக் கனத்த மனதுடன் அங்கிருந்து அகன்றார்.
‘கடவுளே, ரெண்டு பேரையும் எப்படியாவது சேர்த்து வைச்சிடு. சின்ன வயசுல இவங்களுக்கு போட்ட முடிச்சு என்றைக்கும் அவிழ்ந்து போயிடக் கூடாது. அதுக்கு நீதான் பொறுப்பு!’ என மனதுக்குள் கடவுளிடம் அவசர வேண்டுதல் ஒன்றை வைத்த சகுந்தலா,
“வா மைதிலி.. வந்து கூடமாட ஒத்தாசையா இரு!” என்றுவிட்டு சமையலறை நோக்கி நடக்க,
“ஆமா, எப்போ பாரு என்னையே கூப்பிடுங்க. நான் ஏதோ நாளைக்கே கலியாணம் பண்ணிக்கிட்டு புகுந்த வீடு போக போறாப்புல எனக்கே சொல்லுங்க. உங்க பெரிய பொண்ணை கூப்பிட வேணாம்..” என்று சலம்பியபடி அன்னையின் பின்னோடு சென்றாள், மைதிலி.
அறைக்குச் சென்று கதவடைத்துக் கொண்ட மான்ஷி இரவுணவுக்குக் கூட வெளியே வரவில்லை.
அலைபேசித் திரையில் சிரித்துக் கொண்டிருந்த யுகேந்தையே விழி எடுக்காமல் வெறித்துக் கொண்டிருந்தவளுக்கு வயிற்றில் வண்டி ஓடுவது கூட தெரியாமல் தான் போனது.
பசித்தது தான், ஆனாலும் எழும்பிச் சென்று உணவருந்த மனமில்லை.
காலையில் இரண்டு தோசையை நாலாக மடித்து விழுங்கிய பிறகு பச்சைத் தண்ணீர் கூட வாயில் படவில்லை. வார்த்தைக்கு வார்த்தை, செயலுக்கு செயல் விதவிதமாய் வருத்தும் யுகனை நினைக்கும் போது சாப்பிடத் தோன்றவில்லை.
அவன் அரக்கனென அறிந்த பிறகும், அந்த அரக்கத்தனத்தை பல தடவைகள் கண்ணாரக் கண்ட பிறகும் கூட அவன்மேல் தனக்கு ஏனிந்த பைத்தியகாரத் தனமான காதல் என்று அவளுக்கே புரியவில்லை.
அதைப் பைத்தியகாரத்தனம் என்று கூறவும் மனம் ஒப்பவில்லை.
யோசனையுடனே முகம் குப்புற விழுந்து சற்று நேரத்தில் உறங்கிப் போனவள், பசி தாங்க முடியாமல் நடுசாமத்தில் தேநீர் ஊற்றி, நாலைந்து பிஸ்கட்டை அதில் நனைத்து விழுங்கிவிட்டு வந்து மீண்டும் உறங்கியதெல்லாம் வேறு கதை!
மறுநாள் யுகன் வீட்டுக்கு செல்லும்போது வாசலில் புது செக்யூரிட்டி அவளைப் பார்த்து வரவேற்பாய் தலை அசைத்தார்.
நேற்று நடந்த சம்பவத்தால் பழைய செக்யூரிட்டியின் வேலை பறிப்போய் இருக்கிறது என ஊகித்து, மானசீகமாக அவரிடம் மன்னிப்பு வேண்டினாள் மான்ஷி.
“ஹாய் பையா, வேலைக்கு புதுசா?”
ஆமெனும் விதமாகத் தலை அசைத்தவருக்கு, முதலாளி காலையிலே அலைபேசியில் காட்டிய புகைப்படத்தில் சிரித்தவள் தான் தற்போது தனக்கு எதிரே நின்றிருக்கிறாள் என்பது சற்றுத் தாமதமாகத் தான் உறைத்தது.
“ஆமா, சார் எந்திரிச்சு தோட்டத்துல இருக்குற மினி ஜிம் பக்கமா போறதைப் பார்த்தீங்களா? ஏன் கேட்கறேன்னா நான் இப்போ அவரை மீட் பண்ணியாகணும்..” என்றவள் கேட்டை தாண்டிக் கொண்டு உள்ளே நுழையப் போக,
“சாரிமா, உங்களால உள்ள போக முடியாது!” என வழிமறிப்பது போல் வந்து நின்றார் செக்யூரிட்டி.
“ஏன்?”
‘இந்த பொண்ணு இங்க வந்தா வீட்டுக்குள்ள விட வேணாம். சரியான ஃப்ராடு! பேசியே கவுத்திடுவா..’ என்ற யுகனின் எச்சரிக்கை காதினுள் கேட்டுக் கொண்டே இருக்க,
“அது, இப்போ சார் பிஸியா இருக்காராம்!” என்று வாயில் வந்ததை அடித்து விட்டார்.
“ஓ, அப்படியா? உங்க சார் தான் இப்படி சொல்லச் சொன்னாரா..” என்று இகழ்ச்சிப் புன்னகையுடன் கேட்டவளுக்கு அவன் தன்னை செக்யூரிட்டியிடம் முன்பே அடையாளங்காட்டி இருப்பான் எனப் புரிந்தது. இது ஒன்றும் முதல்முறை அல்லவே!
செக்யூரிட்டி பதில் கூறாமல் விறைப்பாக நின்றிருக்க, அவரைப் பார்த்து சிரித்தவள்,
“ஆக்சுவலி எனக்கும், என் வீட்டுக்காரருக்கும் இடையில ஒரு சின்ன தகராறு. அதனால கூட அவர் என்னை உள்ளே விட வேணாம்னு சொல்லி இருப்பாரு பையா.
அவரை மீட் பண்ண வேற வழி தெரியல. இதுல நீங்க வேற வழி மறிச்சி நின்னா எங்க பிரச்சனை எப்படி தீரும், சொல்லுங்க. நானாவது போய் அவரை சமாதானம் பண்ண வேணாமா?” என வருத்தம் இழையோடிய குரலில், இதற்கு முன்னர் வந்தவர்களிடம் எதை சொன்னாளோ அதையே அட்சரம் பிசகாமல் சொல்லிக் கண்களைக் கசக்கினாள்.
‘பேசியே கவுத்துடுவா!’ என்ற முதலாளியின் எச்சரிக்கை வேறு நேரத்துக்கு அவருக்கு ‘பை பை’ காட்டிவிட்டுச் சென்றிருக்க,
“அட! இதுக்கெல்லாம் அழுதுட்டு இருக்கலாமா? நீ போய் உன் புருஷன் கிட்ட பேசுமா. எல்லாம் சரியாகிரும்..” எனக் கூறி அவளை உள்ளே அனுப்பி வைத்தார் செக்யூரிட்டி.
இன்னும் சற்று நேரத்தில் தன்னால் திட்டு வாங்கிக் கொள்ளப் போகிறாரே என எண்ணி வருந்தியவள், ‘சாரி பையா! எனக்கு இதை விட்டா வேற வழி தெரியல.’ என்று நினைத்து உதடு பிதுக்கி விட்டுத் தோட்டத்துக்கு ஓடினாள்.
ஓட்டத்துக்கு ஏற்றவாறு வேகமாக ஏறி இறங்கும் முறுக்கேறிய புஜங்களிலும், தொப்பையின்றி ஒட்டிக் கிடந்த வயிற்றில் விழுந்திருந்த சிக்ஸ் பேக்கிலும் சுயம் மறந்தாள்.
அதன் பிறகு மனசாட்சி கேவலமாக காரித் துப்பியதையோ, முழு உலகமே தெரியும்படி திறந்திருந்த வாய்க்குள் நாலு ஈ பறந்து மறைந்ததையோ அவள் உணரவில்லை.
அவளின் வருகையை ஆடவன் உணர்ந்திருக்க வேண்டும், என்ன நினைத்தானோ! திரட்மில்லின் வேகத்தைக் கூட்டி தன் ஓட்டத்தை மேலும் துரிதப்படுத்தினான்.
மொத்தமாக பத்து நிமிடங்கள் ஓடிக் களைத்தவன், கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த துண்டை உருவியெடுத்து மேனி வியர்வையை மெல்ல ஒற்றியெடுத்தான்.
மான்ஷி இன்னும் திறந்த வாய் மூடி இருக்கவில்லை.
அதே துண்டால் முகத்தையும் அழுந்தத் துடைத்தவன் அதை அவள் முகத்திலே தூக்கி எறிந்துவிட்டு அங்கிருந்து வெளியேற, முகத்தில் வந்து விழுந்த துண்டில் அவனின் வியர்வை நுகர்ந்து புன்னகைத்தாள், மான்ஷி.